வாசிப்பும் வாழ்வும் -சிறப்பு கட்டுரை
வாசிப்பும் வாழ்வும்  

- முனைவர்.ப.பாலசுப்ரமணியன்,
நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர். 
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம், 
திருநெல்வேலி. 

உலகின் பெரிய தலைவர்கள், மாமேதைகள், ஆளுமை மிக்க நிர்வாகிகள் வாழ்க்கை வரலாற்றை படித்த போது அவர்கள் அனைவருக்குள்ளும் ஒரு ஒற்றுமை இருந்தது “புத்தகம் வாசிக்கும் பழக்கம்”  தான் அது.

“நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று தமிழ் மூதாட்டி ஒளவையார் கூறியது அனைவருக்கும் ஏற்ற உண்மை. இன்றைய நல்ல வாசகன்தான் நாளை நல்ல தலைவன் ஆக முடியும். 

இன்றைய நாளில் நூல்கள் வாசிப்பு என்பது மிகவும் குறைந்து உள்ளது. நமது ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக்கிக் கொண்டு அறிவை மேன்படுத்த நூல்களே மிகச் சிறந்த கருவியாக உள்ளன. ஒருவர் பயிலும் சிறந்த நூல்களே அவர்களின் வாழ்க்கையை உருவாக்குகிறது. இன்றைய உலகில் உங்களை வெற்றியாளர்களாக ஆக்கிக் கொள்ள சிறந்த வழி புத்தகங்கள் வாசிப்பதே. மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறு களைப் படிப்பது நம்மைச் சரியான வழியில் நடக்கவும், நம்மிடமுள்ள குறைகளை போக்கி நம்மை முழுமையாக்கி கொள்ளவும் உதவும். 

நீங்கள் எந்தத் துறையில் வெற்றி பெற விரும்புகின்றீர்களோ அந்தத் துறையில் வெற்றியடைந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். அவர்கள் சந்தித்த தடைகளையும் அதை கடந்து வர கடைப் பிடித்த அணுகு முறைகளையும் அறிந்து கொள்ளுங்கள் . அவை  எப்பொழுதோ நிகழ்ந்தாலும் இப்பொழுதும் நாம் வெற்றிக்கு வழிகாட்டும். இவற்றை அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். அறிவியல் நூல்கள், மாமேதைகளின் சரித்திர நூல்கள், சமய நூல்கள்  அனைத்தையும் தேடி படியுங்கள் . 

"அமெரிக்காவில் தலைசிறந்த வருவாய் ஈட்டுவோர் புத்தகங்களை அதிகம் படிப்பவர்களே" என்று ஆய்வு கூறுகிறது.

“நாளும் பொழுதும் என்னோடு நடமாடிக் கொண்டிருக்கிற என்னை எப்போதும் வீழ்த்திடாத நண்பர்கள் புத்தகங்களே” என்றார் கவிஞர் ராபர்ட்கதே.

வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற பேராற்றலைப் புத்தகங்கள் நமக்குப் புகட்டுகின்றன என்பதால் “வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது” என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர்.  

“காட்டுமிராண்டித்தனமான நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் புத்தகங்களினால் ஆளப்படுகின்றன” என்றார் பேகன்

“படிக்க தெரிந்த ஒருவன் புத்தகங்களை படிக்காமல் இருப்பது படிக்க தெரியாதவன் நிலையை விட மோசம்.  வோர்ல்ட் வைட் வெப் (www) என்று விரல் நுனியில் அனைத்து தகவல்களும் உள்ளபோது படிப்பதை தவிர்த்தல் ஒரு தேசிய அவமானமாகும் . அமெரிக்காவில் இருந்து கொண்டு அறியாமையில் இருப்பதற்கு மன்னிப்பே கிடையாது” என்கிறார் பர்க் ஹெட்ஜஸ் என்ற சிறந்த அமெரிக்க எழுத்தாளர். 

இலண்டன் நூலகத்தில் இருபது ஆண்டுக் காலம் படித்து ஆய்வு செய்த கார்ல் மார்க்ஸ் தான் பின்னாளில் பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாக விளங்கினார்.பேரறிஞர் அண்ணா புற்று நோயால் உயிரோடு போராடிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுவைச் சிகிச்சை என்றபோது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னாராம்.இரஷ்ய நாடு இந்தியாவைச் சிறிதும் மதிக்காத காலத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் சோவியத் இரஷ்யாவில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றி கொண்டிருந்தார்.  அப்போது ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டாராம். இந்தச் செயலே அப்போதைய இரஷ்யாவின் அதிபராக மட்டுமல்ல சர்வாதிகாரியாகவும் இருந்த ஸ்டாலின் அவர்களின் நன்மதிப்பைப் பெறக் காரணமாயிருந்தது. இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட ஸ்டாலின் இதயத்தையும் கவர்ந்தார்

டாக்டர் அம்பேத்கர் , ஆப்ரகாம் லிங்கன் ஆகியோரை உலகிற்கு தந்தது வாசிப்பு பழக்கம் தான் , அதன் மூலம் உலகத்திற்கு நல்ல மாற்றதையும் தந்தார்கள் .

கற்றனைத்தூறும் அறிவு’ என்ற வள்ளுவர் குறளுக்கேற்ப நூல் பல  படிக்கும் பழக்கமே அனைவரின் வாழ்க்கையும் உயர்த்தும். 

இளமையில்தான் மிகச்சிறந்த பண்புகள் பதியம் போடப்படுகின்றன. நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே ஊட்ட வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்வதிலிருந்து கற்றுக்கொள்வதை விட பெற்றோர்கள் செய்வதைப் பார்த்து மிகுதியாக கற்றுக் கொள்கிறார்கள். எனவே முதலில் பெற்றோர்கள் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக் கூட்டும். கற்பனையையும் அறிவின் மேதா விலாசத்தையும் செழுமை செய்யும். புதிய புதிய பொருள்களைத் தந்து கொண்டே இருக்கும்

சீன நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வந்த யுவான் சுவாங் என்னும் அறிஞர் நாளந்தாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின் சில காலம் அங்கேயே பேராசிரியராகவும் இருந்தார். பின் தாயகம் திரும்பி, புத்தமதப் பிரச்சாரம் செய்ய விரும்பினார். அதற்காகச் சில அறநூல்களையும் தம்முடன் எடுத்துச் சென்றார். மாணவர்கள் பலர் வழியனுப்பச் சென்றனர். படகு சிந்து நதியின் நடுவில் சென்று கொண்டிருந்தது. அப்போது புயல் வீசியது. படகு கவிழ்ந்து விடுமோ என்று அனைவரும் அஞ்சினர். யுவான் சுவாங் தாம் கற்றவையனைத்தும், கொண்டு செல்ல நினைத்தவைனைத்தும் பயனற்றதாகிவிடுமோ என்று முகம் வாடினார். அதுகண்ட மாணவர்கள் பாரம் குறைந்தால் படகு தப்பக்கூடும் என நினைந்து அறிவுச்செல்வத்தை விட தம்முயிர் பெரிதல்ல என்பதனையும் நினைத்து ஆற்றில் குதித்து விட்டனர். யுவான் சுவாங்கும் அறிவு நூல்களோடு இந்திய மாணவர்களின் தியாக உணர்வையும் சுமந்து கொண்டு கரைசேர்ந்தார். அறிவு செல்வத்தை கொடுக்கும் புத்தகங்கள் வரலாற்றில் மகத்தான காரியங்களை செய்யும் அதை காக்க தங்கள் உயிரையும் தியாகம் செய்தனர். 

இன்று யாரும் உயிர் தியாகம் செய்ய அவசியம் இல்லை. தொழில் நுட்பம் பெருகிவிட்டது, அச்சகம் வளர்ச்சி எல்லோர் கைக்கும் புத்தகங்களை கொடுத்து விட்டது. முன்பு எப்போதும் இல்லாததை விட அனைத்து துறை சார்ந்த புத்தகங்கள் நவீனமாக வந்து விட்டன. புத்தகங்கள் குறைவாக கிடைத்த காலங்களில் பல அறிஞர்கள் உருவாகினர். ஆனால் இன்று  புத்தகங்கள் எல்லோருக்கும் இருந்தாலும் வாசிப்பதற்கு யாரும் தயாராக இல்லை என்ற கசப்பான நிலை.  பல பள்ளிகள் கல்லூரிகளில் பாட புத்தகங்களை தவிர நூலகத்தை பெரும்பாலும் பயன்படுத்தாமலே இருப்பது வேதனைக்குரியது. மாணவர்கள் மன அழுத்தமின்றி மன நலத்தோடு விளங்க பாட நூல்களை தாண்டி நூலக வசிப்பு அவசியம்.  

ஒருவர் ஒரு நாள் 10 பக்கங்கள் படிக்க முடியும் என்றால் 30 நிமிடங்கள் ஒருநாளைக்கு ஒதுக்க முடியும் என்றால்  ஒரு வருடத்திற்குள் 20 புத்தகங்கள் உங்களால் படிக்க முடியும். பத்து ஆண்டுகளில் 200 புத்தகங்கள் படித்திருப்பீர்கள். மிக உயர்ந்த நிலைக்கு சென்றிருப்பீர்கள் . நேர நிர்வாக நூல் உங்களை சிறந்த நிர்வாகியாக்கும். சுய முன்னேற்ற நூல்கள் உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். 
மொழி நூல்கள் மூலம் ஆங்கிலம் அல்லது பிற மொழி வார்த்தைகள் தினமும் ஐந்து கற்று கொண்டால் உங்கள் வாழ்வை  வலிமையாக்கும். நல்ல பெற்றோருக்கான புத்தகம் நல்ல பிள்ளைகளை வளர்க்க உதவும் நல்ல சந்ததிகள் உருவாகும். பொருளாதார வர்த்தக நூல்கள் அறியாமையை போக்கி பணத்தை பெருக்கும், விவசாயம் சிறக்கவும் , வேளாண்மை வளரவும் கூட இன்றைய நவீன நூல்கள் உதவுகின்றன. இன்றைய காலத்தில் ஒரு புத்தன் உருவாகினாலும் அதற்கு புத்தகமே காரணமாக இருக்க முடியும்.   மனிதனை அறிவுள்ளவனாக பூரணத்துவம் பெற்றவனாக மாற்றுவதில் நூல்கள் சிறந்த வழிகாட்டியாகவும், ஆசிரியராகவும் திகழ்கிறது. எனவே ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்ற ஒளவையின் முதுமொழிக்கேற்ப தினமும் வாசிப்போம் வாழ்வை மேம்படுத்துவோம்.                                                ................................................

Post a Comment

புதியது பழையவை

Sports News