ஆனந்தம் தரும் ஆத்திசூடி-8





ஆனந்தம் தரும் ஆத்திசூடி-8

புலவர் சங்கரலிங்கம் மதுரை. 

"கிளைபல தாங்கேல்' 

உறவுகள் குடும்பம் என்கிற மாளிகையைத் தாங்கிப் பிடிக்கிற தூண்கள். ஒவ்வொருவரையும் இணைக்கின்ற சங்கிலிப் பிணைப்புகள். 

சங்கிலியில் ஒரு கண்ணி அறுந்து போனாலும் அணிய முடியாது. அதுபோல குடும்ப வாழ்க்கையில் ஒரு உறவு பிரிந்தாலும் அது உன்னதமாக இருக்காது.

உறவு முறைகள் என்போர் அன்பின் அடையாளங்கள். பாசத்தின் பிணைப்புகள். எல்லைகளைக் கடந்து எங்கோ இருக்கும் தன் மகனுக்கு உடல் நலம் இல்லாவிட்டால் தாய்க்கும் தந்தைக்கும் தடுமாற்றம் ஏற்படுகிறது. 

தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பதன் வெளிப்பாடுதான் அது. 

வீட்டில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கிறார். சுற்றிலும் சுற்றங்கள் சூழ்ந்து இருக்க விழிகளைத் திறந்து பார்க்கும் அவருக்கு முகம் மலர்கிறது,மகிழ்ச்சி அடைகிறது. காரணம் இரத்த உறவுகள் சுற்றி இருக்கையில் இயல்பாகவே மனதில் ஏற்படும் பாதுகாப்பு உணர்வுதான்.

தாத்தா-பாட்டி, சித்தி- சித்தப்பா, அத்தை-மாமா, அண்ணன்-தம்பி, அக்காள்- தங்கை என்று இவர்களுக்கு மத்தியில் வளரும் குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் அதிகமாகக் கிடைக்கின்றது. அம்மா அடித்தால் பாட்டியிடம் ஓடுகிறது. அப்பா அடித்தால் தாத்தாவிடம் தஞ்சமடைகிறது. 

அரவணைக்கச் சுற்றிலும் உறவுகள் இருக்கும்போது குழந்தையின் மனதில் தன்னம்பிக்கை உணர்வுகள் தானாகவே துளிர் விடுகின்றன.

சுற்றிலும் உறவுகள் கூடி இருக்கும்போது மன வலிமையும் கூடுகிறது. இதுதான் கூட்டுக் குடும்பத்தின் உன்னதம். உறவுகளின் உன்னதம்.

இன்றைய சூழலில் பரபரப்பாகும் பந்தய வாழ்க்கைச் சுழற்சியில் நாட்கள் நகர்கின்றன. வாரங்கள் விரைகின்றன. பழைய நண்பனின் முகம் பார்க்க முடிய வில்லை. நேரம் இல்லை என்ற ஓர் ஒற்றை வார்த்தையில் சொல்லி விடுகிறோம். 

அர்த்தமில்லா விளையாட்டில் நேரத்தை விரயமாக்கி அயர்ந்து போகிறோம். 

என்ன காரணம்?

வசதிகளும் வாய்ப்புகளும் பெருகப் பெருக தேடல்கள் எல்லையற்று நீண்டு கொண்டே போகின்றன. 

அதனால் சிந்தனைகளும் மாறுபடுகின்றன. வாழ்க்கைக்கான தேவைகள் என்ற நிலைமாறி தேவைகளுக்கான வாழ்க்கை என்ற நிலை உருவாகி வருகிறது.

பிறரைப் பற்றிய சிந்தனையற்ற ஓட்டம் மனிதனைத் தொலைத்துக் கொண்டு இருக்கின்றது. சுயநலத் தேடல்களும் இயந்திர வாழ்க்கையின் வேகமும், ‘மனிதம்’ காணாமல் போய்விடும் அபாயத்தை உணர்த்து கின்றன.

உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடிகள் வைத்து இருந்தாலும் அதனால் பயனில்லை என்பதை மறந்து விடாதீர்கள். 

வயதான காலத்திலும் உறவுகள் உங்களை வளைத்து வைத்திருக்கிற மாதிரி உங்கள் இளமைக்காலத்தின்  உழைப்பை திட்டமிடுங்கள். உழைக்கும் காலத்தில் உறவுகளை உதாசீனப்படுத்தி விடாதீர்கள்.  உறவுகளின் உன்னதத்தை உணருங்கள், 

உறவுமுறைகளை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.  உறவுகளுக்குள் வரும் பிணக்குகளை சகிப்புத் தன்மையோடு தீர்த்துக் கொள்ளுங்கள். உறவுகளுக்குள் எந்தவித பிரிவையும் சகிக்கக்கூடாது.
இதைத்தானே பாரதியார் தனது புதிய ஆத்திசூடியில்  'கிளை பல தாங்கேல்' (எண்15) என்று சொல்கிறார்.

                                                    ------------------------------------------

Post a Comment

புதியது பழையவை

Sports News