வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற பேராசிரியர் காயத்ரிவாழ்நாள் சாதனையாளர் 


விருதுபெற்ற

கல்வி ஆலோசகர்

பேராசிரியர் காயத்ரி


                       சிறந்த கல்வி ஆலோசகராக, எழுத்தாளராக ,சமூக சேவகராக ,பயிற்சியாளராக பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்றவர் பேராசிரியர் காயத்ரி அவர்கள். ஊடகத் துறையிலும் சிறப்புமிக்க சாதனைகள் புரிந்து வெற்றிப்பெண்மணியாக வலம் வருகிறார் . அவரை நெல்லைகவிநேசன் டாட் காம் சார்பில் சந்தித்தபோது..........உங்கள் ஆரம்ப கால வாழ்க்கை பற்றி..........

        கடவுள் ஒவ்வொரு  படைப்பிற்கும் ஒரு காரணம் வைத்திருப்பார். அந்த காரணத்தை ஒரு சிலர் மிகச்சிறிய வயதிலேயே அடையாளம் கண்டு கொள்கின்றனர். மிகச் சிலரோ வாழ்வின் இறுதிநாள் வரை கண்டுபிடிக்க இயலாமல் ஏன் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என வாழ்ந்து விட்டு சென்று விடுகிறார்கள். அப்படி கடவுள் என்னை எதற்காக படைத்தான் என்று ஓரளவிற்கு பதில் கண்டுபிடித்து விட்டதாக நினைக்கிறேன்.

     நான் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் எனும் ஊரில் மூன்று பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்தில் மூன்றாவதாக  பிறந்தேன். தந்தை பெயர் திரு.இராமலிங்கம் .தாயார் பெயர் கிருஷ்ணவேணி என்னுடைய இரண்டு சகோதரிகள் அபர்ணா கோகிலா. அவர்களுக்கு இருவரின்  தாயின் பெயர்களை இயற்பெயராக வைத்து விட்டு எனக்கு காயத்ரி என்று ஒரு பெயர் மட்டும் வைத்தனர். ஆவணிமாத காயத்ரி ஜபத்தில்  பிறந்ததால் இந்தப் பெயர் வைத்ததாக காரணப் பெயர் சொல்லுவார். அப்பா வங்கியில் பணி புரிந்தாலும் மூன்று பெண் பிள்ளைகள் என்பதால் மிகவும் கட்டுக்கோப்பான பட்ஜெட் போட்டு வாழும் குடும்பத்தில் அரசு பள்ளியில்  சேர்த்து படிக்க வைக்கப்பட்டேன். ஆரம்பப்பள்ளி குமரகுருபரர் துவக்கப்பள்ளி பின்னர் ஆதி குமரகுருபர பெண்கள் மேல்நிலைப்பள்ளி என பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தேன்.

 அப்பொழுது இப்பொழுது உள்ளது போல்  தொலைக்காட்சியோ மற்ற பொழுதுபோக்கு அம்சங்களும் கிடையாது. காலை பள்ளிக்கு சென்று வந்தால் மாலை விளையாடிவிட்டு பின்னர் டியூஷன் சென்று படித்தால் அன்றைய நாள் முடிந்து விடும். வார இறுதி நாட்களில் கோயில் சுத்தம் செய்வது, திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்வது, ஆர்எஸ்எஸ் வகுப்புக்களில் கலந்து கொள்வது, பொது நூலகத்திற்கு செல்வது என இளம் இன்றைய இளம் வயதில் யாரும் முயற்சி செய்யாத பொழுதுபோக்குகள். எங்கு திரும்பினும் மனிதநேயமுள்ள அன்பான மக்கள் நிறைந்த ஊர் எங்கள் ஊர். திருநெல்வேலி என்றால் அனைவரும் அல்வா என்றும் அறிவார்கள் என்றும் கூறுவார்கள்.  ஆனால் எனக்குத் தெரிந்து எங்கள் ஊரில் அன்பை மட்டுமே கண்டிருக்கின்றேன். இன்னும் எனக்கு மிகப் பசுமையாக ஞாபகம் இருக்கிறது நான்காவது வகுப்பு படிக்கும் பொழுது என்னுடைய வகுப்புத் தோழன் ராமச்சந்திரன் என நினைக்கிறேன், அவருடைய தந்தை எங்களூர் பஜாரில் பல்பொருள் அங்காடி வைத்திருந்தார். எங்கள் குடும்பத்திலும் அங்கே பொருட்கள் வாங்குவது என வாடிக்கையான கடை தான்.  ஆனால் அவன் ஏதோ என்னைப் பற்றி கூற நான் கோபத்தில் அவன் கையை முறுக்கி உடைத்துவிட்டு மிகப் பெரிய பிரச்சனையாகி அவர் தந்தையிடம் இது சென்ற பொழுது மிகச் சாதாரணமாக அவர் பிள்ளைகள் என்றால் இதெல்லாம் சகஜம்தான் பெண்பிள்ளையை என்ன சொன்னாய் எதனால் அவள் உன் கையை முறித்தாள்  என அந்தப் பையனிடம் கேட்கவே நிலைமை மாறிப்போனது. நான் என் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர் தந்தையோ நீயும் என் மகள் போல் தான், பிள்ளைகளுக்குள்  இது சகஜம்தான் என மிக எளிதாக கடந்து போனார்.  அப்படி அன்பான மனிதர்களால் நிறைந்தது என் இளமைப்பருவம். 

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது சிவராத்திரி அன்று 5 விளக்கு பகுதியில் இரவு முழுக்க திரை கட்டி படம் போடுவார்கள். விழித்திருக்கவேண்டும் என்பதற்காக அந்தப் படத்தை அங்கு சென்று பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கும். எனது அப்பா மிகவும் நட்பானவர். ஆனால் அம்மா மிகவும் கண்டிப்பானவர்.  பெண் பிள்ளைகள் என்பதால் யாரும் எதுவும் சொல்லி விடக்கூடாது என கூடுதல் கவனம் கொள்பவர்.  அவரிடம் மிகவும் கெஞ்சி அனுமதி பெற்று என் வகுப்புத் தோழி கற்பக சுந்தரி என்பவரது வீட்டின் வாசலில் உட்கார்ந்து தசாவதாரம் படம் பார்த்து பின்னர் இன்னொரு படமும் போடவே அங்கேயே உட்கார்ந்து விட்டேன். காலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு சென்று அடிகள் வாங்கியது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.


 இன்று பள்ளிகளில் ஞாபகத் திறனும் மொழி வளத்திற்கும் போட்டிகள் வைப்பது மிகவும் குறைந்து போனது. ஆனால் எங்கள் பகுதிகளில் விவேகானந்தா கேந்திரம் ஒவ் வொரு தாலுகா, பிறகு மாவட்ட அளவிலும் பின்னர் மாநில அளவிலும் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஞாபக சக்தி திறன் போட்டி ,பாட்டுப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்துவார்கள். அதில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றால் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரத்தில் அழைத்துச் சென்று மூன்று நாட்கள் தங்கவைத்து பயிற்சிப் பட்டறைகள் நடத்துவார்கள்.  அதில் இரண்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒரு வருடம் கூட விடாமல் பங்கு கொண்டுள்ளேன்.  அது போதித்த நெறிமுறைகள் இன்றளவும் வாழ்வில் எத்தனை கோடி கிடைத்தாலும் கிடைக்கப் பெறாத ஒரு பொக்கிஷம்.  உளத்தூய்மை, உடல் தூய்மை, சுற்றுப்புறத்தூய்மை, சமுதாய நன்மை அனைத்தையும் போதித்த கலைக்கோயில். அது இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஞாபகத் திறன் போட்டி ஒப்புவித்தல் போட்டி இந்த இரண்டு மட்டுமே நடைபெறும். ஆறாம் வகுப்பிலிருந்து பேச்சுப் போட்டி பாட்டுப் போட்டி கவிதைப் போட்டி கட்டுரைப் போட்டி நடைபெறும் பாட்டு போட்டியை தவிர அனைத்து போட்டியிலும் கலந்து கொள்வேன். நான் கலந்துகொண்ட முதல் பேச்சுப்போட்டி மேடை அவர்கள் ஏற்படுத்தித் தந்தது தான். 

அப்பொழுது பெண்கள் பள்ளியில் போட்டி நடத்துவதற்கு இடவசதி இல்லாததால் பொதுவாக ஒரு இடத்தில் வைத்துதான் போட்டிகள் நடத்துவார்கள். அது பெரும்பாலும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யாகத்தான் இருக்கும்.  ஆறாம் வகுப்பு முதல் பேச்சுப்போட்டிக்கு மேடை ஏறிய பொழுது மொத்த அரங்கமும் கைதட்டி மனநிலையை பரிசோதித்தது. இன்றும் நினைவில் இருக்கிறது எனக்கு பின்னர் பேசிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் நானா என ஒரு பனிப்போர் அங்கு நிலவியது அனைவருக்கும் நினைவில் இருக்கும். அந்தப் பரிசை சொல்லும் நேரத்தில் சப்த நாடிகளும் ஒடுங்கி பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு என்று பெயரைக் கேட்டவுடன் இருந்த சந்தோஷத்திற்கு இன்று கோடி கொடுத்தாலும் இடைவிடாது.  அன்று முதல் பல்வேறு மேடைகளில் பல்வேறு தலைப்புகள், இதில் அப்பா மிக உறுதுணையாக இருப்பார். 

ஒரு தலைப்பு கொடுத்தால் அவருடன் மாலையில் உட்கார்ந்து விவாதித்து விட்டு என்னை எழுதச் சொல்வார். அதில் கண்டிப்பாக திருக்குறள் மேற்கோள் இருக்க வேண்டும், பாரதியார், பாரதிதாசன் மேற்கோள் இருக்க பக்தி சம்பந்தமான தலைப்பு என்றால் அதற்கு சம்பந்தமுள்ள புத்தகங்களிலிருந்து ஸ்லோகங்களும் செய்யுளும் அதில் குறிப்பு எடுக்க வேண்டும் என பால பாடம் சொல்லித் தந்தவர் தந்தை.  பத்மாசினி என்ற தமிழாசிரியர் மேலும் அதனை செம்மைப் படுத்தினார். அவரும் அவருடைய கணவரும் ஆங்கிலம் கலவாத தமிழ் பேசி என்றும் எங்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியவர்கள். அவர்கள் என்னை பேசச் சொல்லி மேலும் அதனை மேலே ஏற்றுவார்கள் இப்படித்தான் அரசு பள்ளியில் காலம் கழிந்து கொண்டிருந்தது. ஆறாம் வகுப்பிற்கு பின்னர் சிந்திக்க என தனியாக நேரம் ஒதுக்கி தேர்வு எழுத வைத்து, ஹிந்தியிலும் தேர்ச்சி பெற வைத்தவர் தந்தை. அப்பொழுது ஸ்ரீவைகுண்டத்தில் தேர்வுகள் நடக்காது.  

அருகிலுள்ள திருநெல்வேலியில் இந்து  மேல்நிலைப்பள்ளி, ரோஸ்மேரி மேல்நிலைப் பள்ளியில்தான் தேர்வுகள் நடக்கும். ஆறாம் வகுப்பு படிக்கும்போதே முதல் நாள் அழைத்துச் சென்று வழிகாட்டி விட்டு மாலை அழைத்து வந்தார். பின்னர் இதேபோல் அனைத்து நாட்களும் நீயே சென்று வரவேண்டும் என்று தன்னம்பிக்கையூட்டி  இந்த சமுதாயத்தில் தனியாக வாழ, தைரியமாக வாழ கற்று தந்தவர் தந்தை.  அங்குள்ள நூலகத்தில் பெரும்பாலும் பெரியவர்கள் செய்தித்தாள்களும், வார மாத இதழ்களும் படிக்கும்பொழுது சிறுவயதிலேயே பாலகுமாரன் நாவல்கள் எடுத்தபொழுது அந்த நூலக மேலாளர் இந்த நூலகத்தில் முதல்முதலாக ஒரு பெண்பிள்ளை அதுவும் இந்த வயதில் நாவல்கள் எடுத்துப் படிக்கும் அளவு இருப்பது நீயே என்று ஒரு தலைப்பை பற்றியும் பல எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியவர்.  

ஒரு சமயத்தில் இந்த நூலகத்தில் உள்ள பாலகுமாரன் கதைகள் பலவற்றை படித்துவிட்டு பின்னர் புத்தகம் வேண்டும் எனக் கேட்ட பொழுது அவர் சிரித்துக்கொண்டே இனிமேல் பாலகுமாரன் எழுதினால்தான் இங்கே புத்தகம் என்று கூறுவார் அந்த அளவிற்குமானது எனக்கும் என்னுடைய ஊர் நூலகத்திற்கும் ஆன தொடர்பு.  என்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ள தோழி சுபா மனதிற்கு மிகவும் நெருங்கிய அவர் இன்றளவும் என் நட்பு வட்டத்தில் உள்ளார்  நானும் அவளுமே ஹிந்தி பயின்று ஒருவருக்கொருவர் விவாதித்து பரிட்சை எழுதி பதினொன்றாம் வகுப்பு முடிக்கும் பொழுது இந்தித் தேர்வில் தேர்ச்சி பெற்றோம்.

 மனிதர்கள் எத்தனை அன்பானவர்கள் என்பதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு என் தோழி மாலா. அவள் எப்படி தோழி ஆனால் என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்.  நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது இரவில் தேள் கடித்து உள்ளூரில் வைத்தியம் பார்க்க இயலாமல் அருகிலுள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நினைவில்லாமல் 24 மணி நேரம் கடக்க வேண்டும் என்ற அபாய கட்டத்தில் இருந்தேன். அப்பொழுது எனக்கு கொஞ்சமும் அறிமுகமில்லாத மாலா என்ற பெண் எனது அக்காவிடம் காயத்ரி எப்படி இருக்கிறாள், அவளுக்கு நினைவு வந்து விட்டதா? அவளுக்குத்நினைவு திரும்பி  விட்டது என அம்மா கூறினார்கள்.  நான் அவள் பேசி கேட்டிருக்கிறேன் ஆனால் அவளுக்கு என்னை தெரியாது. எனக்கு அவளை மிகவும் பிடிக்கும் அவள் நலம் பெற வேண்டும் என வண்டி மாரியம்மன் கோயிலில் வேண்டிக் கொண்டிருக்கிறேன் என எனது அக்காவிடம் கூற நான் விழித்து வீட்டிற்கு வந்தவுடன் என்னிடம் கூறினார். எனக்கு அவளை பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை ஏற்பட்டது. 

ஏனெனில் நான் அவளை அதற்கு முன்னர் பார்த்ததே இல்லை. அவள் என் பள்ளியும் அல்ல. என் பக்கத்து பள்ளியில் படித்து வந்திருந்தாள். ஆனால் அவள் என்னை போட்டிகளிலும் கோயில்களிலும் பார்த்து இருந்ததாக கூறினார். ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்ததும் என்னை அம்மாவுடன் வந்து பார்த்தாள் எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாத யாரென்றே தெரியாத ஒரு நபர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இறைவனிடம் வேண்டும் பண்பு இந்த தாய்மண் நமக்குத் தந்தது என்று புரிந்துகொண்ட தினம் அன்று அன்று முதல் இன்று வரை என் சுக துக்கங்களில் பங்கு கொள்பவர் அந்தத் தோழி.


நான் பதினொன்றாம் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது மிக புதிய அனுபவம் ஏற்பட்ட காலங்கள் எனக்கு ஆங்கிலம் கற்றுத் தந்த டியூஷன் வாத்தியார் கைலாசம் என்பவர். ஐந்து நிமிடம் தாமதமாக வந்தாலும் ஒரு தவறு செய்தாலும் புறங்கையில் மர ஸ்கேலால் தவறுகளுக்கு தகுந்த அடிப்பது இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் வலிக்கவே இல்லை அன்று அவர் கற்றுத் தந்தது தான் இன்று வரை  கூடவே வருகிறது கணிதத்தில் 98 மதிப்பெண் பெற்றும் கணக்கு பாடம் என்ற முதல் பாடப்பிரிவு எடுக்காமல் வணிகவியலை  தேர்ந்தெடுத்த பொழுது தலைமையாசிரியை தந்தையை அழைத்து இவளை முதல் பாடப்பிரிவு எடுக்க வையுங்கள் நன்றாக படிப்பாள்.  ஆனால் பிடிவாதமாக வணிகவியல் வேண்டும் என்கிறாள் என்று கூறிய பொழுது படித்தால் வணிகவியல் படிக்கிறேன் இல்லையெனில் படிக்கவில்லை என அடம் செய்து பதினொன்றாம் வகுப்பு சேர்ந்து அங்கு கிடைத்த தோழிகள் செல்வி எலிசபெத் அவர்களும் இன்றளவும் நட்பில் இருக்கிறார்கள்.  அவர்கள் கிராமத்தில் இருந்து வருவதனால் எப்பொழுதும் நிலக்கடலை பனங்கிழங்கு நொங்கு என எடுத்து வந்து தருவார்கள். பொங்கல் என்று வந்தால் தாய் வீட்டு சீதனம் போல் புது அரிசி மஞ்சள் என ஊரிலிருந்து கொண்டுவந்து தருவார்கள் அத்தகைய நல்ல உள்ளம் கொண்டவர்கள் பணம் இல்லாவிட்டாலும் மனம் உள்ளவர்கள் இந்த அன்பு என்றும் நிலைக்கும் என்று இன்றளவும் உணர்த்திக் கொண்டிருப்பவள்.

கல்லூரி கனவுகள் அனுபவங்கள்

 பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது என்ன படிக்கலாம் என ஒரு பிள்ளைகளுக்கும் இருக்கும் கனவு போல் எனக்கும் இருந்தது அப்போது புதிதாக கேள்விப்பட்ட நிறுமச் செயலறியல் துறை தான் வேண்டும் என்று கூறி ராஜபாளையத்தில் ஹாஸ்டலில் சேர்ந்து படிக்க விருப்பப்பட்டு கேட்டபொழுது தந்தை கூறியது தாராளமாகப் படிக்கலாம். படிக்க வைக்கிறேன் .ஆனால் வீட்டிற்கு அடிக்கடி வர வேண்டும் என்றோ வீட்டு ஞாபகம் வருகிறது என்றாலோ கேட்க மாட்டேன் எனக் கூறி  சேர்த்து விட்டார்.  அங்கு செண்பகவல்லி என்ற ஆங்கில ஆசிரியர் மிகவும் கண்டிப்புடனும் அன்பாகவும் கிராமத்து பிள்ளைகளுக்கு ஆங்கிலம் பேசுவது கடினம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தார் அவர்களின் அன்பும் நட்பும் கிடைத்தது.

பள்ளியில் உள்ள பழக்கம் அங்கேயும் துவங்கியது லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், மக்கள் சக்தி இயக்கம், திருவள்ளுவர் மன்றம் என பல இடங்களிலும் பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு கல்லூரிக்கு பெருமை தேடித்தர வாய்ப்பு கிடைத்தது.  இரண்டாம் வருடத்திலேயே  கல்லூரியின் முதல்வர் போட்டிகளுக்கான விவரங்கள் வரும் பொழுது என் பெயரை அவரே குறிப்பிட்ட அனுப்பிவிட்டு தகவல் சொல்லி அனுப்புவார். இந்த நேரம் இந்த இடத்தில் இந்த தலைப்பில் பேச வேண்டும் தயார் செய்துகொண்டு ஆசிரியரை அழைத்துச் செல் என அந்த அளவிற்கு என்னிடம் நம்பிக்கை கொண்டவர்.  இந்திரா என்ற அந்த முதல்வர் நாம் எப்படி நம் நாட்டின் பிரதமர் இந்திரா மிகவும் தைரியமான ஒரு பெண்ணாக இருந்தாலும் அதே போல இவர்கள் அன்பிலும் கண்டிப்பிலும் சிறந்தவர். மிகவும் எளிமையானவர் ஹாஸ்டலில் இருக்கும் பிள்ளைகளின் மேல் தனி கவனம் கொள்பவர். 
ஏனெனில் அப்பொழுதெல்லாம் வீட்டில் இருந்து கடிதம் வந்தாலும் எங்கிருந்து கடிதம் வந்தாலும் அதனை பிரித்து படித்து விட்டு தான் தருவார்கள். இயல்பிலேயே சுக குறைவான எனக்கு எப்பொழுதும் என் தந்தை சொல்லும் அறிவுரை உணவை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும், மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். இதனை படித்து விட்டு எப்போதும் என்னிடம் தனி அக்கறை உடனே இருப்பார்.  இரண்டாம் வருடம் முடிக்கும் பொழுது அவருடைய வயதின் காரணமாக ஓய்வு பெற நேரிட்ட பொழுது அழுது ஆர்ப்பாட்டம் செய்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. அப்பொழுது ஆட்டோகிராஃப் கேட்டபொழுது அவர் எழுதியது இன்றும் பத்திரமாக உள்ளது. 
எல்லாப் பெண்களையும் போல் பிறந்தோம்  திருமணம் செய்து குழந்தை பெற்றோம் என இருக்கக்கூடாது. உன்னிடம் தனித் திறமைகள் இருக்கிறது.  அதனை எந்தப் சூழ்நிலையிலும் மறுக்கவோ மறக்கவோ அதனை பயிற்சி செய்ய முயலாமல் இருக்கக்கூடாது.  இதுதான் நான் உனக்குச் சொல்லும் அறிவுரை என்று அவர் எழுதினார்.  எத்தனை அன்பு இருந்தால் வாழ்க பல்லாண்டு என எழுதாமல் என் தனித் தன்மையை கண்டறிந்து அதனை வளர்க்க வேண்டும் என்று ஒரு கட்டளையைப் இட்டிருப்பார் எத்தனை தன்னலமில்லாத அன்பு அவருடையது என வியந்திருக்கிறேன்.

கல்லூரிக்குள் வந்தபொழுது என்னைச் சுற்றியிருந்தவர்கள் அத்தனையும் தெலுங்கு பேசக்கூடிய மாணவிகள் ஒரு அறையில் உள்ள 8 பேரில் நான் மட்டுமே தமிழ். பல நேரம் குளியலறை சென்று அழுதிருக்கிறேன். தனிமைப்பட்டு விட்டதாக உணர்ந்திருக்கிறேன். ஆனால் அதுவும் சில காலம் தான் அடுத்த ஆறு மாத காலத்திற்குள் தெலுங்கை புரிந்துகொண்டு இரண்டாம் வருடத்தில் இருந்து சிறிய சிறிய வார்த்தைகளை பேசிக்கொண்டு மூன்றாம் வருடம் முடியும் பொழுது தெலுங்கை தமிழில் எழுதி ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தது எல்லாம் ஒரு சிரிப்பான  நினைவலைகள். பேராசிரியர் உமா ராணி எப்பொழுதும் என் முயற்சிக்கு துணை இருந்தார். மூன்றாம் வருடம் படிக்கும்போது அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் இருந்தபொழுது ஸ்ரீவித்யா  அவர்கள்தான் உயர்கல்வி குறித்த அறிவை சொல்லித் தந்தவர்கள் வழிகாட்டும் நிகழ்ச்சிக்காக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அழைத்து வந்தார்கள் 

ஆனால் அப்பொழுது தெரியாது இந்த பல்கலைக்கழகம் என் வாழ்வில் ஒரு அங்கமாகிவிடப்போகிறது என் வாழ்க்கையை மாற்றப் போகிறது என்று.  அங்கு நடந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட போதுதான் செயலரியல் துறையில் மேற்படிப்பு பற்றியும் ஏசிஎஸ் படிப்பைப் பற்றியும் அறிந்தேன். அப்பொழுது ஒரு குழப்பம் அடுத்து என்ன செய்வது என்று மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொழுது என் தந்தை என்னிடம் சொல்லியது இன்றும் நினைவிருக்கிறது இங்கிருந்து காரைக்குடிக்கு பேருந்து  இருக்கிறது. சென்னைக்கும் பேருந்து  இருக்கிறது.  நீ ஏசிஎஸ் படிக்க வேண்டும் என்றால் சென்னை சென்று உன்னை அங்கே தங்க வைத்து படிக்க வைக்கிறேன், நீ மேல்படிப்பு படிக்க வேண்டுமென்றால் காரைக்குடிக்குச் சென்று உன்னை சேர்த்து விடுகிறேன் என்று வாழ்வில் ஒரு தருணத்தில் எதையும் என்னை முடிவெடுக்க வைத்து அந்தப் முடிவுக்குப் பின்னால் நின்று உதவியவர் என் தந்தை. 

என்றுமே முடியாது என்று எதையும் மறுத்தவர் அல்ல. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கற்றுத் தந்து  வாழ்க்கையை எவ்வளவு எளிதாக வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டியவர்.  பின்னர் மேல் படிப்பு படிக்கலாம் என முடிவெடுத்து காரைக்குடி சென்றே கரைக்குடி சென்று பணம் கட்ட செல்வதற்கு சென்று கொண்டிருந்த பொழுது இரண்டாம் வருடம் படித்த ஒரு சீனியர் மாணவர் என்னை நிப்பாட்டி நீ முதலாம் வகுப்பு வருடம் சேராததானே வந்து இருக்கிறாய்.  நீ இதே இடத்தில் நின்று தேசிய கீதம் பாடி விட்டு செல் என ராகிங் செய்தார்.  அதனை கண்ட அப்பா பயந்து விட்டு இந்த பல்கலைக்கழகம் வேண்டாம் வா நாம் சென்று விடலாம் என்றார்.  

ஆனால் நானோ சினிமா பாட்டை பாட சொல்லவில்லையே தேசியகீதம் தானே பாடச் சொல்கிறார்  பாடி விட்டு வருகிறேன் எனக்கூறி பாடிவிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வங்கியில் பணம் கட்ட வந்த அப்பா மிகவும் பயந்து  என்னை அங்கு விட்டுச் சென்றார்.  ஆனால் இன்றுவரை அதற்குப் பின்னர் அந்த சீனியர் மாணவர் அண்ணாவாகி நான் தங்கையாக இன்றளவும் தொடர்பிலேயே இருப்பது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்.   ராகிங் என்பது அடுத்தவர்களை துன்புறுத்துவது அல்ல ஆனால் அது எந்த நிலையில் அதனை எப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது, செய்யும் நபர் யார்?  பாதிக்கப்படுபவர் யார்? என்பதை பொருத்தே அமைகிறது என்று புரிந்து கொண்ட தருணம் அது.

ஒரு பெயரைக் கேட்டாலோ  ஒரு பாடலை பாடச் சொன்னாலோ ராகிங்  என்று அர்த்தமல்ல.  ஒரு அறிமுகத்திற்கான  ஒரு விஷயம் என சிறு சிறு விஷயங்களை கூட வாழ்வில் பெரிதாகாமல் அதனுடைய தன் இயல்பிலேயே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை கற்றுத்தந்தது அழகப்பா பல்கலைக்கழகம்.  பல்வேறு நண்பர்கள் பல ஊர்களிலிருந்து பல கலாச்சார மக்கள் முதலில் கண்டது அங்குதான்.  அதுவரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் கல்லூரியில் படித்துவிட்டு முதல் முதலில் நிறைய ஆண் நண்பர்கள் கிடைத்தது அங்கு  தான்.  ஆனால் எப்பொழுதும் எதனையும் தவறாக எடுத்துக்கொண்டதில்லை,  மனதில் நினைத்தது இல்லை அதற்கு காரணம் படிப்பின் மேல் எனக்கிருந்த ஆர்வம் எப்படியாவது எதையாவது சாதிக்க வேண்டும் என கல்லூரி முதல்வர் கூறிய அறிவுரைகள் இவையெல்லாம் மனதில் என்றுமே அசைபோட்டு அசைபோட்டு அடுத்த இடத்திற்கு நம்மை நாம் கொண்டு செல்ல வேண்டும் என்று அந்த உந்துதல் இவையே காரணம்.   விடுதி என்பது ஒவ்வொருவரும் வாழ்வில் இருந்து அனுபவப்படவேண்டிய ஒரு இடம்.  புத்தருக்கு போதி மரம் போல் சாதாரண மனிதனுக்கு விடுதி. முதுநிலை பட்டம் படிக்கும் பொழுது சுப்பிரமணியன், லோகநாதன், முஹதும் , பிரியா நான் என பஞ்ச பாண்டவர் குழு. விடுதியில் சுஜாதா, ஆயிஷா என பிற பிரிவு மாணவிகள் என் குழு மனப்பான்மை கற்று தருவது விடுதியும் கல்லூரியும் தான்.
 
பல்கலைக்கழகத்தில் நூலகத்தை பார்த்து வியந்து அதிலேயே மூழ்கி போன நாட்கள் பல உண்டு. பேராசிரியருக்கும் விரிவுரையாளரும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வைத்தது அந்தப் பல்கலைக்கழக சூழல் கல்வி என்பது எப்படி சொல்லித் தரப்பட வேண்டும், எப்படி அதனை புரிந்து கொள்ள வேண்டும், நாம் அதில் என்ன முயற்சி எடுக்கவேண்டும் என்று சொல்லித் தந்தது.  முனைவர்.மாணிக்கவாசகம் அவர்கள் என்னுடைய குரு ஆசான் இன்றளவும் என்னுடைய தொழில் நிமித்தமாகவோ வேலை நிமித்தமாகவோ எந்த ஒரு முடிவுகளையும் அவரை கலந்து ஆலோசித்து செய்வது என்ற அளவிற்கு என்னில் உயர்ந்தவர்.  ஏதும் அறியாத ஒரு கிராமத்துப் பெண்ணிற்கு 25 வயதில் முனைவர் பட்டம் சாத்தியம் என்றால் அதனை சாத்தியமாக்கி அவர், அவர் ஒருவரே.  என்னுடைய அத்தனை தவறுகளையும் குழந்தைத் தனத்தையும் முட்டாள்தனத்தையும் பொறுத்து கற்றுத்தந்து ஒரு சிறந்த நபராக உருவாக்கியது அவரை முதுநிலை பட்டம் பெற்ற பின்னர் எம்பில் பட்டம் பெற வேண்டும் என நினைத்த பொழுது ஊக்கப்படுத்தி அவரவர் என் தந்தையிடம் எனக்காக பேசி சம்மதம் பெற்றவர். அவர்

ஆராய்ச்சிக்கான வழிகாட்டியாக எங்களுடைய துறைத் தலைவர் அவர்களின் கீழ் என்னை மாணவியாகிய பொழுது பயத்தில் அழுது  பொழுது என்னை ஆற்றும் ஏற்படுத்தியவர். அவர் நான் உனக்கு கற்றுத் தருகிறேன் என்று கூறி எனக்கு கற்றுத் தந்து என்னுடைய பயத்தை போக்கி துறைத் தலைவரிடம் நல்லபெயர் எடுக்க உதவி செய்தவர் அவர்.  முதல் மாணவியாக தங்கப் பதக்கம் வென்றதற்கு காரணமும் துறை தலைவரும் அவரும்தான் திரு நீலமேகம் அவர்கள்.  துறை தலைவர் என்ற பொழுது நான் சினிமாவில் வருவது போல் ஒரு காரில் வந்து இறங்குவார் கோட் சூட் எல்லாம் போட்டிருப்பார் என நினைத்த பொழுது கோட் அணிந்து ஷூ அணிந்து சைக்கிளில் கல்லூரி வளாகத்திற்கு வந்த முதல்நாள் திக்பிரமை கொடுத்த அந்த நாள் என் வாழ்வில் மறக்க இயலாது.  வளாகத்திற்குள்ளேயே தானே வீடு இருக்கிறது அங்கிருந்து இங்கு வருவதற்கு எதற்கு அனாவசியமாக கார் என மிதிவண்டியில் வந்து எளிமையின் அடுத்த உருவமாக  திகழ்ந்தவர்.துறைத்தலைவர் இன்றும் என்னுடன் தொடர்பில் இருப்பவர்.  சென்னை வரும் போதெல்லாம் மறக்காமல் என்னை அழைத்துப் பேசுபவர். பல கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகத்தின் பல துறை மேம்பாட்டுக்கும் பின்னாலிருந்து செயல்பட்டவர் அவர்.  இப்படி மிகப்பெரிய அறிஞர்களின் அன்பு கிடைத்தது அங்குதான்.  எம்பில் முடித்த பின்னர் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்ற ஆசை எழுந்த பொழுது தந்தை திட்டவட்டமாக மறுத்துவிட்டார் இதற்குமேல் படித்தால் மாப்பிள்ளை பார்ப்பது அரிது என மறுத்த பொழுது வேலைக்கு சென்று கொண்டே படிக்கலாம் என என்னை ஊக்கப்படுத்திவர்  என்னுடைய குரு திரு. மாணிக்கவாசகம் அவர்கள் ஒரு ஆராய்ச்சி பணியில் ஈடுபடுத்தி அதில் வருகின்ற பணத்தை எனக்கு மாத ஊதியமாக தந்து முனைவர் பட்டத்திற்கு முழுநேர மாணவியாக ஏற்றுக்கொண்டு இரண்டு வருடத்தில் முனைவர் பட்டத்தை முடிக்க வைத்த பெருமை அவரை மட்டுமே சாரும் ஒரு வருடத்திற்கு பிறகு மத்திய அரசிடமிருந்து பணம் வர தாமதமான பொழுது தன் கை பணத்தை செலவிற்காக தந்து படிக்க வைத்த பெருந்தகை அவர். அவருடைய மனைவியும் அவர்கள் வீட்டில் ஒரு நபராக பலநேரம் உணவளித்து பராமரித்து இருக்கிறார். தவறு செய்யும் போதெல்லாம் என்னை கண்டித்தும் அன்பால்  என்னை அடிமை படுத்தியவர் அவரின் மனைவி, அவருடைய பிள்ளை அவர்களும் இன்றளவும் தொடர்பிலேயே இருக்கிறார்கள் என்பது நான் பெற்ற பேறு. 

இந்த பல்கலை கழகத்தில்  எம்.பில் படிக்கும்பொழுது என் வாழ்க்கை துணியை கண்டேன். ஆனால் அவர் என் படிப்பில் உறுதுணையாக இருந்து முனைவர் பட்டம் பெரும் வரை பொறுமையாக காத்திருந்தவர். சொற்கேட்ட விநாயகர், பிள்ளையார் பட்டி விநாயகர் என பிடித்த பிள்ளையாரோடு படித்து முடித்தது அவன் அருள்.  கல்வி என்றுமே கசந்ததில்லை. எனவே எதாவது ஒன்று பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போஸ்த்தும் இருக்கிறது.  அதனால் தான் முதுநிலை உளவியல் படிப்பு, வணிகவியல், கணினி பயன்பாடுகள் போன்றவை படிக்க வைத்தது.

 

பணி அனுபவம்

 படித்து முடித்துவிட்டு சிங்காரச் சென்னைக்கு வந்து முதல்  கல்லூரியில் சேர்ந்த பொழுது மிக மிக புதிய அனுபவமாக இருந்தது.  மாநிலத்தின் தலைநகர் பேச்சு மொழி மிகவும் வித்தியாசம். இங்குள்ள பிள்ளைகளோ அதையும் விட வித்தியாசமாக இருப்பவர்கள் என உணர்ந்து கொள்ள சில காலம் பிடித்தது.  சினிமாவில் வருவது போல் உருட்டுக் கட்டைகளுடன் வராண்டாவில் ஓடி மாணவர்கள் தாக்கிக் கொள்வதும் அடியாட்களுடன் வந்து கேன்டீனில் அடிப்பதையும் கண்ணாரக் கண்டு பயந்தது இன்றும் நினைவில் உள்ளது.  ஆனால் பிள்ளைகள் என்றும் பிள்ளைகளே. நாம் எப்படி அன்பு செலுத்துகிறோமோ அதே அன்பு நமக்குத் திரும்பக் கிடைக்கும். எத்தனை மாணவர்கள் என்னுடைய பாடப்பிரிவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்களோ அவர்கள் அனைவரும் மூன்றாம் வருடம் முடிக்கும் பொழுது சிறந்த மாணவர்களாக வெளியே சென்றது அவர்களுக்கு மட்டுமல்ல எனக்குமே பெருமை. 

காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்வைத் துவங்கிய பொழுது அந்தக் கல்லூரி எனக்கு தாய் போல  பார்த்துக்கொண்டது இன்றளவும் நன்றிக்கடன் பட வைத்த ஒரு இடம்  அந்தக் சிந்தி கலை கல்லூரி எனக்கு கல்வித்துறையில் மட்டும் போதிக்கவில்லை வாழ்வை போதித்த இடம். அன்று அந்த நட்பு வட்டாரம் அன்பு ஒன்றையே சூழலாக கொண்டு ஆராதிப்பது இன்றும் ஆராதிக்கிறது. ஆனால் மாற்றம் ஒன்றுதான் வாழ்க்கை என மாற்றத்திற்கு தயாராகும் பொழுது மிகவும் ஊக்கப்படுத்தி உன்னால் இது முடியும் ஆகவே நீ அதை நீ சாதித்து காட்டு என என்னை ஊக்கப்படுத்தியது அந்தக் கல்லூரி அங்கிருந்து அடுத்த சூழல் கலைக் கல்லூரியில் படித்து கலை அறிவியல் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கலை அறிவியல் கல்லூரியில் வேலை பார்த்த எனக்கு தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மை துறையில் வேலை கிடைத்த பொழுது என்னாலேயே என்னுடைய திறமையை நம்ப முடியவில்லை.  ஆனால் உள்ளே சென்றபின் தான் எனக்கு தெரிந்தது என்னுடைய துறையில் இருந்த 16 பேரில் துறைத் தலைவருக்கு அடுத்தபடியாக முனைவர் பட்டம் பெற்று இருந்தது நான் மட்டும்தான் என எனக்கு வேலை தர செய்தது என்னுடைய அந்த முனைவர் பட்டம் தான் என்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்த 8 மாதத்திலேயே பேராசிரியரிலிருந்து துணை பேராசிரியராக மாற்றியது. பின்னர் ,மேலாண்மை கல்வி படித்தால்தான் பேராசிரியராக ஆக முடியும் என கூறியபொழுது தொலைதூரக்கல்வியில் இரண்டு வருடத்தில் அதனை உடனே படித்து முடித்தேன். படித்து முடித்த சான்றிதழ் வந்த இரண்டாம் நாள் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தது அந்த கல்வி நிறுவனம். என்றும் என்னுடைய முயற்சிகளுக்கு துணைநின்றது எந்த ஒரு புதிய கருத்துக்களுக்கும் மதிப்பளித்து ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியது செயின்ட் பீட்டர்  பொறியியல்  கல்லூரி.

 நட்பு எப்பொழுதும் துணை நிற்க கூடியது. அப்படித்தான்  பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பிறகு முனைவர் ஸ்டெல்லா நட்பானார். வயதிலும் அனுபவத்திலும் பெரியவராக இருந்தாலும் நட்புடனும் அன்புடனும் கல்லூரியின் சூழலை சொல்லித்தந்து குறுகிய காலத்தில் பழகிய இடம் போல மாற்றித்தந்தது அவரின் பெருந்தன்மை.ஊடகப்பணி, எழுத்துப்பணி.

காரைக்குடியில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும்போது அங்குள்ள தொலைக்காட்சியில் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது அதன் மூலம் உள்ளூரிலேயே பல நிகழ்ச்சிகளை தொகுப்பு தொகுத்து வழங்கும் வாய்ப்பும் கிடைத்தது இந்த திறமையை பார்த்து கம்பன் கழகம் ரோட்டரி சங்கம் அரிமா சங்கம் போன்றவற்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வாய்ப்பு கிடைத்தது

  சென்னை வந்த புதிதில் ஊடகத்தில் மேல் உள்ள ஆசையால் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக  ஆசைப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு சென்று தேர்வாகி பின்னர் சில காரணங்களால் சேர முடியாமல் போயிற்று ஆனாலும் விடாமல் துரத்திய விக்ரமாதித்தன் வேதாளம் போல் சன் தொலைக்காட்சி ஜெயா தொலைக்காட்சி என என்னுடைய தேடுதல்  மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

 அப்பொழுது தான்  எனது அக்காவின் வீட்டிற்கு அருகிலுள்ள ஊடக நண்பர் ஒருவர் நீங்கள் இத்தனை படித்திருக்கிறீர்கள் ஏன் ஊடகத்தில் ஒரு செய்தி வாசிப்பாளராக வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள் ?உங்களுடைய கல்வியில் கவனம் செலுத்துங்கள் உங்களுடைய துறையில் கவனம் செலுத்துங்கள்.  சிறிது காலத்தில் இந்த ஊடகங்கள் உங்களை பேட்டி காணும் சூழல் ஏற்படும்.

 அப்படி உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள் என்று ஒரு அறிவுரை கூறினார் இன்று அது மெய்ப்பித்து போனதற்கு அவருடைய அந்த ஊக்கமும் ஒரு காரணம்.  அதற்குப் பின்னர் ஊடகத்தைப் பற்றிய ஒரு பெரிய ஆசை இல்லாமல் இளநிலை கல்வி கற்கும்போது விசுவின் அரட்டை அரங்கம் முதுநிலை கல்வி கற்கும் பொழுது காரைக்குடியில் இன்னொருமுறை விசுவின் அரட்டை அரங்கம் காரைக்குடியில் படிக்கும்பொழுது காதல் விவாத மேடை என ஊடக நிகழ்ச்சிகளில் ஒரு பங்கேற்பாளனாக பங்கு பெற்று அதிலும்  வெற்றி.  குழந்தை பிறந்த பிறகு வசூல் ராணி என்ற நிகழ்ச்சியிலும் வசூல் ராணியாக தேர்வாகி பல்வேறு பொருட்களையும் பெற்றிருக்கிறேன்.  அப்படி ஊடகத்துறை மீது ஒரு தீராத காதல். ஆனால் 2015 அந்த வாய்ப்பு நண்பர் திரு.கருப்பசாமி அவர்கள்  மூலம் ஈடேறியது. எந்த நண்பர் என்னை உங்களை தொலைக்காட்சி ஊடகமே அழைக்கும் என்று சொன்னாரோ அவரே ஒரு கல்வி நிகழ்ச்சிக்காக என்னை முதன்முதலில் அழைத்தார்.  அன்று ஆரம்பித்தது ஊடகத்திற்கும் எனக்குமான ஒரு தொடர்பு. அதற்குப் பிறகு அடுத்த ஒரு வருடத்தில் வெற்றி நிச்சயம் என்ற  தினத்தந்தி வழங்கும் நிகழ்ச்சியை  எங்கள் கல்லூரியில் நடத்துவதற்காக தொடர்பு கொண்ட தினத்தந்தியில் பொது மேலாளர் தனஞ்செயன் அவர்கள் நான் பார்த்த போற்றுதற்குரிய மாமனிதரின் ஒருவர்.  எப்பொழுதும் சொல்லுவார்கள் ஒரு களிமண்ணை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும் என்று அதுபோல் நம்முடைய திறமையை அறிந்து கொண்டு அதனை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர் அவர்.  இதற்கு நான் மட்டுமல்ல பல்வேறு சான்றுகள் உள்ளன. ஒரு துறையில் சிறந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை மெருகேற்றி அழகு பார்ப்பவர் அவர். அப்படித்தான் அவருடைய அறிமுகமும் கிடைத்தது. 

எங்களுடைய கல்வி நிலையத்தில் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியினை நடத்துவதற்காக அவரை சந்தித்த பொழுது அதனை நடத்துவதற்கு சம்மதித்தார். அப்பொழுது தந்தி தொலைக்காட்சியில் கல்வித் துறை பற்றி அதில் நான் பங்கு கொண்டதைப் பற்றி கூறியபொழுது வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் மருத்துவத்துறை பற்றி பேச முடியுமா என கேட்டார். நானோ பதினொன்றாம் வகுப்பில் இருந்தே கலை அறிவியல் படிப்பு படித்தவர், என்னால் எப்படி முடியும் எனக் கேட்ட பொழுது இல்லை நீங்கள் முயற்சி செய்தால் முடியும் இரண்டு மாத அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள் முயற்சி செய்து பாருங்கள் என்றார். இரண்டு மாதம் கழித்து நான் எடுத்துச்சென்ற அந்த விளக்கங்களையும் குறிப்புகளையும் பார்த்து மிகவும் பாராட்டினார். அன்று ஆரம்பித்தது தினத்தந்திக்கும் எனக்குமான அந்த உறவு.
 

நான் பேசுவதை பார்த்து மிகவும் மகிழ்ச்சி கொண்டு எழுதுவீர்களா எனக் கேட்டார் அப்பொழுதுதான் பள்ளி கல்லூரிகளில் நான் கலந்து கொண்ட கட்டுரைகள் பற்றியும் என்னுடைய தயாரிப்பு பற்றியும் கூறியபொழுது முதல் முதலில் இளைஞர் மலரில் வாய்ப்பு தந்தார்.  25 வார கால தொடராக முதல் முதலில் எனக்கு வாய்ப்பளித்து என்னை எழுத்தாளர் ஆக்கிய பெருமை தினத்தந்தியையும் அவரையுமே   சாரும். இன்றளவும்  என்னுடைய எழுத்திற்கு பலரும் பாராட்டுகிறார்கள் என்றால் அதனை அழகுபடுத்தி மெருகேற்றி உருவாக்கியது திரு தனஞ்சயன் அவர்களே.  ஒரு நிகழ்ச்சி வாழ்வில் இத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? என்ற ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியை ஆச்சரியக்குறி ஆக்கியது வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி . 

இன்று 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு  ஆலோசனை கொடுத்திருக்கின்றேன்.  இதுவரை பல அறிவியல் ஆசிரியர்களும் மருத்துவர்களும் கூட என்னுடைய மருத்துவ கல்வி ஆலோசனையை கண்டு மகிழ்ந்து வாழ்த்தி  இருக்கிறார்கள்.   முதன்முதலில் திண்டுக்கல்  அருகில் ஒரு ஊரில் தான் முதல் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது. எப்பொழுதுமே வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் மருத்துவத் துறைதான் முதலில் இருக்கும்.  எனக்கு வாய்ப்பளித்த பொது மேலாளர்  மிகவும் கவனமாக நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.  ஏதாவது தவறு நடந்து விடுமா? ஏனெனில் 3000 மாணவர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களும் இருக்கும் இடத்தில் சிறு தவறும் தனிநபர் தவறாக இருக்காது, அந்த குழுவின் தவறாகவே இருக்கும், தினத்தந்தியின் தவறாகவே இருக்கும் என்பதில் மிகுந்த அக்கறையோடு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவர். நான் பேசி முடித்து வந்தவுடன் எழுந்து நின்று கையை குலுக்கினார், மிகவும் நன்றாக பேசியதாக வாழ்த்தினார் அப்போதுதான் வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதைப் போல் இருந்தது.

 அதற்கு பின்னர் கல்வியாளராக ஊடகங்களில் தொடர்ந்து கொண்டிருந்த நான் ஒரு சமூக ஆர்வலராகவும் இப்படி விவாத மேடைகளில் என்னுடைய பொது கருத்துக்களை பொதுத்தளத்தில் கூற அனைத்து ஊடகங்களும் வாய்ப்பளித்தது இப்படி பொது தளங்களில் கருத்துக்களைக் கூறுவதற்கு பின்புலம் ஏதும் தேவையில்லை கணவன் மற்றும் பிள்ளைகள் ஒரு துணையை போதும் என உணர்த்தியது பல தருணங்கள். கணவரும் என் பிள்ளையும் என்னுடைய விருப்பத்தை  அறிந்து   இன்றுவரை உறுதுணையாக இருக்கிறார்கள். அதுவே என்  பலம், நான் செய்த பாக்கியம். எதற்காக கடவுள் என்னை இங்கு படைத்தான் என்று உணர்ந்த தருணம் கல்விக்காக கல்வித்துறையில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் கடவுள் என்னை படைத்திருக்கிறான் என்று உணர்ந்த தருணம் அன்று முதல் இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் கல்வித்துறையில் கல்வித்துறை காகவும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சமுதாயத்திற்காகவும் என் பங்களிப்பை தந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நானே எனக்கு உறுதி அளித்து கொண்டு செயல்பட்டு கொண்டிருக்க உறுதுணையாக உள்ள அனைத்து நண்பர்களையும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து என்னுடன் பயணிக்கும் என் குடும்ப உறுப்பினர்களுக்கும் என்னை பல நேரங்களில் வழிகாட்டியாக நான் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி சரி செய்யும் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

2016 முதல் இன்று வரை 75ற்கும் மேற்பட்ட கட்டுரைகள் தினத்தந்தி உட்பட பல செய்தி தாள்களிலும் வார இதழிலும் வெளி வந்துள்ளது. ஜி.ஸ்.டி  அறிமுகப்படுத்தியவுடன் பெட்ரோல் டீசல் என் அதில் சேர்க்க வில்லையென தலையங்க காற்றுதான் என் முதல் செய்தித்தாள் கட்டுரை. அந்தந்த சூழலுக்கு தகுந்தாற்போல் ஒரு பொது ஜனமாக என் கருத்தை கூற தவறியதில்லை.


பாராட்டுக்கள், பரிசுகள் , விருதுகள்

2006 இல் முதன் முதலில் எஜுகேஷன் டுடே என்ற கல்வி மாத இதழ் இளம் கல்வியாளர் என்ற விருதினை வழங்கியது அதன்பின்னர் திறமையான ஆசிரியர் மிகச் சிறந்த ஆராய்ச்சி வழிகாட்டி போன்ற பல விருதுகளை பல தனியார் அமைப்புகள் வழங்கின சமீபத்தில் சென்னை ரோட்டரி சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது அதனை இன்றைய கல்வி அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்களிடமிருந்து பெற்றது மிகச்சிறந்த ஊக்கம் இன்னும் வாழ்வில் கடக்க வேண்டிய தூரம் அடைய வேண்டிய இலக்கு இருந்தாலும் அதனை நோக்கி பயணிப்பதற்கு இது போன்ற விருதுகள் நம்மை ஊக்கப்படுத்தும் பலப்படுத்தவும் செய்கின்றன. 

கல்லூரியில்  நான் எப்பொழுதும் மாணவர்கள் சார்பாகவே பேசுவதாக  ஒரு குற்றசாட்டு உண்டு.  ஆனால் இந்த ஆசிரியர் பணி இத்தனை அழகாவதற்கு காரணம் அவர்களே.  என் முதல் கல்லூரியில் மாணவர்களால் பல பிரச்சனைகளை சந்தித்தபொழுது இறுதி ஆண்டில் அவர்கள் எழுதி தந்த கவிதை மிகப்பெரிய பாராட்டாக இன்றுவரை நினைக்கிறன். எப்பொழுதெல்லாம் என் பணி மீது வெறுப்பு வருகிறதோ அதை மடை மாற்றம் செய்யும். இன்றுவரை மாணவர்கள் நம்மிடம் தொடர்ந்து இருப்பதும் நம் சுக துக்கங்களில் பங்கு கொள்வதே பெரிய பரிசு. 

 

புத்தகங்கள், பயிலரங்குகள்,

ஆராய்ச்சி வழிகாட்டுதல்கள்.

தினத்தந்தியில்  எழுதிய நதிபோல ஓடிக்கொண்டிரு என்கிற தொடர் புத்தகமாக வெளியிடப்பட்டது.  பாடங்களில் பல பகுதிகளை தொகுத்து அளித்திருக்கிறேன். ஸ்டான்போர்ட் பல்கலைகழகமும் பெங்களூரு ஐ ஐ எம் இணைந்து நடத்திய தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை பயின்ற பல பயிலரங்கில் குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து புதிதாக வரும் கருத்துக்களை இதுபோன்ற சான்றிதள் படிப்பு மூலம் தொடர்ந்து கல்வி பணியில் புதிய படிப்புகளை அறிந்துகொள்ள முடியும். அப்படி கற்றுக்கொண்டதுதான் பிளாக் செயின் டெக்னாலஜி  மற்றும் மீடியா சட்டம் ஆகியவை ஆகும்.   

2009ல் பொறியியல் கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது ஒரு சக ஊழியர் அவருக்கு முனைவர் பட்டப் படிப்பிற்கு வழிகாட்டியாக இருக்க முடியுமா என்று கேட்டார் அப்பொழுதுதான் எனக்கு நாமும் முனைவர் பட்ட வழிகாட்டியாக இருக்க முடியும் என்ற நினைவே வந்தது. முதல் முதலில் மதர் தெரசா பெண்கள் பல்கலை கழகத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் பாரதியார் பல்கலைக்கழகம், செயின்ட் பீட்டர்  பல்கலைக்கழகம் ஆகியவற்றில்  இன்றுவரை 15 பேர் என் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர் ஆறுபேர் முனைவர் பட்டத்திற்கு உரிய தீசிஸ் சப்மிட் செய்துவிட்டு நேர்முகத் தேர்வுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் 2006இல் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பொழுது இளநிலை ஆராய்ச்சி படிப்பிற்கு மற்றும் மேலாண்மை கல்வியில் ப்ராஜெக்ட் வழிகாட்டுதலுக்கு பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் அனுமதி கிடைத்தது அதன் மூலம் சென்னை பல்கலைக்கழகம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சிம்பியாசிஸ் இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம் என பல பல்கலைக்கழகங்களில் இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் மேலாண்மை கல்விக்கென வழிகாட்டியாக இருக்க முடிந்தது 

இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மேலாண்மை மாணவர்களுக்கும் 37 இற்கும் மேற்பட்ட இளநிலை ஆராய்ச்சியாளர்களுக்கும் வழிகாட்டும் வாய்ப்பு கிடைத்தது வாழ்வில் எப்பொழுது நமக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதனை தவறவிடக் கூடாது என்ற ஒற்றை மந்திரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு எத்தகைய கடினமான பணியாக இருந்தாலும் அதைக் கற்றுக்கொண்டு அதனை திறம்பட செய்ய வேண்டும் என்பதே நான் கற்றறிந்த பாடம் யாரொருவர் எந்த ஒரு விஷயத்தையும் முடியாது என்று சொல்லாமல் தான் கற்றுக்கொண்டு அதனை திறம்பட செய்ய முடியும் என்று நிரூபிக்கிறார்கள் அவர்கள் வாழ்வில் தோல்வி இருபதில்லை வெற்றி வேண்டுமானால் சிறிது தாமதப்படலாம் ஆனால் அதற்கு நாம் எடுத்துச் செல்லும் வழிகள் அனைத்தும் நமக்கு பாடமாக அமைகின்றன.

 பள்ளிப் பருவத்தில் இருந்து பாடுவதைத் தவிர மற்ற எல்லா துறைகளிலும் ஏதாவது ஒரு விதத்தில் பங்களிப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும் அதற்கு முயற்சிகளைச் செய்ய வேண்டுமென்று நடனமாக இருந்தாலும் நிகழ்ச்சி தொகுப்பாக இருந்தாலும் நாடகமாக இருந்தாலும் எழுத்தாக இருந்தாலும் வெற்றி பெறுகிறதோ இல்லையோ ஆனால் பங்களிப்பு இருந்துகொண்டே இருக்க வேண்டுமென்ற என்பதனை கருத்தில் கொண்டு பல்வேறு முயற்சிகளை செய்தது மாணவர்களுக்கு பின்னாளில் வெறும் அறிவுரை மட்டும் கூறாமல் நாம் எதைச் செய்தோமோ அதை மட்டுமே அவர்களுக்கு செயல்படுத்த ஊக்கமளித்தது ஒரு மிகச்சிறந்த உண்மையான விஷயம் ஆகும்

 இந்த உலகில் எளிதாக எல்லோருக்கும் கிடைப்பது இலவசமான அறிவுரைகள் தான் ஆனால் என்றுமே நான் செய்யாத எதையும் யாருக்கும் அறிவுரை கூறுவதில்லை என்பதை மட்டும் மனதில் கொண்டு அது மாணவர்களாக இருந்தாலும் சக ஆசிரியர்களாக இருந்தாலும் நாம் என்ன செய்தோமோ அது தவறாக இருந்தாலும் சரியாக இருந்தாலும் தவறாக இருந்தால் இப்படி செய்தால் தோல்வி கிடைக்கும் நான் அதைச் செய்து தோல்வியுற்ற எனவும் இப்படி செய்தால் வெற்றி பெறலாம் நாம் இப்படி செய்தேன் என கூறவும் என்னால் முடிந்தது. 36  சர்வதேச ஆராய்ச்சி கட்டுரைகளையும் 20 சர்வதேச மாநாடுகளில் ஆராய்ச்சி கட்டுரைகளையம் தேசிய அளவில் 17 ஆராய்ச்சி கட்டுரைகளையும் 07 தேசிய மாநாடுகளில் ஆராய்ச்சி கட்டுரைகளையும் 7 புத்தகங்களின் பகுதிகளையும் பதிவு செய்துள்ளேன். 

 

வெளி நாட்டு அனுபவங்கள்

இலங்கை, மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்டு ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்த அனுபவம். கலாசார பண்பாடுகளை உற்று நோக்கும் வகையில் பிரான்ஸ்,  அமெரிக்கா, பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, லண்டன் போன்ற நாடுகளுக்கு சென்ற பயண அனுபவம் உள்ளது. பயணம் பல வகைகளில் மனிதனை பண்புள்ளவனாக்கும். நிதர்சனத்தை புரியவைக்கும்.

மறக்க முடியாத அனுபவம்.

2008 என நினைக்கிறன் எம்பிஏ  படிக்கும் ஒரு பிற மாநில மாணவன் ஒரு தவறான புரிதலால் தற்கொலைக்கு முயல இரவு நேரத்தில் மாணவர்களை வைத்து மெரினாவில்  தேடி கண்டுபிடித்து நள்ளிரவில் வீட்டிற்கு அழைத்துவந்து அவனுக்கு சாப்பாடு தந்து  அவனிடம் பேசி சமாதானப்படுத்தி பின்னர் படித்து முடித்த நிகழ்வு வாழ்வில் ஒரு மறக்க முடியாத சம்பவம். எப்பொழுதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்பொழுதெல்லாம் இதை மனதில் கொண்டு முன்னேற உதவும். பிரசவத்திற்கு முதல் நாள் கல்லுரி கிளம்பி ஒரு மணி நேரம் தாமதம் சொல்லி மருத்துவமனை சென்றபொழுது பிரசவ வலி என சொல்லியபொழுது உடன் இருந்து இன்று வரை என்னுடன் தொடர்ந்து பயணிக்கும் மாணவர்களில் ராஜ் குமார் கார்த்திக்கும் ஒருவர். அவர்கள் திருமணம் முதல் பிள்ளை பெயர் முதல் முன்னின்று நடத்தியது மறக்க முடியாத தருணம். குழந்தை பிறந்த மருத்துமனைக்கு 3 நாளில் 150ற்கும் மேற்பட்டவர்கள் பார்க்க வர மருத்துமனை செக்யூரிட்டி ரூமிற்கு வந்து நீங்க அரசியல் வாதி இல்ல நடிகருங்க பொண்ண இவ்ளோ பே ர் வந்து பார்க்கிறாங்களே என கேட்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மறக்க முடியாதது.

 

சாதனைகள்

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் சாதனையாளர்களே.  வாழ்க்கையை பிறருக்கு  பயன்படுமாறு அமைத்துக்கொள்வதே  ஒரு  சாதனை. இன்னும் பயணப்படவேண்டியது நிறைய உள்ளது. 100ற்கும் மேல் நேரலை விவாதம் நிகழ்ச்சி, 68ற்கும் மேல் கல்வி நிகழ்ச்சி 30ற்கும் மேல் சிறப்பு விருந்தினராகவும் தேசிய சர்வ தேச கருத்தரங்குகளில் துவக்கி வைத்து விழா உரையாற்றிய அனுபவம். அடைய வேண்டிய இலக்கு என்பது காலம், சூழல் தகுந்து மாறிக்கொண்டே இருக்கும். நகர்தல் வாழ்க்கை. அந்த நகர்தல் யாருக்கும் தொல்லையிலலாமல் யாரையும் காயப்படுத்தாமல் துன்புறுத்தாமல் அமைத்துக்கொள்வதே சாதனை. அதனை தினம்தோறும் செய்வோம். 
                                                             -------------------------------------

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News