தமிழ் வளர்த்த தலைவர்கள்- 5- காவிய கவிஞன் கண்ணதாசன்தமிழ் வளர்த்த தலைவர்கள்- 5

காலத்தை வென்ற காவிய கவிஞன்
 கண்ணதாசன் 
- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்,
நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர். 
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம்,
 திருநெல்வேலி


கண்ணதாசனே ! – என்
அன்பு நேசனே !
நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !
சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !
உனக்கு
மூன்று தாரமிருப்பினும் – உன்
மூலா தாரம் முத்தமிழே !
திரைப் பாடல்கள்
உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !
படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ
ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !
கண்ணனின் கைநழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !
அயல் நாட்டில்
உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !
பதினெட்டுச்
சித்தர்களுக்கும்
நீ
ஒருவனே
உடம்பாக இருந்தாய் !
நீ
பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !
கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ
தந்தையாக இருந்தும்
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !
இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும்
உன்
படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !

கண்ணதாசன் மரணத்தின் போது கவிஞர் வாலி எழுதிய கவிதை இது. கவிதையின் இமயமாக இருந்த  கண்ணதாசனுக்கு, கவிஞர் வாலி சமர்ப்பித்த கவிதை. சொல்லும் பொருளும், கவிதை புனைந்த கவியும் மிகவும் பொருத்தம்.

“எனக்கு என்றும் அழிவில்லை” என்ற உண்மையான அவரது வாக்கிற்கேற்ப என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார்.

தினமும் இந்த உலகத்தில் எந்த எந்த மூலையிலாவது யாராவது ஒருவர் இவரது படைப்பை படித்து கொண்டிருப்பார், பாடல்களை ருசித்து கொண்டிருப்பார். இவரை பற்றி பேசிகொண்டிருப்பார்கள். கண்ணதாசனையும் அவருடைய கவிதைகள் பிறந்த கதைகளின் பின்னணியும் பற்றி சொல்லி கொண்டே இருக்கலாம் .. அந்த அமரத்துவமான கவிஞரை, காப்பிய தலைவனை பற்றி இந்தவாரம் எழுதுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். 
"நான் அறிவியல்மேதை இல்லை என்றாலும் அனுபவ மேதை" என்று கண்ணதாசன் சொன்னது மிகவும் உண்மை. அனுபவத்தால் பண்பட்ட தீர்க்கதரிசி அவர். 
 பன்முகத் திறனும்,  பரந்துபட்ட  ஆற்றலும்  கொண்ட இந்தகவிஞர் திரைப்படத்துறை மட்டுமல்லாமல் பல்வேறு  தளங்களிலும்  செயலாற்றி  வெற்றி கண்டவர்..  தனி முத்திரை பதித்தவர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் 24-ஜூன்-1927 ஆம் ஆண்டு  பிறந்தவர் கண்ணதாசன். இவரது இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள். 
காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார் சிகப்பி ஆச்சி தம்பதிக்கு குழந்தை இல்லாததால் கண்ணதாசனை அவர்களுக்கு தத்துகொடுத்தனர். நாராயணன் என்று பெயர் சூட்டி அன்புடன்  வளர்த்தனர் அந்த தம்பதியினர்.  கண்ணதாசன் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.

கருவிலே திரு நிறைந்த கண்ணதாசனுக்கு சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம் இருந்தது..

தனக்கு கிடைத்த புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தார்.. பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்ற கனவு வந்தது. 

16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார் கண்ணதாசன். சந்திரசேகரன் என்று புனைப் பெயர் வைத்து கொண்டு 
திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார்., சென்னை அவர் எதிர் பார்த்த விதமாக இல்லை, பல கொடுமையான அனுபவங்களைத் அவருக்கு கொடுத்தது. 

சென்னை திருவற்றியூரில் அஜக்ஸ் கம்பெனி நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அதில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். 

கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் அவரது முதல் கதை “நிலவொளியிலே” என்ற பெயரில் வெளிவந்தது. அது அவருக்கு உத்வேகத்தை அதிகமாக்கியது.  மேலும் தொடர்ந்து எழுத ஊக்கத்தை தந்தது.

1944ல் புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "ப்ரூப் திருத்துனர்" வேலைக்கு நேர்காணல் நடந்தது.  நண்பர் ஒருவரின் பரிந்துரையோடு சென்றார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அப்போது அந்த நொடியில் அவர் அவரது பெயரை ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா என்ற பெயரை  கண்ணதாசனாக மாற்றியது அப்போதுதான். 

கண்ணதாசனின் திறமையால் ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17.

அதன் பின்னர் 1949ல் சண்டமாருதம் பத்திரிக்கையில் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கலைஞர் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது. 

கவியரசு கண்ணதாசன் நடத்திய  தென்றல்  இலக்கிய  இதழாகவும்,  அரசியல்  இதழாகவும்  விளங்கியது. உள்நாட்டு, திராவிட  கழகச்  செய்திகளோடு  பிற நாட்டுச்  செய்திகளும்  அதில்  இடம் பெற்றிருந்தன.  கல்லூரி  மாணவர் களிடையே  ’தென்றல்’  நல்ல  வரவேற்பைப்  பெற்றிருந்தது.  அறிஞர் கா. அப்பாதுரையாரின்  துணையோடு  கண்ணதாசன்  ‘வெண்பாப்போட்டி’ யைத்  தென்றல்  பத்திரிகையில்  நடத்திப்  பரிசுகள்  வழங்கி வந்தார்.  வெண்பாப் போட்டியாலும்,  தென்றலின்  உரைநடையாலும்   இளைஞர்களிடத்துத்  தமிழ்ப்பற்றையும், தமிழின உணர்வையும் வளர்த்தார்.  ஈழத் தமிழர்  பற்றிய  செய்திகளும்  தென்றலில்   வந்தது.

தென்றலை யொட்டி  ’முல்லை’  என்ற  இலக்கிய  மாத இதழும்  கண்ணதாசனால்  தொடங்கப் பெற்றது.  மாதஇதழாக வந்தாலும் இலக்கிய  வளர்ச்சிக்குப்  பெரும்  பங்காற்றியது.  வரலாற்றுச்  சிறுகதைகளும்,  புனைகதைகளும்  முல்லையில் தொடர்ந்து வந்தன.
  
தி.மு.க.வில்  இணைந்திருந்த  கவிஞரின்  கழக  அரசியல் வாழ்வு  நீண்டநாள்  நீடித்திருக்கவில்லை.  சூழ்நிலை  அவரைக்  கழகத்தினின்றும்  பிரித்தது.  எனினும்,  அவருடைய  கலை,  இலக்கியப்  பணிகள்  தென்றலிலும்,  முல்லையிலும்  தொடர்ந்த வண்ணம்  இருந்தன.  

பல்வேறு இன்னல்களால் பொருட்செலவுகளால் தென்றலையும்,  முல்லையையும்  அவரால்  தொடர்ந்து  நடத்த  இயலாமற் போனது.  ஆயினும்,  கவிஞரின்  இலக்கிய  ஈடுபாடும்,  கவிதைக் காதலும்  அவரை விடாமல்  துரத்தின. அவருடைய  தொடர் முயற்சினால் சில  ஆண்டுகளுக்குப்  பின்    கண்ணதாசன்  எனும்  இலக்கியத மாத இதழை கொண்டு வந்தார். போற்றுதலுக்கும்,  திறனாய்வுக்கும்  உரிய  சிறுகதைகள்  பல  அவ்விதழில்  வெளிவந்தன. தரமான  பிறர்  படைப்புக்களோடு  கவியரசரின்  கருத்தோவியங்களும்  இதழுக்கு  மெருகூட்டின. கண்ணதாசன்  இதழில்  இடம்பெற்ற  பல  சிறுகதைகள்,  கருத்தரங்குகள்  பலவற்றில்  மீள்வாசிப்பிற்கும்,  திறனாய்விற்கும்  எடுத்துக்கொள்ளப்பட்டன.

கவியரசரின்  வாழ்வில்  தொடர்ந்து  பல  சங்கடங்கள்  ஏற்பட்டன.  அரசியலிலிருந்து  முற்றிலும்  விலகாவிட்டாலும் கூட  ஒதுங்கியிருக்கலானார்.  உண்மைகளையும்,  நன்மைகளையும்  மட்டுமே  ஆதரிப்பவரானார்.  அவர்  பெரிதும்  நம்பியிருந்த  திரையுலகிலும்  அவருக்குச் சிக்கல்கள்  ஏற்படத்  தொடங்கின.  எனினும்  கவித்துவமும், தனித்துவமும் மிக்க அவர்தம் சிந்தனைகள்  அனைத்து  எதிர்ப்புக்களையும்  வென்று  அவரை  வாழவைத்தது.  பொருளாதாரச் சிக்கல்களினால்  கண்ணதாசன்  இதழும்  இடையிடையே  தடைப்பட்டு  வெளிவந்து,   இறுதியில் முற்றிலும் நின்றே போனது.  

இக்காலகட்டத்தில்  கவிஞரோடு  நட்புப்  பாராட்டிய  எழுத்தாளர்களாக  விளங்கிய  ஜெயகாந்தனையும்,  தீபம் ஆசிரியர்  நா. பார்த்தசாரதியையும்  தமிழிலக்கிய  உலகம்  என்றும்  மறவாது  போற்றும்.  இவர்கள்  மூவரும்  அன்று  எழுத்துலகில்  மும்மணிகளாக  திகழ்ந்தனர் . 

வனவாசமும்,  மனவாசமும் கவிஞரின்  உண்மை  வாழ்வை  மறைவின்றி  வாசகர்களுக்கு தந்தது. சத்திய சோதனைபோல் தன்னுடைய அழுக்கைத் தனக்குள் மறைத்துக்கொள்ளாமல் அப்பட்டமாகச் சொன்ன மாமனிதர். அவர் ஆளுமைகள், நட்புகள் என்று பாராமல் உள்ள படியே எழுதியவர்.  அவற்றின்  வெளிப்பாடே  அவரெழுதிய  வனவாசமும், மனவாசமும்! 

'இந்திய ஜனாதிபதியைப் போல் சம்பளம் பெறுகிறேன். ஆனால், இந்தியாவைப்போல் கடன்பட்டு இருக்கிறேன்' என்று குறிப்பிடுவார். காந்தியின் சுயசரிதையைப் போலவே தனது வாழ்க்கை வரலாற்றை உண்மையுடனும் நேர்மையுடனும் 'வனவாசம்' மற்றும் 'மனவாசம்' ஆகிய நூல்களில் பதிவு செய்தார்.

'ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு என்னை விடச் சிறந்த உதாரணம் இருக்காது. அதனால் எனது சரிதம் மற்றவர்களுக்குப் பாடமாக அமையட்டும்' என முன்னுரையிலேயே குறிப்பிட்டிருப்பார். மனித மனத்தின் லௌகீக ஆசைகளுக்கும், இறைவன் குறித்த தேடலுக்குமான ஆகச்சிறந்த உதாரணம் என்றால், முத்தையா எனும் கண்ணதாசனின் வாழ்க்கைதான். 

வெறும் ஏட்டுச்சுரைக்காயாகப் படித்து மட்டுமே வார்த்தைகளாகவும் வாக்கியங்களாகவும் கோத்து எழுதாமல், தனது அனுபவத்தின் சாறாகவே தனது படைப்புகளை வழங்கினார்

’கண்ணதாசன்’  மாதஇதழ்  நின்றபின்பும்  கவியரசரின்  எழுத்துப்பணி  தொய்வின்றித்  தொடர்ந்தது.  கல்கியில்  அவர்  எழுதிவந்த  ’சேரமான் காதலி’  என்ற  வரலாற்றுப்  புதினம்,  அவருக்குச்  சாகித்ய அகாதெமி  விருதினைப்  பெற்றுத் தந்தது.  பின்னர்  அவர் எழுத்தின்  சிந்தனையின்  திசை மாறியது. 

ஒரு சமயத்தில்  பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். 

ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். கலங்காதிரு மனமே... என்ற  இந்த பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். 
கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார்  இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர். 

தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவராக விளங்கியதற்கு காரணம் உண்டு. 

கவிஞர் கண்ணதாசன் நாத்திகராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கியவர் ஆனாலும் முருக பக்தரான சாண்டோ சின்னப்பதேவருடன் நெருங்கிய நட்பு இருந்தது.  ஒரு சமயம் சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்து வமனையில் இருக்கிறார்” என   நா தழுதழுக்கக் கூறினார்.

தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.

தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.

தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார். நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.

மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார். தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார். நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன் ‘இதென்ன விபூதி?’ என்று தேவரை பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொன்னார்.

முன்னோர்கள் செய்த புண்ணியம் அவரை வழி மாற்றியது. கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர். திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது கண்ணதாசனின் வார்த்தைகள், ‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம்தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணைவைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.

கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது. காஞ்சிப்பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் ஆசியும் கிடைத்தது. அவர் வாழ்வில் மாற்றம் மலர்ந்தது. 'அர்த்தமுள்ள இந்து மதம்' எனும் அற்புதமான ஆன்மிகப் படைப்பை வழங்கினார். ‘அர்த்தமுள்ள இந்துமதம்’  என்ற  பெயரில்  பல  தொகுதிகள்  இந்து சமயத்தை  எளிதாக  விளக்கும்  முறையில்  வெளியாயின.  வாசகர்களிடம்  பேராதரவினை  இந்நூல்கள்  அவருக்குப் பெற்றுத்தந்தன.  கண்ணனைப்  பற்றிய  பல  சிறு  நூல்களை எழுதி வெளியிட்டார்.  ஆதிசங்கரரின் ‘கனகதாரா தோத்திரம்’ ’பொன்மழை’யாகப் தமிழுக்கு தந்தார். 

கண்ணதாசனின் ஆளுமை என்பது, அவரது சாகாவரம் பெற்ற இலக்கியங்களில்தான் நிலைகொண்டுள்ளது. நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள், அற்புதமான துள்ளுதமிழ் நடையுடன் கூடிய நூல்கள், கட்டுரைகள், சிறு காப்பியங்கள், நவீனங்களை எழுதியது கண்ணதாசனின் சாதனை. பத்திரிகையாளர், அரசியல்வாதி, திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் என்ற பல அவதாரங்களை எடுத்தவர்.
அர்த்தமுள்ள இந்து மதம் (பத்து பாகங்கள்), வனவாசம், ஸ்ரீகிருஷ்ண கவசம், பஜகோவிந்தம், கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம், அத்வைத ரகசியம், கடைசிப்பக்கம், ராகமாலிகா, புஷ்பமாலிகா, ஞானமாலிகா, தோட்டத்து மலர்கள், ஏசு காவியம் ஆகியவற்றுடன் பகவத் கீதைக்கும் அபிராமி அந்தாதிக்கும் சௌந்தர்யா லகரிக்கும் கண்ணதாசன் விளக்கம் எழுதி இருக்கிறார். துக்ளக் வார இதழ் ஒருமுறை இவரை ‘கவிதையில் இமயமலை; அரசியலில் பரங்கிமலை’ என்று கூறியது.

கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை.  இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். 

வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது வந்தவரெல்லாம் தங்கி விட்டல் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...
போனால் போகட்டும் போடா...

 என்று தனக்கே உரிய நடையில் பாடியவர் இவ்வுலக வாழ்வையும் ஒரு பொருட்டாக நினைக்காமல் உதறி விட்டு அமரத்தன்மை அடைந்தார்.. 
உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். 

அக்டோபர்20 இல்  அமெரிக்காவிலிருந்து  அவரது புகழுடல் சென்னைக்குக்  கொண்டு வரப்பட்டது. இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22 ல் தகனம் செய்ய பட்டது.  

காலத்தால்  அழியாத  அவருடைய  காவியப்  பாடல்களாலும்  கலங்கரை  விளக்காய்த்  திகழ்ந்துவரும்  அவருடைய  தத்துவப்  பாடல்களாலும் நம் மத்தியில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

                                                      --------------------------------------

Post a Comment

புதியது பழையவை

Sports News