திராவிட மொழியியலின் தந்தை தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல்


தமிழ் வளர்த்த தலைவர்கள்- 3


"திராவிட மொழியியலின் தந்தை" 
தமிழறிஞர்

 ராபர்ட் கால்டுவெல் 
- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்,
நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர். 
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம், திருநெல்வேலி.

தமிழர் சமயம், தனித் தமிழ், இந்தி எதிர்ப்பு, சுயமரியாதை இயக்கம், தமிழ்ப் பாதுகாப்பு, தமிழ் அரசு, முதலிய கருத்தோட்டங்களுக்கும், இயக்கங்களுக்கும், எழுச்சிகளுக்கும், கோரிக்கைகளுக்கும் கால்டுவெல் பாதிரியாரது ‘மொழியியல்’ கருத்துரைகள் தோற்றுவாயாக இருந்தன என்பது உண்மைக்குப் புறம்பாகாது. பிற்கால அரசியல், சமூக, சமய இயக்கங்கள் பலவற்றின் ஆன்மீகத் தந்தையாகப் பாதிரியார் விளங்குகிறார். அவ்வாறாயின் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை பாதிரியாரது ஞானபுத்திரன் ஆவார்: மறைமலையடிகளும் அவர் போன்றாரும் ஞானப் பௌத்திரர் ஆவர்”  என்கிறார் கலாநிதி க.கைலாசபதி. அத்தகைய சிறப்பு மிக்கவர் கால்டுவெல்.

அயர்லாந்து நாட்டின் கிளாடி ஆற்றங்கரையில் கருவாகி, திருநெல்வேலி தாமிரபரணி நதிகரையில் திருவாகி நின்ற தமிழின் திறமே ராபர்ட் கால்டுவெல். தமிழின் பெருமையை உலகுக்கு அறிய வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது அப்போது.. அதற்காக தமிழன்னை தனக்கு ஏற்ற தலைமகனாக ராபர்ட் கால்டுவெலை தேர்ந்தெடுத்தது மிகவும் சிறப்பானது. 
ஒரு மொழி செம்மொழி என்று சிறப்பிக்க தகுதிகளான தொன்மை சிறப்புகளை தாண்டி “பிறமொழி கலப்பின்மை, கிளைமொழிகளுக்குத் தாய்மொழி” என தகுதிகள் இருக்க வேண்டும். தமிழ் மொழிக்கு மொழிக்கு செம்மொழி தகுதி  உண்டு என்பதை 1856 லேயே தான் எழுதிய புத்தகத்தின் மூலம் நிரூபித்தார் ராபர்ட் கால்டுவெல். 

"தன்னிடையே இடம்பெற்றிருக்கும் சொற்களை அறவே ஒழித்துவிட்டுத் தனித்து உயிர் வாழ்வதோடு... அவற்றின் துணை, சிறிதும் இல்லாமல் வளம்பெற்று வளர்வதோடு முன்பிருந்த நிலையிலும் சிறந்த உயர் தனிச் செம்மொழியாக நிலைபெறும்'' என்றார் கால்டுவெல். அவர் சொல்லிய அந்தஸ்தோடு செம்மொழியாக நிலைபெற்றது தமிழ். அத்தகைய சிறப்பு மிக்க திராவிட மொழியியலின் தந்தை என போற்றப்படும் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் வாழ்வும் தமிழ்பணியும் பார்ப்போம்.


1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே தரமான கல்வியை அளிக்க அவருடைய பெற்றோர் முடிவெடுத்தனர். அதன் காரணமாகத் தங்களது தாயகமான தாய்லாந்துக்கு கால்டுவெல்லை அழைத்துச் சென்றனர். தாய்லாந்தில் பள்ளிக்கல்வியைத் தொடர்ந்த அவர், இளமையில் ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்று விளங்கினார். ஓவியக்கலையிலும் ஆர்வத்தோடு கற்றுத் தேர்ந்தார்.  சமய நூல்களையும், மொழியியல் நூல்களையும் தேடித்தேடி படிக்கத் தொடங்கினார். இளமையிலேயே தேடல் உள்ள தேனியாய் சுறுசுறுப்பாக விளங்கினார், அதன் காரணமாகவே கிரேக்க மொழியில் தொடங்கிய அவரது பயணம் தொடர்ந்து தமிழின் மீது தணியாத காதலை ஏற்படுத்தியது.

20 வயதில் லண்டன் சமயத் தொண்டர் சங்கத்தில் இணைந்தார், கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஐரோப்பியத் தொன்மொழிகளின் நீதி நூல்களையும் சமய நூல்களையும் தேர்ந்து கற்றுத் தெளிவு பெற்றார், டேனியல் சேண்ட்ஃபோர்டு என்ற மொழிநூல் மேதையிடம் கிரேக்க மொழியை உயர்தனிச் செம்மொழிகளோடு ஒப்பாய்வு செய்தார். 

24 வயதாக இருந்தபோது லண்டன் மிஷனரி சொசைட்டி என்னும் கிறிஸ்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838 ஜனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.


24 வயதில் கப்பலேறி, நான்கு மாதக் கப்பல் பயணத்தில் ஆந்திரம் - ஆரியம் இரண்டும் கற்றார்,  இந்தியா வந்த பயணத்தின் போது கப்பலில் பிரௌன் என்பவருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாகத் தமிழைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்..

தமிழின் அழகியலை அறிந்த அந்த அறிஞர் பெருமகனார், தமிழை திறம்பட கற்பதற்காகச் 1838-ல் சென்னையில் இறங்கி ‘ட்ரூ’ என்னும் ஆங்கில அறிஞரோடு மூன்றாண்டுகள் இருந்து தமிழையும் தமிழ்நாட்டையும், தமிழர் பண்பாட்டையும் நன்கு அறிந்தார். 

பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து தனது சமய பணியை கொண்டார். 

வட்டார வழக்குமொழிகளைக் கொண்டது தமிழ் என்பதால், பேச்சு வழக்கை அறியவும், அதன் மூலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளவும் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டார் கால்டுவெல். திருச்சி, சிதம்பரம், நீலகிரி, நாகப்பட்டினம் போன்ற பல்வேறு  மாவட்டங்கள், பிற ஊர்கள், மலைக்கிராமங்கள் என தனது பயணத்தை வடிவமைத்துக்கொண்டு தமிழ் மொழியில் உள்ள வட்டார மொழிகளைக் கண்டறிந்தார்.  

அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் 1841ல் குரு பட்டம் பெற்றார். நமது திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள் இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். திருக்குறள், சீவகசிந்தாமணி, நன்னூல் உள்ளிட்ட நூல்களை கற்றறிந்தார். 

 மக்களின் பழக்கவழக்கம், பண்பாடு, கலாசாரம், வாழ்கை முறை போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியியல் தரவுகளை தமது பயணத்திலேயே சேகரித்தார். அது மட்டுமன்றி, பல்வேறு மொழியியல் அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து அதில் இருந்து குறிப்புகள் எடுத்து ஒப்பிட்டுமுறை செய்து, ஆய்வுக் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார்


தென்னிந்திய மொழிக் குடும்பத்தில திருந்திய மொழிகள், திருந்தாத மொழிகள் ஆகியவற்றைக் கண்டறிந்தவரும் ராபர்ட் கால்டுவெல்தான். பின்னர் தாம் கண்டறிந்தவற்றைக் கட்டுரைகளாகவும் வெளியிட்டார்.

பின்னர் அவற்றை எல்லாம் தொகுத்து 1856-ல், 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார். கால்டுவெல் திராவிடமொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவை தமிழிலிருந்து தோன்றியவை என்பதை ஒப்பீடு செய்து எழுதியநூல் தான் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் இந்நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது.

வடமொழி அறிஞர்களெல்லாம் சம்ஸ்கிருதம்தான் தொன்மையானது என கர்ஜித்துக்கொண்டிருந்த நிலையில் 'தமிழ் அதற்கும் தொன்மையானது, திராவிட மொழிகள் தனிக்குடும்பம்' போன்ற உண்மைகளை ஆணித்தரமாக தனது ஆய்வுகளின் மூலம் உலகிற்கு நிரூபித்தார். இப்படித் தமிழுக்கும், திராவிடத்துக்குமான நெருங்கிய பந்தத்தை மிக அழகாக உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமகனார் கால்டுவெல்.

'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற இவரின் ஒற்றை புத்தகம் அனைத்தையும் மாற்றியது. ஆம் இவருடைய  ஒப்பிலக்கண ஆய்வு மற்றும் ஒலியியல் ஆய்வு மூலம்  திராவிட குடும்பங்களின் தாய் மொழி தமிழ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். இது சமஸ்கிருதத்திற்கும் முந்தையது' என பல உண்மைகளை நிரூபித்தார். தமிழ் மொழியின் வேர்ச் சொற்களைக் கொண்டு, பிறமொழிகளில் பயிலும் பல சொற்கள் தமிழ்ச் சொற்களின் சிதைவே என நிறுவினார் 'மொழிக் குடும்பங்களான, இந்தோ - ஆரிய மொழிக்குடும்பம், இந்தோ- ஐரோப்பிய மொழிக் குடும்பம் ஆகியவற்றில் சேராத மொழிக் குடும்பம் திராவிட மொழிக் குடும்பம். இதன் தொன்மையும், வன்மையும் மிகச்சிறந்தது என ஆய்வின் முடிவில் கூறினார். 




கால்டுவெல் வருவதற்கு முன்பே திராவிட சிறந்திருந்தது,  திராவிட மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்ல எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே. 

அவரது நூலில் உள்ள சில ஆய்வுகளை படிக்கும் போது அவரது கடின உழைப்பை பற்றி நாம் அறியலாம் இதோ ஒரு பகுதி 

திருந்திய மொழிகளும், திருந்தா மொழிகளும் : 

திராவிடக் குடும்ப மொழிகளுக்கு  தமிழ்தான் தாய் மொழியாகும்  என்பதை எண்களின் பெயர் கொண்டு எடுத்துக்காட்டுகிறார் கால்டுவெல். தமிழின் ‘ஏழு’ என்னும் எண்ணுப்பெயர் மலையாளத்திலும் ஏழு, கன்னடத்தில் ஏளு, துளுவில் ஏளு, தெலுங்கில் ஏடு என்று வழங்கப்படுகிறது. தமிழ் ‘ழ’கரம் தெலுங்கில் ‘ட’கரமாகும், கன்னடத்தில் ‘ள’கரமாகும். ஆகவே அவையாவும் ஒரே குடும்பம் என்று கூறுகிறார்.

மலையாளம் என்ற மொழிப்பெயரை ‘மலய’ என்ற வடமொழியின் திரிபு என்று சொல்வார்கள், ஆனால் தமிழில் வழங்கும் ‘மல்’ என்ற வேர்ச் சொல்லுக்கு வளம், வலிமை என்று பொருள். அதனால்தான் பெருங்குன்றுக்கு ‘மலை’ என்று பெயர் வந்தது. எனவே மலையாளம் என்ற மொழிப்பெயரே அது தமிழ்க் குடும்பம் என்று எடுத்துரைக்கிறார். 

தெலுங்கு மொழியை ஆதிப் புலவர்கள் அழைத்த பெயர் தெனுகு அல்லது தெனுங்கு என்பதே. அது அவ்வாறாயின் ‘தேன்’ என்ற வேரடியிலிருந்தே பிறந்திருக்க வேண்டும் என்பது ஒரு கூற்று. இது ஏற்புடைத்தாயின் தமிழ் வேரிலிருந்தே தெலுங்கு மொழியும் உருபெற்றது.

வடமொழியில் இருந்து பிறந்ததே ‘கர்நாடகம்’ என்று சிலர் சொல்வார்கள் ஆனால், மொழி அறிஞர் குண்டர்ட் கூற்றுப்படி ‘கரு+நாடு+அகம்’ என்ற தமிழடியாகப் பிறந்தது என்பதே சால்புடைத்து.

துளு மொழிக்கு எழுத்துருவும் இல்லை; இலக்கியமும் இல்லை. ஆனால் அது அச்சு வடிவம் கண்டதென்னவோ கன்னட எழுத்துருவைக் கொண்டுதான். எனவே, அதுவும் திராவிட மொழிக் குடும்பத்தின் அங்கம் என்பது ஆதாரபூர்வமாக அறியப்படுகிறது.

பிறப்புமுறை - ஒலிப்புமுறை - அமைப்புமுறை ஆகியவற்றால் திராவிட மொழிக் குடும்பம் ஒன்றே தமிழே அதற்கு மூலம் என்று கூறினார். 

தமிழ், சம்ஸ்கிருதத்துக்கு மாறுபட்டுத் தனித்துத் தோன்றியதென்பதையும் தனது ஆய்வு நூலில்உணர்த்தினார்.

திராவிட மொழிக் குடும்பத்தைத் திருந்திய மொழிகளென்றும் திருந்தா மொழிகளென்றும் இரண்டாகப் பிரிக்கிறார் ஆய்வாளர் கால்டுவெல்.

தமிழ் - மலையாளம் - தெலுங்கு - கன்னடம் - துளு - குடகு ஆகிய ஆறும் திருந்திய மொழிகளென்றும், துதம் - கோதம் - கோண்ட் - கூ - ஓரியன் - ராஜ்மகால் ஆகிய ஆறும் திருந்தா மொழிகளென்றும் ஆய்ந்து அறிவிக்கிறார். 

சம்ஸ்கிருதத்திலிருந்தே திராவிட மொழிகள் பிறந்தன எனும் கூற்றை அறவே மறுக்கிறார்.. அத்தோடு திருந்தா மொழிகளைக்கொண்டே அதற்கு விளக்கம் அளிக்கிறார் கால்டுவெல். 
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண முதல் பாகத்தில் கால்டுவெல் கூறுவதை பார்போம் : “திராவிட மொழிகளைச் சம்ஸ்கிருதத்திலிருந்து பிறந்தனவாகவே கொள்ளுதல் வேண்டும் என்று கூறும் கீழைநாட்டு மொழிநூலறிஞர்கள், சம்ஸ்கிருதச் சொற்கள் அறவே இடம்பெறாதனவாய் திருந்தாத் திராவிட மொழிகள் இருப்பதை அறிந்தவரல்லர். சம்ஸ்கிருதச் சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகளும் அச்சொற்களை ஆடம்பரப் பொருளாகவும், அழகுதரும் பொருளாகவும் மதிப்பதல்லது மொழிவளர்ச்சிக்கு இன்றியமையாதனவென்று மதிப்பதில்லை.” என்கிறார்.  

சிங்கள இலக்கிய நூலான 'மகாவம்சம்' என்ற நூலின் துணைக்கொண்டு தமிழ் - ஈழ உறவுகளையும் ஆய்வு செய்துள்ளார்.

திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. 

அந்தத் தேடலின்போது, 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு'  (A Political and General History of the District of Tinnevely) என்னும் நூலை எழுதினார். இது 1881 ஆம் ஆண்டில் அன்றைய மதராஸ் அரசினால் வெளியிடப்பட்டது.

இந்த நூலில் கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் பற்றிய பதிவுகள், ஆங்கிலேயர் வென்ற நிகழ்வுகள் போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, மொழியியல் நடையில் எவ்வாறு மற்றமொழிகளில் தமிழின் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அவர் கூறியுள்ளார். தமிழில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் எவ்வாறு கிரேக்க மொழியில் திரித்துக் கையாளப்பட்டுள்ளது என்பது பற்றியும் அந்த நூலில் தெரிவித்துள்ளார்.

இது பற்றிக் குறிப்பிட்ட ராபர்ட் எரிக் ஃபிரிக்கென்பர்க் (Robert Eric Frykenberg) என்பார், தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் ஆகிய மூலங்களிலிருந்தான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தனி நூல்களுள் முழுமைத் தன்மையில் முதன்மையானது என்றார்.

 இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளுடன் தமிழ், தெலுங்கு, துளு, மலையாளம் போன்ற மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார் கால்டுவெல். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் ஓர் இனத்தைச் சார்ந்தவை என்பதை தாம் எழுதிய A Comparative Grammar of Dravidian Languages நூலில் புலப்படுத்தினார். 
நெல்லை மாவட்ட வரலாற்றை ஆராய்ந்து எழுதிப் பரிசு பெற்ற இவர் கொற்கை, காயல், தூத்துக்குடி போன்ற துறைமுக இடங்களைத் தமது அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து வெளியிட்டார்.

தன்னுடைய மொழிகளை முழுமையாக அறியாதவர்களுக்கு மத்தியில், அவர்கள் அறிந்துகொள்வதற்கும், தெரிந்துகொள்வதற்கும் பயணப்பட்டவர் கால்டுவெல். அவருடைய கடினப் பயணங்கள், அர்பணிப்பு மொழியியல் ஆய்வுக்கு துணையாக அமைந்தது.
தமிழ் பணியோடு தமிழ்நாட்டு மக்கள் பணியிலும் தம்மை ஈடு படுத்தியவர் கால்டுவெல். அப்போதைய சூழலில் பெரும்பாலானோர் மேற்தட்டு மக்களுக்கு மட்டுமே கல்வி போதிக்க விருப்பம் காட்டிய நிலையில் கால்டுவெல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி போதிக்க நினைத்தார், அதன்படியே நடந்தார். ஆர்வமும், உழைப்பும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்தவர் கால்டுவெல்.

செயற்கரிய காரியங்களைச் செய்யவும் அனைவரிடமும் அன்பு செலுத்தவும் மதமும் மொழியும் தடை இல்லை, அவசியம் இல்லை என்பதை உணர்த்தியவர். எந்த மொழியும் நம் மொழியே எந்த மனிதரும் நமது உறவே என்ற தொடர்பை ஏற்படுத்தியவர் அந்தத் தமிழ்மகன். 
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பயணம் செய்த கால்டுவெல், தமிழர்களின் நிலவளம், நீர்வளம்  மொழிவளம்  பண்பாட்டு வளத்தை நன்கறிந்தார், 

திருவரங்கம், நீலகிரி, கோவை, மதுரை ஆகிய பயணங்களை கடந்து கடைசியாக  தாமிரபரணி வழியில் பாளையங்கோட்டைவந்தார், நாசரேத் சென்று தன் இறுதி எல்லையான இடையன்குடியை ஓர் இரவிலே அடைந்தார். இடையன்குடியிலே தங்கி தனது பணிகளை செய்தார். 29 வயதில் எலீசாவை மணம்புரிந்து, சமயப் பணியும் சமுதாயப் பணியும் செய்தார். நகரை சீர்திருத்தி புதிய வடிவமைப்பு கொடுத்தார், மக்களிடம் அறியாமையை நீக்கி கல்வி பணிசெய்தார். இடையன்குடி மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு வழிகாட்டியாக திருப்பணிகள் செய்தார். 

தமிழ்மொழியே சுவாசமாக கொண்டிருந்த கால்டுவெல், கடுங்குளிர் காரணமாக கொடைக்கானலில் உடல்நலம் பாதிக்கப்பட்டு 1891-ல் ஆகஸ்ட் 28-ம் தேதி 77-ம் வயதில் இயற்கை எய்தினார். இடையன்குடியில் அவர் கட்டிய திருத்துவ ஆலயத்தில் அவரது புகழுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது 33 ஆண்டுகால கடின உழைப்பில் உருவாகிய திருத்துவ ஆலயமும், இடையன்குடி கிராமமும் என்றும் அவரை நினைவு கூறும்.



கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள் : 
நற்கருணை தியான மாலை (1853)
தாமரைத் தடாகம் (1871)
ஞான ஸ்நானம் (கட்டுரை)
நற்கருணை (கட்டுரை)
கால்டுவெல் இயற்றிய ஆங்கில நூல்கள் :
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856)
திருநெல்வேலியின் அரசியல் பொது வரலாறு (A Political and General History of Tinnevely, 1881)


                                                                      -------------------------------------------------

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News