ஆனந்தம் தரும் ஆத்திசூடி-11 - புலவர் சங்கரலிங்கம்



ஆனந்தம் தரும் ஆத்திசூடி-11


புலவர் சங்கரலிங்கம் ,மதுரை.

"ஓய்தல் ஒழி"


 "இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழக் கற்றுக்கொள்"

"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து"

"பொறுத்தார், பூமியாள்வார்"

       ---இப்படி பல பழமொழிகள்,நம் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பொருந்துமாறு நம் முன்னோர்கள் சொல்லி சென்று இருக்கிறார்கள்.

இருந்தாலும் நம் மனம் ஏதோ ஒரு நினைவில் சிக்கிக் கொண்டு அதைப்பற்றியே கவலை கொள்கிறது.அதில் இருந்து மீள்வது இல்லை.
ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு விதமான கவலைகள் இருக்கிறது. 

இந்த உலகில் கவலை இல்லாமல் மனிதர்களை எங்கேயும் இருக்க முடியாது.
இருப்பவர், இல்லாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த கவலைகள் என்பது ஒரு மனிதனுக்கு புற்று நோயைபோன்றது. புற்று நோய் கிருமிகள் எப்படி உடலில் உள்ள மற்ற பாகங்களுக்கு விரைவாக பரவுகின்றதோ,அதைபோன்று கவலை என்பது ஒரு கவலை போய் இன்னொரு கவலையை உண்டாக்கும் சக்தி கொண்டது. 

கவலைகளை நம்முடைய மனத்துக்கு உள்ளேயே போட்டு அழுத்தி வைக்க, வைக்க அதன் அழுத்தம் பல மடங்கு மிகுதியாகி விடும்.

இதனால்  மனச்சோர்வும், மனச்சோர்வினால் மேலும் கவலைகளும் ஏற்படலாம்.

எதற்கு, எது காரணம் என்கிற ஆராய்ச்சியை எல்லாம் விட்டு விட்டு அதில் இருந்து விலகி நின்று, வாழ்க்கைப் பிரச்சினைகளை எப்படி வெற்றிகரமாக சமாளிப்பது என்பதே முக்கியம்.

வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் ஒருமுறை ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது, "கவலை படுவதற்கு எனக்கு நேரம் இல்லை" என்றார். இதை கேட்டது ஒரு நிருபர். அந்த நிருபருக்கு ஒரே ஆச்சர்யம். 

"என்னடா இது! கவலையில்லாத ஒரு மனிதனா? அல்லது கவலையை பற்றி நேரம் இல்லை என்று சொல்லும் ஒரு மனிதனா?" என்று ஆச்சர்யம். 
வின்ஸ்டன் சர்ச்சில் அதற்க்கு கூறிய விளக்கம்,

"நான் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறேன். அதனால் எனக்கு கவலைப்படுவதற்கு நேரம் இல்லை "என்று கூறினார். 

கவலைகளுக்கு நம்முடைய கற்பனையும் ஒரு காரணம்.

கவலைகளின் தொழிற்சாலையே ஒருவருடைய மனதுதான். இங்குதான் மனித இனத்திற்கு வேதனையை தரக்கூடிய கவலைகள் உற்பத்தி செய்யப் படுகின்றன. 

இந்த கவலைகளின் மூல பொருள் நினைவுகள். நினைவுகள்தான் ஒருவரின் கவலைக்கு முக்கிய காரணம். நடந்துபோனதை நினைத்து கவலை கொள்வதைவிட்டு இனி நடக்கப் போவதை மட்டும் நினைவில் கொண்டு உற்சாகமாக செயல்படுங்கள்

கவலைப்பட்டு, கவலைப் பட்டு மனம் நொந்து போய் விடாதீர்கள். 
மன வலிமையை இழந்து விடாதீர்கள். 

மனக்கவலைக்கு இடம் தராதீர்கள். 

எப்போதும் உற்சாகமாக இருங்கள். கவலைகளை தூக்கி வெளியே எறியுங்கள்.  ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருப்பவனுக்கு கவலைகள் இல்லை என்பதுதான் வின்ஸ்டன் சர்ச்சில் வார்த்தைகளின் சாராம்சம்.

இதற்குத்தான் பாரதியார் தனது புதிய ஆத்திசூடியில் 'ஓய்தல் ஒழி'  என்கிறார்.
                                                               -----------------------------------------

Post a Comment

புதியது பழையவை

Sports News