யுகப்புரட்சியில் தோன்றிய மகா கவி- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்,

 


யுகப்புரட்சியில் தோன்றிய

 மகா கவி.


- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்,

நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம்,

திருநெல்வேலி.


எத்தனையோ நூற்றாண்டுக்கு ஒரு முறைதான் சிறந்த புலவர்கள் உருவாகின்றனர், அந்த உத்தம புலவர்களை விட தன் உயிர் பெரிதல்ல என்று கருதி ஆயுளை கூட்டும், கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை

ஔவைக்கு  ஈந்தான் வள்ளல் அதியமான் மன்னன். 18, 19-ம் நூற்றாண்டுகளில் அப்படி தோன்றிய மாபெரும் கவிஞர் தான் பாரதி.

அவர் வாழ்ந்த காலத்தில் வழக்கப்படி  கற்றோர் முன்னில் பாரதியின் படைப்புகள் அங்கீகாரத்திற்காக போகவில்லை.  புரவலரின் பெருமையைப் பறைசாற்றும் நோக்கிலும் அவர் செயல்படவில்லை.

ஒரு யுகப்புரட்சி நடந்த சமயத்தில் , தொழில் புரட்சி மலர்ந்த சமத்தில் வந்துதித்த மாகவி அவரின் படைப்புகள் மக்களை சார்ந்தே இருந்தது , மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. 

 


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்என்று பாடிய சுப்ரமணிய பாரதியார்,  கம்பனுக்குப் பின் தமிழ் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று வரும் கவிஞர் ஆவார்.


இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.

கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி என பலதளங்களிலும் தேசத்திற்கு தன்னை அர்பணித்தவர். அவருடைய பிறந்த நாளை கடந்த தினங்களில் கொண்டாடிய வேளையில் அவரை பற்றி இந்த வாரம் எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்தது அதனால்  தேசிய கவிஎன போற்றப்பட்டார். தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவிபொழிந்ததினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு. குயில் பாட்டுகண்ணன் பாட்டு கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.

 பாரதியின் பூர்வீகம் பாளையங்கோட்டை அருகேயுள்ள சீவலப்பேரி ஆகும். வாழ்வாதாரத்திற்காக அவரது பெற்றோர்கள் அருகேயுள்ள எட்டடையபுரம் குடிபெயர்ந்தனர்.

டிசம்பர் 11, 1882 அன்று சின்னச்சாமி அய்யருக்கும் லெட்சுமி அம்மாளுக்கும் மகனாக எட்டடையபுரத்தில் பாரதி பிறந்தார்.

இளம் வயதில் தயார் இறந்து விட்டார், அம்மாவின் பாசம் என்னவென்று தெரியாமல் அப்பாவின் வளர்ப்பில் வளர்ந்த அவருக்கு அப்பொழுது கணக்கு என்றால் பிணக்கு. இது வெகு காலத்துக்கு கல்விமுறையின் மீது வெறுப்பாகவே மாறியது. ஒரு சிறுவன் இளமையில் கல் என்று ஓயாமல் மனனம் செய்து சொல்லிக்கொண்டு இருந்த பொழுது முதுமையில் மண்என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் இவர்.
சிறு வயது முதலே பாரதியாருக்கு தமிழ் மீது பற்று அதிகம். ஏழு வயதில் கவிதைகள் எழுதத் துவங்கினார். பதினொரு வயதில் கவிதை பாடும் ஆற்றலை பெற்றிருந்தார்.

 சுப்பையா என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவரை எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் பற்பல சோதனைக்கு உட்படுத்தினர்.

பாரதி சின்னப்பயல் என்று ஏளனம் செய்து பார் அதி (மிகவும் ) சிறுவன் என்று சிலேடையில் கூறினார்கள்.  அந்த குறையான வார்த்தைகளையும் நிறைவாக எடுத்துக்கொண்டு

பார் அதி சின்னப்பயல் என எள்ளல் குறையாமல் கவிதை பாடினார் சுப்பையா, அவைகளில் வெற்றி பெற்றதால் அந்தப் புலவர்கள் வியந்து பாராட்டினர்.

இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், "பாரதி" என்ற பட்டத்தை இவருக்கு சூட்டினார். அரசவை கவிஞர் அந்தஸ்தையும் கொடுத்தார்.  அன்று முதல் "சுப்பிரமணிய பாரதியார்" என்று அழைக்கப்பட்டார். அற்புதமான கவிதையாற்றல் பாரதி எனும் கலைவாணியை குறிக்கும் பட்டத்தை தந்தது

அவர் 1894-1897 வரை திருநெல்வேலி ஹிந்து கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை படித்தார். படிக்கும் போதே தமிழ்ப் பண்டிதர்களுடன் ஏற்பட்ட சொற்போர் காரணமாக 14 வயதிலேயே அக்கால வழக்கப்படி திருமணம் நடந்தது. 7 வயது நிரம்பிய செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

தந்தையின் இறப்புக்குப் பின்னர் ஏழ்மையில் இருந்த பாரதியார் காசிக்கு சென்று தங்கினார்.

 

1898-1902 வரை காசியில் தனது அத்தை குப்பம்மாள் அவர்களுடன் தங்கியிருந்தார். அப்போது அலகாபாத் சர்வகலாசாலையில் பிரவேசத் தேர்வு எழுதி வெற்றிப்பெற்றார். காசி இந்து சர்வகலாசாலையில் ஹிந்தியும், வடமொழியும் பயின்றார்.

பின்னர் அங்கிருந்து திரும்பி எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.  மீண்டும் எட்டையபுரம் வந்தவர் 1902 முதல் இரண்டாண்டு காலத்திற்கு எட்டையபுரம் மன்னருக்குத் தோழனாக இருந்தார். அப்போதுதான் மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'விவேக பானு' என்ற பத்திரிகையில் இவரது முதல் பாடல் 'தனிமை இரக்கம்' அச்சாகி வெளியிடப்பட்டது.

தமிழ் மீது அதீத பற்று இருந்தது என்றாலும், மற்ற மொழிகளான சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்று இருந்தார். கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி ஆகியவை பாரதியாரால் எழுதப் பெற்றன. கீதையை தமிழில் மொழிப் பெயர்த்தார்

1904ம் ஆண்டு மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அதே ஆண்டு நவம்பரில் சென்னையிலிருந்து வெளிவரும் 'சுதேசமித்திரன்' பத்திரிகைக்கு உதவியாசிரியரானார். பின்பு 'சக்கர வர்த்தினி' என்ற பத்திரிகையின் ஆசிரியராக ஆனார்.

1905ம் ஆண்டில் பாரதியார் சுதேசிய அரசியலில் ஈடுபட்டு தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார்

1906ல் சென்னையிலிந்து 'இந்தியா' என்ற வாரப் பத்திரிகை துவங்கி அதன் மூலம் தனது அரசியல் கருத்துக்களை இந்நாட்டு மக்களிடம் பரப்பினார். அப்போது திருமலாச்சாரியார்,  வ.உ.சி. சர்க்கரைச் செட்டியார் முதலியோரின் நட்புக் கிடைத்தது.

 

சூரத் காங்கிரசில் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் 1907ல் பிளவு ஏற்பட்டது. பாரதியார், திலகர் போன்ற தீவிரவாதிகள் பக்கம் நின்று பணியாற்றினார். அப்போது திலகர், லாலா லஜபதிராய், அரவிந்தர் முதலியோரைச் சந்தித்தார். கிருஷ்ணசாமி அய்யர் என்ற தேசபக்தர் பாரதியாரின் பாடல்களில் உள்ள வேகத்தின் தன்மையை உணர்ந்து 'சதேசகீதங்கள்' என்ற தலைப்பில் அவரது பாடல்கள் பலவற்றை அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார்.

1908ஆண்டு 'சுயராஜ்ஜிய தினம்' சென்னையிலும் தூத்துக்குடியிலும் கொண்டாடப்பட்டது. அதில் வ.உ.சி சுப்ரமணியசிவா போன்றவர்களுக்குச் சிறைத்தண்டனை கிடைத்தது. அந்த வழக்கில் பாரதியார் சாட்சியம் சொல்லியுள்ளார்.

அதே ஆண்டில் கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் வெளியிட்ட 'சுதேச கீதங்கள்' என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு ஒன்றை பாரதியார் வெளியிட்டார். 

இது வெளிவந்தபின், பிரிட்டிஷ் அரசாங்கம் பாரதியார் மீது ஒரு கண்ணோட்டம் விட்டது. 'இந்தியா' பத்திரிகையின் சட்ட ரீதியான ஆசிரியர் கைது செய்யப்பட்டு பாரதியார் மீது வாரண்ட் போட்டது. பாரதியார் தலைமறைவானார். புதுச்சேரி சென்றார். அங்கும் போலீஸ் தொல்லைகளுக்கு உட்பட்டார்.

அப்போது 'இந்தியா' பத்திரிகை 1910 வரை புதுச்சேரியிலிருந்து தனது தேசியத் தொண்டைத் துவங்கியது. எரிமலை வெடித்தது போன்ற எழுத்துக்களால் மக்களிடையே விடுதலை வேட்கையைப் பரப்பினார். இதனைக் கண்ட பிரிட்டிஷார் இந்தியா' பத்திரிகை வருவதைத் தடுத்தது. அத்துடன் பத்திரிகை, விற்பனைக் குறைவால் நின்று போயிற்று.

1911ல் மணியாச்சியில் கலெக்டர் ஆஷ்துரை சுட்டுக்கொல்லப்பட்ட போது புதுச்சேரியில் உள்ள தேசபக்தர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அங்கு உள்ள தேசபக்தர்களுக்குத் தாங் கொணாத் துன்பத்தை ஆட்சியினர் கொடுத்தனர். மேலும் அவர்களை அங்கிருந்த வெளியேற்றவும் முயற்சிகள் நடைபெற்றன. பாரதியாரின் சீடர்கள் ஏராளமாயினர்.

பாரதியார் 1912-ல் கீதையை மொழி பெயர்த்தார். மேலும் கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்கள் எழுதப் பெற்றன. பாஞ்சாலி சபதம் வெளியிடப் பெற்றதும் இந்த ஆண்டில்தான்.அடுத்த ஆண்டில் 'ஞானபாநு' என்ற பத்திரிகைக்குச் செய்திகள் எழுதி வந்தார்.  பரலி சு. நெல்லையப்பர் அவர்கள் 1917ல் பாரதியாரின் கண்ணன் பாட்டு முதற்பதிப்பைச் சென்னையில் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து 1918ல் 'சுதேச கீதங்கள்', 'நாட்டு பாடல்' முதலியன வெளியிடப்பட்டன.

புதுச்சேரி வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு உணர்வால் பாரதியார் 1918ம் ஆண்டு நவம்பர் 20ந் தேதி அங்கிருந்து வெளியேறினார். அப்போது கடலூருக்கு அருகே கைது செய்யப்பட்டு, சில நாட்கள் சிறை இருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவுடன் கடையத்துக்குச் சென்றார்.

1918 முதல் 1920 வரை கடையத்தில் வாழ்ந்து வந்த பாரதியார் எட்டையபுர மன்னனுக்கு சீட்டுக் கவிகள் மூலம் தன் நிலைமையைச் சொல்லியும் எவ்விதப் பயனும் ஏற்படாமல் சென்னைக்கு வந்தார். சென்னையில் ராஜாஜி அவர்கள் வீட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார். மகாத்மாவுக்கு சரியான விளம்பரம் கிடைக்காத அந்தக் காலத்திலேயே வாழ்க நீ எம்மான் இந்த வையகத்து மனிதரெல்லாம்என்ற பாடலில் மகாத்மாவின் அகிம்சை நெறியை உயர்த்திப் பாடினார்.

1920ல் மீண்டும் சுதேசிமித்திரனுக்கு உதவியாசிரியரானார். பாரதியாரின் எழுத்துக்கள் அப்போது அதில் நிறைய இடம் பெற்றன.

1921ல் திருவல்லிகேணியில் கோயில் யானை ஒன்றால் தூக்கி எறியப்பட்டு, அதிர்ச்சியுற்று, நோய்வாய்ப்பட்டு 1921 செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவுக்குப் பின் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார். உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்ற பாரதியார், உலக மக்களின் உள்ளங்களிடையே இன்னும் வாழ்ந்து வருகிறார். வாழ்க மகாகவி பாரதியார்.

தமிழ் எழுத்துலகில் கார்ட்டூன் என்பதை அறிமுகப்படுத்தியது பாரதியாரே. அதை முழுதாக சித்திர பாரதி என்கிற நூலில் பார்க்கலாம்.


பாரதியார் வீட்டில் ஒரு நாள் அரிசி இருந்தது. விறகு இல்லை. வெளியே விறகு வாங்கப் போயிருந்தாள் செல்லம்மாள். அப்போது அங்கிருந்த அந்த அரிசியை முற்றத்தில் வாரி இறைத்து சிட்டுக்குருவிகள் அதைக் கொத்தித் தின்பதைப்பார்த்து ஆனந்தம் அடைந்தார் பாரதியார்.

"தீக்குள் விரை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டும் இன்பம் தோணுதே நந்தலாலா" என்று பாடினார் பாரதியார். காக்கைச் சிறகிலுள்ள கரிய நிறம் கண்ணனாக தோன்றுகிறது பாரதிக்கு. இப்படி உலகப்பொருள் அனைத்தையும் பரம்பொருளாகக் கண்ட பாரதியை ஞானி இல்லையென்றால் வேறு எப்படி அழைப்பது.

பாரதியார் தம் வாழ்நாளில் அளவிலடங்கா காதல் கொண்டிருந்த நான்கு விசயங்கள் தமிழ்மொழி, தமிழ்நாடு, பாரதபூமி, சுதந்திரம். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்கிறார்.

தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்

ஈங்கமரர் சிறப்புக் கண்டார்.

என்பது அவருடைய துணிவு. அவருக்கு எப்போதும்,

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே.

என்றும், பாரதநாடே பாருக்குள் நல்ல நாடு என்றும் பாடிப் பரவசம் அடைகிறார். இந்தியத் தாய்க்கு வந்தனை செய்வதிலும் வெற்றி கூறுவதிலும் அவருக்குள்ள ஆனந்தம் அதிகம்.

“பொய்யைத் தொழுதடிமை செய்தார்க்கு

செல்வங்களுண்டு உண்மை சொல்வோர்க்கெல்லாம்

எழுதறிய பெருங் கொடுமை சிறைவாசம்

என்று தன் நண்பன் வ.வு.சி யின் நிலை கண்டு வருந்தினார். 

வந்தேமாதரம் ஒன்றே தாரகம் என்பது அவருடைய உறுதியான நம்பிக்கை. ஆனால் அன்னையோ அன்னியர் தலையீட்டால் அல்லலுற்று வாழா நிற்கின்றாள். அதனால்

என்று தணியும் இந்த சுதந்தர தாகம்

என்று மடியும் இந்த அடிமையின் மோகம்

என்றெம தன்னை விலங்குகள் போகும்

என்றெமதின்னல் தீர்ந்து பொய்யாகும்

என்ற படலை பாடி பலருக்கும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார். வ.உ.சி இந்த பாடலை கேட்டு கொண்டே தன் இன்னுயிரை துறந்தார்.

 


பிரிட்ஷ் அரசை எதிர்த்து விடுதலை பணியை தீவிரமாக செய்ததால்

தம் வாழ்நாளில் பெரும்பாகத்தைச் பாண்டிச்சேரியில் கழிக்க வேண்டியதாயிற்று.அங்கு வறுமையில் மிக வாடினார். ஆயினும் தளராமல் தேசப்பணி யாற்றினார்.

 இந்நாட்டு மக்களின் நிலை கண்டு

அஞ்சி அஞ்சி சாவார் அவர்

அஞ்சாத பொருளில்லை அவனியில

என்று சாதாரண மக்களுக்கும் புரியும்படி  பாடி அவர்கள் நிலையை எடுத்துரைத்து விழிப் பேற்றினார். 

பிற மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை.

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன். இன்றைய புதுக் கவிதைகளுக்கு முன்னோடி பாரதியாரின் வசன கவிதைகள் ஆகும்.

பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதைமற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்என்று அவருடைய சிறப்பை உணர்ந்து போற்றுகின்றனர்தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும்.

“பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே” என பெண்ணுரிமையை ஏத்தினான்.

போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி, பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான்.

பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று உணர்த்தினான்.

இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.

 குழந்தையை நல்ல குணங்களுடனும், அவர்கள் மனமும் நோகாமாலும்

அறிவுரை கூறும் விதமாக பாரதியாரின் பாப்பா பாட்டு விளங்குகிறது.

சின்ன வயதிலேயே அவர்களுக்கு நல்ல புத்திமதி கூறும் பாட்டுகளையும், கதைகளையும் சொல்லி வந்தால், அது அவர்கள் மனதில் ஆழமாக பதிந்து, பிற்காலத்தில் தவறு செய்யாமல் சமூகத்திற்கும், வீட்டிற்க்கும் நல்ல குடிமகனாக இருப்பான்.

பாரதியாரின் பாப்பா பாட்டு, மிகவும் சிறந்தது. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்கும் பாரதியாரின் பாப்பா பாட்டு இதோ

ஓடி விளையாடு பாப்பா! -நீ
                      ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
      கூடி விளையாடு பாப்பா! - ஒரு
                            குழந்தையை வையாதே பாப்பா. (1)

      சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
        திரிந்து பறந்துவா பாப்பா!
               வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
                           மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! (2)

                கொத்தித் திரியுமந்தக் கோழி - அதை
    கூட்டி விளையாடு பாப்பா!
                எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
        இரக்கப் படவேனும் பாப்பா! (3)
 

                        பாலைப் பொழிந்து தரும் பாப்பா! - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா,
                    வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
                    மனிதருக்குத் தோழனடி பாப்பா! (4)
 

                வண்டி இழுக்கும் நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
                அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா! (5)

எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றிபராமரித்து வருகிறது.  

இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் போது அனைவரும் அவசியம் பார்வையிடுங்கள், புது சக்தி பிறக்கும் நமது செயலில்.

 

Post a Comment

புதியது பழையவை

Sports News