பெரு நோய் சுனாமி!--பிரபல எழுத்தாளர் குன்றில் குமார்

 

"எப்படி? எப்படி ?"-2

-புத்தம் புதிய தொடர்.



                  kundrilkumar@gmail.com

         பிரபல எழுத்தாளர் குன்றில் குமார் அவர்கள் வழங்கும் "எப்படி? எப்படி ?"-புத்தம் புதிய தொடர்.

 நெல்லைகவிநேசன் டாட் காம் இணையதளத்தில் முதல்முறையாக எழுத்தாளர் குமார் அவர்கள் தொடர் வழங்குகிறார்.

     இந்த தொடரில் ஒவ்வொரு நிகழ்வுகளும் எப்படி  நிகழ்த்தப்படுகின்றன ? என்பதை  விளக்கி அதற்கான காரணத்தையும் அருமையாக படம் பிடிக்கிறார், பிரபல எழுத்தாளர் குன்றில் குமார்


பெரு நோய் சுனாமி!

--குன்றில்குமார்--



உலகையே தனது அச்ச வலைக்குள் சிக்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பெரு நோய் எதுவென்றால் பச்சைக் குழந்தையும் சொல்லும் ‘கொரோனா’ என்னும் ‘கோவிட் 19’.

ஒட்டுமொத்த மனித சமூகத்தின் அன்றாட வாழ்க்கை நீரோட்டத்தின் திசையையே மாற்றிப் போட்டுவிட்ட மிகப் பெரிய பூதம் இந்த கொரோனா.

பெரு நோய் சுனாமி!

இந்த நோய் எத்தனை உயிர்களை விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது!

எத்தனை மாமனிதர்களின் உயிர்களையும் பறித்துச் சென்று நம்மைக் கண்ணீர்க் கடலில் தத்தளிக்கச் செய்துவிட்டது.

இந்தப் பெருந் தொற்றில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதுதான் எப்படி?

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள உலக சுகாதார அமைப்பின் மிக முக்கியமான மற்றும் அடிப்படை பாதுகாப்பு அறிவுரை என்பது சுகாதாரமான முறையில் வாழ்வது.

உங்களின் கைகளை அடிக்கடி, சரியான முறையில் சுத்தம் செய்யுங்கள். சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தியோ, ஆல்கஹால் நிறைந்த கிரிமிநாசினியைப் பயன்படுத்தியோ சுத்தம் செய்வது அவசியம்.

இவ்வாறு சுத்தம் செய்யாமல் உங்களின் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவது ஆபத்தானது. 

கைகள் மிக முக்கியம். தேவையான எந்தவொரு பொருளை எடுக்க வேண்டும் என்றாலும் அதற்கு நம் கைகள் வேண்டியதாக இருக்கிறது.

ஆகவே தான் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து வருகிறது.

கையுறைகளை அணிந்தாலும்கூட கோவிட் 19 நோய்க் கிருமிகள் தாக்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

தும்மல் அல்லது இருமல் வந்தால், கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரைப் பயன்படுத்த வேண்டும். ஒருவேளை அந்த நேரத்தில் கைவசம் அவை இல்லையென்றால், உங்களின் மணிக்கட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் பயன்படுத்திய டிஷ்யூ பேப்பரை உடனடியாகக் குப்பைத் தொட்டியில் களைந்துவிடுங்கள் அல்லது எரித்து விடுங்கள். வைரஸ் நிறைந்துள்ள அந்த பேப்பரால் பிறருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை இது தவிர்க்க உதவும்.

பொது இடத்தில் மக்கள் இரண்டு மீட்டர் அளவிற்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து, வேறு எதற்காகவும் மக்கள் வெளியே போகாமல் சுயத்தடை செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம், இருமல் மற்றும் தும்மல் பிரச்னை உள்ளவர்களை மக்கள் சந்திக்கும் வாய்ப்புகள் குறையும்.

ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்வதை விடுத்து, இருகரம் கூப்பி வரவேற்பதே 'பாதுகாப்பானது. அத்துடன் கை அசைத்தல், தலை தாழ்த்துதல் போன்ற முறைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.



பொதுவாகக் கடைகளில் வாங்கும் சாதாரண துணியால் ஆன முகக் கவசங்கள் நோய்த் தொற்றுக்களில் இருந்து முழுமையாகப் பாதுகாக்குமா என்றால் இல்லை என்பதுதான் அதற்கான பதில்.

என் 95, சர்ஜிக்கல் முகக் கவசம் போன்றவை நல்ல பலன் அளிக்கும். ஆனால் இவை விலை அதிகம் என்பதாலும், பலமுறை பயன்படுத்த முடியாது என்பதாலும் இந்த வகை முகக்கவசங்களை  அதிகம் பேர் பயன்படுத்துவதில்லை.

ஆனால் அது தவறு.

துணி முகக் கவசம் அணிவதால் மற்றவர்களின் உமிழ்நீர் முழுமையாகத் தடை செய்யப்படாமல் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு.

முடிந்தவரை வீட்டை விட்டு வெளியே செல்லாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வதும்தான் கொரோனாவில் இருந்து நல்ல முறையில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

வறட்டு இருமல், காய்ச்சல் போன்றவைதான் கொரோனா நோய்த் தொற்றின் முக்கிய பொதுவான அறிகுறிகள். சிலருக்குத் தொண்டைக் கரகரப்பு, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் காணப்படும். வாசனை நுகர்தல், சுவை அறிதல் போன்ற உணர்வுகள் காணாமல் போய்விடும்.

இவை எதுவும் இல்லாமலும் கோவிட் 19 நோய்த் தொற்று வருவதும் உண்டு.

தலைவலி, மூக்கில் நீர் கொட்டுதல் போன்ற லேசான அறிகுறிகள் இருந்தால்கூட அது சாதாரண ஜலதோஷம் என்று அலட்சியமாக இருக்காமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் பிரச்னை போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். இல்லையென்றால், சுவாசப் பிரச்னை தீவிரமாகி உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.

முன்கூட்டியே உங்கள் மருத்துவரிடம் தொலைபேசியில் பேசி எந்த மருத்துவமனைக்கு,ச் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.

கொரோனா பெருந் தொற்று மிகக் கொடிய நோய்தான் என்றாலும் இத் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே உயிரிழப்பதாக ‘தி லான்செட் இவ்ஃபெக்டஸ் டிசீசஸ்’ என்ற மருத்துவ ஆய்விதழ் தெரிவிக்கிறது.

ஆனால் உலகம் முழுவதும் இந்நோயின் தாக்கம் குறித்த முழுமையான தகவல் இன்னும் சரிவர வெளியாகவில்லை என்பதால் இந்தப் புள்ளிவிவரம் சரியானது என்று எடுத்துக் கொள்ள முடியாது.

இந்தப் பெருந்தொற்று பரவிக் கொண்டிருக்கும்போதே அதுபற்றிய கணக்கெடுப்பு என்பது நிச்சயமாகத் துல்லியமாக இருக்காது. இந்த நோயால் ஒருவர் பாதிக்கப்படுவதற்கும், அதனால் அவர் இறப்பதற்கும் ஆன கால இடைவெளி அதிகமாக உள்ளது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

எனினும் மற்றொரு புள்ளிவிவரம் வேறு மாதிரியாகவும் தெரிவிக்கிறது. அதாவது 80 வயதைக் கடந்தவர்களில் இந்நோய் பாதித்தவர்கள் சராசரியைவிட பத்து மடங்கு அதிகமாக இறக்கிறார்களாம். அதே நேரத்தில் 40 வயதுக்குக் குறைவானவர்களில் அந்த எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறதாம்.

சீனாவில் நடந்த முதல் கட்ட ஆய்வில், அங்குள்ள 44 ஆயிரம் நோயாளிகள் குறித்துக் கணக்கிட்டபோது, நீரிழிவு நோய், அதிக ரத்த அழுத்தம், இதயம் மற்றும் சுவாசம் உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்கள் ஐந்து மடங்கு அதிகம் இறப்பது தெரிய வந்தது.

இந்த பெருந் தொற்றுக்கு எதிராகத் தற்போது சில தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றால் நோய்த் தாக்குதலில் இருந்து முழுமையாகத் தற்காத்துக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஆனாலும் 60 முதல் 70 சதவீதம் வரை முடியும் என்பது மட்டும் உண்மை.

அனைவருக்குமே இது சற்றுக் கடினமான காலம் என்பதில் எந்தக் குழப்பமும் சந்தேகமும் இல்லை. எனினும் தனிமைப் படுத்துதல் என்னும் இத்தகைய விசித்இதிரமான சூழல், அனைவரையும் வருத்தமாகவும், குழப்பமாகவும், கோபமாகவும் உணரச்செய்துள்ளது.

இத்தகைய விசித்திரச் சூழலில் இருந்து மனோநிலையைச் சரியான முறையில் பராமரித்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பிரிட்டனின் மத்திய சுகாதாரச் சேவை சில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது.

செல்பேசி அல்லது வீடியோ கால் சேவை மூலம், உங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு தொடர்பில் இருக்க வேண்டும்.

உங்களின் மனதை வருத்தமடைய வைக்கும் விஷயங்கள் குறித்து பிறரிடம் மனம்விட்டுப் பேச வேண்டும்..

மற்றவர்களின் கவலைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ள முயல வேண்டும்..

இந்த ஊரடங்கால் நமது வாழ்விற்கு வந்திருக்கும் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

உணவிற்கான பொருட்களை வாங்கக் கடைக்குச் செல்லுதல், வீட்டிலிருந்தபடியே வேலை பார்ப்பது போன்றவற்றை செய்ய உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, தேவையான அளவு குடிநீர் தேவை. அதே நேரத்தில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களை ஓரம்கட்டி வைத்தல்.

கடினமான சூழல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். உங்களால் கட்டுப்படுத்த முடியாத சூழல்களை உங்களால் எதுவும் செய்ய முடியாது. எனவே அதை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். ஆனால், கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களின் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும்.

விருப்பமான விஷயங்களைப் பட்டியலிட்டுக் கொண்டு அவற்றைச் செய்யுங்கள். மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் மனநிறைவோடு அதைச் செய்யப் பழகுங்கள்.

இப்போது உலகில் நடப்பவை அனைத்தும் தற்காலிகமானதே என்பதை மறக்காதீர்கள்.

தற்போது உலகைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா என்னும் பெருந் தொற்றில் இருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும், மற்றவர்களையும், உலக மக்களையும் இவ்வாறு பாதுகாத்து சிறப்படையுங்கள்.


                                                           ---------------------------


Post a Comment

புதியது பழையவை

Sports News