பள்ளிக்கு 7 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வெற்றி பெற்ற மு.மகேந்திர பாபு

 

சாதனைச் சிகரம்.

பள்ளிக்கு 7 கிலோமீட்டர் தூரம் 
நடந்து  சென்று வெற்றி பெற்ற

மு.மகேந்திர பாபு 


' எடுத்தகாரியம் யாவினும் வெற்றி ' - என்று எட்டுத்திசையிலும் புகழ் பரப்பி இன்றும் தன் எழுத்துகளால் நிலைத்து நிற்கும் மாகவிஞன் பாரதி பிறந்த மண்ணான எட்டயபுரத்தைச் சேர்ந்தவர்.விவசாயி ,  கவிஞர் , கட்டுரையாளர் , சமூகச்செயற்பாட்டாளர் , ஆசிரியர்    என பன்முகத்தோடு செயல்பட்டுவரும் பசுமைக்

கவிஞர் மு.மகேந்திர பாபு அவர்களுடன் இன்று நாம் சந்தித்த நேர்காணல் நமது நெல்லைகவிநேசன்.காம் இணையத்தில் இதோ .


 


தங்களது இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்களேன் ....

        நெல்லைகவிநேசன்.காம் நண்பர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். பாரதி பிறந்த எட்டயபுரத்திலிருந்து எட்டுக்கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொன்னையாபுரம் என்ற சிற்றூர் எனது ஊர்,வானம் பார்த்த பூமி. மழையை நம்பியே எங்கள் மண்ணும் , மக்களும் . கரிசல் பூமி. எனது பெற்றோர் முருகன் - இலட்சுமி . மனிதநேயத்தை என்னுள் விதைத்தவர்கள் எனது அப்பாவும் , அம்மாவும். யார் வந்து உதவி எனக்கேட்டாலும் மறுக்காது செய்வார்கள். நஞ்சையும், புஞ்சையும் , கண்மாயும் , பனைமரங்களும் என எங்கள் ஊர் நாகரீகம் அதிகம் நுழைந்திடாத நல்ல ஊர்.


 தங்களது பள்ளிக்காலம் பற்றிக் கூறுங்களேன் ...

             எங்கள் ஊர்  ஆரம்பப் பள்ளிதான் எனக்கு அகரம் சொல்லிக் கொடுத்து , இன்று சிகரம் தொட வைத்திருக்கிறது. ஐந்தாம் வகுப்பு வரையிலும் எங்கள் ஊரில் இன்றும் இயங்கி வருகின்ற ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில்தான் பயின்றேன். அய்யனார் என்ற ஆசிரியரையும் , மாரியப்பன்  என்ற தலைமையாசிரியரையும் இந்நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றளன்.ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை எங்கள் ஊர்க்கு அருகில் உள்ள பேரிலோவன்பட்டி தி.வெ.அ.ந.நா.மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். தலைமுறைகள் பல கடந்தும் தரமான கல்வியை இன்றும் தந்து கொண்டிருக்கும் பள்ளி இது. எங்களுடைய சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு கல்வி விளக்கேற்றிய பள்ளி இது. என்னுடைய அப்பா இங்குதான் படித்தார். நான் , எனது அண்ணன் , அக்கா , தங்கை என அனைவரும் இங்குதான் படித்தோம். என்னைப் பட்டை தீட்டிச் செம்மைப் படுத்தியது இப்பள்ளி எனச்சொல்வேன்.



பள்ளிக்காலத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள் ஏதேனும் உள்ளனவா ?

             நிறைய இருக்கின்றன. எங்கள் ஊரிலிருந்து பள்ளிக்குச் சென்றுவர தினமும் 7 கி.மீ.தூரம் நடக்க வேண்டும். அப்போது சைக்கிள் கிடையது. காலையிலும் , மாலையிலும் சாலையில் மாணவர்கள் நடந்து செல்வதே ஒரு அணிவகுப்பு போல அழகாக இருக்கும். அப்படி நடந்து போகும்போது சிறுவர் இதழ்களில் படித்த கதைகளை நண்பர்களுக்குச் சொல்லிக்கொண்டே நடப்பேன். பள்ளிப்பருவத்திலேயே ஒரு கதைசொல்லியாக உருவாக்கியது அன்று நடந்த நாட்கள்தான். திறமைமிக்க ஆசிரியர்கள். அதிலும் என்னோட பால்யத்தில் சில ஆசிரியர்கள் என்னுள் புகுந்து பல மாற்றங்களைத் தந்தார்கள். அவை இன்று என்னுடைய ஆசிரியர் பணிக்குப் பேருதவியாக இருக்கின்றன. அனைத்து ஆசிரியர்களையும் நான் குறிப்பிட வேண்டும்.என்றாலும் என்னுடைய தமிழாசிரியர்களைப் பற்றிய சில நினைவுகளை இங்கே பகிர்கிறேன்.

            எனக்கு ஆறாம் வகுப்பு தமிழாசிரியையாக அப்போது இருந்தவர் திருமதி. கனகமணி அம்மா அவர்கள். கரும்பலகையில் அவர் எழுதினால் கையெழுத்து அவர் பெயருக்கேற்ப மணிமணியாக , முத்து முத்தாக இருக்கும். ஏழு மற்றும் எட்டாம் & பத்தாம் வகுப்பில் இராஜபூபதி ஐயா அவர்கள். கம்பீரமான தோற்றம் உடையவர். அவரது வகுப்பறை கலகலப்பாக இருக்கும். பத்தாம் வகுப்புப் படிக்கும்போது அவர் சொன்ன வாசகம் இன்றும் என் நினைவில் இருக்கிறது.

அழகிய காடுகள் அடர்ந்த காடுகள். நான் செல்ல வேண்டியது நெடுந்தூரம் ... நான் செல்ல வேண்டியது நெடுந்தூரம் ... 

ஆம் ! நான் செல்ல வேண்டியது நெடுந்தூரம் இருக்கின்றன. 

ஒன்பதாம் வகுப்பில் வெள்ளைச்சாமி ஐயா அவர்கள் எனது தமிழாசிரியர். வகுப்பறையில் தூய தமிழிலே பேசுவார். பாடலை சீர்பிரித்து விரல்விட்டுப் பாடிக்காட்டுவார். என் மனதில் மரங்கள் பற்றிய சிந்தனையை விதைத்தவர் அவர்தான். ஐயா , தலைவலிக்கிறது எனச்சொன்னபோது , அப்படியா , வேப்பமரத்தடியில் சற்று நேரம் அமர்ந்து வா . சரியாகிவிடும் என்பார். 

11 & 12 ஆம் வகுப்புகளில் எனது தமிழாசிரியர் கவிஞர்.அ.கணேசன் ஐயா அவர்கள். அவரது வகுப்பு என்றாலே மாணவர்களுக்கு ஆரவாரம்தான்.  அடுக்கு மொழியில் பாடத்தை அருமையாக நடத்துவார். வகுப்பு தொடங்கியது போல் இருக்கும். ஐந்து நிமிடத்தில் மணி அடித்தது போல் இருக்கும்.அவ்வளவு சுவையாக இருக்கும். என்னுடைய கவிதை ஆற்றல ஊக்குவித்து என்னை வெளிச்சப்படுத்தியவர் எனது தமிழாசிரியர் கவிஞர்.அ.கணேசன் ஐயா அவர்கள். என்னுடைய கவிதைகளைப் படித்து நன்றாக உள்ளது என ஊக்கப்படுத்தி 18 வயதில் என் முதல் கவிதை நூலான ' இந்தியனே எழுந்து நில் '  வெளியிடச்செய்தவரும் இவரே.என்னை பேச்சாளனாக உருவாக்கியவரும் இவரே. நூல் உருவாகத் துணைநின்றவர்கள் என்னுடைய பெற்றோரும்  எனது அண்ணன் திரு.மு.நரசிம்மராஜ் அவர்களும். பள்ளிப் பருவம் வாழ்க்கையில் மறக்க முடியாத பல நினைவுகளைத் தந்து கொண்டிருக்கிறது.

         1997 ல் 12 ஆம் வகுப்பு முடித்தேன். 20 ஆண்டுகள் கழித்து 2017 ல் நான் படித்த அதே பள்ளிக்கு இலக்கிய மன்றத் தொடக்க விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டேன். என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு அது. அத்தகைய அற்புதமா வாய்ப்பை நல்கியவர் எனது தமிழாசிரியர் ஐயா கணேசன் அவர்களும் , அன்றைய தலைமையாசிரியராக இருந்த.திரு.விஜயவீரன் சாரும். அந்த நிகழ்வில் 10 & 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு உதவித்தொகையும் , புத்தகங்களும் பரிசாக வழங்கினோம். இதற்கு எனக்கு மிகவும் உறுதுணையாக நின்ற நண்பன் என்னுடன் படித்து , இன்று கிராம நிர்வாக அலுவலராக இருக்கக்கூடிய நண்பன் மாரிமுத்து. மின்சார வாரியத்தில் பணிசெய்யக்கூடிய நண்பன் மதுரை சுபாஷ் சந்திர போஸ் , இராணுவத்தில் மருத்துவத் துறையில் பணிசெய்துவரும் நண்பன் சிங்கிலிபட்டி கணபதி இராம்குமார் , ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் பேரிலோவன்பட்டி பாலமுருகன் , இனிப்பகத்தில் பணி செய்யும் முதலிபட்டி செல்வக்குமார் , இராணுவத்தில் பணிபுரியும் வேலிடுபட்டி செந்தில்குமார் , இராஜா , கோவில்பட்டி இராஜா போன்ற நண்பர்கள் இன்றும் உடன் பயணித்து வருகிறார்கள்.சமீபத்தில் காலமான எங்கள் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் திரு.பால்ராஜ் , உதவித்தலைமையாசிரியர் திரு.சங்கர நாராயணன் அவர்களையும் இந்நேரத்தில் நினைவு கூர்கிறேன். 

இப்படி பல்வேறு நினைவுகள் என்னுடைய பள்ளிப்பருவத்தில் உண்டு.பள்ளியில் நடந்த பேச்சுப்போட்டியில் இரண்டாம் பரிசு வாங்கியது என பல நினைவுகள் உண்டு.


உங்களுடைய கல்லூரிக்காலம் பற்றிச்சொல்லுங்களேன் ? 

பள்ளிப்படிப்பு வரை எந்தச் சிரமும் இல்லை. கல்லூரிக்குச் செல்வது என்றால் ஒன்று கோவில்பட்டிக்குப் போக வேண்டும்.அல்லது தூத்துக்குடிக்குப் போகவேண்டும். பலரும் 12 ஆம் வகுப்போடு நின்று விடுவார்கள். கோவில்பட்டியில் இருக்கக்கூடிய GVN என்ற கல்லூரியில் B.SC.வேதியியல் பிரிவில் சேர்ந்தேன். அது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. தமிழ்வழியில் படித்த எனக்கு தமிழ் தவிர அனைத்தும் ஆங்கிலத்தில் படிப்பது சிரமமாக இருந்தது.ஆனாலும் முயன்று படித்தேன். என்னுள் கவிதை எழுதும் ஆர்வம் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் அதாவது 1997 ல் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்ட நேரம். சுதந்திர தினவிழாவில் மாணவர் சார்பில் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பினைப் பெற்றுத்தந்தவர் எனது விலங்கியல் பேராசிரியை திருமதி.மின்னி மேடம் அவர்கள். ஆனால் அந்த விழாவில் என்னால் பேசும் வாய்ப்பு அமையவில்லை. காரணம் அதிகாலை ஐந்து மணிக்கு வரும் பேருந்து அன்று வரவில்லை. ஏழுமணி பேருந்தில் கோவில்பட்டி சென்று , அங்கிருந்து நான் கல்லூரிக்குச் சென்றபோது மணி ஒன்பது. நான் உள்ளே நுழைய விழா முடிந்து அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆறுதல் சொன்னவர் எங்களுடைய மின்னி மேடம். கிடைத்த வாய்ப்பில் பேச இயலவில்லையே என வருந்திய நாட்கள் பல. அங்கே என்னுடன் படித்த பிரகாஷ் , சண்முகநாதன் என்ற நண்பர்கள் இன்றும் என்நினைவில் நிற்கின்றார்கள்.

 அதன்பிறகு எனக்கு கோவில்பட்டி அருகில் உள்ள வானரமுட்டியில்உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனால் கல்லூரியிலிருந்து விடுவித்து, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தேன். இதுதான் என் வாழ்வில் வசந்தத்தைத் தந்த இடம். 

ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற அனுபவத்தைப் பற்றிக் கூறுங்களேன் ....

என்னைப் புடம்போட்ட இடம் , தடம் பதிக்கச்செய்த இடம் எனக் கூறுவேன். உள்ளே நுழைந்தது முதல் சமீபத்தில் மீண்டும் ஓர் மாணவர் சந்திப்பை அங்கு நிகழ்த்தியது வரை எல்லாம் பசுமையான நினைவுகளாக இருக்கின்றன. 

முதன் முதலில் முதல்வர் அறையில் பேசியதே ஒரு நகைச்சுவையான அனுபவம். என்னைச் சேர்ப்பதற்கு எனது அப்பா வந்திருந்தார். அப்போது முதல்வராக இருந்த , அன்பும் ஆளுமையும் மிக்க திருமதி.லிதியா ஜெசி என்ற அம்மையார் இருந்தார்கள். 

உன் பேரு என்னப்பா ? 

மு.மகேந்திர பாபு மேடம். 

உன்னைச் சேர்த்துவிட யார் வந்திருக்காங்க ? 

இதோ ... அப்பா இருக்கார் மேடம். 

உங்க பேரு என்னம்மா ?

உலகம்மாள் மேடம்.

உங்களைச் சேர்த்துவிட யாரு வந்திருக்காங்க ?

எங்க வீட்டுக்காரர் வந்திருக்கார் மேடம்.

சரி.

வணக்கம் மேடம்.

வணக்கம் சார். நீங்க யாரைச் சேர்க்க வந்திருக்கிங்க ? பையனா ? பொண்ணா ?

இல்ல மேடம். நான் தான் படிக்க வந்திருக்கிறேன். 

உங்க பெயர் ? 

அமல்ராஜ் . 

இதா பாரு அமல்ராஜ். இங்க படிக்கற பையங்களில் நீங்கதான் பெரியவர்னு நினைக்கிறேன். சண்ட சத்தமில்லாம பசங்களைப் பாத்துக்கோங்க. 

சரிங்க மேம்.

இதுதான் முதன்முதலாக ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற மறக்க முடியாத உரையாடல். திருமணமான மாணவிகளும் அப்போது படிக்க வந்தார்கள். ஆசிரியப்பயிற்சி நிறுவனத்தில் படிப்பதற்கு கடும்போட்டி நிலவிய காலம் அது. பொறியியல் , மருத்துவம் போன்ற படிப்புகள் கிடைத்தும் அது வேண்டாமென மறுத்து ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் மாணவர்கள் சேர்ந்த காலம் அது.



படைப்பாற்றலை ஊக்குவிப்பதாக அது அமைந்ததா ?

நிச்சயமாக . இதுவரை வீட்டிலிருந்து படித்து வந்த எனக்கு அங்கு விடுதியில் தங்கிப் பயில்வது புது அனுபவமாக இருந்தது. வீட்டில் எல்லாமே அம்மாதான். பசிக்குது என்றால் உடனே சோறு. அவ்வப்போது நொறுக்குத்தீனி. அங்கு அப்படியில்லை. எல்லாம் ஒரு கட்டுப்பாடு.  மாணவர்களுக்குத் தனித்தனிக் குழுக்கள். இறைவழிபாட்டுக்குழு , உணவுக்குழு , சுகாதாரக்குழு என தனித்தனியாக அமைத்து அவரவர் வேலைகளைச் செய்யவேண்டும்.

எங்கள் நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்த அண்ணன் ஒருவரின் பெயர் வைகறை ( ஜோசப் பென்சிகர்) . மிகச்சிறந்த கவிஞர். மரபு மிக அருமையாக எழுதுவார். பள்ளியில் அரும்பிய எனது கவிதை ஆர்வம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் மலர்ந்தது. கவிதை எழுதும் மாணவர்களாக ஒரு குழு சேர்ந்தோம். அந்தக் குழுவிற்கு ' வளர்பிறை ' எனப்பெயரிட்டோம். மாதம்தோறும் ஒரு கையெழுத்துப்பிரதியாக இதழ் வெளியிடுவதெனத் தீர்மானித்தோம். அதற்கு எங்கள் விரிவுரையாளர்களிடம் , முதல்வரிடம் அனுமதி கேட்டோம். அவர்களும் இசைந்தார்கள். அப்படி உருவான கையெழுத்து மாத இதழ்தான்  வளர்பிறை. அது நான் தற்போது பணிபுரியும்பள்ளியிலும் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாக கையெழுத்துப்பிரதியாக எங்கள் பேரா.கு.ஞானசம்பந்தன் ஐயா அவர்களாலும் , இலக்கிய இளவல்.அவனி மாடசாமிஅவர்களாலும் வெளியிடப் பட்டது.



வளர்பிறைக்கு ஆக்கம் கொடு்த்த உங்கள் நண்பர்கள் யார் ? 

கவிஞர்.வைகறை , பாலமுருகன் , பாரத் , நான் , சரவணப்பெருமாள் என நண்பர்குழுவோடு மாதந்தோறும்  மாணவர்களின் கவிதை , கட்டுரை , விடுகதை , ஆங்கிலப்புதிர்கள் என பல்சுவையாக அதை வடிவமைத்தோம். பின்னாளில் எங்கள் விரிவுரையாளர் திரு.கண்ணையா அவர்கள் சொன்னார் . தம்பி , எனக்கு நல்லாசிரியர் விருது கிடைத்தது. அதற்கு நீங்கள் நடத்திய ' வளர்பிறை '  இதழும் ஒரு காரணம் என்றார் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆசிரியப்பயிற்சி நிறுவனம் வெறும் படிக்கும் இடமாக இல்லாமல் பயிற்சி ஆசிரியர்களை படைப்பாளர்களாக மாற்றுவதற்கும் பெரிதும் துணையாக இருந்தது.

முதலாமாண்டு ஆண்டுவிழாவில் என்னுடைய முதல் கவிதை நூலான ' இந்தியனே எழுந்து நில் ' என்ற கவிதைநூலை முதல்வர் அவர்கள் வெளியிட்டுச் சிறப்புச் செய்தார்கள். எனது நண்பர்கள் சுவரொட்டி அடித்து ஊர்முழுவதும் ஒட்டியிருந்தது எனக்குப் பெரும் மகிழ்வைத் தந்தது. அப்போது ஊருக்குள்ளும் என்னைத் தெரிய வைத்தவர்கள் எனது நண்பர்கள். படிக்க வந்தாலும் எனக்கு வழிகாட்டியாக இருந்து ஊக்குவித்த நண்பர்கள் பலர்.

அண்ணன்கள் இராமநாதன் , அமல்ராஜ் , இராஜகனி , இரமேஷ்குமார் , கோ.குணசேகரன்  சு.கருப்பசாமி , முருகன் , இராஜன் ,  பெருமாள் ,  இராமஜெயம்  நண்பர்கள் ம.கருப்பசாமி , மணிராமன் , குணசேகரன் ,  கனகராஜ் ,  வேல்ராஜ் ,   பால்ராஜ்  , பாரத் , பாலமுருகன் , முருகானந்தம் , முருகப்பெருமாள் , செல்வம் , பாலாஜி , சின்னத்துரை , இரமேஷ் , சுரேஷ் குமார் , இராஜ்குமார் , சகாதேவன் , செந்தில் வேல்முருகன் , ஒல்சன் , முனியசாமி , பால்ராஜ் டேவிட் , சீனிவாசன் ,  கி.கனகராஜ் , ஜஸ்டின் , சங்கர் , மு.முருகன் , இராஜசேகர் , ரெக்ஸ் , ஜெயக்குமார் , ஜெபக்குமார் , முருகானந்தம் , சு.சுரேஷ் , மாரிமுத்து , இராஜ்குமார் , சின்னத்துரை , மாரிச்சாமி , இராஜா  என அனைத்து நண்பர்களையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன். இதில் மிகப்பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் இன்றும் எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டிருப்பதுதான்.



உங்களது முதல் கவிதை நூல் எந்தவிதமான அறிமுகங்களைத் தந்தது ? 

 தமிழாசான் கவிஞர்.அ.கணேசன் ஐயா அவர்கள் என்னை ஊக்கப்படுத்தி முதல் நூல் வெளிவருவதற்குப் பெரிதும் துணையாக இருந்தார். அதுபோல எனது பெற்றோர் , எனது அண்ணன் நரசிம்மராஜ் அவர்களும் பெரிதும் துணை நின்றார்கள். எங்கள் தமிழையா கணேசன் அவர்கள் அவரது நண்பரும் . ஆசிரியருமான விளாத்திகுளத்தைச் சேர்ந்த சாகோவி என்பவரை அறிமுகம் செய்துவைத்தார். அவர் மூலம் இளசை அருணா என்ற ஐயாவின் நட்பு கிடைத்து. பாரதி தரிசனம் தந்த இளசை மணியன் ஐயா அவர்களின் அன்பு கிடைத்தது. புலவர்.படிக்கராமு , பேரா.சங்கரவள்ளி நாயகம் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.  கோவில்பட்டிப் பேரா.இராசமாணிக்கம் ஐயா அவர்களின் அன்பு கிடைத்தது. அவர் மூலமாக நெல்லை வானொலியில் 'இளையபாரதம் ' நிகழ்ச்சியில் தொடர்ந்து கவிதைபாடும் வாய்ப்பு கிடைத்தது. நெல்லை வானொலியில் எனது கவிதை நூல் 15 நிமிடங்கள் நூல் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்முரசு நாளிதழில் ' வளரும் கவிஞர் ' என்ற தலைப்பில் செய்தியாளர் வேடபட்டி கற்குவேல் அவர்கள் எனது நேர்காணலை வெளியிட்டுப் பெருமை சேர்த்தார். நூல் வெளியீட்டுக்குப்பின் பல்வேறு கவியரங்கத்தில் கவிபாடும் வாய்ப்பும் கிடைத்தது. எங்கள் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் முதன்முதல் கவிதை நூல் எழுதி வெளியிட்ட மாணவர் என்ற சிறப்பும் கிடைத்தது. என்னுடைய நூலுக்கு அன்றைய தமிழ்ப்பண்பாட்டுத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் ஐயா அவர்கள் கடிதம் எழுதியது எனக்கு மறக்க முடியாத அனுபவம் ஆகும். 

எங்கள் விரிவுரையாளர்கள் மதிப்பிற்குரிய  திரு.பெருமாள்சாமி , பரமானந்தம் ,  கண்ணையா , முருகையா , பாலசுப்பிரமணி , முனியசாமி , சீனிவாசன் , கனகசபை , இராமசாமி , திருமதி.கலையரசி , திருமதி.யசோதைமணி , உடற்கல்வி இயக்குநர் வின்னர் அப்பாஜி , ஜெயபால் ,  விடுதிக்காப்பாளர் சுடலைமுத்து  என அனைவரும் இந்த நேரத்தில் நன்றிக்குரியவர்கள். இலக்கியத்திற்கான வாசற்கதவைத் திறந்துவிட்டதில் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்திற்கும் , எனது விரிவுரையாளர்களுக்கும் பெரும் பங்கு உண்டு.




நீங்கள் பங்கேற்ற போட்டிகள் குறித்துச் சொல்லுங்களேன் ...

எங்கள் நிறுவனத்தில் அடிக்கடி பேச்சு , கவிதை , கட்டுரை , பாட்டுப்போட்டிகள் நடைபெறும். கவிதைப்போட்டி என்றாலே எனக்கும் கவிஞர் வைகறைக்கும்தான் போட்டியாக இருக்கும். கவிதையை எழுதி உணர்ச்சியோடு வாசிக்கவும் வேண்டும். அந்த வகையில் தொடர்ந்து பல முதல் பரிசுகளாகப் புத்தகங்களைப் பெற்றிருக்கிறேன். ஒரு முறைப் பாட்டுப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றேன். நானே எழுதி , மெட்டமைத்துப் பாடினேன்.  அதுமட்டுமல்ல , ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெறும்போது பாடத்தையே பாடலாக எழுதி பாடியும் உள்ளோம். அப்படியொரு வாய்ப்பினைத் தந்தவர் விரிவுரையாளர் முனியசாமி அவர்கள். அதுபோல வின்னர் அப்பாஜி அவர்களும்.  இப்படி நிறைய அனுபவங்களைச் சொல்லலாம். இவைதான் என்னைப் பேச்சாளனாகவும் நகர்த்திய அனுபவங்கள். ஏழைதாசன் என்ற சிற்றிதழில் எனது கவிதை பிரசுரமானது. சினிமா எக்ஸ்பிரசில் ' என் கனவினைக் கேள் நண்பா ' என்ற தேசிய கீதம் படத்தில் வந்த பாடலுக்கு எழுதிய விமர்சனம் வெளிவந்தது.தொடர்ந்து கதிரவன் என்ற நாளிதழில் சிறுவர் பாடல்களும் , ஞாயிறு இணைப்பாக வந்த சூரிய காந்தி இதழில் கவிதைகளும் வெளிவந்தன. மதுரை காந்தி மியூசியம் நடத்திய கவிதை & கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பாராட்டுச் சான்றிதழ் கிடைத்தது. பல ஆண்டுகளுக்குப்பின் அதே காந்தி மியூசியத்தில் பட்டிமன்ற நடுவர்.அவனி மாடசாமி அவர்கள் தலைமையில் காந்தி ஜெயந்தி பட்டிமன்றத்தில் பேச்சாளராகக் கலந்து கொண்டது மறக்க முடியாத நிகழ்வாகும். இன்று பல்வேறு இதழ்களில் என் படைப்புகள் வருவதற்கு ஆசிரியப்பயிற்சி நிறுவனமே அடிப்படை.




உங்களது ஆசிரியப் பணி அனுபவம் குறித்துக் கூறுங்களேன்.

வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று முதன்முதல் பணியேற்ற 07 - 07 - 2000 என்ற நாள். கனவுகள் பலவோடு நானும் எனது நண்பன் கருப்பசாமியும் சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி வட்டத்தில் பெரியகுட்டிமடுவு என்ற உண்டுஉறைவிட நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தோம். அந்தக் கிராமத்திற்குப் பேருந்து வசதி அன்று இல்லை. செல்லும் வழியில் ஆறு நீரோடைகள் செல்லும். அதைக்கடந்துதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். தினமும் பத்துக்கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்குப் போகவேண்டும். அப்போது எங்களுக்கு ஜெயலட்சுமி என்ற அம்மையார் தலைமையாசிரியராக இருந்தார். அதே பள்ளிக்கு எனது நண்பன் மணிராமனும் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதன்பின் கருமந்துறை மலையில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கு மாற்றுப்பணியில் ஒரு மாதம் சென்றேன். அதன்பின் ஏற்காட்டில் குண்டூர் என்ற ஆரம்பப் பள்ளிக்கு உதவி ஆசிரியர் இல்லாததால் மாற்றப்பட்டேன்.

 குண்டூரிலே தங்கி இருந்து பணிசெய்தேன். பசுமையும் , குளுமையும் ஒருசேர உலவிய இடம் அது. சேலம் மாவட்டத்தில் ஓராண்டு , ஒரு மாதம் , ஒரு வாரம் , ஒருநாள் பணி செய்யும் வாய்ப்பு.அதன்பின் மாவட்ட மாறுதலில் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள கீழப்பட்டி நடுநிலைப் பள்ளிக்கு வந்தேன். அங்கு ஓராண்டு பணி. அங்கு தலைமையாசிரியராக இருந்த ஜெயலட்சுமி அம்மா , பால்பாண்டியன் சார் , பஞ்சவர்ணம் , நவரத்தினம் , ஜெயந்தி ,  மலர்வண்ணன் என அன்பான ஒரு நட்பு வட்டம்.சத்தியநாதன் என்றொரு உதவும் உள்ளம்.அதன்பின் , மதுரை அருகே உள்ள தற்போது நான் பணிபுரியும் இளமனூரில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கு மாறுதலில் வந்தேன். 

இளமனூர் பள்ளிக்கு வந்தபின்தான் இலக்கிய ஆர்வம் சரியான இலக்கை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. அப்போது தலைமையாசிரியராக இருந்த செல்லையா சார் , முனியசாமி , ஜெயலட்சுமி , பிரபாவதி ,  வசந்தி ,  உடற்கல்வி ஆசிரியர் திரு.மகாலிங்கம் ஆகியோரின் அன்பும் அரவணைப்பும் மறக்க இயலாது. அதன்பின் ஆரம்பப் பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளி எங்கள் தலைமையாசிரியை திருமதி.தெய்வக்கன்னி அவர்கள் அழைத்து  பத்தாம் வகுப்பிற்கு தமிழ்ப்பாடம் எடுக்கும் வாய்ப்பினைத் தந்தார்கள். இரண்டு ஆண்டுகள் எடுத்தேன். 110 மாணவர்கள். 100 % தேர்ச்சி. மகிழ்ச்சியான காலம் அது.


உங்கள் பள்ளியில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வு பற்றிக்கூறுங்களேன்.

 மதுரை எனக்குள் மாபெரும் மாற்றத்தைத் தந்தது என்றேன். எனது தமிழார்வத்தை ஊக்குவித்தது மதுரைதான். மதுரை இராமகிருஷ்ண மடத்தில் நடந்த சொற்பொழிவில் மதுரை வானொலி நிலைய இயக்குநராக இருந்த நகைச்சுவை மாமன்னர். திரு.இளசை சுந்தரம் ஐயா அவர்களின் உரையைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஐயா அவர்கள் எங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழாவிற்கும் , விடுதி விழாவிற்கும் வருகை தந்து சிறப்பித்துள்ளார்கள். அதுமட்டுமன்று . மதுரை வானொலியில் இளைய பாரதம் நிகழ்வில் பலமுறை கவிதை பாடும் வாய்ப்பையும் தந்துள்ளார்கள். இந்த நேரத்தில் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

 காந்தி மியூசியத்தில் நடந்த பட்டிமன்றம் ஒன்றில் நகைச்சுவைத்தென்றல் பேரா.கு.ஞானசம்பந்தன் ஐயா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தச் சந்திப்பு பல மாற்றங்களை , ஏற்றங்களை என்னுள் ஏற்படுத்தியது. எங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழாவிற்கு ஐயா அவர்கள் வந்து மகிழ்வித்துள்ளார்கள். என்னுடைய இரண்டு பாடல் குறுந்தகடுகளை ( மரமும் மனிதமும் , மண்ணே மரமே வணக்கம் ) எங்கள் பள்ளியில் வைத்து வெளியிட்டவரும் அவரே. காப்பாளராக இருந்தபோது மூன்று ஆண்டுகள் தொடர்ந்து வந்து எங்கள் விடுதி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கியவரும் ஐயா அவர்கள். 

நான் பள்ளியில் படிக்கும் போது எங்கள் பள்ளி இலக்கிய மன்றத்திற்குச் சிறப்பு விருந்தினராக வந்தவர் சிவகாசி தமிழாசிரியர் திரு.முத்துமணி அவர்கள். நான் ஆசிரியராகப் பணிபுரிந்த போது அவரை எங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழாவிற்கு அழைத்து உரை கேட்டு மகிழ்ந்தோம்.

பள்ளிப் பருவத்தில் ஒலி நாடாக்கள் மூலம் என்னுள் புகுந்தவர்.பட்டிமன்றப் பேச்சாளரும் ஆசிரியருமான கவிஞர்.மூரா. அவர்கள். அவர்களையும் அழைத்து வந்து எங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழாவில் உரை நிகழ்த்தச் செய்தது என பல நிகழ்வுகளைக் கூறலாம். புலவர்.சங்கரலிங்கம் ஐயா அவர்கள் எங்கள் பள்ளிக்குப் பலமுறை வருகை தந்து எங்கள் மாணவர்களை மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர்கள் திருமதி.சு.தெய்வக்கன்னி , திரு.அ.பா.மோகன் , திரு.பரஞ்சோதி டேவிட் , உதவித் தலைமையாசிரியர் சண்மகவேலு , சுந்தரமூர்த்தி , இலசபதி , பாலமுருகன் , கதிரவன் , முருகன் , முத்துராசா , கோவிந்த் , மலர்விழி , சொர்ணலதா , கிருஷ்ணபிரியா , தேவி , இராணி , அகிலாமேரி , செல்வராணி , செல்வகுமாரி , சுகுணா , தனலட்சுமி , முருகேஸ்வரி , மகேஸ்வரி  சாந்தினி  , ஆரம்பப் பள்ளித் தலைமையாசிரியர் பாலமுருகன் , முனியசாமி , ஈஸ்வரி , சௌந்தரி , விஜயலட்சுமி ,  அன்பிற்கினிய காப்பாள நண்பர்கள் சங்கரசபாபதி , சத்தியசீலன் , செல்லச்சாமி , அழகன் , தங்கத்துரை , முருகன் விடுதிப்பணியாளர்கள் பால்பாண்டி , அருள்முருகன் 

பாண்டி போன்றோரையும் என்றும் எனக்கு வழிகாட்டுதலாக இருந்து வரும் வேளாண் அலுவலர் ஆறுமுகம் ஐயா அவர்களையும்  , பொறியாளர் சுரேஷ் அவர்களையும் நண்பர்கள் மோசஸ் மங்களராஜ் , சரவணன் , கிறிஸ்துஞான வள்ளுவன் , Srimathi சாம்பிராணி திரு.சம்பத் , திரு .J k முத்து , கூத்துப்பட்டறை முத்துச்சாமி , இளமனூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சரவணக்குமார் , திரு.பத்மநாபன் , திரு.பிச்சை , பாடகர் நன்னிலம் கேசவன் ,  இசையமைப்பாளர்கள் மாயா சுரேஷ் , ஜெய்கி , தினேஷ்பாபு ,  பாடகர் சண்முகவேல் , மதுரை கீதம் மீடியா மெட்ரிக்ஸ் சம்பத் ,  சமூக ஆர்வலர் செல்வம் இராமசாமி ஆகியோரையும்  நட்புடன் நினைத்துப்பார்க்கின்றேன்.



நீங்கள் கலந்து கொண்ட இலக்கிய மன்ற நிகழ்வுகள் பற்றிக் கூறுங்கள் ...

     தமிழாசிரிய நண்பர்களின் அழைப்பை ஏற்று சில பள்ளிகளின் இலக்கிய மன்ற நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராகச் சென்று உரையாற்றியுள்ளேன். எங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள ஆண்டார் கொட்டாரம் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.முனியாண்டி மற்றும் தமிழாசிரியர் சுப்பிரமணி அவர்களின் அழைப்பில் பேசியுள்ளேன். ஊர்மெச்சிகுளம் தலைமையாசிரியர் திரு.இரகுபதி மற்றும் தமிழாசிரியர் மனோகரன் அவர்களின் அழைப்பிலும் , சொக்கம்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருளராஜ் மற்றும் தமிழாசிரியர் சுப்பிரமணி அவர்களின் அழைப்பிலும் , உறங்கான் பட்டி மே.நி.பள்ளி தமிழாசிரியை அலமேலுமங்கை மற்றும் முத்துப்பாண்டி அவர்களின் அழைப்பிலும் , எங்கள் நலத்துறைப் பள்ளிகளான அச்சம்பட்டி பள்ளியின் தலைமையாசிரியர் திரு.வின்சென்ட் , தமிழாசிரியர்கள் மனோகரன் , கருப்பையா , நாச்சிகுளம் பள்ளித் தலைமையாசிரியர் திரு.இந்துசேனன் ,  குருத்தூர் உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் மணிராமன் அவர்களின் அழைப்பிலும் , மீனாட்சிநகர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.ஜெ.ஜெ.கோபாலகிருஷ்ணன் , ஒத்தக்கடை தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் தென்னவன் , மோசஸ்  மங்களராஜ் அழைப்பிலும் , சக்கிமங்கலம் அரசு  உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் சீனிவாசன் மற்றும் பெல்சியா அவர்களின் அழைப்பிலும் , வண்டியூர்  அரசு  உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியை இலட்சுமி அவர்களின் அழைப்பிலும் ,  ஔவை மாநகராட்சி பெண்கள் மே.நி.பள்ளி ஆசிரியர்களின் அழைப்பிலும் , தியாகராசர் நன்முறை மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் கார்த்திக் அவர்களின் அழைப்பிலும் , டி.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளியிலும் , அண்ணாமலையார் பதின்ம மே.நி பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சரவணன் அழைப்பிலும் , சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியிலும் , மதுரை விவசாயக் கல்லூரி மாணவர்களிடமும் , வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியிலும் , எம்.ஏ.வி.எம்.எம் பல்தொழில் நுட்பக் கல்லூரியிலும் , லேடி டோக் கல்லூரியிலும் , சிவகங்கை மாவட்டம் மிளகனூர் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் திரு.விநாயக மூர்த்தி அவர்களின் அழைப்பிலும் , திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள பதின்மப் பள்ளி  என பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலக்கியம் பற்றியும் இயற்கை பற்றியும் பேசி உள்ளேன். தொடர்ந்து பேசியும் வருகிறேன்.


தங்களது பசுமைப்பயணம் குறித்த அனுபவங்களைக் கூறுங்கள் 

இயற்கையை நேசிப்போம் !

இயன்றதை யாசிப்போம் ! 

மரங்கள் இருக்குமிடம் !

மகிழ்ச்சி நிலைக்குமிடம் ! 

--என்ற முழக்கங்களுடன் மாணவர்கள் மனதில் பசுமையை விதைத்து வருகிறேன். எங்கள் பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறேன். பசுமைக்காகத் தொடர்ந்து கட்டுரைகளும் , கவிதைகளும் , பாடல்களும் எழுதி வருகிறேன். மரங்களின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்  என்பதற்காக இரண்டு பாடல் குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளேன்.

தாங்கள் சந்தித்து உரையாடிய இலக்கிய ஆளுமைகள் பற்றிக் கூறுங்கள் ..

2000 ல் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஐயா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியது மறக்க இயலா அனுபவம். அவரது முகவரி கொடுத்து உதவியவர் எழுத்தாளர்.தனுஷ்கோடி இராமசாமி ஐயா அவர்கள். உவமைக் கவிஞர் சுரதா அவர்களை அவர்கள் இல்லத்தில் பார்த்துப் பேசியதும் மறக்க முடியாத அனுபவம். அவர்தான் , தம்பி , புது வீடு கட்டும்போது நூலகத்திற்கு ஒரு அறை ஒதுக்குங்கள் என்று சொல்லி ஒரு புத்தகமும் அன்பளிப்பாகக் கொடுத்தார். அவர் சொன்னபடியே எங்கள் இல்லத்தில் ஒரு சிறு நூலகம் வைத்துள்ளேன். ஐயா வல்லிக்கண்ணன் அவர்கள் , ஐயா தி.க. சி அவர்கள் , பேரா.சாலமன் பாப்பையா அவர்கள் , மேலாண்மைப் பொன்னுச்சாமி அவர்கள் , ஐயா பூமணி அவர்கள் , ஐயா சோ.தர்மன் அவர்கள் என ஒரு பெரும்பட்டியலே உண்டு.



இது அறிவியல் யுகம். சமூக ஊடகங்களில் தங்களது பயணம் பற்றிக் கூறுங்கள் 

நண்பர்களின் துணையுடன் Green Tamil என்ற YOU TUBE சேனல் மூலமாக பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களிடம் தமிழ்ப்பாடங்களைக் காட்சிப் பதிவு செய்து அனைவரும் இனிய , எளிய முறையில் பயன்படுத்தும் விதமாக வழங்கி வருகிறோம். சிலப்பதிகாரம் முழுமையும் வரிக்கு வரி விளக்கம் சொல்லி பதிவிட்டிருக்கின்றோம்.ஆஸ்திரேலியாவில் ஒரு மாணவி எங்கள் சேனல் பார்த்துப் படித்து பட்டம் பெற்றுவிட்டார்.TRB , TNPSC , UPSC தேர்விற்குத் தயாராகும் மாணவர்களுக்கும் பாடப்பகுதிகளைப் பதிவு செய்து வருகின்றோம். Greentamil.in என்ற இணையதளத்தின் மூலமாக போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தினமும் ஆன்லைன் தேர்வு நடத்தி சான்றிதழ் தந்து  அரசுப்பணிக்குத் தயார் செய்து வருகிறோம்.

புகைப்படக்கலையில் ஆர்வம் உருவானது 

எப்படி ?

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்துவோம் என்ற நோக்கத்தில் காலையில் நாங்கள் குடியிருக்கும் பகுதியைச் சுற்றி நடைபயணம் செலவேன். அப்போது நம்மைச் சுற்றி இவ்வளவு பறவைகளா என வியக்கும் அளவிற்கு பெயர் தெரியாத பல பறவைகளைக் கண்டேன். அவற்றை எல்லாம் புகைப்படங்களாக எடுத்துள்ளேன். மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவது இயற்கையைப் படம் பிடிக்கும் புகைப்படக் கலை.



தங்களது 22 ஆண்டுகால ஆசிரியப்பணிக்குக் கிடைத்த அங்கீகாரங்கள் பற்றி ...

நமது பணியைச் சிறப்பாகச் செய்யும் போது அதனை ஊக்குவிக்கும் விதமாக சில விருதுகள் அவ்வப்போது நம்மைத் தேடிவரும். அந்தவகையில் இதுவரை 15 க்கும் மேற்பட்ட விருதுகளால் சிறப்பிக்கப்பட்டுள்ளேன். 2011 ல் முதன்முதலாக சிறந்த அரசுப்பணியாளர் என்ற விருது ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அன்றைய ஆட்சியர் திரு.உ.சகாயம் இ.ஆ.ப.அவர்களால் வழங்கப்பட்டது. மதுரை நகைச்சுவை மன்றத்தின் சார்பில் ' சாதனையாளர் விருது ' வழங்கப்பட்டது. இராம்கோவின்  செல்லமே இதழ் ' சூழல் போற்று ' என்ற விருது வழங்கிச் சிறப்பித்தது. தினமலர் நாளிதழின் லட்சிய ஆசிரியர் விருது , இந்து தமிழ் நாளிதழின் அன்பாசிரியர் விருது , சிறந்த அரசுப்பணியாளர்  என இரண்டாவது முறையாக மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப.அவர்கள் வழங்கிய விருது , மதுரை இலக்கிய மன்றம் வழங்கிய நன்னெறி ஆசிரியர் விருதுஎனச் சொல்லலாம்.

மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. 

நல்லதொரு வாய்ப்பு நல்கியமைக்கு மிக்க நன்றி  ஐயா. நெல்லைகவிநேசன் அவர்களுக்கும் இணையதள நண்பர்களுக்கும் இதயபூர்வமான நன்றி.

சாதனைச் சிகரத்தின் முகவரி

மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் ,

 இளமனூர் ,

 மதுரை

 அலைபேசி- 97861 41410


------------------------







Post a Comment

புதியது பழையவை

Sports News