வெற்றியின் நாயகன் தேசிய நல்லாசிரியர்...--- டாக்டர். பா.ஜெயச்சந்திரன்,
வெற்றியின் நாயகன்

தேசிய நல்லாசிரியர்...

டாக்டர். பா.ஜெயச்சந்திரன், M.A., M.Ed., M.Phil., D.Litt.,


ஆசிரியப் பணியில் அற்புதமான சாதனைகளை புரிந்து, நன்றி உணர்வோடு என்றும் தனது உறவுகளையும், நண்பர்களையும் பேணிவரும் நல்லாசிரியர் டாக்டர்.ஜெயச்சந்திரன் அவர்களோடு ஒரு நேர்முகம்உங்கள் பொற்கால வாழ்க்கையின் ஆரம்பம் எப்படி?

தேனி மாவட்டம், சின்னமனூர் வட்டம், வெள்ளையம்மாள்புரம் என்ற குக்கிராமத்தில் வாழ்ந்து, தங்களுக்கு ஏழு வாரிசுகளைப் பெற்றெடுத்து, என்னுடைய தாத்தா உலகத்தேவன் இரண்டாவது மகனாக, பூச்சம்மாள் என்ற வாழ்ந்த பெண் தெய்வத்தைக் கரம் பிடித்து, உலகம் போற்றும் உத்தமனாக வாழ்ந்தார். அதுதான் அன்றைய பொற்கால வாழ்க்கை.

இனிதான, இரண்டு மக்கட் பேறு பெற்று, ஒன்று என்னுடைய தந்தை பாண்டித்தேவனாகவும், அவருக்கு வாழ்க்கைத்துணை நலம் காண வந்த பவுன்தாய் (தங்கமாக) (தாயாக) வாழும் வரலாறாக... இருவரும் ஐந்து பிள்ளைகளைப் பெற்றுப் பார் போற்றும் சான்றோர்களாக மாற்றிய, எங்களது பெற்றோர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், எமது தந்தை உலகமறிந்த உத்தமனாக, தான் சொன்ன சொல் தவறாத, வெண்மை உடையைக் காலத்திற்கும் அணிந்து, காங்கிரஸ் பேரியக்கவாதியாக, ஊரே வியந்து பேசும் பஞ்சாயத்துத் தலைவராக, இன்று வரை தனது சந்ததிகளை வாழவைக்கும் தெய்வப்பிறவியாக.... என எழுதிக்கொண்டே போகலாம்...

எனது தாய் உழைப்பைத் தவிர வேறொன்றும் அறியாத பாசமலர். கணவனுக்கு ஒரு நல்ல மனைவியாக, குடும்பத்திற்காக; ஒளிவிளக்காக, பிள்ளைகளுக்கெல்லாம் பாசத்தையும்; நேசத்தையும் ஊட்டி வளர்த்த அருளரசி. அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, “கல்வியே ஒரு அழியாத செல்வம்” என்று, உணர்ந்த ஞானி எனது தந்தை நான்கு ஆண் பிள்ளைகளையும், ஆளப் பிறந்த சான்றோராக மாற்றி, பாசத்திற்கு ஒரு அன்பு மகளையும் வளர்த்து உருவாக்கி, ஊர் போற்றும் கல்விக் குடும்பமாக, பார் போற்றும் கடையேழு வள்ளல்களாக, பிறருக்கு உதவும் வாரிசாக எப்படி வாழவேண்டும் என்றும் கற்றுத்தந்தார். வீரத்தின் விளைநிலம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வழி வந்த, எங்கள் தந்தை, தேசியம், தெய்வீகம் இரண்டையும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்து, எங்களை எல்லாம் வாழவைத்து, சமூகக் கட்டுப்பாடுகள், பண்பாடு, ஒழுக்கம் மாறாத பற்று என்ன என்பதை உணர்த்தி, “வெள்ளையம்மாள்புரம்” என்ற கிராமத்தை ஒரு "மாடல் வில்லேஜ்" ஆக மாற்றியதில், எளிமையாக வாழ்ந்து காட்டிய என்னுடைய தந்தையின் பங்கு அளவிடற்கரியது .

ஐவரில் மூத்தவர் திரு. P.தெய்வராஜ் - மல்லிகா நீதியரசராகவும், இளையவர் (நான்), அடுத்த இளையவர் திரு. P.பாண்டியராஜன் - காளீஸ்வரி பள்ளி ஆசானாகவும், வங்கியை ஆளுமையைக் கொண்ட திரு. P.ஸ்ரீமுருகன் - கவிதா தம்பியும், பாசத்திற்கு ஒரு தங்கையும் திருமதி. P.வனிதா - இராமச்சந்திரன்  கொண்ட  குடும்பம்.

எங்கள் குடும்பத்திற்குப் பெருமை சேர்க்கப் படித்து, வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொண்டு, கணவனே கண்ணெனக் கொண்டு வாழ வைத்து, அனைவரும்  பிள்ளைகளோடும், பேரப்பிள்ளைகளோடும், பூட்டன், பூட்டி, பாட்டன், பாட்டி, தாத்தா, பாட்டி, தாய், தந்தையரின் மற்றும் பெரியோர்களின் ஆசியோடு இன்றும் வாழ்ந்து காட்டும் கல்விக் குடும்பம். இன்று வரை, குடும்பத்தைப் பிரியாத வரம் கொடுத்த, பெற்றோர்களுக்கும், முன்னோர்களுக்கும் இந்த நூல் சமர்ப்பணம். அவர்கள் விட்டுச் சென்ற சொத்து எங்களுக்குக் கல்வி ஒன்று தான். 

“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் 

ஞாலத்தின் மாணப் பெரிது”         ~ என்பது குறள் வாக்கு

ஆன்றோர்கள் போட்ட பிச்சை தான், இன்று எங்களது சந்ததிகளைக் கடல் கடந்து, செல்லக்கூடிய தகுதியைப் பெற்றுக் கொடுத்தது. வாழும் வரலாறாகத் திகழ்ந்த அனைவருக்கும் என்றென்றும் கோடான கோடி நன்றியைக் காணிக்கையாகச்  செலுத்துகிறேன்.உங்கள் பள்ளி கல்வி பற்றி......

ஒரு மனிதனுக்கு எல்லாச் செல்வங்களும் இருந்தாலும், கல்விச் செல்வம் தான் எதிர்காலச் சந்ததியை மாற்றும் என்ற கோட்பாட்டுக்கிணங்க, என்னுடைய பள்ளி வாழ்க்கை, எங்கள் வெள்ளையம்மாள்புரம் கிராமத்தில் உள்ள, அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் ஆரம்பமானது.

எவ்வளவோ தலைமுறைகளைக் கண்ட பள்ளி, எத்தனைக் கல்வி பெருமக்களை, ஆசிரியப் பணியிலிருந்து, அரசுப் பணி, ஆட்சிப் பணி வரை பல்வேறு நிலைகளைக் கண்ட புதுமைப் பள்ளி. பழமை வாய்ந்த பள்ளி, ஒழுக்கம் கட்டுப்பாட்டிற்குப் பேறு பெற்ற பள்ளி, இவற்றுக்கெல்லாம் காரணமாக ஆசான்களை, இந்த நேரத்தில் நினைவு கூர்வது மிகவும் சாலச் சிறந்ததாகும்.

திருமிகு. பால்சாமி தலைமை ஆசிரியர், திருமிகு. தங்கத்தாய் ஆசிரியை, திருமிகு. ஆத்தியப்பன் ஆசிரியர், திருமிகு. சிவன் காளை ஆசிரியர், திருமதி. செல்லத்தாய் ஆசிரியை இவர்களின்றி, நாங்கள் கிராமத்தை விட்டு வெளி உலகத்திற்கு வந்து இருக்க முடியாது. இதுதான் அடிப்படைக் கல்வி, ஆரம்பக் கல்வி, எழுத்து வடிவத்தை ஏட்டில் எழுத வைத்த ஆசான்களைத் தாள் பணிந்து வணங்குகிறேன்.

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு

மாடல்ல மற்றை யவை”.      ~ குறள் என்பார்கள்...

எங்கள் கிராமத்தில் வேளாண்மை தான் பெரிது என எண்ணி, என்னை அந்தப் பணிக்கு ஆயத்தப் படுத்த நினைத்த கணத்தில், வகுப்பில் முதல் தரத்தில் விளங்கிய காரணத்தால், அடுத்து சிறப்பாக கல்விப் பயணம் தொடங்கியது. இல்லையெனில் இடைநிலைக்  கல்வியிலேயே  எனது  கல்விப்  பயணம்  இடைநின்று  இருக்கும். 

இதைத் தொடர்ந்து உயர்நிலைக் கல்வி ஆர்வத்தை, மேலும் தூண்டும் வகையில், அன்று எனக்கு ஓடைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு. ஜேசுதாஸ் அவர்களின் நேரந்தவறாமை, கட்டுப்பாடு, சுயபண்பாடு,  ஒழுக்கம், மாணவர்கள் மீது காட்டிய அக்கறை, இவையனைத்தும் எனக்கு மேலும் படிக்கும் ஆர்வத்தை வலுவூட்டியது. இதையும் தாண்டி, ஆசிரியர்கள் திரு. ஜெயபால், திரு. வெள்ளையாண்டியன், திரு. சக்திவேல், தமிழாசிரியர் திரு. அரங்கசாமி, இவர்களின் உந்துதல், ஊக்கம் அனைத்தும் பள்ளிக்கல்வியில்  ஒரு  உச்சத்தைத்  தொட  வைத்தது.

“தாமின் புறுவ(து) உல(கு) இன்புறக்கண்டு 

காமுறுவர் கற்றறிந் தார்”.       ~ குறள் என்பது போல... 

இன்று எத்தனையோ தனியார் பள்ளிகள், இன்டர்நேசனல் பள்ளிகள் இருந்தாலும், இந்த அரசுப் பள்ளிகளில், ஆசிரியர்களின் நேர்த்தியான கற்பித்தல் முறை, வடிவமைத்தல், ஆர்வமூட்டல், ஒரு நல்ல மாணவனாக, ஒழுக்கமுள்ள மனிதனாக, சமூகத்தில் வாழும் நெறிமுறைகளைக் கற்றுக் கொடுத்து, எதிர்காலத்தில் ஒரு தேசிய நல்லாசிரியராக மாறுவேன்  என்று அன்றே வித்திட்டார்களோ! என்று நினைக்குமளவுக்கு என்னை மாற்றி, அவர்களையெல்லாம் இன்று வரை வாழ்வில் முன் உதாரணமாக “Role Model” களாகவே, எனக்கு விளங்கிய ஆசான்களுக்கு தேசிய விருதினைச் சமர்ப்பித்து வணங்குகிறேன். 

பள்ளிப்பணிக்கு வரும் ஆசிரியர்களின் வருகையை இத்தனை மணி என்பதைச் சொல்லிவிடலாம், ஒரு பேருந்து நேரத்தைக் கூடச் சொல்லிவிடலாம், வரும், வராது என்றளவுக்கு பணிபுரிந்தார்கள் என்றால், அந்த பண்பினை (Punctuality), இன்று வரை 100% விழுக்காடு தவறாது நான் கடைப்பிடித்து வருகிறேன்  என்பதே  உண்மை.


உங்கள் கல்லூரி வாழ்க்கை பற்றி...

பள்ளிக் கல்வியில் இறுதிநிலை வகுப்பில் ஐந்தாவது தரத்தில் வெற்றி பெற்றதால், எங்கள் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை .

“உலகம் யாவையும் தாமுளவாக்கலும் 

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா 

அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் 

அன்னவர்க்கே சரண் நாங்களே”. 

~ கம்பரின் முதல் இயல் வாழ்த்து. 

இந்தப் பாடலை இசையோடு, நயத்தோடு பாடிக்கற்றுத் தந்த பேராசிரியப் பெருமக்களை, நினைவுகளைக் கூர்ந்து, கல்லூரிக் கனாக்காலம், என்றும் பசுமை மாறா நினைவுகளோடு, அடியெடுத்து வைத்த முதல் படி, “மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி”வளாகம் (1976 - 1980) .

இந்தக் கல்லூரியின் பெயரைக் கேட்டாலே, படையே நடுங்கும், கல்லூரி முதல்வர் இராணுவக் கட்டுப்பாட்டு நாயகர் திரு. சக்திவேல், கல்லூரி விடுதி வார்டன் சிவலிங்கம், வழிகாட்டலில் அறிவியலை விருப்பப் பாடமாக எடுத்துக் கணிதத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்று, தந்தையின் கனவு ஒரு "இன்ஜினியர்" என்ற நினைவுக்கு மாற்றாக, நான் ஒரு தமிழ் மாணவன் என்ற காரணத்தால், வாய்ப்பு தட்டிப் போக, அன்று இளங்கலைப் பட்டம் பெற்றேன் (வேதியியல் விருப்பப் பாடம்).

கல்லூரி வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவம் வினோதமானது. மீண்டும் இளங்கலையில் பெற்ற பட்டத்தின் மதிப்பால் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு கிடைக்க, கோவையில் வேளாண்மைக் கல்லூரியில் சேர்ந்து, ஒரே மாதத்தில் இடைநின்று விட்டேன். ஒருவேளை பொறியியல் பட்டம் பெற்றிருந்தால், எனக்கு மட்டுமே எதிர்காலம் ஒளிமயமாக இருந்திருக்கும். ஆனால் அன்றோ நான் ஆசிரியராக மாற வேண்டும் என்பது, இறைவனின்  சித்தம்  அதனை  மாற்ற  இயலாது. 

அதற்கு முன்னிலையாகத் தானோ, என்னவோ? உயர்கல்வி 1980 முதல் 1982 வரை வக்பு வாரியக் கல்லூரியில், ஆங்கில இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்தேன். அறிவியல் கற்று, விஞ்ஞானியாக, பொறியாளராக் கனவு கண்ட நான், அதற்கு வழியாக; ஆசிரியர் பணி தான் எனக்குப் பணிக்கப்பட்டது என்று நினைத்து, விடாமுயற்சியும் உற்சாகமும் இணைய எப்படியோ தேர்ந்து விட்டேன். அதற்குக் காரணம் சிறந்த ஆங்கிலத்  துறைத்  தலைவர்  பேராசிரியர்.  அப்துல்  கபூர்  அவர்களையே  சாரும். 

வாழ்வின் ஒளி; எமது எதிர்கால மாற்றத்தின் நாயகன், அப்துல்  கபூர் அவர்களின் வகுப்பு  என்றால், ஆங்கில இலக்கியமும், மொழித் திறனும் "மடை திறந்த வெள்ளம் போலக் கொட்டும்". அதுவே நான் உயர வழி வகுத்தது, பல ஆங்கிலத்துறைப் பேராசிரியர்கள், ஆங்கில உச்சரிப்பு எப்படி என்பதை உணர்த்திய விதம், ஆங்கிலத்தில் சிறந்த பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதுவே கல்லூரியில் மொழி உச்சரிப்பு என்ற தலைப்பில், முதல் மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 

பாராட்டுதற்குரிய பேராசிரியப் பெருமக்கள் காட்டிய வழியும், உந்துதலும், பிற்காலத்தில் ஆசிரியர் பணியாற்றுவதற்குப் பேருதவியாக இருந்தது என்றால் மிகையாகாது. "ஆசிரியப்பணி ஒரு அறப்பணி. அதற்கே உன்னை அர்ப்பணி" என்ற கூற்றுக்கிணங்க ஒரு தனியார் பள்ளியில் சேர்ந்தேன். ஆரம்பக் காலத்தில் மிகவும் நெருக்கடியாக உணர்ந்தேன். காரணம் என்னவென்றால், ஒரு அறிவியல் மாணவன், ஆங்கில மாணவனாக, நல்ல ஆசிரியராக மாறுவது என்பது மிகவும் கடினமானதாகக்  கருதினேன். 

உங்கள் ஆசிரியப் பணி பற்றி...

    முதலில் 1985 இல் மதுரை முகவைத் திருமண்டிலத்தின் கீழ் திருவில்லிபுத்தூர் சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்தேன். நான் அப்போது ஆசிரியராக மாறுவேன் என்று சற்றும் நினைத்தது கிடையாது. அங்கு எனக்கு கிடைத்த முதல் அனுபவம், பெரியவர் திரு. சுவாமிதாஸ் என்ற மூத்த ஆங்கில ஆசிரியர், எனக்குக் கொடுத்த வழிகாட்டல், உற்சாகம், அவரிடம் கற்ற அனுபவம். அவரிடம் பெற்ற காலந்தவறாமை, வகுப்பில் மாணவரின் மேல் கவனம், ஆங்கிலம் கற்பிக்கும் முறை, சிறப்பாக என்னை உயர வழி நடத்தியது. இன்றும் எனது பணியின் சிறப்புகள், நான் பெற்ற விருதுகள் அனைத்தும் ஆன்றோர்களுக்கு அர்ப்பணித்து வணங்குகிறேன்.நீங்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றது பற்றி......

    ஓராண்டுக்குப் பின் மீண்டும் அதே நிர்வாகத்தின் கீழ் மதுரையில் அமெரிக்கன் கல்லூரி (ஏ.சி.) மேல்நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்து 2017ஆம் ஆண்டு பணி நிறைவு பெற்றேன். 32 ஆண்டுகள் ஆசிரியப் பணி, பள்ளியில் சாதித்ததை விட, என்னை ஒரு சமூக ஆர்வலராக மாற்றியது. நாட்டு நலப் பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்.) என்ற அமுதசுரபி அமைப்பு வெகுவாக மாணவர்களிடமும், ஆசிரியர்கள் மத்தியிலும், கல்வித்துறையிலும், பல்வேறு  படிநிலைகளைப் பெறுவதற்கு உயர்த்தியது என்றால் அதுவே பெருமை...  சிறப்பு...  உயர்வு...

இந்த வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த, எங்களது பள்ளி நிர்வாகம், மதுரை முகவை திருமண்டில பேராயர் அவர்கள் மற்றும் திருமண்டில அதிகாரிகள் அனைவருக்கும் எமது நன்றியைப் பாதம் பணிந்து சமர்ப்பிக்கிறேன். 

"பரந்த பொருளெல்லாம் பார்அறிய வேறு 

தெரிந்து, தினந்தோறும் சேரச் சுருங்கிய 

சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல் 

வல்லார் ஆர் வள்ளுவர் அல் லால்" 

என்ற பெரியோரின் வாய்மொழிக்கிணங்க, எமது ஆசிரியப் பணி, சொல்லால், ஒளியால், புலமையால், பொருள் விளங்கச் சொல்லி, மாணவர்களை வழிப்படுத்தி, தன்வசப்படுத்தி, ஆங்கிலம் என்பதை "அல்வா" சாப்பிடும் விதமாக எளிமையாகச் சொல்லி, எனக்குப் புகழ் சேர்த்த எனது அருமை மாணவர்களை இன்றும் நினைவு கூர்கிறேன். இந்த அர்ப்பணிப்புத் தான் முதலில் தமிழக அரசின் நல்லாசிரியர்.  “டாக்டர். இராதாகிருஷ்ணன்” விருது பெறுவதற்கு பெரிதும் உதவியாக இருந்தது .

ஆசிரியப் பணியில் 32 ஆண்டுகள் பணிபுரிந்தாலும், எத்தனையோ மாணவர்களுக்கு ஏணிப்படிகள் ஆக இருந்தாலும் சிறந்த ஆசிரியராக மட்டும் இல்லாமல், சமூகப் பணியில் 2005 ஆம் ஆண்டு முதல் என்னை ஈடுபடுத்திக் கொண்டு, N.S.S. என்ற திட்டம் எதிர்கால இளைஞர்களை மாற்றும் ஒரு பெரிய சக்தி என்பதைக் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டு, அப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டேன். 


உங்கள் கல்விப்பணி சாதனைகள் பற்றி..

கல்விப் பணியில் பல ஆண்டுகள் செய்த செயல்பாடுகள் என்னைப் பல்வேறு திசைகளில் சாதனை புரியத் தூண்டியது. குறிப்பாக “தினமலர் நாளிதழ்” ஆண்டுதோறும் நடத்தும் “+2 மாணவர்களுக்கான “ஜெயித்துக்காட்டுவோம்” என்ற நிகழ்ச்சி மதுரை மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பலன்பெறும் வகையில் “+2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?” என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆங்கிலப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு நான் மாணவர்களுக்கு வழிகாட்டுதல், நெறிமுறைகள் வழங்கி, எதிர்கால இளைய சமுதாயத்திற்கு ஆங்கில மொழித்திறன் வளர்க்கப் பேருதவியாக இருந்தது. அதில் பங்கேற்ற பல்லாயிரம் மாணவர்கள் இன்றுவரை பல்வேறு பணிகளில் வேலைவாய்ப்பு பெற்று சாதனை புரிந்து வருகிறார்கள் என்பதைப் பெருமையாகக் கூறிக்கொள்கிறேன்.

என்னுடைய அர்ப்பணிப்பு, ஈடுபாடு, களப்பணி, இளைய சமுதாயத்தைப் பற்றிய சிந்தனை, எதிர்கால இந்தியா, சமூக மேம்பாடுகள் எல்லாம் என்னை வேறு திசைக்கு  இட்டுச்  சென்றது  என்றால்  மறுக்க இயலாது... மறைக்க முடியாது... எதிர்காலத்தின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய் மாறியது.

நாட்டு நலப்பணித் திட்டத்தில் 15 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளை வகித்தபோது ஒவ்வொரு நிலையிலும் எனக்கு ஆலோசனை வழங்கிய, மாவட்டத் திட்ட அலுவலர் தேசிய நல்லாசிரியர் அண்ணன் திரு. எம்.முத்துராமலிங்கம் அவர்களை, இன்றளவும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. அவருடைய எளிமை, இனிமையான பேச்சு, உயர்ந்த சிந்தனை, சாதனைகளுக்கு வித்திட்ட பல்வேறு ஆற்றல்கள், இவைகளெல்லாம் என்னை என்.எஸ்.எஸ்-இல் மேலும் அர்ப்பணிக்கத் தூண்டியது. இந்த சேவையே நான் சிகரத்தைத் தொட  வழிவகுத்தது. 

ஒருவேளை, நான் வெறும் பள்ளியில் ஆங்கிலத்துறை ஆசிரியராக மட்டும் இருந்திருந்தால், நான்கு சுவற்றுக்குள், வகுப்பறைக்குள் உள்ள இளைஞர்களுக்கு மட்டுமே நல்ல கல்வியைக் கொடுத்திருக்க முடியும். ஆனால், என்.எஸ்.எஸ். பேரியக்கம், எதிர்கால இளைய சமுதாயத்தை, மாற்றும் சக்தியாக இருக்கும் என்பதைக் கனவிலும் நினைக்கவில்லை. இளைஞர்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை விட, அதன் செயல்  பெரும்  மாற்றத்தை  தந்தது. 

பல்வேறு பணிகளுக்குப் பேருதவியாக, பள்ளிக் கல்வித்துறையில் எனக்கு வழிகாட்டியாக விளங்கிய, இயக்குனர் திருமதி. உஷாராணி,     இயக்குனர் டாக்டர். நாகராஜ முருகன், இணை இயக்குனர்கள் திருமதி. ஸ்ரீதேவி, திரு. பொன் பொன்னையா, திருமதி. அமுதவல்லி, முதன்மைக் கல்வி அலுவலர் திரு. ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி, உள்ளிட்ட துறைசார்ந்த அனைவருக்கும் எமது பணிவான இதயப்பூர்வமான நன்றிகளைத்  தெரிவித்துக்  கொள்கின்றேன். 

“எனக்காக அல்ல நமக்காக” (Not me, But you) என்ற (என்.எஸ்.எஸ்.) நாட்டு நலப்பணித் திட்டத்தின் குறிக்கோள் தான், பல்வேறு சிந்தனைகளையும், சிகரங்களையும் தொட வித்திட்டது என்றால் அது மிகையாகாது. இந்தக் குறிக்கோள் தான் தேசிய நல்லாசிரியர் ஆவதற்கு வித்திட்டது என்பதைப் பெருமையாகக் கூறிக் கொள்கிறேன்.

“அறம் முதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம் 

திறமுறத் தேர்ந்து - தெளியக் குரல் வெண்பாப் 

பன்னிய வள்ளுவனார் பால்முறை நேர்ஒவ்வாத 

முன்னை முதுவோர் மொழி”. 

என்ற “மூத்தோர் சொல் மந்திரம்” எனக் கருதி, “எமது நாட்டு நலமே” என உரக்கச் சொல்லி, நாட்டின் பெருமையையும், இளைஞர் நலத்தையும், கருவாகக் கொண்டு பணிசெய்து, சாதனைகளையும்,சிகரங்களையும் அடைய, இறைவன் கொடுத்த அருட்கொடைக்கு என்றென்றும் நன்றியுடையவனாக, நாங்கள் வாழ்வாங்கு வாழ,  இறைவன்  எனக்கு  தந்த  அருள்  என,  எண்ணி  மகிழ்கிறேன். 


உங்கள் வெற்றிக்கு காரணமான நண்பர்கள் பற்றி...

இந்த நெடிய பயணத்தில், என்னுடன் இணைந்து, பல்வேறு வழிகளில் பங்காற்றிய  நண்பர்களை,  இந்த  நேரத்தில்  நினைவு  கூர்வதே  சாலச்சிறந்தது. 

திரளான உற்சாகமூட்டி, அரவணைத்து அழைத்துச் சென்ற, நான் பணியாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஜி.கலைமணி அவர்களையும்,  என்றும்  இணை  பிரியாத  சகோதரரும்,  ஆசிரியருமான      திரு. பிரைட் இன்பராஜ் அவர்களையும், இவர்களோடு இணைந்து, பல்வேறு வெளியிடங்களில், கற்றறிந்த சான்றோர்கள் மத்தியில், என்னை சிறந்த முறையில் அறிமுகம் செய்து, இன்றளவும், உயிரோடு உயிராக, உணர்வோடு உணர்வாக, கூடவே பயணித்துக் கொண்டு இருக்கும் பாசத்துக்கும், நேசத்திற்கும் உரிய தமிழ்ச்செம்மல் முனைவர் வை. சங்கரலிங்கனார் அவர்களையும், தமிழக அளவில் பல்வேறு துறைகளில் கற்றறிந்த பெருமக்கள் பலர். அவர்களில் முதன்மையான, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரிப் பேராசிரியர், பண்பாளர், மரியாதைக்குரிய டாக்டர். எஸ்.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன், பல்வேறு வழக்குகளுக்கும், சொற்போர் நடத்திப் புத்தகம் வடிவில் விடைகாண வழி செய்த சேலம் வழக்கறிஞர் டாக்டர். ஜெயராஜன் அவர்களையும், “இசையால் வசமாகா இதயமெது” என்ற வைர வரிகளுக்கு ஒப்பாக சுங்கத்துறை கண்காணிப்பாளர் நன்னிலம் டாக்டர். கேசவன் அவர்களையும், தத்தமது நட்பு வட்டாரங்களில், அறிஞர் பெருமக்கள் பலரையும் அறிமுகம் செய்து வைத்து, அன்பு பாராட்டி, நட்புறவுகளை வளர்த்துக் கொள்ள, என்னைப் பல்வேறு நிகழ்வுகளில் மேடையேற்றி, அலங்கரித்த ஆன்றோர்கள் அனைவரையும் தற்போது  கரம்,  சிரம்  தாழ்த்தி  வணங்கி  மகிழ்கிறேன். 
உங்கள் குடும்ப வாழ்வு பற்றி......

எமது தந்தை, ஒரு குறிக்கோளுடன் திட்டமிட்டு வாழ்ந்தவர். எங்கள் குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம். கூட்டு என்பதற்கு பல்வேறு இலக்கணங்கள் இருந்தாலும், 'பிரிவு' என்ற சொல், எப்பொழுதும் இல்லை என்ற, இயற்கை நியதிக்கு மாறாக, எமது தந்தையார் வாழும் வரலாறு, நான்கு மகன்களும், ஒரு தங்கையும் ஒன்றாகச் சேர்ந்து இருக்க வேண்டும், வாழ வேண்டும் என்பதே வாழ்க்கை  இலக்கணம் என்பதைக் கற்றுத்தந்தார். 

எமது தந்தை 'ஆசாரக்கோவை' படித்தவர் எப்படி வாழவேண்டும்? என்று தானும் வாழ்க்கைக்கு புதிய இலக்கணம் வகுத்துக் கொண்டார். எதிரியையும், எதிரில் வரும்போது  நண்பனாகக்  கொள்ள  வேண்டுமென்ற  குணம்  கொண்டவராகத் திகழ்ந்தார்.

தந்தையார் எங்களுக்கு கற்றுக் கொடுத்த அனைத்தையும், இன்றுவரை நாங்கள் ஐவரும், வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகின்றோம். அதனால் தான் “வெள்ளையம்மாள்புரம்” என்ற குக்கிராமத்தில் தெய்வத்திரு உ.பாண்டித் தேவர் பிள்ளைகள் என்றால், ஒரு மதிப்பும் மரியாதையும் இன்றளவும் இருந்து வருகிறது. அதிகமாகப் புத்தகங்களை வாசித்து சுவாசிக்கும் பழக்கம் கொண்டவர். 

"நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு" என்ற  அவ்வைப் பாட்டியின் வைர வரிகளுக்கிணங்க, எமது தந்தை கற்ற, பயின்ற, சொல்லிய மந்திரச் சொற்கள் அனைத்தும், பிற்காலத்தில் எனக்குப் பயன்பட்டது. எனது இல்வாழ்க்கைப் பயணத்தின்  தொடக்கம்,  அருமையான  நிகழ்வு. 


 எனது இல்லாள், மனையாள், விருந்துக்கும், உபசரிப்பிற்கும், குறைவில்லாது, எல்லோரையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, சாதனைப் பெண்மணி, எனது மனைவி பிறர் உண்ணும் அழகைப் பார்த்து மகிழ்பவர், திருமதி. ஜெ. கஸ்தூரியை 1983 ஆம் ஆண்டு கரம் பிடித்தேன்.  அப்போது  வாழ்வில்  வானவில்லாய்  வந்ததோர்  புது  வசந்தம். 

ஒரு மெல்லிய தென்றல், வசந்த மேகங்களைச் சுமந்து வந்தது போல, எடுத்த வேலையை செவ்வனே செய்து முடிப்பதில், அவருக்கு நிகர் அவரே. 

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்ற வள்ளுவரின் வரிகளுக்கிணங்க தமதுமண், தம்மக்கள், அறிவுடைமை என்ற மாநிலத்து வரிகளுக்கு, இலக்கணமாக இல்வாழ்க்கையை, மதுரையிலேயே, அன்னை மீனாட்சிசுந்தரேசப் பெருமானின் அருளாலே, எங்களது இனிய இல்லற வாழ்க்கையை உயர்வுடன் ஆரம்பித்தோம். இத்தளம்; அன்றே சொர்க்கத்தில் எமக்கு எழுதப்பட்டு, இல்வாழ்க்கை பணிக்கப்பட்டதோ, எனத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட வாழ்க்கையில், மூன்று குழந்தைச் செல்வங்களைப் பெற்று, பொருட்செல்வத்தை விட அருட்செல்வம் தான் பெரிது என, எங்களது தந்தையாரின் உபதேச மொழியை, இன்று வரை வாழ்க்கையில், கடைப்பிடித்து வருகிறோம். அதனால் தான் இன்று வரை அனைவரும் ஒற்றுமையாக,  ஒரே  கூட்டுக்  குடும்பமாக  இருந்து  வருகிறோம். 

வாழுமிடம் வெவ்வேறாக இருந்தாலும், உணர்வுகள் ஒன்றே என்பதை கற்றிருக்கிறோம். இந்த உணர்வு, எங்களது மொத்தக் குடும்பங்களின் குழந்தைச் செல்வங்களிடமும் காண முடிகிறது. இதுதான் எங்கள் பெற்றோர்கள் காட்டிய வழி. அதுமட்டுமா? எனக்கு வாழ்க்கைப்பட்டு வந்த மனைவியாள் இல்லத்திலும், இதே  நிலை  தான்  என்றால்  மிகையாகாது.

எனது மாமனார் குடும்பத்திலும் ஐவர்கள் தான். 

"நிலத்தில் கிடந்தவை கால்காட்டும், காட்டும் 

குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்"

வாய்மைக்கிணங்க, நல்ல குடும்பத்தில் பிறந்த, நல்சொல் குடிமகனாக, இம்மதுரையில் வாழ்ந்து, தம்மின் தம்மக்களுக்கு நல் வாழ்க்கை அமைத்துக் கொடுத்த வள்ளல் பெருமான், இல்லையென்று சொல்லாத..., இன்று வரைக்கும் உயர்வுக்குரிய பெயர் பெற்ற பெருமைமிகு குடும்பம். இவ்விரண்டு சம்பந்திகளும், இணைபிரியாச் சம்பந்திகளாக விளங்கிய காரணத்தினால் தான், இன்று வரை,  இரு  குடும்பங்களின்  மாண்புகளும்  போற்றிக்காக்கப்படுகின்றன. 

நான் பெற்ற செல்வங்களில் ஒன்று, J.சுகன்யா - C.விபின் B.E., (USA) அறப்பணிகளில் இன்றும் அறிவுச்சுடராக விளங்கச் செய்யும், ஆசிரியப்பணிக்கும், மற்றவரில் ஒருவர், J.சிந்துஜா - C.சுந்தரராஜ் ஆஸ்திரேலியா நாட்டிலும், இளையவர் ஒருவர், J.அருண்பாண்டியன் - S.சுவாதி தேவி சென்னையில் கணிப்பொறித் துறையில் ஆளுமைகளை வெளிப்படுத்தித் திறம்படப் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். அன்பு, பாசம், நேசம், எளிமை, இனிமை இன்னும் எத்தனையோ பண்புகள் கொண்ட எங்கள் குழந்தைகள், திருமண பந்தத்தினுள் நுழைந்து, பேரப் பிள்ளைகளின் மழலைக்காலம் முதல், இன்று வரை அன்பு குறையாத இளைய தலைமுறைகளைப் பெற்ற பேறு, எல்லாம் வல்ல இறைவன்  எங்களுக்குக்  கொடுத்த  வரம். 

இதற்கெல்லாம் முக்கிய காரணம், எமது பணியின், ஒவ்வொரு படிக்கட்டையும், வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றிய பெருமை, எனது மனைவியையே சாரும், என்பதை மிகப் பெருமிதமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், நான் கற்ற கல்வியை விட, பெற்ற கல்வியும் அனுபவமும் தான் எங்களை வாழ வைத்தது...

"ஆற்றான் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 

நோற்பாரின் நோன்மை உடைத்து". -குறள் 

அறவழியில் இல்வாழ்க்கை நடத்துவது, தவம் செய்ததைக் காட்டிலும் பயனுடையதாகும். எனக்குக் கிடைத்த இல்லாள் திருமதி. J.கஸ்தூரி தந்த வாழ்வு நாம்  பெற்ற  தவத்தின்  தவமாகக்  கருதுகிறேன்.

முதல் முதலில் தமிழக அரசு தந்த டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது வாங்குவதற்கு வித்திட்டதும் அவர் தான். அத்தனையையும் தாண்டிப் பள்ளி நலம், வீட்டு நலம், நாட்டு நலம் இவற்றையெல்லாம் பேணுதல் மூலமாகவே, உயரிய நிலைக்குச் செல்ல முடியும் என்பதை எமது உள்ளுணர்வு எமக்குக் காட்டியது. அதுதான் எமக்கு தேசிய விருது பெற வித்திட்டது.

 உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?

வாசித்தல், நேசித்தல், யோசித்தல் இவைகள் தான் என்னைச் செம்மைப் படுத்தியது. எந்த ஒரு செயலில், ஒரு மனிதன் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கிறானோ, அவனுக்கே எதிர்காலத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு  ஒளியாக  எனக்கு  தேசிய  விருது  கிடைத்ததே  இன்று  ஒரு  அடையாளம். 

அத்தனை இளைஞர்களையும் வசப்படுத்தி, இந்தச் சமூகத்தில் அறிவுடைய மனிதனாக மாற்றுவதை விட, இந்த மாநிலத்தின் தலை சிறந்த குடிமகனாக, மாற்றுவது தான் என்.எஸ்.எஸ். இன் மாபெரும் நோக்கம். அவர்கள் அறிவைப் பெருக்கிக் கொண்டு, எதிர்கால வாழ்க்கையை அமைத்துக்கொள்ள, நாட்டு நலப்பணித் திட்டம்  ஓர்  அடித்தளம்.

குடும்ப அனைத்து உறவுக்கும், வாழ்க்கைக்கும் இதனை ஓர் அடித்தளமாகக் கருதுகிறேன். இன்றுபோல் என்றும் நாட்டிற்கும், வீட்டிற்கும் எக்காலமும் உயிர் மூச்சு உள்ளவரை பெருமை சேர்ப்பேன் என்று இதன் மூலம் உறுதி கூறுகிறேன். 

எங்களின் குடும்ப மாண்பை, எமது பேரப்பிள்ளைகள் வழிநடத்தி, அறிவை மட்டும் வளர்க்காமல், மனித உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, எதிர்காலத்தில் ஏற்றமிகு குடும்பமாக, மாற்றக் கூடிய வல்லமை, அவரவர் கையிலே தான் உள்ளது என்பதையும் எடுத்துக் கூறி, தாம் வாழ்ந்து காட்டும், பாரம்பரியத்தையும், பண்புகளையும் சொல்லிக் கொடுத்து, உறவுகளை வளர்த்து, சந்ததிகளைப் பெற்றெடுத்து, பெருக வாழ்கவே என்று சொல்லி அனைவரின் ஆசியை என்றும் எப்போதும் வேண்டுகிறேன்.

                                        --------------------------------------------------


தேசிய நல்லாசிரியர் 

பேராசிரியர் டாக்டர் பா. ஜெயச்சந்திரன்

கைபேசி எண் : 99441 14226 

மின்னஞ்சல் : pjchandran59@gmail.com


Post a Comment

புதியது பழையவை

Sports News