தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்புகளை பேசும் முன்னூறு ஆண்டு பழமையான புத்தகம் ஒலி வடிவம் பெற்று நேற்று வெளியானது.
தூத்துக்குடியில் இசை ஆசிரியர் திரு.இசக்கியப்பன் அவர்களின் சீரிய முயற்சியால் 300 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட ஒரு புத்தகம் நவீன இசைவடிவம் பெற்று ஸ்ரீ பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ் புத்தகம் மற்றும் 101 பாடல்கள் அடங்கிய பாடல் தொகுப்பாக வெளியானது. வெளியீட்டு விழா நிகழ்ச்சி தூத்துக்குடி D.A கல்யாண மஹாலில் நடந்தது.
இந்த விழாவில் பெருங்குளம் ஸ்ரீலஸ்ரீ செங்கோல் ஆதினம் 103 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கலந்து கொண்டு ஒலி குருந்தகடை வெளியிட்டு அருளாசி வழங்கினார்.
மேலும் எழுத்தாளர்கள் நாறும்பூ நாதன், சாகித்ய அகாடெமி விருது பெற்ற சோ.தர்மன், முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். திருநெல்வேலி மாவட்ட திட்ட இயக்குனர் ஆ.பழனி தலைமை தாங்கினார். தூத்துக்குடி அகில இந்திய வானொலி இயக்குனர் இராதாகிருஷ்ணன், சொல்லின் செல்வர் பே. சங்கரலிங்கம், தூத்துக்குடி விமான நிலைய ஆணையர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
. அழகர் ஜீவல்லர்ஸ் நிறுவனம் உதவியால் வெளியிடப்பட்ட ஸ்ரீ பாகம் பிரியாள் பிள்ளைத் தமிழ் புத்தகத்தை வெளியிட்டு வானொலிக்கான முதல் குறுந்தகட்டை அந்த நிறுவனத்தை சார்ந்த G.பத்மநாபன் வழங்கினார். மேலும் விழாவில் தூத்துக்குடி சிவாஞ்சலி நாட்டிய குழு மாணவிகள் பிள்ளைத்தமிழ் பாடலுக்கு நடனமாடினர்.சாரதா கலைக்கூடம் மாணவிகள் அந்த பாடல்களை பாடினர்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தமிழ் எக்கோஸ் இணைய வானொலி நிர்வாக இயக்குனர் மு.வெ.ரா www.tamilechosradio.com க்காக, இந்த ஸ்ரீ பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ் தொகுப்பின் முதல் குறுந்தகடை தூத்துக்குடி வானொலி மைய இயக்குனர் திரு.M.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்க பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து பெருங்குளம் ஸ்ரீலஸ்ரீ செங்கோல் ஆதினம் 103 வது குருமகா சன்னிதானம் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்கள்...
தன் சொந்த செலவில் திரு.இசக்கியப்பன் வெளியிட்டுள்ள இந்த புத்தகம் மற்றும் குறுந்தகடு வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவர் ஒரு உன்னத கலைஞர் மாணவர்களுக்காகவும் இசைக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்து வரும் ஒரு அற்புத மனிதர். தினம் தோறும் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற விலங்குகளுக்கு தன் சொந்த செலவில் தொடர்ந்து உணவளித்து வருகிறார். நெல்லை தூத்துக்குடி இரு மாவட்டத்திற்கான கீதத்தையும் உருவாக்கி தந்தவர்.
அவர் நிகழ்ச்சியின் நிறைவாக ஏற்புரை பேசும் போது தான் இசையமைத்து வழங்கியுள்ள ஸ்ரீ பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ் பெருமைகளை பற்றி பேசியவை : தூத்துக்குடியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த வரகவி சங்கரமூர்த்தி புலவர் என்று அழைக்கப்பட்ட புலவர் திருச்செந்தூர் முருகன் மீது ஏராளமான தனிப் பாடல்களை பாடி வந்ததாகவும். ஒருநாள் ஸ்ரீ பாகம்பிரியாள் அம்பாள் அவர் கனவில் தோன்றி செய்தியை பாடிய வாயால் கோவை பாடுக என்று ஆசி வழங்க பின் அவர் இயற்றிய தான் இந்த பிள்ளைத்தமிழ் என்றும்,இதில் 300 வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடி எப்படி இருந்தது அங்கே இருந்த வழிபாடு மக்கள் வாழ்வியல், இருந்த கடல்வளங்கள், தாமிரபரணி வளங்கள், மற்றும் மகாபாரதம் ராமாயணம் போன்ற புராணங்கள் குறித்த அரிய தகவல்கள் அனைத்தும் நிறைந்து இருக்கிறது என்றும் கூறினார். மேலும் இந்த பாகம் பிரியாள் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் வரகவி சுந்தரபாண்டிய புலவர் வீரபாண்டியக் கட்டபொம்மனிடம் அரசவைக் கவிஞராகவும் பணி செய்திருக்கிறார் என்ற ஒரு தகவலையும் சொன்னார்
ஓலைசுவடியாய் செல்லரித்து போக இருந்த இந்த புத்தகத்தை 1960 இல் உத்தண்டராம பிள்ளை, குகஸ்ரீரசபதி, மீனம்மாள் இரத்தினசாமி, விவேகானந்தன் பிள்ளை ஆகியோரின் பெருமுயற்சியால் ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டு 1960 இல் புத்தக வடிவில் வெளிவந்தது,
ஆனால் மிகச்சில பிரதிகள் மட்டுமே இருந்த அந்த புத்தகம் பெருவாரியான மக்களுக்கு போய் சேரவில்லை என்ற வருத்தத்தில் அதை இசை வடிவத்தில் மாற்றும் நோக்கத்தில் கடந்த 2020 ஜனவரி முதல் முயற்சியில் இறங்கி எளிய வரிகளில் பாடல்கள் எல்லோருக்கும் புரியும் வகையில் மெட்டமைத்து இசை ஆல்பம் பணிகளை மார்ச் மாசம் தொடங்கியதாகவும், அது கொரோனோ காலகட்டம் என்பதால் சிறிது சிறிதாக தான் பணியை தொடர முடிந்தது என்றும்,பின் இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு தற்போது தான் இந்த படைப்பு முழு வடிவத்தில் நிறைவுற்றள்ளது, இந்தப் பாடல்களை புதுப்பிக்கும் விதமாக பாடல்களுக்கு விளக்க உரை புலவர் சங்கரலிங்கம் எழுத, அழகர் ஜுவல்லர்ஸ் அன்பளிப்பாக இந்த புத்தகம் வெளிவருகிறது என்றும் கூறினார்.
இந்த பாடல்களை பாடிய செல்வி தீபிகா மற்றும் நந்தினி ஆகியோர் மிகவும் சிறப்பான முறையில் பாடியுள்ளனர் என்று பாராட்டினார்.
இந்த பாடல்களின் ஒலிப்பதிவு ஜேசுதாஸ் பல வருடங்களாக பாடிய மரியன் ஒலிப்பதிவு கூடத்தில் இந்த நூற்றி ஒரு பாடல்களையும் பதிவு செய்துள்ளார்கள் என்ற சிறப்பு தகவலையும் தெரிவித்தார்.
"இந்த பாடல்கள் அனைத்தும் வருங்கால தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்த நூல் தூத்துக்குடியின் கடல் வளங்கள் பற்றி அதிகமான தகவல்கள் உள்ளதால் கடல் சார்ந்து தேடல் உள்ள மாணவ மாணவிகளுக்கு இந்த நூல் ஒரு அரிய பொக்கிஷமாகும் என்று கூறிய அவர் மதங்கள் கடந்து தூத்துக்குடி 300 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்று உங்கள் கண்ணுக்கு முன் கொண்டு வரும் இந்த புத்தகத்தை நிச்சயம் வாங்கி படிக்க வேண்டும் என்றும் பாடல்களையும் கேட்டு ரசிக்க வேண்டும்" என்று கூறி தன் உரையை நிறைவு செய்தார்.
அரசின் கோவிட் கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைபிடித்து மிகக் குறைந்த மக்களை மட்டும் அழைத்து நடந்த விழா தாமிரா web tv மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை உலகெங்கும் ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர். சிறப்பாக நடந்து முடிந்த இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.
கருத்துரையிடுக