சவாலை சந்திக்கத் தயாரா?

 சவாலை சந்திக்கத் தயாரா?


-Dr.Fajila Azad,International Lifecoach & Hypnotist

போட்டி போடுவதற்கு போட்டி போட்டு பழகிக் கொண்டிருக்கும் நாம், சமுகத்தோடு, ஒன்றுபட்டு உழைத்து, இணைந்து வெற்றி பெற்று, மகிழ்ச்சியோடு பகிர்ந்து வாழும் முறை பழகிப் பார்க்கலாமா? 

சிறு குழந்தை, ஒன்று இரண்டு என்று எண்களை கற்றுக் கொள்ளத் தொடங்கும்போதே ,அங்கே நம்பர் ஒன்றிற்கான போட்டியும் ஆரம்பமாகி, வேலை அலுவலகம் என்று அது விடாது தொடர்கிறது.

பலநேரம், எல்லோரையும் தவிர்த்து விட்டு, எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, நான்… நான் மட்டுமே, எனது.. எனக்கு மட்டுமே என்று முண்டியடித்து முன்னேறுபவன் வெற்றி பெற்றவனாக முன் நிறுத்தப்பட, மற்றவர்கள் பின் தங்கிப் போனவர்களாக சித்தரிக்கப் படுகிறார்கள், படிப்பில் மட்டுமல்ல சமுகத்திலும்!!!

சேர்ந்து உண்டு, சேர்ந்து பேசி, சேர்ந்து வேலை செய்து, சேர்ந்து கற்று, சேர்ந்து மகிழ்ந்த காலங்கள் எல்லாம் இந்த "நம்பர் ஒன் "வேட்டையில் நசுங்கிக் கொண்டிருக்கிறது. 

சுய மரியாதை, சுய கௌரவம், சுய பச்சதாபம், சுய பிரதானம் என ஒவ்வொரு சுயமும் அன்புமயமான இந்த உலகத்தை தனித் தீவுகளாக கூறு போட்டு பிரித்துக் கொண்டிருக்கிறது. 

வெற்றி என்பது மகிழ்ச்சி என்றும், ஒருவனின் தோல்வி மற்றவனின் வெற்றி என்பதும் விளையாட்டின் விதிகளாக இருக்கலாம். வாழ்வின் விதி வேறு. அது உனக்கும் எனக்குமாக சேர்ந்து பகிர்ந்து உண்பதையே மகிழ்ச்சி என்கின்றது. 

விற்பவனின் இலாபம் வாங்குபவனின் ஆதாயம் எனும் win-win கொள்கையே வாழ்வின் உன்னதம், மகிழ்ச்சியின் மூலதனம்.



வாழ்வில் தன்னுடன் ஒன்றாக பயணிப்பவர்கள் தோற்று தன் முன் நிற்க தனி ஒருவன் மட்டும் தன் வெற்றியை எப்படிக் கொண்டாட முடியும்? 

தன்னை சுற்றி இருப்பவர்களை கவலையோடு தலை குனிய விட்டு விட்டு தான் மட்டும் எப்படி தலை நிமிர முடியும்.. நான் நானாக இருப்பதற்கு நான் மட்டும் காரணம் அல்ல. ஒருவன் இல்லாமல் மற்றவன் இல்லை. 

வெற்றி எல்லோருக்கும் பொதுவானது எனும் பண்புதான் மனிதனின் பிறப்பியல்பு.

இயல்பை மீறிய சிந்தனைகளைத்தான் ஏதோ ஒரு தேடலின் போது இயல்பாக நம்மை தொற்றிக் கொள்ள விட்டு விடுகிறோம். தனித்து நிற்க முயற்சி செய்யும், நம் வாழ்க்கை பயணத்தில் நம்மையுமறியாமல் நம் இனிய தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிறோம். இருந்தும் மனிதம் நமக்குள் சுரந்து கொண்டுதான் இருக்கிறது.

மனிதமே மகிழ்ச்சி எனும் மந்திரத்திற்கு நம் மனதை தீர்க்கமாக உட்டுபடுத்தவில்லையென்றால், அது பல தந்திரங்களை செய்து நம்மை எந்திரமாக்கி விடும். போட்டிக்கு ஆள் இல்லையென்றால் நான் எப்படி வெற்றி மகுடம் சூட்டிக் கொள்வது என்று எதிரிகளை அது உருவாக்கி விடும்.

 நம்முடைய ஒவ்வொரு வெற்றிக்கும் நம்மோடு இணையும் கைகளை விட, நம்மை உசுப்பேற்றி உறுவேறச் செய்யும் எதிரிகளை இனங் காணத் தொடங்கி விடும்.

மனிதர்களை Human race என்று அழைப்பது ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டு யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்பதற்கல்ல. ஒருவரை ஒருவர் பகையாளியாக பார்க்காமல் நட்போடு கை கோர்க்கும் உழைப்பே வெற்றியின் முதல்படி, 

ஒருவரின் திறமை என்பது அவருக்கானது மட்டுமல்ல என்பதை உணர்ந்து தன் குறை நிறை அறிந்து ஒருவருக்கொருவர் இணக்கமாக தங்கள் திறன்களை பகிர்ந்து கொள்ளும் போது அங்கே எல்லோருடைய தேவையும் இனிதே நிறைவேறுகிறது. மகிழ்ச்சி பலமடங்காகிறது.

எது வேண்டும் நமக்கு?!

                                                                    ...........................................



Post a Comment

புதியது பழையவை