எது வேண்டும் நமக்கு?


எது வேண்டும் நமக்கு?





 Dr.Fajila Azad,

International Lifecoach & Hypnotist


பொறுமை என்றாலே பிறர் தரும் வலியை, சங்கடங்களை, நியாயமற்ற செயல்களை பொறுத்துக் கொள்வதே என்றே பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். 

ஆனால், பொறுமைக்கு அர்த்தம் பிரித்தால் கால தாமதத்திற்கு வருந்தாதீர்கள்.. எதையும் சிந்தித்து நிதானமாக செயல்படுங்கள்.. என்பதை எத்தனை பேரால் உணர முடிகிறது.

வாழ்க்கையின் வெற்றிக்கு பொறுமை வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் எல்லோராலும் அப்படி பொறுமையாக இருக்க முடிவதில்லை. அதற்கு முக்கியமான காரணம், ‘தங்கள் பொறுமையை பிறர் பலவீனம் என்று நினைத்து விடுவார்களோ’ என அவர்களுக்குள் எழும் எண்ணம்தான் என்கிறது மனஇயல். 

உண்மையில் பொறுமை என்பது ஒரு பலம். அதனை உறுதியாக நம்புபவர்கள் மட்டுமே அதை சரியாக பயன் படுத்துவார்கள். அப்படி பக்குவப் பட்டவர்களுக்கு எந்த ஒரு விசயத்திலும் பொறுத்துப் போவது அவர்களுடைய will power ரை தாக்கு பிடிக்கும் சக்தியைக் கூட்டும். எந்த சூழலிலும் விடாமுயற்சியோடு வெற்றி பெற உதவும்.

பொதுவாக, யாரும் பொறுமையற்றவர்கள் இல்லை. ஒரு குழந்தை பெறுவதற்கு பத்து மாதங்கள் காத்திருக்க வேண்டும் எனத் தெரியும் போது யாரும் அதற்காக புலம்பிக் கொண்டிருப்பதில்லை. அதற்கான காலம் வரும் வரை நிச்சயமாக காத்திருக்கிறார்கள். அத்தனை காலமும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று ஒன்றுக்கு பத்து முறை யோசித்து மிகுந்த கவனத்துடனே ஒவ்வொரு செயலையும் செய்கிறார்கள்.

உங்களுக்கு தெரியும் ஒன்றைப் பற்றி தெளிவான பார்வை இருக்கும் போது அதன் நன்மை தீமைகள் புரியும் போது, அதன் கால வரையரையை சரியாக திட்டமிடும் போது மனம் அதற்காகத் தன்னை தயார் செய்து கொள்ளும். எந்த சூழலிலும் பொறுமையற்று தவிக்காமல் பொறுமையோடு விடா முயற்சியோடு வெற்றியைத் தட்டி செல்ல முனையும்.

சீன மூங்கில் பயிரிடுதல் பற்றி அறிவீர்களா? ஒரு விவசாயி சீன மூங்கில் விதைகளை விதைத்து தண்ணீர் பாய்ச்சி வருகிறார். ஒரு வருடம் போகிறது, எந்த வளர்ச்சியும் இல்லை. இரண்டாவது வருடம் போகிறது, இப்போதும் பூமிக்கு மேல் எதுவும் மாற்றம் தெரியவில்லை. இப்படியே 3வது 4வது வருடங்களும் போகின்றன. அவரது நண்பர்கள் அவரை சந்தேகமாக பார்க்கத் துவங்குகின்றனர். அவரது பொறுமை, முயற்சி, அக்கரை அனைத்துமே கேள்விக்கும் கேலிக்கும் ஆளாகிறது. 5வது வருடம் தொடங்குகிறது.  நிலத்தின் மேற்பரப்பில் சின்னஞ் சிறிதாக எட்டிப் பார்க்கும் மூங்கில் செடி ஆறே வாரத்தில் அசுர வளர்ச்சி கொண்டு வானளாவ எழுந்து நிற்கிறது. அதுவும் எப்பேர்ப்பட்ட வளர்ச்சி. ஒவ்வொரு மரமும் 80 அடி உயரம் வளர்ந்து கேள்வி கேட்டவர்களின் வாயை அடைக்கின்றன. ஆறு வாரத்தில் அசுர வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் 4 ஆண்டுகள் அந்த விதைகள் பூமிக்குள் தங்கள் வேர்களை நிலைப் படுத்தி இருக்க வேண்டுமென்பது அப்போது தான் மற்றவர்களுக்குப் புரிகிறது.

பல நேரங்களில் இப்படித்தான், எந்த ஒரு பலனும் தராமல் உங்களுடைய உழைப்பு எல்லாம் வீணாகிக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றும். ஆனால், நிச்சயம் சீன மூங்கில் போல் மாற்றம் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டு தானிருக்கும்.. உங்கள் பொறுமை நிச்சயம் ஒரு நாள் உங்களுக்கு பெருமை சேர்க்கும்.

எது வேண்டும் நமக்கு?!


----------------------------------------------



Post a Comment

புதியது பழையவை

Sports News