போதைப்பொருள் விழிப்புணர்வு தினம்

 *

போதைப் பொருள் 

விழிப்புணர்வு தினம்

டாக்டர் ஜான்சி பால்ராஜ்

        சிறுமூளையைப் பாதிக்க வைத்து ஒருவித மயக்க நிலையை ஏற்படுத்தும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை மனம்போன போக்கில் கழிக்கும்   நமது இளைய சமுதாயத்தை மீட்பதில் ஒவ்வொருக்கும் பொறுப்புள்ளது.

    வளரிளம் பருவத்தில்( Teenage)ஆராய்வூக்கம் என்ற இயற்கையான தூண்டுதலாலும் நாகரீகமோகத்தாலும், சமூகரீதியாக தங்களது செல்வச்செழிப்பை மற்றவர்களுக்கு காட்டிக் கொள்ளும் நோக்கிலும் ஆரம்பத்தில்  போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். பின்னர் அதற்கு அடிமையாகி மீளமுடியாமல் தவிக்கின்றனர்.

       படிக்கும் வயதில் இன்றைய மாணாக்கர்கள் சர்வசாதாரணமாக தங்கள் மதுபான பார்ட்டிகளை நாகரீகக் குறியீடாக காண்பித்துக் கொள்ளும் அறியாமை நிலவி வருவது வேதனையானது.

     அபின், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் தங்கள் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் அறிவுத் தளமான கல்லூரிகளுக்குள் விதிவிலக்குகளாக செயல்படும் ஒருசில அறிவிலிகளால்  ஊடுருவிசென்றுவிடுவது  சமூகத்தின் பேரபாயமாகி தொடர்கிறது.

      குடும்பத்தில் இத்தகைய போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் பிள்ளைகளை அதிக அக்கரையும் அன்பும் செலுத்தி அதிலிருந்து விடுவிக்க முயற்சிக்க வேண்டும். மாறாக அவர்களது முரண்பாடான செயல்பாடுகளை மற்றவர்களிடம் கூறி கூச்சலிடுவதும் அவர்களை வெறுத்து ஒதுக்குவதும்  எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

     சமூகத்தில் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் திரைப்படங்கள் மூலம் புகையிலை மற்றும் பிறபோதைப் பொருட்கள் பயன்படுத்துதலை மிகக் கேவலமான ஆளுமையாக சித்தரிக்கும் போக்கை அவ்வப்போது காட்சிப்படுத்தினால் இன்றைய இளையத் தலைமுறைகளின் மனங்களில் நல்ல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

       போதைப் பொருட்களின் பயன்பாடு  அதிகரிப்பதன் விளைவே பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கான காரணமாகவும் இருந்து வருகிறது. எந்த வகையான போதைப் பொருட்களும் முதலில் நரம்புமண்டலத்தைப் பாதிக்கச் செய்து நினைவாற்றலையும் சிந்திக்குந்திறனையும் பாதித்து  உணர்வுகளுக்கு தீனியளிக்கும் நிலைக்கு அறிவை மழுங்கடிப்பதே  இதற்கான காரணம்.



     சமூகத்தில் தேவையற்ற சாதி,சமய பிணக்குகளை ஏற்படுத்திவதிலும் இப்போதைப் பொருட்களின் பயன்பாடு முக்கியப் பங்காற்றுவது நாம் அறிந்ததே.

   எல்லாவற்றிற்கும் மேலாக மனிதனை ,சமூக அந்தஸ்திலிருந்து கீழிருக்கும் செயலை  செய்யத் தூண்டும் இத்தீயப் பழக்கத்தை அடியோடு ஒழிப்பதில் அரசும் தனிமனிதனும்

இணைந்து செயல்பட்டால் நிச்சயம் நமது மனித இனத்தை பேரழிவிலிருந்து தப்புவிக்க முடியும் என்பது உறுதி.


                                                    -----------------------------------------



Post a Comment

புதியது பழையவை

Sports News