அலெக்ஸாவுடன்’ ஆங்கிலம்

 


அரசுப் பள்ளியில் ‘அலெக்ஸாவுடன்’ ஆங்கிலம் 

..


          தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள சாரதா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் பழகுவதற்கு அலெக்சா என்னும் செயற்கை நுண்ணறிவு கருவியைப் பயன்படுத்தும் முயற்சியை மேற்கொள்கின்றனர்.

  தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆண்டுதோறும் கல்வி சார்ந்த பல்வேறு செயலாராய்ச்சிகள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

     2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, சாரதா மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அலெக்ஸா என்னும் என்னும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஆங்கிலம் கற்பது குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.

             அலெக்சா போன்ற கருவிகளைச் சரியான முறையில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் பயன்படுத்தி, நன்றாகத் தாய்மொழியில் மகிழ்வுடன் வாயாடக்கூடிய மாணவர்கள் நட்பான முறையில் ஆங்கிலத்திலும் விரும்பி நெருங்கி வாயாடுவதற்கான வாய்ப்பு அளிப்பதன் வழி முறையாகவும் தயக்கமின்றியும் ஆங்கிலத்திலும் வாயாடுவதற்கானச் சூழல் ஏற்படுத்த முடிகின்றதா? என்பதை அறிவதே இந்த ஆய்வின் முதன்மையான நோக்கமாக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.




            இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் முனைவர் .ஆசீர் ஜூலியஸ் கூறும் பொழுது, ”ஒன்றாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கிலம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது.  ஆங்கில மொழியைப் பொறுத்தவரை பெரும்பாலான மாணவர்கள் அதிகமான மதிப்பெண்கள் பெற்றாலும் அவர்களால் இயல்பாக சரளமாக ஆங்கிலத்தில் பேச முடிவதில்லை. இதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தோமென்றால் ஆங்கில மொழியைப் பிறரிடத்தில் பேசிப் பழகுவதற்கு அதாவது வாயாட வாய்ப்புகள் இல்லாததே” என்றும், 

        மேலும், ”ஆங்கிலம் என்கின்ற மொழியை மாணவர்கள் பேச கடினப்படுவதற்கு ஆங்கில மொழி காரணம் அல்ல. ஆங்கில மொழி என்றால் பேசவே முடியாது என்கின்ற தவறான பிம்பமே அதற்குக் காரணம் என்றும், எனவே இந்த ஆராய்ச்சியை நான் மேற்கொள்வதற்கு முன்பாக ஆங்கிலம் பேசுவதற்குத் தடையாக இருக்கும் காரணிகளைக் கண்டறிந்து அதை  உடைத்தெறிவதற்கான முதல் முயற்சியை மேற்கொண்டேன்” என்றார்.  

     மேலும் ”அதன் அடுத்த கட்டமாக ஆங்கிலத்தைச் சரியான உச்சரிப்பில் படிப்பதற்கான பயிற்சியும் கொடுக்கப்பட்டது. இதன் மூன்றாம் நிலையில் தாங்கள் பேசும் மொழியில் பொருள் உணர்ந்து பேசுவதற்கான வாய்ப்பும் தரப்பட்டது. அப்பொழுது தான் நினைத்த கருத்தைத் தயக்கமின்றித் தமிழ்மொழியில் வெளிப்படுத்தும்  வாயாடி மாணவர்கள் ஆங்கிலத்தில் வாயைத் திறக்கவே தயங்குவது அறியப்பட்டது. தொடர்ந்து அலெக்ஸாவிடம் அவர்கள் நட்பாக வாயாடியதில் அவர்களது தயக்கம் போய்விட்டது.

  இந்த 30 நாள் ஆராய்ச்சியின் முடிவில் மாணவர்கள் ஆங்கிலத்தைப் பேசுவதற்கான பதற்றம், தயக்கம் மற்றும் அச்சம் நீங்கியுள்ளது என்பதை அறிய முடிகின்றது. இதே போன்று தொடர்ச்சியாக ஆசிரியர்களின் கண்காணிப்பில் இந்த ஆர்வமூட்டக்கூடிய வாயாடும் பயிற்சியைக் கொடுப்பதன் மூலம் மாணவர்கள் ஆங்கிலத்தைச் சரளமாகத் தடையின்றி இயல்பாகப் பேசுவதற்கான வாய்ப்பு அமையும்” என்றும் கூறினார். 

    இதனால், இந்த ஆராய்ச்சிக்கு மாணவர்களைக் கவரும் "வாயாடி" “VAYADE” (Virtual Assistant for Yielding Adaptive Development in English) என்ற பொருத்தமான பெயரைச் சூட்டி இருக்கிறார்.


                                                   --------------------------------------------

Post a Comment

புதியது பழையவை