தேனி தமிழ்ச் சங்கம் ஸ்ரீ விகாசா கல்வியியல் கல்லூரி இணைந்து நடத்திய உலக மகளிர் நாள் விழா

தேனி தமிழ்ச் சங்கம்
ஸ்ரீ விகாசா கல்வியியல் கல்லூரி
இணைந்து நடத்திய
உலக மகளிர் நாள் விழா
 

தேனி தமிழ்ச் சங்கம் மற்றும் உத்தமபாளையம் ஸ்ரீ விகாசா கல்வியியல் கல்லூரி இணைந்து, ‘உலக மகளிர் நாள் விழா’வினை நடத்தின.

இவ்விழாவிற்கு கல்லூரி செயலர் திருமதி.இந்திரா உதயக்குமார் தலைமைத் தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெ.மகாலட்சுமி வரவேற்புரையாற்றினார்.

தேனி தமிழ்ச் சங்க துணைச் செயலர் திருமதி. மு.ரேணுகாதேவி நிகழ்வு குறித்த அறிமுக உரையாற்றினார். மு.சு. முத்துக்கமலம், அ.நசீபா மற்றும் அ.கவிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மதுரை, ரசிய மொழிப் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கிராவட்ஸ் ஜோயா விளாடிமிர் ரொவ்னா பேசும்போது - “உலக வரலாற்றில் பெண்கள் சந்தித்த அடக்குமுறைகள், வன்முறைகள் என்று எத்தனையோ இருக்கின்றன. இன்றும் அவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த அடக்குமுறைகளையெல்லாம் தாண்டிப் பெண்கள் கல்வி, தொழில், முன்னேற்றம் என்று அனைத்திலும் சாதித்துக்கொண்டே வருகின்றனர்.

கல்லுடைக்கும் தொழிலில் தொடங்கி, கணினி, இணையமென்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வளர்ச்சியடைந்திருக்கின்றனர். பெண்களைப் பெருமைப்படுத்தாத வீடு, நாடு எதுவும் உயர்வைப் பெற்றிட முடியாது என்கிற புதிய சிந்தனையை உலகம் முழுவதும் பெண்கள் உருவாக்கிக் காட்டியிருக்கின்றனர். பெண்களின் வளர்ச்சிக்கான போராட்டம் சாதாரணமானதல்ல. சாதனைக்குரியது. அதனால்தான், உலகம் முழுவதும் பெண்களைப் போற்றவும், பெண்ணின் பெருமையைத் தொடர்ந்து காக்கவும் பெண்கள் நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்ட அவர் நிறைவாக, தமிழில் குட்டிக்கதை ஒன்றையும் சொல்லி விளக்கினார்.

அவரைத்தொடர்ந்து சிறப்புரையாற்றிய ஞானவானி பண்பலை வானொலி அறிவிப்பாளர் முனைவர் பி.வித்யா, “விளையாட்டுகளில்கூட, பெண்களுக்குக் குறிப்பிட்ட எல்லைக் கோடுகளுக்குள்ளாகவும், ஆண்களுக்கு எல்லைக் கோடுகளைத் தாண்டுவதாகவும் வைத்துப் பெண்களைச் சில கட்டுப்பாடுகளுக்குள்ளாகவே வைத்திருந்தனர். ஆனால், பெண்கள் அந்தக் கட்டுப்பாடுகளையெல்லாம் கடந்து சாதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆண்களைக் காட்டிலும் பெண் உயர்வானவர் என்பதற்கு, பெண்ணிற்கான தாய்மைப்பண்பு ஒன்று போதும்” என்றார்.

முடிவில் மாணவி பா.ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

1 கருத்துகள்

  1. தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘உலக மகளிர் நாள் விழா’ செய்தியினைத் தங்களது இணையதளத்தில் வெளியிட்டுச் சிறப்பித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News