நீங்களும் “ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகலாம்”-1

நீங்களும் “ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகலாம்”
- நெல்லை கவிநேசன்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகப் பதவியேற்று மிகச்சிறந்த முறையில் பணியாற்றி வெற்றிகரமாக வலம் வருகின்ற அதிகாரிகள் பலர் இருக்கிறார்கள். இவர்களின் சமூகப் பணிகளைப் பார்த்து “நானும் எதிர்காலத்தில் ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும்” என்ற எண்ணத்தை பள்ளி - கல்லூரிகளில் படிக்கின்றபொழுதே இளம் மாணவ மாணவிகள் உருவாக்கிக் கொள்கிறார்கள். 

திரு. இறையன்பு, திரு. வி.சம்பத், டாக்டர் க.விஜய கார்த்திகேயன், திரு.எஸ்.சுந்தர வடிவேலு, டாக்டர். எஸ்.பிரபாகர், திரு. என்.சுப்பையன், திரு. கே.மகரபூஷணம், திரு.சஜ்ஜன்சிங் ரா.சவான் இவர்களெல்லாம் தமிழகத்தில் புகழ்பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்த திரு.மச்சேந்திரநாதன், திரு.ஜெயக்குமார் பொன்ராஜ் ஆகியோர் 1980 ஆண்டிலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு உயர் பதவிகளை வகித்தார்கள். 


“ஐ.ஏ.எஸ்.,” (மிகிஷி) பணிக்காக மட்டும் “சிவில் சர்வீசஸ் தேர்வு” (Civil Services Examination) நடத்தப்படவில்லை. இந்தத் தேர்வை எழுதினால் “ஐ.பி.எஸ்.,” (IPS) என அழைக்கப்படும் “இந்திய காவல் பணி’ (Indian Police Service) பதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தத் தேர்வு எழுதி தமிழகத்தில் காவல் துறையில் உயர் பதவிகளை அலங்கரிப்பவர்களில் திரு சைலேந்திர பாபு, திரு. அஸ்வின் எம்.கோட்னீஷ். திரு. எஸ்.என்.சேஷசாய், டாக்டர் மு. ரவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

இதே சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி “ஐ.ஆர்.எஸ்.,” (IRS) என்னும் “இந்திய வருவாய்ப் பணி” (Indian Revenue Service) பதவியைப் பெற்றவர்கள் ஏராளம். நெல்லை மாவட்டம் உவரியில் பிறந்த திரு. மகாலிங்கம், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.எஸ்.சி., கணிதம் படித்தவர். பின்பு, எம்.எஸ்.சி., படித்து சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி, இன்று ‘கமிஷனர் ஆஃப் இன்காம்டக்ஸ்’ (Commissioner of Income Tax) என்ற உயர் பதவியை சென்னையில் வகித்து வருகிறார். 

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி “இந்திய தகவல் பணி”யில் (Indian Information Service) சேர்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் நெல்லை மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணி என்ற ஊரைச் சேர்ந்த திரு.பழனிச்சாமி. இவர் இப்போது சென்னை அகில இந்திய வானொலியின் செய்திப்பிரிவின் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இவர் வேளாண்மைத் துறையைத் தேர்ந்தெடுத்து பி.எஸ்.சி. (அக்ரி) முடித்த பட்டதாரி. 

பி.ஏ., ஆங்கிலம் படித்த திரு. சுந்தரேசன் நெல்லை மாவட்டம் உவரியைச் சேர்ந்தவர். இவரது தந்தை திரு. எஸ். துரைப்பாண்டியன். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை அடுத்த பேயன்விளை கே.ஏ.மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். திரு.சுந்தரேசன் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பட்டம் பெற்று சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி பாண்டிச்சேரி சிவில் சர்வீசஸ் துறையில் பணிபுரிந்து வருகிறார். 

தமிழகத்தில் கிராமப்புறங்களில் படித்த பலர் இந்தத் தேர்வு எழுதி பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கிறார்கள். கடந்த 2010 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்காக நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றவர் எஸ். திவ்யதர்ஷினி. இவர் சென்னையைச் சேர்ந்தவர். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு பி.ஏ., பி.எல்., பட்டப் படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இப்போதெல்லாம் தமிழகத்திலிருந்து சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களில் ஏராளமான பேர் வெற்றி பெறுகிறார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற உயர் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வை ஆண்டுதோறும் லட்சக்கணக்கானபேர் எழுதினாலும் தமிழக போட்டியாளர்களுக்கு சிறப்பான வெற்றி காத்திருக்கிறது என்பதை பலரும் உணரத் தொடங்கிவிட்டார்கள். 

இதனால்தான், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவ - மாணவிகளிடம் “நீங்கள் வாழ்க்கையில் என்ன பணியில் சேரப்போகிறீர்கள்?” என்று கேட்டால், “நான் ஐ.ஏ.எஸ்., ஆகப்போகிறேன்” என்றும், “நான் ஐ.பி.எஸ்., ஆகப்போகிறேன்” என்றும் ஏராளமானபேர் பதில் சொல்கிறார்கள். இளம்வயதில் இருக்கின்ற ஆர்வமும், முயற்சியும் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்ற பின்பு பலரிடம் காணப்படுவதில்லை. அதற்குக் காரணம் என்ன?

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வைப்பற்றி தமிழக மாணவ - மாணவிகள் தெளிவாகத் தெரிந்துகொண்டால் “நான் இந்தத் தேர்வில் நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்ற நம்பிக்கையோடு அவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். 

சிவில் சர்வீசஸ் தேர்வு என்றால் என்ன? இந்தத் தேர்வை யாரெல்லாம் எழுதலாம்? தேர்வு எழுத தேவையான கல்வித்தகுதி என்ன? எந்தெந்தப் பணிகளுக்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது? எப்போது இந்தத் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்? தேர்வு எழுத எவ்வளவு செலவாகும்? தேர்வு முறை எப்படி அமையும்? தேர்வுக்கான தயாரிப்பு முறைகளை மேற்கொள்வது எப்படி? தேர்வுக்கான கேள்வித் தாள்கள் எந்த வகையில் அமைகின்றன? பயிற்சி மையங்களில் சேர்ந்தால்தான் இந்தத் தேர்வில் வெற்றிபெற முடியுமா? பட்டப்படிப்பில் எந்தப் பாடத்தை எடுத்துப் படித்து பட்டம் பெற்றால் தேர்வு எழுத முடியும்? போன்ற அனைத்து கேள்விகளுக்கான விடைகளையும் உள்ளடக்கிய விரிவான விளக்கத்தை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

சிவில் சர்வீசஸ் தேர்வு என்றால் என்ன? 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.ஐ.எஸ்., போன்ற சுமார் 24 உயர் பணிகளுக்காக தரமான பணியாளர்களை இனம்கண்டு, தகுதியின் அடிப்படையில் அவர்களை பணியமர்த்துவதற்காக நடத்தப்படுகின்ற தேர்வுதான் சிவில் சர்வீசஸ் தேர்வு. இந்தத் தேர்வை மத்திய அரசின் அமைப்பான “யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்” (Union Public Service Commission) நடத்துகிறது. 

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தத் தேர்வு கீழ்க்கண்ட 24 பணிகளுக்காக நடத்தப்படுகிறது.

1.இந்திய ஆட்சிப்பணி (Indian Administrative Service - IAS)
2.இந்திய அயல்நாட்டுப் பணி (Indian Foreign Service - IFS)
3.இந்திய காவல் பணி (Indian Police Service- I.P.S)
4.இந்திய தபால், தந்தி கணக்கு மற்றும் நிதிப்பணி, தொகுதி- A (Indian P and T Accounts  and Finance service, Group - A)
5.இந்திய தணிக்கை மற்றும் கணக்கு பணி, தொகுதி -A (Indian Audit and Accounts Service, Group - A)
6.இந்திய வருவாய் பணி, [சுங்கம் மற்றும் மத்திய வரிகள்] தொகுதி-A (Indian Revenue Service [Customs and  Central Excise] Group-A)
7.இந்திய பாதுகாப்பு கணக்குகள் பணி, தொகுதி -A (Indian Defence Accounts Service, Group-A)
8.இந்திய வருவாய் பணி,[ஐ.டி] தொகுதி-A(Indian Revenue Service - (I.T.) Group - A)
9.இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் பணி, தொகுதி-A [உதவி மேலாளர், நிர்வாகம்] (Indian Ordnance Factories Service, Group-A)  (Assistant Works Manager, Administration) 
10.இந்திய அஞ்சல் பணி, தொகுதி – A (Indian Postal Service, Group-A)
11.இந்திய குடிமை கணக்குப் பணி, தொகுதி-A (Indian Civil Accounts Service, Group-A)
12.இந்திய ரெயில்வே போக்குவரத்துப் பணி, தொகுதி -A (Indian Railway Traffic Service, Group - A)
13.இந்திய ரெயில்வே கணக்குப் பணி, தொகுதி -A (Indian Railway Accounts Service, Group -A)
14.இந்திய ரெயில்வே பணியாளர் சேவை, தொகுதி-A (Indian Railway Personnel Service Group-A)
15.ரெயில்வே பாதுகாப்புப் படை உதவி பாதுகாப்பு அலுவலர், தொகுதி - A (Posts of  Assistant Security Commissioner in Railway Protection Force Group-A)
16.இந்திய பாதுகாப்பு வளாகப் பணி, தொகுதி-A (Indian Defence Estates Service, Group-A)
17.இந்திய தகவல் பணி [இளநிலைத் தரம்] தொகுதி-A (Indian Information Service [Junior Grade] Group - A)
18.இந்திய வணிகப் பணி, தொகுதி-A, [தரம்-III] (Indian Trade Service   Group-A (Gr. III)
19.இந்திய நிறுவன சட்டப்பணி, தொகுதி -A (Indian Corporate Law Service, Group-A)
20.ஆயுதப்படை தலைமை குடிமைப் பணி, தொகுதி-B [அலுவலர் பிரிவு] (Armed Forces Headquarters Civil Service, Group -B) (Section Officer`s Grade)
21.டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, டாமன், டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி குடிமைப் பணி, தொகுதி-B (Delhi, Andaman and Nicobar Island, Lakshadweep, Daman, Diu, Dadra and Nagar Haveli Civil Service, Group-B)
22.டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, டாமன், டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி காவல் பணி, தொகுதி-B (Delhi, Andaman and Nicobar Island, Lakshadweep, Daman, Diu, Dadra and Nagar Haveli Police Service, Group-B)
23.பாண்டிச்சேரி குடிமைப் பணி, தொகுதி-B (Pondicherry Civil Service,(Group-B)
24.பாண்டிச்சேரி காவல் பணி-தொகுதி-B (Pondicherry Police Service, (Group-B)

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பணிகளிலும் நேரடியாக சேர விரும்புபவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும். 

இந்தத் தேர்வை எழுதுவதற்கான கல்வித்தகுதி என்ன? 

Post a Comment

புதியது பழையவை

Sports News