சர்வதேச தாய்மொழிகள் தினம்


சர்வதேச தாய்மொழிகள்  தினம்விழியும் மொழியும்
புலவர் வை.சங்கரலிங்கம்

மொழி ஒரு தொடர்பு சாதனம். உடலுக்கு விழி போல உலகுக்கு மொழி என்று சொல்லலாம். விழிகளால் உலகை பார்க்கிறோம். அதுபோல மொழிகளாலேயே உலகை ரசிக்கிறோம். மொழியற்ற உலகம் நிறங்கள் அற்ற உலகம்போல கருப்பு வெள்ளையாகவே காட்சி தரும். பார்வைகளால் பார்த்து ரசித்து சமிக்ஞைகள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதும் ஒரு வகையில் மொழிதான். 
மொழி இல்லாமல் உறவுகளும் நட்புகளும் வலுப்படாது. 

ஒரு குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் போதே ஒலியை உள்வாங்கிக் கொள்கிறது. உள்ளத்தில் உள்ளதை எண்ணத்தில் எழுதி வண்ணத்தில் வார்த்துக் கொடுப்பவை மொழிகள்தான். மொழியின் பெருமைகளை வரிகளில் அடக்கி விட முடியாது.மொழிகள் இல்லாமல் பரபரப்பாக வேகமாக முன்னேறி வரும் உலகில் சர்வதேச உறவுகள் வலிமை பெற்று இருக்க முடியாது. மொழிபெயர்ப்பாளர்களை வைத்துக் கொண்டு தான் இருநாட்டு அரசுகளின் இதயங்கள் இணைக்கப்படுகின்றன. அதன் மூலமாகவே இருதரப்பு உறவுகள் வலிவும் பொலிவும் பெறுகின்றன. எனவே மொழியின் முக்கியத்துவத்தை எதனோடும் ஒப்பிட்டு மதிப்பிட முடியாது. 
தாய்மொழியே வாய்மொழி:
உலகில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. இந்த மொழிகளில் எந்த மொழி சிறந்த மொழி என்று கேட்டால் அவரவர் தாய்மொழிதான் அவருக்கு சிறந்த மொழி.  'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாரதி பாடிய போது அது தமிழ் மொழியின் சிறப்பு என்று பார்ப்பதைவிட தாய்மொழியின் சிறப்பாகவே பார்க்க வேண்டும். எந்த ஒரு மனிதனும் தன் தாய் மொழி மூலமாகவே சிந்திக்கவும் கற்பனை செய்யவும் முடியும். பலமொழிகள் தெரிந்து வைத்திருக்கும் அறிஞர்களும், பல கலைகள் தெரிந்து வைத்திருக்கும் விஞ்ஞானிகளும் கூட எந்த ஒரு விஷயத்தையும் தங்கள் தாய்மொழி மூலமே சிந்தித்து கற்பனை செய்கிறார்கள். செய்ய முடியும்.
'தன்மொழிப் புலமையும் பன்மொழிப் புலமையும்' 
ஒருவன் தன் தாய்மொழியில் தகைசால் திறமை பெற்றிருந்தால் மட்டுமே பிறமொழிகளை சிரமமின்றி கற்றுக்கொள்ள முடியும். உலகில் எந்த ஒரு மொழியும் உடனே உருவாகி விடாது. அது போல எந்த ஒரு மொழியையும் உடனே உருவாக்கிவிட முடியாது.
மொழி காலங்காலமாக மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து ஓசைகளாக உருவெடுத்து எழுத்துகளாக முதலில் உருவம் பெறுகின்றன. அதன் பின்னரே வார்த்தைகளாக வடிவம் பெறுகின்றன. எழுத்துக்கள் வரி வடிவம் பெறுவது என்பது மற்றுமொரு பன்னெடுங்கால செயலாக இருக்கிறது.
 எழுத்து வடிவம் பெற்றவுடன் மக்கள் தங்கள் அனுபவங்களை கலை இலக்கியங்களாக எழுத்தில் பதிவு செய்கிறார்கள். வரி வடிவம் பற்றிய எழுத்துக்கள் தங்கள் அனுபவங்களை வார்த்தைகளாக வடித்து கொள்கின்றன. இப்படித்தான் ஒரு மொழி பொறுமையாகவும் வளமையாகும் வளர்கிறது.
இப்படி நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு உருவாகும் தமது மொழியை யாரும் தவிர்த்து விட விரும்ப மாட்டார்கள். அதனால் அவரவர் தாய்மொழியை தாய்க்கு நிகராக கொண்டாடுகிறார்கள்.
எப்படி உருவானது தாய்மொழி தினம்?
அது ஒரு துயரமான நிகழ்வு. 1952 ஆம் ஆண்டு நமது அண்டை நாடான வங்காள தேசத்தில் வங்க மொழியை காக்க,  டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் தடையை மீறி போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தின்போது 4 மாணவர்கள் மொழிக்காக உயிர்த்தியாகம் செய்தார்கள். மொழிக்காக தியாகம் செய்வது என்பது ஒருவர் நன் தாய்மொழி மீது வைத்திருக்கக்கூடிய அதீதமான அன்பைக் காட்டக் கூடியது.
இந்த மொழியின் மீதான அன்பை புரிந்து கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, கலாச்சார மற்றும் அறிவியலுக்கான அமைப்பு ( யுனெஸ்கோ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவித்தது. 2000 ஆவது ஆண்டு முதல் உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அழிவின் விளிம்பில் சில மொழிகள்:
பல்வேறு இனங்கள், சமூகங்கள், கலாச்சாரங்கள் கொண்ட இவ்வுலகில் அவரவர் பண்பாட்டையும் தனித்தன்மைகளையும் கட்டிக் காப்பதற்காகவே உலக தாய்மொழி தினத்தை ஐ.நா. சபை அறிவித்திருக்கிறது.
மேலும் உலகில் புழக்கத்தில் இருக்கும் 50 மொழிகள் தற்போது அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. இதற்கு காரணம் பிற மொழி மீது காட்டப்படும் விருப்பமாகும். உலகின் மிகப் பெரும்பான்மையான நாடுகளில் அவரவர் தாய் மொழிதான் பயிற்று மொழியாக இருக்கிறது. 'வேற்றுமொழி படித்தால்தான் பிற நாடுகளில் வேலை கிடைக்கும், பொருளாதாரம் உயரும்' என்ற சிந்தனைகள் ஒரு மொழியின் அழிவுக்கு ஆரம்பக் காரணிகளாக இருக்கின்றன. தாய்மொழி மூலம் பெறும் அறிவுதான் நிலையானதாக இருக்கும். மற்றும் முழுமையானதாக இருக்கும். என்பதை இன்றைய இளைஞர் சமுதாயம் உணர்ந்துகொள்ள
வேண்டும். தாய்மொழி ஒரு சமூகத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்கு துணை இருக்கிறது.
 மழலைகளின் மொழி:
தாய் மொழியில் கற்பதுதான் குழந்தைகள் முழுமையான வளர்ச்சி பெற உதவுகிறது. தாய்மொழியில் கல்வி கற்பித்து வரும் பல நாடுகள் குறிப்பாக ஜப்பான், சீனா போன்ற நாடுகள் அறிவு வளர்ச்சியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் அளவில் முன்னேறி இருப்பதை நாம் பார்க்கமுடியும். மாணவர்களை நெறிப்படுத்தி வளர்த்து, அவர்களுக்கு நல்ல சூழ்நிலையை உருவாக்கி, நல்ல பண்புகளை வளர்த்து சான்றோர் ஆக்குவதில் தாய் மொழியின் பங்கு முக்கியமானதாகும்.
 நம் தேசப்பிதா மகாத்மா காந்திஜி மொழியை பற்றி குறிப்பிடும் போது ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தார்கள். 
'ஒரு தேசத்தின் மக்கள் அந்த தேசத்திற்கே உரிய தனிச் சிறப்பான குணங்களுடன் விளங்க வேண்டுமென்றால், அந்த நாட்டு மாணவர்கள் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தாய் மொழியில் கற்க வேண்டும்' என்றார்.
மொழி ஆய்வாளர்கள் வேறு மாதிரி எச்சரிக்கை செய்கிறார்கள். ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் அந்த இனம் பேசும் மொழியை அழிக்க வேண்டும். மொழி அழிந்தால் இனம் தானாகவே அழிந்துவிடும். என்பது மொழி ஆய்வாளர்களின் எச்சரிக்கை.

எனவே நம் இனம் காப்போம்! நம் தாய்மொழி காப்போம்.! 

                                                             *****************************************

Post a Comment

புதியது பழையவை

Sports News