மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா




மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா 





புலவர். சாவித்திரி பாலசுப்பிரமணியன்


{திருமதி. புலவர். சாவித்திரி பாலசுப்பிரமணியன், மதுரை தமிழாசிரியர்  .ஆன்மீக சொற்பொழிவாளர் ,மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா நிகழ்வுகள் தினமும் தொகுத்து வழங்கி வருகிறார் }

 சித்திரைப் பெருவிழா..........
ஆலவாய்க்கரசி,அன்னை மீனாட்சி ஆட்சி செய்யும்  நகரம் மதுரை மாநகர். மல்லிகை மணம் வீசும் இந்த மாநகரில் ஆண்டுதோறும் திருவிழாக்கள்தான்.
வரலாற்று  சிறப்புமிக்க இந்த ஆலயத்தின்  சிறப்பும்,இங்கு மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் சித்திரைப் பெருவிழா பற்றியும் ஒரு சிறு தொகுப்பு.....

..வைகையாற்றின்  கரையில் அமைந்துள்ள கோவில் மாநகரம் எனப்படும் மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கோவில்.இவ்வாலயத்தின் மூர்த்தி சுந்தரேஸ்வரர்., அன்னை தாய் மீனாட்சி. தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேஸ்வரர்  கோவில்களின் மூலக்கோவில் இந்தக்கோவில்.இங்கு தாயே பிரதானம்.248 சக்தி பீடங்களில் ஒன்றாக இது திகழ்கின்றது. அம்பிகைக்குத்தான் முதல் பூஜை நடத்தப்படுகிறது.இது புதனுக்குரிய தலமாகும். கடம்பவனம்,திரு ஆலவாய், கூடல்மாநகர், கன்னியாபுரம்,பூலோக கைலாசம்,எனப் பலவாறாக இந்நகரம் அழைக்கப்படுகின்றது.



இவ்வாலயத்தின் தீர்த்தம்.,,பொற்றாமரைக்குளம்,வைகை,தெப்பக்குளம் , எனப்பல. மூர்த்தி-சுந்தரேஸ்வரர் என அழைக்கப்படும் ஆலவாய் அண்ணல், தலவிருட்சமோ கடம்பமரம். அன்னையே ஆலயத்தின் பிரதானம்.அவளின் திருவுருவமோ மரகதக்கல்லால் ஆனது.கருவறையோ 32 சிங்கங்கள், 64சிவகணங்கள், 8 வெள்ளையானைகள் தாங்கி நிற்கும் அற்புதமுடையது. இது 2500 ஆண்டுகால பழமை வாய்ந்தது .இனி இவ்வாலயத்தின் முக்கிய விழாவாகக் கூறப்படும்  சித்திரைப் பெருவிழாபற்றி சில செய்திகளை இப்பகுதியில் காணலாம்....
சித்திரைப் பெருவிழா........கொடி ஏற்றம்..."திரு ஆலவாய் என்று கேட்டவரே அறம் பெறுவர்"......"உலகம் யாவையும்  ஈன்றவள், உம்பருள் உயர்ந்த நாயகி" என்று உயர்வாக மதுரையையும் ,தாயையும் திருவிளையாடற் புராணம் சிறப்பிக்கின்றது.இப்படிப்பட்ட சிறப்புப் பெற்ற அம்மையும்,அப்பனும் நகர்வலம் வந்து ஆனந்தமாய் அருள்புரிவது காலந்தொட்டு நடந்துவரும் ஓர் அற்புத நிகழ்ச்சி. 
இந்த ஆண்டு, 25.04.2020அன்று காலை சுந்தரேசப்பெருமான் சன்னிதிக்கு  முன்பு உள்ள கம்பத்தடி மண்டபத்தில் பிரம்மோற்சவ விழாவின் ஆரம்பமாக கொடி ஏற்றப்பட்டு,   அம்மைஅப்பனாக நகர்வலம் வருவர்....
இந்த ஆண்டில் கொரோனா  என்னும் அரக்கனின்  கோர தாண்டவத்தால்  இவர்கள் மக்களை மகிழ்விக்க நகர்வலம் வரப்போவதில்லை. இஃதுஒரு பெருங்குறை.இது அன்னை அறிந்ததே.அவளின் அருட்கடாட்சத்தின் முன்பு அரக்கனின் கோர தாண்டவத்திற்கு ஏதுவழி.
மார்கண்டேயனுக்காக காலனை காலால் உதைத்த ஈசன் முன் காலனின்  ஆட்டம் எவ்வளவு காலம்.இருப்பினும் மக்கள் நலன்கருதி குறிப்பிட்டநிகழ்வுகள் ஆலயத்திற்குள் குறைவான சிவாச்சாரியார் களைக் கொண்டு  நடத்தப்பட இருக்கின்றது.

தனித்திருந்து ஆலயப்பெருவிழாவை சுவைத்திடுவோம், அவர்களின் அருள் பெற்று மகிழ்ந்திடுவோம்....

Post a Comment

புதியது பழையவை

Sports News