தமிழ் வளர்த்த தலைவர்கள்-2 -உ.வே.சாமிநாத ஐயர்


தமிழ் வளர்த்த தலைவர்கள்-2

( இது ஒரு புதிய தொடர். இந்த தொடரை ,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகத் துறை தலைவர் டாக்டர் .பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதுகிறார்கள் .
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த தொடர் வெளிவருகிறது.
 தமிழுக்கு தொண்டாற்றி ,மிகச்சிறந்த இலக்கியங்களைப் படைத்து, நல்ல எண்ணங்களை விதைத்து, மறைந்த புகழ் மிக்க தலைவர்களை இந்த தொடர் படம் பிடித்துக்காட்டுகிறது.)


"இருபதாம் நூற்றாண்டின் தமிழ் வரலாறு 

உ.வே.சாமிநாத ஐயர்"
-முனைவர்.ப.பாலசுப்ரமணியன்,
நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர். 
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம்,
திருநெல்வேலி.

உலகின் தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று . எந்த அடைமொழியை கொடுத்தாலும் தமிழை சிறப்பிக்க வார்த்தைகள் இல்லை என்பதுதான் உண்மை. 

பல்வேறு கால மாற்றங்கள் கடந்து இன்று வரை  நமது மொழி இளமைக் குன்றாமல் இருப்பதற்கான பல காரணங்களுள் ஒன்று நமது மொழியைக் காப்பாற்றுவதற்காக அரும்பாடுபட்ட தமிழறிஞர்கள். அவர்களுக்கு என்றும் நாம் கடமை பட்டுள்ளோம். 

அதில் ஒருவர் தனிப்பட்டு நிற்கிறார். அவர்தான் "தமிழ் முனிவர்" என்றும், "தமிழ்த்தாத்தா" என்றும் தமிழுலகம் பெருமையுடன் நினைவில் வைத்திருக்கும் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர். உ.வே.சா என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார்.

சுப்பிரமணிய பாரதியார்,  ரவீந்திர நாத் தாகூர் ஆகிய இரு மகாகவிகளும் உ.வே.சா. அவர்களை அகத்திய முனிவருக்கு ஒப்பானவர் என்று பாராட்டினார்கள் .. அதோடு இவரை பாராட்டி கவிதைகளும் புனைந்தனர்.  
அகத்தியரோடு ஒப்பிடும் காரணம் என்ன ?

ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பலவகைப்பட்ட 90-க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல் வடிவம் தந்து அவற்றை அழிவிலிருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார், 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரதையும் , கண்ணகியின் சிறப்பையும், மணிமேகலையின் துறவறம், அமுத சுரபி எல்லாம், நாமறியாமலேயே, போயிருக்கும். மணிமேகலை எனும் காப்பியதையும் அறிய வைத்தவர். பிற்கால சரித்திரப் புதினங்கள் பல தோன்றவும் காரணமானார்.

இவர் இல்லை என்றால் சீவகசிந்தாமணி எனும் நூலைப் பற்றி நாம் அறியாமலே, இருந்திருப்போம். இன்று அகநானூறு புறநானூறு என்று பிரித்து அறியப்படும், பண்டைய கவிதைகள் யாவும், அவை உருவாகிய நோக்கத்தை அறியாமல், ஒரே வகையில் இருந்திருக்கும்.

இவர் இல்லை என்றால் சங்க இலக்கியங்கள் என்று இன்று பெருமையாக மேற்கோள் காட்டும் நூல்களெல்லாம், ஓலைச்சுவடிகளில் மண்ணோடு மண்ணாகி இருக்கும். இது போல, ஏராளமான பழந்தமிழ் நூல்களை, தம் உடல் சிரமம் பாராமல், கண் துஞ்சாமல்,  கொண்ட எண்ணத்தில் உறுதியுடன் இருந்து, தம் சுக துக்கம் மறந்து தமிழ்நாடெங்கும் பயணம் செய்து, கண்டெடுத்து, மீட்டவர் உ.வே.சா. அவர்கள். 

இதற்காக, அவர் பட்ட சிரமங்கள், வார்த்தைகளில் அடங்காது. நூல்களைத் தேடிச் செல்லும் இடங்களில் அவருக்கு ஏற்பட்ட மோசமான அவமானங்கள் அவரை சமயத்தில், மனம் சோர்வடைய வைத்திருந்தாலும், தாம் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக இருந்து, இலக்கை அடைந்தார், உ.வே.சா. அவர்கள். பண்டைய நூல்களைத் தேடும் நெடிய பயணம், ஒன்றும் அத்தனை சுலபமாக இருந்திருக்கவில்லை, ஐயா அவர்களும் செல்வந்தருமில்லை, வறுமையில் வாடிய, தமிழ் அறிஞர்தான்.

மிக வறுமையான குடும்பச் சூழ்நிலை கொண்டதுதான், அவர் வீடும். இருந்தபோதிலும், தனது தேடுதல் வேட்கையை வறுமை தாக்க, ஒருபோதும் அவர் தளர வில்லை . எந்த நிலையிலும், தமது இலட்சிய தாகத்தை இழக்காமல், நூல்களை சேகரிப்பதில் இருந்து, பின்வாங்காமல் இருந்தார்.

 தமிழர்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய,  இருபதாம் நூற்றாண்டில் தமிழை காத்து அச்சுக்கு ஏற்றிய தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள் வரலாற்றை பார்ப்போம். 

1855-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் நாள் தமிழ்நாட்டின் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள உத்தமதானபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார் உ.வே.சா. தந்தை பெயர் வேங்கட சுப்பையர், தாயார் சரஸ்வதி அம்மாள். சிறுவயதில் அவர் திண்ணைப் பள்ளியில் ஏடு எழுத்தாணியும் கொண்டு பயின்றார். தமிழில் புலமைப் பெற்றிருந்த தந்தையிடமிருந்தே ஆரம்பத்தில் தமிழ் கற்றார் உ.வெ.சா. நிகண்டு, சதகம் போன்ற பழமையான நூல்களை உ.வே.சா அவர்களுக்கு கற்பித்தார் தந்தை.

உ.வே.சாவின் தந்தை, கல்வி ஒன்றே, என்றும் நிலையானது என்று, இவரை ஓய்வில்லாமல் படிக்கக் வைத்திருக்கிறார். சிறு வயதில் விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், தந்தை அந்த நினைப்பை மாற்றி,  நீ படித்துக்கொண்டிருக்க வேண்டும், என்று அறிவுறுத்தி, தொன்மையான தமிழ் இலக்கண நூல்கள் மற்றும் ஆங்கிலத்தை கற்க வைத்தார்கள். இதனால், நன்னூல், தொல்காப்பியம் போன்ற நூல்களில் பெரும் புலமை பெற்று விளங்கினார். இலக்கிய அறிவால், தந்தையின் இராமாயண விரிவுரைகளில் உதவி செய்து, நல்ல பெயர் பெற்று, குடும்ப வறுமை சிறிதளவில் சரியாக, வருமானத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
தன் 17ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக்கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் ஆறு ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மறைவுக்குப் பிறகு சுப்ரமணிய தேசிகர் என்பவரிடம் மாணவராக சேர்ந்தார். இப்படி பல அறிஞர்களிடம் பாடம் கற்றறிந்ததால் உ.வே.சா ஒரு தலைசிறந்த தமிழறிஞர் ஆனார்.



திருவாவடுதுறை ஆதீனத்தின மடத்தில் இருந்த காலம் : இதன் மூலம்தான், மகாவித்வான் அவர்களின் அணுக்கமும், ஆதீனகர்த்தரின் அருகாமையும் கிடைத்தது. அதுவே, குடும்பத்துடன் திருவாவடுதுறையில், குடியேற வைத்தது. மடத்தில் இருந்த காலத்தில்தான், தமிழில் முதல் புதினம் எனும் பெயர்பெற்ற பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூலை எழுதிய, மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் அறிமுகம் கிடைத்தது. இதுபோல, பல தமிழறிஞர்களுடன் பழகும் வாய்ப்பும், உ.வே.சா அவர்களுக்கு கிடைத்தது.

உ.வே.சா அவர்களின் வாழ்வை, திசைமாற்றிய நிகழ்வு !! திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டளைக்கிணங்க, குடந்தை முன்சீபாக வந்திருந்த இராமசாமி அவர்களை சந்தித்து, தாம் மீனாட்சிசுந்தரம் அவர்களின் மாணாக்கர் என்றும், தாம் படித்த நூல்களின் பெரும்பட்டியலை வாசித்தபோதும், அவற்றை ஒரு அணு அளவேனும் இலட்சியம் செய்யாது, இவற்றால் ஒன்றும் பயன் இல்லை, இந்த நூல்களின் மூலத்தை அறிந்திருக்கிறீர்களா" சீவக சிந்தாமணியைப் படித்திருக்கிறீர்களா என்று அவர் கேட்க, அவை கிடைக்க வில்லை, என்று இவர் மெல்லக்கூற, முன்சீப் உடனே, இவரிடம் சீவக சிந்தாமணி நூலின் நகலை கையில் கொடுத்து, படித்து வாருங்கள் என்று அனுப்ப, அதன் பின்னர் தான் படித்து, அந்த நூலின் பெருமையை, தமிழ் மொழியின் ஆளுமையை, வளத்தை உணர்கிறார். சமண மதக்கருத்துக்களை கொண்ட அந்த நூலைப் பல முறை படித்து, வார்த்தைகளின் விளக்கம் பெற முடியாமல், முன்சீப் அவர்களிடம் விவாதித்து, அதிலும் தெளிவு ஏற்படாமல், பல சமண அறிஞர்களிடம் சென்று, உ.வே.சா அவர்கள் விளக்கங்களைப் பெற்றதாக, அறிய முடிகிறது.

அதன் பின்னான முன்னேற்றம் : அதுபோன்ற சமண அறிஞர்களின் உரையாடலில் தான், சீவகனைப் பற்றிய அந்த காவியத்தைப் பற்றிய பல செவிவழிச் செய்திகளை அறிய முடிகிறது, மேலும், சிந்தாமணியின் நூலாசிரியர், திருத்தக்க தேவரின் வரலாற்றையும் அறிந்து கொள்கிறார். இதுபோல, தேடி சேகரித்த அனைத்துத் தகவல்களையும், அந்த நூற்பதிப்புடன் சேர்த்து, வெளியிட, அவை யாவும் நூலைப்பற்றிய, முழுமையான அறிமுகத்தை, படிப்பவர்களுக்குத் தந்தது. பல்லாண்டுகாலம், அவர் பாடுபட்டு திரட்டிய தகவல்களை, அவர்கள் படிக்கும்போது, அவற்றையும் தெரிந்துகொள்ள வைத்து, அனைவரின் பாராட்டையும் பெற்றுத் தந்தது. சைவ மடத்திற்கு தொடர்புடைய சைவராக இருந்தாலும், சமண சமயத்தின் நூலான சிந்தாமணியில், சமயங்கள் தலையிட அவர் அனுமதித்ததில்லை, சமயங்களைக் கடந்த, தமிழ் மொழியின் சுவையை நூலில் அனுபவிக்கும் போது, அதற்குத் தடை எதற்கு என்றவர், உ.வே.சா. அவர்கள். 

25-ஆவது வயதில் உ.வே.சா அவர்களுக்கு கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. அவர் கற்பித்த முறை மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. அதனால் பல மாணவர்கள் தமிழை நேசிக்கத் தொடங்கினர். 1903-ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இணைந்தார். அவர் சேர்வதற்கு முன் மாணவர்களால் மதிக்கப்படாத இருந்த தமிழ்த் துறைக்கு உ.வே.சா சேர்ந்த பிறகு புது மரியாதை கிடைத்தது. பற்றோடும், பாசத்தோடும் பாடம் கற்பித்த அவரது அணுகுமுறையால் மாணவர்கள் தமிழை மருந்தாக பார்க்காமல் விருந்தாக பார்க்கத் தொடங்கினர். 16 ஆண்டுகள் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் கற்பித்து பணியிலிருந்து ஓய்வு பெற்றார் உ.வே.சா.

அப்போதெல்லாம் படிப்பதற்கு புத்தகங்கள் இல்லை. பழமையான ஓலைச் சுவடிகள்தான் இருந்தன. அவை அச்சடிக்கப்படாமல் கைகளால் எழுதப்பட்டவை என்பதால் அவற்றை படித்து உணர்வதற்கே தனித் திறமை தேவைப்பட்டது. அதை படிப்பதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர் சொல்லும் புதிய பாடல்களை பிழையில்லாமல் எழுத்தாணி கொண்டு ஓலைகளில் எழுதுவார்கள்.

அக்காலத்தில் பல தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடி வடிவில்தான் இருந்தன. அவற்றை படியெடுப்பது சிரமம் என்பதால் ஒவ்வொரு இலக்கியத்திலும் ஒரு படிதான் இருக்கும். பல ஓலைச் சுவடிகள் செல்லரித்துப் போயிருந்தன. அவற்றையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அச்சாக வெளியிட்டாலொழிய அவற்றை தமிழுலகம் இழந்து விடும் என்று கலங்கினார் உ.வே.சா. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சிதறிக் கிடந்த பழங்கால இலக்கண, இலக்கிய நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை முறைப்படுத்தி பதிப்பிக்கும் அரிய பணியை தம் தலையாய பணியாக அவர் மேற்கொண்டார். அதற்காக அவர் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒருமுறை திருக்குறள் உரையுடன் கூடிய நூல் ஒருவரிடம் இருப்பதை அறிந்து அதை பெறுவதற்காக பல மைல்கள் நடந்து சென்றுள்ளார்.




கிடைத்தற்கரிய ஏடுகளின் அருமை தெரியாமல் அவை எப்படியெல்லாம் அழிக்கப்பட்டு வந்தன என்பதை "என் சரித்திரம்" என்ற புத்தகத்தில் அவர் ஆதங்கத்தோடு விவரிக்கிறார். வரகுண பாண்டியர் வைத்திருந்த சில ஏடுகள் கரிவலம் வந்த நல்லூர் ஆலயத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்று அவற்றைப் பற்றி விசாரித்தார் உ.வே.சா. குப்பை கூளங்களாக கிடந்த சுவடிகளை என்ன செய்வதென்று தெரியாததால் ஆகம சாத்திரத்தில் சொல்லியிருந்தபடி செய்துவிட்டோம் என்று கூறினார் அறங்காவலர் ஒருவர்.  என்ன செய்தீர்கள் என்று உ.வே.சா கேட்க பழைய ஏடுகளையெல்லாம் கண்ட இடத்துல போடக்கூடாதாம். ஏடுகளையெல்லாம் நெய்யில் நனைத்து ஒரு பெரிய குழி வெட்டி அக்னி வளர்த்து அதுலதான் போட வேண்டுமாம். அந்த ஏடுகளையெல்லாம் அப்படிதான் செஞ்சோம் என்று கூறினார். அதிர்ந்து போய் உள்ளம் பதறினார் உ.வே.சா. இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? அப்படி சொன்னால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் எரிக்க வேண்டும். என்று கொதித்துப் போனார் உ.வே.சா.

ஒருமுறை திருக்குறள் உரையுடன் கூடிய நூல் ஒருவரிடம் இருப்பதை அறிந்து அதை பெறுவதற்காக பல மைல்கள் நடந்து சென்றுள்ளார்.

மற்றொரு இடத்தில் பழைய சுவடிகளை தேடிச் சென்ற போது அவருக்கு கிடைத்த பதில் இதுதான்... "ஐயா எல்லாச் சுவடிகளும் நல்லா மக்கி போச்சு, பல சுவடி ஒடைஞ்சு போச்சு அதுல என்ன எழுதியிருக்குன்னு எங்களுக்கு படிக்க தெரில...சும்மா வீணா இடத்தை அடைச்சுகிட்டு இருக்கேன்னு சொல்லி எல்லா சுவடிகளையும் ஒரு கோணிப்பையில் கட்டி ஆடி பதினெட்டுன்னைக்கு ஆத்தோட விட்டுட்டேன்"... என்று கூறினாராம். இதுபோன்ற மூடச் செயல்களால் எத்தனை கருவூலங்கள் கரைந்தும், செந்தீயில் பொசுங்கியும் போயிருக்கும் என்று எண்ணி உயிர் உருக கலங்கினார் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இவற்றையெல்லாம் கடந்துதான் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்ற நூலை 1887-ஆம் ஆண்டில் ஓலைச் சுவடியிலிருந்து ஒரு புத்தகமாக தொகுத்து வெளியிட்டார். ஒரு நல்ல சிறந்த இலக்கியத்தை அழிவிலிருந்து காப்பாற்றிவிட்டோம் என்று அகமகிழ்ந்தார்.

அதன் பிறகு பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், குறுந்தொகை என பல அரிய நூல்களையும், ஓலைச்சுவடியிலிருந்து மீட்டு புத்தகங்களாக பதிப்பித்தார். 

குடந்தை கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழாசிரியராக தமிழ்ப் பயிற்றுவித்தார். உ.வே.சா. மதிப்புமிக்கப் பதவிகளையும் இவர் அலங்கரித்துள்ளார். ராஜா அண்ணாமலை செட்டியார் சிதம்பரத்தில் தாம் தொடங்கிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் (இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) முதல்வராகப் பொறுப்பேற்க உ. வே. சா. வை அணுகினார். சென்னை மாநிலக் கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றி பணிவோய்வு பெற்றிருந்த   உ. வே. சா. அவர்கள், அண்ணாமலை செட்டியாரின் அழைப்பினை ஏற்று மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வராக 1924-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார். சென்னை, அண்ணாமலைநகர், மைசூர், ஆந்திரா, காசி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலுள்ள பல்கலைத் தமிழ்க் குழுக்களில் உறுப்பினராயிருந்த உ.வே.சா. அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகப் புலவர் தேர்வுக்குழுத் தலைவர் பதவியிலும் பலஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.



மதுரையில் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கியதுடன் ‘செந்தமிழ்’ என்ற இலக்கியப் பத்திரிகை, பல நூல்கள் வெளியீடு ஆகியவற்றின் மூலம் தமிழ்ப்பணி செய்தவர் இராமநாதபுரம் பொ. பாண்டித்துரைத் தேவர். இவர் உ.வே.சா அவர்கள் மணிமேகலை, புறப்பொருள் வெண்பா மாலை ஆகியவற்றைப் பதிப்பிப்பதிலும் உதவி செய்தவர். பாண்டித்துரைத் தேவரின் தாயார் மறைவு (1898-ஆம் ஆண்டு ) குறித்து துக்கம் விசாரிக்கச் சென்றார் உ.வே.சா. அந்தப் பயணத்தில் அரசராகிய பாஸ்கர சேதுபதியையும் அவர் சந்திக்க நேர்ந்தது. தம் ஜமீனிலுள்ள ஒரு கிராமத்தையே உ.வே.சா.வின் பதிப்புப் பணியைப் பாராட்டி வழங்க விரும்பினார் மன்னர். அப்பொழுது சமஸ்தானம் கடன் தொல்லைகளுக்கு உள்ளாகியிருந்ததை நன்கு அறிந்திருந்தமையால் உ.வே.சா. தனக்கு வரும் கல்லூரி ஆசிரியர் பதவி தரும் ஊதியமே போதுமானது என்று கூறி அந்தப் பெருங் கொடையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.

தஞ்சை மாநகரில் 1903-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி அன்று ஏழாவது எட்வர்டு மன்னர் முடிசூட்டு நிகழ்வு தொடர்பாக நடந்த விழாவில்    உ. வே. சா, வின் தமிழ்த் தொண்டைப் பாராட்டி துணையாட்சியர் ஒரு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

அந்நாளில் நாட்டை ஆண்ட ஆங்கிலேய அரசு நாட்டில் சிறப்பான பணி புரிபவர்களைப் பாராட்டும் முகமாகப் பட்டங்கள் வழங்கும் பொழுது, உ.வே.சா விற்கு 1906-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று மகாமகோபாத்தியாயப் பட்டம் வழங்கி அவர் பணியைச் சிறப்பித்தது. உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த மணி ஐயர் அரசுக்கு உ.வே.சா. வின் தமிழ்ப்பணிகள் குறித்து கடிதம் எழுதி மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற உ.வே.சா. விற்கு இருக்கும் தகுதிகளை சுட்டிக்காட்டியிருந்தார். தமிழறிஞர் ஒருவர் மகாமகோபாத்தியாயப் பட்டம் (பெரும் பேராசான்) பெற்றது அதுவே முதல்முறை என்பதும், வடமொழி அறிஞர்களுக்கு மட்டுமே அப்பட்டம் அதுவரை வழங்கப்பட்டு வந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் கல்வித்துறை ரூ. 1000 பணமுடிப்பும் வழங்கியது.

இதனையொட்டி,  மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்ற உ.வே.சா விற்கு அவர் பணியாற்றிய சென்னை மாநிலக் கல்லூரியிலேயே 1906-ஆம் ஆண்டு ஒரு பாராட்டுக் கூட்டம் நடந்தது. சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியர் பொறுப்பில் இருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் விழாவிற்கு வருகை தந்து,  வாழ்த்துப் பாடலாக  மூன்று பாடல்களை அவரை வாழ்த்தி பாடினார். 
தமிழ்த் தாத்தா’ என்ற பட்டம் ‘உத்தமதானபுரம் வே. சாமிநாத ஐயர்’ அவர்களுக்கு கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி கொடுத்த பட்டம். இவர் பெற்ற அனைத்துப் பட்டங்களுடன் இவரது முழுப்பெயரும் “பிரம்மஸ்ரீ மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி திராவிட வித்யாபூஷணம் மகாவித்வான் டாக்டர் உத்தமதானபுரம் வே. சாமிநாதையரவர்கள் என்று குறிப்பிடப்படுவதையும் நூல்களில் காணலாம்.

1932-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. 

அறுபதாண்டுக் காலத்துக்கும் மேல் தமிழ்க் கல்வி ஆசிரியராகப் பணி ஆற்றிய தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் (1855-1942) தமிழுக்காகவே வாழ்ந்தவர். உ.வே.சா. என்ற பெயர் தமிழ் பதிப்புலக வரலாற்றில் சிறப்பிடம் பிடித்த பெயர். பழந்தமிழ் நூல் பதிப்பித்தலில் இவர் காட்டிய சிறப்பு அக்கறையாலேதான் சங்கத்தமிழ் நூல்கள் பலரையும் சென்றடைந்தன. இந்த நூல்களின் வாயில்களாகவே இன்று நாம் பழங்காலத்தில் தமிழரின் வாழ்வையும் வளங்களையும் அறிந்து கொள்கிறோம். 

சங்கத் தமிழர்களை தற்காலத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் உ.வே.சா. ஆவார்.  சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பலவகைப்பட்ட 90 க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை அச்சுப்பதிப்பில் தமிழர் கையில் கிடைக்க காரணமானவர்.. இவர் தமிழ் இலக்கியப் பதிப்புத்துறையின் முன்னோடிகளில் ஒருவர். தமிழின் செம்மொழித் தரத்திற்கு உ.வே.சா. பதிப்பித்த சங்கத்தமிழ் நூல்களே தக்க சான்றுகள் வழங்கின. பழந்தமிழர் வரலாற்றில் வெற்றிடங்கள் பலவற்றை நிரப்பும் தகவல்கள் அளித்தன. தமிழர் பெருமையை தமிழருக்கே உணர்த்தின. அரும்பாடுபட்டு,  ஊர் ஊராக ஏடு தேடி அலைந்து நூல் பதிப்பித்த இவரது உழைப்பின் பயனாகவே தமிழிலக்கியக் கல்வி பெரிதும் விரிவடைந்து தமிழில் ஆய்வுகளும் அதிகரித்துள்ளன.

தம் வாழ்நாள் முழுவதும் தமிழையே சுவாசித்த தமிழ்த்தாத்தாவின் உயிர் மூச்சு 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி அவரது 87-ஆவது அகவையில் நின்றது. அந்தக்கணம் இனிமேல் தம்மை யார் காப்பாற்றப்போகிறார் என்று எண்ணி தமிழன்னையும் கலங்கியிருக்க வேண்டும்.

உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை ‘என் சரித்திரம்’ என்று ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950ஆம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது. இன்றுவரை விற்பனை ஆகி வருகிறது.  தமிழர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் .


                                                                  ---------------------------


3 கருத்துகள்

  1. சமீபத்தில் உ.வே.சா அவர்களின் என் சரிதம் முழுவதும் வாசித்தேன்... தமிழ் கல்விக்காக அவர் தேடிச்சென்ற அறிஞர் பெரும்மக்கள் மற்றும் தமிழ் இலக்கிய நூல்கள் தேடி அலைந்து திரிந்த வரலாறு அனைத்தும் திறம்பட விவரித்திருந்தார்...தமிழ் இலக்கியம் பெருமை கொள்ள தக்க சிறந்த தன் வரலாற்று நூல்.

    பதிலளிநீக்கு
  2. மாணவர்கள் அனைவரும் அறிய வேண்டிய அவசியமான வரலாறு. தமிழ் இலக்கியங்கள் ஓலைச் சுவடியாய் இருந்தவற்றை புத்தகமாய் உலா வரக் காரணமாக இருந்த பிதாமகன்.
    அவரது வரலாற்றை இனிய எளிய நடையில் எழுதிய பாலசுப்ரமணியன் மிகுந்த பாராட்டுக்கு உரியவர். வளர்க்க அவர் தம் தமிழ் தொண்டு.

    பதிலளிநீக்கு
  3. சங்கர் பதிப்பகம் கோமதிநாயகம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News