தமிழ் வளர்த்த தலைவர்கள்- 6-அமுதகவி உமறுப்புலவர்



தமிழ் வளர்த்த தலைவர்கள்- 6

அமுதகவி உமறுப்புலவர் 
- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்,
நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர். 
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம், 
திருநெல்வேலி. 


அமுதகவி உமறுப்புலவர் இஸ்லாமிய சமுதாயத்தில் 16-ம் நூற்றாண்டில் பிறந்து, தமிழுக்கு தொண்டாற்றி சீறாப்புராணம் இயற்றியவர். மொழியை வளர்ப்பதில் சாதிமதம் தேவையில்லை என உலகிற்கு உணர்த்தியவர் அமுதகவி உமறுப்புலவர் ஆவார்.  

'சேகு முதலியார்' என்ற செய்கு முஹம்மது அலியார் அன்னார் மலையாள நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்க்கு வந்து, தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரத்தில் வாழ்ந்தார். அரபு தேசத்தின் வாசனைத் திரவிய வியாபாரியான இவர், அருகே இருந்த எட்டையபுரத்து மகாராஜாவிடம் வாசனைத் திரவியங்களை விற்று வந்தார். 
உயர்ந்த மணப்பொருட்களை வழங்கித் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சேகு முதலியார் தம் அருகிலேயே வாழ்ந்து வரவேண்டு மென்று மன்னர் விரும்பினார். எனவே, சேகு முதலியாரும் மன்னாரின் விருப்பிற்க்குக் கட்டுப்பட்டு, நாகலாபுரத்திலும் எட்டையபுரத்திலுமாக வாழ்ந்து வந்தார்.
1642 ஆம் ஆண்டு செய்கு முஹம்மது அலியாருடைய ஒப்பற்ற அருந்தவக் கொழுந்தாக 'உமறு' என்ற அழகிய குழந்தை பிறந்தது.
இளமையிலே எழிலும் கல்வியார்வமும் வாய்க்கப் பெற்ற சிறுவர் உமறு, எட்டையபுரத்து அரண்மனைத் தமிழ்ப்புலவராயிருந்த 'கடிகை முத்து புலவர்'என்பவரிடம்  தமிழ்க் கல்வி பயிலத் தொடங்கினார். பல்வகைக் கல்வி-கேள்விகளில் தேர்ந்த உமறு, தம் ஆசானின் பெருமதிப்பிற்குாரிய மாணவரானார்.இவ்வாறிருக்கையில்,ஒருநாள் வடநாட்டிலிருந்து புலமை பெற்ற 'வாலை வாருதி'என்ற புலவர் எட்டையபுர அரசவைக்கு வந்து சேர்ந்தார். தம்மை வாதில் வெல்லத் தகுதியுள்ளவர் யாருமில்லை என்று அவர் மார் தட்டிப் பேசிப் மற்ற புலவர்களை வாதுக்கழைத்தார். 
எட்டையபுரத்து அரசவை புலவர்களுக்கும்  சவால் விடுத்தது  அறிவித்தார். மன்னரும் அவருடைய வாதினை ஏற்று வெல்ல வேண்டும் என அரசவை புலவர்களிடம் விருப்பம் தெரிவித்தார். 
புலமைத் திறத்தாலன்றி,மாய மந்திரங்களாலேயே பல அரசவைப் புலவர்களை வெற்றிகொண்ட வாலைவாருதியைப் பற்றிக் அரசவை கடிகைமுத்துப் புலவர் கேள்வியுற்றிருந்தார். அதனால்,வித்தைகள் புரியும் வித்துவானைத் தம்மால் எவ்வாறு வெற்றிகொள்ள முடியுமென்ற நீங்காக் கவலையில் ஆழ்ந்திருந்தார்.
ஆசானின் கவலையை அறிந்த மாணவர் உமறு, அவரிடம் கவலைக்கான காரணத்தை கேட்டார். 
தம் ஆசிரியரிடம்  வாலைவாருதியைப் எதிர்த்து வாது செய்ய அரசவை செல்லுவதற்கான அனுமதியை வேண்டி பெற்றார். 
எட்டையபுரத்து அரசவைக்கு வந்து சேர்ந்தார். உடல் நலக் குறைவால் கடிகைமுத்துப் புலவர் வரவில்லையென்றும்,அவருக்குப் பதிலாக அவருடைய மாணவர் நான் வந்திருக்கிறேன்  என்று அறிவித்தார்.
வாலை வாருதி தம் சொற்பொழிவைத் தொடங்கலாம் என்றும் மன்னர் உத்தரவிட்டார். அதைக் கேட்ட வாலைவாருதி, தம் வலக்கையில் அணிந்திருந்த தங்கக் கடகத்தை அசைத்து மேலேற்றினார். வழக்கமாக அக்கடகத்திலிருந்து ஒலிக்கும் 'வாலைவாருதி என்றறியீரோ' என்ற சொற்கள், அன்றைக்கு மட்டும், 'வாலைவாருதி என்றறியாயோ பிள்ளாய்!' என்று பணிவாக உரைத்தது. 
அப்போது உமறுப் புலவர், தம் இடுப்பில் செருகியிருந்த யாழ்ப்பாணத்து எழுத்தாணியை எடுத்து நிலத்தில் ஊன்றி, "என் எழுத்தாணியே! இவருக்கெதிர் பேசு!" என்று கட்டளையிட்டார். ஒன்றும் நிகழவில்லை! பின்னும் உத்தரவிட்டார். அப்போதும் ஏதும் நிகழவில்லை! மூன்றாவது முறையிலும் முயன்று தோல்வி கண்ட உமறு, கண்கள் சிவக்க, முகத்தில் தீக்கனல் பறக்கக் கடுஞ்சினம் கொண்டு, எழுத்தாணியைப் பார்த்து, 'பேசு!'என்று உரக்கக் கூறி உத்தரவிட்டார். அவையோர் கிடு கிடுக்க அதிலிருந்து ஓசை ஒலித்தது.. அவ்வெழுத்தாணியிலிருந்து கீழ்க்காணும் பாடல் ஒலித்தது. 
"சமரதுர கததுங்க மனருஞ்ச பாசென்று
சரிசமா சனமீதிலே
அமரவொரு நரகொம்பு தினமுஞ்சு மாசெல்லு
மமுதகவி ராஜனானே
திமிரபகை வரைவென்ற பருதியெனு மெமதெட்டத்
தீரனணி வாயில்வித்வான்
உமறுகுமு றிடிலண்ட முகடும்ப டீரென்னு
முள்ளச்சம் வையும்பிள்ளாய்!"
கேட்டவர் உள்ளங்களை அதிர வைத்தது. 
இதனைச் கேட்ட  புலவர் வாலைவாருதி உள்ளம் பதைத்தது, உடல்  நடுநக்கியது, தனது மாய வித்தையெல்லாம் இந்த  அற்புதத்தின் முன் அற்பம் என்றுணர்ந்தார், எழுந்து சென்று உமறு புலவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரி, அரசவையை விட்டு வெளியேறினார்.
இந்நிகழ்ச்சி, மன்னருக்கு உமறுப் புலவர் மீது ஒப்பற்ற மதிப்பை ஏற்படுத்திற்று. மகிழ்ச்சிப் பெருக்கால் மன்னர் பாராட்டுகளையும், வெகுமதிகளையும் உமறுப் புலவருக்கு வழங்கி அனுப்பிவைத்தார். வெற்றி பெற்று வீடு திரும்பிய தம் மாணாக்கரை இறுகத் தழுவிக்கொண்ட கடிகைமுத்துப் புலவர், தாம் அப்போது முதுமை எய்திவிட்டதால், அன்றுமுதல் உமறே எட்டையபுரத்து அரண்மனை அவைப் புலவராக இருக்கவேண்டுமென்று ஆசி கூறி அனுப்பி வைத்தார். அன்று முதல் உமறுப் புலவர் எட்டையபுரத்து அரண்மனையை அலங்கரித்து வந்தார்.
சீறாப்புராணம் இயற்றப்பெற்ற வரலாறு
தமிழகத்தில் ஆங்காங்கிருந்த முஸ்லிம் மக்கள் இலக்கிய ஆர்வத்துடன் கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இலக்கியங்களின் உபந்நியாசங்களைக் கேட்டு வருவது அன்றைய வழக்கமாக இருந்தது. அக்காலத்தில், செய்கப்துல்காதிர் என்ற 'சீதக்காதி மரைக்காயர்' எனும் வள்ளல்  இதனை உணர்ந்து, முஸ்லிம்கள் அவர்களின் மார்க்க அடிப்படையில் அமைந்த பேரிலக்கியங்களின் உபந்நியாசங்களைக் கேட்கவேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தார்.
ஒருமுறை கீழக்கரை கொடை வள்ளல் சீதக்காதி மரைக்காயர் வணிக நிமித்தமாக எட்டயபுரம் மன்னரைக் காண அரசவைக்கு வந்தார், அப்போது அமுதகவியரசு உமறுப்புலவரின் திறன் கண்டு, முகமது நபி வாழ்க்கையை சீறாப்புராணமாக எழுத உமறுப்புலவரை தன்னுடன் கீழக்கரைக்கு அழைத்துச் சென்றார்.
வள்ளல் பெருமானாரின் வரலாற்றுச் செய்திகளை உரையாகத் வேண்டும். அதற்கான வழிகாட்டுதலை யார் செய்வார் என நினைத்த போது, 
சீதக்காதி வள்ளல் தம் ஆன்மீக வழிகாட்டியான 'இறைநேசர் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா' அவர்களை அணுகி, பெருமானாரின் வாழ்க்கைச் சரிதையினைக் காவியமாகப் பாட உமறுப் புலவருக்கு உரை வழங்குமாறு வேண்டினார். 
உமறுப் புலவரின் அலங்கோலத் தோற்றத்தைக் கண்டு, உரை கொடுக்க அப்பா அவர்கள் இசையவில்லை. உளம் வாடிய உமறுப் புலவர், பெருமானாரின் வாழ்வைக் காவியமாக்கி, அதன் நிமித்தமாக அன்னாரைத் தாம் காணும் நாள் எந்நாளோ என்று ஏங்கி, பள்ளிவாயிலுக்குள் சென்றமர்ந்து தம் உள்ளத்து உணர்ச்சிகளைப் பாக்களாகப் பாடிக்கொண்டிருந்தார். இவ்வாறு எண்பத்தெட்டு பாடல்கள் பாடி முடித்தபோது புலவரைத் துயில் ஆட்கொண்டது. பெருமானார் (ஸல்) அவர்கள், புலவரின் கனவில் தோன்றி, மறுபடியும் அப்பா அவர்களிடம் சென்று உரை கேட்குமாறு கூறினார்.
 கண் விழித்த உமறுப் புலவர் கருணைகாட்டிய  நபியவர்களின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, அப்பா அவர்களிடம் சென்றார். சரிதம் உரை வேண்டி நின்றார். 
முன்பு நிராகரித்த ஷெய்கு சதக்கத்துல்லா அப்பா உமறு  புலவரைவரவேற்று உபசரித்தார். சீறா உரை கொடுக்கச் சம்மதித்தனர். அப்பா அவர்கள் தாங்களாகவும், தம் மாணாக்கராகிய மஹ்மூது பந்தர் என்று வழங்க பெற்ற 'பறங்கிப் பேட்டையைச் சார்ந்த 'மாமூ நைனார் லெப்பை' என்பார் மூலமும் உமறு புலவருக்கு உரை வழங்கினர். 
கல்விக்கடல் மகான் சதக்கத்துல்லா அப்பா இடம் உரைபெற்று, இறையருளாளர், முகமமது நபி நல்லாசியுடன் சீறாப்புராணம் எழுத ஆரம்பித்தார்
இதற்கிடையில்,சீறாவைப் பாடப் பேருதவியாக இருந்த சீதக்காதி மரைக்காயர் அவர்கள் இறையடி சேர்ந்தனர்.காப்பியம் படைத்து வந்த உமறுப் புலவரின் உள்ளத்தில் போரிடி விழுந்தது. 
சீதக்காதி மரைக்காயர் அவர்களின்  மைத்துனர் அபுல் காசிம் மரைக்காயர்  புலவரை அன்புடன் ஆதரித்தார்., சீறாவை இயற்றத் தாம் உறுதுணையாயிருப்பதாக வாக்களித்து உமறுப்புலவரை பரங்கிப்பேட்டை அழைத்துச்சென்று, பல உதவிகளும் செய்து ஊக்கம் அளித்தார்..
 'சீறாப்புராணம்" என்ற ஒரு பெருங்காவியம் உருவெடுத்தது. ஈடிணையில்லா இப்பேருதவிகளுக்கு நன்றிசொல்லும் விதமாக  உமறுப் புலவர், அபுல் காசிம் மரைக்காயரைத் தம் சீறாப்புராணத்தில் பல இடங்களில் மறவாமல் நினைவு கூர்ந்து போற்றி புகழ்ந்துள்ளார்.
செயற்கரிய சீறாப்புராணம் காவியத்தை 3 காண்டங்களாகவும், 92 படலங்களாகவும் 5027 விருத்தங்களாகவும்  சிறப்புடன் எழுதிமுடித்தார். பறங்கிப்பேட்டையிலேயே நூல் அரங்கேற்றம் நடந்தது. இந்நூல் தமிழ் காப்பிய மரபுப்படி நாட்டுப்படலம், நகரப்படலம், என்ற முறையில் அரபு நாட்டு இயற்கை வளத்தை வர்ணித்துள்ளது. 
அரங்கேற்றமும் முடித்தபின் எட்டயபுரம் திரும்பிய உமறுப்புலவர் சிறிது காலத்திற்குப் பின் கி.பி.1703-ல் எட்டயபுரத்தில் இயற்கை எய்தி  நல்லடக்கமானார்.
எட்டயபுரத்தில்உமறுப் புலவர் சமாதி, முதலில் பிச்சை என்பவரால் 1912ம் ஆண்டு நினைவுச் சின்னமாக உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் 2007ம் ஆண்டு இப்போதிருக்கும் இந்தப் புதிய மணி மண்டபம் கட்டப்பட்டு சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. 
மண்டபத்திற்குள்ளே பச்சை நிறத்திலான துணியைக் கொண்டு சமாதியை அலங்கரித்திருக்கின்றனர். தினம் அங்கு மக்கள் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். 
சீறாப்புராணம் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டது, சீறத் அல்லது சீறா என்பதற்கு வாழ்க்கை என்பது பொருள். எனவே சீறாப்புராணம் என்பதற்கு நபிகள் பெருமானின் புனிதமான வாழ்க்கை வரலாறு என்று பொருள் கொள்ளலாம்.
இந்த நூலை 1842ல் அப்துல் காதிர் நெய்னா லெப்பை ஆலிம் முதலில் பதிப்பித்தது வெளியிட்டார். இந்நூலுக்கு செய்கு தம்பி பாவலர் விவான உரை எழுதினார்.  
இஸ்லாமியத் தமிழிலக்கியங்களில் சீறாப் புராணத்திற்கு தனியோர் இடமுண்டு.
                                                ------------------------------------------





Post a Comment

புதியது பழையவை

Sports News