தமிழுக்கும் கல்விக்கும் தன்னை அர்பணித்தவர் மனோன்மணியம் பெ.சுந்தரனார்

 தமிழுக்கும் கல்விக்கும்

 தன்னை அர்பணித்தவர்

 மனோன்மணியம் பெ.சுந்தரனார் 

- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்

நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர். 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் .

திருநெல்வேலி.


சென்ற நூற்றாண்டின் இறுதியிலே பெரும்புகழ் பெற்று விளங்கிய தமிழ்ப் பெரியார்களுள் அறுவர் சிறப்பாக எடுத்துச் சொல்லுதற்குரியர். அவர்களாவர்: ராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை, வி.கனகசபைப் பிள்ளை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பூண்டி அரங்கநாத முதலியார், இராஜமய்யர் என்று பெயர் வழங்கிய சுப்பிரமணிய அய்யர், பெ. சுந்தரம் பிள்ளை.

 இவ்அறுவரும் ஆங்கிலம் கற்று மேனாட்டுக் கலைப் பண்பில் திளைத்துத் தம் தாய்மொழியாகிய தமிழ் மொழிக்கு ஒவ்வொரு வகையிலே தொண்டு புரிந்த வர்கள்... சுந்தரம் பிள்ளை தமிழிலக்கிய ஆராய்ச்சி, தமிழிலக்கிய சரிதம், தமிழ் நாடகம், தத்துவநூற் புலமை இவற்றில் எல்லாம் மேம்பட்டு, சிறந்த நூல்கள் இயற்றி, இத்துறைகள் வளர்ச்சியடை வதற்குக் காரணமாயிருந்தார்". என்று சுந்தரனாரைப் பற்றி மதிப்பிட்டுப்  வையாபுரிப் பிள்ளை கூறியுள்ளார்.

வையாபுரிப் பிள்ளை குறிப்பிடும் இவர்கள் அனைவருமே தேச உணர்ச்சி, சமூக சீர்திருத்தம், புதுமையைத் தழுவிக் கொள்ளுதல், பழமையைப் போற்றுதல் ஆகிய பண்புகளைக் கொண்டிருந்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடியவர், மனோன்மணியம் நாடகத்தை எழுதியவர் என்ற சிறப்புகளை கொண்ட  சுந்தரனார் தத்துவவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர், கல்வெட்டு ஆய்வாளர் என பன்முகத்திறமை கொண்டவர்.

திருவிதாங்கூர் சமஸ்தானம் ஐரோப்பாவுடன் வாணிகம் செய்ய உருவாக்கிய சிறு துறைமுக நகரம் ஆலப்புழை. இது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ளது. இந்த ஆலப்புழை ஊரில் பெருமாள் பிள்ளை  – மாடத்தி அம்மாள் தம்பதியினருக்கு  மகனாக 1855ம் ஆண்டு சுந்தரம் பிறந்தார்.

மதுரை சோமசுந்தரக் கடவுளின் நினைவாக சுந்தரர் எனப் பெயரிட்டப்பட்டது.   நாஞ்சில் நாட்டை பூர்விகமாக கொண்ட  இவரின்  தந்தையார் தொழில் நிமித்தம் காரணமாக ஆலப்புழைக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தார்.

சுந்தரனார் பிறப்பதற்கு முன், சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பே, கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதி முறை ஆளுகையின் கீழ் திருவிதாங்கூர் சமஸ்தானம் வந்துவிட்டது. அவர் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் பேரரசின் நேரடி ஆளுகைப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பிரிட்டிஷ்  இந்தியப் பேரரசின் சென்னை மாகாணத்தின் அங்கம் ஆகிவிட்டது.

அந்த வகையில் காலனிய அரசு இயந்திர அலுவல்முறையும், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பிற பண்பாட்டுக் களங்களும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உருவாகின. ஆலப்புழையில் பெ.சுந்தரனார் தொடக்கப் படிப்பைத் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், மெட்ரிக் குலேசன் படிப்பை ஆங்கில வெர்னாக்குலர் பள்ளியிலும் முடித்தார்.

இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில், 1871-இல், அதாவது தமது 21வது வயதில் இளங்கலைப் பட்டத்தையும், 1880ஆம் ஆண்டு, தமது 25வது வயதில் முதுகலைப் பட்டத்தையும் தத்துவத்தில் பெற்றார்.


பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வி துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885-ல் டாக்டர் ஹார்வி துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரம் பிள்ளையைத் தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்பட வகித்தார். 

1878-ல் தாயாரையும், 1886-ல் தந்தையையும் இழந்தார். இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.

திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்கள் கிடைத்தன.

திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ் பள்ளிக்குத் தலைமையாசிரியாகப் பணியாற்றும் வாய்ப்பு சுந்தரனாருக்கு கிடைத்தது. அப்பள்ளியின் வளர்ச்சியில் பெரிதும் ஆர்வங் கொண்ட அவர் அப்பள்ளியை  திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியாக மாற்றி அதன் முதல்வராக 1877 முதல் 1879 வரை பணியாற்றினார்.

திருநெல்வேலியில் சைவமும் , தமிழும் சிறந்து விளங்கிய காலத்தில்  அவர் பணியாற்றினார். திருநெல்வேலியில் நடக்கும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு , தாமும் மேடை நிகழ்வுகளில் உரை ஆற்றினார். தமிழ் ஆய்வுக் கட்டுரைகளை உள்ளூர் இதழ்களில் தொடர்ந்து எழுதி தமிழறிஞர்களின் பேராதரவைப் பெற்றார். திருநெல்வேலிக்கு அருகில் உள்ள  கோடக நல்லூரில் உள்ள சுந்தர சுவாமிகள் என்பவரோடு அடிக்கடி தொடர்பு கொண்டார். சமய நெறி, வேதாந்தம், சித்தாந்தம், தத்துவம் ஆகியவற்றில் தமக்கு ஏற்படும் ஐயங்களை தீர்த்துக் கொண்டார்.

சுந்தர சுவாமிகளை தன் ஞான குருவாகவே ஏற்றுக் கொண்ட சுந்தரனார் தனது நாடக நூலான மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பை வழங்கி அவருக்கு சிறப்பு செய்தார்.


கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894-ம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.

‌அக்கல்லூரியில் மேல்படிப்பை தொடர சுந்ரனார் விரும்பிய போது அக்கல்லூரி முதல்வர் இராஸ் என்பவர் சுந்தரனாரின் கற்கும் தனித்த ஆற்றலைக் கண்டு வியந்து நேரில் அழைத்தார். மேற்படிப்பை படித்துக் கொண்டே தத்துவப் பேராசிரியராக பணியாற்றும்படி கேட்டுக்கொண்டார்.

முத்தமிழில் இயல் , இசை, கூத்து அல்லது நாடகம் ஆகிய மூன்று பகுதிகள் உண்டு. 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இயல், இசையை விட நாடகத்தமிழ் நலிவுற்றுக் காணப்பட்டது.

‌தமிழ் மரபுக்கேற்ப நாடகக்கலையை உருவாக்க விரும்பிய சுந்தரனார் தமது கல்லூரி நிறுவனரான அரசரிடம் கூறி , லிட்டன் பிரபு எழுதிய நாடக நூல்களை வரவழைத்துப் படித்தார். லிட்டன் பிரபு எழுதிய “இரகசிய வழி” (The secret way) நாடகம் பிடித்துப் போனது. அக்கதையை மூலக் கருவாக அமைத்து “மனோன் மணீயம்” நாடக நூலைப் படைத்தார். 

ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணியம் இவரால் 1891-ம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. இந்நூல் தமிழ் நாடக வரலாற்றில் தன்னிகரில்லா இடத்தைப் பிடித்தது. இதன் இரண்டாம் பதிப்பை வையாபுரி பிள்ளை வெளியிட்டார். மூன்றாம் பதிப்பை சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் (1933) வெளியிட்டது. 25 பதிப்புகளுக்கு மேல் வெளிவந்து இன்றளவும் படிப்பவர் மனதைப் பறித்து வருகிறது.

நாடக மறுமலர்ச்சிக்கு திருப்புமுனையாக அந்நூல் அமைந்தது.

அதிலிருந்து“மனோன் மணீயம்” சுந்தரனார்  என்று அவர் அழைக்கப்பட்டார்.

மனோன்மணீயம் நூலின் மற்றொரு உயிரான பகுதி தமிழ்மொழியை கடவுளாக உருவகப்படுத்தி சித்தரிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகும். அதில் திராவிடநல் திரு நாடு என்று தமிழ்நாடு சுட்டப் பெற்றிருக்கும். மனோன்மணியத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970-ல் அறிவிக்கப்பட்டது.

மனோன்மணியம் நாடகத்தில் தத்துவ விவாதங்கள் உண்டு. தத்துவ ஆராய்ச்சியின் பயனாகவே சுந்தரனார் வரலாற்று ஆராய்ச்சியிலும் புகுந்தார் என்பது வையாபுரிப் பிள்ளையின் கூற்று. 

திராவிடம் என்ற சொல்லை சுந்தரனார் பயன்படுத்தியிருந்தாலும் தமிழ் மொழியில்  இருந்துதான் ஏனைய தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய மொழிகள் தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார். 

 தமிழ்த் தாய்க்கு இவர் இயற்றிய பாடலின் மூலம் இவரது மொழிப்புலமை, வரலாற்று புலமை, ஆய்வுபுலமை,  தேசபக்தி நன்கு புலப்படும்.  

1970ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இவரின்  பாடல்  தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக  அறிவிக்கப்பட்டது

முழுமையான தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் பின்வருமாறு:

“நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"


இப்பாடலின் பொருள், 

நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கிற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த தமிழர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

இந்திய வரைபடத்தில் நாம் காஷ்மீரை தலையாக வைத்து பார்க்கிறோம். இப்பாடலின் பொருளை உணரவேண்டுமெனில் தென்னிந்தியாவை மேலே வைத்து தமிழகத்தை தலைப்பகுதியாக வைத்து பார்க்க வேண்டும்.

19.12.1896இல்  ஜே.எம்.நல்லசாமிப் பிள்ளைக்கு அவர் எழுதிய பின்வரும் கடிதம் தெரிவிக்கிறது. “பொதுவாக ஆரியத்தத்துவம், ஆரிய நாகரிகம் என்றெல்லாம் சொல்லப்படுவனவற்றில் பெரும்பகுதி உண்மையில், அடித்தளத்தில் திராவிட அல்லது தமிழ்த்தத்துவமே ஆகும் ( “Most of what is ignorantly called Aryan Philosophy, Aryan civilization is literally Dravidian or Tamilian at the bottom.” (19-12-1896)

‌திருவிதாங்கூர் அரசு 1896 ஆம் ஆண்டு கல்வெட்டுத்துறையை உருவாக்கியது.  சுந்தரனார், அரசுக் கல்வெட்டுத் துறையின் ‘மதிப்புறு தொல்லியல் ஆய்வாளராக’ நியமிக்கப்பட்டார். அவர் திருவிதாங்கூரின் பல பகுதிகளிலும் கிடைத்த கல்வெட்டுக்களைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.

12 முதல் 14ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வேணாட்டு திருவடி அரசர்கள் வரலாற்றையும் அதில் வரலாற்றில் அறியப்படாத 9 வேணாட்டு அரசர்கள் குறித்தும் கல்வெட்டுச் சான்றுகளோடு எழுதினார். சுந்தரனாருக்கு முன்பு சுகுணி மேனன்  எழுதிய திருவிதாங்கூர் வரலாறு எனும்  நூலானது நம்பத்தகுதியற்ற ஆதாரமற்றது என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சுந்தரனார் எழுதிய கல்வெட்டு குறித்த ஆய்வுகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

‌நூற்றொகை விளக்கம்,  ‘சிவகாமி சரிதம்’, ‘ஒரு நற்றாயின் புலம்பல்’, ‘பொதுப் பள்ளியெழுச்சி’, ‘அன்பின் அகநிலை’ ஆகிய கவிதை நூல்களும், ‘ஜீவராசிகளின் இலக்கணம்’,  ‘புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும்’ ஆகிய உரைநடை நூல்களும்,  ‘உரை நடை மடல்,’ ‘கவிதை மடல்’ ஆகிய மடல் நூல்களும் சுந்தரனார் எழுதிய நூல்களாகும்.

திருவிதாங்கூர் அரசர் வரலாறு குறித்து எழுதிய ஆங்கில நூல், மனோன்மணியம் கவிதை நாடகம், நூற்றொகை விளக்கம், திருஞானசம்பந்தர் காலம் பற்றியும் நம்பியாண்டார் நம்பியின் காலம் பற்றியும் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், பத்துப்பாட்டை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்தும் அவற்றில் சிலவற்றை மொழிபெயர்த்தும் எழுதிய கட்டுரை ஆகியவை சுந்தரனாரின் தமிழியல் பங்களிப்புகள் ஆகும் . 

நூற்றொகை விளக்கம் என்ற நூல் சுந்தரனார் திட்டமிட்டிருந்த மிகப் பெரிய தத்துவ ஆய்வுநூல் திட்டத்தின் ஒரு சிறிய பகுதியே ஆகும்.

நூற்றொகை விளக்கம் என்ற தலைப்பில் உள்ள நூல் என்ற சொல் இன்று நாம் பயன்படுத்தும் புத்தகம் என்ற பொருளைக் குறிக்கும் சொல் அல்ல; (அறிவுத்) துறை என்ற சொல்லுக்கு ஈடானது ஆகும். நூல் என்பது அறிவினை உணர்த்தும் கருவி என வரையறுக்கும் சுந்தரனார், நூலும் சாஸ்திரமும் ஒரு பொருளுடையன என்று கூறுகிறார். “சிறப்புப் பொருள்களை நீக்கிப் பொதுவாக எதனையாவது வரன்முறை சாஸித்து ஒழுங்குபடுத்தி அறிவிப்பது என்ற பொது அர்த்தத்தை மாத்திரம் தருவதாகக் கருதில் சாத்திரமும் நூலும் ஒரு பொருளுடையனவேயாம்” என்பது சுந்தரனார் கூற்று.

அதுமட்டுமல்லாமல் நூற்றொகை விளக்கம் சூத்திரங்களுக்கு எழுதிய விளக்கவுரையிலும் மரபான அத்வைத மரபிலோ, சித்தாந்த மரபிலோ நில்லாமல், ஆனால் அதே வேளையில் மேற்கத்திய தத்துவ மரபிற்குள்ளும் கரைந்து போகாமல், அறிவு, அறிவுப் புலங்கள் பற்றியெல்லாம் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களைப் போன்று முழுதளாவிய நோக்கில், புதிய வகையில் தமது சொந்த மரபுநிலை நின்று சிந்தனை செய்கின்றார்.

திருஞானசம்பந்தர் காலம் பற்றிய ஆய்வுப் பணியில் சுந்தரனார் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கியங்களின் காலத்தை நிர்ணயிப்பதில் அன்றைய ஐரோப்பிய அறிஞர்களிடையே நிலவிய இன மையவாதக் கண்ணோட்டம் நிலவியது. அதன் விளைவாக காலத்தை முன்தள்ளுவதிலும் பின்தள்ளுவதிலும் அறிவுக்குப் பொருத்த மில்லா வாதங்கள் நிலவின. அந்த நிலையில் நியாயத் தருக்க முறைப்படி திருஞானசம்பந்தர் காலத்தை கி.பி. 7ஆம் நூற்றாண்டு எனச் சுந்தரனார் நிறுவினார். இது தமிழ் இலக்கியங்களின் காலவரிசையைத் தெளிந்து கொள்வதில் மிகப் பெரிய பங்களிப்பைச் செலுத்தியது.

சுந்தரனாரின் படைப்புகளில் மனோன்மணியம் நாடகமே சுந்தரனாரைத் தொடர்ந்து தமிழ்ச் சமூகம் நினைவில் வைத்துக்கொள்ள காரணம். இந்த நூல் இன்றுவரை தமிழ்க் கல்வியில் நாடகப் பனுவல் பாடநூலாக இருந்து வருகிறது. இந்த நூலில் ஒரு விதமான நவீன தேசிய உணர்ச்சி தெரிவதாக வையாபுரிப் பிள்ளை எடுத்துக் காட்டியுள்ளார்.

வாழ்வின் இறுதிக் காலத்தில்,  தான் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்கு ஹார்வி புரம் எனப் பெயர் சூட்டினார்.  தனக்கு உதவிய தத்துவப் பேராசிரியர் இராபர்ட் ஹார்விக்கு நன்றி செலுத்தவே இப்பெயரை சூட்டியதாக கூறினார்.  தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. 

நூலகத் துறை பற்றி சுந்தரனாரின் சிந்தனை : 

பேரறிவு, சிற்றறிவு, புலனறிவு என்று அறிவை மூன்றாக வகுக்கின்றார். அதேபோல நூலையும் மதநூல், பொது நூல், கலைநூல் என்று மூன்றாக வகுக்கிறார். மத நூல், கலை நூல் ஆகிய இரண்டையும் அதிகம் பேசாது, பொதுநூல் குறித்து விரிவாகப் பேசுகிறார்.

முதல் நூல் (departmental sciences), வழிநூல் (derived sciences), சார்புநூல் (practical sciences) என பொதுநூலை மூன்றாகப் பகுக்கிறார். தத்துவநூல், கணித நூல், சத்தி நூல், இரசாயன நூல், உயிர் நூல், உளநூல் ஆகியவை பொதுநூல். சோதிடநூல், பௌமிய நூல், வியாகரணம் முதலானவை வழிநூல்.

தருக்க நூல், தரும நூல், சிற்ப நூல், நாவீகம், தனுர் வேதம், ஆயுள் வேதம் முதலானவை சார்பு நூல். அறிவை வகைப்படுத்திய முறையிலும், நூலை வகைப்படுத்திய முறையிலும் அவர் மரபார்ந்த கலைச்சொற்களைப் பயன்படுத்தினாலும், அச்சொற்களைப் புதிய அர்த்தங்களைச் சூத்திர விளக்கத்தில் அளிக்கிறார். 

சுந்தரனார் மேற்கத்திய அறிவுப்பரப்பை ஆர்வத் தோடு வரவேற்று உள்வாங்கிக் கொண்டாலும், தமிழ் மரபில் நின்றே சிந்தனை செய்துள்ளார். அறிவுத் துறையாகிய நூல்களை அவர்  வகைதொகைப்படுத்தி விளக்கும் முறை இதனை உணர்த்துகிறது.

தத்துவத்துறையிலும், தமிழ்நாடகத் துறையிலும், கல்வெட்டுத்துறையிலும் பெரும் புகழ் பெற்ற  சுந்தரனார் 26.04.1897 ஆம் நாள்  நாற்பத்திரெண்டாவது வயதில் காலமானார்.

42 ஆண்டு காலமே வாழ்ந்த சுந்தரனார் அதில் 21 ஆண்டுகள் மகத்தான பணிகளை செய்துள்ளார், தமிழுக்கும், கல்விக்கும் அவர் செய்த பணிகளும் , நூலகத்துறையில் அவரது சிந்தனைகளும் என்றும் போற்றுதலுக்குரியது.  

                                                        --------------------------


Post a Comment

புதியது பழையவை

Sports News