ராஜராஜ சோழன் உருவாக்கிய கலைச்சின்னங்கள்----அமுதன்

ராஜராஜ சோழன் உருவாக்கிய

கலைச்சின்னங்கள்

தொல்லியல் துறையால் தொலைந்து விடக்கூடாது

--- அமுதன் ---


 தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சென்று இருக்கிறீர்களா?

1010 ஆண்டுகளுக்கு முன், மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு, எத்தனையோ இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்ட  நிலையிலும், சிறிய கீறலுக்குக் கூட இடமளிக்காமல், புதுக்கருக்கோடு உயர்ந்து நிற்கும் அந்தக் கலைப்படைப்பு, உலக அதிசயங்களில் ஒன்று.

அங்கே தமிழர்களின் சாதனைச் சரித்திரமாக வானுயர்ந்து நிற்கும் கோபுரத்தை நீங்கள் அண்ணாந்து பார்த்து இருக்கலாம்.


216 அடி உயர கோபுர உச்சிக்கு 80 டன் கிரீடக் கல் கொண்டு செல்லப்பட்ட தொழில் நுட்பத்தை அறிய முடியாமல் திகைத்து இருக்கலாம்.

கருவறையில் உள்ள பிரமாண்ட லிங்கத்தை, வியப்பு கலந்த பக்தியுடன் தரிசித்து இருப்பீர்கள்.

பெரிய புத்தகம் கொள்ளும் அளவிலான ஏராளமான கல்வெட்டு வாசகங்கள், கோயில் முழுவதும் செதுக்கப்பட்டது பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.

கருவறையின் மீதே உயர்ந்த கோபுரத்தைக் கட்டியது ஏன்?  அந்தக் கோபுரத்தின் உள்கூட்டை லிங்கம்போல அமைத்த ரகசியம் என்ன? என்பதற்கு விடை தெரியாமல் உங்கள் உங்கள் மனம் அலைபாய்ந்து இருக்கலாம்.

இவை மட்டுமல்ல. இன்னும் பல அதிசயங்கள் தஞ்சைக் கோயில் வளாகத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அவைகளுக்கெல்லாம் மேலாக சில 'ரகசிய' அம்சங்களும் தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ளன.

யார் கண்களுக்கும் தென்பட்டு விடாதபடி, கோயிலின் முதல் தளத்தில் அடைந்து கிடக்கும் அவை என்ன?



தஞ்சைப் பெரிய கோயில் அதிசயங்களின் முத்தாய்ப்பு, அந்தக் கோயிலின் முதல் தளத்தில்பதுக்கிவைக்கப்பட்டு இருக்கிறது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரிந்து இருக்கும்?

மாமன்னர் ராஜராஜன் வழிகாட்டுதலில் பணியாற்றிய ஆற்றல் மிகுந்த ஓவியர்கள் தீட்டிய வண்ண ஓவியங்கள், ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும் அங்கே உயிர்ப்போடு இருக்கின்றன என்பது சிலருக்குச் செவி வழியாகத் தெரிந்து இருக்கலாம்.

ஆனால், அவற்றைப் பார்த்த அதிர்ஷ்டசாலிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இயற்கையாகக் கிடைத்த வண்ணக் கலவையைக் கொண்டு, கோயிலின் முதல் தளத்தில் உள்ள குறுகிய இடைவெளி கொண்ட சுவர் மீது 10 அடி உயரத்துக்கு பிரமாண்டமாக வரையப்பட்ட ஓவியங்கள், அஜந்தா ஓவியங்களுக்குச் சவால்விடக் கூடியவை.

(முன் ஒரு காலத்தில் அந்த ஓவியங்கள் மீது சுண்ணாம்புக் கலவை பூசப்பட்டு, அதில் புதிய ஓவியங்கள் வரையப்பட்டன என்பதையும், புதிய ஓவியங்களுக்குள் புதைந்து கிடந்த ராஜராஜன் காலத்து ஓவியங்கள் 1931-ம் ஆண்டு பேராசிரியர் எஸ்.கே.கோவிந்தசாமியால் எவ்வாறு கண்டுபிடித்து மீட்கப்பட்டன என்பதையும்ஆயிரம் ஆண்டு அதிசயம்” (வெளியீடு: தினத்தந்தி பதிப்பகம், ஆசிரியர்: அமுதன்) என்ற நூலில் விளக்கமாகப் பார்க்கலாம்)



இந்த ஓவியங்கள் மட்டும் அல்ல-

பரத நாட்டியக்கலையின் 108 கரணங்களை, சிவனே அபிநயம் பிடித்து ஆடிக்கொண்டு இருப்பது போன்ற அற்புதமான சிற்பத் தொகுதிகளும் அங்கே உள்ளன.

வேறு எந்தக் கோயிலிலும் காண முடியாத அதிசயமான அந்த அரிய சிற்பத்தொகுதிகள், தஞ்சைப் பெரிய கோயிலின் முதல் தளத்தில்சிறைவைக்கப்பட்டு இருக்கின்றன என்பதும் பலருக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

இத்தகைய அரிய கலைப்படைப்புகள், பல ஆண்டுகளாக தொல்லியல் துறையால் இருட்டறையில் பூட்டப்பட்டு மூச்சு திணறிக் கொண்டு இருக்கின்றன.

அவற்றைப் பூட்டி வைத்து இருப்பதால் தொல்லியல் துறை சாதிக்கப் போவது என்ன?


தஞ்சைப் பெரிய கோயிலின் முதல் தளத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியங்களும், பரத நாட்டியக் கலையின் 108 கரணங்களை விளக்கும் சிற்பத்தொகுதியும் எவரும் பார்த்து விடாத வண்ணம்அடைத்துவைக்கப்பட்டு இருப்பதில் ஒரு பெரிய ஆபத்தும் இருக்கிறது என்பதைக் கடந்தகால வரலாறு சுட்டிக் காட்டுகிறது.

மராட்டிய மாநிலத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற அஜந்தா எல்லோரா குகைகளில் காணப்படும் கலைப்படைப்புகள் 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

தொன்மையான புத்த மதக் கட்டடக்கலைக்கும், ஓவியக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் சான்றாகத் திகழும் அந்தக் கலைப்படைப்புகள் என்ன காரணத்தாலோ அவற்றைப் பயன்படுத்தியவர்களின் காலத்திற்குப் பிறகு எவரும் எட்டிப் பார்க்காத இடமாகி விட்டது.

விளைவு-

இப்படிப்பட்ட அதிசய சிற்பங்களையும், ஓவியங்களையும் கொண்ட குகைகள் அங்கே இருக்கின்றன என்பதே எவருக்கும் தெரியாமல் போய் விட்டது.

அந்தக் குகைப்பகுதிகள், அடர்ந்த புதர்களால் மூடி மறைக்கப்பட்டு விட்டன.

1819-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி, ஆங்கிலேய அதிகாரி ஜான் ஸ்மித் என்பவர், அந்தப் பகுதியில் வேட்டையாடச் சென்றபோது தற்செயலாக அந்த அதிசயக் குகைளைப் பார்த்து வெளியுலகுக்கு அம்பலப்படுத்தினார்.

அதன் பின்னர் அந்தக் கலைப்படைப்புகள், பூட்டிசிறைவைக்கப்பட்டு விடாமல் பொது மக்கள் பார்த்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அஜந்தா, எல்லோரா கலைப்படைப்புகள் உலகம் முழுவதும் போற்றப்பட்டு, இன்றளவும் கோடிக்கணக்கான மக்களால் வியந்து பார்க்கப்படுகின்றன.

அஜந்தா, எல்லோராவுக்கு ஏற்பட இருந்ததுபோன்ற ஆபத்து, ஒரு காலத்தில் தஞ்சைப் பெரிய கோயிலுக்கும் நிகழ இருந்தது.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு 60 ஆண்டுகளில், அதாவது 1070-ம் ஆண்டு அதிராஜேந்திரன் என்ற மன்னர் காலத்திற்குப் பிறகு, தமிழகத்தில் சோழர் ஆட்சி மரபு முடிவுக்கு வந்தது.

அதன் பிறகு தஞ்சைப் பெரிய கோயிலை யாரும் பொருட்படுத்தாததால், நாளடைவில் அந்தக் கோயிலின் புகழ் மங்கியது.


 

1310 மற்றும் 1318 ஆகிய ஆண்டுகளில் அன்னியப் படைகள், தஞ்சைப் பெரிய கோயில் செல்வத்தைச் சூறையாடியதாலும், 1771 மற்றும் 1773 ஆகிய ஆண்டுகளில் பிரெஞ்சுப் படையினரும், ஆங்கிலேயப் படையினரும் தஞ்சைக் கோயிலைத் தங்கள் பாசறையாகப் பயன்படுத்தியதாலும், அந்தக் கோயிலுக்கு மக்கள் வந்து வழிபாடு செய்வது அறவே நின்று விட்டது.

இதனால் என்ன விபரீதம் நடந்தது?

அந்தச் சிறப்பான கோயிலைக் கட்டியது யார் என்பதே, சில தலைமுறைகளுக்குப் பிறகு தோன்றிய மக்கள் எவருக்கும் தெரியாத அவலம் நிகழ்ந்து விட்டது.

1886-ம் ஆண்டு ஜெர்மன் அறிஞர் ஹீல்ஸ் என்பவர், தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படித்துப் பார்த்தார்.

அவற்றில் உள்ள வரிகளை அடையாளம் கண்டுகொண்ட அவர், அந்தக் கோயிலைக் கட்டியவர் மாமன்னர் ராஜராஜன் என்ற உண்மையை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தினார்.


அந்த அதிசயம் நடக்கவில்லை என்றால், தஞ்சைப் பெரிய கோயில் வரலாற்றின் பெரும் பகுதி இருளில் மூழ்கிப்போய் இருக்கும்.

தொடர்ச்சியாக எவரும் வந்து செல்லாத இடம், வரலாற்றில் இருந்து மறைந்து விடும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

சமீபத்தில் மதுரை அருகே கண்டுபிடிக்கப்பட்ட கீழடி நாகரிகம் பலராலும் பேசப்படுவதற்கு முக்கிய காரணம், அங்கே நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளையும், கண்டெடுக்கப்பட்ட பொருட்களையும் பொதுமக்கள் நேரில் பார்க்க அனுமதிக்கப்பட்டதுதான்.

தொன்மையான சிறப்புக்களை பொது மக்கள் பார்க்க முடியாத அளவு தொல்லியல் துறை மேற்கொண்டு இருக்கும் நடவடிக்கைகள் தஞ்சைப் பெரிய கோயிலோடு நின்றுவிடவில்லை.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், தமிழர்களின் நாகரிக தொடக்கப்புள்ளி எனக் கூறப்படுகிறது.

அத்தகைய சிறப்பான இடத்தில் சேகரிக்கப்பட்ட அரிய பொருட்களில் சில, சென்னை அருங்காட்சியகத்தில் அதிக விளக்கக் குறிப்புகள் இல்லாமல் வைக்கப்பட்டு இருக்கின்றன.

அவற்றை ஒரு சிலர் மட்டுமே பார்த்து இருக்கலாம்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த பெரும்பாலான முதுமக்கள் தாழிகள் மற்றும் சில முக்கியப் பொருட்கள், ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட்ட ஒரு கட்டடத்தில் வைத்து பூட்டி வைக்கப்பட்டு இருக்கின்றன.

அவற்றைப் பொது மக்கள் பார்க்க முடியாது.

அருங்காட்சியகம் அமைத்து, அந்தப்பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் ஆதிச்சநல்லூர் சிறப்பை பலரும் மறந்து விடும் ஆபத்து இருக்கிறது.

அதே போன்ற கதி, தஞ்சைப் பெரிய கோயிலின் முதல் தளத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள ஓவியங்களுக்கும், 108 கரண சிற்பங்களுக்கும் பிற்காலத்தில் ஏற்பட்டு விடலாம்.

சில தலைமுறை தாண்டிய பின்னர் வரும் சந்ததியினருக்கு, தஞ்சைப் பெரிய கோயிலில் இவ்வளவு அதிசய கலைப்படைப்புகள் இருக்கின்றனவா என்ற தகவலே தெரியாமல் போய்விடும்.

அஜந்தா, எல்லோரா அதிசயங்களை தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்துச் செல்கிறார்கள். அவர்கள் அதனை அள்ளிச்சென்று விட்டார்களா? அல்லது அலங்கோலப்படுத்தி விட்டார்களா?

3,500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தை ஆட்சி செய்த ஹட்செப்சட் என்ற பெண்ணின் சமாதிக் கோயில், நைல் நதிக்கரையில் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது.

அந்தக்கோயிலில், “பன்ட்என்ற பழங்கால தேசம் பற்றிய ஓவியங்கள் இருக்கின்றன. பன்ட்என்பது பழங்கால பாண்டிய தேசமாக இருக்கலாம் என்ற கருத்து கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட அரிய ஓவியங்களைக் கொண்ட கோயில் மூடி வைக்கப்படவில்லை. தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் அவற்றைப் பார்த்துச் செல்கிறார்கள்.

தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள ஓவியங்களையும் அற்புதச் சிற்பத் தொகுதியையும் பொதுமக்கள் பார்க்க  அனுமதித்தால், அவற்றுக்குச் சேதம் ஏற்படும் என்ற காரணத்தைக் கூறி, அவற்றை அடைத்து வைத்து இருப்பதை ஏற்க முடியாது.

எனவே, தஞ்சைப் பெரிய கோயிலில் சிறைவைக்கப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய கலைப்படைப்புகளை, அனைவரும் பாதுகாப்பாக பார்த்துச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டியது தொல்லியல் துறையின் கடமை என்று சொல்லலாம் அல்லவா?

------------------------------------

கட்டுரை ஆசிரியர் குறிப்பு 

அமுதன்

(மு. தனசேகரன்)

 தலைமை செய்தி ஆசிரியர் (பணிநிறைவு), 

தினத்தந்தி, சென்னை

தொடர்புக்கு: dtdhanasekaran@gmail.com

Cell 98412 68344.


                                 

1 கருத்துகள்

  1. Sir, I observed the real meritorious talents of an Editorof a News journal, with inspirations on safeguarding, ancient art and sculpture works of the Great Emperors of Tamil rulers with much exaggerations, through His anxious painful golden writtings to public with sacrificing nodes... Really appriciated I am, and request
    the author further to continue the same jobs more and to be brought to the Tamil peoples Heart.. is my aption... With much regards... PV. Nathan. Rtd. VAO. Vallioor... 627117

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News