வைகுண்ட ஏகாதசி சொல்லும் செய்திகள்

 

வைகுண்ட ஏகாதசி 
சொல்லும் 
செய்திகள்




ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசியாக ஆன்மிக பக்தர்களால், குறிப்பாக வைஷ்ணவர்களால் கொண்டாடப்படுகிறது.

ஏக் + தசி என்பதே ஏகாதசி ஆனது.

 ‘ஏக்’ என்றால் ஒன்று. ‘தசி’ அல்லது ‘தஸ்’ என்றால் ‘பத்து’. ஆக இரண்டும் சேர்ந்து பதினொன்று.

அதாவது, பூமியைச் சுற்றி வரும் சந்திரனின் நகர்வில் பதினொன்றாம் நாள் ஏகாதசி ஆகும்.

அமாவாசையில் இருந்து 11-ம் நாள் வருவது “வளர்பிறை ஏகாதசி” என்றும், பவுர்ணமியில் இருந்து 11-ம் நாள் வருவது “தேய்பிறை ஏகாதசி” என்றும் கூறப்படுகிறது.

பூமியை, சந்திரன் 12 டிகிரி என்ற அளவில் 24 மணி நேரமும் சுற்றி வருகிறது. அந்த ஒவ்வொரு டிகிரியையும் ‘திதி’ என்று நமது வானசாஸ்திர முன்னோர்கள் குறித்தார்கள்.

பூமியைச் சுற்றிவரும் சந்திரன் நகர்வுப்பாதையின் 11-ம் நாள் தினத்திற்கு ‘ஏகாதசி திதி’ என்று பெயர் சூட்டினார்கள்.

ஏகாதசி அன்று பூமி, சந்திரன், சூரியன் ஆகிய மூன்றும் 120 டிகிரியில், முக்கூறு விரிகோணத்தில் காணப்படும்.

அன்றைய தினம் சந்திரனின் ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.

நமது உடல், 80 சதவீதம் தண்ணீரால் ஆனது.

சந்திரனின் ஈர்ப்பு சக்திக்கு ஏற்ப நமது உடலில் மாற்றங்கள் ஏற்படும் என்பதால், நமது முன்னோர்கள் சந்திரனின் நகர்வை வைத்து ஜோதிடம் உள்பட அனைத்தையும் கணக்கிட்டார்கள்.

சந்திரனின் ஈர்ப்பு சக்தி அதிகமாகும்போது, அது நமது உடலில் உள்ள நீர் சத்து மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த சமயத்தில் நமது உடலில் உள்ள உணவு ஜீரணம் ஆவதற்கான திரவம் அதிகம் சுரக்காது.

ஏகாதசி திதி அன்று, சந்திரனின் தாக்கத்தால் நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணம் ஆகாது என்று நமது முன்னோர்கள் கருதியதால், அன்றைய தினம் எளிதான உணவு மட்டுமே உட்கொள்ள வேண்டும் அல்லது உண்ணாநோன்பு இருக்க வேண்டும் என்று விதி வகுத்தனர்.

தீவிரமான வைஷ்ணவர்கள் மாதத்தில் வரும் இரண்டு ஏகாதசிகளிலும் விரதம் இருப்பார்கள்.

சிலர் தண்ணீர் கூட அருந்தாமலும், வேறு சிலர் எளிய உணவை, ஒரு வேளை மட்டுமே எடுத்துக் கொள்ளும் வகையிலும் விரதம் கடைபிடிப்பார்கள்.

ஒவ்வொரு மாதமும் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும், மார்கழி மாதம் வளர்பிறை அன்று வரும் ஏகாதசியில் கட்டாயம் விரதம் இருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.

காரணம், மார்கழி மாதம் குளிர்காலம். அப்போது ஜீரண கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 

எனவே, மார்கழி மாதம் வரும் ஏகாதசியை, வைகுண்ட ஏகாதசி என்று அமைத்து, அன்றைய தினம் காலை முதல் மறுநாள் காலை வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்பதற்காக வைகுண்ட ஏகாதசி என்ற விழாவை அமைத்தனர்.

ஒரு நாள் முழுவதும் விரதம் இருப்பதால், வயிறு சுத்தப்படுத்தப்பட்டு, ஜீரணம் சரியாக நடைபெற வழி ஏற்படுகிறது என்பதை அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.


இந்த ஆண்டு, டிசம்பர் 25-ந் தேதி வைகுண்ட ஏகாதசி வருகிறது.

அன்று, பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள், காலையில் பெருமாள் கோவிலுக்குச் சென்று, சொர்க்கவாசல் வழியாக வருவது வழக்கம்.

சொர்க்கவாசல் வழியாக வரும்போது, செய்த பாவம் எல்லாம் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம்.

ஏகாதசியில், முழு விரதம் இருக்க முடியாதவர்கள், எளிதில் ஜீரணம் ஆகாத இறைச்சி, மீன் முட்டை, பருப்பு, காளான், மதுபானம், பட்டானி, புளி, கடுகு, சீரகம், பெருங்காயம், ஏலக்காய், கிராம்பு, வெந்தயம், பெருஞ்சீரகம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் முன்னோர்கள் விதி வகுத்து இருக்கிறார்கள்.

ஏகாதசி சமயத்தில் தியானம் இருக்கும்போது, சந்திரனின் ஈர்ப்பு சக்தி காரணமாக மனம் ஒருமுகப்படுவது அதிகரிக்கிறது என்று அனுபம் வாய்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

எப்படி என்றாலும், உண்ணாவிரதம் இருப்பது உடல் நலனுக்கு நல்லது என்று அனைத்து மதமும் கூறுவதால், அனைத்து இந்துக்களும் ஒவ்வொரு மாத ஏகாதசியிலும் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும், கூடியமட்டும் வைகுண்ட ஏகாதசி நாளிலாவது விரதம் இருந்து நலம் பெறலாம்.

======================== கட்டுரை: அமுதன்.  ============================



கட்டுரையாளர் - ஆயிரம் ஆண்டு அதிசயம், பழங்கால இந்தியர்களின் விஞ்ஞானம், ஆதிச்சநல்லூர் கீழடி மண்மூடிய மகத்தான நாகரிகம், அதிசய கோவில் அங்கோர் வாட் நூல்களின் ஆசிரியர் அமுதன்.


தொடர்புக்கு:-

E Mail: dtdhanasekaran@gmail.com

Cell: : 98412  68344 .


Post a Comment

புதியது பழையவை

Sports News