திருச்செந்தூர் முருகன் - மாசித் திருவிழா 2019 - நெல்லை கவிநேசன் சிறப்பு கட்டுரைத்தொடர் 6


திருச்செந்தூர் முருகன் மாசித் திருவிழா - 2019 
நெல்லை கவிநேசன் - சிறப்பு கட்டுரைத்தொடர்
 [Website:www.nellaikavinesan.com, Email: nellaikavinesan25@gmail.com]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற மாசித் திருவிழா ஆறாம் நாள் நிகழ்வுகள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 10.02.2019 முதல் 21.02.2019வரை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா 6 ஆம் நாளான வெள்ளிக்கிழமை [15.02.2019] அன்று இரவு சுவாமி  வெள்ளித்தேரிலும், அம்பாள் இந்திர விமான சப்பரத்திலும் எழுந்தருளி வீதி ௨லா வந்தனர்..


இதனை முன்னிட்டு “திருச்செந்தூர் முருகன்” என்னும் தலைப்பில் நெல்லை கவிநேசன் வழங்கும் சிறப்பு கட்டுரைத்தொடர் வெளியிடப்படுகிறது.

நாழிக்கிணறு
சண்முக விலாசத்தின் தெற்குப் பகுதியில் கடற்கரை அருகில் சுமார் 200 அடி தொலைவில் சிறிய மணல் மேடு உள்ளது. அதில் ‘கந்த புஷ்கரணி’ என்று அழைக்கப்படும் ‘நாழிக்கிணறு’ உள்ளது. இந்தக் கிணறு இயற்கையிலே உருவானது ஆகும். முருகப்பெருமான் சண்முகர் வடிவத்தில் தனது கையியிலிருந்த வேலை ஓங்கி அந்த இடத்தில் அழுத்தியதால் ஏற்பட்ட இயற்கை ஊற்றுதான் ‘நாழிக்கிணறு’ என ஆன்மீக அன்பர்கள் கருதுகிறார்கள்.
 

இந்தக் கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. பெருங்கிணற்றில் கிழக்குப்புறமும், மேற்குப்புறமும் இறங்கிச் செல்வதற்கான படிகள் உள்ளது. மொத்தம் 24 அடி ஆழத்திலுள்ள இந்தக் கிணற்றை அடைய 34 படிகள் இறங்கிச் செல்ல வேண்டும். நீண்ட சதுர கிணற்றுக்கு அருகே 7 அடி ஆழத்தில் ஒரு சதுர அடி பரப்பளவில் நாழிக்கிணறு உள்ளது.
 

இந்தக் கிணற்றில் இரண்டு விதமான நீரூற்றுகள் உள்ளன. சதுர கிணற்றின் நீர் கந்தக நாற்றத்துடன் சற்று கலங்கலாக இருக்கும். ஆனால் நாழிக்கிணற்றின் நீர் தெளிவாகவும், சிறிது உவர்ப்பு சுவையுடனும் இருக்கும். இந்த நாழிக்கிணற்றில் நீராடிய பின்பு கடலில் நீராடுவதுதான் மரபு என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். (ஆனால் கடலில் நீராடிய பின்பு நாழிக்கிணற்றில் நீராடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்) நாழிக்கிணற்று நீர் எவ்வளவுதான் எடுத்தாலும் அது குறையாமல் ஊறிக்கொண்டே இருப்பது முருகப்பெருமானின் அருள் என்று பக்தர்கள் கருதுகிறார்கள்.
 

நாழிக்கிணற்றில் நீராடுவதன்மூலம் சிறந்த ஆன்மீக பலம் கிடைக்குமென பக்தர்கள் கருதுகிறார்கள்.
 

தூண்டுகை விநாயகர் ஆலயம்
தனது தம்பியான திருமுருகன் இருக்கும் இடத்தை ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் பக்தர்களுக்குக் காட்டும் முறையில் அமைந்த விநாயகர் “தூண்டு கை விநாயகர்” என அழைக்கப்படுகிறார். தூண்டுகை விநாயகரை வழிபடும் பக்தர்கள் முன்பகுதியில் தேங்காய் உடைத்து (சிதறு தேங்காய் அடித்து) வழிபாடு செய்வார்கள். தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிட விநாயகரை வழிபடுவார்கள்.
 

தூண்டுகை விநாயகரை வணங்கிய பின்னரே முருகப் பெருமானின் ஆலயத்திற்குச் சென்று வழிபட வேண்டும் என்பது மரபாகும்.
 

கிரிவீதி 
கோவிலின் வெளியே அமைந்துள்ள வீதியில் கோவிலையட்டி காங்கிரீட் கூரை போடப்பட்டுள்ளது. இந்த வீதியில்தான் தங்கரதம் வலம் வரும்.
 

கிரிவீதியின் மேற்பகுதியில் தேவஸ்தான அலுவலகம் உள்ளது. இதற்கு வடக்குப் புறத்தில் வசந்த மண்டபம் உள்ளது. தேவஸ்தான அலுவலகத்திற்குப் பின்புறம் வேலவன் விடுதி உள்ளது. கிரிவீதியின் வடக்குப் புறத்தில் குடில்களும், வள்ளிக் குகையும் உள்ளது. கிரிவீதியின் கிழக்கில் வங்காள விரிகுடா கடல் உள்ளது.
 

தெற்குப் பகுதியில் கடற்கரையும், நாழிக்கிணறும், தங்கரதம் நிறுத்துவதற்கான இடமும் கோவிந்தமாள் ஆதித்தனார் திருமண மண்டபமும் உள்ளன.

திருக்கல்யாண மண்டபம்
கிரி பிரகாரத்தில் மேல கோபுர நுழைவு வாயிலுக்கு எதிரில் மேற்கே அமைந்துள்ள மண்டபம் ‘திருக்கல்யாண மண்டபம்‘ ஆகும். அழகிய வேலைப்பாடுகள் கொண்ட நான்கு பெரிய தூண்களைக் கொண்ட இந்த மண்டபத்தில்தான் முருகப் பெருமானின் திருக்கல்யாணம் குறிப்பிட்ட நாட்களில் நடத்தப்படுகிறது.

வசந்த மண்டபம்
கிரிப்பிரகாரத்தில் மேற்கு வீதியில் திருக்கல்யாண மண்டபத்திற்கு எதிர்புறமாக அமைந்த மண்டபம் ‘வசந்த மண்டபம்‘ ஆகும். சித்திரை, வைகாசி மாதங்களில் நடைபெறும் வசந்த விழாவில் செந்தில் நாயகர் (மூலவரின் பிரதிபம்பம்) இங்கு ஜெயந்தி நாதராக எழுந்தருளுகிறார். மாசி மற்றும் ஆவணித் திருவிழாக்களில் பக்தர்களின் சிறப்பு பூஜையை ஏற்பதற்காக 8ஆம் திருநாள் இரவில் ஆறுமுகப்பெருமான் எழுந்தருளும் இடம்தான் ‘வசந்த மண்டபம்‘ ஆகும்.
 

இந்த மண்டபம் 120 தூண்களைக் கொண்டது ஆகும். 1882 ஆம் ஆண்டு காசி சுவாமிகளால் தொடங்கப்பட்ட இந்த மண்டபம் கட்டும் பணி 1895 ஆம் ஆண்டு மௌன சுவாமிகளால் நிறைவேற்றப்பட்டது என வரலாறு குறிப்பிடுகிறது. 

(3) வள்ளிக் குகை ஆலயம்
கோவிலின் வடக்குப்புறத்தில் வடகிழக்கில் அமைந்துள்ளது வள்ளிக் குகை ஆகும். இது மணலும் கல்லும் சேர்ந்த குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தின் முன் பகுதியில் 16 கால் மண்டபம் உள்ளது. இதன் முற்பகுதியின் வட பக்கமுள்ள சுவரில் சித்திரங்கள் உள்ளன. இவை சூரசம்ஹார நிகழ்ச்சியை விவரிக்கும் விதத்தில் உள்ளது. 


வள்ளியம்மையின் தந்தையான நம்பிராஜனும் அவனது படைவீரர்களும் முருகப்பெருமானிடம் போரிட வந்தார்கள். அவர்களோடு வந்த வள்ளியம்மை, பயந்து ஒளிந்துகொண்ட குகைதான் இப்போது ‘வள்ளி குகை’ என அழைக்கப்படுகிறது. இதனை ‘வள்ளி ஒளிந்த வளிநாடு’ என்றும் குறிப்பிடுவார்கள்.

ஆனந்த விலாசம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 91/2 அடி உயரத்தில் இது அமைந்துள்ளது. இதன் அருகேதான் பல தீர்த்தங்கள் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. மாசி மற்றும் ஆவணித் திருவிழாக்களில் எட்டாம் திருநாளில் சண்முகர் பக்தர்களுக்கு அருள்தரும் இடம்தான் ‘ஆனந்த விலாசம்‘ என அழைக்கப்படுகிறது.

சஷ்டி மண்டபம்

சந்தசஷ்டி திருவிழாவின் 6ஆம் நாளன்று வேல் வாங்கிய ஜெயந்திநாதர் சஷ்டி மண்டபத்தில் தங்கியிருந்து தன் படைவீரர்களோடு சூரனை அழிப்பதற்காக புறப்படுவார். இது கிரி வீதியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

சண்முக விலாசம்
கிரிவீதி வலம்வந்த பின்னர் திருமுருகன் சன்னதிக்குச் செல்லும் வழியில் கோவிலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மண்டபம் சண்முக விலாசம் ஆகும். இது 120 அடி நீளமும் 86 அடி அகலமும் உள்ள மண்டபம் ஆகும். தெற்கு வடக்காக அமைந்துள்ள இந்த மண்டபம் 124 தூண்களைக் கொண்டது. 3 அடி உயரமுள்ள அழகிய வேலைப்பாடுகள் அமைந்த 15 சதுர அடி பரப்புள்ள சிறிய வீடு போன்ற அமைப்பு உள்ளது. இங்குதான் மாசி மற்றும் ஆவணி திருவிழாக்களின் ஏழாம் மற்றும் எட்டாம் திருநாளில் சண்முகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சுற்றிலும் தூண்கள் இல்லாமல் அமைந்திருப்பது கட்டிடக்கலை சிறப்பை உணர்த்துகிறது.


தொடரும்.

Post a Comment

புதியது பழையவை

Sports News