திருச்செந்தூர் முருகன் - மாசித் திருவிழா 2019 - நெல்லை கவிநேசன் சிறப்பு கட்டுரைத்தொடர் 7

திருச்செந்தூர் முருகன் மாசித் திருவிழா - 2019 
நெல்லை கவிநேசன் - சிறப்பு கட்டுரைத்தொடர்
 [Website:www.nellaikavinesan.com, Email: nellaikavinesan25@gmail.com]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற மாசித் திருவிழா ஏழாம்  நாள் நிகழ்வுகள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 10.02.2019 முதல் 21.02.2019வரை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா ஏழாம் திருநாளான இன்று சனிக்கிழமை [16.02.2019] காலை வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளிய சண்முகப்பெருமான்..


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா ஏழாம் திருநாளான இன்று சனிக்கிழமை [16.02.2019] மாலை சிவப்பு சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளிய சண்முகப்பெருமான்..


 இதனை முன்னிட்டு “திருச்செந்தூர் முருகன்” என்னும் தலைப்பில் நெல்லை கவிநேசன் வழங்கும் சிறப்பு கட்டுரைத்தொடர் வெளியிடப்படுகிறது.  
குமரகுருபரர்
குமரகுருபரர் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர். இளம்வயதில் வாய் பேச முடியாத நிலையில் இருந்தார். குழந்தையைப் பேச வைக்க வேண்டும் என ஆசைப்பட்ட பெற்றோர்கள் குமரகுருபரருக்கு ஐந்து வயது நிரம்பியதும் அவரைத் திருச்செந்தூர் அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் 48 நாட்கள் விரதம் மேற்கொண்டனர். விரதத்தை முடித்தபின்பும் அவர்கள் வேண்டியது கிடைக்கவில்லை.
 
எனவே - குமரகுருபரரின் பெற்றோர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். “இனி உயிரோடு இருந்து எந்தப் பலனுமில்லை. மூவரும் திருச்செந்தூர் கடலில் விழுந்து உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டும்” - என எண்ணி கடற்கரை அருகே வந்தார்கள்.
 
திருச்செந்தூர் முருகன் கோவில் அருகிலுள்ள கடலருகே வந்து உயிரைவிட முயன்றனர். அந்த நேரத்தில் ஒரு அர்ச்சகர் வடிவத்தில் முருகப்பெருமான அவர்கள்முன்பு தோன்றினார்.
 
“கடலில் விழுந்து உயிரைவிட முடிவு செய்துவிட்டீர்களே! அது ஏன்?” என்று கேட்டார் அர்ச்சகர். 

“அய்யா எங்களுக்கு குழந்தை பிறந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது. இந்தக் குழந்தை இன்னும் வாய் திறந்து பேச முடியாமல் இருக்கிறது. நாங்கள் பல விரதங்கள் இருந்து பார்த்துவிட்டோம். ஆனால் முருகப்பெருமான் எங்கள்மீது இரக்கம் காட்டி குழந்தையை இன்னும் பேச வைக்கவில்லை. நாங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இந்தக் குழந்தை பேசும் சக்தி இழந்ததை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவேதான் நாங்கள் உயிரைவிட முயன்றோம் என்றனர்.
 
அர்ச்சகர் வடிவிலிருந்த முருகப்பெருமான், “என் கையில் உள்ளது எது?” என குமரகுருபரரிடம் கேட்டார்.
 
அர்ச்சகர் கேள்விக்கு உடனே பதில் சொன்னார். குழந்தையான குமரகுருபரர்.
 
“இது... பூ...” என்று சொல்லிக்கொண்டே பூமேவு செங்கமல எனத் தொடங்கி முருகன்மீது பக்திகொண்டு பாடல்களைப் பாட ஆரம்பித்தார். கந்தர்கலி வெண்பாவைக் குழந்தையான குமரகுருபரர் பாடினார். 

ஸ்ரீ விசுவாமித்திரர்
இங்குள்ள “இலை விபூதி” மிகச்சிறப்பு கொண்டதாகும். காசநோயால் அவதிப்பட்ட ஸ்ரீவிசுவாமித்திரர் இலை விபூதியைப்பூசியும், உட்கொண்டும் தனது நோயைக் குணமாக்கிக் கொண்டார். ஸ்ரீ ஆதிசங்கரரும் இலை விபூதியைப்பூசியும், சாப்பிட்டும் காச நோயிலிருந்து குணமடைந்தார். 


வென்றி மலைக் கவிராயர்
சுமார் 350 ஆண்டுகளுக்குமுன்பு திருச்செந்தூர் ஆலயத்தில் பணியாற்றிய பணியாளரான வென்றி மாலை என்பவருக்கு கோவில் நிர்வாகம் தண்டனை வழங்கியது. அவமானத்தால் மனம் வருந்திய வென்றி மாலை கடலில் குதித்து உயிர்விட முடிவு செய்தார். அவர் கடலில் குதித்து உயிரைப் போக்கிக்கொள்ள முயற்சி செய்யும்போது முருகப்பெருமான் அவரைக் காப்பாற்றினார். பின்னர் எழுதப் படிக்கத் தெரியாத வென்றி மாலையை கவிராயராக முருகப்பெருமான் மாற்றினார். பின்னர் கவிராயரான வென்றி மாலை திருச்செந்தூர் ஸ்தல புராணம் பாடி புகழ் பெற்றார். 


சுனாமியும் திருச்செந்தூர் முருகனும்
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சுனாமி எனும் ஆழிப்பேரலை தமிழகத்தின் கரையோரங்களில் உருவாகி கடற்கரை சார்ந்த கிராமங்களில் உள் புகுந்து பல உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டது. பல வீடுகளை அழித்த, பலரது குடும்பங்களின் சொத்துக்களை நாசமாக்கியது.

 
தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கடலான வங்காள விரிகுடா பொங்கியெழுந்து வீரபாண்டியன்பட்டணம், அமலி நகர், மணப்பாடு, பெரிய தாழை, கூடுதாழை, கூட்டப்பனை, இடிந்தகரை, உவரி, பெருமணல் ஆகிய கிராமங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
 
இதைப்போல கன்னியாகுமரி சுற்றியுள்ள கிராமங்களில் சுனாமியின் பாதிப்பு பெருமளவில் இருந்தது. ஆனால் கடல் அலை தாலாட்டும் கடலை ஒட்டி இருக்கின்ற திருச்செந்தூர் முருகன் கோவிலைச் சுனாமியால் நெருங்க முடியவில்லை.
 

எல்லா இடங்களிலும் கடல் அலை சீறி நிலம் நோக்கி வந்தது. ஆனால் அதே வேளையில் திருச்செந்தூரில் மட்டும் கடல் 200 மீ தூரத்திற்கு உள்வாங்கிச் சென்றது. இதனால் திருச்செந்தூர் முருகனைக் ‘கடல் காத்த கந்தன்’ என்றும் தற்போது அழைக்கிறார்கள்.
 
“கடல் அலை திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிச் சென்றதன் காரணம் என்ன?” எனப் பலரிடம் கேட்டதற்கு ஆன்மிக அன்பர்கள் தரும் விளக்கம் இதுதான். திருச்செந்தூர் திருப் புகழில் இடம்பெற்ற பாடல் வரிகள் இதற்கான விளக்கத்தைத் தருகிறது. 

“மலை மாவு சிந்த அலை வேலை யஞ்ச
        வடிவேலெ றிந்த - அதி தீரா
 அறிவாலறிந்து னிருதாளி றைஞ்சு
       மடியாரி டைஞ்சல் - களைவோனே   
 அழகான செம்பொன் மயில் மேல மர்ந்து
   அலைவாயு கந்தப் பெருமானே”. 

சூரபத்மன் மலை போன்ற மாமரமாகக் கடலுக்கடியில் மறைகிறான். அப்போது முருகப்பெருமான், கடல்நீர் பயந்து பதுங்கி ஓடும் படியாக வடிவேலை எறிந்து, மாமரமாக இருக்கும் சூரனை இரு கூராக்கி, சேவலாகவும் மயிலாகவும் மாற்றினார் என்பது இதன் பொருளாகும். 

சூரனை எதிர்த்து வேல் வீசிய எம்பெருமான், முருகனுக்குப் பயந்த கடல் அலைகள் இன்றும் எத்தனையோ இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து சீறுகின்ற நிலை வந்தாலும் எம்பெருமானின் வடிவேலுக்குப் பயந்து பதுங்கி நின்றன என பக்தர்கள் நம்புகின்றனர்.


தொடரும்.

Post a Comment

புதியது பழையவை

Sports News