நெல்லை கவிநேசன் வழங்கும் தேர்தல் சிறப்புச் சிறுகதை

நெல்லை கவிநேசன் வழங்கும் தேர்தல் சிறப்புச் சிறுகதை


தேர்தல் களத்தில் வெற்றி பெறுபவர்கள் வேட்பாளர்களா? மக்களா? இந்த கேள்விக்கு விடைசொல்லும் நெல்லை கவிநேசன் எழுதிய சிறப்பு சிறுகதை...


 தேர்தல் கணக்கு

இரவு பத்துமணி.
கதவு தட்டப்படும் ஓசையைக் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தான் ரங்கநாதன்.

வாசலுக்கு வந்தான். கதவைத் திறந்தபோது ஆச்சரியத்தில் நின்றான்.

“அண்ணாச்சி… சுகமா இருக்கியாளா?” கையில் ஹேண்ட் பேக்கை இடுக்கிக் கொண்டு அரசியல் கட்சியை பிரதிபலிக்கும் வேட்டியை இடது கையால் இழுத்துப் பிடித்துக்கொண்டு வாயெல்லாம் பல்லாக்கி இரவு பத்துமணிக்கு சுகம் விசாரித்தான் கலக்கல் கந்தசாமி.

கலக்கல் கந்தசாமி அரசியல் கட்சியோடு ஐக்கியமாகி ஐந்து ஆண்டுகள்கூட முழுதாய் முடியவில்லை. தனது பி.ஏ. (அரசியல்) படிப்பில் தோல்வியைத் தழுவியபின்பு வெற்றிகரமாக அரசியல் நடத்திக் கொண்டிருக்கிற பக்கத்து ஊர்க்காரன்.

“இவன் ஏன் இந்த நேரத்தில் வந்தான்?” ரங்கநாதன் சிந்திப்பதற்குள் “அண்ணாச்சி…. உள்ளே போங்க…. நிறைய பேச வேண்டியதிருக்குது” அழைப்பதற்குள் அறைக்குள் நுழைந்தான்.

தூக்கக் கலக்கதிலிருந்த ரங்கநாதன் கண்களை கசக்கியபடியே “என்ன விசேஷம்?” என்பதற்குள் “உங்களுக்கு நல்ல காலம் பொறக்குது. இன்றைக்கு மெட்ராஸ்ல இருந்து தகவல் வந்துட்டுது. நீங்கதான் நம் தொகுதி வேட்பாளர்”.

“எந்தக் கட்சிக்கு?”

“என்ன அண்ணாச்சி இப்படிக் கேட்டுட்டீங்க, நம்ம சாதிக் கட்சியில்தான்”.

“நான் தான் எந்த கட்சியிலேயும் மெம்பர் இல்லியே….. என்னை எப்படி?".

“மெம்பர்ஷிப்பா இப்போ முக்கியம். நல்ல வேட்பாளர்னா எந்தக் கட்சியும் உடனே உறுப்பினர் கார்டு கொடுத்திராங்க….”

“எப்பா கலக்கல்… நீ சும்மா இரு. பஞ்சாயத்து யூனியன்ல அசிஸ்டண்ட்டா வேலை பார்க்கிறதே நிம்மதியா இருக்குது. உங்க கழகம் ஏழைகளுக்கு உதவுறதுனால அதுக்கு ஆதரவா அன்றைக்கு பஜார் கடைப்பக்கம் பேசிக்கிட்டிருந்தேன். உடனே…. அதுக்கு இப்படியா….”

“அண்ணாச்சி இப்போ…. எல்லா கட்சியிலேயும் ஊழல் அதிகமாயிட்டுது. நல்ல நேர்மையான, உங்களைப்போல படிச்சவங்களைத்தான் வேட்பாளராக நிறுத்த எல்லாரும் திட்டம் போட்டிருக்காங்க. புதுமுகங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாங்க…. அதனால இன்னும் இரண்டு நாளையில நீங்கதான் நம்ம கட்சி வேட்பாளர் ரெடியா இருங்க….”

“இப்படி சர்வசாதாரணமாக சொல்லிட்டே, பணத்துக்கு எங்கே போகிறது? பிரச்சாரம் செய்ய ஒரு சொந்தக்காராவது வேண்டாமா?”

“உங்களுக்கு எதுக்கு அண்ணாச்சி சொந்தக்காரர். ஊர் முழுவதும் சொந்தக்காரங்க அதிகமா இருக்காங்க. நம்ம சாதிக்காரங்க 70 சதவீதம் பேர் இருக்காங்க. உங்க அப்பா பேங்ல வேல பார்த்தபோது நம்ம தொகுதியிலதான் ஐந்து இடத்துல வேலை பார்த்திருக்காங்க. எத்தனையோ பேருக்கு உதவி செய்திருக்காங்க. வேலை எடுத்துக் கொடுத்திருக்காங்க. உங்க தாத்தா பேரைச் சொன்னால் இந்த தொகுதிக்கே தெரியும்.

“பழம் பெருமை பேசி என்ன புண்ணியம்”?

“பழம் பெருமை இல்லை இது. உங்களது அருமை பெருமைகளை உங்களுக்கு நான் சொல்றேன்.

நாளையிலேருந்து என் கார் உங்க வீட்டுலதான் நிற்கும். எப்போ எங்க வேண்டுமோ எங்க போகணுமோ வைச்சிடுக்கிடுங்க….”

ரங்கநாதனின் ஆசையைத் தூண்டும் விதத்தில் கலக்கிக் கொண்டிருந்தான் கலக்கல் கந்தசாமி.

“நிறைய செலவாகுமே…..?”

“செலவைப்பத்தி ஏன் கவலைப்படுறீங்க. சொந்தக் காரங்கக்கிட்டே நன்கொடையா 5 லட்சம் வரை வாங்கலாம். வியாபாரிகள் சங்கம் எப்படியும் 5 லட்சம் தரும். பிறகு நண்பர்கள் இருக்காங்க….கவலையை விடுங்க…”

ஆசைத்தீயில் எண்ணெயைப் பக்குவமாக ஊற்றிவிட்டு விடை பெற்றான் கலக்கல் கந்தசாமி.

தேர்தல் தேதி அறிவித்த அன்றே வேட்பாளர் பட்டியலைக் கட்சி வெளியிட்டது. ரங்கநாதன் பெயர் இடம் பெற்றதால் தொண்டர்கள் வீட்டை முற்றுகையிட்டார்கள்.

யார் தொண்டர்? யார் குண்டர்? என்ற வித்தியாசம் தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான் ரங்கநாதன். கட்சிக்கரை வேஷ்டியில் எல்லோரும் வந்திருந்தார்கள்.
“அண்ணாச்சி… வணக்கம், இவர்தான் நம்ம மாவட்ட செயலாளர் சொக்கநாதன்” என அறிமுகப்படுத்தினார்கள்.

சொக்கநாதன் தெளிவாகப் பேசினார்.

“தம்பி….. மொத்தம் 87 பேர் நேர்காணலுக்கு போயிருந்தாங்க. தலைவர் உங்களை நேரில் காணாமலேயே ‘சீட்” தந்திருக்கார்னா அதுக்குக் காரணம் நான்தான். நீங்க நம்ம ஒன்றியச் செயலாளருக்கு இரண்டு காரும், இரண்டு டிரக்கரும் கொடுத்திடுங்க. தினமும் செலவுக்கு இரண்டாயிரம் கொடுங்க. யூனியன் தலைவருக்கு ஒரு கார் கொடுத்திடுங்க. நான் எப்படியும் வாரத்துக்கு இரண்டு தடவை வருவேன்”. ஆர்டர் போட்டுவிட்டு நகர்ந்தார் மாவட்டம். அவர் பின்னால் கொத்தாய் ஒரு கூட்டம் நகர்ந்தது. மாவட்டச் செயலாளரின் பி.ஏ. வந்தார்.

“அய்யா…… வாரந்தோறும் வருறதுக்கு வாரத்திற்கு ஐயாயிரம் வேண்டும்”. தனியாகக் காதில் கிசுகிசுத்தான். சென்றார்கள்.

போன் அலறியது.

“நான் நம்ம கூட்டணிக் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்றார். தொகுதியைக் கண்காணிக்க கார் வேண்டும். பணமும் வேண்டும்” எனக் கட்டளை போட்டார்.

“நம் கட்சி போஸ்டர் எல்லாம் சிவகாசியில் இவர்கிட்டேதான் கொடுக்கிறாங்க. மல்டி கலர்ல போஸ்டர் அடிக்கணும். மொத்தம் 5 லட்சம் ஆகும். நீங்க அட்வான்ஸா ஒரு லட்சம் கொடுங்க. கட்சிக் கொடி வேணுமுன்னாகூட ஒரு லட்சம் கொடுங்க” என்றார் அழைத்து வந்த கட்சிக்காரர்.

ரங்கநாதன் அதிர்ந்து உறைந்து போனான்.

கலக்கல் கந்தசாமியை ஒரு வாரமாகக் காணவில்லை. ‘போன் போட்டு பார்த்தான்’ ஆள் அனுப்பிப் பார்த்தான்.

பிரச்சார வேன், காரியாலயம், ஊர்தோறும் கொடிகள், போஸ்டர்கள், பிரச்சாரத்திற்கு ஆட்கள் - என ஒரு பெரிய தொகை கரைந்தது.

தேர்தல் தேதி நெருங்கிவிட்டது.

லட்சக்கணக்கில் கடன் வாங்கி தேர்தல் செலவு செய்ய ஆரம்பித்தான் ரங்கநாதன்.

கட்சியின் முதுகெழும்புபோல் அத்தனை பேரும் நடித்தார்கள். ஆலோசனை சொன்னார்கள்.

“அந்த ஊர் கோவிலுக்கு மணி வாங்கித் தரணும். ‘சர்ச்’ கட்ட நிதி தரணும்” என்றார்கள். ஏற்றுக்கொண்டார்கள். பள்ளிவாசலுக்கும் செலவு செய்தான்.

பிரசாரத்தின் கடைசி நாள்.

கலக்கல் கந்தசாமி வந்தான்.

ரங்கநாதனுக்கு எரிச்சல் வந்தது.

“எங்கப்பா போனே….?”

“அண்ணாச்சி திடீர்னு மெட்ராஸ் போயிட்டேன். அங்கு முக்கியமான வேலை”.

“உன் காரையாவது கொடுத்துட்டு போயிருக்கலாமே”.

“அது ஒர்க் ஷாப்ல நிற்குது. திடீர்னு ரிப்பேர் ஆயிட்டுது". 

“சரி…. இப்போது….. பணத்துக்கு எங்கே போறது”?

பேசிக்கொண்டிருக்கும்போதே மாவட்டச் செயலாளர் வந்தார்.

“தம்பி… தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் இருக்குது. கட்சியில் 5 லட்சம்தான் தரமுடியும்னு சொல்லிட்டாங்க. செலவை நீங்கதான் பார்த்துக்கிடணும்னு சொல்லிட்டாங்க… ஒரு நாளைக்கு பூத் செலவுக்கும் ரூபாய் கொடுக்கணும். மொத்தம் 230 பூத் நம் தொகுதியில் இருக்குது. ஒரு பூத்துக்கு இரண்டாயிரம் ரூபாய் கணக்கு வச்சாலும் சுமார் 5 லட்சம் தேவை. வாக்காளர்களைக் கொண்டுவர 100 டாக்ஸி பிடிக்கணும். வாடகை இரண்டாயிரம் கேப்பான். அதுக்கு 2 லட்சம் ஆகும். இதுபோக நம்ம கட்சிக்கு வீக்கான இடத்தில் ஒரு ஓட்டுக்கு குறைஞ்சது 100 ரூபாயாவது கொடுக்கணும். மொத்தம் அதுக்கு 10 லட்சம் வச்சுகிடுங்க…..”

பதில் தேவையில்லை என்ற பாணியில் பேசிவிட்டு சென்றார். அவரின் பி.ஏ. இருபதாயிரம் செலவுக் கணக்கை நீட்டினான்.     

ரங்கநாதன் தூண்டில் புழுவானான். பணம் தேடிப் பறந்தான். சொந்தக்காரர்கள் கைவிரித்தார்கள். நண்பர்கள் நழுவினார்கள். வீட்டை அடமானம் வைத்தான். ஐந்து வட்டிக்கு கடன் வாங்கியவன் கந்து வட்டிக்குத் தாவினான். தென்னந்தோப்பு பணமானது. அடி மாடுவிலைக்கு நகைகள் விற்றான்.

லட்சியத்திற்காக லட்சங்கள் காணாமல் போயின.

தேர்தல் முடிந்தது.

“அப்பாடா….” பெருமூச்சு விட்டான் ரங்கநாதன்.

“பணமாய்க் கொடுத்திடுங்க”. பச்சையாய்க் கேட்டார்கள். தனது காரை ஓரங்கட்டிவிட்டு அவனுக்காக நான் ஏன் என் காரில் போகணும்” என தத்துவம் பேசினார்கள் சிலர்.

ஒரே மகள் கழுத்து நகைகளும், மனைவியின் தாலியும் பணமாய் உருப்பெற்றது. தேர்தல் முடிவு சாதகமாகியது. ரங்கநாதன் எம்.எல்.ஏ. ஆகிவிட்டான்.

ஐம்பது லட்சம் தாண்டி செலவாகியிருந்தது.

“தம்பி….. எம்.எல்.ஏ. ஆயிட்டீங்க…. என் மகளுக்கு பஞ்சாயத்து யூனியன்ல ஒரு வேலை போட்டுக் கொடுங்க…..”

“அய்யா….. ஒரு லட்சம் கொடுங்க வேலை வாங்கிக்கிடலாம்…..”

“நாங்க ஓட்டுப் போட்டுதான் நீ எம்.எல்.ஏ. ஆகி இருக்கிறதே. லஞ்சமா கேட்கிறே…..?

வந்தவர் எரிந்து விழுந்தார்.

“என் செலவுக்கணக்கில் வரவு இப்போதுதான் ஆரம்பமாகுது. பணத்தோடு வாங்க…..”  

ரங்கநாதன் சொல்லிக் கொண்டிருந்தான். வந்தவர் கணக்குப் புரியாமல் அதிர்ந்து நின்றார். 

[நெல்லை கவிநேசனின் தியாகப் பரிசு என்னும் நூலில் இருந்து...]

Post a Comment

புதியது பழையவை

Sports News