வெற்றி படிக்கட்டுகள் - தொடர்-5 - மனதிற்குள் மாற்றங்கள்...

வெற்றி படிக்கட்டுகள்
தொடர் - 5
"தமிழக மாணவர் வழிகாட்டி" மாத இதழில் நெல்லை கவிநேசன் எழுதிவரும் தொடர் "வெற்றி படிக்கட்டுகள்". அந்தத் தொடர்க் கட்டுரையின் முழு வடிவத்தை இப்போது காணலாம்.

5. மனதிற்குள் மாற்றங்கள்...

“நீ புதிதாக வாங்கியிருக்கும் செல்போன் எப்படி இருக்கிறது?”- இது ஒருவர் வாங்கிய பொருளைப்பற்றி இன்னொருவர் கேட்ட கேள்வி. 

“உங்கள் ஆபீஸ் மேனேஜர் எப்படிப்பட்டவர்?”-ஒரு மனிதரைப்பற்றி அடுத்தவரின் கேள்வி இது.

“ஊட்டிக்கு டூர் புறப்பட்டு போனீங்களே! டூர் எப்படி இருந்தது?”-இது ஒரு இடத்தைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள உருவாக்கப்பட்ட கேள்வி.

“நேற்று ஒரு கல்யாண வீட்டிற்குச் சென்றீர்களே, விருந்து எப்படி?” - ஒரு நிகழ்வைப்பற்றிய கேள்வி இது.

-இப்படி விதவிதமான கேள்விகள் நம்மை நாள்தோறும் வந்தடைகின்றன. 

பொருட்கள் (Objects), மனிதர்கள் (Persons), இடங்கள் (Places) மற்றும் நிகழ்வுகள் (Events) போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப்பற்றி அந்தக் கேள்விகள் இடம்பெறும். 

இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கும்போதே நாம் பதில்சொல்ல ஆரம்பிக்கிறோம். அந்தப்பதில் நமது எண்ணத்தை பிரதிபலிக்கிறது. அந்தப் பதில்தான் நமது “மனநிலை” (Attitude) என்று பலரும் கருதுகிறார்கள். இதனை “மனப்பாங்கு” என்றும் கூறுவார்கள்.

இதனால்தான், திருவள்ளுவர் -
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
 ஆகுல நீர பிற” - எனக் குறிப்பிடுகிறார்.

“ஒருவன் தன் மனதில் குற்றமில்லாதவனாக இருக்க வேண்டும். அதுதான் அறவாழ்க்கை ஆகும். மனத்தூய்மை இல்லாத மற்றவை எல்லாம் ஆரவாரங்கள் நிறைந்த வாழ்க்கையாக மட்டுமே அமையும்” என்பது வள்ளுவர் வாக்கு.

பாஸ்கர் ஒரு பள்ளி மாணவன்.

பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த பாஸ்கருக்கு அழுத்தமான ஆலோசனை சொன்னார் வகுப்பு ஆசிரியர். 

வகுப்பு மாணவர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடந்ததால், பாஸ்கருக்கு கோபமாக வந்தது.

“மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததற்கு என் வீட்டில்கூட யாரும் ஒன்றும் சொல்லவில்லை. இவர் ஏன் என்னை திட்டுகிறார்” என்று எரிச்சல்பட்டான். 

நாள்தோறும் ஆசிரியரைக் கண்டதும் ‘வணக்கம்’போட்டு மகிழ்ந்த முகம், இப்போது இருளுக்குள் ஒளிந்துகொண்டது. போதாக்குறைக்கு மாணவ நண்பர்கள்வந்து “மாப்ளே இன்றைக்கு நம்ம மாஸ்டர் உன்ன வச்சி செய்துட்டாருடா” என்று எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினார்கள். 

வகுப்பில் பொறுப்பாக செயல்படும் பாஸ்கர் மனதில் “வெறுப்பின் நெருப்பு” கொளுந்துவிட்டு எரிந்தது. அவன் அவமானத்தை அள்ளிச் சுமப்பதாக எண்ணி குறுகிப்போனான். வீட்டிற்கு வந்தபின்பும் அவனது எண்ணமெல்லாம் ஆசிரியரைச்சுற்றி வந்தது. 

“என்னை அவமானப்படுத்திவிட்டாரே” என்று கோபப்பட்டான். 

அடுத்த நாள்முதல் ஆசிரியரை முறைத்துப்பார்க்க ஆரம்பித்தான். பாஸ்கரின் மனதில் எதிர்மறை எண்ணங்கள் இழையோடியதுதான் இந்த வெறுப்புக்கு காரணமாக அமைந்தது. 

ஒருவரின் மனநிலை எதிர்மறையாக அமையும்போது அதனை “எதிர்மறை மனப்பாங்கு” (Negative Attitude) என குறிப்பிடுவார்கள். எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் எப்போதும் தனிமையை விரும்புவார்கள். மகிழ்ச்சியை, தானே தொலைத்துவிட்டு அதற்குக் காரணத்தை அடுத்தவர்களிடம் தேடுவார்கள். தன்னம்பிக்கை இழந்து காணப்படுவார்கள். முடிவெடுக்க முடியாமல் குழம்பிப்போய் நிற்பார்கள். சின்னஞ்சிறு நிகழ்வுகளுக்கெல்லாம் கோபப்பட்டு குதிப்பார்கள். 

எனவே, எதிர்மறை மனநிலையை நீக்குவதற்கான முயற்சிகளில் இளம்வயதிலிருந்தே பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஈடுபட வேண்டும். 

ஒருவரின் மனப்பாங்கு எவ்வாறு உருவாகிறது? என்பதை முதலில் தெரிந்துகொண்டால், அந்த மனப்பாங்கை நேர்மறை மனப்பாங்காக (Positive Attitude) எளிதில் மாற்றலாம்.

ஒருவரின் மனப்பாங்கை உருவாக்குவதில் அவரின் ‘அனுபவம்’ முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருவரின் படிப்பு, அவரது பணி, சம்பளம், பணித்திறன் போன்றவைகளினால் உருவாகும் அனுபவங்கள் அவரது மனப்பாங்கை உருவாக்க பெருமளவில் துணைபுரிகின்றன. ஒருவர் விசுவாசமாக நடந்து கொள்வதற்கும், அதிக ஈடுபாட்டோடு பணிகளில் ஈடுபடுவதற்கும், சிறந்த முறையில் பணிபுரிவதற்கும் அவரது மனப்பாங்கு அடிப்படையாக அமைகிறது என்பதை புரிந்துகொள்வது நல்லது. 

“தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை” என்பார்கள். ஒருவரின் குடும்பச்சூழல் மற்றும் பெற்றோரின் மனநிலை போன்றவைகள் பிள்ளைகளின் மனநிலையை பெருமளவில் பாதிக்கிறது என்பதை இதன்மூலம் உணர்ந்துகொள்ளலாம்.

எந்தக் குழுவோடு அல்லது அமைப்போடு ஒருவர் தொடர்புகொண்டு செயல்படுகிறாரோ, அந்த அமைப்பின் பண்புகளை உள்வாங்கி, அவரது மனநிலையை மற்றவர்களின் மனநிலையைப்போலவே மாற்றிக்கொள்கிறார்.

இதைப்போலவே, ஒருவரின் மதம், சாதி, கல்வித்தகுதி, வயது, வருமானம், பாலினம் போன்றவைகள் ஒருவரின் மனநிலையை தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. தன்னோடு பழகும் ஒரே வயதுடையவர்கள் (Peer Groups) மனப்பாங்கும், மற்றவர்களின் எண்ணங்களை மாற்றும் சக்தி கொண்டவைகளாக அமைகின்றன. 

ஒருவர் வாழும் சமுதாயத்திலுள்ள பல்வேறு காரணிகள் (Social Factors) மனப்பாங்கை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சமுதாய விழாக்கள், சமூக அமைப்புகள், சமூக பழக்கவழக்கங்கள் போன்றவைகளும் அங்கு நிலவும் பண்பாட்டுச் சூழல்களும் ஒருவரின் மனப்பாங்கோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. நல்ல எண்ணம்கொண்ட ஊர்மக்கள் வாழும் இடத்தில் வளர்ந்த ஒருவருக்கு நிச்சயமாக நல்ல மனப்பாங்கோடு வளருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றன. அதேவேளையில், கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், அடிதடி என்று அதிக அலங்கோலங்கள் அரங்கேறும் இடத்தில் வசிப்பவர்களின் மனப்பாங்கு எதிர்மறையாக மாறுவது எளிதாகிறது. 

இருந்தபோதும், ஒருவர் தனது மனதை ஒருமுகப்படுத்தி வாழ்க்கையில், முன்னேற்ற பாதையில் செல்ல முடிவுசெய்து வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தால், அவரது வெற்றி எளிதாக மாறிவிடுகிறது. உடல்நலத்தோடு, மன நலத்தையும் ஒருவர் கட்டுக்கோப்போடு காத்துக்கொண்டால், நேர்மறை மனப்பாங்கு (Positive Attitude) அவரது மனதில் எளிதில் பதிந்துவிடுகிறது. 

நல்ல மனப்பாங்கை உருவாக்க விரும்புபவர்கள் முதலில் நல்ல மனிதர்களோடு தொடர்புகள் வைத்துக்கொள்ள வேண்டும். தன்னைத்தானே முதலில் நம்ப வேண்டும். தனது தாழ்வு மனப்பான்மையை நீக்குவதற்கான முயற்சிகளில் நாளும் ஈடுபட வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன வழி? என்று நாள்தோறும் சிந்தித்து நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். கவலைக்கான காரணங்களை கண்டுபிடித்து அவற்றை போக்குவதற்கு முன்வர வேண்டும். நூலகத்திற்குச்சென்று நல்ல புத்தகங்கள் வாசிப்பதும், சிறந்த திரைப்படங்களை இனங்கண்டு பார்த்து மகிழ்வதும், நல்ல மனப்பாங்கை உருவாக்க துணை நிற்கும். 

தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது மனதிற்கு மகிழ்வைத் தரும். எதிர்மறை மனப்பாங்கோடு செயல்படுபவர்களை எதிரில் கண்டால்கூட விலகிச்செல்வது மனதை நல்ல நிலையில் அமைத்துக்கொள்ள உதவும். அலைபாயும் மனதை அங்கங்கே அலையவிட்டு அழுது புலம்புவதைவிட, அழகான எண்ணங்களை மனதில் நிறுத்தி அற்புதமாக செயல்களை வடிவமைத்து வாழப் பழகிக்கொள்வது வெற்றிகளை குவிப்பதற்கு சிறந்த வகையில் துணைநிற்கும். 

நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுவதும், வீணான பயங்களை விரட்டியடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதும், வளர்ச்சிக்கு உதவும் சிறந்த தகவல்களை சேகரித்து செயலாக்குவதும், நேர்மறை மனப்பாங்காக மாறும். 

மேலும், “நான் என்னென்ன நல்ல எண்ணங்களை நாள்தோறும் செயல்படுத்த விரும்புகிறேன்” என்பதை ஒரு டைரியில் குறித்துவைத்து, அதனை செயல்படுத்த தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும். இத்தகைய முயற்சிகளெல்லாம் நல்ல மனப்பாங்கை உருவாக்குவதற்கும், சிறந்த செயல்பாட்டை அமைப்பதற்கும் அடிப்படையாக அமைகின்றன. 

நேர்மறையான நல்ல மனப்பாங்கு கொண்டவர்கள் நிதானமாக செயல்படுகிறார்கள். திட்டமிட்டு தங்கள் பணிகளை கால வரையறைக்குள் முடித்துவிடுகிறார்கள். இதன்மூலம், சிறந்தவர்கள் என்ற பெயரையும் பெற்றுக்கொள்கிறார்கள். 

நன்மைகள் பல தரும் நேர்மறை எண்ணங்களை மனதில் தேக்க பழகிக்கொள்வோமா?

Post a Comment

புதியது பழையவை

Sports News