நெல்லை கவிநேசன் நண்பரை தினத்தந்தி பாராட்டுகிறது!

கரகம் ஆடும் ‘கலைமாமணி’ ஆடிட்டர்
காவலராகவும் கலக்குகிறார்

பன்முக திறமை கொண்டவர்கள் சிலரே. அதில் தனி ஒருவராக ஜொலிக்கிறார், தவமணி. மதுரை கீழசந்தைப்பேட்டையை சேர்ந்தவரான இவர், மூன்று பொறுப்புகளில் அசத்துகிறார். ஆடிட்டர், கரகாட்டக்காரர், சேவை காவலர்... என மூன்று முக்கிய பணிகளை, பொறுப்பாக செய்து வருகிறார். 1500 மேடைகளில் கரகம் ஆடியதற்காக, இவருக்கு கலைமாமணி விருதும் கிடைத்திருக்கிறது. கலைமாமணி கலைஞராக, பன்முக பண்பாளராக திகழும் தவமணியுடன் ஒரு நேர்காணல்.

உங்களைப்பற்றி கூறுங்கள்?

மதுரை அடுத்த திருமங்கலம் பகுதியின் அத்திபட்டிதான் என் சொந்த ஊர். அப்பா மதுரையில் பல சரக்கு கடை வைத்திருந்தார். நாங்கள் திருமங்கலத்திலிருந்து மதுரை கீழசந்தைப்பேட்டைக்கு இடம்மாறி, அங்கிருக்கும் திருஞானம் பள்ளியில் படிக்க ஆரம்பித்தேன். இன்று மூன்று துறைகளில் வெற்றிபெற்று, திகழும் நான், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோற்றவன். இருப்பினும் தளர்ந்துவிடாமல், தோற்ற இடத்திலேயே மீண்டும் வெற்றி கொடி நாட்டினேன். அந்தத்தோல்வி என்னை பக்குவப்படுத்தியது. அடுத்து கிடைத்த பொதுத்தேர்வு வெற்றி, எனக்குள் இருந்த விடாநம்பிக்கையை வலுப்படுத்தியது. அதனால் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். பிளஸ்&2 தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, கல்லூரி வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தேன். அதுவரை கொஞ்சமும் ஆடாத என் கால்கள், கல்லூரி காலத்தில்தான் ஆடத் தொடங்கியது. அதுவும் கரகாட்டத்தில் நிலைபெற்றது. 

கரகாட்டக்காரராக மாறியது எப்படி?

என் தலையில் கரகம் ஏறியதற்கு, நான் படித்த வெள்ளைசாமி நாடார் கல்லூரியும், என்னுடன் படித்த நண்பன் ஜாபர் உசேனுமே காரணம். அதுவரை கரகாட்டத்தை ரசித்தவனின் தலையில், கரகம் ஏற்றி ஆட வைத்து, அழகு பார்த்தவர்களும் அவர்களே. 

மதுரையை சுற்றியிருக்கும் கல்லூரிகளுக்குள் நடக்கும் ‘இன்டர் காலேஜ் யூத் பெஸ்டிவல்’ நிகழ்ச்சியில் பங்கேற்க, எல்லா கல்லூரிகளுக்கும் அழைப்பு வந்தது. அதில், கரகம், காவடி, மயிலாட்டம், கும்மி, பொய்க்கால் குதிரையாட்டம்... என கிராமிய மணம் வீசியது. அதில் பங்கேற்கும் ஆர்வம், எனக்கு துளியளவும் இல்லை. அந்த சமயத்தில்தான், என் நண்பன் ஜாபர் உசேன் கரகத்தில் சேர வழிகாட்டினார். அவர் கரகம் பற்றி அறிந்தவர். கரகாட்டம் பயில ஆர்வமாய் இருந்தார். அவருடன் ஆட, ஒரு துணை தேவைப்பட்டதால், என்னை அதற்கு தயார்படுத்தினார். கல்லூரி செலவிலேயே கரகம் பயிலலாம் என்ற யோசனையை கூறி, என் தலையில் கரகம் ஏற்றியவரும் அவரே. அவரது தூண்டுதலில், கரகம் ஆட பெயர் கொடுத்தேன். கல்லூரி நிர்வாகம் கரகத்தை கற்றுக்கொடுக்க கிராமிய கலைகள் வளர்ச்சி மைய இயக்குநர் சோமசுந்தரத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அவரது பயிற்சியும், ஜாபரின் ஊக்கமும், என்னை சிறப்பாக கரகம் ஆட வைத்தது. வெற்றியும் கனிந்தது. அன்று ஆடத்தொடங்கிய கால்கள், 32 வருடங்களாக தொடர்ந்து ஆடிக்கொண்டே இருக்கிறது. 

கரகத்தில் உங்களுக்கு ஈர்ப்பு இருந்ததா?

ஏன் இல்லை? எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள காளியம்மன் கோவிலில் நடக்கும் பங்குனி விழாவில், விடிய விடிய கரகம் ஆடுவார்கள். அப்படி கரகம் ஆடுபவர்களை ஊரே வியந்து பார்க்கும். அவர்களை கதாநாயகர்களாக கருதி, அவர்களது ஆட்டத்திறனை புகழ்வார்கள். இந்த எண்ணமும், என்னை கரகத்திற்குள் மிக சுலபமாக கொண்டுவந்தது. அதனால் பி.காம் மற்றும் எம்.காம். ஆகிய 5 வருட கல்லூரி காலங்களிலும் கரகம் ஆடினோம். தமிழ்நாட்டின் எந்த மூலையில் கரகாட்டப்போட்டி நடைபெற்றாலும் சரி, அங்கு நானும் என் கரகமும் ஆடிக்கொண்டிருக்கும். இதனால் பல வெற்றிகளை கல்லூரிக்கு சமர்ப்பிக்க முடிந்தது. 

அதுபோக, தனியார் நிகழ்ச்சிகளிலும் கரகம் ஆடத்தொடங்கினோம். பிறந்த நாள், திருமண நாள், சடங்கு வீடுகள், தனியார் நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் கல்லூரியின் அனுமதியோடு கரகம் ஆடினோம். அதில் கிடைத்த பணத்தை, கரககட்ட போட்டிகளுக்காக பயன்படுத்தினோம். இப்படியே, 5 வருட கல்லூரி வாழ்க்கை கரகத்துடன் முடிந்தது. 


கரகத்தையும், படிப்பையும் ஒரே நேரத்தில் தலையில் சுமந்தது எப்படி?

நான் கரகத்தை மட்டும் கற்றுக்கொள்ளவில்லை. கரகம் கற்றுக்கொடுத்த பாடங்களை படித்து கொண்டேன். கரகம் தலையில் இருந்து கீழே விழாமல் இருக்க, உடலை அடிக்கடி சமநிலைப்படுத்த வேண்டும். அதை, என் படிப்பில் செயல்படுத்தினேன். கரகமும், படிப்பும் என் தலையில் இருந்து விழுந்துவிடாத வகையில், இரண்டையும் சமநிலைப்படுத்தினேன். 

கரகாட்டக்காரர், எப்படி ஆடிட்டர் படிப்பை தேர்வு செய்தார்?

நான் பி.காம் மற்றும் எம்.காம் ஆகிய படிப்புகளை முடித்திருந்த சமயம், அடுத்ததாக சி.ஏ. மற்றும் ஐ.சி.டபிள்யூ.ஏ. படிப்புகளை முடித்தால், நல்ல நிலைமைக்கு வரலாம் என்ற யோசனையை ஆடிட்டர் ஜெயசீலன் கொடுத்தார். அதன்படி, சி.ஏ. படிக்க தொடங்கினேன். இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. சி.ஏ. படிப்பு மிகவும் கடினமானது என்ற கருத்தும், என்னை சி.ஏ. படிக்க தூண்டியது. மிக கவனமாக படித்து, சிறு தவறின்றி தேர்வு எழுதினால் மட்டுமே சி.ஏ. படிப்பை முடிக்க முடியும். அந்த தருணத்திலும், சி.ஏ. படிப்பை தொடர்ந்தபடி, கரகமாடினேன். பல கரகாட்ட போட்டிகளில் வெற்றி பெற்றேன். கூடவே 2001ம் ஆண்டு ஐ.சி.டபிள்யூ.ஏ. தேர்விலும், 2004ம் ஆண்டு, சி.ஏ.தேர்விலும் வெற்றி பெற்றேன்.

ஆடிட்டர் ஆன பிறகும், கரகாட்டம் தொடர்ந்ததா?

(சிரிக்கிறார்) 2006ஆம் ஆண்டு திருப்பூரில், சி.ஏ. மற்றும் ஐ.சி.டபிள்யூ.ஏ. மாநாட்டில் தென்னிந்திய, இந்திய மற்றும் உலக அளவில் கரக நிகழ்ச்சிகளை நடத்தி, ஆடிட்டர்களை ஆச்சரியப்படுத்தினோம். நான் ஆடிட்டர் ஆன பிறகும் கரகாட்டம் ஆடியிருக்கிறேன். ஆடிட்டர்கள் முன்பும் கரகாட்டம் ஆடியிருக்கிறேன். அன்றும் ஆடினேன். இன்றும் ஆடுகிறேன்.

இதுவரை எத்தனை மேடைகளில், கரகம் ஆடியிருக்கிறீர்கள்?

கல்லூரி காலம் தொடங்கி, இன்றுவரை மொத்தமாக 1500 மேடை நிகழ்ச்சிகளில் கரகம் ஆடியிருக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம், கரகத்தோடு மேடையேறி விடுவேன். அப்படி 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கரகமாடியபோது, மேடையில் அமர்ந்திருந்த திரை பிரபலங்கள் சச்சு மற்றும் தேவா ஆகியோர், என்னை ‘கலைமாமணி’ விருதுக்கு விண்ணப்பிக்கும்படி கூறினர். அதுவரை கலைமாமணி எண்ணமே இல்லாத எனக்கு, அந்த மேடையில் அதற்கான வழிகாட்டுதல் கிடைத்தது. உடனே, பல மேடைகளில் கரகமாடிய அனுபவத்தை முன்நிறுத்தி, கலைமாமணி விருதுக்கு விண்ணப்பித்தேன். அதுவும், இந்த வருடம் தமிழக முதல்வர் கையில் கிடைக்கப் பெற்றது. 

கரகம் கற்றுக்கொடுக்கிறீர்களா?

பல பணிகளில் சிக்கிக்கொண்டிருப்பதால், கரகத்தை நேர பட்டியலிட்டு கற்றுக்கொடுக்க முடியவில்லை. ஆனால் எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில், என்னை அணுகுபவர்களுக்கு கரகம் கற்றுக்கொடுக்கிறேன். மேலும், எனது குரு சோமசுந்தரத்துடன் சேர்ந்து இன்றும் ஆடுகிறேன். அரசு விழாக்கள், தனியார் விழாக்களில் கரகம் ஆட அழைக்கின்றனர். அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு நான் இலவசமாக கரகமாடுகிறேன். நான் இலவசமாக கரகம் ஆடினாலும், எனக்கு துணையாக வருபவர்களின் செலவுகளுக்கும், லைட்டிங் உபகரணங்களுக்கும் மட்டுமே கட்டணம் பெறுகிறோம். மேலும் கரகம் பற்றிய சில தவறான எண்ணங்கள் சமூகத்தில் நிறைந்திருக்கிறது. ஏனெனில் சில இடங்களில் நடக்கும் திருவிழாக்களில் ஆபாசமாக கரகம் ஆடுகிறார்கள். இதனால் ஒட்டுமொத்த கரக கலையும் தவறான கண்ணோட்டத்திற்குள் சிக்கியுள்ளது. இதை சீர்செய்யும் பொறுப்பும் எங்களிடம் இருக்கிறது. அதனால் முடிந்தவரை பள்ளி&கல்லூரிகளுக்கு சென்று மாணவ&மாணவிகளுக்கு கரகாட்டத்தை கற்றுக்கொடுக்க திட்டமிட்டிருக்கிறோம். அதை வெகுவிரைவிலேயே செயல்படுத்துவோம். 

காவலர் பொறுப்பில் கம்பீரமாக வலம்வருவதைப்பற்றி கூறுங்கள்?


இது கவுரவ காவலர் பொறுப்பு. தமிழ்நாடு போலீஸ் டிராபிக் வார்டன் என்பது எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மக்களுக்காக சேவையாற்றுவதற்கான ஒரு வாய்ப்பு. இந்த அமைப்பை தமிழக காவல்துறை கவனிக்கிறது. அதாவது பொதுமக்களுக்காக, பொதுமக்களே தமிழக போலீசாருடன் இணைந்து பணியாற்றும் சேவை இது. இதில் இணைந்துகொண்டால், ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள், மொத்தம் 4 மணிநேரம் இப்படி போலீஸ் சீருடையில் பணியாற்ற வேண்டும். குறிப்பாக விசேஷ நாட்களில், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்தை சீர்ப்படுத்தும் பணியிலும், ஒழுங்குப்படுத்தும் சேவையிலும் என்னை ஈடுபடுத்தி கொள்கிறேன். இப்படி ஒரு பிரத்யேக சேவை இருப்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. நான் 2011&ஆம் ஆண்டில் இருந்தே இந்த சேவையில் ஈடுபடுகிறேன்.

கரகம், ஆடிட்டர், சேவை காவலர் என்பதை தாண்டி வேறு என்ன சேவைகளில் ஈடுபடுகிறீர்கள்?

சேவை காவலர் பணியில் ஈடுபட்டு வருவதால், சமூக கருத்துக்களை வலியுறுத்தி அடிக்கடி சாலைகளில் தெருக்கூத்து நாடகங்களை நடத்துவதுண்டு. உதாரணத்திற்கு, ஹெல்மெட் அணிய வலியுறுத்தி, எமன் வேடத்தில் சாலைகளில் தெருக்கூத்துக்களை நடத்துவோம். சிக்னலில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்போது, இந்த தெருக்கூத்து நாடகங்களை நடத்துகிறோம். 

இதுபோக, அடிக்கடி சமூக கருத்துக்களை வலியுறுத்தி, துண்டு பிரசுரங்களை விநியோகித்திருக்கிறோம்.

இரு ஒருபுறம் என்றால், இளைய தலைமுறையினருக்கு ஆடிட்டர் படிப்பு பற்றிய விழிப்புணர்வுகளையும், அதில் எப்படி சுலபமாக வெற்றி பெறுவது? என்பது பற்றிய விவரங்களையும் கற்றுக்கொடுக்கிறேன். இதற்காக பல கல்லூரிகளில் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். ஆடிட்டர் படிப்பை பற்றி பல மேடைகளிலும் பேசியிருக்கிறேன். பல கல்லூரிகளில் பகுதிநேர ஆசிரியராகவும் பணியாற்றி, மாணவர்களுக்கு சி.ஏ.படிப்பை புரியவைத்திருக்கிறேன். 

சேவை காவலர் பணியில் எப்படி இணைந்தீர்கள்?

இத்தகைய சேவைக்கு குறைந்த எண்ணிக்கையில்தான் வாய்ப்புகள் வழங்கப்படும். இதற்காக பிரத்யேக அலுவலகம், கமிஷனர் அலுவலகங்களில் செயல்படுகிறது. அங்கு விண்ணப்பிக்க வேண்டும். கமிஷனர் விண்ணப்பங்களை சரிபார்த்துவிட்டு, நேர்காணலுக்கு அழைப்பார். எதற்காக இந்த சேவையில் இணைகிறீர்கள்? அதற்கான தேவை என்ன? போன்ற கேள்விகளுக்குப்பிறகு, தேவையான ஆட்களை தேர்ந்தெடுப்பார்கள். இந்த சேவைக்கு எந்தவித சன்மானமும் வழங்கப்படாது. மாறாக, நாம்தாம் வருட சந்தாவாக ரூ.600 செலுத்த வேண்டும். மக்களுக்காக சேவையாற்ற விரும்பியதால், இதை செய்கிறேன். 

உங்களது பலம் என்ன?

பல துறைகளில் பணிபுரிந்தாலும், அதை ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்வதில்லை. அத்தகைய பணிகளை குடும்ப விஷயங்களிலும் குழப்பிக் கொள்வதில்லை. பல துறைகளில் கால்பதித்தாலும், புதுப்புது துறைகளில் கால்பதிக்க ஆசைப்படுவதை, என்னுடைய பலமாக கருதுகிறேன். பசி உள்ள குழந்தை உணவை தேடி ருசிப்பதுபோல, எனக்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டே இருக்கிறேன். இன்னமும் தேடுவேன்.

பன்முக பண்பாளராக பளிச்சிடும் தவமணிக்கு 51 வயதாகிறது. இருப்பினும் கரகத்தை கம்பீரமாக தலையில் நிறுத்தி ஆடுகிறார். மக்கள் சேவையில் ஈடுபடுகிறார். அடிக்கடி ஆடிட்டர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பேசுகிறார். இவருக்கு துரியா என்ற மனைவியும், பிரணவ் என்ற மகனும், தனிஷ்டா என்ற மகளும் இருக்கின்றனர். இவரது சேவையை மதுரை கலெக்டர் உட்பட பலரும் பாராட்டியிருக்கிறார்கள். அரசு நிகழ்ச்சிகள் பலவற்றில், விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. இவர் தொடர்ந்து, சிறப்பாக பணியாற்ற நாமும் வாழ்த்துவோம். 


நன்றி: தினத்தந்தி.

Post a Comment

புதியது பழையவை

Sports News