வெற்றிப் படிக்கட்டுகள் - தொடர் 9 - கருத்து வேறுபாடுகள்... களம் இறங்கலாமா...?

வெற்றிப் படிக்கட்டுகள்
தொடர்-9
கருத்து வேறுபாடுகள்... 
களம் இறங்கலாமா...?

“நான் பிளஸ் 2 முடித்தபின்பு மேற்படிப்பு படிக்கமாட்டேன் என்று போன வருஷமே சொல்லிவிட்டேன். இப்போது கல்லூரியில்போய் படி என்று சொல்கிறீர்கள். என்னால் எப்படி படிக்க முடியும்?” - மகன் முருகேஷ் அப்பாவிடம் முடிவாகச் சொன்னான். 

“கல்லூரியில்போய் படித்து ‘பட்டம்’ வாங்கினால்தான் உன்னை மதிப்பார்கள். இல்லையென்றால், உனது நண்பன்கூட உன்னை மதிக்கமாட்டான். நான் சொல்வதைக் கேள். பக்கத்து கல்லூரியில்போய் அப்ளிகேஷன் வாங்கி நிரப்பிப்போடுவோம். கண்டிப்பாக உனக்கு அட்மிஷன் கிடைக்கும்” - அப்பா அன்புராஜ் அழுத்தமாகச்சொல்லி தனது அன்பை வெளிப்படுத்தினார். 

“முடியாது... டிகிரியில் நான் பெயிலாகிவிட்டால், பிறகு நீங்கள்தான் சண்டைக்கு வருவீர்கள். அதனால் நான் சும்மா இருந்துவிடுகிறேன்” - என்றான் மகன்.

“வீட்டில் சும்மா இருந்து சாப்பிடுவதற்கு இது என்ன ஹோட்டலா? ஒழுங்காக படிக்கும் வழியைப்பார்” - அப்பாவின் குரலில் அதிகார வாசனை வெளிக்கிளம்பியது. 

“அப்பா நீங்க ஏன் கோபப்படுறீங்க? என்னால் முடியவில்லை என்றுதானே சொன்னேன்” - முறைத்தான் மகன்.

“படிக்க முடியவில்லையென்றால் என்கூடவந்து பஸ் ஸ்டாண்ட்கிட்ட இருக்கும் சாந்தி பேக்கரியில வேலை பார்க்கிறாயா?”.

“வேலைக்கெல்லாம் வர முடியாது. நான் வீட்டில்தான் இருப்பேன்” - விடாப்பிடியாக முருகேஷ் சொன்னதைக் கேட்டதும், அன்புராஜ் கோபத்தில் கத்தினார்.

“என் சொற்படி நீ கேட்டு நடக்கவில்லையென்றால் வீட்டைவிட்டு வெளியே போ” என்று சொன்னார் அப்பா. 

முருகேஷ் அழுதுகொண்டே தனது படுக்கை அறைக்குள்போய் கதவை மூடிக்கொண்டான்.

“காலையிலேயே உங்க அதிகாரத்தைக் காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே? என் பிள்ளை முருகேஷ் இப்படி அழுது ஒருநாள்கூட நான் பார்த்ததில்லை. உங்களுக்கு பிள்ளைமேல கொஞ்சமாவது அன்பு இருக்கா?” என்று அழுதுகொண்டே அன்புராஜின் பெயருக்கே வேட்டு வைத்தாள் மனைவி பத்மா.

அதிர்ந்துபோனார் அன்புராஜ்.

தாயும், மகனும் சேர்ந்துகொண்டு தன்மீது ‘வெறுப்புநெருப்பை’ அள்ளிக் கொட்டுகிறார்களே? என நினைத்தபோது மனம் ஆழமாய் வலித்தது.

நேரமாகிவிட்டதால் வேகமாக வேலைக்குச் சென்றுவிட்டார் அன்புராஜ். 

இரவு வீடு திரும்பினார். 

மகன் முருகேஷ் வீட்டில் இல்லை. அவர் வருவதைப்பார்த்த மனைவி பத்மா, அவரைப் பார்த்தும் பார்க்காததுபோல் சமையலறையில் பாத்திரங்களோடு சண்டை போட்டு சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தாள். வெறுப்பும், கோபமும் அவளது முகத்தில் முகாமிட்டிருந்தது. காலையில் தொடங்கிய “கோப வெயிலின்” தாக்கம் இன்னும் முடியவில்லை என்பதை உணர்ந்துகொண்டார் அன்புராஜ். 

“எனக்கு சாப்பாடு வேண்டாம்” என்றுசொல்லி கட்டிலில்போய் படுத்துக்கொண்டார். இரவு தாமதமாக வீட்டுக்குவந்த மகனும் வாய்ப்பூட்டுப் போட்டுக்கொண்டே அமைதியாய்போய் படுத்துக்கொண்டான். வீட்டுக்குள் குழப்பம் குடிகொள்ள ஆரம்பித்தது. சொந்த வீட்டில் அந்நியர்களாய் சிலநாட்கள் மூவரும் உலா வந்தார்கள். 

பேச்சு வார்த்தை ஏதுமின்றி இவர்களது “வாழ்க்கைப் பயணம்” தொடர்ந்தது. பின்னர் பிரச்சினைகளின் உச்சக்கட்டமாக மாறியது. 

ஒரு சாதாரண எதிர்பார்ப்பு ஒரு அசாதாரண சூழலை அரங்கேற்றிவிட்டது. “கருத்து வேறுபாடுகள்” (Difference of Opinion) களமிறங்க காரணமாகிவிட்டது. அங்கே “முரண்பாடுகள்” (Conflicts) முளைக்க ஆரம்பித்தன.

இப்படித்தான் சில குடும்பங்களில் நிம்மதி விடைபெற்றுச் செல்வதற்கு முரண்பாடுகள் (Conflicts) காரணமாகிவிடுகின்றன. பொதுவாக, வாழ்வில் தோன்றும் முரண்பாடுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கிறார்கள். 

ஒருவர் தனக்குள்ளே முரண்பட்டு முன்னுக்குப்பின் முரணாக செயல்படுவதை “தனிநபர் முரண்பாடு” (Individual Conflict) என அழைக்கிறார்கள். தான் ஒருநேரத்தில் சொன்ன கருத்தை, தானே சில நிமிடங்களுக்குள் மாற்றிப் பேசும் மனப்பான்மை கொண்டவர்கள் தனிநபர் முரண்பாடு கொண்டவர்களாக கருதப்படுவார்கள். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி, நெருக்கடியான சூழல்கள், பலவிதமான பணிகளைச் செய்தல் ஆகியவற்றால் ஒருவர் தனிநபர் முரண்பாட்டுக்கு தள்ளப்படுகிறார். 

தனிநபர் முரண்பாட்டில் இரு முக்கிய முரண்பாடுகள் உள்ளன. அவை - குறிக்கோள் முரண்பாடு (Goal Conflict), மற்றும் பாத்திர முரண்பாடு (Role Conflict) ஆகும். ஒரு குறிக்கோளை அடைவதற்கு இரண்டு, மூன்று வழிகள் இருக்கலாம். இதனை பலரும் தங்கள் விருப்பத்திற்கேற்ற முறையில் அந்த வழிகளை ஏதேனும் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து செயல்படலாம். 

“குறிக்கோளை அடைவதற்கு நான் தேர்ந்தெடுத்த வழியை நீங்கள் ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?” என்றுசொல்லி ஒருவர் முரண்பட்டு நிற்பதை “குறிக்கோள் முரண்பாடு” எனக் குறிப்பிடலாம். இதேபோல், ஒருவர் ஒரு செயலைச் செய்யும்போது அந்தச்செயல் மற்றவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி அமையவில்லையென்றால், அது “பாத்திர முரண்பாடு” (Role Conflict) என அழைக்கப்படுகிறது. எனவே, இந்த தனிநபர் முரண்பாடு தனக்குள் ஏற்படாதவாறு ஒருவர் தன்னைக் காத்துக்கொள்வது நல்லது. 

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்டவர்களோடு கருத்து வேறுபாடுகளை உருவாக்கி, முரண்பட்டு நிற்பதை “மற்றவர்களுடன் ஏற்படும் முரண்பாடு” (Inter-Personal Conflict) என அழைப்பார்கள். அதாவது - ஒருவரின் ஆளுமை, மனநிலை, கண்ணோட்டம், சமூகப் பண்பாட்டு காரணிகள் போன்றவற்றால் மற்றவர்களோடு முரண்பட வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக - ஒரே குடும்பத்தில் பிறந்த அண்ணன் - தம்பிகள், அக்கா - தங்கைகள் போன்றவர்களிடமும், அப்பா - அம்மா, தாத்தா - பாட்டி போன்றவர்களுடனும் கருத்து வேறுபாடுகள் தோன்றிவிடுகின்றன. 

இந்த முரண்பாட்டுக்கு முக்கிய காரணமாக தனிநபர் வேறுபாடுகள், போதுமான தகவல்கள் இல்லாமை, சுற்றுச்சூழலால் ஏற்படும் அழுத்தம் போன்றவைகள் அமைந்துவிடுகின்றன. 

ஒரு குழுவுக்கும், இன்னொரு குழுவுக்கும் இடையே ஏற்படுகின்றன முரண்பாடுகளை “குழுக்களுக்கு இடையேயான முரண்பாடு” (Inter Group Conflict) என்று குறிப்பிடுவார்கள். ஒரு அமைப்பிலுள்ள குழுக்களுக்கிடையே இந்த முரண்பாடுகள் ஏற்படுவதால், இதனை “அமைப்பு முரண்பாடுகள்” (Organisational Conflict) என்றும் சுட்டிக்காட்டுவார்கள்.

இந்த முரண்பாடுகள் ஏற்படுவதற்கு - தெளிவற்ற குறிக்கோள்கள், தேவையற்ற போட்டிகள், ஒரு குழுவை மற்ற குழு சார்ந்துவாழும் நிலை, பணிசெய்யும் வேலையைப் பற்றிய தெளிவற்ற சிந்தனை ஆகியவை அடித்தளமாக அமைகிறது.

முரண்பாடுகளை இரு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். 

1. பணிசார் முரண்பாடுகள் (Functional Conflict) - இந்தவகை முரண்பாடுகளை நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் (Positive Consequences) முரண்பாடுகளாக கருதுகிறார்கள். இவை- செயல்திறனை (Performance) அதிகரிக்க உதவும்.

2. பணிசாரா முரண்பாடுகள் (Dysfunctional Conflict) - இவ்வகை முரண்பாடுகள் செயல்திறனுக்கு தடையாக அமையும். குறிப்பாக - பணியில் ஏற்படும் அழுத்தங்கள், பதற்றமான சூழல்கள் போன்றவை பணிசாரா முரண்பாடுகளாக அமைகின்றன. 

முரண்பாடுகளை முற்றிலுமாக தவிர்த்து வாழ முடியுமா? என்ற கேள்வி பலரது மனதிலும் எழுகின்றது. இந்தக் கேள்விக்கான விடைகளை முறைப்படி தெரிந்துகொண்டால், எந்தச் சிக்கலிலும் சிக்கிக்கொள்ளாமல் வெற்றி பெறலாம். 

முரண்பாடுகளை கையாள உதவும் சில முக்கிய “முரண்பாட்டு மேலாண்மை” (Conflict Management) வழிமுறைகள்:
  • முரண்பாடுகளுக்கான காரணங்களை முழுவதுமான அறிந்துகொள்ளுங்கள்.
  • மற்றவர்கள் பேசும்போது அவர்களுக்கு மதிப்புகொடுக்கப் பழகிக்கொள்ளுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகளை ஆழ்ந்து கவனியுங்கள்.
  • மற்றவர்கள் மிக முக்கியமானவர்கள் என்பதை மனதில் நிறுத்தி அவர்களோடு பழகுங்கள்.
  • இருவருக்குள் ஏற்படும் முரண்பாடுகளை ஒவ்வொருவரும் தனக்கு ஏற்ற வகையில் வெளிப்படுத்தலாம். இருந்தபோதும், அதில் இருக்கும் நியாயங்களைத் தெளிவாக உணர்ந்து முரண்பாடுகளை ஒரு முடிவுக்குக்கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.
  • முரண்பாடுகளில் ஈடுபட்டவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்.
  • அதிக கோபத்தில் இருக்கும்போது முரண்பாடுகளுக்கு தீர்வுகாண முயற்சி செய்யாதீர்கள்.
  • தெளிவான தகவல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
இந்த வழிமுறைகள் முரண்பாடுகளை கையாள நிச்சயம் உதவிகரமாக அமையும்.

தனிமனித வாழ்விலும், பணிசெய்யும் இடங்களிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் செயல்படுவது நல்லது. சில தவிர்க்க இயலாத சூழல்களில் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். இவை முரண்பாடுகளுக்கு முன்னோடிகளாய் அமைவதால், முதலிலேயே சின்னஞ்சிறிய கருத்து வேறுபாடுகளுக்கான தீர்வுகளையும் கண்டறிய வேண்டும். மேலும், அந்தக் கருத்து வேறுபாடுகளை கையாளுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.  

ஆரம்பநிலையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை கவனிக்காமல் விட்டுவிட்டால், அவை முரண்பாடுகளாய் மாறிவிடும். இந்த முரண்பாடுகள் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கிவிடும். இதனால், கருத்து வேறுபாடுகள் களம் இறங்காமல் காத்துக்கொள்வது நமக்கு நல்லது அல்லவா!

Post a Comment

புதியது பழையவை

Sports News