டாக்டர்.APJ.அப்துல் கலாமுக்கு ஆனந்தத்தை கொடுத்தது எது?

டாக்டர்.A.P.J.அப்துல் கலாமுக்கு ஆனந்தத்தை கொடுத்தது எது?


தோல்வியை நிர்வகிப்பது எப்படி?

ஒருமுறை டாக்டர் அப்துல்கலாம் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். 

“தலைவர்கள் தோல்வியை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்?” என்பதை உங்களது அனுபவத்திலிருந்து உதாரணமாக சொல்வீர்களா? என்று கேட்டார்கள். 

அப்துல்கலாம் மகிழ்வுடன் அதற்கு பதில் தந்தார். 

“நான் என்னுடைய அனுபவங்களை உங்களுக்குச் சொல்கிறேன். 1973 ஆம் ஆண்டு எஸ்.எல்.வி.3. (SLV - 3) என்னும் திட்டத்தின் புராஜக்ட் டைரக்டராக இருந்தேன். அப்போது எங்களது நோக்கம் எல்லாம் ரோகிணி செயற்கைக்கோளை 1980 ஆம் ஆண்டுக்குள் பறக்க விட்டுவிட வேண்டும் என்பதுதான். 

எனக்கு தேவையான நிதி உதவிகளையும், அறிவியல் விஞ்ஞானிகளையும் தந்துவிட்டு, ‘1980ஆம் ஆண்டுக்குள் நமது செயற்கைக்கோள் விண்ணில் இருக்க வேண்டும்‘ என கூறினார்கள். ஆயிரக்கணக்கான பேர் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழுக்களாக எங்கள் இலக்கை நோக்கிச் செயல்பட்டோம். 

1979 ஆம் ஆண்டு நாங்கள் செயற்கைக்கோளை விண்ணில் பறக்கவிட தயார்நிலையில் இருப்பதாக உணர்ந்தோம். அப்போது திட்ட இயக்குநரான நான், கட்டுப்பாட்டு அறைக்குச்சென்று செயற்கைக்கோளை பறக்கவிடுவதற்கான பணிகளை கவனித்தேன். தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாங்கள் செலுத்திய செயற்கைக்கோள் வழிதவறி வங்காள விரிகுடா கடலில் விழுந்தது. அது மிகப்பெரிய தோல்வியாக அமைந்துவிட்டது. 

அப்போது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக இருந்தவர் பேராசிரியர் சதீஷ் தவான். அன்று காலை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் எங்கள் மையத்தின் தலைவர் பேராசிரியர் தவான் நடத்தினார். அப்போது செயற்கைக்கோள் தோல்விக்கு தானே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். 

“எங்கள் குழுவினர் அனைவரும் மிகக் கடினமாக உழைத்தார்கள். இருந்தபோதும் மிக அதிகமான தொழில்நுட்ப உதவிகள் எங்களுக்குத் தேவைப்படுகிறது. இன்னும் ஒரு வருடத்தில் எங்கள் குழுவினர் அனைவரும் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். இப்போது நான்தான் இந்த அமைப்பின் தலைவராக இருப்பதால் அதன் தோல்விக்கு நானே முழு பொறுப்பேற்றுக்கொள்கிறேன்” - என்று கூறினார் எங்களை தலைவர் பேராசிரியர் சதீஷ் தவான். 
அடுத்த வருடம் 1980 ஆம் ஆண்டு ஜுலை மாதம் நாங்கள் மீண்டும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதில் வெற்றி கண்டோம். 

இந்தியாவிலுள்ள மக்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மீண்டும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம். அப்போது பேராசிரியர் சதீஷ் தவான் என்னை அழைத்தார். 

“நீங்கள்தான் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தவேண்டும்“ என்று  சொன்னார். 

இந்த நிகழ்வுகள்மூலம் நான் ஒரு முக்கியமான பாடத்தை அன்று கற்றுக்கொண்டேன். 

தோல்விகள் வரும்போது ஒரு அமைப்பின் தலைவர் “அந்தத் தோல்விக்கு நான்தான் பொறுப்பு” என்று பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். 

வெற்றி வரும்போது, “அந்த வெற்றிக்குக்காரணம் எங்கள் குழுதான்” என்றுசொல்லி வெற்றியை அந்த குழுவிடம் ஒப்படைத்துவிடவேண்டும். மிகச்சிறந்த இந்த மேலாண்மை பாடத்தை புத்தகம் படிப்பதன்மூலம் நான் கற்றுக்கொள்ளவில்லை. எனது அனுபவத்தின்மூலமே இதனை நான் கற்றுக்கொண்டேன்” - என்று குறிப்பிட்டார் டாக்டர் அப்துல்கலாம். 

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்

புத்தகத்தைப்பற்றி…

உலகில் தலைசிறந்த விஞ்ஞானியாகவும் புகழ்மிக்க குடியரசுத் தலைவராகவும், ஆராய்ச்சி வல்லுநராகவும், தன்னம்பிக்கை நாயகராகவும், சிறந்த சிந்தனையாளராகவும், அற்புதமான எழுத்தாளராகவும், தனது சிறந்த நற்பண்புகளால் நமது நம்பிக்கை நாயகராகவும் திகழ்ந்தவர், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத்ரத்னா அப்துல்கலாம்.

தமிழ்வழியில் தனது கல்வியை ஆரம்பித்து, தமிழில் அறிவியலைப் படித்து, உலக சாதனைகளை நிகழ்த்திய உத்தமர் அவர். மாணவ, மாணவிகளிடம் நாட்டுப்பற்றை விதைத்து, எழுச்சியை உருவாக்கிய கர்ம வீரர். மகாத்மாவின் மறுவடிவமாக திகழ்ந்து, இளைஞர்களின் வழிகாட்டியாக விளங்குபவர். தமிழ் இலக்கியத்தை இனிமையாகப் பயின்று எல்லா மதங்களையும் தம் மதமாக ஏற்று வாழ்ந்து காட்டிய பத்மஸ்ரீ டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இளைஞர்களின் வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

நெல்லை கவிநேசன் எழுதிய “இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்” என்னும் இந்தநூல் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்றையும், வாழ்க்கைப் பாடங்களையும், சீரிய சிந்தனைகளையும், உரை வீச்சுக்களையும் உள்ளடக்கிய அற்புத பெட்டகமாக திகழ்கிறது.


விலை: ரூபாய்.50/-

Post a Comment

புதியது பழையவை

Sports News