நேர்முகத்தேர்வு-5

நேர்முகத்தேர்வு
- நெல்லை கவிநேசன்

சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே “நேர்முகத்தேர்வு” (Interview) எனப்படும் “பெர்சனாலிட்டி டெஸ்ட்” (Personality Test) என்னும் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே மத்திய அரசின் உயர் பதவிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

எனவே - “நேர்முகத் தேர்வு” எனப்படும் “பெர்சனாலிட்டி டெஸ்ட்” பற்றி விரிவான விளக்கங்களைத் தெரிந்துகொள்வது நல்லது. 

சிவில் சர்வீசஸ் தேர்வின் நேர்முகத் தேர்வுக்கு 275 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. முதன்மைத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 1750 ஆகும். எனவே, சிவில் சர்வீசஸ் தேர்வில் மொத்தம் 2025 மதிப்பெண்களுக்கு ஒருவரின் திறன் மதிப்பீடு செய்யப்படும். 

தேர்வுகள்
முதன்மைத் தேர்வு (Main Examination) - 1750 மதிப்பெண்கள்
நேர்முகத்தேர்வு (Interview) என்னும் ஆளுமைத்தேர்வு (Personality Test)
275 மதிப்பெண்கள்
மொத்தம் 2025 மதிப்பெண்கள்           
போட்டியாளர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் “தரவரிசை” (Rank List) தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் உரிய பதவிகள் அவர்களுக்கு வழங்கப்படுயுறது.

“நேர்முகத் தேர்வு” என்பது சிவில் சர்வீசஸ் நிர்வாகப் பணியைத் தெளிவாக நிறைவேற்றுவதற்கு தகுந்த வகையில் போட்டியாளரின்“ஆளுமைத்தன்மை”(Personality)அமைந்துள்ளதா? என்பதை மதிப்பீடு செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. போட்டியாளரின் நடுநிலைத்தன்மை, முடிவெடுக்கும் திறன் (Decision Making Skill), நேர்மைத் திறன் (Truthfulness), தலைமை பண்பு (Leadership Quality), ஒருங்கிணைந்து செயல்படும் திறன் (Human Relation Skill), கவனத்திறன் (Concentration) ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் விதத்திலும் கேள்விகள் கேட்கப்படும் 

போட்டியாளர் பொதுச்சேவை (Public Service) செய்வதற்கு தகுதியான நபர்தானா? என்பதை உறுதிசெய்யும் விதத்திலும் நேர்முகத்தேர்வுக் கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கும். போட்டியாளரின் நெறித்தன்மை (Values), புத்திக்கூர்மை (Intelligence), பொதுஅறிவு (General Knowledge), சமூகப் பண்புகள் (Social Skills), ஒழுக்கம் (Discipline), ஆர்வம் (Interest) போன்றவைகளிலும் மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் வழங்கும் விதத்தில் நேர்முகத்தேர்வு கேள்விகள் உருவாக்கப்படும். இதனால், மிகுந்த கவனத்தோடு சிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்வை ஒருவர் சந்திக்க வேண்டும். 

நேர்முகத் தேர்வில், போட்டியாளர்கள் சொல்லும் பதிலின் அடிப்படையில் ஆளுமைத் தன்மையை (Personality) தேர்வாளர்கள் கணக்கிடுகிறார்கள். தேர்வாளர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் போட்டியாளரின் குணநலன்களை அறியும் விதத்திலேயே அமைந்திருக்கும். 

“இண்டர்வியூ எனக்குப் பயமாக இருக்கிறது” - என்று இளைஞர்களில் சிலர் தேவையில்லாமல் பயப்படுவதை நாம் கண்கூடாகக் காணலாம். 

“நேர்முகத் தேர்வு” என்பது “பெர்சனாலிட்டி” எனப்படும்ஆளுமையை மதிப்பீடு செய்வதற்காக நடத்தப்படும் கலந்துரையாடல் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் உயர்பணிகளில் சேர்ந்து, சிறப்பாக ஒருவரால் பணியாற்ற இயலுமா? என்பதைத் தீர்மானிப்பதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

போட்டியாளர்களின் ஆளுமைத் திறனை மதிப்பீடு செய்யும் விதத்தில் பல கேள்விகள் இந்தத் தேர்வில் கேட்கப்படும். குறிப்பாக - போட்டியாளரின் பிறந்த ஊர், அவரது பெயர், குடும்பம், உறவுகள் போன்றவற்றின் அடிப்படையில் முதலில் கேள்விகள் கேட்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் நேர்முகத்தேர்வில் கேள்வி கேட்டார்கள். 

“நீங்கள் பிறந்த திருநெல்வேலி மாவட்டத்தின் சிறப்பு என்ன?” - இதுதான் அந்தக் கேள்வி.

“திருநெல்வேலி அல்வா” என்று பதில் தந்தார் அவர்.  

“எல்லா ஊரிலும் அல்வா தயாரிக்கிறார்கள். திருநெல்வேலி அல்வா எந்தவகையில் சிறப்புப்பெற்றது?” - என நேர்முகத் தேர்வு நடத்தியவர்கள் அடுத்த கேள்வி கேட்டார்கள்.

அவர் திணறிப்போனார். பதில் சொல்ல இயலவில்லை.

“சரி... அதை விடுவோம். திருநெல்வேலி அல்வா தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவை?” - என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டார்கள்.

மீண்டும் அவரால் பதில் பேச முடியவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தின் சிறப்புகளைப்பற்றி கேட்டால் அதுபற்றி கூறுவதற்கு எத்தனையோ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்கின்றன. குறிப்பாக - நெல்லையப்பர் கோவில், சங்கர் சிமெண்ட் ஆலை, பழமைவாய்ந்த கிருஷ்ணாபுரம் ஆலயம், கதீட்ரல் தேவாலயம், ‘தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு’ என அழைக்கப்படும் பாளையங்கோட்டை, களக்காடு சரணாலயம், முண்டந்துறை புலிகள் காப்பகம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், கூடங்குளம் அணுமின் நிலையம், நாங்குநேரி விஜயநாராயணம் கப்பல் படைத்தளம், மகேந்திரகிரி ராக்கெட் ஆய்வுத்தளம், குற்றாலநீர்வீழ்ச்சி, ஆத்தங்கரை பள்ளிவாசல், தென்காசி காசி விசுவநாதர் கோயில், தாமிரபரணி நதி, மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் போன்றவைகள் தனிச்சிறப்பு மிக்கவைகளாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. இவைதவிர கட்டபொம்மன், புலித்தேவன், வாஞ்சிநாதன்,   ரா.பி.சேதுப்பிள்ளை, பெ.நா.அப்புசாமி, காருகுறிச்சி அருணாசலம் போன்ற புகழ்மிக்க பெரியவர்களும் வாழ்ந்து சிறந்த மாவட்டமாக திருநெல்வேலி திகழ்கிறது. 

திருநெல்வேலி மாவட்டத்தின் ஏதேனும் ஒரு சிறப்பைப்பற்றி முதலிலேயே விரிவாகத் தெரிந்துகொண்டு போட்டியாளர் நேர்முகத் தேர்வில் பங்கு பெற்றிருந்தால் சரியான பதிலை விளக்கமாகத் தெரிவிக்க வாய்ப்பாக அமைந்திருக்கும் அல்லவா!

பொதுவாக, நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும்போது ஒருவித பயம் கலந்த நடுக்கம் போட்டியாளரிடம் காணப்படும். இந்தப் பயத்தைப் போக்குவதற்காகவே போட்டியாளர்களுக்குத் தெரிந்த மிக சாதாரண கேள்விகளை முதலில் கேட்பார்கள். 

உங்கள் ஊரைப்பற்றியும், வீட்டைப்பற்றியும் உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். எனவே, உங்களுக்குத் நன்கு தெரிந்த விவரங்களை தெளிவாகப் புரிந்துகொண்டு நேர்முகத் தேர்வை சந்திப்பது சிறந்ததாகும். நீங்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படைத் தகவல்களைப்பற்றிக்கூட தெளிவாக நேர்முகத் தேர்வில் சொல்ல இயலாவிட்டால், உங்களைப்பற்றி, “எதிர்மறை எண்ணங்கள்” தேர்வு நடத்துபவர்கள் மனதில் உருவாகும். இதன்மூலம், நேர்முகத் தேர்வு எனப்படும் ஆளுமைத் தேர்வில் மதிப்பெண்கள் குறையவும் வாய்ப்புகள் உள்ளது. 

எனவே, நேர்முகத் தேர்வுக்கு தனியாக தயாரிப்புப் பணியில் ஈடுபடுவது நல்லது. சிறந்த முறையில் நேர்முகத் தேர்வுக்காக தயார் செய்தால் மட்டுமே சிறந்த மதிப்பெண்கள் பெற இயலும்.

நேர்முகத் தேர்வில் ஆங்கிலத்தான் பேச வேண்டுமா? தமிழில் பேசக்கூடாதா? என சிலர் எண்ணலாம். நேர்முகத் தேர்வில் ஆங்கிலத்திலும் பதில் அளிக்கலாம். அல்லது முதன்மைத் தேர்வை (Main Examination) எந்த இந்திய மொழியில் எழுதினீர்களோ அந்த மொழியில் பேச அனுமதியளிக்கிறார்கள். 

உதாரணமாக - நீங்கள் முதன்மைத் தேர்வின் விருப்பப் பாடங்களைத் தமிழில் எழுதினால், நேர்முகத் தேர்விலும் தமிழில் பதில் அளிக்கலாம். ஆனால், அதேவேளையில் முதன்மைத் தேர்வை ஆங்கிலத்தில் எழுதியிருந்தால், நேர்முகத் தேர்வில் ஆங்கிலத்தில்தான் பதில் தரவேண்டும். 

நீங்கள் இந்திய மொழி ஏதேனும் ஒன்றில் முதன்மைத் தேர்வை எழுதியிருந்தாலும், நேர்முகத் தேர்வில் ஆங்கிலத்தில்தான் பதிலளிக்க அனுமதிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றி அடிப்படைத் தகவல்களை தெரிந்துகொண்டாலும், இந்தத் தேர்வை வெற்றிகரமாக எழுதுவதற்கு சில முக்கியமான குணங்களை தேர்வு எழுதுபவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அந்த குணங்கள் எவை? 

Post a Comment

புதியது பழையவை

Sports News