நெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள்-1

நெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள்-1

உங்கள் குறிக்கோள் என்ன?

உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் பல்வேறு மாற்றங்களை பல துறைகளில் உருவாக்கி வருகிறது. போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் வெற்றிபெற்று சிறந்து விளங்குபவர்கள்தான் வாழ்க்கையில் நிம்மதியாகவும், மன மகிழ்வையும் பெறுகிறார்கள். 

“வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். புகழ் பெற வேண்டும்” என்று ஆசைப்படுபவர்கள் ஏராளம். ஆனால் அந்த வெற்றியைப் பெறுவதற்கு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது பல இளைய உள்ளங்களுக்கு தெரிவதில்லை. 

“டீன் ஏஜ்” எனப்படும் “குமாரப்பருவம்” வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் காலம் என்பதை சரியான உணர்ந்து கொண்டவர்கள் வாழ்க்கையில் சாதனை படைக்கிறார்கள். சரித்திரத்தில் நிலைக்கிறார்கள். 

எனவே - சின்னஞ்சிறு வயதில் பள்ளிகளில் படிக்கும்போது சில உண்மைகளைப் புரிந்துகொண்டு வாழ்க்கைப் பாதையை சீரிய முறையில் வகுத்துக் கொள்வது அவசியமல்லவா?

அன்று - 

எனது வீட்டிலிருந்து நான் பணிபுரியும் கல்லூரிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அவசரமாக செல்போன் மணி ஒலித்தது. அழைத்தது யார்? என்று விசாரித்தேன். 

“சார் என் பெயர் சுரேஸ் நான் பிளஸ் 2 முடித்திருக்கிறேன். மேற்படிப்பாக என்ன படிக்கலாம் என்று தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. நான் ஐ.ஏ.எஸ். ஆதிகாரியாக வேண்டும். உங்களிடம் தொலைபேசியில் கேட்டால் பதில் கிடைக்கும் என எனது நண்பன் சொன்னான். அவன்தான் உங்கள் செல் நம்பரை தந்தான். அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன்” - என விளக்கம் சொன்னான் அந்த மாணவன்.      

அப்போது - நேரம் காலை 9 மணி கல்லூரிக்குச் செல்லும் அவசரம் அந்த மாணவனுக்கு விரிவாக பதில்சொல்ல ஆசைதான் இருந்தாலும் காலத்தின் அருமைகருதி அவனை மாலை வேளையில் என்னை சந்திக்க வரச் சொன்னான். 

மாலை வேளை குறிப்பிட்ட நேரத்தில் என் வீட்டிற்கு சுரேஸ் வந்தான். அந்த பிளஸ் 2 மாணவன் மனத்தில் குழப்பம் முகாமிட்டு இருப்பதை அவனது முகம் படம்பிடித்து காட்டியது. பதட்டத்தோடு இருந்தான் சுரேஸிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன். 

“தம்பி சுரேஸ்... உங்களுக்கு படிப்பு சம்பந்தமாக என்ன சந்தேகம் இருந்தாலும் விளக்கமாக என்னிடம் கேளுங்கள்” என்றேன். 

“சார்... நான் பிளஸ் 2 முடித்திருக்கிறேன். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடம் எடுத்து படித்திருக்கிறேன். பிளஸ் 2வில் 828 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறேன். நான் படிக்கும் பள்ளியில் செகண்ட் ரேங்க் எடுத்திருக்கிறேன். நான் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் எனது அப்பா, நீயெல்லாம் இன்ஜினியரிங் படிக்க வேண்டாம். பேசாமல் நீ பி.ஏ., அல்லது பி.எஸ்.சி., படி என்கிறார். எனது மாமா போனவாரம் எனது வீட்டிற்கு வந்தார். இன்ஜினியரிங் படித்தால் பாலிடெக்னிக் கல்லூரியில்போய் சேர்ந்துவிடு என்று சொன்னார். 

எனது நண்பன் ஐ.டி.ஐ. படிப்பில் சேர்ந்து படித்தால் உடனே வெளிநாட்டில் உனக்கு வேலை கிடைக்கும். அதுவும் நீ எலெக்ட்ரிசியன் எடுத்துப் படித்தால் படிக்கும்போதே உடனே வெளிநாட்டுக்காரர்கள் கூப்பிட்டு வேலை கொடுப்பார்கள் என்றான். எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. நான் என்ன செய்வது? நீங்கள் சொல்லும் படிப்பில்தான் நான்போய் சேர வேண்டும்” - என தயங்கி தயங்கி சொல்லி முடித்தான். 

வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அந்த இளைஞனின் மனதில் இருந்தாலும் அவனுக்குள் ஏற்பட்ட குழப்பம் முடிவு எடுக்க முடியாத நிலையில் உருவாக்கிவிட்டது. 

பிளஸ் 2 படித்து முடித்ததும் அடுத்து என்ன படிக்க வேண்டும் என்ற கவலை பல மாணவ - மாணவிகளிடம் மேலோங்கி இருக்கிறது. பள்ளி ஆசிரியர் சொல்லும் படிப்பில் சேரவா? எனது பெற்றோர்கள் சொல்லும் படிப்பை தேர்ந்தெடுக்கவர்? உறவினர்கள் குறிப்பிடும் படிப்பை தேர்ந்தெடுக்கவா? நண்பர்கள் சொல்லும் படிப்பில் சேர்ந்து படிக்கலாமா? என பள்ளியில் பயிலும் பல மாணவ - மாணவிகள் சிந்தனைசெய்து, முடிவு எடுக்க முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள். 

இந்தக் குழப்பங்களுக்கு முடிவு காண்பது எப்படி? 

என்னைக் காண வந்த மாணவன் சுரேஸ்க்கு நான் கொடுத்த விளக்கம் இதுதான். 

“தம்பி... சுரேஸ் உங்கள் குடும்பத்தைப்பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்” என்று கேட்டேன்.          

“சார் என் அப்பா ஒரு தங்க நகை தொழில் செய்யும் தொழிலாளி. எனது மூன்று தங்கைகள் பள்ளியில் படிக்கிறார்கள். எனது அக்கா பிளஸ் 2 முடித்துவிட்டு 5 வருடங்களாக வீட்டில் இருக்கிறாள். எனது குடும்பத்தில் அப்பாவின் சம்பளத்தை வைத்துதான் குடும்பம் நடக்கிறது” என்றான் சுரேஸ்.

மாணவன் சுரேஸின் குடும்பப் பின்னணியைத் தெரிந்துகொண்டபின்பு அவனுக்கு ஒரு விரிவான விளக்கம் கொடுத்தேன். 

“தம்பி பிளஸ் 2 படித்தபின் என்ன படிக்கலாம்? என்பதைப்பற்றி தெரிந்துகொள்ள சரியாக வழிகாட்டும் கல்வி வல்லுனர்களிடம் விவரம் கேட்க வேண்டும் என முடிவு செய்த உங்களைப் பாராட்டுகிறேன். பஸ் ஸ்டாண்டில் ஒருவர் நிற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு வயது ஐம்பது இருக்கும். அவர் படிப்பறிவு இல்லாதவர். அவர் தனது பக்கத்தில் பஸ்ஸ§க்காக காத்திருப்பவர்களிடம் “நான் இந்த பஸ்ஸில் போகலாமா? அந்த பஸ்ஸில் போகலாமா?” என்று விசாரிக்கிறார். அருகில் பஸ்ஸ§க்கு காத்திருந்த ஒருவர் நீங்கள் எந்த பஸ்ஸில் போகவேண்டும் என்று தீர்மானிப்பதற்குமுன்பு நீங்கள் எந்த ஊருக்கு செல்ல வேண்டும்? என்பதை முடிவு செய்யுங்கள்” - என்று சொன்னார். 

பொதுவாக ஒரு பயணம் மேற்கொள்பவர்கள் முதல் எந்த ஊருக்குச் செல்ல வேண்டும்? எந்த நேரத்தில் அந்த இடத்தில் இருக்க வேண்டும்? என்பதை திட்டமிட்ட பின்புதான் பஸ்ஸில் போகவா? காரில் போகவா? புகை வண்டியில் செல்லவா? விமானத்தில் செல்லலாமா? நடந்து செல்லவா? சைக்கிளில் போகவா? என்பதை முடிவு செய்ய வேண்டும். 

இதைப்போலத்தான் பள்ளி மாணவ - மாணவிகள் வாழ்க்கையில் தாங்கள் எந்த நிலைக்கு வரவேண்டும்? என்ன பணியில் சேர வேண்டும்? என்பதையெல்லாம் பள்ளியில் படிக்கும்போதே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். 

“இப்படி ஒரு குறிக்கோளை நிர்ணயித்துக் கொண்டால்தான் அந்த குறிக்கோளை அடைவதற்கு எந்த படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்யலாம்” - என்று சுரேஸ்க்கு விளக்கம் சொன்னேன். 
    
உதாரணமாக - ஒருவர் “ஐ.ஏ.எஸ்.,” என்று சொல்லப்படும் “இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service)”யில் சேர வேண்டும் என்று குறிக்கோள் வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். இந்த குறிக்கோளை முதலில் தீர்மானித்து கொண்டால்தான் அந்தப் பணியில் சேர்வதற்கு எந்த கல்வித் தகுதி  (Educational Qualification) தேவை என்பதையும், எந்த போட்டித் தேர்வு (Competitive Examinations) எழுத வேண்டும் என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.    

மேற்படிப்பாக என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்குமுன்பு பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகள் கீழ்க்கண்ட ஐந்து கேள்விகளுக்கு தெளிவான பதிலை தெரிந்துகொள்ள வேண்டும். 

1.வாழ்க்கையில் உங்கள் குறிக்கோள் என்ன? (Your Life Goals)
2.எந்த மேற்படிப்பில் உங்கள் ஆர்வம் அதிகமாக இருக்கிறது? (Your Interest)
3.உங்கள் பெற்றோர் நீங்கள் எந்த மேற்படிப்பு படிக்க வேண்டும் என விரும்புகிறார்கள்? (Your Parents Interest)
4.நீங்கள் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு? (Your Marks)
5.உங்கள் குடும்பத்தின் நிதிநிலைமை எப்படி உள்ளது? (Financial Position of Your Family)  

இந்த ஐந்து கேள்விகளுக்கும் சரியான பதிலை கண்டுபிடித்துவிட்டால் எந்த மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற முடிவை மாணவ - மாணவிகளே தீர்மானித்துக்கொள்ளலாம்.   

இனி - மாணவன் சுரேஸின் பிரச்சனைக்கு வருவோம். 

சுரேஸ் தனது வாழ்க்கையில் எப்படியாவது ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறான். அவன் ஐ.ஏ.எஸ்., பணியில் சேர ஒரு பெரியியல் பட்டம் தேவை என அவன் நினைக்கிறான். ஆனால் அவனது அப்பா தனது குடும்பத்தின் பொருளாதார பிரச்சினையை நினைத்து “நீ ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் சேர்ந்துகொள்” என அறிவுரை சொல்கிறார். உடனடி வேலைவாய்ப்பை மனதில் கொண்ட நண்பன் நீ ஐ.டி.ஐ. படிப்பில் சேர்வது தான் சிறந்தது என்கிறான். 

இந்தச்சூழலில் எது நல்ல படிப்பு என்று தீர்மானிப்பதற்குமுன்பு - சுரேஸின் குறிக்கோளான ஐ.ஏ.எஸ்., கனவு நிறைவேற வேண்டுமென்றால் பல்கலைககழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் எந்த பாடப் பிரிவிலும் இருக்கலாம். பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ., பி.டெக்., பி.ஆர்க்., பி.இ., எம்.இ., எம்.டெக்., எம்.பி.பி.எஸ் போன்ற எந்த பட்டப்படிப்பு படித்தாலும் ஐ.ஏ.எஸ்., பணிக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸஸ் தேர்வை (Civil Services Examination) எழுதலாம்.   

இப்போது அரசு கல்லூரிகளிலும் (Government Colleges), அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் (Government Aided Colleges) சேர்ந்த பட்டப்படிப்பும், பட்ட மேற்படிப்பும் படிக்க கல்வி கட்டணம் கிடையாது. எனவே சுரேஸ் தனது குடும்பப் பொருளாதார சூழலை உணர்ந்து தனக்கு விருப்பமான ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் சேர்ந்து சிறப்பாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அவனது குறிக்கோளை எளிதில் அடைந்துவிடலாம். 

இந்த தகவல்களையெல்லாம் மாணவன் சுரேஸிடம் விளக்கமாக சொன்னவுடன் அவன் விளக்கம் புரிந்துகொண்டான். தற்போது அரசு உதவிபெறும் ஒரு கல்லூரியில் அவன் விரும்பிய பி.எஸ்.சி., (இயற்பியல்) பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான். சிவில் சர்வீஸஸ் தேர்வுக்கும் தயார்செய்து வருகிறான். 

சுரேஸின் குழப்பம் தீர்ந்தது. அவன் இப்போது குதூகலத்துடன் படித்து வருகிறான். 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி வந்ததும் பல மாணவ - மாணவிகளுக்கும் சுரேஸின் குழப்ப மனநிலை போன்ற சூழ்நிலை உருவாகும். இந்த குழப்ப சூழலைத் தவிர்ப்பதற்கு முன்கூட்டியே மேற்படிப்பாக என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? அந்தப் படிப்பை படித்து முடிக்க எவ்வளவு செலவாகும்? போன்ற அத்தனை விவரங்களையும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். 

பிளஸ் 2 படித்து முடித்தபின் பெரியியல் பட்டப்படிப்புகள், பாலிடெக்னிக் படிப்புகள், ஐ.டி.ஐ. படிப்புகள், மருத்துவ பட்டப் படிப்புகள், மருத்துவ டிப்ளமோ படிப்புகள், சான்றிதழ் படிப்புகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகள், மேலாண்மைப் படிப்புகள், உணவு சார்ந்த படிப்புகள், உடற்கல்வியியல் படிப்புகள், கல்வியியல் படிப்புகள், திரைப்படம் சார்ந்த படிப்புகள், உணவகப் படிப்புகள், கணினி படிப்புகள் என ஏராளமான படிப்புகள உள்ளன. இவைதவிர உடனடி வேலை வழங்கும் பல படிப்புகளும் உள்ளன. 

உங்களுக்கு ஏற்றதை தேர்வு செய்து நன்கு படியுங்கள். வானளாவ வளருங்கள். வாழ்த்துகள். 

Post a Comment

புதியது பழையவை

Sports News