வாரியார் சுவாமிகள் -அருணகிரிநாதர்



எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து அவதிப்பட்டார். என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட்டதால், கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்கினார். அதனால் இவரது சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடன் கடிந்து கொண்டபோது, தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார்.


அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், அவரது தொழுநோயைக் குணப்படுத்தினார், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது


அருணகிரிநாதர், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன, மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளன

Post a Comment

புதியது பழையவை

Sports News