தகவல் தொழில்நுட்பப் படிப்புகள்-7

தகவல் தொழில்நுட்பப் படிப்புகள்
- நெல்லை கவிநேசன்

கம்ப்யூட்டர் துறையில் பல்வேறு பணிகள் இருந்தாலும் அந்தப் பணிகளில் சேர தேவையான தகுதிகளையும், திறமைகளையும் வளர்த்துக்கொள்வதன்மூலம் மிகச் சிறந்த பணிகளில்
எளிதில் சேரலாம். 

தகவல் தொழில்நுட்பப் பணிக்கு சில அடிப்படையான தொழில்நுட்ப அறிவும், திறமையும் தேவைப்படுகிறது. மாறுகின்ற சூழலுக்குஏற்ப புதிய திறமைகள் கொண்ட சிறப்பான கம்ப்யூட்டர் அறிவும் தேவைப்படுகிறது. சில பணிகளில் நெட்வொர்க்கை (Network) நிர்வகிப்பது, இணையதளங்களை (Websites) உருவாக்குவது சாப்ட்வேர் சம்பந்தப்பட்ட புரோகிராம்களை ஏற்படுத்துவது ஆகிய தனித்திறமைகள் தேவைப்படும்.

தகவல் தொழில்நுட்பப் பணிக்குத் தேவைப்படும் திறமைகள்

தகவல் தொழில்நுட்பப் பணிக்குத் தேவையான திறமைகளை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். அவை - 
1.கம்ப்யூட்டர் பணிக்கான அடிப்படை திறமைகள் (Basic Computer Job Skills)
2.கம்ப்யூட்டர் பணிக்கான சிறப்பு திறமைகள் (Specialised Computer Job Skills)
3.கம்ப்யூட்டர் பணிக்கான உயர் தர திறமைகள் (Advanced Computer Job Skills) - ஆகியவை ஆகும்.

1. கம்ப்யூட்டர் பணிக்கான அடிப்படை திறமைகள் (Basic Computer Job Skills) 

இன்று எந்தப் பணியை எடுத்துக்கொண்டாலும் அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு இல்லாமல் அந்தப் பணியை சிறப்பாகச் செய்ய இயலாது. எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்திலும் பணிபுரிவதற்கு கம்ப்யூட்டரை இயக்க தெரிந்தவர்களையே விரும்புகிறார்கள். அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு பெற்றவர்களால்தான் கம்ப்யூட்டர் பணி தொடர்பான சின்னஞ்சிறு பணிகளை ஆழகாக செய்ய இயலும்.
  • இ-மெயில்மூலம்  (E-mail) தகவல் அனுப்புதல்
  • கம்ப்யூட்டரில் கடிதம் எழுதுதல்
  • நிறுவனத்திற்குத் தேவையான முக்கியப் படிவங்களை பல்வேறு இணைய தளத்தில் இருந்து சேகரித்தல்
  • தகவல்களை கம்ப்யூட்டரில் சேமித்தல்
  • பட்ஜெட் தயாரிப்புக்குத் தேவையான தகவல்களைக் கொடுத்தல்
  • முக்கிய தகவல்களைப் பாதுகாத்தல்

-போன்ற பணிகளை செய்ய கம்ப்யூட்டர் அறிவு அவசியம் தேவை. 

முன்பெல்லாம் அலுவலகங்களில் உதவியாளராக பணிபுரிவதற்கு டைப் செய்யவும், வாக்கியங்களின் இலக்கணத்தை சரிபார்க்கவும், கடிதங்களை எழுதுவதற்கும் சிறப்பான திறமைகள் கண்டிப்பாகத் தேவை. ஆனால் இப்போது அந்தப் பணிகளை இப்போது சாப்ட்வேர் (Software), உதவியுடன் எளிதில் செய்துவிடலாம். ‘வேர்ட் பிராசஸிங் சாப்ட்வேர்’மூலம் (Word Processing Software) கம்ப்யூட்டரில் கடிதங்களை எளிதில் வடிவமைக்க இயலும். எனவே, இந்தப் பணிகளைச் செய்யும் பணியாளர்களுக்கு “கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம்' (Computer Operating System) பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

இதற்கு மிகப்பிரபலமான ‘மைக்ரோசாப்ட் விண்டோஸ்’ (Microsoft Windows) என்னும் கம்ப்யூட்டர் சாப்ட்வேரை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஏற்கனவே இந்த கம்ப்யூட்டர் சாப்ட்வேரை இயக்கத் தெரிந்திருந்தால் இந்தப் பணிகளை எளிதில் செய்யலாம். 

சில நிறுவனங்கள் ‘விண்டோஸ் என்.டி.வொர்க் ஸ்டேஷன்’ (Windows N.T. Work Station) அல்லது விண்டோஸ் எக்ஸ்.பி. புரபசனல்  (Windows XP Professional) ஆகிய சாப்ட்வேர்களை கம்ப்யூட்டர்களில் நிறுவியிருப்பார்கள். எனவே இந்த சாப்ட்வேர்களையும், இயங்குவதற்குத் தேவையான பயிற்சிகளையும் முறைப்படி பெற்றிருப்பது அவசியமாகும்.

வேறுசில நிறுவனங்களில் “மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம்' (MAC Operating System) சாப்ட்வேரை இயக்கத் தெரிந்தவர்களை விரும்புவார்கள். எனவே இந்த சாப்ட்வேரை இயக்குவதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளலாம். 

பொதுவாக “மைக்ரோ சாப்ட் ஆபீஸ் சாப்ட்வேர்களை” (Microsoft Office Software) பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இதனால் ‘மைக்ரோ சாப்ட் ஆபீஸ் சாப்ட்வேர்’களை பற்றித் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அதனை இயக்க போதிய பயிற்சி மேற்கொள்வது நல்லது.

மைக்ரோசாப்ட் ஆபீஸ் என்னும் சாப்ட்வேர் (Software) வேட்  (Word), எக்செல் (Excel), பவர்பாயிண்ட் (Powerpoint) ஆகிய முக்கியப் பிரிவுகளைக் கொண்டது. இந்த மூன்று பிரிவுகளிலும் கம்ப்யூட்டரை இயக்குவதற்கான அடிப்படை அறிவு கண்டிப்பாக தேவை. மேலும் ‘இன்டர்நெட் எக்ஸ்புளோரர்’ (Internet Explorer) அல்லது ‘நெட் ஸ்கேப்’ (Net Scape) ஆகிய இணையதள தேடுபொறிகள் ஆகியவற்றை பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 

எல்லா பணியாளர்களுக்கும் இணையதளம் பற்றிய அனுபவ அறிவு தேவை என்று எல்லா வேலை வழங்கும் நிறுவனங்களும் எண்ணுகிறார்கள். சில நிறுவனங்கள் பல விண்ணப்பங்களையும் முக்கிய விவரங்களையும் தங்கள் இணையத் தளங்களிலேயே வெளியிடுவதால் இணையதளம் பற்றிய அனுபவ அறிவு ஒவ்வொரு பணியாளர்களுக்கும் கண்டிப்பாகத் தேவை. 

2.கம்ப்யூட்டர் பணிக்கான சிறப்பு திறமைகள் (Specialised Computer Job Skills)

கம்ப்யூட்டர் துறையில் சிறப்புத் திறமைகளாக “கிராபிக் டிசைன்” (Graphic Design), டிஜிட்டல் வீடியோ புரொடக்சன் (Digital Video Production), டெக்னிக்கல் ரைட்டிங் (Technical Writing), வெப் பேஸ்டு டிரைனிங் (Web Based Training) ஆகிய திறமைகள் கொண்டவர்கள் கம்ப்யூட்டர் துறையில் சிறப்புப் பணியில் சேரலாம். 

இந்தப் பணிகளை செய்வதற்கு கம்ப்யூட்டரை இயக்கத் தெரிந்தால் மட்டும் போதாது. சிறப்புத் திறமைகளும் கண்டிப்பாகத் தேவை. உதாரணமாக - கம்ப்யூட்டர் ஓவியங்கள் வரைவதற்கு ‘போட்டோஷாப்’ (Photoshop), ‘இல்லெஸ்டிரேட்டர்’ (Illustrator) போன்ற சாப்ட்வேர்களை இயக்கத் தெரிந்தால் மட்டும் போதாது. சிறப்பாக ஓவியம் வரையும் திறமையும் கண்டிப்பாகத் தேவை. 

அதேபோல் ‘வெப்பேஸ்ட் டிரைனிங் டெவலப்பர்’ (Web Based Training Developer) என்ற பணிக்கு ‘மேக்ரோ மீடியாஸ் இ-லேர்னிங் ஸ்டூடியோ’ (Macro Media’s E-learning Studio) என்ற சாப்ட்வேரை இயக்கும் திறமையோடு இணையதளம் மற்றும் ‘இன்ஸ்டிரக்சனல் டிசைன்’ (Instructional Design) பற்றிய கல்வியறிவும், போதிய அனுபவமும் தேவையாகும். மேலும் ‘டெக்னிக்கல் ரைட்டர்’ (Technical Writer) பணிக்கு கம்ப்யூட்டரை இயக்கத் தெரிவதோடு ‘மைக்ரோசாப்ட் வேர்ட்’ (Microsoft Word), ‘பிரேம் மேக்கர்’ (Frame Maker), ‘போட்டோஷாப்’ (Photoshop) மற்றும் ‘ஆக்ரோபேட்’  (Acrobat) ஆகியவற்றை சிறப்பான முறையில் கையாளத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

3.கம்ப்யூட்டர் பணிக்கான உயர்தர திறமைகள் (Advanced Computer Job Skills)

கம்ப்யூட்டர் துறையின் வளர்ச்சி காரணமாக இன்று தகவல் தொழில்நுட்ப பணிகள் அதிகரித்துள்ளன. தகவல் தொழில்நுட்ப பணிகள் செய்வதற்கு ஹார்டுவேர் (Hardware), சாப்ட்வேர் (Software) பற்றிய தெளிவான அனுபவ அறிவு தேவை. கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனங்களில் சான்றிதழ் பெற்றிருந்தாலும், பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் படிப்பில் பட்டம் பெற்றிருந்தாலும், அனுபவம் (Experience) வாய்ந்தவர்களுக்கே இத்தகைய பணிகள் எளிதில் கிடைக்கிறது. 

“எங்கள் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் படித்து முடித்ததும் உடனடியாக வேலைகிடைக்கும்' என்று சில கம்ப்யூட்டர் நிறுவனங்களும், கம்ப்யூட்டர் கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனங்களும் இப்போது விளம்பரப்படுத்துகிறார்கள். இந்த நிறுவனங்களிளெல்லாம் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களையும், பட்டங்களையும் மட்டுமே வழங்க முடியும். ஆனால் பணி வழங்கும் நிறுவனங்கள் ஒருவரின் தகுதியையும், திறமைகளையும் தகுந்த தேர்வுகள் நடத்தி சோதனை செய்த பின்புதான் தகவல் தொழில்நுட்ப பணிகளில் சேர்த்துக் கொள்கிறார்கள். 

தகவல் தொழில்நுட்பப் பணிகள் பல இருந்தாலும் அவற்றுள் சில முக்கியமான பணிகள் பின்வருமாறு -
1.அப்ளிகேஷன் சிஸ்டம்ஸ் அனலிஸ்ட் (Application Systems Analyst)
2. கிளயன்ட் சர்வர் புரோகிராமர் (Client / Server Programmer)
3. டேட்டா ஆர்க்கிடெக் (Data Architect)
4.நெட்வொர்க் அட்மினிஷ்டிரேட்டர் (Network Administrator)
5.இன்பர்மேஷன் டெக்னாலஜி டைரக்டர்  (Information Technology Director)
6.நெட்வொர்க் செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் மேனேஜர்    (Networking Security Systems Manager) 
7. சிஸ்டம்ஸ் என்ஜினியர்(System Engineer)

இந்தப் பணியில் ‘நெட்வொர்க் செக்யூரிட்டி பணிகள்’ மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் இணையதளம் வழியாக வைரஸ்களை பரப்புபவர்களையும், நிறுவன இணையதளங்களை தாக்கும் தீவிரவாதிகளையும் இனம்கண்டுகொள்ள இந்தப் பணியாளர்கள் மிகவும் உதவுகிறார்கள். 

தகவல் தொழில்நுட்ப பணிகளில் ஈடுபடுவதற்கு கம்ப்யூட்டர் திறமை மட்டும் இருந்தால் போதாது. கம்ப்யூட்டர் அறிவோடு வணிகம், அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளை பற்றிய அறிவு இருந்தால்தான் இந்தப் பணிகளை சிறப்பாக செய்ய இயலும். 

தகவல் தொழில்நுட்பப் பணிகளில் சேருவது எப்படி? 

தகவல் தொழில்நுட்பப் படிப்புகளை படித்ததினால் மட்டும் ஒருவருக்கு கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பணிகளை வழங்குவதில்லை. உயர்படிப்புகளை கம்ப்யூட்டர் துறையில் படித்திருந்தாலும் - சிறந்த ஆளுமை குணங்களை (Personality Traits) கொண்டவர்களை மட்டுமே கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தங்கள் நிறுவனப் பணிக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். சில முக்கிய ஆளுமைக் குணங்களாக -

1.ஒருங்கிணைந்து செயல்படும் திறன் (Team Spirit)
2.பகுத்தறியும் பண்பு (Reasoning Ability)  
3.தலைமைப் பண்பு (Leadership Quality) 
4. நெகிழ்வுத் தன்மை (Flexibility)  
5.நம்பிக்கையுடன்கூடிய நேர்மறை எண்ணம் (Assertiveness)
6. தன் ஊக்குவிக்கும் பண்பு (Initiative)
7. புத்தாக்கத் திறன் (Creativity)
8. உற்சாகப்படுத்தும் திறன் (Inspiring Ability)
9. கவனிக்கும் திறன்  (Listening Ability)
10. விழிப்புணர்வுடன் செயல்படுதல் (Awareness)

-ஆகியவற்றை கருத்தில்கொண்டு பல கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தகுதியான நபர்களை பணிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்த குணங்களெல்லாம் ஒருவரிடம் இருக்கிறதா? இல்லையா? என்பதை உடனே கண்டுபிடித்துவிட முடியாது. இருந்தாலும் சில செய்முறைத் தேர்வுகளின்மூலம் ஒருவருடைய குணங்களை ஓரளவு புரிந்துகொள்ளலாம். 

கம்ப்யூட்டர் பணிகளை வழங்கும் நிறுவனங்கள் தேர்வுகள் நடத்தித்தான் சரியான நபர்களை பணிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள். 

அந்தத் தேர்வுகள் -
1. அப்டிட்யூட் டெஸ்ட்  (Aptitude Test)
2. குழு விவாதம்  (Group Discussion)
3. நேர்முகத் தேர்வு (Interview)  - ஆகியவை ஆகும்.

‘அப்டிட்யூட் டெஸ்ட்’ என்பது ஒரு போட்டியாளர் எந்த அளவிற்கு பணி செய்யும் திறன் பெற்றிருக்கிறார் என்பதைக் கண்டறிய உதவும் தேர்வு ஆகும். 

இந்த ‘அப்டிட்யூட் டெஸ்ட்’ என்பது கணிதம், சி++ (C++), டேட்டா ஸ்டிரக்சர் (Data Structure), ஆர்.டி.பி. எம்.எஸ்.கான்செப்ட்ஸ் (RDBMS Concepts). ஜாவா பேசிக்ஸ் (Java Basics), நெட் வொர்க்கிங் கான்செப்ட்ஸ் (Network Concepts), ஆப்பரேட்டிங் சிஸ்டம்ஸ் (Operating Systems), எஸ்.கியூ.எல். (SQL), யூனிக்ஸ் கான்செப்ட்ஸ் (Unix Concepts), வெர்பல் (Verbal)  - ஆகிய பிரிவுகளில் கேள்விகள் அமையும். மேலும் தொழில்நுட்ப கேள்விகளும் இந்தத் தேர்வில் இடம்பெறும்.

இந்தத் தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு உடனடியாக சிறந்த வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. 

தகவல் தொழில்நுட்பப் படிப்புகளைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள தகவல் தொழில்நுட்பப் பணிகள் பற்றி தெரிந்துகொள்வது நல்லது.


தகவல் தொழில்நுட்பப் பணிகள்

தகவல் தொழில்நுட்பப் பணிகளை 5 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை-

1.டெக்னிக்கல் சப்போர்ட் (Technical Support)
2.டெக்னிக்கல் சேல்ஸ் (Technical Sales)
3.டெக்னிக்கல் டிரைனிங்  (Technical Training)
4.பிசினஸ் இன்பர்மேஷன் சிஸ்டம்  (Business Information System)
5.புரோகிராமிங் சிஸ்டம் டெவலப்மெண்ட் (Programme System Development)

1. டெக்னிக்கல் சப்போர்ட் (Technical Support)

டெக்னிக்கல் சப்போர்ட் என்பது கம்ப்யூட்டர் துறையில் ஆரம்பநிலை பணியாகும். கம்ப்யூட்டர் பற்றிய தொழில்நுட்ப அறிவு கொண்டவர்கள், இந்தப் பணியில் சேர்ந்து பின்பு, படிப்படியாக பதவி உயர்வு பெற்று உயர் பணியில் சேரலாம். இந்தப் பணிகளில் ஈடுபடுபவர்கள், அலுவலகத்திலேயே அதிகமான நேரங்கள் பணியாற்ற நேரிடும். இருந்தபோதும் - சில நேரங்களில் வெளியிடங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலையும் உருவாகலாம்.

தொழில்நுட்ப பிரச்சினைகள் சம்பந்தமாக பல வாடிக்கையாளர்கள் தொலைபேசிமூலம் தொடர்புகொள்ளும்போது - நிதானத்துடனும், பொறுமையுடனும் அவர்கள் கேள்விக்கு பதில் சொல்வது அவசியமானது. அதேபோல் இமெயில்மூலம் (Email) வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளும்போதும் பொறுப்புணர்வோடு அவர்களுக்குப் பதில் தர வேண்டியது இவர்கள் கடமையாகும். இந்தப் பணியில் நிறைய தொழில்நுட்ப நுணுக்கங்களைப்பற்றி அறிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் பல கிடைக்கும். நிறுவனத்தைப் பற்றியும், அங்குள்ள பணிகள் பற்றியும் தெளிவாகத் தெரிந்துகொள்ளவும் முடியும்.

வாடிக்கையாளர்கள் அடிக்கடி தொடர்புகொள்வதால் இந்தப் பணியில் ஈடுபடுபவர்கள் அடிக்கடி எரிச்சலடைய வாய்ப்பு உள்ளது. இருந்தபோதும் வாடிக்கையாளர்கள் குறையைக் கேட்பதும், அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதும்தான் இந்தப் பணியில் முக்கிய செயல்பாடு என்பதால் இந்தப் பணியில் பொறுமையுடன் பதில் கூறுவது அவசியமாகும்.

2. டெக்னிக்கல் சேல்ஸ் (Technical Sales)

கம்ப்யூட்டர்களை விற்பனை செய்யும் பணியை டெக்னிக்கல் சேல்ஸ் (Technical Sales) என்று அழைக்கிறார்கள். மக்களோடு தொடர்புகொண்டு கம்ப்யூட்டர்களை விற்பனை செய்வதுதான் இந்தப் பணியின் முக்கிய நோக்கமாகும். கம்ப்யூட்டரை விற்பனை செய்வதற்குத் தேவையான விற்பனைத் திறமையும், தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு கம்ப்யூட்டரை விற்பனை செய்யும் திறமையும் இந்தப் பணியில் சேருபவர்களுக்கு அவசியம் தேவை. சாதாரண விற்பனையாளராக இந்தப் பணியில் சேர்ந்து திறமையை வளர்த்துக்கொண்டால் நிர்வாகத்தின் உயர் பணியில் பணியாற்றவும் வாய்ப்புகள் அதிகம். 

சம்பளத்துடன்கூடிய கமிஷன் தொகையும் வழங்கப்படுவதால் இந்தப் பணியில் சேர பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதிக கம்ப்யூட்டர்களை விற்பனை செய்யும் சிறந்த விற்பனையாளர்களை நிர்வாகத்தினர் விரும்புவார்கள். இந்தப் பணியில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். இருந்தபோதும் சேல்ஸ் கோட்டா (Sales Quota) என குறிப்பிட்ட அளவு விற்பனையை நிர்ணயம் செய்வதால் இந்தப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு டென்ஷன் அதிகமாகவே இருக்கும். பிறரோடு பழகுவதில் ஆர்வம் கொண்டவர்கள் இந்தப் பணியில் சேரலாம்.

3.டெக்னிக்கல் டிரைனிங் (Technical Training)

கம்ப்யூட்டர் பற்றிய அறிவை பிறருக்கு தெளிவான முறையில் எடுத்துக்கூறி அவர்களுக்கு கம்ப்யூட்டரை இயக்கப் போதிய பயிற்சி வழங்குவதே “டெக்னிக்கல் டிரைனிங்” (Technical Training) பணியின் முக்கிய பணியாகும். 

கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகள் ஆகியவற்றில் இந்தப்பணி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும், தனியாக ‘ஆலோசனை மையம்‘ நடத்தி கம்ப்யூட்டர் பயிற்சிகளை வழங்கவும் வாய்ப்பு உள்ளது. கம்ப்யூட்டர் பயிற்சியை வழங்கும் வல்லுநர்களுக்கு அதிக சம்பளமும், அதிகமான மதிப்பும் சமுதாயத்தில் உண்டு. நிறுவனத்தில் பணியாற்றுபவர்களைவிட, தனியாக கம்ப்யூட்டர் பயிற்சி வழங்குபவர்கள் அதிகமான பணம் ஈட்ட வாய்ப்பு உள்ளது. கம்ப்யூட்டர் பயிற்சியை வழங்கிக்கொண்டே கம்ப்யூட்டர் விற்பனையாளராகவும் செயல்பட வாய்ப்புள்ளது. 

4.பிசினஸ் இன்பர்மேஷன் சிஸ்டம் (Business Information System)

அலுவலகத்தில் நடைபெறுகின்ற அனைத்து செயல்பாடுகளைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள உதவும் அமைப்பு இது ஆகும். இந்த அமைப்பில் ‘எலக்ட்ரானிக் டேட்டா பிராசசிங்’ (Electronic Data Processing), ‘ஆபீஸ் ஆட்டோமேஷன்’ (Office Automation) மற்றும் ‘வணிகப் பிரச்சினைகளுக்கு கம்ப்யூட்டர் தீர்வு’ (Computer Solutions to Business Problem) ஆகிய முக்கியப் பிரிவுகளும் உள்ளன. இந்தப்பிரிவில் - ‘நெட் வொர்க் அட்மினிஸ்டிரேட்டர்’ (Network Administrator) முதல் ‘சிஸ்டம் அனலிஸ்ட்’ (System Analyst) ஆகிய பணிகளில் இடம்பெற்றுள்ள பல்வேறு பணிகள் உள்ளன. 

மேலும் இப்பிரிவில் வணிக நிறுவனத்திற்கு தேவையான அத்தனை தகவல்களும் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கும். இந்தப் பிரிவில் பணியாற்றுபவர்கள், தகவல்களை சேகரிப்பதோடு அந்தத் தகவல்களை உரிய நேரத்தில் வழங்குவதற்கு ஏற்றவாறு அதனை பாதுகாத்துக்கொள்வதும் அவசியமாகும். இந்தத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டாலும் பெரிய நகரங்களில் மட்டுமே பணி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எல்லா நிறுவனங்களிலும் “பிஸினஸ் இன்பர்மேஷன் சிஸ்டம்“ அமைக்கப்பட்டிருப்பதால் ஏராளமான பணிவாய்ப்புகள் உள்ளன. 

5.புரோகிராமிங் சிஸ்டம் டெவலப்மெண்ட் (Programming System Development)

“சாப்ட்வேர்” (Software)  எழுதுவதற்கான திறன் படைத்தவர்கள் இந்தப் பிரிவில் பணியாற்றலாம். இங்கு புதிய சாப்ட்வேர்களை உருவாக்கும் பணியும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சாப்ட்வேர்களின் தரத்தை உயர்த்தும் பணியும் முக்கியப் பணிகளாக உள்ளன. அதிக சம்பளமும், சமுதாய மதிப்பும் இருப்பதால் இந்தப் பணியில் பலரும் விரும்பிச் சேருகிறார்கள். தொழில்நுட்பத்தோடுகூடிய வியாபாரம் இந்த சாப்ட்வேரில் இணைந்திருப்பதால் இந்த பணியில் ஈடுபடுபவர்கள் மிக முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள். இருப்பினும் இந்தப் பணியில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய திறமைகளையும், தொழில்நுட்ப அறிவினையும் நாளுக்குநாள் வளர்ப்பதன்மூலம் இந்தத் துறையில் உயர் பதவியை பெறலாம்.

Post a Comment

புதியது பழையவை

Sports News