சட்டப் படிப்புகள் (LAW COURSES)
- நெல்லை கவிநேசன்
தெளிவான அருமையான கருத்துகளோடு பேசுபவர்களைப் பார்த்து, பொதுவாக “இவன் என்ன சட்டம் பேசுகிறான்?” என்று சொல்வது வழக்கம். ஒருவர் தனது கருத்துள்ள பேச்சில் - நெறிமுறைகளை கடைபிடித்து பேசினால் அவரை ‘சட்டம் தெரிந்தவர்’ என்று மரியாதை செய்கிறார்கள். இதனால்தான், சட்டத்தை முறையாகப் படித்து பேசுபவர்களுக்கு இந்த சமூகம் முறையான மரியாதையை வழங்குகிறது.
‘இந்தியாவின் தந்தை’ என அழைக்கப்பட்ட மகாத்மா காந்தியடிகள் சட்டம் படித்தவர். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முறையாக சட்டக் கல்வி பயின்றவர். ‘சட்டமேதை’ என அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்வியை நன்கு கற்றுணர்ந்து சட்டம் இயற்றும் அளவுக்கு புகழ் பெற்றவர் ஆவார். முறையாக சட்டம் பயின்று அரசியலில் நுழைந்தவர்களும் பெருமை பெற்றிருக்கிறார்கள். எந்த நாட்டில் வசித்தாலும், அந்த நாட்டின் சட்டத்தை அங்கு வாழுகின்ற மக்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவர்களது கடமை ஆகும்.
இன்று - சட்டக்கல்வி இந்தியா முழுவதும் வழங்கப்படுகிறது. சட்டக் கல்வியை முறையாகப் படித்தவர்கள் - மிகபெரிய நிறுவனங்களில் சட்ட ஆலோசகராகவும் (Legal Advisor) பணிபுரியலாம். மேலும் உயர் பதவிகளும் சட்டம் படித்தவர்களுக்கு காத்திருக்கின்றன. நீதித்துறை, தலைமைச் செயலகம், தமிழக அரசின் முக்கிய பதவிகள், வங்கி வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர், நீதிபதி போன்ற பல்வேறு பணிவாய்ப்புகளும் சட்டம் படித்தவர்களுக்கு காத்திருக்கிறது. சட்டம் படித்தவர்கள் தனியாகவும், வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடலாம்.
தமிழ்நாட்டிலுள்ள சட்டக் கல்வியை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை -
1. ஐந்து ஆண்டுகள் நடத்தப்படும் சட்டப் பட்டப்படிப்பு
2. மூன்று ஆண்டுகள் நடத்தப்படும் சட்டப் பட்டப்படிப்பு
3. ஐந்து ஆண்டுகள் நடத்தப்படும் பி.எல்.ஹானர்ஸ் படிப்பு
- ஆகியவை ஆகும்.
மூன்று ஆண்டுகள் நடத்தப்படும் சட்டப்படிப்பை தமிழகத்திலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளும், தனியார் சட்டக் கல்லூரிகளும் நடத்துகிறது. தமிழகத்தில் சட்ட கல்விக்கென தனியாக “தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம்“ (Tamilnadu Dr. Ambedkar Law University) என்று ஒரு பல்கலைக்கழகம்“ செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற்று, இளநிலை சட்டப்படிப்பை கீழ்க்கண்ட கல்லூரிகள் நடத்துகின்றன. அவை-
1. டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி, சென்னை
2. அரசு சட்டக் கல்லூரி, மதுரை
3. அரசு சட்டக் கல்லூரி, திருச்சி
4. அரசு சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர்
5. அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி
6. அரசு சட்டக் கல்லூரி, செங்கல்பட்டு
7. அரசு சட்டக் கல்லூரி, வேலூர்
- ஆகும்.
மேலும், சேலத்தில் மத்திய சட்டக்கல்லூரி (Central Law College) தனியாரால் நடத்தப்படுகிறது.
பொதுவாக, பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள், சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து ஐந்து ஆண்டு சட்டப்படிப்பை பி.ஏ., பி.எல் (B.A.B.L.,) படிக்கலாம். பட்டப்படிப்பை முடித்தவர்கள் மூன்று ஆண்டு சட்டப்படிப்பில் சேர்ந்து பி.எல். (BL..) படிப்பும் படிக்கலாம். இதுதவிர, ஐந்து ஆண்டு பி.ஏ., பி.எல்., ஹானர்ஸ் (B.A., B.L., Honors) படிப்பு சென்னையிலுள்ள “சீர்மிகு சட்டப்பள்ளி”யில் நடத்தப்படுகிறது.
ஐந்து ஆண்டு பி.ஏ.,பி.எல் (B.A., B.L.,) பட்டப்படிப்பில் சேர விரும்பும் பிளஸ் 2 முடித்தவர்கள் பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
மூன்று ஆண்டு பி.எல். பட்டப்படிப்பில் சேர விரும்புபவர்கள் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் சட்டப்படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம்.
சீர்மிகு சட்டப்பள்ளி (School of Excellence in Law)
சீர்மிகு சட்டப்பள்ளி (School of Excellence in Law) என்னும் கல்வி நிறுவனத்தில் 5 ஆண்டு பி.ஏ.,எல்.எல்.பி., (ஹானர்ஸ்) (B.A., LLB [Honors]), 5 ஆண்டு பி.காம்.எல்.எல்.பி., (ஹானர்ஸ்) (B.Com.,LLB [Honors]), 3 ஆண்டு எல்.எல்.பி. (ஹானர்ஸ்) (LLB [Honors]) ஆகிய பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், புதிதாக 2015-16 கல்வி ஆண்டுமுதல் 5 ஆண்டு பி.பி.ஏ., எல்.எல்.பி., (ஹானர்ஸ்) (BBA., LLB., [Honors]), 5 ஆண்டு பி.சி.ஏ.,எல்.எல்.பி., (ஹானர்ஸ்) (BCA., LLB., [Honors]) ஆகிய பட்டப் படிப்புகளும் நடத்தப்பட உள்ளன.
தேசிய சட்டப்பள்ளி (National Law School)
உலகத்தரம் வாய்ந்த உன்னத சட்டக் கல்வியை இந்தியாவில் வழங்க பல்வேறு தேசிய சட்டப்பள்ளிகள் (National Law School) உள்ளன. தற்போது திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், நவலூர் குட்டப்பட்டியில் தேசிய சட்டப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி முறைப்படி தொடங்கப்பட்டது.
தேசிய சட்டப்பள்ளியில் பி.ஏ., எல்.எல்.பி., (ஹானர்ஸ்) (B.A., LLB (Honors) என்னும் 5 ஆண்டு சட்டப்படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இது 5 ஆண்டுகால ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு ஆகும். மொத்தம் 100 மாணவர்கள் இந்தப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். “CLAT” (Common Law Admission Test) என்னும் நுழைவுத்தேர்வின்மூலம் தகுதியுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மொத்தமுள்ள 100 இடங்களில் 45 இடங்கள் மட்டுமே தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 45 இடங்கள் அகில இந்திய அளவில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுதவிர 10 இடங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக (NRI) ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிப்பில் சேர்வதற்கு பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியமாகும்.
இந்தப்படிப்பில் சேர அதிகபட்ச வயது வரம்பு 20 ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 22 வயதுவரை இந்தப் படிப்பில் சேரலாம்.
இவைதவிர - தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர மற்றும் முழுநேர பி.எச்.டி. ஆராய்ச்சிப் படிப்பும் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சட்டக் கல்வி பற்றிய மேலும் விவரங்களுக்கு -
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம்,
கிரீம்ஸ் சாலை,
சென்னை - 600 028
-என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் அதிக விவரங்களுக்கு www.tndalu.org இணையதள முகவரியில் தொடர்பு கொண்டும் தேவையான தகவல்களைப் பெறலாம்.
மேலும் அதிக விவரங்களுக்கு www.tndalu.org இணையதள முகவரியில் தொடர்பு கொண்டும் தேவையான தகவல்களைப் பெறலாம்.
கருத்துரையிடுக