எப்படி உருவானது மயிலாடுதுறை மாவட்டம்?

எப்படி உருவானது மயிலாடுதுறை மாவட்டம்? 
எழுத்தை ஆயுமாக்கி,மக்களைத் திரட்டி ,
களத்தில் நின்று போராடி 
சாதித்த இளைஞர்!
                                                       

   ‘தமிழ்நாட்டின் 38 ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும்’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.நாகப்பட்டினத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்படும் மயிலாடுதுறை மாவட்டம் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். அதற்காக பல்வேறு அமைப்புகளை ஒன்று திரட்டி "மாயூர யுத்தம்" என்கிற இயக்கத்தைத் தொடங்கி தொடர்ந்து போராடியவர் தமிழகத்தின் முன்னணி ஊடகவியலாளரும், மயிலாடுதுறையைச் சேர்ந்தவருமான கோமல் அன்பரசன். 
டெல்டா மாவட்டங்களில் செயல்படும் "காவிரி" என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டிருக்கும் சமூக செயற்பாட்டாளராகவும், 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளராகவும் பன்முக திறன் வாய்ந்த ஆளுமையாக திகழ்பவர் கோமல் அன்பரசன். மயிலாடுதுறை மாவட்டம் உருவானதன் பின்னணி குறித்து அவரிடம் நமது இணையதளம் சார்பாக சிறப்பு நேர்காணல் மேற்கொண்டோம். 


கேள்வி:
மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்ற  அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்? 
பதில்: 
மயிலாடுதுறை பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். ஏனெனில், தமிழ்நாட்டில் எந்த ஒரு மாவட்டம் அமைவதற்கும் இப்படியோர் நெடிய போராட்டம் நடந்ததில்லை என்று சொல்லுமளவுக்கு மயிலாடுதுறை மாவட்டம் கேட்டு ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலமாக நாங்கள் போராடியிருக்கிறோம். அந்தப் போராட்டத்திற்கு இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது. எங்களுடைய பெரும் கனவு நனவாகி இருக்கிறது. மயிலாடுதுறை கோட்டத்தில் வசிக்கும் ஏறத்தாழ 12 லட்சம் மக்களின் துன்பத்திற்கு  விடியல் பிறந்திருக்கிறது. 
கேள்வி: 
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பத்தோடு பதினொன்றாக அரசு மயிலாடுதுறை மாவட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு விடவில்லை என்று தோன்றுகிறது. உங்களுடைய மாவட்ட கோரிக்கை தொடர்பான பின்னணியைக் கொஞ்சம் சொல்லுங்கள். 

பதில்: 
ஆமாம். உண்மைதான். இந்தியாவிலேயே எந்தப்பகுதி மக்களுக்கும் இல்லாத துயரம் மயிலாடுதுறை கோட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இருந்தது. கொள்ளிடத்தில் ஆரம்பித்து  சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை,மணல்மேடு,குத்தாலம், செம்பனார்கோயில்,பூம்புகார் உள்ளிட்ட பகுதி மக்கள் நாள்தோறும் இந்த துயரத்தை அனுபவித்தார்கள். யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்குட்பட்ட காரைக்கால் வழியாக நுழைவு வரி செலுத்தியோ, அல்லது வேறொரு மாவட்டமான திருவாரூர் வழியாகவோதான் மாவட்டத் தலைநகரான நாகப்பட்டினத்திற்கு எங்களால் செல்ல முடிந்தது. 
எல்லாவித தகுதிகளும் நிறைந்த மயிலாடுதுறையை ஒதுக்கித் தள்ளிவிட்டு   இரண்டு முறை இங்கே புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.1991 ல் தஞ்சை முதன் முறையாக பிரிக்கப்பட்ட போதே தனி மாவட்டமாகி இருக்க வேண்டிய மயிலாடுதுறை புறக்கணிக்கப்பட்டது. அடுத்த முறை 1997ல்  நிகழ்ந்த மாவட்டப் பிரிவினையிலும் நாகையிலிருந்து 22 கி.மீ தூரத்திலுள்ள திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்து மயிலாடுதுறை பகுதி மக்களுக்கு  அநீதி இழைக்கப்பட்டது. எப்போதுமே புவியியலை மையப்படுத்தி, மக்களின் வசதியை மனதில் கொண்டே மாவட்டங்களைப் பிரிப்பார்கள். ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தை இருமுறை பிரித்தபோதும் புவியியல் அமைப்பைக் கவனிக்கவில்லை. மயிலாடுதுறை பெற்றிருந்த  நாடாளுமன்றத்தொகுதியின் தலைமையிடம் என்ற கூடுதல் தகுதியையும் கருத்தில் கொள்ளாமல் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் மாவட்டப்பிரிவினைகளை நிகழ்த்தினார்கள்.
அதனால்தான், இப்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் நிலப்பரப்பு ரீதியாக  இரண்டு துண்டுகளானது. மாவட்டத்தின் கடை கோடியில் இருக்கிற கொள்ளிடக்கரையில் இருந்து நாகப்பட்டினத்திற்குப் போக வேண்டுமென்றால் அரை நாளுக்கு அதிகமாக பயணிக்க வேண்டி நிலை ஏற்பட்டது. ஆட்சியரைப் பார்க்க போவதோ, அரசு அலுவலங்களுக்குச் செல்வதோ மிகப்பெரிய சுமையாக மாறி மக்களை அழுத்தியது. 

முதியவர்களும்,பெண்களும், மாணவர்களும், ஏழைகளும்,நடுத்தர வர்க்கத்தினரும் இதனால் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். ஓய்வூதியம் பெறுபவர்களும், மாற்றுத்திறனாளிகளும் துயரப்பட்டார்கள். ஒழுங்கான அரசு மருத்துவமனை கூட இல்லாமல் அவசர நேரத்தில் நிறைய உயிர்கள் பறிபோயின. அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். 

நாகப்பட்டினத்திலிருந்து சற்றேற குறைய 100 கி.மீ தூரத்தில் இருக்கும் கொள்ளிடக்கரை வரையிலும் நிர்வகிப்பது  அரசுக்கும் கடினமானதாகவே இருந்தது. பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியர் போன்ற அதிகாரிகளாலும் அரசு எந்திரத்தாலும் திறம்பட செயல்பட முடியாமல் போனது. சட்டம்- ஒழுங்கு பராமரிப்புஇ நீதித்துறை உள்ளிட்ட அத்தனை முனைகளிலும் நிர்வாகச் சிக்கல்கள் தலையெடுத்தன.கேள்வி: 
அப்படி என்றால் மயிலாடுதுறையை மாவட்டமாக்குவது குறித்து அரசு இதற்கு முன்பு பரிசீலிக்கவே இல்லையா? 
பதில்: 
பரிசீலித்தார்கள். மயிலாடுதுறையை மாவட்டமாக்குவதற்கான கோப்புகள் 2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில்  தயாரிக்கப்பட்டன. ஆனால் அறிவிப்புதான் வெளியாகவில்லை. 


கேள்வி: 
மயிலாடுதுறை மாவட்டத்திற்கான உங்களுடைய போராட்டம் எப்போது தொடங்கியது? ‘மாயூர யுத்தம்’ இயக்கம் பற்றியும் சொல்லுங்கள். 
பதில்: 
மயிலாடுதுறை மாவட்டத்திற்கான எங்களுடைய கோரிக்கை என்பது 1990களில் தொடங்கியது. அப்போது மாணவப் பத்திரிகையாளராக இருந்த நான், அரசு அலுவலர் சங்கங்கள், வணிகர் அமைப்புகள் போன்றவை இதற்காக தீர்மானம் நிறைவேற்றிய கூட்டங்களில் பங்கேற்று இருக்கிறேன். ஆனால், அவ்வப்போது பேசி விட்டு அப்படியே கடந்து போகிற விஷயமாக மாவட்ட கோரிக்கை இருந்தது என் மனதில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.  மயிலாடுதுறை மாவட்டம் அமைய வேண்டியதன் அவசியம் குறித்து நீடூர் அய்யூப் நடத்திய 'நம்ம ஊரு செய்தி' உள்ளிட்ட பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினேன். வெவ்வேறு தளங்களில் மயிலாடுதுறை மாவட்டம் குறித்து தொடர்ந்து பேசி வந்தேன். 
சென்னைக்கு வந்து ஊடகத்துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளை ஏற்ற பிறகும் மயிலாடுதுறை மாவட்டம் குறித்த குரலை ஓங்கி ஒலிப்பதையும், அதிகார மட்டத்தில் அதைப்பற்றி பேசுவதையும் தொடர்ந்து செய்து வந்தேன். அரியலூர் போன்ற சிறிய ஊர்கள் மாவட்டம் ஆக்கப்பட்ட போதுஇ மயிலாடுதுறையை மட்டும் மாவட்டமாக்க  ஆட்சியாளர்கள் ஏன் தயங்குகிறார்கள் என்பதை யோசித்தேன். அப்போது இரண்டு காரணங்கள் எனக்கு புலப்பட்டன. 

ஒன்று- ‘மாவட்டம் ஆவதற்கான அத்தனை தகுதிகளும் மயிலாடுதுறைக்கு இருக்கிறது’ என்ற விழிப்புணர்வும்இநம்பிக்கையும் எங்களுடைய மக்களிடமே இல்லை என்பதை புரிந்து கொண்டேன். இரண்டாவது - அவ்வப்போது கூடி கலைகிற அமைப்புகளாக இல்லாமல் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான அனைவரையும் ஒன்று சேர்த்து தொடர்ந்து போராடுகிற ஓர் இயக்கம் இல்லை என்பதை உணர்ந்தேன். இந்த இரண்டையும் செயல்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரிடம் பேசியபோது, நீங்கள் முன்னெடுத்துச் செல்வதாக இருந்தால் எங்களுடைய முழு ஆதரவை தருகிறோம் என்று தெரிவித்தார்கள். அதன்பிறகுதான் இந்த ஒற்றைக் கோரிக்கையை உயர்த்திப் பிடித்து மக்களிடமும், அதிகார வர்க்கத்திடமும் எடுத்து செல்வதற்காகவே 10 ஆண்டுகளுக்கு முன்பு 'காவிரிக்கதிர்' என்ற பத்திரிக்கையை ‘ஊருக்கு நல்லது செய்வோம்’ என்ற முழக்கத்தோடு தொடங்கினோம். மயிலாடுதுறை மாவட்டத்திற்கான போராட்ட வரலாற்றை காவிரிக்கதிருக்கு முன்பு, காவிரிக்கதிருக்குப் பின்பு என்று பிரித்து சொல்லுமளவிற்கு ஒரு வலுவான பங்களிப்பைக் ‘காவிரிக்கதிர்’ இதழ் செய்தது. 
அந்தப்பத்திரிகையில் வெளியான என்னுடைய 'மாயூர யுத்தம்' தொடர் மயிலாடுதுறை கோட்ட பகுதியிலும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலும் வசிக்கிற எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களிடமும் மிகப்பெரிய தாக்கத்தையும் உணர்வு கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அதனை புத்தகமாக வெளியிட்டு 20 ஆயிரம் பிரதிகளைச் சொந்த செலவில் அச்சடித்து எல்லா தளங்களுக்கும் கொண்டு சென்றோம்.
அதன் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை  ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டதுதான் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான 'மாயூரயுத்தம்' இயக்கம்.
 'வரலாற்றை உணராத எந்த இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை' என்ற சிறப்புமிக்க மொழியோடு மயிலாடுதுறை கோட்டத்தின் வரலாற்றுப்பெருமைகளை அப்புத்தகத்தில் தெரிவித்த பிறகு மாவட்ட போராட்டத்தில் நிறைய கரங்கள் எங்களோடு இணைந்தன. 


கேள்வி: 
நீங்கள் விவரிக்கும் போதே இந்த உண்மையான உணர்வு வெளிப்படுகிறது. மயிலாடுதுறை கோட்டத்தின் வரலாற்றுப் பெருமைகள் என்றீர்கள். அதெல்லாம் என்னவென்று சொல்ல முடியுமா? 
தில்: 
நிச்சயமாக. மயிலாடுதுறையின் வரலாற்றுச்சிறப்பு என்பது ஏதோ இன்று, நேற்றல்ல. சோழர்கள், நாயக்கர்களைத் தொடர்ந்து தஞ்சையை ஆண்ட மராட்டியர்களிடம் இருந்த அப்போதைய மாயூரம் சுற்றுவட்டார பகுதிகள்,  1799 அக்டோபர் 25 ஆம் தேதி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்திற்கு மாறியது. டச்சுக்காரர்களிடம் இருந்த தரங்கம்பாடியை 1845ல் ஆங்கிலேயர்கள் விலை கொடுத்து வாங்கினர். கடலோர நகரமாக, அவர்களின் கப்பல் போக்குவரத்திற்கு வசதியாக இருந்ததால்இ தரங்கம்பாடியிலேயே சில காலம் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டது. பின்னர் ஜில்லா தலைநகரமாக தஞ்சாவூர் மாறியது.
  முதலில் தரங்கம்பாடியும், பின்னர் தஞ்சாவூரும் மாவட்டத் தலைநகரங்களாக இருந்த காலகட்டத்திலேயே முன்சீப் கோர்ட், சப் கோர்ட், சப் கலெக்டர் அலுவலகம் என்று மாவட்டத் தலைநகருக்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக மாயூரம் திகழ்ந்தது. அதாவது மயிலாடுதுறை நீதிமன்றமும், சப்-கலெக்டர் அலுவலகமும் 100 ஆண்டுகளைத் தாண்டிய வரலாறு கொண்டவை. அதனால்தான் ஆந்திராவையும் சேர்த்து அகண்ட மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது 29 ஊர்களை மட்டுமே ஆங்கிலேயர் முதன்முதலில் நகரம் என்று அடையாளம் கண்டு அந்த ஊர்களை நகராட்சிகளாக உருவாக்கினார்கள். அப்படி பழைய தமிழ்நாட்டில் 150 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளில் ஒன்று மாயூரம். 

       1877 ல் சென்னை – தூத்துக்குடி இடையே ‘மெயின் லைன்’ என்ற பெயரில் தமிழகத்தின் மிக நீண்ட தூர ரயில் பாதை அமைக்கப்பட்டபோது அதில் முக்கியமான ரயில்வே சந்திப்பு (ஜங்ஷன்) அப்போதைய மாயூரம். அதற்கு முன்பாக 1861 ஆம் ஆண்டிலேயே மயிலாடுதுறையில் ரயில் பாதைகளைப் போட்டு  ரயில்களை ஓட்டியிருக்கிறது தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் (ஜில்லா போர்டு).
கலாச்சார, பண்பாட்டுத் தளங்களிலும் மயிலாடுதுறை கோட்ட பகுதியின் சிறப்புகள் எண்ணிலடங்காதவை. தமிழின் பெரும் காப்பியமான ராமாயணத்தை எழுதிய கம்பர் பிறந்தது இங்குள்ள தேரழுந்தூரில்தான். தமிழின் நீதி காப்பியங்களாக விளங்கும் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் உருவான பகுதி. கருநாடக சங்கீதத்திற்கும் முந்தையதான தமிழிசையைக் காப்பாற்றி வளர்த்த தமிழிசை மூவர் எனப்படும் ஆதி மும்மூர்த்திகளான அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத்தாண்டவர் ஆகிய மூவரும் வாழ்ந்து சாதனை புரிந்தது சீர்காழியில்தான்.
 இளைய கம்பர் என்று வர்ணிக்கப்பட்ட மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வாழ்ந்தது திருவாவடுதுறையிலும், மயிலாடுதுறையிலும்தான். அவரிடம் ‘தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாதய்யர் தமிழ் படித்தது இந்த மண்ணில்தான். ‘தமிழ்ப் புதின உலகின் தந்தை’ என்றழைக்கப்படும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழ் மொழியின் முதல்  புதினமான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ உருவாக்கியது இந்த பூமியில்தான்.   இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தனாரைக் கதாநாயகனாகக் கொண்டு ‘நந்தனார் சரித்திரம்’ எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார் ஆனந்தாண்டவபுரத்தில் வாழ்ந்தார்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கப்பல் கட்டி வணிகம் செய்த பழம்பெரும் துறைமுகம் இருந்த பூம்புகார் (காவிரிபூம்பட்டினம்) இங்கேதான் இருக்கிறது. உலக நாடுகளின் வணிகர்கள் எல்லாம்  பூம்புகாருக்கு வந்து வணிகம் செய்துவிட்டு போயிருக்கிறார்கள். கடல்கடந்து படை எடுத்துச் சென்று ஆசிய கண்டத்தையே கைப்பிடிக்குள் கொண்டு வந்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் முக்கியமான கடற்படைத்தளமான கோட்டைமேடு கொடியம்பாளையம் இங்கேதான் இருக்கிறது. 
அச்சுக்கூடம், எழுத்து வார்ப்பு, காகித ஆலை ஆகிய மூன்றும்  ஒரே இடத்தில் முதன்முறையாக நிறுவப்பட்ட அச்சுத்துறையின்  முன்னோடி ஊரான தரங்கம்பாடி மயிலாடுதுறை கோட்டத்தில்தான் அமைந்துள்ளது. 
மகாத்மா காந்தியின் மனத்தில் அகிம்சை எனும் தத்துவம் உதிக்க காரணமாக இருந்த வள்ளியம்மை பிறந்த தில்லையாடி இங்குதான் இருக்கிறது. அதோடின்றி தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் நடத்திய உலகின் முதல் சத்தியாகிரக போராட்டத்தில் உயிர் நீத்த சாமி நாகப்பன் இந்த மண்ணைச் சேர்ந்தவர்தான். 
சைவத்தில் திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழியும், வைணவத்தில் திருமங்கை ஆழ்வாரும் அவதரித்த திருக்குரையலூரும் இங்கேதான் இருக்கின்றன.  பண்டைய மருத்துவ உலகின் தலைமைப்பீடம் என சித்தர்களால் போற்றப்பட்ட வைத்தீஸ்வரன் கோவில், ஆயுர்வேத மருத்துவத்தின் பிதாமகனாக வணங்கப்படும் தன்வந்திரி சித்தர் வாழ்ந்து சமாதியடைந்த தலமாகவும் திகழ்கிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில்  புரட்சிகளைச் செய்த எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி,எழுத்தாளர் கல்கி (மணல்மேடு- புத்தமங்கலம்) போன்றோரும் குன்றக்குடி அடிகளார் ( திருவாளப்புத்தூர் –நடுத்திட்டு) உள்ளிட்ட எண்ணற்ற சான்றோர்கள் தோன்றியது இம்மண்ணில்தான்.
தமிழ் வளர்த்த திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனங்கள் இங்கிருக்கின்றன. அறிவுக்கோயில்களாக திகழும் நூலக முறையை உருவாக்கிஇ “இந்திய நூலகத்துறையின் தந்தை” என்றழைக்கப்படும் எஸ்.ஆர்.ரெங்கநாதனுக்குச் சீர்காழிதான் சொந்த ஊர். நாட்டிய கலையில் தனி பாணியை உருவாக்கிய வழுவூர் ராமையாப்பிள்ளையும்இ 1947இ ஆகஸ்ட் 15 அன்று  டெல்லியில் நடந்த நாட்டின் சுதந்திர விழாவில் நாதஸ்வரம் வாசித்த ‘நாத இசைச் சக்கரவர்த்தி’ திருவாவடுதுறை ராஜரெத்தினம் பிள்ளை, தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்(மாயவரம்).கே(கிருஷ்ணமூர்த்தி). தியாகராஜ பாகவதர்இ சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்ட ஏராளமான இசை மேதைகள் உருவான பூமி இது. எண்ணங்களின் வலிமையைத் தமிழுலகுக்கு அழுத்தமாக சொன்ன புதுமைச்சிந்தனையாளர் எம்.எஸ்.உதயமூர்த்தி இங்குள்ள ஆறுபாதியில் பிறந்தவர்.
குத்தாலத்திற்கு பக்கத்திலுள்ள செம்பியன் கண்டியூரில் கிடைத்த அகழாய்வுப் பொருட்களை வைத்துப் பார்த்தால் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரமும், பண்பாட்டு விழுமியங்களும் கொண்டதாக மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார்,தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகள் திகழ்கின்றன.


கேள்வி: 
அப்பப்பா... நீங்கள் சொல்ல,சொல்ல மெய் சிலிர்த்துப் போகிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த ஊரை 50 ஆண்டு கால புறக்கணிப்பில் இருந்து மீட்டெடுத்து இருக்கிறீர்கள். 'மாயூர யுத்தம்' என்ற புத்தகத்தை தாண்டி மயிலாடுதுறை மாவட்டத்திற்காகவே தனி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறீர்களாமே? 
பதில்: 
ஆமாம். "மாயூர யுத்தம்" இயக்கத்தை நாங்கள் தொடங்கி நடத்தி வந்த போது எங்கள் பகுதியைச் சேர்ந்த சமூக அக்கறை மிகுந்த பேராசிரியர் ஒருவர், 'கூட்டமொன்றில் மயிலாடுதுறையை மாவட்டமாக்கி இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் வாழ்வாதாரத்திற்காக முதலில் போராடுங்கள்' என்று பேசியதை அறிந்தேன். அப்போது, 'அடடா... மயிலாடுதுறை மாவட்டம் என்பதே இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்குத்தானே. இவரே இப்படி ஒரு புரிதலில் இருந்தால் நம்முடைய மக்களிடம் எந்த அளவிற்கு மாவட்டம் அமைய வேண்டியது பற்றிய விழிப்புணர்வு இருக்கும்?' என்ற கேள்வி என்னுள் எழுந்தது. உடனடியாக காவிரிக்கதிர்  இதழில் "ஏன் கேட்கிறோம் மயிலாடுதுறை மாவட்டம்?" என்ற தொடரை எழுத ஆரம்பித்தேன். 
பிறகு அதனை சிறு நூலாக்கி எங்களுடைய காவிரி அமைப்பின் சார்பில் ஒரு லட்சம் பிரதிகள் அச்சிட்டுஇ அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள்இ பல்வேறு துறை ஆளுமைகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கும், மயிலாடுதுறை கோட்டத்தில் இருக்கிற ஒவ்வொரு ஊர்களுக்கும் கொண்டு போய் சேர்த்தோம். இதுதொடர்பான வீடியோ பதிவுகளையும் வெளியிட்டோம். குத்தாலத்தில் தொடங்கி கோட்டைமேடு கொடியம்பாளையம் வரை ஒவ்வொரு ஊர்களுக்கும் நாங்கள் நேரில் சென்று ‘ஏன் கேட்கிறோம் மயிலாடுதுறை மாவட்டம்?’ என்பதை எங்களுடைய மக்களிடம் வழங்கினோம். இந்த முயற்சி மயிலாடுதுறை கோட்ட பகுதி முழுவதிலும்  உணர்வு எழுச்சியை ஏற்படுத்தியது.  
கடந்த ஆண்டில் தமிழக அரசு திடீர் என கேட்காத ஊர்களை எல்லாம் அடுத்தடுத்து மாவட்டங்களாக அறிவித்தபோது எங்கள் பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் குதிப்பதற்கு அந்த எழுச்சியும், உணர்வும் வழிவகுத்தன. போராட்டங்களைத் தாண்டி முடிவெடுக்கும் இடத்திலுள்ள அரசு உயர் அதிகாரிகள் மட்டத்திலும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான எங்களுடைய கோரிக்கையில் இருக்கிற நியாயத்தை புள்ளி விவரங்களோடு முன்வைத்தோம். இதெல்லாம் சேர்ந்துதான் இன்றைக்கு மயிலாடுதுறை மாவட்டத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.

கேள்வி: 
இந்த நீண்ட போராட்டத்தின் வெற்றிக்காக யாருக்கெல்லாம் நீங்கள் நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்? 
பதில்: 
தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் மனமார்ந்த நன்றிகள். இதற்காக ஒருங்கிணைந்து போராடிய வணிகப் பெருமக்கள், ரோட்டரி, அரிமா, ஜேசீஸ் உள்ளிட்ட சேவை அமைப்பினர், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர் நல அமைப்புகள்,இலக்கிய அமைப்புகள், மாணவர்கள், மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிய மாவட்ட அலுவலகங்கள் அமைவதற்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான இடங்களை வழங்கியிருக்கும் தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் அவர்களும் மிகுந்த நன்றிக்குரியவர்கள்.
 ‘மயிலாடுதுறை மாவட்டம்’ என்கிற உரிமைக்குரலை, உணர்வை ஒவ்வொரு கணத்தில் தங்களுடைய நெஞ்சத்தில் சுமந்து களத்தில் நின்ற என் பேரன்புக்குரிய காவிரி அமைப்பின் தம்பிகள், தங்கைகள், நண்பர்கள் அனைவரும் எப்போதும் நன்றிக்குரியவர்கள். ஏனெனில், நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே ' ஆடுவோமே… பள்ளு பாடுவோமே.. ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே… ' என்று பாடி மக்களிடம் உணர்வை விதைத்த மகாகவி பாரதியைப் போல், கடந்த பல ஆண்டுகளாக தங்களுடைய பெயரோடு மயிலாடுதுறை மாவட்டம் என்கிற என்பதையும் போட்டுக் கொள்பவர்கள் அவர்கள்தான். 


கேள்வி: 
நீண்ட போராட்டத்தில் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளைச் சொல்ல முடியுமா? 
பதில்: 
நிறைய பேரிடம் இருந்து ஆதரவும், ஊக்குவிப்பும், உற்சாகமும்  கிடைத்தது. அதேநேரத்தில் சிலர், 'இதெல்லாம் சாத்தியமில்லை; எதற்காக உங்களுடைய உழைப்பை, நேரத்தை, பணத்தை வீணடிக்கிறீர்கள்?' என்ற கேள்விகளை என்னிடம் எழுப்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் புன்னகையோடு 'நிச்சயமாக மயிலாடுதுறை மாவட்டம் அமையும்' என்பதையே பதிலாக தந்து கடந்து வந்திருக்கிறேன். இதனை நல்ல எண்ணத்திற்கான வலிமையாகவே பார்க்கிறேன். தனிப்பட்ட ஒருவரின் எண்ணம் என்பதைத் தாண்டி, நூறுஇ ஆயிரம், லட்சம் பேர் என ஒவ்வொருவரின் மனதிலும் அந்த எண்ணம, ஏற்பட்டுவிட்டால் நிச்சயமாக அது நடந்தே தீரும் என்பதற்கு ‘மாயூர யுத்தம்’ வெற்றி பெற்று, மயிலாடுதுறை மாவட்டமாகி இருப்பதே சான்று. பிறப்பை அர்த்தப்படுத்தும் வகையில் பிறந்த ஊருக்கு நல்லது செய்த நிறைவு மனதில் ஏற்பட்டிருக்கிறது.
- இப்படி உணர்வும் மகிழ்வுமாக பேட்டியை நிறைவு செய்தபோது, கோமல் அன்பரசன் கூறிய ஒவ்வொரு வார்த்தையிலும் தன் சொந்த ஊர் மீதும், மக்கள் மீதும் அவர் காட்டும் உண்மையான பாசமும் அன்பும் வெளிப்பட்டது.  ஒவ்வொரு ஊரிலும் கோமல் அன்பரசனைப் போன்ற ஓர் இளைஞர் இருந்துவிட்டால் போதும். நாளைய இந்தியா உச்சங்களைத் தொடும் என்பதில் ஐயமில்லை.


Post a Comment

புதியது பழையவை

Sports News