திருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை


அன்று.........
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி  
பி.பி.ஏ மாணவர்


இன்று ........

பள்ளிகள் மற்றும் கல்லூரி  தலைவர்.

எளிய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் கல்வியறிவு பெற்று, பின்னாளில்  மிகக் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டு ஒரு பள்ளியைத் தொடங்கி, இன்று பல்வேறு இடங்களில் தம் பள்ளியின் கிளைகளைப் பரப்பி, ஆலாய் வேரூன்றி நிற்கும் சி.இ.ஓ.ஏ பள்ளிகள் மற்றும் கல்லூரி நிறுவனத்தின்  தலைவர் முனைவர் .அலசி மை. இராசா கிளைமாக்சு அவர்கள்.


பிறப்பும் படிப்பும்: 

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சொக்கன் குடியிருப்பில் அலசியார் குடும்பத்தில் திரு. மைக்கேல், திருமதி சூசையம்மாள் இணையருக்கு மூத்த புதல்வனாய் 30.05.1954 அன்று தோன்றியவர், இவருடன் பிறந்தார் ஐந்து தங்கைகளும், இரண்டு தம்பிகளும் ஆவர். 
கொம்மடிக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில்  கற்று, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளநிலை வணிக மேலாண்மைப் (BBA) பட்டம் பெற்றவர்.
இவரின் மனைவி திருமதி. ஞானதேன்மொழி. மக்கள் இருவர். திரு. கிருபாகரன் மற்றும் திரு. அந்தோணி அவர்கள்.


தடம் பதித்தத் துறைகள் : 

தமிழறிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், கணிதவல்லுநர், கல்வியாளர், பேச்சாளர், சிந்தனையாளர், அளப்பரிய ஆற்றலாளர்.
பள்ளியில் வளர்ச்சி படைத்தமை:


இவர் 1976 – 1978 – களில் ‘இளநிலை உதவியாளராக, தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்திலும்; 1978 – 1996களில். நடுவண்கலால் மற்றும் சுங்கத்துறையில் ஆய்வளராகவும், 1996 -2014களில், நடுவண்கலால் கண்காணிப்பாளராகவும்  திறம்படப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்பணியில்  இருக்கும் பொழுதே 1995-இல், 43 மாணவர்களுடன் சி.இ.ஓ.ஏ. என்ற பெயரில் ஒரு பள்ளியை நிறுவி, தற்போது ஒன்பதாயிரம் மாணவர்களோடு பல்வேறு கிளைகளைப் பரப்பி, அதன் தலைவராகப் பணியாற்றி வருகிறார். இப்பள்ளி தொடர்ந்து 2006 முதல் 2016 வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்று வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 
  
2014இல் இப்பள்ளியின் 66 மாணவர்களை  அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப் (MBBS)  படிப்பிற்கும், 2018இல் முதன்முதலாக நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வின் வாயிலாக 43 மாணவர்களையும் 2019 இல் 32 மாணவர்களையும் மருத்துவப் படிப்பிற்கு அனுப்பி பெருவெற்றி படைத்துள்ளார்.
மேலும் பொறியியல்துறைப் படிப்பிற்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாணவர்களைச் சேர்த்த பெருமைக்கும், தணிக்கையாளர் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் (CA)  மாணவர் பலர் வெற்றி பெற்ற பெருமைக்கும் இவருடைய பல்துறை சார்ந்த நுண்மாண்நுழைபுலமையுடன் திட்டமிடுதலே காரணமாகும்.

பள்ளிகளின் சுற்றுப்புறத்தை வளமையாக்க மரக்கன்றுகளை நட்டும், மாணவரின் உடற்றிறன், விளையாட்டுத் திறனை மேம்படுத்தத் தேவையான விளையாட்டுப் பொருட்களும் அரங்கங்களும் ஏற்படுத்திக் கொடுத்தவர்.
மாணவர்களுக்குத் தூய்மையான குடிநீர் வசதியையும், பயன்படுத்தப்படும் கழிவுநீரை வீணாக்காமல் மறுசுழற்சி செய்து ஏனைய நீர்த் தேவைகளுக்கும் பயன்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தியவர். 
உயர்தகைக் கல்வி முறையைக் கற்பிக்கத  தொடுதிரை (smart board), நிகழ் நிலைத் தேர்வு (Online Test) வசதியையும் ஊக்குவித்தவர் 



பாடங்களைப் பயிற்றுவிக்கும் நுணுக்கங்களையும் மாணவர் தேர்வில் வாகை சூட, வேண்டிய பயிற்சி முறைகளையும் அவ்வத்துறையாசிரியர்களோடு கலந்துரையாடி வரைவுத் திட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்.
ஊர்ப்புற மாணவர்களும் மேம்பட்ட கல்வியைப் பெற்றுப் பயனடையும் பொருட்டு, மேலூர், காரியாபட்டி, சாத்தூர் போன்ற இடங்களிலும் தம் பள்ளியின் கிளைகளை விரித்துக் கல்வித் தொண்டு புரிபவர்.

தமிழ்ப் பணிகள்:

  தம் தமிழார்வத்திற்கு உறுதுணை நல்கிய அவரின் தமிழாசிரியர் திருமிகு. புலவர் க. ஐயாத்துரை அவர்களை என்றும் மறவாத நற்பண்பாளர்.
சிறந்த தமிழ்ப்பற்றாளர். தமிழ் தழைக்க இலக்கியக் கூட்டங்களிலும் பல்வேறு கருத்தரங்குகளிலும் பங்கு பெற்றுத் தனித்தமிழில் இலக்கணக் கூறுகளோடு சொற்பொழிவாற்றுந் தகையாளர்.
தமிழாசிரியர்களும் ஆர்வலர்களும் பயனுறும் வகையில் இலக்கணப் பட்டறை நடத்தியும், பள்ளியில் உள்ள அரங்கங்களுக்கு வள்ளுவர், பாவாணர், வீரமாமுனிவர் போன்ற தமிழறிஞர்களின் பெயர்களைச் சூட்டியும் நெஞ்சம் மகிழ்ந்தவர்.
தமிழ் உணர்வை அனைவரிடத்தும் ஓங்கச் செய்ய வேண்டி, தமிழிலக்கியங்களில் புதைந்திருக்கும் பல்வேறு கருத்துச் செறிவினைப் புலப்படுத்த, வெளிநாட்டுத் தமிழறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 8ஆம் நாளைத் ‘தமிழ்நாள்’ விழாவாகக் கடந்த 2014 முதல் கொண்டாடும் தமிழ்ப்பண்பாளர்.
அன்னைத் தமிழுக்கும், இறைவனுக்கும் தனித்தமிழில் பாமாலை சூட்டி மகிழ்ந்தவர்.


முகிழ்த்த பாமாலைகள்:

'பூப்பொதிகை' என்னும் பாடல் வழித் தமிழன்னைக்குத் தனித்தமிழில் பாமாலை சூட்டியமை. இப்பாடலை https://youtu.be/zTjZFutBaCY என்னும் வலையொளியில் உள் நுழைந்து பார்க்கவும்.
"பொதிகைத் தமிழில் புலமை" என்னும் பாடல் வழி இறைவனுக்கும் தனித்தமிழில் பாமாலை பாடியது.  இப்பாடலை https://youtu.be/hS0tLi07fDY என்னும் வலையொளியில் உள் நுழைந்து பார்க்கவும்
இவற்றிற்கெல்லாம் சிகரம் போன்று பள்ளியின் நுழைவாயிலில் உலகம் போற்றும் வள்ளுவனுக்கு நான்கடி உயரத்தில் உருவம் பொறித்த திருக்குறள் வேளர்.



படைப்புகள்

விருத்த மணல் மாதா: (1978)
தூத்துக்குடியிலுள்ள சொக்கன் குடியிருப்பில் கோயில் கொண்டுள்ள மணல் மாதாவின் மீது பாடப்பட்ட 153 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பாக்கள் கொண்டது.
குறள் மோனை: (2001)

திருவள்ளுவர் கையாண்ட மிகவும் மாறுபட்ட செய்யுள் நடையை (மோனை) எடுத்துரைப்பது.  


காணாமல் போன கலைச் சொற்கள்: (2011)
நம்மால் வழக்கிலிருந்து புறந்தள்ளப்பட்ட எளிய மற்றும் சிறப்புச் சொற்களை அழகுற விளக்கும் நூல்.  மேலும், எழுத்துப்பிழை மற்றும் ஒற்றுப் பிழைகளை நேராக்கும் நோக்கில் எழுதப்பட்ட மொழிப்பயிற்சிப் பகுதியையும் உள்ளடக்கியது

இனிக்கும் தமிழ் : (2019)

தமிழ் இலக்கணத்தின் சிறப்புக் கூறுகளைச் (ஐம்பால், திணை, எண் பாகுபாடு, தொழிற்பெயர், ககர சகர பகர தகர ஒலிப்பு முறைகள், சொல்லியப்பிழை)  சுவையோடு திரையிசைப் பாடல்கள் வழி, மிக எளிமையாக எடுத்தியம்பும் நூல். 

 நம் சொல் எது? அயற் சொல் எது?* (அச்சில் உள்ளது)


* ஆசான் தமிழ்  உரை: (2019)
2019  பன்னிரண்டாம் வகுப்புப் புதிய பாடத்தின் படி தமிழ்ப் பாட நூலிற்கு எளிய நடையில் தமிழ் உரை எழுதி வெளியிட்டது.


The Geometry of Concurrency (2018)

கணிதத்துறையில் 25 புதுவகைத் தேற்றங்களைக் கண்டறிந்து நூலாக வெளியிட்டது. அவை குறித்து 2018 இல் புனேயில் AIMER நடத்திய கருத்தரங்கிலும் 2019 இல் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த    BE-MTS பன்னாட்டுக் கருத்தரங்கிலும் 2019 இல் கோவா மற்றும் இந்தூரில் நடந்த பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்ட கருத்தரங்கிலும் பங்கு பெற்றுச் சிறப்புரை ஆற்றி விளக்கம் அளித்துப் பாராட்டுப் பெற்றுள்ளார்.
இதழ்ப் பணிகள்: 

o ‘கனிச்சாறு’ என்ற திங்களிதழில், தொல்காப்பிய  நூற்பா மேற்கோளுடன் தமிழ்ச்சொற்களின் அமைப்பை எடுத்துரைக்கும் தொடரை  எழுதியமை.

o ‘குடும்ப நாவல்’ என்னும் இதழில் ‘இனிக்கும் தமிழ்’ என்ற தலைப்பில் தமிழின் இலக்கிய, இலக்கண நலங்களை இருபத்திரண்டு தொடர்களாக எழுதியமை.

o 'நல்லாட்சி' என்னும் இதழில், "ஆளட்டும் நற்றமிழ்" என்னும் தலைப்பில் தமிழின் தனிப்பெருஞ்சிறப்புக்கள் தொடர்களாக எழுதப்பெற்று, அவை திங்களிருமுறை வெளிவந்து கொண்டிருக்கின்றன..

சொற்பொழிவுக் கட்டுரைகள்:

வள்ளுவரின் தன்னிகரில்லாத் தமிழ் நடை, 
இனிக்கும் இலக்கணம், 
வள்ளுவம் கண்ட 'கண்' சொல்லாட்சி, 
திருவாசகம் ஒரு கண்ணோட்டம், 
மெய்ப்பாட்டியல் மற்றும் பல


பட்டங்களும்  விருதுகளும்.

1. தனித்தமிழ் நாவலர்  (திருவள்ளுவர் மன்றம், மதுரை)
2. இலக்கணச் செம்மல் (திருவள்ளுவர் மன்றம், மதுரை)


3. மதிப்புறு முனைவர் பட்டம் (ஆசியப் பல்கலைக்கழகம்)
4. திருக்குறள் வித்தகர் (உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை)
5. மதுரை சி.இ.ஒ.ஏ தனித்தமிழ் இயக்கப் பேரவைத் தலைவர்
6. மதுரை இலக்கணப் பட்டறை இயக்குநர்




7. இளங்கோவடிகள் முத்தமிழ் மன்ற மதிப்புத் தலைவர்
8. மதுரை திருவள்ளுவர் மன்ற உறுப்பினர்
9. 2018 இல் உலகத்தமிழ்ச் சங்க இலக்கிய விழாவில் மக்கட்பணியினையும் திருக்குறள் பணியினையும் பாராட்டி அமைச்சர் பெருமக்களால் சிறப்பிக்கப்பட்டவர்.



Times of India வழங்கிய சிறந்த பள்ளிக்கான EDU ICON விருது
வாய்ஸ் கல்வி நிறுவனத்தின் "மதுரையின் டாக்டர் மேக்கர்ஸ்" விருது
தமிழ் நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தால் ‘சாதனையாளர் விருது’
உலகத்தமிழ்ச் சங்க இலக்கிய விழாவில் மக்கட்பணியினையும் திருக்குறள் பணியினையும் பாராட்டி அமைச்சர் பெருமக்களால் சிறப்பிக்கப்பட்டமை.
ரேடியோ எஃப். எம் ‘மதுரை சிட்டி ஐகான் விருது’
மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவியருக்கு மருத்துவ நுழைவுத் தேர்வுக்குப் (NEET EXAM) பயிற்சியளித்தமைக்காகப் பாராட்டுச் சான்றிதழ். 
உலகப் பெருவெற்றி (ELITE WORLD RECORDS) நிகழ்த்துவதற்குத் தலைமை வழிகாட்டியாகச் செயல்பட்டமைக்கான சான்றிதழ்.












Post a Comment

புதியது பழையவை

Sports News