பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனார் உருவாக்கிய ராஜகோபுரம்



சிறப்பு கட்டுரை



 பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனார்அவர்கள்
உருவாக்கிய
தென்காசி ஆலய சிறப்பு மிக்க ராஜகோபுரம்
---------------------------------------------------------------------------------
                      சிறப்பு கட்டுரை:பிரபல மூத்த பத்திரிகையாளர் கே .ஜேம்ஸ்-
--------------------------------------------------------------------------------------------------------------------------
தென்காசி ஆலய திருப்பணிக் குழுத் தலைவராக அய்யா அவர்கள் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் 1981ல் நியமிக்கப்பட்டு, 1982ல் கால்கோள் விழாவுடன்  தொடங்கிய திருக்கோபுரப் பணி தொய்வின்றி  தொடர்ந்து 1990 ல் குடமுழுக்குடன்தான் நிறைவேறியது. அவர் தொட்ட பணி எல்லாம்நிறைவேற்றாமல் விட்டதில்லை என்பதால்தான் முதல்வர் அவரைத் தேர்ந்தெடுத்தார். 

--------------------------------------------------------------------------------------------------------------------------

         வடக்கே உள்ள காசியை விட பொதிகை மலைச் சாரலில் , “  சிவமது கங்கை ” என்னும் பெயரைக் கொண்ட சிற்றாறு  கரையில் அமைந்த தென்காசி  புனிதமானது  என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. 
வடக்கில் உள்ள காசியில் வாழ்வின் இறுதி நாட்களைக் கழிக்க இப்போதும் பலர் அங்கு சென்று தங்கியிருப் பதைப்  பார்க்கிறோம். 
ஆனால், தென்காசியில்  கோயில் வரலாறு தனி. கோபுரம் எழுந்த வரலாற்றுடன்  அந்தக் கோபுரம் சிதைந்த வரலாறு , பின்னர் அக் கோபுரம்   மீண்டும் சிறப்பாக கட்டியெழுப்பப்பட்ட  வரலாறு என எழுதுவதே பிழையற்ற  தல வரலாறு  ஆகும். 
இன்றைய அகரக் கட்டு ,  சாம்பவர் வடகரை ஆகிய ஊர்களுக்கு நடுவில்  உள்ள விந்தன் கோட்டையில் , கோட்டை கொத்தளங்கள் அரண்மனை என்றெல்லாம் அமைத்து ஆட்சி புரிந்த மன்னன் பராக்கிரம பாண்டியன்  (கி.பி. 15 ஆம் நு£ற்றாண்டு ) கட்டியதே காசி விஸ்வநாதர் திருக்கோயில் ஆகும். 
விந்தன் கோட்டையில் ,இன்றும் மன்னனின் சிதைந்து போன கோட்டை ,மற்றும் அரண்மனையின் கட்டுமானங்களைக் காண முடிகிறது. அங்கு மேற்கு வாயில் பகுதியில் வாழும்  நாடார் சமுதாய மக்கள், அந்த வாயில்  காவல் தெய்வமான சுடலை மாடனை வணங்கி வருகின்றனர்.   
தென்காசியில் சிற்றாற்றங்கரையில் காவேரி கங்கை அம்மனுக்கு திருக் கோயில் அமைத்த மன்னன் அங்கு விநாயகர் விக்ரகம் நிறுவினான்.  
 பின்னர்  அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயம் கட்ட 1446 ல் மன்னன் பராக்கிரம பாண்டியன் கால்கோள் இட்டான்.
இந்த ஆலயத்தின் ஒன்பது நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தை நிர்மாணிக்க 1457 ல் கால்கோள் இட்ட மன்னன் 20 ஏக்கர் பரப்பளவில் ஆலயத்தைக் கட்டி 1467 ல் கருவறையில் சிவலிங்க வடிவில் காசி விசுவநாதரை பிரதிஷ்டை செய்வித்தான்.  ராஜகோபுரப் பணியை நிறைவு செய்யபராக்கிரம பாண்டியனால் முடியவில்லை. அதை   1518 ல் நிறைவு செய்தவன் ,பின்னர் வந்த  குலசேகர பாண்டியன். தென்காசி  திருக்கோயிலில் திருவோலக்க மண்டபம் என்றழைக்கப்படும் 
முகப்பு மண்டபத்தில் இடம் பெற்றுள்ள   நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட  கல்லிலே கலைவண்ணம் காணும்  பிரமாண்டமான சிலைகள் பிரமிக்க வைப்பவை.
அகோர வீரபத்திரர் , மன்மதன் , திருமால் , காளி , வீரபத்திர சட்டைநாதர் , ரதிதேவி , மகா தாண்டவ மூர்த்தி  , ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி ஆகிய சிலைகளும், இருபக்கத் தூண்களிலும்  தமிழ் அணங்குகள் சிலைகளும் கலைநுட்பத்தில் ஒன்றையொன்று மிஞ்சக் கூடியவை.
 தவிர, நந்தி மண்டம் ,மணிமண்டபம்  ஆகியவற்றிலும் உள்ள சிலைகள் சிற்பக் கலையின் உச்சத்தை தொடும் கலைநயம் கொண்டவை. சைவமும் வைணவமும் ஒன்றே என்பதை இங்குள்ள சிலைகளும் ,இராமாயண, இதிகாச நிகழ்ச்சிகளை விவரிக்கும் சிற்பங்களும் உணர்த்துவது இந்தத் திருக்கோயிலின்  சிறப்பு என்றே  கூறலாம்.
காசி விசுவநாதர் , உலகம்மை  சன்னதிகளை தரிசித்த பின்னர் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி , பைரவர் , துர்க்கையம்மன் , நவகிரகங்கள்  என ஆலயம்  முழுக்க தெய்வத்திரு விக்ரகங்கள் .  திருச்சுற்று மதிலின் வடக்குப் பகுதியில் உள்ள சிறுமண்டபத்தின் கல் து£ண் ஒன்றில் மாமன்னன் பராக்கிரம பாண்டியனின் சிலை கைகூப்பும் தோற்றத்தில் உடைவாள் தரித்த நிலையில் காணப்படுகிறது. வடக்கு  திருச்சுற்றுப் பாதையில் 1000  சிறு லிங்கங்கள் அமைத்து அதை பெரிய லிங்கத்தில் இணைத்து  சகஸ்ரலிங்கம் அமைக்கப் பெற்றுள்ளது சிறப்பாகும்.

300 ஆண்டுகளாக பொலிவிழந்து ......
      இத்தனை சிறப்பு மிக்க தென்காசி திருக்கோயிலின்  ராஜகோபுரம் அழிந்து ஏறத் தாழ 300 ஆண்டுகளாக பொலிவிழந்து போனதற்கு  இடி , மின்னல் தாக்கியதே காரணம்  என்பார்கள். ஆனால் உண்மைக் காரணம், பாண்டியர் வழியில்  1748 ல் வரகுணராமப் பாண்டியன் ஆட்சிக்குப்பிறகு வந்த வாரிசுகள் ஒற்றுமையின்றி சண்டையிட்டுக்கொண்டு  அழிவைத் தேடிக் கொண்டனர். 
 மிக அரிதான உரிமைமுறை ஆவணங்கள் தென்காசி திருக் கோபுரத்தில்  பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அப்போது ஆட்சியை கைப்பற்ற வந்த  கிழக்கிந்திய கம்பெனி வெள்ளையர் , சூழ்ச்சி செய்து ஜமீன்தார்களுக்கும் , பாளையக்காரர்களுக்கும்  இடையே கலகம் உண்டாக்கி, அவரவர் அடித்துக் கொண்டு அழிய வைத்தனர். இச்சூழ்நிலையில் ,பாளையக்காரர் ஒருவரால் கோபுரத்துக்கு தீ வைக்கப் பட்டதில் ஆவணங்களும், கருவூலமும் அழிந்து கோபுரமும் சேதமடைந்தது. 


தீராத சோகத்தின் அடையாளம்
  
தென்காசி சீமை  பாமர மக்களுக்கு இது தீய அறிகுறி, தீராத சோகத்தின் அடையாளம். வீடுகளில் பெண்கள் பாடும் தாலாட்டுப் பாடலில் கூட இந்த சோகம் பிரதிபலித்தது .
    “காசி வடகாசி 
    கண்கண்ட  தென்காசி
    தென்காசிக் கோபுரம் 
    சிரசு முடி சாயுதென்று 
    பொன் காசு தர்ம மிடும் 
    புண்ணியரே உங்கள் அய்யா “
    __ முடி சாய்ந்த கோபுரத்தை நிமிர்த்தி நிற்கச் செய்ய  உங்கள் அய்யா 
தர்மம்  இடுகிறார் என்று குழந்தையை பார்த்து  ஒரு தாய் தாலாட்டு
பாடுவதை விவரிக்கிறது , இப்பாடல். 


காலம் கனிந்து வந்தது
  மாமன்னன் அரிகேசரி பராக்கிரம பாண்டியன், தன் காலத்துக்குப்பின்னர்  300 ஆண்டுகள் கழித்து நடக்கப்போவதை முன்னரே அறிந்த தீர்க்கத்தரிசி . தன் ஆட்சியின்போது  கட்டத் தொடங்கி நிறைவுபெறாமல் போன தென்காசி கோபுரத்தின் அழிவு குறித்து தீர்க்கத் தரிசனமாக  அறிந்திருந்த அவர்,  கீழ்க் கண்ட பாடலை கல்வெட்டில் பொறித்து வைத்திருக்க வேறு காரணம் இல்லை.  

‘ஆராயினும் இந்தத் தென்காசி மேவும்  பொன் ஆலயத்து 
 வாராததோர் குற்றம் வந்தால், அப்போது அங்கு வந்து அதனை
 நேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன்-
 பாரோர்  அறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே.’ 

-      மன்னனின் உள்ளக் கிடக்கையை இப் பாடல் வரிகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. 
  ஏறத் தாழ 150 ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து கிடந்த கோபுரத்தை மீண்டும் கட்டியெழுப்ப யாராலும் இயலவில்லை .ஆயினும்  முக்கிய பிரமுகர்கள் குழு அமைத்து முயற்சிகளை மேற்கொண்டும் சிற்சில திருப்பணிகளை மட்டுமே நிறைவேற்றி குடமுழுக்கு செய்தார்களே தவிர கோபுரத்துக்கு விடிவு காலம் பிறக்கவில்லை.
பெருந்தலைவர் காமராஜர் 1962 ல் தென்காசி வந்தவர் பி.டி.ராஜனை தலைவராகக் கொண்டு குழு அமைத்து கோபுரத்தைக் கட்ட முயற்சி செய்யுங்கள் என்றார். பெருந் தலைவர் ஆணைப்படி முக்கூடல்  ஆர்.ஆர் .கருடலிங்க நாடார், தென்காசி வணிக பிரமுகர் பிச்சையாண்டிச் செட்டியார், ஆலய மேலாளர் சோமசுந்தரம் பிள்ளையுடன் மதுரை சென்று பி.டி. ராஜனைத் தொடர்பு கொள்ள  திருப்பணிக்குழு அமைக்கப் பட்டு மக்களிடமிருந்து  ரூ.நாலரை லட்சம் வசூல் ஆனது. ஆனால் ,பிளவுபட்ட  கோபுர பகுதியை இடித்து அகற்றவே ரூ.இரண்டரை  லட்சம் செலவானதால் திருப்பணிகள் மட்டும் செய்து 1967 ல் குடமுழுக்கு  நடத்தினர் .
பெருந் தலைவர் ஒப்படைத்த பணியை செய்யவேண்டுமே  என கருடலிங்க நாடார்  தளராது முயன்றார்.  ஏறத்தாழ 15 ஆண்டுகள்  கடந்து, 1981 நவம்பர்  9 ஆம் தேதி ‘தினத்தந்தி ‘  அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்  அவர்கள் தென்காசித் திருக்கோயில் திருப்பணிக்குழு தலைவராக பொறுப்பு ஏற்றதும்,  மாமன்னன் பராக்கிரம பாண்டியனின் கனவு நிறைவேறும்  காலம் கனிந்து வந்தது.

 2. 2 .1982 ல் கோபுரம் கட்டும் பணிக்கு கால்கோள் நடத்தினார், பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் . 22 .1  1983 ல் திருப்பணிக்கான பூஜை தொடங்கி,  இரவு 1 30 மணிக்கு பூஜை முடிந்ததுமே தென்காசியில் பெருமழை கொட்ட வருண பகவான் கோயிலைச் சுத்தம் செய்துவிட்டார் என்று சிவாச்சாரியார்கள் மகிழ்ந்தனர். 

சிறப்பு மிக்க ராஜகோபுரம்

கட்டடக் கலை நிபுணர்கள் கோபுரத்தின் அடித்தளம்  வலுவாக உள்ளதென ஆய்ந்து  அறிவித்தனர். கோபுரத்தின் கல்காரமும் உறுதியாக உள்ளது. பராக்கிரம பாண்டியன் அமைத்த கல்காரம் 17,200 டன் எடை தாங்கக்கூடியதாகையால்  , 9 நிலைகளையும் தயங்காமல் கட்டலாம்  என்று கட்டடக்கலை நிபுணர்கள் குழு சான்றளிக்க அதிகாரிகளும், பா.சிவந்தி ஆதித்தனார் ஐயா அவர்களும் பெரிதும் மகிழ்ந்தனர். 

 கோபுரம் கட்டும் பணிகள்  1984 நவம்பர் 28 ல் தொடங்கப்பட்டது. திருப்பணிக்குழு தலைவர் பா.சிவந்தி  ஆதித்தனார்  தன் வரவேற்பு உரையில்," வானளாவிய இக் கோபுரத்தை திட்டமிட்டபடி கட்டி முடிப்போம்" என உறுதி கூறினார். கோபுரத்தின் அடித்தள வேலைகள் முடிந்ததும் இதற்காக ஏங்கிய கருடலிங்க நாடாரும்  நகர மக்களும் பெரிதும் மகிழ்ந்தனர். ராஜகோபுரத்தின் முதல்நிலை கட்டுமான செலவுகளை திருப்பணிக்குழு தலைவர் பா.சிவந்தி ஆதித்தனார் ஏற்றார். 2 ஆம் நிலைக் கட்டுமான செலவுகள்  திருச்செந்து£ர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக் கோயில் , 3 ஆம் நிலை பழநி தண்டாயுதபாணி திருக்கோயில், 4 ஆம் நிலை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் , 5 ஆம் நிலை மதுரை மீனாட்சி  சுந்தரேசுவரர் திருக்கோயில்  , 6 ஆம் நிலை திருத்தணிகை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், 7 ஆம் நிலை சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில்  சார்பில் செலவுகள் ஏற்கப்பட்டன. 8 ஆம் நிலைக்கான செலவுகளை தென்காசி வட்டார நாடார் சமுதாயத்தினர்  ஏற்றனர்.தனிப்பட்ட முறையில் பக்தர்கள் மற்றும் நிறுவனத்தார் பலரும் நன்கொடைகளை வழங்கினர்.  
     அடி அமைத்துக் கொடுத்தவரே முடியினையும் முடிக்க வேண்டும் என்ற  தத்துவத்தின்படி 
 9 ஆம் நிலைக்கான செலவுகளை திருப்பணிக் குழுத் தலைவர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களே ஏற்றார். கோபுரத்தின் உச்சியில்  ஒவ்வொன்றும் 110 கிலோ எடையுள்ள  ஆறே முக்கால் அடிஉயரம்,  இரண்டரை அடி குறுக்களவு   கொண்ட  11 செப்புக் கலசங்கள் வரகு தானியங்கள் நிரப்பி நிறுவப் பட்டன. இதற்கான  செலவுகளையும் சிவந்தி ஆதித்தனார் அவர்களே ஏற்றார்கள்.  

சில்ப கலைமாமணி முத்தையா ஸ்தபதி  தலைமையில் நந்தகுமார் நிர்வாகத்தில் உருவாக்கப் பட்ட இந்த ராஜகோபுரம்  178 அடிகள் உயரம் கொண்டது. அடிமுதல் முடிவரை 800 சுதைச் சிற்பங்கள் இதில் இடம் பெற்று  வண்ணம் பூசப்பட்டள்ளன . கோபுரத்தின் படிக் கட்டுகள் வழியாக 9 வது நிலைக்குச் சென்று   அதன் வெளிப் பகுதியில் அமைந்துள்ள நடை மேடையில் சுற்றி வந்தால் குற்றாலம் அருவி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தையே கண்டு களிக்கமுடியும்.


 இந்த சிறப்பு மிக்க ராஜகோபுரம் கட்டி முடிக்கப் பட்டதும்  1990 ஜுன்  25 ஆம் நாள்குடமுழுக்கு  நடைபெற்றது. பின்னர் 2006 ஆம் ஆண்டிலும் பா. சிவந்தி ஆதித்தனார் அய்யாஅவர்கள் இந்த ஆலயத்தின்  குடமுழுக்கை  2வது முறையாக நிறைவேற்ற இறைவன் திருவுள்ளம் கொண்டது வரலாற்றில் என்றும் இடம் பெற்றிருக்கும் .


                                         --------------------------------------------------

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News