சாதனைச் சிகரம் -முத்தாலங்குறிச்சி காமராசு



சாதனைச் சிகரம்
முத்தாலங்குறிச்சி காமராசு.


"ஆதிச்சநல்லூர் கதையை  அகிலத்துக்குச் சொல்லும் ஆதித்தமிழன். தாமிரபரணி கரை நாகரிகமே தமிழர் நாகரிகம் என்று தடம் பதிக்கிறார் இவர்.  ஆதிச்சநல்லூர் ஆய்வை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்றவர். முதுமக்கள் தாழிகள் மூலம் மூத்தோர் வரலாறு படைக்கும் எழுத்தாளர், ஆய்வாளர் திரு முத்தாலங்குறிச்சி காமராசு "
.

            (பஸ் நடத்துனராக வாழ்க்கையை தொடர்ந்து, மேடை நாடக நடிகராய், நெல்லை வானொலி நாடக  எழுத்தாளராய், நூல் ஆசிரியராக, சினிமா நடிகராக வலம் வந்து பல விருதுகளை பெற்றவர். சொந்தமாக தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் பொன்சொர்ணா ஸ்டுடியோ என்ற புகைப்பட நிறுவனத்தை நடத்தி வருவதோடு, பொன்சொர்ணா பதிப்பகத்தினை நடத்தி, தனது  நூல்களை வெளியிட்டு வருகிறார். அதோடு மட்டுமல்லாமல்  தனது மகன் அபிஷ் விக்னேஷ் மூலமாக "மீடியா கிருக்கன்" என்ற  யூ டியூப் சேனலும், தனது சிஷ்யர் சுடலைமணி செல்வன் மூலமாக  "ஸ்ரீவைகுண்டம் டூடே நீயூஸ்" என்ற யூ டியூப் சேனலும் நடத்தி வருகிறார். இவர் பெயரில் www.muthalankurichikamarasu.com  என்ற வெப்சைட்டும் நடத்தி வருகிறார்.) 
கேள்வி:
உங்கள் பிறப்பு குறித்து கூறுங்களேன்.
 பதில்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகா முத்தாலங்குறிச்சி எனும்  தாமிரபரணிக்கரை கிராமத்தில் திரு. சங்கரசுப்பு--திருமதி. சொர்ணம்மாள் தம்பதிக்கு  நான் மகனாய் பிறந்தேன்.  மொத்தம் 13 குழந்தைகள் பிறந்தது. மொத்தம் மூன்று பேர்தான் உயிர்தப்பினோம். மூத்தவர் தங்கபாண்டியன் . முத்தாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவராக இரண்டு முறை பதவி ஏற்றவர். அக்காள் ஆறுமுககனி, வல்லகுளம் என்னும் ஊரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.



கேள்வி:  
உங்களுடைய பெயர்க்காரணம் என்ன?
 பதில்:
1967ல் முன்னாள் முதல்வர் திரு.காமராஜர் அவர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அப்போது,  என்னுடைய குடும்பத்தில் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்தனர். "நல்ல தலைவர் தோல்வி அடைந்து விட்டார். அவர் புகழ் நிலைத்து இருக்கவேண்டும்" என  நினைத்தார்கள்.அப்போதுதான் நான் பிறந்தேன். எனவே, எனக்கு காமராஜ்  என்று பெயர் வைத்தனர். பிற்காலத்தில் காமராஜரை போல யாரும் வாழ முடியாது. அவர் பெயரை வைக்க வேண்டும் என்றால்  அதற்கு தனி தகுதி வேண்டும். -- எனக்கு அந்த தகுதி இல்லை, எனவே ,.
எனது பெயரை காமராசு என மாற்றியது தனி கதை.

கேள்வி:  
 தாமிரபரணி கரையில் தாங்கள் வளர்ந்தது குறித்து  கூறுங்களேன்.
 பதில்:
எனது துவக்கப் பள்ளி படிப்பை முத்தாலங்குறிச்சி புனித வளன் துவக்கப்பள்ளியில் ஆரம்பமானது. 1978 ஆம் ஆண்டு இக் கிராமத்துக்கு பஸ் வசதி இல்லாத காரணத்தால் பஸ் விட ஏற்பாடு செய்யும் முயற்சியில் எனது தந்தை சங்கரசுப்பு ஈடுபட்டார். அந்த சமயத்தில் தினமும் 2 டிக்கெட் இருந்தால் மட்டும் பஸ் விடுவோம் என்று கம்பெனி அதிபர் கூறிய காரணத்தால் என்னை 6ஆம் வகுப்பு படிக்க பாளையங்கோட்டை கிறிஸ்து ராஜா நடுநிலைப்பள்ளிக்கு அனுப்பி வைத்தார். 
 அதன் பின்பு 7 முதல் 10ஆம் வகுப்பு வரை பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில்  எனது படிப்பு தொடர்ந்தது.  மேல்படிப்பு படிக்க போதிய வசதி இல்லாத காரணத்தாலும், பாளையங்கோட்டை சென்று கல்வி கற்க  இயலாமல் போய்விட்டது.  எனவே,   மேல்நிலைப்பள்ளி படிப்பை கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  படித்தேன். அப்போது தினமும் 6 கிலோ மீட்டர் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணல்காட்டு வழியாகவும், அடர்ந்த காடு வழியாகவும், வயல்கரை வழியாகவும் நடந்தே சென்று கருங்குளத்தில் மேல்நிலைக் கல்வி பயின்றேன்

கேள்வி:  
எப்போது எழுத்தாளராக அறிமுகம் ஆனீர்கள்?
பதில்:
   6.03.1987ல் “தேவி வார இதழில்” துணுக்கு எழுத்தாளராக அறிமுகமானேன். அதன் பின்னர்  மும்பைக்கு சென்று  வேலை செய்தேன்.  அங்குள்ள “மராத்திய முரசு”, “போல்டு இந்தியா” ஆகிய பத்திரிகையில் சிறுகதை  எழுதினேன்..  தொடர்ந்து கிராமத்தில் செங்கல் சூளையில் வேலை பார்க்கும் போது, நெல்லை வானொலி நேயரானேன். 
அதில்  நாடக நடிகராக முயற்சி செய்தபோது, "குரல்வளம் இல்லை" என்று நிராகரிக்கப்பட்டேன்.  விடாமுயற்சியால்  நெல்லை வானொலியில்  "நமக்குள்ளே" பகுதிக்கு  கடிதம் எழுதினேன். பின், வாசகராகவே வானொலியில் ஒலிபரப்பாகும் "இளையபாரதம்" நிகழ்ச்சியில் உரை, சிறுகதை எழுதி வாசித்தேன்.
3.10.1988ஆம் நாள்  எனது “குருவை மிஞ்சிய சீடர்” எனும் உரை அறிமுகமானது. அதன் பிறகு, 15 நிமிட  “கண்டிஷன் கண்டிஷன்” எனும் நாடகம் ஒலிபரப்பானது.   தொடர்ந்து, அரை மணி நேர நாடகம் எழுதி, ஒரு மணி நேர நாடகம் எழுதும் எழுத்தாளராக உயர்ந்தேன். 
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் (27.06.2010) நடந்த போது “என்று தணியும் இந்த தாகம்?” என்னும் ஒரு மணி நேர நாடகம்,  அனைத்து வானொலியிலும்  ஒலிபரப்பானது. என்னுடைய நாடகமான “ரோபோ மருமகள்” எனும் அறிவியல் நாடகம் 7.10.2009 அன்றும், “மனம் சொல்லும் மௌனம்” என்ற மற்றொரு நாடகமும் நாடக விழாவில் நெல்லை வானொலி நாடகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒலிபரப்பானது.
  2019 ஆம் ஆண்டு வானொலி விழா நாடகத்தில் நெல்லை வானொலி சார்பில் எனது நாடகமாக "உயிர்மூச்சு" தேர்வாகி 7.06.2019 அன்று இரவு தமிழகம், பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து வானொலிகளிலும் இரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகியது.
 என்னுடைய ஆரம்பக் காலத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்தில் நடத்துனராக 1988 முதல் 1995 வரை பணியாற்றினேன். 1996 முதல் 1999 வரை சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏ மணிநாடாரிடம் உதவியாளராக வேலை  செய்தேன். இவற்றின் மூலம் கிடைத்த அனுபவத்தின் பிரதிபலிப்பு  எனது  நாவல், சிறுகதை, கட்டுரை மற்றும் நூலில் இருக்கிறது.  
 அதன் பின், தினகரனில் பகுதி நேர நிருபராக வேலை செய்த போது ,அங்கு முக்கிய விழா கால மலர்கள் வெளியிடவேண்டியது இருக்கும். அதில் பேராசிரியர் நெல்லை கவிநேசன் தலைமையில் நாங்கள் எல்லாம் செயல்படுவோம். அப்போது, நெல்லைகவிநேசன்  அவர்கள்வழிகாட்டுதலின் பேரில் ஆசிரியர்கள் இக்பால், நெல்லை வரதன் ஆகியோர் உதவியுடன் நிறைய எழுத ஆரம்பித்தேன். அதுவே என்னுடைய எழுத்து துறைக்கு வித்திட்டது. பிற்காலத்தில், தினத்தந்தியில் தொடர்  எழுதவும், கட்டுரை மற்றும் நூல்  எழுதியும் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானேன்.
கேள்வி:
இதுவரை  எந்தெந்த பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் பங்கேற்று உள்ளீர்கள்?.
பதில்:
கடந்த 33 ஆண்டுகளில் தினகரன், தமிழ்முரசு, தினத்தந்தி, தினமலர், ராணி, மாலைமலர், கோகுலம் கதிர், மராத்திய முரசு, போல்டு இந்தியா, மும்பை தமிழ் டைம்ஸ், வணக்கம் மும்பை, சான்றோர் மலர்,  ஆல் இந்தியா ரேடியோ, நாடன் குரலோசை, சன் டிவி, வசந்த் டிவி, ஜி தமிழ், தந்தி டிவி,நியூஸ் 7 தமிழ், மதிமுகம் உள்பட  பல்வேறு ஊடகங்களில் சுமார் 3,250க்கும் மேற்பட்ட படைப்புகளை  படைத்துள்ளேன். 

  "சான்றோர் மலர்" ஆசிரியர் குழுவில் நெல்லை கவிநேசன் அவர்களோடும், மும்பையில் இருந்து வெளிவரும் ஒரே ஒரு தமிழ் வார இதழான "வணக்கம் மும்பை"யில்  சிறப்பு செய்தியாளராகவும்,  வாரம்ஒரு முறை வெளிவரும்  "வணக்கம் ஸ்ரீவை"யில் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறேன்.

கேள்வி:
 திருநெல்வேலி வானொலிக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து கூறுங்கள்.

பதில்:
   சிறு வயதிலேயே எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை. ஆகவே தான் 1987ல் தேவி வார இதழில் துணுக்கு எழுத்தாளராக  எழுத தொடங்கி, பல்வேறு ஊடகங்களில் கால் பதிக்க முயற்சி செய்தேன். 
தினத்தந்தியில் மதுரை அலுவலகத்தில் பிழை திருத்துபவர் பணியில் சேர்ந்து, குடும்ப சூழ்நிலை காரணமாக வேலையை விட்டு விட்டு, முத்தாலங்குறிச்சியில் உள்ள செங்கல் சூளையில் வேலைப்பார்த்து வந்தேன். அந்த சமயத்தில் வானொலி மீது  எனக்கு தீராத காதல். எனக்கு மட்டுமல்ல கிட்ட தட்ட என்னை போன்ற பல எழுத்தாளர்களுக்கு  நெல்லை வானொலி தான்  அடித்தளம் அமைத்து கொடுத்தது
வானொலி நேயர்கள் இரண்டு ரகம். அதில் ஒரு ரகம். பாடல் கேட்பார்கள். கடிதம் எழுதி போடுவார்கள்.  "நமக்குள்ளே" என்னும் நிகழ்ச்சியில் அறிவிப்பாளர்கள்  இவர்களது பெயரை கூறும் போது சந்தோஷப்படுவார்கள். ஆனால் ,எழுத்து துறைக்குள் செல்ல மாட்டார்கள். சிலர் எழுத்து, நாடகத்தில் நடித்தல் என  வேறொரு தளத்தில் வானொலியில் இயங்கி கொண்டிருப்பார்கள்.  எனக்கு இரண்டு  ரகத்திலும் ஆசை.  நமது பெயரும் வரவேண்டும். வானொலியில் நமது குரலும் வரவேண்டும் என்று நினைத்தேன். 
சுமார் 50 க்கு மேற்பட்ட போஸ்ட் கார்டுகளை கையில்  வாங்கி வைத்துக்கொண்டு நிகழ்ச்சிக்கு கடிதம் எழுதி குவிப்பேன். ஒரு சமயம் "நாடகம்   நடிக்க நிலைய கலைஞர்கள் தேவை" என விளம்பரம் கொடுத்து இருந்தார்கள். முறைப்படி மனு செய்து  நானும் நேர்முகத்தேர்வுக்கு சென்று இருந்தேன்.  "உச்சரிப்பு  சரியில்லை "என நிராகரிக்கப்பட்டேன்.   ஆனாலும் விடாமல் வானொலி நிலையம் சென்று காத்து கிடப்பதை வழக்கமாக வைத்திருந்தேன்.
  நிகழ்ச்சி பொறுப்பாளர் நாசரேத் எம்.ஏ. சாம்ராஜ்  என்னை அழைத்து பேசினார்.  "பேச்சு உச்சரிப்பு சரியில்லை என்றால் என்ன? எழுதுங்கள்" என எனக்கு உற்சாகத்தினை கொடுத்து என்னை முதல்முதலில் வானொலியில் எழுத வைத்தார்.  
"குருவை மிஞ்சிய சீடர்" என்ற தலைப்பில் காமராஜரை பற்றி  பேசினேன். அதன் பிறகு இளையபாரதம் நிகழ்ச்சியில் பேச ஆரம்பித்தேன்.  நிகழ்ச்சி பொறுப்பாளர்கள்  பொன் துரைசாமி, சாத்தூர் சவரிராயன் ஆகியோர் உதவியில் முதல் முதலில் வானொலியில்"கண்டிசன்கண்டிசன்"என்ற15நிமிட  நாடகம்  எழுதினேன்.   நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு நிகழ்ச்சி பொறுப்பாளர் ஜோதி மணி இளங்கோவன்,  அறிவிப்பாளர் உமா கனகராஜ் அவர்களின் அமைப்பில்  "சட்டாம் பிள்ளை பேரன்" என்ற  அரை மணி நேர  நகைச்சுவை நாடகம் எழுதினேன்.  நல்லவரவேற்பு கிடைத்தது.  
 சீதா நமச்சிவாயம் மூலமாக நடந்த மக்கள் மேடையில் கலந்துகொண்டு , நான் எங்கள் முத்தாலங்குறிச்சி கிராமத்துக்கு பஸ் கொண்டு வர காரணமாக ஆனேன். ஆனாலும், கொஞ்ச காலமாக  வானொலியை விட்டு விலகி,  வேறு பணியில் இருந்து விட்டேன்.   நிகழ்ச்சி பொறுப்பாளர் கற்பூரம் கிருஷ்ணன்  என்னை கூப்பிட்டு கூப்பிட்டு  வாய்ப்பு கொடுத்தார். 
    நாடகம் என்றால் எப்படி எழுத வேண்டும் என்பதை எனக்கு கற்றுத்தந்தவர் மேலப்பாவூர் ராமகிருஷ்ணன்.  இவருடன் நான்  "மீனுவுக்கு கண் தொறந்தாச்சி", "வடதுருவம் தென்துருவம்", "பாதை தெரியுது",  "ஆட்டோவில் வந்த வரன்",  "குடியின் மடியில் இருந்து"போன்ற நாடகங்களை எழுதினேன். இது எனக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.   நிகழ்ச்சி பொறுப்பாளர் உமா மகேஸ்வரி, சுகந்தி ஆகியோர் தயாரித்த நாடகங்கள் என்னை  செம்மைபடுத்தியது.  
       நீண்ட நாள் நான் வானொலியை மறந்து விட்டு வேறு பணிக்கு சென்று விட்டேன். அந்த சமயத்தில், என்னை வானொலி நாடகத்துக்கு மீண்டும் இழுத்துக்கொண்டு வந்தவர் கரை சுற்று புதூர் கவிப்பாண்டியன்.  நான் எழுதிய "கட்டபொம்மனும் கவிராயரும்" என்ற  வரலாற்று நாடகம் சுமார் 5 தடவை திருத்தி,  திருத்தி எழுதி கொடுத்தும், ஒரு நாள் இந்த நாடகம் நிராகரிக்கப்பட்டு விட்டது என ஒரு பண்டல்  ஸ்கிரிப்ட் போஸ்ட் மேன் மூலம் திரும்பி வந்து விட்டது. நான் மிகவும் நொந்து போய் இருந்தேன். 
அப்போது என்னை கரை சுற்று புதூர் கவிபாண்டியன் போஸ்ட் கார்டு போட்டு கூப்பிட்டார். ( இப்போது போல போன் வசதி எல்லாம் இல்லை) அவர்  என்னை கீழப்பாவூர் சண்முகையா அவர்களிடம் கூட்டிச்சென்றார். அவர் "கட்டபொம்மனும் கவிராயரும்" நாடகத்தினை செம்மையாக எழுதி வாருங்கள் என அனுப்பி வைத்தார். அதன் பின் அந்த நாடகத்தினை எழுதி கொண்டு கொடுத்தேன். அந்த நாடகம்  மிகப்பிரமாண்டமாக  வெளி வந்தது. அதன் பின்  கீழப்பாவூர் சண்முகையா,  கரைசுற்றுப்புதூர் கவிப்பாண்டியன் இருவரும் சேர்ந்து "கன்னடியன் கால்வாய்", "கடையநல்லூர்"  ஆகிய இரண்டு வரலாற்று நாடகங்களை  எழுத வைத்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் "ரோபோ மருமகள்" என்ற அறிவியல் நாடகத்தினை வானொலி விழா நாடகமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வானொலியிலும்  ஒலிபரப்பு செய்தார்கள். "கஞ்சமாமா", "முடிச்சு மேலே முடிச்சு" போன்ற என் நாடகம்  வானொலியில்  சிறப்பு பெற்ற நாடகமாக விளங்கியது
  அதன் பின்,  வானொலிக்கும் எனக்குமான நெருக்கம் அதிகமாகி விட்டது. நான் தமிழ் முரசில் எழுதிய பிரபலங்கள் தொடரில் நெல்லை வானொலி அறிவிப்பாளர்கள்  குடந்தை ஆர். வெங்கிடபதி, கரை சுற்றுப்புதூர் கவிபாண்டியன், மேலப்பாவூர் ராமகிருஷ்ணன், உமா கனகராஜ், சந்திரபுஷ்பம் பிரபு ஆகியோரை பற்றி  எழுத வாய்ப்பு கிடைத்தது. நெல்லை அழகிய நம்பி  நெல்லையில் பணி துவங்கி ,மதுரையில் பணியாற்றும் அறிவிப்பாளர் .என் மீது மிகுந்த பற்று வைத்திருந்தார். மங்காவிளை ராஜேந்திரன் நாகர்கோயிலை சேர்ந்தவர்  என் படைப்பு மீது அலாதி பிரியம் கொண்டவர் . செலவராஜ் தூத்துக்குடி வானொலியில் பணியாற்றிய போது என்னை அழைத்து  சுமார் 10 வருடங்களுக்கு முன்பே ஆதிச்ச நல்லூர் பற்றி என்னை பேச வைத்து அழகு பார்த்தார்.  தொடர்ந்து " என்று தணியும் இந்த தாகம்" என்னும்  1 மணி நேர நாடகத்தினை  கோவையில் செம்மொழி மாநாடு  அன்று தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி வானொலியில்  ஒலிபரப்பானது.  "மனம் சொல்லும் மௌனம்" என்னுடைய  நாடகம் வª£னாலி விழா நாடகமாக ஒலிபரப்பானது.
    2019 ஆம் ஆண்டு நாடக விழா நாடகத்துக்கு  நிகழ்ச்சி பொறுப்பாளர்   ஜான் பிரதாப்  , கரை சுற்றுபபுதூர் கவிப்பாண்டியன்  அவர்களோடு இணைந்து  "உயிர் மூச்சு" என்ற நாடகத்தினை  உருவாக்கினோம். அதுவும் எனக்கு நல்லபெயரை பெற்று தந்தது.   ஜான் பிரதாப் அவர்கள் என் எழுத்து மீது அதிகமான பற்று கொண்டவர். அவர் ரெயின்போ எப்.எம் இல், என்னை நேரலையில் பேட்டி கண்ட நிகழ்வு 1 மணி நேரம் நடந்தது. அப்போது நிறைய நேயர்கள்  வானொலிக்கும் எனக்கும்  உண்டான தொடர்பை  நினைவு படுத்திய தருணம், என் வாழ்வில் மறக்க முடியாத  தருணமாகும். 
 நெல்லை வானொலியில்  இயக்குனர் சுந்தர ஆவுடையப்பன் நல்ல எழுத்தாளர்.  என்னை போன்ற  எழுத்தாளர்களை ஊக்கு விப்பவர் . ஆகவே அவரும் நல்ல உற்சாகம் கொடுத்து வருகிறார். ஆரம்ப காலத்தில் இருந்து வானொலி நேயர்கள் பத்தமடை கந்த சாமி,  உக்கிரன் கோட்டை மணி, கால்வாய் நாரயணன், கிருஷ்ணபுரம் புன்னைவனம், கடம்போடு வாழ்வு நல்ல பெருமாள், கடம்பன் குளம் ஊசிக்காட்டான்,  திடீயூர் ஈஸ்வர மூர்த்தி அய்யா,  வண்ணார் பேட்டை ஜெயராஜ், செல்வக்குமார் போன்றோர் தற்போதும்  எனது எழுத்தை ரசித்துக்கொண்டே உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

 அதுபோலவே, சூரியன் எப்.எம். இல்  பிரபலங்கள் படிக்கட்டில்  அண்ணன் பிச்சு மணியும், சிமோனா, ஹலோ எம்.எம் மேலாளர் அற்புதராஜ் அவர்களின் வழிகாட்டுதல் மூலமாக   ஆர். வெங்கட்ராமன், சாமி ஆகியோர் கண்ட நேர்முகம் எனக்கு நல்லபெயரை பெற்று தந்தது. இருவரும் தொடர்ந்து 3 மணி நேரம் என் பேட்டியை ஒலிபரப்பு செய்தார்கள். தாமிரபரணி புஷ்கரத்தினை யொட்டி நான் தாமிரபரணி பற்றி பேசியதை,  ரெயின்போ எப்.எம், ஹாலோ எப்.எம்  இரண்டும் ஒலிபரப்பு செய்ததை மறக்க இயலாது. வானொலிக்கும் எனக்கு உண்டான தொடர்பை என்றும் மறக்க இயலாது.
கேள்வி:
உங்களுடைய நாடகத்துறை யை பற்றி கூறுங்கள்
பதில்:
 நாடகத்துறையில் சிறு வயதில் இருந்தே எனக்கு ஆர்வம் அதிகம்.  இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே, முத்தாலங்குறிச்சி அந்தோணியார் ஆலயத்திடலில் நான் நடித்த நாடகம்  அரேங்கேறியது. முதல் நாடகத்தில் ஒரு வார்த்தை வசனம் கூட பேச வெட்கப்பட்டு, இடையிலேயே மேடையை விட்டு இறங்கியவன். அதனால், ஆசிரியையிடம் குட்டுப் பட்டேன். தன்பிறகு, "எப்படியாவது நாடகத்தில் நடிக்க வேண்டும்" என்ற ஆர்வத்தில் சிறு வயதாக இருக்கும்போது, முத்தாலங்குறிச்சியில் "தேன்கூடு இளைஞர் மன்றம்" சார்பாக நடந்த இரண்டு நாடகத்திற்கு கதாநாயகியாக பெண் வேடமிட்டு நடித்தேன்.
  கதாநாயகனாக தொடர்ந்து நடித்து வந்தேன்.   அகில இந்திய வானொலி நிலையத்தில் நடந்த நாடக நடிகர் தேர்வுக்கு சென்றேன். அங்கேயும் "உச்சரிப்பு  சரியில்லை" என்று நிராகரிக்கப்பட்டேன். அப்போதுதான், "நாமே நாடகம் எழுதினால் என்ன?" என்று எனக்கு தோன்றியது. எனவே, பல நாடகங்கள் எழுதினேன்.  ஸ்ரீவைகுண்டம்  தாலுகாவில் உள்ள ஆறாம்பண்ணை, வல்லக்குளம், கிளாக்குளம், வெட்டிக்குளம், புதுக்குளம் கிராமங்களில் எனது நாடகங்கள் அரங்கேறியது.


கேள்வி:
நீங்கள் பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து கூறுங்கள்.

பதில்:
வசந்த் டிவியில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மண்ணின் பெருமை பேசும் ‘‘நெல்லை மண் பேசும் சரித்திரம்’ என்னும் தொடரில் 75 வாரம் பங்காற்றினேன் பின்னர், அந்த அனுபவம் எல்லாவற்றையும் தொகுத்து ‘‘தென் பாண்டிச் சீமையிலே பாகம்-1, தென்பாண்டிச்சீமையிலே பாகம் -2’’ ஆகிய 1,000 பக்கங்கள் கொண்ட 2 நூல்களை எழுதினேன்.இதில் இரண்டாவது நூல் 22.06.2013 அன்று நெல்லை கலெக்டர் சத்யமூர்த்தி தலைமையில் நெல்லை புத்தக கண்காட்சியில்  வெளியானது. முதல் நூல், உலக அளவில் நடந்த சிறந்த நூல்களுக்கான போட்டியில் முதல் பரிசு பெற்றது.
 ஜி- தமிழ் டிவியில் “நம்பினால் நம்புங்கள்” தொடரில் பணிபுரிந்து வேந்தர்  டிவியில் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளேன்.. எழுத்து துறையில் 33ஆம் ஆண்டை இந்த ஆண்டு கடக்கிறேன். இந்த ஆண்டு எனக்கு  54 வயது. எனவே, இந்த ஆண்டு, னது 54 வது நூலை வெளியிட திட்டமிட்டு, முடித்துள்ளேன். தந்தி டி.வி "யாத்திரிகன்" நிகழ்ச்சியிலும், நீயூஸ் 7 தொலைக்காட்சியில் "பீனிக்ஸ் மனிதர்கள்" நிகழ்ச்சில்  தம்பி கோபாலகிருஷ்ணன் கேள்வி   கணை தொடுத்து, நான் பதிலளித்த  அரை மணி நேரம் நிகழ்ச்சியும் நடந்தது.   "மதிமுகம் டிவி"ல் "படைப்பாளின் கதை" என்ற 1 மணி நேர நிகழ்ச்சியில்   சகோதரி அபிநயா ஸ்ரீகாந்த் தொகுத்த நேர்முகத்தில் கலந்துகொண்டேன்.
  நெல்லை "மயூரி தொலைக்காட்சி"யில் வாரம் தோறும்  என்னுடைய நிகழ்ச்சியை தொடர்ந்து ஒளிபரப்பு செய்ய அதன் உரிமையாளர் ஆறுமுகநயினார் ஏற்பாடு செய்துள்ளார். அதற்கான சூட்டிங் முடிந்து எடிட்டிங் நடந்து வருகிறது. விரைவில் அந்த தொடர் வெளி வர உள்ளது.
  தாமிரபரணி வரலாற்றில் முதல் முதலாக "கீயூஆர் கோடு" மூலம் தாமிரபரணி நூலில் வீடியோ  நூலை உலக நதிகள் வரலாற்றில் முதல் முதலாக வெளியிட்டுள்ளேன். அதில் தாமிரபரணியை பற்றி நான் பேசும் 144 வீடியோ பதிவாகி உள்ளது.

கேள்வி:
 உங்களுடைய நூல்கள் எந்த பதிப்பகத்தில் வெளியாகி உள்ளது.
பதில்:
விகடன், தினத்தந்தி, தி இந்து தமிழ் திசை,  சூரியன், சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகம், காவ்யா,பொன்சொர்ணா உள்பட முன்னணி பதிப்பகங்களில் இருந்து  என்னுடைய நூல் வெளிவந்துள்ளது.  நான் எழுதிய ‘தலைத் தாமிரபரணி’ என்னும் 950பக்க நூல் தாமிரபரணி வரலாற்றில் மிகப்பெரிய எளிய தமிழ் நூல். இந்த நூல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நூலகங்களிலும் உள்ளது. தொடர்ந்து, இந்த நூலை செம்மை படுத்தி மறுபதிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்னுடைய அனைத்து நூல்களையும் அமேசான்  மூலம்  வாசகர்கள் வாசிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறேன்.
கேள்வி:
 தாங்கள் சினிமாத்துறையில் எப்படி கால் பதித்தீர்கள்?
பதில்:
கிராமங்களில் நாடகம் நடிக்கும்போதே, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு  ஆரம்ப காலகட்டத்திலேயே இருந்தது. நடிகரும், செய்துங்கநல்லூரை சேர்ந்தவருமான டாக்டர்,.  ஏ.வி.ஏ.கஸ்ஸாலி என்னுடைய நாவலை திரைப்படமாக்க முயற்சி  செய்து வந்தார்.அப்போது எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
நடிகரும் இயக்குனருமான திரு.சேரன் அவர்கள் தயாரித்து, நடிகை திருமதி. ரோகிணி அவர்கள் இயக்கிய “அப்பாவின் மீசை” என்ற திரைப்படத்தில் முதல் முறையாக நடிகராக அறிமுகமானேன்.  இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
ராட்டினம் பிக்சர்ஸ் தயாரிப்பில் முத்துநகர் இயக்குனர் திரு.கே.எஸ். தங்கசாமி அவர்கள் இயக்கத்தில் “எட்டுத்திக்கும் மதயானை” படத்தில்   நடித்துள்ளேன். அந்த படத்தில் “நெல்லை சீமையிது” என்ற பாடலில் திருநெல்வேலியின் பெருமையினை "பத்தமடை பாயி...." என தொடங்கி..."இன்னும் நிறைய விஷயம் சொல்லலே..” என்ற 12 வரிகளுக்கு குரல் கொடுத்துள்ளேன். இந்தப் படம் திரைக்கு வந்து  எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அடிக்கடி இந்த திரைப்படத்தினை ராஜ் டிவியில் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.
இராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் எனது நண்பர் தம்பி இப்ராகீம் அவர்கள் இயக்கிய “புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்” என்னும் திரைப்படத்தில் பஸ் கண்டக்டராக நடித்துள்ளேன் அந்த படமும் சிறப்பாக வெளி வந்து  வெற்றி பெற்றது.
எனது இயக்கத்தில் “பொருநை சுடர்” என்ற ஆவணப் படம் வெளிவந்துள்ளது. கௌசானல் அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இந்த ஆவணப் படத்தை திருஇருதய சகோதரர்கள் தயாரித்தனர்.



கேள்வி:
உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு எது?
பதில்:
 நான் எழுதி வெளியிட்ட தினத்தந்தியின் ‘அருள் தரும் அதிசய சித்தர்’ நூலுக்காக சென்னை புத்தக கண்காட்சியில் தினத்தந்தி ஸ்டாலில் சிறப்பு விருந்தினராக அமர்ந்து வாசகர்களுக்கு கையெழுத்து  இடும் வாய்ப்பை இளைய அய்யா எனக்கு வழங்கினார்கள்.
 மறுநாள்  இந்து பதிப்பகத்தில் எனது ‘தேரிக்காட்டு ஜமீன்தார்கள்’ வரலாறு நூலுக்காக அந்த ஸ்டாலில் அமர்ந்து கையெழுத்திட்டேன். தேரிக்காட்டு ஜமீன்தார்கள் வரலாறு நூலில் உள்ள சாத்தான்குளம் ஜமீன்தார் வரலாற்றில் அன்றைய கால ஆணவக்கொலையை  திரைப்படமாக்க  சில இயக்குனர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

கேள்வி:
உங்களுடைய எதிர்கால ஆசை என்ன?. இதுவரை படைத்த படைப்புகளின் எண்ணிக்கையை குறிப்பிடவும்
பதில்:
எதிர்காலத்தில் நெல்லை தூத்துக்குடி மாவட்ட வரலாறுகளை ஒன்று விடாமல் முழுமையாக தொகுக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
  தற்போது எழுதிய நூல்கள் - 53
  தொகுத்த மலர்கள் - 28
   நாடகங்கள்   - 43
  தொடர்கள் - 42
  வாங்கிய விருதுகள் - 25
  நடித்த திரைப்படங்கள்   - 3
   இதுவரை இவர் எழுதிய படைப்புகள் 3,250



கேள்வி:
நீங்கள் எழுதிய நூல்கள் விவரங்களை பட்டியலிடுங்கள்.

பதில்:
1. வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் - சைவ சித்தாந்த நூல் பதிப்புக்கழகம் (நூலகம் ஆணை)
2. கரிசல் காட்டு கதைகள் (ஒரு சிறுகதை மட்டும்), புத்தகப் பூங்கா
3. கொன்றால் தான் விடியும் (நாவல்), காவ்யா பதிப்பகம்
4. பொருநை பூக்கள், காவ்யா பதிப்பகம்                          
5. பொதிகை மலை அற்புதங்கள், காவ்யா பதிப்பகம் (நூலகம் ஆணை- 2வது பதிப்பு )
6. தாமிரபரணி கரையினிலே, விகடன் பிரசுரம் (இரண்டாவது பதிப்பு)
7. தலைத்தாமிரபரணி (950 பக்கம்), காவ்யா பதிப்பகம், (நூலகம் ஆணை - இரண்டாவது பதிப்பு)
8. என் உயிரே விட்டுக்கொடு ( நாவல்), காவ்யா பதிப்பகம்
9.தாமிரபரணி கரையில் சித்தர்கள், சைவ சித்தாந்தநூல் பதிப்புக்கழகம் (இரண்டாவது பதிப்பு) (10 வருடம் கழித்து மீண்டும் மறுபதிவு)
10. என்கிராமத்தின்கதை, பொன்சொர்ணா பதிப்பகம்
11. நம்ம ஊரு அதிசயம், பொன் சொர்ணா பதிப்பகம் (மூவாயிரம் நூல்)
12. ஆதிச்சநல்லூர் ஆய்வுகள், காவ்யா பதிப்பகம் (10 வருடம் கழித்து மீண்டும் மறுபதிவு)
13. நெல்லை வைணவ தலங்கள், காவ்யா பதிப்பகம்
14. நெல்லை சைவக் கோயில்கள், காவ்யா பதிப்பகம்
15. சீவலப்பேரி சுடலை, காவ்யா பதிப்பகம் (நூலகம் ஆணை - இரண்டாவது பதிப்பு)
16. நெல்லை பெண் தெய்வங்கள் (ஒரு கட்டுரை மட்டும்) காவ்யா பதிப்பகம்
17. பனி மலையும் அபூர்வ கண்டமும் காவ்யா
18. நெல்லை துறைமுகங்கள், காவ்யா பதிப்பகம்
19. கண்ணாடி மாப்பிள்ளை ( சிறுகதைதொகுதி) காவ்யா
20. பாலை வனத்தில் ஒரு பசும் சோலை பொன் சொர்ணா பதிப்பகம்
21. தெற்குகள்ளிகுளம் பனிமயமாதா பொன் சொர்ணா
22. ஸ்ரீகுணவதியம்மன் அற்புதங்கள் பொன் சொர்ணா
23. ஸ்ரீபெரும்படை சாஸ்தா வரலாறு பொன் சொர்ணா பதிப்பகம்
24. தரணிபோற்றும் பரணி நதி பொன்சொர்ணா
25. சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை விகடன் (நூலகம் ஆணை, ஏழாவது பதிப்பு)(10 ஆயிரம் பிரதி)
26. தென்பாண்டிச்சீமையிலே பாகம் &1 காவ்யா
27. தென்பாண்டிச்சீமையிலே பாகம் &2 காவ்யா
28. நெல்லை ஜமீன்கள், விகடன் பிரசுரம் (நான்காவது பதிப்பு) ( 6 ஆயிரம் பிரதி)
29. நெல்லை நாட்டுப்புறக் கலைஞர்கள்  காவ்யா
30. ஸ்ரீகுணவதியம்மன் வரலாறு (தமிழ் & ஆங்கிலம்) பொன் சொர்ணா பதிப்பகம்
31. அருட்திரு லூர்து ராஜா அடிகளார் பொன் சொர்ணா பதிப்பகம்
32. குலசேகர நத்தம் கரும்புளி சாஸ்தா வரலாறு பொன் சொர்ணா பதிப்பகம்
33. செய்துங்கநல்லூர் சுந்தர பாண்டிய சாஸ்தா பொன் சொர்ணா பதிப்பகம்(2000 காப்பி)
34. தென் பாண்டிச் சீமை&சில சமுதாயகுறிப்புகள் காவ்யா பதிப்பகம் (நூலகம் ஆணை)
35. அத்ரி மலை யாத்திரை, சூரியன் பதிப்பகம் (மூன்றாவது பதிப்பு)
36. முத்தாலங்குறிச்சி காமராசுவின் நாடகங்கள் (தொகுப்பாசிரியர் பே. சுடலைமணிச் செல்வன்) காவ்யா
37. தோரணமலை யாத்திரை பொன் சொர்ணா பதிப்பகம்( இரண்டாவது பதிப்பு)
38. எனது பயணங்கள் காவ்யா பதிப்பகம்
39. நெல்லை வரலாற்று சுவடுகள் 209 காவ்யா (நூலக ஆணை)-இரண்டாவது பதிப்பு-(நூலக ஆணை)
40. குளத்தூர் ஜமீன் கதை காவ்யா பதிப்பகம்
41. சேத்தூர் ஜமீன் கதை காவ்யா பதிப்பகம்
42. நெல்லைக்கோயில்கள் காவ்யா பதிப்பகம்
43. சிங்கம்பட்டி ஜமீன் கதை -காவ்யா பதிப்பகம்
44. ஜமீன் கோயில்கள்- சூரியன் பதிப்பகம்
45 படைப்புலகில் முத்தாலங்குறிச்சி காமராசு பொன் சொர்ணா பதிப்பகம்
46 முடிச்சு மேலே முடிச்சு (நாடகம்) பொன்சொர்ணா பதிப்பகம்
47  நெல்லைக்கோயில்கள் பாகம் 2  காவ்யா பதிப்பகம்
48. நவீன தாமிரபரணி மகாத்மியம்   ( உலக நதிகள் வரலாற்றில் முதல் வீடியோ டிஜிட்டல் நூல்)  பொன்சொர்ணா( 2000 காப்பி)
49. தேரிக்காட்டு ஜமீன்தார்கள்  ( தி தமிழ் இந்து) இரண்டாவது பதிப்பு
50. அருள்தரும் அதிசய சித்தர்கள் (தினத்தந்தி)
 (இரண்டாவது பதிப்பு)
51. தென்னாட்டு ஜமீன்தார் (காவ்யா பதிப்பகம்)
52. தாமிரபரணி நதிக்கரையோரத்து அற்புதங்கள் ( காவ்யா பதிப்பகம்)
53.  முடிச்சு மேலே முடிச்சு( பொன்சொர்ணா)
54.படைப்புலகில் முத்தாலங்குறிச்சி காமராசு--அந்தோணியம்மாள் ( பொன்சொர்ணா)




கேள்வி:
இதுவரை நீங்கள் வாங்கிய விருதுகள் விவரம் கூறுங்கள்.

பதில்:
1. 2003 “சமூக சேவகர் விருது” பாரதி கலை இலக்கிய மன்றம் ஸ்ரீவைகுண்டம்.
2. 2003 “சமூக சேவகர் விருது”, சிவாஜி மன்றம் ஸ்ரீவைகுண்டம்
3. 2004 “பொருநை புதல்வன்” பட்டம், மும்பை தமிழர் பேரவை- மகராஷ்ரா மாநிலம்.
4. 9.01.2005 “தமிழ் மாமணி விருது” மாருதி வழிபாட்டு கழகம்,  கன்னியாகுமரி மாவட்டம்.
5. 13.11.2005 “நதிக்கரையோரத்து நாயகன் விருது” சரத் மன்றம், செய்துங்கநல்லூர்
6. 22.12.2010 “தமிழ்க்கலைசெல்வர்விருது” திருவாவடுதுறை ஆதினம்
7. 01.01.2011  “சிறந்த எழுத்தாளர் விருது”  பாரதி கலை இலக்கிய மன்றம்
8. 29.01.2012 “எஸ்.டி. ஆதித்தனார் விருது” தாமிரபரணி - நெல்லை
9.29.02.2012 “நாட்டுப்புறவியல் மேதை”  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கம், செய்துங்கநல்லூர்
10. “பொருநை செல்வர்” பட்டம். வழங்கியவர்  குறிஞ்சி செல்வர் எழுத்தாளர் கோதண்டம்.
11. 27.05.2012 “பதிவுச்செம்மல்” பொதிகைக் கவிஞர் மன்றம், நெல்லை
12. தென்பாண்டிச்சீமையிலே பாகம் 1 என்ற நூல் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த திருக்கோவில்கள் வளர்த்த தெய்வத்தமிழ் அனைத்துலக 11ஆவது ஆய்வு மாநாட்டில் சிறந்த படைப்பாசிரியர் விருது மற்றும் 5 ஆயிரத்திற்கான பொற்கிழியை பெற்றது. மேலும் “செந்தமிழ் வேந்தர்” என்ற பட்டத்தையும் பெற்றது. நாள்: 20.07.2013.
13. 27.04.2014 “அண்ணா விருது” காந்திமதியம்மாள் அறக்கட்டளை, சென்னை மயிலாப்பூர் சண்முகநாதன் அரங்கம்.இது போன்ற பல விருதுகள் .
14. சிறந்த சமூக நல சிந்தையாளர் 10.12.2017 இடம் - லயன்ஸ் கிளப் திருநெல்வேலி - கிரின் சிட்டி
15. அழகர் பப்ளிக் பள்ளி விருது இடம் தூத்துக்குடி  20.12.2018
16. தன்பொருநை கலைச்செல்வர் - காஞ்சிமடம், காஞ்சிபுரம்.
17.ஆதிச்சநல்லூர் நாயகன் பத்திரிக்கையாளர் சங்கம் - நாசரேத்
18. அகழாய்வு நாயகன் நூலகம்  செய்துங்கநல்லூர்.
19. சிறந்த எழுத்தாளர் - நாரதர் பிறந்தநாள் - பாளை
20. சிறந்த நாவலாசிரியர் -- தேனி நட்டாத்தி நாடார்சங்கம்
21.  சேவை விருது -  தோரண மலை - கடையம்
22. நியூஸ் 7 -2019 தமிழ் ரத்னா  சிறப்பு விருது - தமிழக முதலமைச்சர் டாக்டர். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழங்கினார்.
23. இலக்கிய  கலைச்செம்மல் விருது( வேளாக்குறிச்சி ஆதினம், காஞ்சி மடம் பெரியவர் முன்னிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜீ  நெல்லை தை பூச மண்டபத்தில் வைத்து வழங்கியது.
24. எழுத்து சித்தர் - இளசை அருணா எட்டயபுரம்


கேள்வி:
நீங்கள் தாமிரபரணியை பற்றி நிறைய ஆய்வு செய்து கொண்டிருக்கீறீர்கள். அதற்கு காரணம் என்ன?. தாமிரபரணி ஆய்வு முடிந்து விட்டதா?  அல்லது தொடர்கிறதா?

பதில்:
 நான் பிறந்த ஊர் தாமிரபரணி ஆற்றங்கரை கிராமமான முத்தாலங்குறிச்சி. நான் விவரம் தெரிந்து பார்த்து வியந்தது தாமிரபரணியை தான். அதன் வெள்ளம் என்னை பிரமிக்க வைத்தது. மார்கழிக்கு ஒரு குளிச்சி, மதியத்துக்கு ஒரு வெதுவெதுப்பு என குளிக்கும் போதே பல ஜாலங்கள் காட்டி கொண்டிருப்பாள் தாமிரபரணி. எங்கள் ஊர் தான் தாமிரபரணி ஆற்றங்கரையிலேயே அழகான ஊர் என்று நினைத்து இருந்தேன். ஆனால் நெல்லை தமிழ் முரசின் ஆசிரியர் நெல்லை வரதன் அவர்கள், "நதிக்கரையோரத்து அற்புதங்கள்" என்னும் தொடரை எழுத அனுப்பி வைத்தபோதுதான் தெரிந்தது---  ஒவ்வொரு ஊரும் அழகு என்று. களப்பணிக்கு செல்லும் போதுதான் அங்குள்ள இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய தலங்கள் பல்வேறு வரலாற்றை தன்னுள் புதைத்து வைத்திருந்தது,  தெரிய வ்ந்தது. ஐந்து வருடம் தொடர்ந்து எழுதினேன். வாரம் தோறும் புதன்கிழமை இந்த தொடர் நெல்லையில் தமிழ் முரசில் வெளி வந்தது. 
மும்பையில் இருந்து வெளிவரும் "மும்பை தமிழ் டைம்ஸ்" என்னும் நாளிதழ் ஞாயிறுதோறும் இதே தொடரை  மும்பையிலும் வெளியிட்டது.  எதிர்பாரத விதமாக இந்த தொடர்  நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே எழுதியதுவரைஉள்ள தகவல்களை தொகுத்து, காவ்யா பதிப்பகம் "தலைத்தாமிரபரணி" என்ற பெயரில் 1000 பக்கத்தில் பெரிய  நூலை வெளியிட்டது.  அதோடு மட்டுமல்லாமல், அரசுநூலக ஆணை பெற்று , இந்த நூல் தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகத்திலும் இடம் பிடித்து விட்டது.   
இந்த நூலில் பொதிகை மலையில் இருந்து மேலச்செவல் என்னும்  ஊர் வரைதான் எழுதியிருந்தேன். மீதியை இடைத்தாமிரபரணி , கடைத்தாமிரபரணி என எழுத வேண்டும் என ஆசைப்பட்டேன். அதற்கான பணியும் நடந்து வருகிறது. குறிப்பாக,  இடைத்தாமிரபரணி க்காக கோபாலசமுத்திரத்தில் இருந்து சீவலப்பேரி வரை , மும்பையில் இருந்து வெளிவரும் "வணக்கம் மும்பை" என்னும் வார இதழில் தொடராக எழுதி வருகிறேன். தூத்துக்குடி மாவட்ட  தாமிரபரணி கரை வரலாற்றை "கடைத்தாமிரபரணி" என எழுத  நான் துவங்கிய "வணக்கம் ஸ்ரீவை "என்ற வார இ பேப்பரில்  எழுதி வருகிறேன். இரண்டு வருடத்தில்  தாமிரபரணி பணியை முடித்து விடுவேன் என நம்பிக்கையோடு பணியை தொடர்ந்து வருகிறேன்.




கேள்வி:
தாமிரபரணி மகா புஷ்கரத்தில் தங்களின் பங்கு மிகப்பெரியதாக இருந்ததாமே?

பதில்:
 ஆமாம். மகாபுஷ்கரத்தினை என் வாழ்வில் மறக்கவே முடியாது. ஏன் என்றால், 144 வருடம் கழித்து இந்த புஷ்கரம் வருகிறது என ஆன்மிக  பெரியவர்கள் விழாவுக்கு தயாராகி கொண்டிருந்தார்கள். ஆனால், அரசு அனுமதி தரவில்லை. "இதற்கு முன்பு புஷ்கரம் நடைபெறவில்லை" என கூறிவந்தனர்.  இதற்கு முன்பு புஷ்கரம் நடந்தது என்பதற்கு  உதாரணம் நான் எழுதிய தலைத்தாமிரபரணி நூலில் இருந்தது. 
இந்த நூலை வைத்து தான்  அரசு கவனத்துக்கு கொண்டு சென்றார்கள்.  எனவே, இந்த நூலை எழுதிய என்னை, மகாபுஷ்கர விழாவிற்கு தலைமை தாங்கிய வேளாக்குறிச்சி ஆதின கர்த்தா அவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாராட்டினார்கள்.  என்னை அழைத்து கௌரவித்தார்கள்.
 தாமிரபரணி வரலாற்றை எழுதி கொண்டிருந்த எனக்கு சிவபெருமானே வேளாக்குறிச்சி ஆதின கர்த்தா அவர்களின் உருவத்தில் தோன்றி  என்னை ஊக்குவித்தது போலவே இருந்தது. நானும் சம்பதித்தேன். அதுவும்  மகாபுஷ்கர இறுதி நாளில் அந்த நூலை வெளியிட வேண்டும் முடியுமா? என கேட்டார்கள். நான் "முடியும்" என்று கூறினேன்.   
 அனைத்து  செலவையெல்லாம் வேளாக்குறிச்சி ஆதினக்கர்த்தாவே ஏற்றுக்கொண்டார்கள். இதுவரை வடமொழி நூலில் இருந்து மொழி பெயர்த்தை தான் எல்லோரும் "தாமிரபரணி மகாத்மியம்" என்று  நூலாக வெளியிட்டு வந்தார்கள். எனவே, நான் வித்தியாசமாக "நவீன தாமிரபரணி மகாத்மியம்" என  எனது நூலுக்கு பெயர்  வைத்தேன்.  தாமிரபரணி -நூல் மொழி மாற்றம் செய்யதவர்கள் புகைப்படத்தினை பதிவு செய்ய மாட்டார்கள். எனவே, எனது நூலில் வண்ண படங்களை பதிவு செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 
144 தீர்த்தக்கட்டங்களுக்கும் நேரில் சென்று படமெடுத்து, அதன் வரலாற்றை எழுதினேன். படமெடுக்க என்னோடு காரோட்டியாக, புகைப்பட கலைஞராக எனது சிஷ்யர் சுடலை மணிச்செல்வன்  தாமிரபரணி கரையின் மூலை முடுக்கெல்லாம் உடன் வந்தான். என்னுடைய  30 வருட தாமிரபரணி  தேடல்களை 144 கட்டுரையாக மாற்றி இந்த நூலில் இடம் பிடிக்க செய்தேன்.
 நவீனம் என்பதற்கு இணங்க என் மகன் அபிஷ் விக்னேஷ், "நீங்க 144 தீர்த்தகட்ட வரலாற்றையும் வீடியோவில் பேசுங்க. அதை க்யூ ஆர் கோடு மூலமாக  நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் இணைப்போம்" என்று கூறினான். அந்த பணியையும் ராத்திரி பகலாக நடத்தினோம். கிட்ட  தட்ட     ஐந்து     நாள்கள்    அவன்தூங்கவில்லை. இறுதியில் குறிப்பிட்ட  நேரத்தில் உலக நதிகள் வரலாற்றில் முதல் முதலாக வீடியோவுடன் கூடிய நூலை வெளியிட்டோம். 
வேலூர் பொற்கோயில் சுவாமிகள் நூலை வெளியிட, வேளாக்குறிச்சி ஆதின கர்த்தா உள்பட தமிழகத்தில் உள்ள முக்கிய ஆதினங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பேராசிரியர் கு. ஞானசம்பந்தம், "இந்த நூல் படிக்க மட்டுமல்ல பார்க்கவும்"  என வியந்து போற்றினார். மறு நாள் நடந்த விழாவில்  அமைச்சர் மா.பாண்டியராஜன்,   என்னையும் இந்த  நூலுக்கு இரவு பகல் கஷ்டப்பட்ட எனது மகன் அபிஷ்விக்னேஷ், சிஷ்யன் சுடலைமணி  செல்வன் ஆகியோரை  பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
   அதோடு மட்டுமல்லாமல்,  மகாபுஷ்கரம் நிறைவு விழாவில்
 காஞ்சி மடாதிபதி அவர்கள் முன்னிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜீ அவர்கள் எனக்கு "இலக்கிய கலைச் செம்மல்" விருதை வழங்கி என்னை கௌரவப்படுத்தினார்.
         தாமிரபரணியால் எனக்கு கிடைத்த  பெயராலும் , புகழாலும், மீண்டும் தாமிரபரணியில் ஓடத்துவங்கியிருக்கிறேன். "தாமிரபரணியில்  ஆன்மிக மாகவே எழுதுகீறீர்கள், இங்கு வரலாறு இல்லையா? "என கேட்பவர்களுக்காக  "தவழ்ந்து வரும் தாமிரபரணி" என்ற தலைப்பில்  வரலாறு பேசும்  நூல் ஒன்றும் தாயராகி கொண்டிருக்கிறது.
 தாமிரபரணி மிகப்பெரிய பொக்கிஷம்.  எழுத எழுத குறையாத அட்சய பாத்திரம்.




கேள்வி:
மேற்கு தொடர்ச்சி மலைகளில்  தொடரும் உங்கள் பயணம் ,   வித்தியாசமாக இருக்கிறதே. அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்'

பதில்:
  நான் 6 வயதாக இருக்கும் போது பார்த்து  அதிசயத்த மலை, எங்கள் ஊரின் எதிரில் இருக்கும் மணக்கரை மலை. அந்த மலையில் ஏறி மலைப்பார்வதி அம்மனை வணங்குவதை ஒவ்வொரு வருடமும்  தை மாதம் கடைசி செவ்வாய் அன்று கடை பிடித்து வந்தேன். இதற்கிடையில்  தாமிரபரணி தோன்றும் பொதிகை மலையை காணவேண்டும் என்று எனக்கு ஆசை. ஆகவே  பொதிகை மலை பயணத்தினை  துவங்கினேன். 
மூன்று நாள் பயணம். இரண்டு நாள் இரவு ,  மூன்று நாள் பகல் பொதிகை மலையில் பயணம் செய்ய வேண்டும், அட்டைக்கடி, புலி கரடி உலாவும் காடு,  ராஜநாகம் குடியிருக்கும் பகுதி, முட்டு ஏத்தம், மேகத்துக்குள் நடைபயணம் என  மிரட்டும் பயணம். இந்த பயணத்தில் அகத்தியருக்கு நாங்களே பூஜை செய்து வணங்கி வந்தோம்.  இங்கு பூஜை செய்யும் போது அனைவரும் "எங்களுக்கு இதுவேண்டும்" என்று கேட்கவில்லை. "தாமிரபரணியை வற்றாத ஜுவநதியாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்றே வேண்டி நின்றனர்.



கரடுமுரடான ஏற்றத்தில் வந்து, நடை தப்பினால் மரணம் என்ற நிலையில்  இங்கு வருவோர்கள் வேண்டி நிற்கும் இந்த தருணம்தான் என்னை மலைப்பயணம் செய்ய அறிவுருத்தியது.  பொதிகை மலை பயணத்தினை "சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை" என்ற  பெயரில் விகடன் பிரசுரத்தின் மூலம் நூலாக வெளியிட்டேன். இந்த நூல் சுமார் 7 எடிசன், 10 ஆயிரம் நூல் விற்று தீர்ந்து எனக்கு நல்லபெயரை பெற்று தந்தது-.


தொடர்ந்து, நம்பி மலை, மணிமுத்தாறு தலைஅருவி மலை பயணம், பாபநாசம் மலை பயணம்,  அத்ரிமலை , தோரணமலை,  குற்றால மலை, செண்பகாதேவி, தேனருவி,  சித்தாற்றங்கரை கரை வழியாக  சித்தருக்கு மலை உச்சியில் நடைபெறும் பூஜை, சதுரகிரி மலை என ஒவ்வொரு மலையாக ஏறி  இறங்கினேன். கம்பளி மலை,  பண்பொழி மலை, தென்மலை, கோவா, பூனா மலை எனது பயணம் தற்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 
இதனால் தொடர்ந்து,  "அத்ரி மலையாத்திரை"      (தினகரனின் சூரியன் பதிப்பகம்),"தோரண மலை யாத்திரை"(பொன்சொர்ணா பதிப்பகம்), "எனது பயணங்கள்"( காவ்யா பதிப்பகம்) என நூல் வெளிவந்து கொண்டே இருக்கிறது. தொடர்ந்து மலை பயணம் செய்ய காத்து இருக்கிறேன்.
 மலைக்கு சென்று வந்தால் சுத்தமான சுவாசம், செல்போன் நச்சரிப்பு குறைந்து,  உடலுக்கு தனி  ஊக்கமும் கிடைக்கிறது.  இதில் மற்றுமொரு விசேஷம் என்னவென்றால் நான் எழுதிய பெரும்பாலான மலைக்கு செல்வது அரிது. வனத்துறை அனுமதி இருந்தால் மட்டுமே செல்ல முடியும். எனவே ,எனது நூல் நமது பகுதியை பற்றி தெரிந்து கொள்வதற்கு அவசியமாக இருக்கிறது என்பது  எனக்கு மிகப்பெருமையாக இருக்கிறது.



கேள்வி:
 சித்தர்களை பற்றி  நூல்கள் எழுதியிருக்கீறீர்கள். சித்தர்கள் மீது உங்களுக்கு அவ்வளவு ஈடுபாடா?

பதில்:
 சித்தர்கள் என்பவர்கள் நமது முன்னோர்கள். அவர்கள் மீது ஈடுபாடாக  இருக்காமல்  வரலாறு படைக்க முடியுமா? 
"எந்த ஒரு நோய் உலகத்தின் எந்த மூலையில் வந்தாலும், அந்த நோய் தீர்க்கும் மருந்து நமது  சித்தர்கள் -ஏட்டில் இருக்கிறது" என உலகமே நம்பி இருக்கிறது. பொதிகை மலையில் சுமார் 2500 வகை  மூலிகைகள் உள்ளது. அந்த மூலிகைகளை சரியான முறையில் கலந்து நோய்தீர்க்கும் மருந்து செய்யும்  சித்த வைத்தியம் ,நமது            சித்தர்கள்      வசம்          இருக்கிறது. அது  ஓலைச்சுவடியாக எங்கேயோ புதைந்து இருக்கிறது.
  உலகத்திலேயே  முதல் முதலில் கபால ஆபரேசன் நடந்த  இடம் தோரண மலை என  கூறப்படுகிறது. அது உண்மை என்பது போலவே ,இங்கு  நோய் தீர்க்கும் 63 சுனைகள் உள்ளது. அது மட்டுமா? 18 சித்தர்களின்  முதன்மை பெற்ற சித்தர் அகத்தியபெருமானும், ரிஷிகளில் முதன்மை பெற்ற ரிஷியான அத்ரி மகரிஷியும்  வாழ்ந்தது, நமது மேற்கு    தொடர்ச்சி மலையே. 
இவர்களை தேடி அலையும்போது எத்தனையோ வித்தியாசமான தகவல்கள் கிடைக்கிறது. அவர்கள் அலைந்து திரிந்த இடத்தில் நாமும் அலைகிறோம் என நினைக்கும்போதே, எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.   அவர்களை பற்றியெல்லாம் முழுமையாக எழுத இந்த பிறவி போதாதது.   ஒவ்வொரு மலையை பற்றி எழுதும் போதும் பல்வேறு சித்தர்களை பற்றி அறிய முடிந்தது. என் வாழ்வில்  வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகளை பற்றி எழுதிய பிறகுதான் ,எழுத்து துறையில் திருப்பு முனை வந்தது. 
எனது முதல் நூலே அவரது வரலாறுதான். அந்த நூலை 75 வருடம் பராம்பரியம் மிக்க தென்னிந்திய சைவ  சித்தாந்த நூல் பதிப்பு கழகம்  வெளியிட்டது என் வாழ்வில் பேரானந்தம். அதன் பின் தாமிரபரணி கரையில் உள்ள சித்தர்களை யெல்லாம் நான் தொகுத்து  அதே பதிப்பகத்தில் "தாமிரபரணி கரை சித்தர்கள்" என நூல் எழுதினேன். தொடர்ந்து  தினகரனில் "அத்ரி மலை யாத்திரை" தொடர் எழுதும் போது சித்தர்களை பின் தொடர்ந்தே எழுதினேன். சக்தி விகடனில் "தாமிரபரணி கரையினிலே" என்ற தொடர் எழுதும் போது "சித்தர்களோடு பயணிப்போம்" என்றே  பயணம் செய்தேன். அகத்தியர், ஏரல் சேர்மன் சுவாமிகள் உள்பட பல சித்தர்கள் அந்த தொடரில் இடம் பிடித்தனர். 
 தினத்தந்தியில் "அருள் தரும் அதிசய சித்தர்" தொட்ர்  எழுதும் போது  நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில்   சுமார் 50 வருடங்களுக்கு முன்பு வரை வாழ்ந்து பல அற்புதங்களை செய்து மறைந்த சித்தர்களை பற்றி எழுதினேன்.  பட்டி தொட்டியெல்லாம் அந்த தொடர் சித்தர்களோடு என்னையும் கொண்டு சேர்த்தது. அதோடு மட்டுமல்லாமல் அந்த தொடர் நூலாக, தினத்தந்தி பதிப்பகம், முழுக்கமுழுக்க வண்ணத்தில் வெளியிட்டது. இதை சித்தர்களின் அருளாசி என்றே வைத்துக்கொள்ளலாம்.  
அமேசானில் கூட "அருள் தரும் அதிசய சித்தர்" நூல்தான் முதல் முதலில் வெளியிடப்பட்டது. அடுத்தபடியாக,   வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் நூலையும் அமேசானில் அறிமுகபடுத்தியுள்ளோம். இதுபோல சித்தர்கள்  பற்றி  எழுதும் போது  மிக சந்தோஷம் அடைந்து விடுகிறேன். மிக அதிகமான வாசகர்களையும் பெற்று விடுகிறோம்.

கேள்வி:
தென்நாட்டு  ஜமீன்தார்கள் பற்றியும்  உங்கள் தேடல் விரிந்துள்ளது. அதற்கு காரணம் என்ன?

பதில்:
    தாமிரபரணி ஆற்றங்கரைப்பற்றி எழுதும் போதுதான் சிங்கம்பட்டி ஜமீன்தாரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில், ஆடி அமாவாசை அன்று சொரிமுத்து அய்யனார் கோயிலில்  வசந்த மாளிகை சிவாஜி கணேசன்போல அவர்  அமர்ந்து இருப்பதையும், தீக்குளி இறங்கும் சாமியாடிகள் அவரிடம் வந்து ஆசி பெறுவதை  கண்டு அதிசயித்தேன். அதன்பிறகு அவரது அரண்மனை, அரசாட்சி, அருங்காட்சியகம், அவரின் நடவடிக்கை கண்டு ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றேன்.  "இந்தியாவிலே பட்டங்கட்டிய  ஜமீன்தார் இவர்தான்" என  தெரிந்து கொண்டபோது மிக சந்தோஷப்பட்டேன். தொடர்ந்து, தாமிரபரணி வரலாற்றை எழுதும்போது, ஊர்காடு ஜமீன்தார் வரலாற்றை அறிந்தேன். அங்கே,  ராணி இல்லாமல் அரண்மனையே அழிந்து கிடந்தது. எட்டயபுரம் ஜமீன்தார் வரலாற்றை படித்த போது,  அவர்கள்  தூத்துக்குடி ரயில் பாதை கொண்டு வர பாடுபட்டது,கங்கை கொண்டான் பாலம் கட்டியது,ஸ்ரீவைகுண்டம் பாலம் கட்ட பணம் கொடுத்தது, தாசில்தார் முறை கொண்டு வந்தது,குடிதண்ணீரை பாதுகாத்தது -என பல்வேறு  விசயங்களை அறிய முடிந்தது. 
எட்டயபுரத்தில் எட்டு என்ற வார்த்தையை  கூட மரியாதை நிமித்தம்  கூற தயங்குகிறார்கள். ஆக எட்டயபுரம் மன்னர் காட்டி கொடுத்தவர் அல்ல. அதையும் தாண்டி நிறைய இருக்கிறது -என ஜமீன்தார் வரலாற்றை தேட ஆரம்பித்தேன். வசந்த் தொலைகாட்சி  உரிமையாளர் வசந்த குமார் அண்ணாச்சி , "நெல்லை மண் பேசும் சரித்திரம்" என்னும் தொடரில்  என்னை பயன்படுத்தினார். 
இதற்காக ஒவ்வொரு ஜமீன்தாரை தேடிச்சென்றேன். அதையெல்லாம் நூலாக திரட்டி  விகடன் பிரசுரத்தில் "நெல்லை ஜமீன்கள்" என்னும் ஒரு நூலை எழுதினேன். அது நல்ல வரவேற்பை  பெற்றது.  அதில் 10 ஜமீன்தார்கள் வரலாறு இடம் பெற்றது. 
காவ்யா பதிப்பக வெளியிடு   வள்ளியூரில் நடந்த போது  சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் அய்யா, "தேவர் ,நாயக்கர் சமுதாயத்தில் மட்டும் ஜமீன்தார்கள் இல்லை. பிள்ளைமார், நாடார், பறையர்  சமுதாயத்திலும் ஜமீன்தார்கள் உள்ளனர் . அதை தேடி எழுது" என எனக்கு சில குறிப்புகளை தந்தார். அதன்படி  நட்டாத்தி நாடார் ஜமீன்தாரையும், சாத்தான்குளம்  பறையர் ஜமீன்தாரையும் சேர்த்து "தேரிக்காட்டு ஜமீன்தார்கள்" என பெயர் சூட்டி, தி இந்து தமிழ் திசை பதிப்பகத்தில் ஒரு நூல் வெளியிட்டேன். அதுவும்  வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கோவில் பட்டியை சுற்றி உள்ள இளையரசனேந்தல் ஜமீன்தாரையும், குருவி குளம் ஜமீன்தாரையும் சேர்த்து "கரிசல் காட்டு ஜமீன்தார்கள்" என்ற பெயரில் எழுதி வெளியிட முயற்சி செய்து வருகிறேன்.
     இதற்கிடையில்  தினகரனில் இருந்து வெளிவரும் ஆன்மிக பலனில் "ஜமீன் கோயில்கள்" என்ற ஒரு தொடரை எழுதி அந்த தொடர் சூரியன் பதிப்பகம்  மூலமாக நூலாக மாறியது.  இதற்கு  தினகரன்  ஆன்மிக  ஆசிரியர் பிரபு சங்க்ர் அவர்களும், துணை ஆசிரியர் கிருஷ்ணா அவர்களும்  மிக உதவியாக இருந்தார்கள்.
     மும்பையில் இருந்து வெளிவரும் வணக்கம் மும்பை என்னும் வார இதழின் ஆசிரியர் ஜெயஆசிர்  ஜமீன்தார்களை பற்றி எங்களுக்கும் எழுதுங்கள் என கேட்டுக்கொண்டார். அதன்படி,"மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்" என ஒரு தொடரை எழுதினேன். அந்த தொடரும் ஜமீன்தார் தேடலுக்கு மிக  முக்கிய காரணமாக அமைந்தது.
    மொத்தத்தில் இதுவரை 20 ஜமீன்தார்கள் வராற்றை தொகுத்து விட்டேன்.  அனைத்து  ஜமீன்தார்கள் வரலாறும் ஒரே நூலில் கிடைக்கவேண்டும் என வாசகர்கள் ஆசைப்பட்ட காரணத்தினால்  18 ஜமீன்தார்களை  மட்டும் தொகுத்து "தென்னாட்டு ஜமீன்கள்" என்ற தலைப்பில் 1000 பக்கத்தில் ஒரு நூலை வெளியிட்டுள்ளேன்.  ஜமீன்தார்கள் ஆய்வு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.




 கேள்வி:
 ஆதிச்சநல்லூரில்  அருங்காட்சியகம் அமைக்கவும், மீண்டும் அகழாய்வு நடைபெறவும். நீங்கள் மதுரை  ஐகோர்டில் தொடர்ந்த வழக்குதான் காரணம் என்கிறார்களே . அதைப்பற்றி கூறுங்களேன்.

பதில்:
ஆதிச்சநல்லூர் தாமிரபரணிக்கரை நாகரீகம்.   சிந்து  சமவெளி நாகரீகத்துக்கு முந்தைய நாகரீகம். இந்த நாகரீகம் ஏனோ  உலக அரங்கில் பெரிய அளவில் பேசப்படவில்லை.
 1876 ல்  ஜெர்மன் நாட்டுக்காரர் ஜாகோர் , ஆதிச்சநல்லூரில் தோண்டி நிறைய பொருள்களை கொண்டு சென்று விட்டார். இதுதான் இந்தியாவில் முதல் முதலில் நடந்த அகழாய்வு.  அதன்பிறகு கால்டுவெல், லூயிஸ் என   பல அறிஞர்கள் ஆய்வு  செய்தனர். ஆனால், ஆதிச்சநல்லூர் குறித்து ஆய்வறிக்கை முழுமையாக வரவில்லை.  1902ல் அலெக்ஸாண்டர் இரியா, நமது இந்திய தொல்லியல் துறை மூலமாக  தொல்லியல் ஆய்வு நடத்தியதில் பல பொருள்களை எடுத்து பட்டியலிட்டார்.
 இதில் இரும்பு, தங்கம், வெண்கலம், முதுமக்கள் தாழிகள் என  நூற்றுக்கணக்கான பொருள்கள் கிடைத்தது. ஆனாலும், அறிக்கை முழுமையாக  வெளிவரவில்லை.   1920 ல் சிந்து சமவெளியை ஆய்வு செய்த வங்க தேசத்து அறிஞர் பானார்ஜி , சிந்து சமவெளி நாகரீகத்துக்கு பழமையானது ஆதிச்சநல்லூர் நாகரீகம் என்கிறார்.
 ஆனாலும், ஆதிச்சநல்லூர்குறித்து யாரும் பெரிய அளவில் பேசவில்லை. இதற்கிடையில் 2004ல் நமது இந்திய தொல்லியல் துறை, தியாக சத்தியமூர்த்தி தலைமையில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.  அந்த சமயத்தில் நான் அந்த பகுதியில் தினகரன் பகுதி நேர நிருபராக  செய்தி சேகரிக்க சென்றேன். "இப்போது எதுவும் கூற இயலாது . சீக்கிரம் ஆய்வறிக்கை   வெளியிடுவோம்" என கூறினர் தொல்லியல் துறையினர். ஆனால், அதன் ஆய்வறிக்கை வரவேயில்லை.
இந்த சமயத்தில்  2010 ல் நான்  இப்பகுதியில் கிடைத்த  தகவலை வைத்து என் குழந்தைகளிடம் பேசுவது போல "ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்" என்ற ஒரு நூலை எழுதினேன். அந்த நூலும் விற்று தீர்ந்து விட்டது. ஆனாலும், அறிக்கை வரவில்லை. இதற்கிடையில் தினத்தந்தியில்  அமுதன் அய்யா ஆதிச்சநல்லூரை பற்றி தொடர் எழுத ஆதிச்சநல்லூர் வந்தார்கள். அவர்களோடு தினத்தந்தி இதழ்களில் பொறுப்பாசிரியர் ஆரிப் அவர்களும், பேராசிரியர் நெல்லை கவிநேசனும் வந்திருந்தனர். அவர்களுக்கு முதுமுக்கள் தாழிக்குள் நானே அமர்ந்துவிளக்கினேன்.ஆதிச்சநல்லூரை சுற்றி காட்டினேன். அய்யா அமுதன் அவர்கள் எழுதிய தொடரில்  எனது படத்தினை வெளியிட்டு, ஆதிச்சநல்லூர் புகழ் பாடிய பெருமக்கள் என தலைப்பிட்டு கட்டுரை வெளியிட்டிருந்தார்.
 அதுபோல ஆதிச்சநல்லூருக்கு யார் வந்தாலும் கூட்டி கொண்டு    காட்டுவது என் வாடிக்கையாக போய் விட்டது.  இதனால் எரிச்சலடைந்த மத்திய தொல்லியல் துறையினர், நான் முதுமக்கள் தாழிக்குள் இறங்கி காட்டும் அந்த தாழியை ஜே.சி.பி இயந்திரத்தினை கொண்டு வந்து மூடி வைத்தார்கள்.  இதனால் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் இருந்த ஒரு இடமும் மூடப்பட்டது. 
தூத்துக்குடி மாவட்டம் 25 வது ஆண்டு விழாவையொட்டி மாவட்ட ஆட்சி தலைவர் ஆஷிஸ் குமார் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தினார். அதில்  ஆதிச்சநல்லூர் பரம்பு அருகில் உள்ள புளியங்குளத்தில் முதுமக்கள் தாழி தகவல் மையம் கட்டி வைத்தார்கள். அதுவும்  பாழடைந்து விட்டது. கருங்குளம் ஒன்றிய அலுவலகம் மூலம் இதில் படக்காட்சி அமைக்கலாம் என நான் போராடி பார்த்தேன்.
 ஆனாலும் வெற்றி கிடைக்கவில்லை. ஆரம்ப காலத்தில் நண்பர் வழக்கறிஞர் பாரதி முருகன், பேரூர் அன்பழகன், தாமிரபரணி நாயகன் நயினார் குலசேகரன் ஆகியோர் கொண்ட குழுவினர்  பல தடவை மாவட்ட ஆட்சி தலைவரிடம் நேரில் சென்று மனு கொடுத்து வந்தனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை.   எனவே,எனது  நண்பர்  மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி மூலமாக   ஆதிச்சநல்லூரி ல் 2004 ல்  நடந்த அகழாய்வு அறிக்கை வேண்டும். மீண்டும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு அறிக்கை தரவேண்டும், இங்கேஅருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தோம்.
  இந்த வழக்கின் படி  15 வருடத்துக்கு பிறகு, 2004 ல் எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி புளோரிடா ஆய்வகத்துக்கு அனுப்ப பட்டு, இந்த முதுமக்கள் தாழி 2900 வருடங்களுக்கு பழமையானது என நிருபிக்கப்பட்டுள்ளது. இது கீழடியை விட பழமையானது.  தொல்லியல் துறையில் நமது வழக்கின் அடிப்படையில்
 சமஸ்கிருதம் படித்தவர்களுக்குத்தான்  அரசு வேலை என்று இருந்த அரசு ஆணையை திருத்த   நீதி அரசர்கள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் உத்தரவிட்டனர். ஆகவே தொல்லியல் துறையில் "தமிழ் படித்தாலே வேலை" என ஆணையை அரசு  பிறப்பித்தது.     அதோடு மடடுமல்லாமல், மாநில அரசு  ஆதிச்சநல்லூரில் அடுத்த கட்ட அகழாய்வு செய்கிறோம். என முன் வந்தது. அதற்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என வழக்கு தொடுத்தோம். அவர்கள் சம்மதிக்க தற்போது ஆதிச்சநல்லூருக்கு அகழாய்வு செய்ய தமிழக அரசு தொல்லியல் துறையினர் வந்து விட்டனர்.  அதுபோலவே, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில்  நிறுவப்படும் என 2020 பட்ஜெட் கூட்ட தொடரில்அறிவித்துள்ளார்.

                ஆனால்,  2004 ல் உள்ள அகழாய்வு அறிக்கை மட்டும் வரவில்லை. அதற்கான ஏற்பாடுகளை முழு மூச்சாக தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மா.பாண்டிய ராஜன் செய்து வருகிறார். விரைவில் அறிக்கையை முதல்வர் டாக்டர். எடப்பாடியார்  வெளியிடுவார்  என  தெரிவித்துள்ளார். 
அதுபோலவே,  விரைவில் அறிக்கை வந்து விடும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.  இந்த சம்பவங்களை எல்லாம் தொகுத்து ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/17 என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி, அந்த நூல் "தி தமிழ் திசை" ( இந்து ) பதிப்பகம் மூலமாக வெளிவர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
  அதோடு மட்டுமல்லாமல், சிவகளையில் ஆய்வு செய்ய வேண்டும், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள தொல்லியல்  இடங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்த வழக்கிற்கு தமிழக அரசு செவி சாய்த்தது. சிவகளை மற்றும் தாமிரபரணி கரையில் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்து , அந்த பணியை துவக்கியும் வைத்து விட்டனர். எனவே,  தமிழக அரசுக்கும்,  இந்திய அரசுக்கும் நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இதற்காக சிறப்பு ஏற்பாடு செய்த அமைச்சர் ம.பாண்டியராஜன் மற்றும் தொல்லியல் இயக்குனர் உதய சந்திரனையும்  தமிழக மக்கள் என்றுமே மறக்க மாட்டார்கள்.
     குறிப்பாக, கீழடியில் அகழாய்வு செய்து குறிப்பிட்ட காலத்தில் அறிக்கையை  24 மொழிகளில்  வெளியிட்டு சாதனை புரிந்தவர் நமது அமைச்சர் ம.பாண்டியராஜன் அவர்கள். எனவே, ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையும் 144 வருடம் கழித்து உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் வெளிவரும் என நம்பிக்கையுடன் உள்ளோம்.
        மேலும், வழக்கறிஞர் டாக்டர் அழகு மணி அவர்கள் கூட்டணியோடு  பல பொது நல வழக்கை நாம் மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். அதில் முக்கியமானது தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள படித்துறை, மண்டபத்தினை சீரமைக்க வேண்டும், தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்பை தடுக்க வேண்டும். என்ற வழக்கு, அந்த வழக்கும் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. 
மேலும் உலக புகழ் பெற்ற நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள சிற்ப கலையை உலகிற்கு  உணர்த்த, அவ்விடத்தினை சுற்றுலா தலமாக மேன்மை படுத்த வேண்டும். சிற்பங்களைப்பற்றி மக்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விளக்கி சொல்ல கைடுகள் பணி அமர்த்த வேண்டும்  என  மற்றொரு வழக்கையும் தாக்கல் செய்துள்ளோம்.
  பழமையை காப்பாற்ற, நீதி மன்றம் மூலமாக  போராடி வருவது என் வாழ்க்கையில் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
ஆதிச்சநல்லூர் வழக்கு என் வாழ்வில் மட்டுமல்ல தமிழர்கள் வாழ்விலும் ஒரு மைல்கல்.




கேள்வி:
53 நூல்கள் என்பது சாதரண காரியமல்ல. அதுவும் மிகப்பெரிய பதிப்பகங்கள் உங்கள் நூலை வெளியிட்டுள்ளது.  இது எல்லாமே ஆச்சரியமாகவே உள்ளது.  இதற்கு காரணம் உங்கள்  உழைப்பு என்று  தெரிகிறது. ஆனாலும் அது எப்படி சாத்தியமானது?என்று கூறுங்களேன்.

பதில்:
நான் வல்லநாட்டு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் வரலாற்று தொடரை தமிழ் முரசு இதழில் எழுதி முடித்திருந்த போது,  எங்கள் ஊரில் உள்ள திருவாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் நல்லபெருமாள் அவர்களை பார்க்க சென்று இருந்தேன். அவர், "இதை புத்தகமாக்கலாம் நான் உதவி செய்கிறேன்" என்றார். எனக்கு  ஈடுபாடு இல்லை .அவர் ஒருவரிடம் போன் செய்ர். அப்போது எதிர்முனையில் பேசியவர். "திருச்செந்தூர் கோயிலுக்கு வந்திருக்கிறோம். சென்னை செல்லும் வழியில் உங்கள் ஊருக்கு வருகிறேன்" என்றார். அதுபோலவே வந்தார். அவர்தான் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகத்தின் இயக்குனர் திரு. சுப்பையா அவர்கள். எனது நூலை வாங்கி சென்றவர் உடனே  அதை நூலாக்கி விட்டார்.
    என் முதல் நூலை  கையில் கண்டவுடன் சந்தோஷம்  என்னால் தாங்க முடியவில்லை. முதல் குட்டே பெரிய பராம்பரியம் மிக்க  பதிப்பகத்தின் குட்டு. இதை நான்  என் வாழ்வில் மறக்கவே முடியாது. அதோடு மட்டுமல்லாமல் எனது முதல் -நூலே தமிழக அரசு நூலக ஆணை பெற்று, தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகத்திலும் இடம்பெற்றது.   எட்டயாபுரத்தினை சேர்ந்த அய்யா இளசை அருணா அவர்கள் "கரிசல் காட்டு கதைகள்" என்னும் சிறுகதை தொகுதியை புத்தக பூங்கா பதிப்பகம் மூலம்  நவம்பர் 2004  இல் வெளியிட்டார். அதில் எனது "புதுப்பட்டி கண்ணம்மா" என்ற சிறுகதை வெளியானது. அதுவும் மிக சந்தோஷமாக இருந்தது.
 இதற்கிடையில் எனது  மூன்று புத்தகத்தினை ( பொருநை பூக்கள், பொதிகை மலை அற்புதங்கள்,  கொன்றால் தான் முடியும்) எழுதி தயார் செய்து,  அட்டை படம் எல்லாம் பிரிண்ட் அடித்து  வைத்திருந்தேன். ஆனால், வெளியிட பொருள் வசதி இல்லை. இதற்கிடையில்,நெல்லையில் மிக பிரபலமான எழுத்தாளரும், காவ்யா சண்முகசுந்தரம் அவர்களின் நண்பருமான மறைந்த  முல்லை முருகன் அய்யா, என்னை மீண்டும் காவ்யா சண்முகசுந்தரத்திடம் அறிமுகம் செய்தார். என் களப்பணி குறித்து விளக்கினார். அதன் பிறகு சண்முகசுந்தரம் அய்யாவுக்கு என் மீது தனி பற்று ஏற்பட்டது.
 சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள காவ்யா பதிப்பக உரிமையாளர் பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் அவர்களை சந்தித்தேன். என்னுடன்  எங்களை ஊரைச் சேர்ந்த அண்ணன், சினிமா நடிகர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி அவர்களும் வந்திருந்தார். அப்போது அய்யா, "புது ஆசிரியர் புத்தகம் விக்குமோ விக்காதோ தெரியாது, ஒவ்வொரு புத்தகத்திலும் 100 புத்தகம் நீங்கள் வாங்கி கொள்வீர்களா?" என அண்ணனிடம் கேட்டார். மறு நிமிடமே அதற்குரிய பணத்தினை அண்ணன் கஸ்ஸாலி கொடுத்து விட்டார். அதோடு மட்டுமல்லாமல், அந்த நூல்கள் வெளியீட்டு விழாவை செய்துங்கநல்லூரில் வைத்து  நடத்தினோம்.  அதில் சினிமா தயாரிப்பாளர்கள், என் அன்பு சகோதரி ராணி வெங்கடேசன் எம்.எல்.ஏ, வானொலி நிகழ்ச்சி பொறுப்பாளர் ஜோதி மணி இளங்கோவன் உள்பட பலரை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தினோம். அதற்குரிய செலவுகளையும் அண்ணன் ஏற்றுக்கொண்டார்.  
அதன்பிறகு, காவ்யா பதிப்பகம் எனக்கு சுமார் 35 நூல்களை வெளியிட்டது. வருடந்தோறும்  சண்முகசுந்தரம் அய்யாவின் தந்தை கால்கரை சுடலை முத்து தேவர் நினைவு நாளில்  எனது புத்தகம் கண்டிப்பாக வெளியிடப்படும்.  அந்த விழாக்களில்  விருது பெற்ற எழுத்தாளர்கள் தி.க.சி. பேராசிரியர் ச.வே.சு, பொன்னீலன் .  சிங்கம் பட்டி ஜமீன்தார்,  உள்பட பல்வேறு  பிரபலங்கள் என் நூலை வெளியிடும் பாக்கியத்தினை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.
   எனக்காக முதல் முதலில் முதலீடு செய்த அண்ணன் ஏ.வி.ஏ கஸ்ஸாலி அவர்களை மறக்கவே முடியாது.  தொடர்ந்து என்னை  தனது குடும்ப  உறுப்பினர்களின் ஒருவராகவே மதித்து வருடந்தோறும் என் நூலை வெளியிடும் காவ்யாசண்முசுந்தரம் அவர்களையும் என் வாழ்வில் மறக்கவே முடியாது. என்னுடைய நூலான, "பொதிகைமலை  அற்புதங்கள்",  "சீவலப்பேரி சுடலை", "தலைத்தாமிரபரணி",  "நெல்லை வரலாற்று சுவடுகள்",  "தென்பாண்டிச்சீமை சில சமுதாய குறிப்புகள்",  "தென்பாண்டிச்சீமையும் சமயங்களும்" ஆகிய நூல்கள்  தமிழக அரசு ஆணை பெற்ற நூலாக அனைத்து நூலகத்திலும்  உள்ளது.   அதோடு மட்டுமல்லாமல் அனைத்து தமிழக பல்கலைகழகங்கள், கல்லூரிகள், வெளிநாட்டில் இயங்கும் தமிழ் இலக்கிய மன்றங்களுக்கு எனது  நூலை கொண்டு சென்று அறிமுக படுத்தியர் சண்முக சுந்தரம் அய்யா தான்.
     மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக  தமிழ்துறை மேனாள் தலைவர்கள் தோ.பரமசிவன், அழகேசன், பசும்பொன் தேவர் கல்லூரி தமிழ் துறைதலைவர் ஹரிஹரன், சதக்கப்துல்லா அப்பா கல்லூரி தமிழ் துறை தலைவர் மகாதேவன், தெட்சணமாறா நாடார்  கல்லூரி தமிழ் துறைத் தலைவர் நிர்மலா, கிரிஜா, உறுப்பு கல்லூரி முதல்வர் வேலம்மமாள் உள்பட பல்வேறு எண்ணற்ற பேராசிரியர்கள் பழக்கம் ஏற்பட்டது.  இது என் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
    விகடன் பிரசுரத்தில் என்னை அறிமுக படுத்தியவர் மும்பை தமிழ் டைம்ஸ் துணை ஆசிரியர் முகிலன் அவர்கள். இவர் என்னை விகடன்  பதிப்பக பொறுப்பாசிரியர் பொன்சி அவர்களிடம் அறிமுக படுத்தினார்.   அவர் என்னை செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களிடம் அறிமுகம் செய்தார். அதன் மூலமாக "தாமிரபரணி கரையினிலே" என்ற அருமையான நூலும்,  சக்தி விகடனில்  தாமிரபரணி கரையினிலே என்ற தலைப்பில் ஒரு தொடரும் வெளி வந்தது. தொடர்ந்து  பொன்சி அவர்கள்  என் பொதிகைமலை  பயணத்தினை,  "சித்தர்களில்  சொர்க்கபுரி பொதிகை மலை" என பெயர் வைத்து  பிரமாதமாக  எடிட்டிங்  செய்து  அடுத்த நூலை வெளிக்கொண்டு வந்தார். அந்த நூல்தான் 10 ஆயிரம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. 
அதன்பின் , விகடன் பிரசுர பொறுப்பாசிரியர் அன்பழகன் அவர்கள் என்னுடைய "நெல்லை  ஜமீன்கள், சமஸ்தானமும், சரிவுகளும்" என்ற நூலை வெளியிட்டார்கள்.  விகடன் பிரசுரம நூல்கள் நூலக ஆணை பெற்றது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகத்திலும் இந்த நூல்  உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் விகடன் பிரசுரத்துடன் என்னுடைய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 
சக்தி விகடனில் அதன் ஆசிரியர் தெய்வ நாயகம் மூலமாக தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து வருகிறது. தென் பொதிகை திருத்தலங்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத  வாய்ப்பும் தந்துள்ளார்கள்.
      தினகரனில் நான் ஆரம்ப காலத்தில் இருந்தே பகுதி நேர நிருபர். கே.பி.கே அய்யா காலத்தில் இருந்து, அவரது மகன் குமரன் அய்யா பொறுப்புக்கு வரும்போதும் நான் இயங்கி வருகிறேன். நெல்லையில் மட்டும் தெரியும் வண்ணம் என்னுடைய எழுத்துப்பணி ஆரம்ப காலகட்டத்தில்  இருந்தது.  
 தினகரன் ஆசிரியர் இக்பால், தமிழ்முரசு ஆசிரியர் நெல்லை வரதன், பேராசிரியர் கவிநேசன், மேலாளர் பொன்பாண்டியன் அவர்கள் ஆதரவோடு பயணித்தேன். தினகரன் நிர்வாகம் சன் நெட்வொர்க் கலா நிதி மாறன் அவர்கள் தலைமையில் இயங்க ஆரம்பித்தது.  அந்த சமயத்தில்  நெல்லை ஆசிரியராக இருந்த மாயாவரதன், முத்துபாண்டியன் அவர்கள் தலைமையில் சென்னை அலுவலக தொடர்பு எனக்கு கிடைத்தது. 
ஆன்மிக ஆசிரியர் பிரபு சங்கர், துணை ஆசிரியர் கிருஷ்ணா (பாலகுமாரன் அவர்களின் சிஷ்யர்) ஆகியோர் வழிகாட்டுதலில் பேரில் சென்னை தினகரன் ஆன்மிக மலரில் எழுத ஆரம்பித்தேன். தினகரன் ஆன்மிக மலரில் எழுதிய அத்ரி மலை யாத்திரை தொடர்  , தினகரன் சூரியன் பதிப்பகம் மூலமாக நூலாக மாறியது.  அதற்கு  நிர்வாக இயக்குனர்  ஆர்.எம்.ஆர், குங்குமம் ஆசிரியர் முருகன்,  வெள்ளி மலர் ஆசிரியர் கே.என்.சிவராமன் ஆகியோர் உதவியாக இருந்தார். இதனால், சூரியன் பதிப்பகத்தில் இரண்டு நூல் வெளி  வந்தது. அவை அத்ரி மலை யாத்திரை,  ஜமீன்கோயில்கள்  என்பவையாகும்.
 தி இந்து தமிழ் திசை பதிப்பகத்தில் ஆசிரியர் ராம்குமார், விற்பனை மேலாளர்  இன்பராஜ் ஆகியோர் விகடனில்  பணியாற்றும் போதே என்  இனிய நண்பர்களாவார்கள். அவர்களிடம் நான் "தேரிக்காட்டு ஜமீன்தார்கள்" என்றவொரு நூலை எழுதியிருக்கிறேன் என்று கூறியவுடன் அவர்கள் அதை  மிகச்சிறப்பாக வெளியிட்டார்கள். அந்த நூலை தொடர்ந்து  ஆதிச்சநல்லூர் வழக்கு எண்13096/17   என்ற வொரு நூலை  தி இந்து தமிழ் திசையில் எழுதியுள்ளேன்.  அந்த நூலும்  விரைவில் வெளி வரவுள்ளது.

  என்வாழ்வில் தினத்தந்தி இதழில் எழுத வாய்ப்பு கிடைத்தது  மற்றுமொரு மைல் கல்லாகும்.. ஏன் என்றால் பிரபலமான அனைத்து பத்திரிக்கையிலும்  எழுதி விட்டேன். ஆனால்  நான் பிறந்த கிராமத்தில் என்னை எழுத்தாளராக  யாருக்குமே தெரியவில்லை.  பட்டி தொட்டிக்கு என் எழுத்து போய் சேரவில்லை.  தினத்தந்தியில் எழுதிய பிறகே என் கிராமத்தில் நான் எழுத்தாளன் என தெரிய ஆரம்பித்தேன். இதற்காக 30 வருடங்கள் காத்து  இருந்தேன். 
 இளைய அய்யா எனக்கு தினத்தந்தியில் வாய்ப்பை நல்கினார்கள்.  இதன் பயனாக நான் தினத்தந்தியில் தொடர் எழுதி, அந்த தொடர் "அருள் தரும் அதிசய சித்தர்" என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. முழுக்க முழுக்க வண்ணத்தில் வந்த நூல். சென்னை புத்தக கண்காட்சியில் (2019) பாராட்டு பெற்று தந்த நூல். சென்னை மேலாளர் சதீஷ்குமார் என்னை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தொடர்ந்து  தினத்தந்தி யில் எனக்கு தொடர்ந்து வாய்ப்பு தரும் இளைய அய்யாவுக்கு நன்றி.  பொறுப்பாசிரியர் முகம்மது ஆரிப் அவர்களுக்கும் , தினத்தந்தி பதிப்பக மேலாளர் எஸ். முத்துவிநாயகம் சுப்பிரமணியன் அவர்களும் , ஆன்மிக உதவி ஆசிரியர்  ஜெயவேல் அவர்களுக்கும் , ஞாயிறு மலர் உதவி ஆசிரியர்  பால்சுயம்பு அவர்களுக்கும், முழு பக்க  உதவி ஆசிரியர் ராமசுவாமி அவர்களுக்கும் , தினத்தந்தியில் ஒவ்வொரு பிரிவிலும் எனக்கு வாய்ப்பு தரும் தினத்தந்தி ஆசிரியர் குழுவையும் மறக்கஇயலாது.
          மாலைமலரில்  என்னை கட்டுரை எழுத வைத்து அழகு  பார்த்த மாலைமலர்  முதன்மை நிர்வாக அதிகாரி ரவீந்திரன்  பாராட்டுக்குரியவர்.. மாலை நேரத்தில் தமிழ் நாடு மூலம் என்னை பிரபலபடுத்தியது மாலை மலர் தான். மாலை மலர் இணை ஆசிரியர் நண்பர் செந்தில் குமார் , ராணி ஆசிரியர் ராமகிருஷ்ணன், கோகுலம் கதிர் வசந்தகுமார் உள்பட  எனக்கு உதவிடும் அனைவரையும் நினைத்துப்பார்க்கிறேன்.
 இதற்கிடையில் நான் பொன்சொர்ணா பதிப்பகம் தொடங்கியுள்ளேன். அந்த பதிப்பகத்திற்கு எனது மகன் அபிஷ்விக்னேஷ் பதிப்பாசிரியராக உள்ளார். பொன்சொர்ணா பதிப்பகத்திலும் பல நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளோம். தற்போது அமேசான்   மூலமாக உலக தமிழர்கள் அனைவரும்  எனது நூலை படிக்க அபிஷ்விக்னேஷ்  ஏற்பாடு செய்து வருகிறார்.



 எனது மகன் அபிஷ்விக்னேஷ்  நடத்தும்  மீடியா கிருக்கன் என்னும் யூ டியூப் சாணலிலும், எனது சிஷ்யன் சுடலைமணி செல்வன் நடத்தும் தூத்துக்குடி முத்துக்கள் யூ டியூப் சாணலிலும் என்னுடைய  படைப்புகளை  வெளியிட்டு வருகிறேன். எனது நூல்கள் பற்றி தெரிந்து கொள்ள muthalankurichikamarasu.com என்ற ஒரு வெப் சைட் நடத்தி வருகிறேன். தாமிரபரணி  எழுத்து பணியை  முடிக்க   வணக்கம் ஸ்ரீவை என்ற வார இதழில் சிஷ்யர் சுடலைமணி செல்வன் உதவியுடன் செயல் பட்டு வருகிறேன். 



கேள்வி:
முதலமைச்சர் கரங்களினால் நியூஸ் 7  தமிழ்  தொலைக்காட்சி சார்பாக விருது பெற்று உள்ளீர்கள் அதை பற்றி கூறுங்கள்.
பதில்:
     நான்  சிறு வயதாக இருக்கும் போது, செய்துங்கநல்லூரில் வைத்து முதல்வர் பெருந்தலைவர் காமராஜரையும், நெல்லை ரயில் நிலையத்தில் வைத்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரையும்    நேரில் சந்தித்து  இருக்கிறேன்.  தினகரன் நிருபராக செய்துங்கநல்லூரில்  முதல்வர் கலைஞரையும், முதல்வர் .செல்வி. ஜெயலலிதா அவர்களையும  சந்தித்து, அவர்கள் பேச்சை பத்திரிக்கையில் பதிவிடடு இருக்கிறேன். ஆனால் முதல்வர் கரங்களால் விருது பெறுவேன் என கனவிலும் நினைக்கவே இல்லை.
 நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி 2019 தமிழ் ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் வைத்து 22.10.2019 அன்று நடந்தது. எனக்கும் நடிகர் கிரேஸி மோகன் அவர்களுக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டது. 



மேடையில் என்னை அழைக்கும் போது,  "ஆதிச்சநல்லூர் கதையை  அகிலத்துக்குச் சொல்லும் ஆதித்தமிழன். தாமிரபரணி கரை நாகரிகமே தமிழர் நாகரிகம் என்று தடம் பதிக்கிறார் இவர்.  ஆதிச்சநல்லூர் ஆய்வை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்றவர். முதுமக்கள் தாழிகள் மூலம் மூத்தோர் வரலாறு படைக்கும் எழுத்தாளர், ஆய்வாளர் திரு முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களுக்கு சிறப்பு விருது வழங்குவதில் பெருமை கொள்கிறது நியூஸ் 7 தமிழ்"  என்று  அறிவிக்கும் போதே மேடையில்  என்னுடைய படக்காட்சிகள் காட்டப்பட்டது. அதன் பின் எனக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி , தமிழ் ரத்னா சிறப்பு விருதும் பட்டயமும் தந்து பெருமைப்படுத்தினார்கள்.  தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் கடம்பூர் ராஜ் எனக்குப் பொன்னாடை போர்த்த, ஆதிச்சநல்லூர் மீது தீராத காதல் கொண்ட அமைச்சர் பாண்டியராஜன் எனக்குப் பட்டையத்தை வழங்கினார். முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி பழனிச்சாமி எனக்கு தமிழ் ரத்னா சிறப்பு விருதை வழங்கினார். இந்த  நிகழ்ச்சி என் வாழ்நாளில் மறக்க முடியாத  நிகழ்ச்சியாகும்.

     தமிழகத்தில் தென்கோடியில் தாமிரபரணி கரையில் பணியாற்றி கொண்டிருந்த என்னை அடையாளம் காட்டிய நியூஸ் 7 தமிழ்தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர்  சுப்பிரமணியன்  அவர்களுக்கும்,  தலைமை செய்தியாளர் கோசல்ராம் அவர்களுக்கும்,  உள்ளீட்டு செய்தி பிரிவு ஆசிரியர்  தியாக செம்மல் அவர்களுக்கும். , நிகழ்ச்சி தயாரிப்பாளர்  சண்முகம்,  செய்தி வாசிப்பாளர் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் ,  தென்மண்டல செய்தியாளர் சுடலை குமார் அவர்களுக்கும்  என்னை தேர்ந்தெடுத்த கமிட்டி உறுப்பினர்கள் ( காவல் துறை அதிகாரி ஜாங்கிட்,  பட்டி மன்ற பேச்சாளர் ராஜா, திருமதி ஹேமலதா பாண்டிய ராஜன் உள்பட பலர்) உதவிய  அனைத்து நல் உள்ளங்களுக்கும் நான் நன்றி கடன்பட்டவன்.

கேள்வி.
உங்கள் குடும்பத்தினை பற்றி கூறுங்களேன்.

பதில்:
 என் மனைவி பொன்சிவகாமி. எங்களுககு 1996 ல் திருமணம் நடந்தது.  நான் ஆன்மிக எழுத்தாளராக  உருவாக காரணமானவர்.  என் தாய் படத்துக்கு முன்பு நின்று சிலுவை போட்டு விட்டே எனது அன்றாட வாழ்க்கையை ஆரம்பிப்பேன். என் குல தெய்வம் பத்ரகாளியம்மன், பெருமாள் சாமி, கள்ளவாண்ட சுவாமி,  முனிய சாமி கொடைக்கு செல்வேன். தவிர அவர்கள் வரலாறு எனக்கு தெரியாது. குடும்பத்தோடு ஜாலியாக இருப்பது தான் கோயில் கொடைவிழாவில் முக்கிய அங்கம். ஆனால், என் மனைவி வந்த பிறகு என்னை சிவன், விஷ்ணு, முருகன், பிள்ளையார் கோயில்களுக்கு அழைத்து சென்றார். அதோடு மட்டுமல்லாமல் கடவுளை வணங்குவது எப்படி என சொல்லித்தருவார். அதன் பின்பே நான் மிகப்பெரிய ஆன்மிக எழுத்தாளராக மாறினேன்.
 என் மகன் அபிஷ்விக்னேஷ் நன்றாக படிப்பான். ஆகவே அவனை டாக்டராக அல்லது ஆராய்ச்சியாளராக  ஆக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால்  அவன் பட்டபடிப்புக்கு சேரும் போது  பி.எஸ்.சி விஸ்காம் படிக்க ஆசைப்பட்டான்.  சேவியர் கல்லூர் முதல்வரே நிறைய மார்க் இருக்கிறது. கணித பிரிவு கூட  தருகிறேன். கல்வி கட்டணம் குறைவுதான் என்றார். ஆனால்  என் மகன்  நான் விஸ்காம் தான் படிப்பேன் என்று கூறினார். அதுவும் ஒருவகையில் நன்மையாகி விட்டது. தற்போது அவனும் ஊடகத்துறையில் உயர்ந்து,  என் எழுத்து  துறைக்கு பக்கத்தூணாக மாறி விட்டான்.
 என் மகள் தேர்ந்தெடுத்த பொறியியல் படிப்பு , அவளின் சொந்த முயற்சி. மதிப்பெண் அதிகம் பெற்ற காரணத்தினால்  திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து குறைந்த கட்டணத்தில் கல்வி பயின்று வருகிறார். இதனால் நான் பெரிய அளவில் அவளுக்கு கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஓடியாடி உழைக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது.  இதனால் என் எழுத்து துறையை தங்குத் தடையின்றி கொண்டு செல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது.   அவரும் என் எழுத்து துறை மீது அதிக ஈடுபாடு கொண்டவர்.
 என் குழந்தை போலவே என்னுடன் பயணம் செய்யும் சிஷ்யர் சுடலை மணிச்செல்வன், என்  எழுத்துப்பணிக்கு மிக உதவியாக இருக்கிறார்.  ஸ்டுடியோ வேலைகளை யெல்லாம் அவரே செய்வதாலும், என்னுடன் களப்பணிக்கு உடன் வருவதாலும், என் வேலை பழு எனக்கு குறைந்து விட்டது. அது என் வாழ்வில் எனக்கு கிடைத்த பாக்கியம்.
  எனது மருமகள் நந்தினி. என் ஸ்டுடியோ வேலையை பார்த்துக்கொண்டே எனக்கு தேவையான டைப் வேலைகளை, வேலைபழுகளுக்கு இடையே செய்து தருவார். அவரையும் என் வாழ்வில் மறக்க முடியாது.

கேள்வி:
 உங்களுடைய  எதிர்கால ஆசை என்ன?
பதில்:
    தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள கிராமங்களில் நான் பயணித்து வருகிறேன். அங்கு பேசப்படும் வரலாறுகளை பதிவு செய்து வருகிறேன்.எழுதப்படாத செவிவழிகதைகள்     சம்பவங்களை எழுதி வருகிறேன். தாமிரபரணி கரையில் உள்ள ஒவ்வொரு குத்து கல்லும் ஒவ்வொரு வரலாற்றை கூறிக்கொண்டே இருக்கிறது.  அதுபோல,  தமிழகம் முழுவதும் வரலாற்றுகளை சுமந்து கொண்டிருக்கிறது.  அதை முழுவதும் தொகுக்க வேண்டும் என்பதே நமது  ஆசை.   இரண்டாம்  தமிழ் சங்கம் இருந்த  கொற்கையையும், முதல் தமிழ் சங்கம் அமைந்த லெமூரியாவையும் ஆய்வு செய்ய வேண்டும் 
   ஆய்வு செய்யும் போது ,தமிழனின் தொன்மை ,உலகமே பிரமிக்கும் வண்ணம் விளங்கும் என்பதில் எந்தவொரு அய்யப்பாடும் இல்லை.

                                             ----------------------------------------------









--








.\























Post a Comment

புதியது பழையவை