தமிழ் வளர்த்த தலைவர்கள்-7--எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

         



எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

 - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்,
நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர். 
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம், 
திருநெல்வேலி. 


"எழுத்தாளன் என்பவன் எழுத்தாளனாக மட்டும் அல்லாமல்
ஒரு நண்பனாய், ஆசானாய் வாசகர்களை வழி நடத்த வேண்டும்" 
என்று கூறிய எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அதன் படி வாழ்ந்து காட்டியவர். 

இந்த வாரம் தொடக்கத்தில் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் பிறந்தநாளை அனைவரும் கொண்டாடி மகிழும் நேரத்தில்  அவருடைய அரும்பணிகளில் சிலவற்றை பகிர்வதில் பெருமை யடைகிறேன்.. 

எழுத்துச்சித்தர்  திரைத்துறையில் பணியாற்றியவர். அடுத்ததாக புத்தகம் எழுதுவதில் மிக நீண்ட பயணம் செய்து தமிழ் வாசிப்பு உலகத்திற்கு சத்தமில்லாமல் பெரும் புரட்சியை  செய்தவர். தமிழ் இலக்கியத்தில் தொடர்ச்சியாக 40 ஆண்டுகள் தொய்வின்றி  இயங்கியவர் பாலகுமாரன்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி என்ற கிராமத்தில் வைத்தியநாதன், சுலோசனா தம்பதியினருக்கு மகனாக  1946ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி பிறந்தார். அன்றைய தினம்    ஆனி உத்திரம் எனும் சிறந்த நாளாகும். 

பதினொன்றாம் வகுப்பு வரை படித்த பாலகுமாரனுக்கு இலக்கியப் பயிற்சியை அளித்தவர், அவரது தாயார் தமிழ்ப் பண்டிதர் சுலோசனா அம்மையார்.  

தட்டச்சும், சுருக்கெழுத்தும் கற்ற பின்னர்  டாஃபே என்ற தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 

முதலில் கசடதபற இதழிலும் பிறகு வெகுஜன இதழ்களிலும் அவர் எழுத ஆரம்பித்தார்.  அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார்.  திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியை பின்னர் துறந்தார். 

அதன் பிறகு சிறுகதைகளிலும் பிறகு நாவல்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்த பாலகுமாரன், மொத்தம்  274 நாவல்களையும்  நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

எழுத்தாளர் சாவி நடத்திவந்த சாவி இதழிலும் சிலகாலம் பாலகுமாரன் பணியாற்றியிருக்கிறார்.

1970-ம் ஆண்டு அந்த சமயத்தில் தீவிர இலக்கியத் தன்மையோடு 'கணையாழி'  இதழ் வந்து கொண்டிருந்தது. அதில் எழுதுபவர்கள் ஆற்றல்மிக்கவர்களாக இருந்தார்கள். அந்தப் பத்திரிகை சார்பில் மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்கள் நடக்கும். அப்போது இளைஞர்களாக இருந்த பாலகுமாரன், சுப்பிரமண்ய ராஜு போன்றவர்கள் அந்தக் கூட்டங்களில் பங்கேற்று, அதன் வழியாக எழுத்துலகில் நுழைந்தார்கள். 

இதைப்பற்றி பாலகுமாரனே தன்னுடைய படைப்புகளில் குறிப்பிட்டுள்ளார். கணையாழியின் வழியே, மறைந்த கவிஞர் ஞானக்கூத்தனால் வளர்த்தெடுக்கப்பட்டவர் பாலகுமாரன். 'அடுத்தது என்ன?'  என்று சிந்தித்த பின்னர் தான் அவர் வெகுசன பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். ‘ஆனந்த விகடன்’ போன்ற இதழ்களில் வெளியாகும் அவரது படைப்புகள் வாசகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டன.




"தாயுமானவன்" விகடனில் வாரத்தொடராய் வந்தநேரத்தில் முதலில் விகடனை வாங்க வீட்டு வாசலில்  எதிர்பார்த்து   தவமிருந்தவர்கள் அதிகம்.  

தாயுமானவன் தொடர் வாழ்க்கை பற்றிய மெல்லிய புரிதல் மிக பக்குவமாய் கொடுத்தது.  அந்த கதையின் கதாநாயகன் பரமு மாதிரி பெண்களின் உணர்வுகளை புரிந்த, மதிக்க தெரிந்த ஓர் வாழ்க்கைதுணை வேணும்னு கனவு கண்டு  ஆசைப்பட்டவர்கள் ஏராளம்.  அவரின் ஆரம்பகால எழுத்துக்கள் பெண்களை அதிகம் படிக்க தூண்டியது.

ஒரு ஆண் பெண்ணாய் மாறி அவளது உணர்வுகளை ..காதலோ,பாசமோ
அக்கறையோ..ஏமாற்றமோ, அழுகையோ அத்தனை உணர்வுகளையும் தன் நூலில்  அப்படியே வெளிப்படுத்த  முடியும் என்று பிரமிக்க வைத்தவர் எழுத்துச்சித்தர். 

சமூக இறுக்கங்களை உடைத்தெறிந்த எழுத்து பாலகுமாரனுடையது. பெண்ணியம் சார்ந்து, அவர்களுடைய வெளிப்பாடுகள் சார்ந்து நிறைய எழுதினார். அது தன்னியல்பாகவே அவருடைய எழுத்தில் வெளிப்பட்டது. பெண்களுக்கான விடுதலை உணர்ச்சியை அப்போதே விதைத்தார் பாலகுமாரன்.

கையடக்க நாவல் புத்தகங்களில் கிரைம் நாவல்களே கோலோச்சி வந்த நிலையில், அதை முழுமையாக மாற்றி குடும்ப நாவல்கள் வரச் செய்த பெருமை பாலகுமாரனையே சாரும்.

குடும்பத்தின் முக்கியத்துவம், பெண்களை மதிக்க வேண்டியதன் அவசியம், சுயத்தை உணர்தல், தனிமனித மேம்பாட்டுடன் கூடிய சமூக மேம்பாடு போன்றகருத்துகளை எளிய நடையில் எழுதியவர்.

இயக்குநர் பாலசந்தரிடம், ‘புன்னகை மன்னன்’, ‘சிந்து பைரவி’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 

ஒரு படத்திற்கு பாலகுமாரன் வசனம் எழுதினால், அந்தப் படம் இயக்குநரின் பாணியில் இல்லாமல், அவருடைய பாணிக்கு மாறிவிடும். 

‘குணா’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’, ‘மன்மதன்’, ‘உல்லாசம்’ போன்ற படங்களில் அதை நாம் பார்க்கலாம்.. 

பாட்ஷா திரை படத்தில் அவர் எழுதிய வசனம்  “நான் ஒரு தடவை சொன்னா.. நூறு தடவை சொன்ன மாதிரி..” இன்றுவரை ரஜினியின் ஆளுமை குரலாக ஒலிக்கிறது. 

 காதலனில் “சந்தோஷமோ.. துக்கமோ.. பத்து நிமிஷம் தள்ளிப்போடு.. நிதானத்துக்கு வருவ..” என அவர் எழுதிய எல்லா வசனங்களிலும் ஒரு தனித்தன்மை இருக்கும். 

காதலர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், அவரின் நாவலில் வருகிற பாத்திரங்கள் பேசுவது போலவே இருக்கும். திரைமொழியை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்த எழுத்தாளர் என்றால் அது பாலகுமாரன்தான். 

கே.பாக்யராஜ்  குழுவில்  இணைந்து  சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு படத்தையும் இயக்கியுள்ளார்.

பத்திரிகை ஆசிரியர் சாவிமூலம் அறிமுகமாகிய பிரபலஎழுத்தாளர்களில் பாலகுமாரனும் ஒருவர். இவரது முதல் தொடர் “மெர்க்குரி பூக்கள்’, “சாவி’ வார இதழில் வெளியானது. ஒரேசமயத்தில் கல்கி, ஆனந்த விகடன், குமுதம், “சாவி’ எனப். பிரபலமான 7 இதழ்களில் தொடர்கள்எழுதினார். 

ஒரு படைப்பை எழுதுவதற்கு முன்பு அது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு எழுதக் கூடியவர். பல்வேறு தொழில்கள் குறித்து ஆராய்ந்து, உள்ளதை உள்ளபடியே விளக்கி எழுதியுள்ளார். லாரி போக்குவரத்து, விமான நிலையம், காய்கறிச் சந்தை, நகை வியாபாரம், தொல்பொருள் ஆராய்ச்சி, விலங்கு மருத்துவம் என பல துறைகளின் இயல்பைப் படம் பிடித்துக் காட்டுவது போல் எழுதி சக மனிதர்களின் உணர்வுகளை வாசகர்களுக்குக் கடத்தும் திறன் பெற்றவர். இலக்கியத் துறையில் மட்டுமில்லாமல் சினிமாத் துறையிலும் தடம் பதித்துள்ளார்.


முக்கியப் படைப்புகள்: 

மெர்க்குரிப் பூக்கள்,  தாயுமானவன்,  இரும்புக் குதிரை,  உடையார் மரக்கால்.., பச்சை வயல் மனது, அகல்யா, கரையோர முதலைகள், திருப்பூந்துருத்தி, ஆனந்தயோகம், ஆனந்த வயல், கங்கை கொண்ட சோழன், ஏதோ ஒரு நதியில் என்று அவரது முக்கிய நாவல்களின் பட்டியலே நீளும். அவரின் எழுத்துக்கள் மூலம் 1980 களில் இளைஞர்கள் மனதினிலே நங்கூரம் பாய்ச்சிய தமிழன்!.

"கல்கியில் வெளிவந்த "இரும்புக் குதிரை" ஒரு மிகச் சிறந்த படைப்பு. எல்லாவற்றுக்கும் மறுபக்கம் உண்டு என்பதை அந்த நாவல் காட்டியது. அடித்தள மக்களைப் பற்றிய மத்திய தர வர்க்கத்தின் கருத்துக்களை புரட்டிப்போட்டது. குதிரையைப் பற்றிய நிறைய கவிதைகள் அந்த நாவலின் ஊடே இருந்தன. 

உடையார் என்ற பெயரில் ராஜராஜ சோழனைப் பற்றியும் தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றியும் 6 பாகங்களில் இவர் எழுதிய “உடையார்’, பெருவுடையாரின் பிரம்மாண்டத்தை அது உருவாகிய விதத்தை சற்றும் குறையாது உடையார் சரித்திரம் படைத்தவர். உடையார் இவருடைய படைப்புகளில் முக்கியமானவை.. இன்று வரை விற்பனையில் சாதனை படைத்தது கொண்டிருக்கின்றன.  

கவிதை, சிறுகதை, கட்டுரை, கேள்வி பதில், சுயசரிதை என எழுத்தின் அனைத்து தளங்களிலும் 40  ஆண்டுகளாக வாசகர்களின் மனதை கவர்ந்தவர்.  தன்னுடைய எழுத்தில்  மென்மையான பெண்ணின் மனோவலிமையை புதிய கோணத்தில் காட்டியவர். 

வலிமையான ஆணின் மென்மையான தாயுள்ளத்தை மயிலிறகாய் விரித்து காட்டியவர்.கம்யூனிசம் பற்றிய ஓரளவு புரிதலை கொடுத்தவர். கதைக்களம் என்பது அந்த கதை மாந்தர்கள் மட்டும் அல்ல அந்த பகுதியின் வாழ்வியல், வட்டார மொழி வழக்கு, உணவுப் பழக்கம் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் விதமாக அமைதலே சிறப்பு என்று கற்றுக் கொடுத்தவர்.

அபிராமி பட்டர் கண்ட பௌர்ணமியை உள்ளொளியால் உணர்த்தியவர்.
ஈரோட்டு மஞ்சளையும் திருவண்ணாமலையின் நெல்லுச்சோற்றையும் நிதர்சனத்தில் கொண்டு வந்தவர்.

பாலகுமாரனை  படித்து உணர்ந்த பெண்கள் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழுந்தார்கள்.

ஆரம்பத்தில் கம்யூனிஸ ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த பாலகுமாரன் பின்னர் திருவண்ணாமலையில் வாழ்ந்த யோகி ராம்சுரத்குமாரை ஆன்மிக குருவாக ஏற்றுக் கொண்டார்.  

"ஒரே ஒரு ஞானி, ஒரே ஒரு பொதுநலவாதி மூலம் மொத்த மக்களையும் தொடுவான்,  மொத்த சமூகத்தையும் புரட்டுவான்." என்பதற்கு எடுத்துக்காட்டாக ஞானி யோகிராம்சுரத்குமாரின் குருவருளால் எழுத்தாளர் பாலகுமாரனின் வாழ்வில் திருப்பம் உண்டாகியது. 

யோகியை சந்திப்பதற்கு முன் அவரது வாழ்க்கை வேறுமாதிரியாய் இருந்தது, தன் எழுத்து என்பது நாவல் படைக்கவும் சினிமாவில் சம்பாதிக்கவும், உலக இன்பங்களை எல்லாம் அனுபவிக்கமட்டுமே என நினைத்து கொண்டு சம்பாத்தியம் உல்லாசம் என இருந்தான்.அப்படியே விட்டிருந்தால் அவன் சராசரி எழுத்தாளனாக, சம்பாத்தியம் செய்த வசனகர்த்தாவாக தன் வாழ்வினை முடித்திருக்க கூடும்.. யோகிராம் சுரத்குமார்  பார்வை அவரின் பாதையை மாற்றியது. 

பாலகுமாரன் மிக சரியாக தன் குருவினை அடையாளம் கண்டார், அவரை தயக்கின்றி ஏற்றார், அவரால்  மாபெரும் அவதார எழுத்தாளனாக அழியா அமரத்துவம் பெற்றார். திருவண்ணாமலை மகான்  யோகிராம் சுரத்குமார்  "பாலகுமாரன் என் பேனா" என்று கூறிய படி,  அதன் பின்னர்  அவர் எழுதியதெல்லாம் ஒரு யோகியே சொன்னது போல இருந்தது. 

ஆம் அந்த எழுத்தெல்லாம் பலரின் வாழ்வை மாற்றியது. இன்று வரை வாசகர்கள்  ஏராளமானோர் அவரை தங்கள் குருவாக போற்றி வணங்குகின்றனர். 

திருவண்ணாமலை மகான் யோகிராம் சுரத்குமார் சந்திப்பு அவரது வாழ்வின் திருப்பமாக அமைந்தது. தன்னுடைய “குருவழி” என்ற புத்தகத்தில் அதைப்பற்றி முழுவதுமாக எழுதியுள்ளார். 

யோகியைச் சந்தித்ததில் இருந்தே பாலகுமாரனின் பாதை வேறு மாதிரி ஆகிவிட்டது. அவருடைய வாசகர்கள் இதை நன்கு அறிவார்கள். 

அவருடைய,  'இதுபோதும்' என்ற நூலை ஆத்ம சாதனையில் ஆர்வம் கொண்ட அனைவரும்  கண்டிப்பாக வாசித்தே ஆகணும். தன் குருவான  யோகிராம் சுரத் குமாரிடம் அவர்  கற்றுக்கொண்ட விஷயங்களை அந்தப் புத்தகத்தில் சாரமாகக் கொடுத்துள்ளார். ஒரு தந்தை தன் மகனுக்கு உயில் எழுதி வைப்பதை போல ஆன்மீக செல்வமாக அந்த நூலை நமக்கு தந்துள்ளார். 

பாலகுமாரன் எனும் எழுத்தாளனின் ஒரு பக்கம் நமக்கு தெரியும். ஆனால் இன்னொரு பக்கம் பாருங்கள் அது வலிமிக்கது.

அவர் நினைத்திருந்தால் கோடிகணக்கில் சம்பாதித்திருக்கலாம், எவ்வளவோ சினிமாவுக்கும் நாவலுகும் எழுதி பணம் சேர்த்திருக்கலாம். ஆனால், அந்த செல்வத்தின் வழியினை துறந்தார், எல்லாம் வீண் என உண்மை உணர்ந்து விலை போகாத, சம்பாத்தியம் கொடுக்காத ஞான வழி எழுத்துக்கு திரும்பினார்.

அது பணம் கொட்டாது என தெரிந்தும் தன் கடமையினை இம் மக்களுக்காய் செய்தார்.

அவரால் எவ்வளவு பலன்பெற்றது சமூகம், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ஞானமும் உண்மையும் தத்துவமும் வரலாறும் அவர் விட்டு சென்றார் அவரின் ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொருவரும் பலன் பெற்றிருக்கின்றனர், அவரின் வார்த்தைகளும் வரிகளும் எவ்வளவோ மக்களுக்கு ஆறுதலாயின, இன்னும் அந்த விளக்கு வழிகாட்டும் தஞ்சை கோவில் முதல் எத்தனையோ கோவில்களின் வரலாறு அவரால் வெளி வந்தது.  



அவரின் சில நூல்களில் உடையார் முதல் எல்லாமே தனி ரகம், ஒவ்வொன்றும் இமயத்தின் உயரம், கயிலாயத்தின் தூய்மை, கடலைவிட ஆழம், பிரபஞ்சத்தை போன்ற விரிவுஒரு சில நூல்கள் நீண்டகால தேடலுக்கு வழிகொடுத்தன‌. 

உதாரணம் ,திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் உள்ள முப்பந்தல் ஆலயம், அந்த நெல்லைமாவட்ட முடிவில் இருக்கும் முப்பந்தல் ஆலயம் பற்றி பல கதை உண்டு,  ஆனால் இசக்கி என்ற அந்த நீலி யார்? திருவாலங்காட்டில் அவள் எப்படி சேர்ந்தாள், அவளுக்கு எப்படி இவ்வளவு சக்தி வந்தது? அவள் சேர நாட்டுக்கு எப்படி சென்றாள்? சேரநாட்டின் எல்லையான முப்பந்தலுக்கு அந்த சக்திமிக்க நீலியினை சேரன் எப்படி கொண்டுவந்தான் எனப்தெல்லாம் "புருஷ வதம்" எனும் பாலகுமாரனின் நூலில் அழகாக விளக்கி யுள்ளார்.  

சென்னை மயிலாப்பூரில் வசித்துவந்த பாலகுமாரனுக்கு கமலா, சாந்தா என இரு மனைவியரும், ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. 

அவருடைய முதல் படைப்பான ‘மௌனமே காதலாக’,  தொடங்கி, கடைசியாக அவர் எழுதிய பத்திகள் வரைக்கும் எழுத்தின் மீதும் சமூகத்தின் மீதும் செலுத்திய அக்கறையும், அவருடைய ஆளுமையும் குறையவேயில்லை. இனியொரு நாற்பது ஆண்டுகள் இப்படியொரு எழுத்தாளர் நம் சமூகத்துக்கு கிடைப்பாரா ? என்பது தெரியவில்லை. 

இருமுறை இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த பாலகுமாரன், தன்னுடைய  72 வது வயதில் நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தார். ஆனால், அந்த சிகிச்சை பலனின்றி மே 15, 2018 அன்று  காலையில் உயிரிழந்தார். 

எழுத்து சித்தர் பாலகுமாரன் காலமாகியது,  அவரது வாசகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தனது எழுத்தின்மூலம் ஆயிரக்கணக்கான இதய ஆசனங்களில் இருப்பவர், வாழ்க்கையை அணுகுவதில் முன்மாதிரியாக இருந்தார். 

அவரின் திரை வசனங்களை  அடுத்த தலைமுறை மறக்கலாம்.உண்மையில் எழுத்து சித்தரின்  நூல்கள் காலத்தை வென்றவை. தஞ்சை கோவிலை போல் அந்த உடையார் நூலும் , மற்றும்  பல  நூல்களும் கால காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.வரலாற்றையும், ஞானத்தை சொல்லும் வருங்காலத்தில் அனைவருக்கும் கொடுக்கும். 



பாலகுமாரன் பற்றி மூத்த பத்திரிக்கையாளர் மாலன் : 

"அவரை நவீன எழுத்தாளர் இல்லை என்று சொல்ல முடியாது. நாவலில் கவிதைகளைப் பயன்படுத்தியதே ஒரு நவீன முயற்சிதானே. பிற்காலத்தில் ஆன்மீகத்தைச் சொல்ல அவர் தன் எழுத்தைப் பயன்படுத்தியது குறித்து பலருக்கு விமர்சனம் இருக்கலாம். ஆனால், அது அவருடைய தேர்வு" 

பாலகுமாரன் பற்றி எழுத்தாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான  து. ரவிக்குமார் : 

80களின் துவக்கத்தில் இளைஞர்களை வெகுவாக பாதித்த எழுத்து பாலகுமாரனுடையது , "மெர்க்குரிப் பூக்கள் வடிவமைப்பிலும் நேர்த்தியிலும் மிகச் சிறந்த படைப்பு. அந்தத் தொடர் வெளிவந்த காலத்தின் இளைஞர்களின் மனநிலையை அது வெகுவாகப் பாதித்தது. தமிழ்க் கலாசாரம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த தேர்ச்சியும் ஈடுபாடும் இருந்தது அவருக்கு. அதைப் படிக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இவரை ஜெயமோகனோடு ஒப்பிட்டால், பல முயற்சிகளில் பாலகுமாரன் மேலானவர். காரணம், தமிழ் மரபு மீது அவருக்கு இருந்த புலமைதான் காரணம்" 

பாலகுமாரன் கடந்த பல வருடங்களாகவே ஆன்மீகம் குறித்து எழுதுவது, யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மீகக் கூட்டங்களை நடத்துவது எனச் செயல்பட்டுவந்தார். "பாலகுமாரன் தன் ஆன்மீகத்தை மற்றவர்களின் மீதான வெறுப்பாக மாற்றவில்லை. அது மிக முக்கியமானது"

இப்போது பலர் தங்களுடைய பெயருக்கு ஏற்ற பட்டங்களை அவர்களே வைத்து கொள்கிறார்கள்.. ஆனால் எழுத்தில் வல்லமையைத் தந்த பாலகுமாரனுக்கு எழுத்து சித்தர் பட்டம் ஒரு வாசகனால் வந்தது. 

சந்திரசேகர் நடத்திய பல்சுவை இதழில் தொடர்ந்து நாவல்களை பாலகுமாரன் எழுதி வந்த சமயம் அது.. அவருடைய நாவல் வருகைக்காக கடைகளில் வாசகர்கள்  காத்திருந்து வாங்கிய காலம் அப்போது.. அந்த சமயத்தில் திருநெல்வேலியிலிருந்து வி.எம் சத்திரத்தைச் சேர்ந்த சந்தானம் என்பவர் அந்த பல்சுவை நாவலின்  பதிப்பாசிரியருக்கு கடிதம் எழுதுகிறார்.. பாலகுமாரனுக்கு எழுத்து சித்தர் என்ற சிறப்பு பெயரை அடைமொழியாக சேர்க்கும்படி வேண்டுகிறார்.. அடுத்த இதழில் இருந்து “எழுத்து சித்தர் பாலகுமாரன்” என்றே வெளியாகியது. 


எழுத்து சித்தர்  

அடுத்த தலைமுறைக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று பாலகுமாரனிடம் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு நமக்காக அவர் அளித்த பதில் இதோ : 

ஏதாவது சொல்லித்தானே ஆக வேண்டும். லட்சியம் இல்லாத வாழ்க்கை வாழாதீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். புல் பிடுங்குவதோ, ஆணி அடிப்பதோ, அரசியல்வாதி ஆவதோ, விமானம் ஓட்டுவதோ எதுவாயினும் சரி, ஒரு லட்சியம் வைத்துக் கொண்டு அதை அடைய வேண்டுமென்று பாடுபடுங்கள்.
மது குடித்து விட்டு கிடைத்த இடத்தில் மல்லாக்க படுத்துக் கொண்டு, வாய் பிளந்து கால் அகட்டி தூங்காதீர்கள். பதட்டமும், புகை நெடியும், தவறான உணவுகளும், இறுக்கமான உடைகளும் உங்கள் வாழ்நாளை பாதிக்கின்றன. இன்று பெண்கள் பேசுவதற்கு எளிதாக கிடைக்கிறார்கள் என்பதால் அதிக நேரம் பேசுவது செயல் திறனை இழக்க வைக்கும். இது இரவு தூக்கத்தை குதறிப் போடும். ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் தூங்கினால் போதும். மற்ற நேரமெல்லாம் விழிப்போடும், உழைப்போடும் இருக்க முயற்சி செய்யுங்கள்.
ஜெயித்தவருக்குத்தான் பெண்களிடம் மரியாதை. கெக்கலிக்க பேசுகிறவர்களை மறுநாள் பெண் மறந்து விடுகிறாள். மறக்காத பெண் தன் வாழ்க்கையை தொலைக்கிறாள். ஏதேனும் ஒரு மொழியில் பாண்டித்யம் பெறுங்கள். உங்கள் சரித்திரத்தையாவது அறிந்து கொள்ளுங்கள். உலக சரித்திரத்தின் மீது கவனம் வையுங்கள். உங்களை விட பல கில்லாடிகள் ஒன்றும் இல்லாமல் போயிருக்கிறார்கள் என்பது சரித்திரம் படிக்கத் தெரியும்.
மிகச் சிறந்த மன்னர்கள் காணாது போனபோது பெயர் கூட இல்லாது போனபோது எதுவுமே செய்யாத நீங்கள் யார் மனதில் நிற்கப் போகிறீர்கள். என்னவாக இருக்கப் போகிறீர்கள். சரித்திரத்தில் இடம் பெற முயற்சி செய்யுங்கள், அல்லது குறைந்தபட்சம் மன நிம்மதியோடு இருங்கள். தேடிச் சோறு நிதம் தின்று பலச் சின்னஞ் சிறு கதைகள் பேசி என்று உங்களை நீங்களே இழிவாக்கிக் கொள்ளாதீர்கள். இதையெல்லாம் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அந்த லட்சியத்தோடு வாழுங்கள். இது ஒரு வேண்டுகோள்தானே தவிர அறிவுரை அல்ல.

கட்டுரையாளர் தொடர்பிற்கு ..../. drbala@tamilsuvadi.com


Post a Comment

புதியது பழையவை

Sports News