நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை.----- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்


நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை.- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்

நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர். 

     மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் .

திருநெல்வேலி.

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை அவர்கள் சிறந்த தமிழ் அறிஞர்,சிறந்த கவிஞரும் ஆவர். இவர் தேசியத்தையும் காந்தியந்தையும் போற்றி பல கவிதைகளை படைத்தது உள்ளார்.

இவரது காலத்தில் சுதந்திர போராட்டத்தைப் பற்றி காந்திய வழியில் பாடல்கள் பல பாடியதால் காந்தியக் கவிஞர் என அழைக்கப்பட்டார். தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர். தேசியப் போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றவர். ராஜாஜியின் மனதுக்குகந்த தோழர். என பல சிறப்புகளை கொண்டவர். 

திருக்குறள் உரைகளில் இராமலிங்கனாரின் எழுதிய உரையே முதன்மைப் பெற்றுத் திகழ்கிறது, இவர் எழுதிய திருக்குறள் உரை  நூல்கள்  அதிகமாக விற்பனையாவதே இதற்கு சான்று. 

’கத்தி யின்றி ரத்த மின்றி

யுத்த மொன்று வருகுது

சத்தி யத்தின் நித்தி யத்தை

நம்பும் யாரும் சேருவீர்’

என்று அனைவரும் உச்சரித்த புகழ்பெற்ற பாடலை1932 இல்  உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் வழிநடைப் பாடலாக பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.


சமீபத்தில் மெரினாவில் நடந்த சல்லிக்கட்டுப் போராட்டத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் எழுச்சியோடு முழங்கிய வரிகள் .

"தமிழன் என்று சொல்லடா

தலைநிமிர்ந்து நில்லடா" என்பது.

 இந்த கவிதை வரிகளை இயற்றி கொடுத்தவர் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை . 

“நமது தேவையை நாமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அயலார் கையை எதிர் நோக்குவது அவச் செயலே ஆகும்” என்று காந்தியடிகள் கூறியதை அனைவருக்கும் விளங்கும்படியாக 

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

எத்தொழில் எதுவும் தெரியாமல்

இருந்திடல் உனக்கே சரியாமோ?

கவிதையின் மூலம் எடுத்துரைத்தார். 

இப்படி சமுகத்தின் தேவைகளை அறிந்து அதற்க்கு தீர்வுகளை சொல்லும் விதமாக கவிதைகளை புனைந்தவர். கவிஞன் என்பவன் எதுகை மோனையோடு எழுதுபவன் அல்ல , ஆழ்ந்த புலமையோடு சமூக அக்கறையும் , தெளிவான தீர்வுகளை அனைவருக்கும் புரியும் படி தருபவேனே கவிஞன் என்பது இவரை படித்தால் புரியும். அத்தகைய சிறந்த கவிஞரை பற்றி இந்த வாரம் காண்போம். 


கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள மோகனூர் எனும் 

சிற்றூரில் 19.10.1888ஆம் ஆண்டு வெங்கட்ராமன்- அம்மணியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். 

ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு தவமிருந்து பெற்ற எட்டாவது ஆண் குழந்தை ராமலிங்கம். ராமேஸ்வரம் சென்று ஆண் குழந்தை வேண்டிப் பிறந்ததால் ராமலிங்கம் என்று பெயர் வைக்கப்பட்டது. 

அம்மணி அம்மாள் இதிகாச, புராணங்களையெல்லாம் சொல்லி தன் மகனை வளர்த்தார். அன்னையின் நன்றி போதனைகள் ராமலிங்கத்தை சான்றோனாக வளர்த்தது. 

இவர் நாமக்கல்லில் இருந்த நம்மாழ்வார் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார்.  இவரின் தந்தையார் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வந்த நிலையில், கோயமுத்தூருக்கு பணி இடம் மாறி சென்றார். அதனால் இராமலிங்கனார் அங்குள்ள பள்ளி ஒன்றில் சேர்ந்து உயர்கல்வியைத் தொடர்ந்தார்.

இராமலிங்கத்திற்கு  தொடக்கக்கல்வி முதலே கணிதம் என்றாலே கசந்தது. ஆனால் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. 

பாடம் எழுதும் சிலேட்டுப் பலகையில் படம் வரைந்தார்,  கலைத்திறனை கண்டு கொள்ளாத ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வில்லை பிரம்படி கொடுத்தனர். ஆனாலும் ஓவியம் மீது அவரது ஆர்வம் அதிகம் இருந்தது. 

 

இராமலிங்கனார் கல்லூரியில் அடியெடுத்து வைத்த போதுதான் அவர் வரைந்த ஓவியங்களுக்கு மரியாதை ஏற்பட்டது. E.H.எல்லியட் என்பவர் கல்லூரித் தலைவராக இருந்த போது, அவரின் ஓவியத்தை அவருக்குத் தெரியாமலேயே பாடம் நடத்தும் வகுப்பில் வரைந்து தந்தார். அதைக் கண்ட எல்லியட் மகிழ்ச்சி அடைந்து உடனடியாக தம் சட்டைப் பையிலிருந்த தங்கக் குழாயும் மூடியும் உள்ள பென்சிலை பரிசாகத் தந்து பாராட்டினார்.

இவருக்கு இயற்கையிலேயே ஓவியம் வரையும் ஆற்றல் இருந்ததை அறிந்த இவரது ஆசிரியர் எல்லியட் ஒரு ஆங்கிலேயர், அவர் இவரது ஆற்றலை வளர்க்க உதவினார். இவர் ஓவியங்கள் நல்ல விலை போயின. 

1908இல் திருச்சிராப்பள்ளியில் உள்ள எஸ்.பி.ஜி. கல்லூரியில் (பிஷப் ஹெபர் கல்லூரி) எஃப்.ஏ. (F.A.) படித்து வந்தார். அக்காலத்தில் பட்டப்படிப்புக்கு முன்னால் இருந்த இரண்டாண்டு பாடத் திட்டத்திற்கு எஃப்.ஏ. என்று பெயராகும். அப்போது அவருக்குத் தீராத காதுவலி ஏற்பட்டது. அன்றைக்கு புகழ்பெற்ற மருத்துவர் டி.எம்.நாயர் (நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவர்) அவர்கள் சிகிச்சை செய்தும் கூட பலனளிக்காமல் செவித்திறனை இழந்தார்.

திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்த இவருக்குத் தனது அத்தை மகள் முத்தம்மாளை 1909 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு 1906ஆம் ஆண்டு முதலே நாட்டுச் சுதந்திரத்தில் ஈடுபாடு  பிறந்தது.

இவரின் தந்தையார் காவல்துறைப் பணியில் தன்னைப் போலவே தன் மகனையும் சேர்க்க விருப்பப்பட்டார். ஆனால் இராமலிங்கனார் அதை விரும்ப வில்லை. பிறகு தந்தையாரின் சிபாரிசு பெயரில் நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி புரிந்தார். அவறது மனம்  ஓவியம் வரைவதிலே நாட்டம் கொண்டது ,  அதனால் அங்கு பணியாற்ற முடியாமல் வெளியேறினார்.

பின்னர் அவருக்கு நாமக்கல் தொடக்க நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. அங்கு ஆங்கிலேயரை எதிர்த்து வந்த திலகரை ஆதரித்து, தேச விடுதலை பற்றி மாணவர்களிடம்  பேசி வந்தார்.

இது அங்குள்ள தலைமையாசிரியருக்குப் பிடிக்காவில்லை. கருத்துவேறுபாடு அதிகரிக்கவே  அங்கிருந்தும் விலகினார்.

இவர் கரூரில் தனது சகோதரி வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1914இல் திருச்சி மாவட்ட காங்கிரசின் செயலாளராக இருந்தார். கரூர் வட்டக் காங்கிரஸ் தலைவராகவும் பணிபுரிந்தார். 1921 முதல் 1930 வரை நாமக்கல் காங்கிரசின் தலைவராக இருந்தார். கரூர் அமராவதி நதிக்கரையில் இவர் அடிக்கடி கூட்டங்கள் நடத்தினார்.

இவர் ஆசிரியர் தொழில் உட்பட பல தொழில்களைல் சேர்ந்தாலும் ஒன்றிலும் நிலைக்கவில்லை. 

இராமலிங்கனாரின் சிந்தனையோட்டம் முழுவதும் ஓவியத்தையே நாடி நின்றதால், இவரின் நண்பரான ஶ்ரீநாகராஜ ஐயங்கார் என்பவர் ஓவியத் திறமையை தொழிலாக மாற்றினால் புகழ் பெற்று முன்னேறி விடலாமென ஆலோசனை கூறினார்.


1910இல் முதன் முதலாக இராமகிருஷ்ண பரமஹம்சர் படத்தை பெரிதாக வரைந்து பாராட்டைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து பொது இடங்களில் வைப்பதற்கு விவேகானந்தர், திலகர், அரவிந்த் கோஷ், லஜபதிராய் ஆகியோரின் படங்களையும் வரைந்து தந்ததால் இவரின் புகழ் தமிழ்நாடெங்கும் பரவியது. குறிப்பாக, செட்டிநாட்டில் இவர் வரையும் ஓவியங்களுக்கு தனிமரியாதை ஏற்பட்டது.

1912இல் தமிழறிஞர் பா.வே.மாணிக்கம் நாயக்கர் அவர்களின் அழைப்பின் பேரில் தில்லிக்குச் சென்றார். அங்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியத்தை வரைந்து டெல்லியில் நடந்த அவரது முடிசூட்டு விழாவில் பரிசாக அளித்தார். அதைக் கண்டு மகிழ்ந்த மன்னர் குடும்பத்தினர் தங்கப் பதக்கம் அணிவித்து சிறப்பித்தனர். 

இராமலிங்கனார் ஓவியத்தொழிலில் நல்ல வருமானம் ஈட்டிய போதும், அவரது மனம் இந்திய விடுதலைக்கான அரசியலை நோக்கியே பயணித்தது. அதனோடு கவி புனையும் ஆற்றலும் கைவரப்பெற்றதால் ஓவியத் தொழிலை விட்டு வெளியேறும் நிலை உருவானது.

ஓவியம் தவிர இவருக்கு கவிதை புனையும் ஆற்றலும் இருந்தது. சிறுவயதில், தெருக்கூத்துகளில் பாடப்படும் பாட்டுக்களைக் கேட்டே கவிபாடும் திறனை வளர்த்து வந்தவர் இராமலிங்கனார். அவர் தொடக்கத்தில் புகழ் பெற்ற நாடகக் நடிகர் எஸ்.ஜி. கிட்டப்பா நாடகக்குழுவிற்கும், ஒளவை சண்முகம் சிறுவர் நாடகக்குழுவிற்கும் ஏராளமான பாடல்களை எழுதி வந்தார். அப்போது மகாகவி பாரதியாரின் பாடல்கள் மீது தீராக் காதல் பிறந்தது.,

1920இல் பாரதியாரின் குடும்ப நண்பர் வேங்கட கிருஷ்ண ஐயர் தொடர்பு கிடைத்தது. அவரோடு சேர்ந்து கானாடுகாத்தானில் பாரதியாரைச் சந்தித்தார். அப்போது, பாட்டுப்பாடும் படி வேண்டிய பாரதியாரிடம்,

"தம்மரசைப் பிறர் ஆளவிட்டுவிட்டுத்

தாம்வணங்கிக் கைகட்டி நின்ற பேரும்"

என்று பாடிக் காட்டினார். பாரதியாரும் "பலே, பாண்டியா! பிள்ளை நீர் ஒரு புலவன், ஐயமில்லை" என்று கவிஞரைப் பாராட்டினார்.

 1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார். 

இவரது மனைவி முத்தம்மாள் 1924இல் காலமானார். அதைத் தொடர்ந்து அவரது இளைய சகோதரியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. 

1930இல் தமிழ்நாட்டில் இராசாசி தலைமையில் வேதாரண்யம் நோக்கி நடைப்பயணம் புறப்பட்ட போது, இராமலிங்கனார் தொண்டர்கள் பாடுவதற்கென்று,

"கத்தியின்றி ரத்தமின்றி

யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை

நம்பும் யாரும் சேருவீர்"

என்று பாடல் எழுதித் தந்தார். அந்தப் பாடலானது காங்கிரசுத் தொண்டர்களிடையே வேதமந்திரப் பாடலாக உருவெடுத்தது. அதைக்கண்டு வியந்த இராசாசி " திலகர் விதைத்த வித்து பாரதியாக முளைத்தது, காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராக வளர்ந்தது" என்றார்.

இவரது பாடல்களை சங்கு கணேசன் தனது “சுதந்திரச் சங்கு” பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்.

காந்தியத் திட்டங்களான தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு, கதர் அபிவிருத்தி, கைத் தொழில் வளர்ச்சி, தாய்மொழி கற்றல் ஆகியவைப் பற்றி அவர் எழுதிய பாடல்கள் காங்கிரசு மேடைதோறும் ஒலிக்கத் தொடங்கின.

1931இல் உப்புச்சத்தியாக்கிரகத்தில் இராமலிங்கனாரும் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தார். அங்குதான் தமிழியச் சிந்தனைகளும் அவரின்பால் ஊற்றெடுத்துப் பீறிட்டன. அப்போது சிறைக்கைதிகளுக்கு திருக்குறள் பாடம் நடத்தத் தவறுவதில்லை.

மதுரைச் சிறையிலிருந்தபோது திருக்குறளைப்பற்றிய வெவ்வேறு உரைகளை வாங்கிப்படித்தார். அதில் பரிமேலழகர் உரையும் ஒன்று. அதன் கருத்தோடு ஒன்றிப்போக முடியாததால் புதிதாக திருக்குறள் உரை எழுதினார்.

இந்திய விடுதலையை முதன்மை நோக்கமாக அவர் கொண்டிருந்த போதிலும் அதில், "தமிழ்நாடு தமிழருக்கே" உரிமை படைத்தது என்ற பார்வை அவர்க்கு இருந்தது. இதனை கீழ்க்கண்ட பாடல்வரியானது தெளிவு படுத்தும்.

"முத்தமிழ் நாடென்றன் முன்னையர் நாடு

முற்றிலும் சொந்தம் எனக்கெனப்பாடு"

இந்திய விடுதலைக்குப் பிறகு திராவிட இயக்கம் வளர்ந்து வந்த திரைத்துறையை பயன்படுத்தி திராவிடநாடு புகழ்பரப்பும் பாடல்களைப் பரப்பி வந்தது. அதே காலகட்டத்தில் இராமலிங்கனாரின் தமிழ்நாடு, தமிழர் அடையாளத்தை வெளிப்படுத்தும் பாடல்களும் வெளிவந்தன.

தேவகோட்டை சின்ன அண்ணாமலை தமிழ்ப்பண்ணை எனும் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை நடத்தினார். அதன் மூலம் நாமக்கல்லாரின் நூல்கள் பிரசுரம் செய்யப்பட்டன. சின்ன அண்ணாமலை சிறந்த பேச்சாளர். அவரது நகைச்சுவை மிகவும் பிரபலம். சங்கப்பலகை எனும் ஒரு பத்திரிகையையும் அவர் நடத்தினார். ம.பொ.சி. தலைவராக இருந்த தமிழரசுக் கழகத்தின் தூண்களில் அவரும் ஒருவர். இவர் மகாகவி பாரதியாரைச் சந்தித்திருக்கிறார். அவரால் பாராட்டப் பெற்றிருக்கிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் முதன் முதலாக 1932இல் இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. சுதந்திரம் நெருங்கி வந்த சமயத்தில் இவரது கவிதைகள் பெரும் புகழ்பெற்று தமிழ் மாநிலமெங்கும் இவருக்குப் பாராட்டும் புகழும் ஈட்டித் தந்தன. 1945இல் இவரைப் பாராட்டி சென்னையில் நடந்த விழாவில் காமராஜ், திரு.வி.க., பி.ராமமூர்த்தி, கல்கி போன்றவர்கள் கலந்து கொண்டு இவரைப் பாராட்டினார்கள்.

1954இல் இராமலிங்கனார் எழுதிய "மலைக்கள்ளன்" புதினக்கதை திரைப்படமாக வெளிவந்தது. 

கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப் பட்டது. எம்.ஜி.ஆர் (எம்.ஜி.ரமச்சந்திரன் ) பானுமதி நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூலில் மிகப்பெரும் சாதனைப் படைத்ததோடு குடியரசுத் தலைவர் விருதும் பெற்றது. அத்திரைப்படத்தில்,

"தமிழன் என்றொரு இனமுண்டு

தனியே அவர்க்கொரு குணமுண்டு;

அமிழ்தம் அவனது மொழியாகும்

அன்பே அவனுடை வழியாகும்"

என்ற பாடலை உச்சரிக்காத உதடுகளே இல்லையென்று கூறலாம்.

1960இல் வெளிவந்த "கடவுளின் குழந்தை" திரைப்படத்தில் ,

"தமிழன் என்று சொல்லடா!

தலை நிமிர்ந்து நில்லடா!,

பாடலும்,

"இளந்தமிழா! உன்னைக் காண

இன்பம் பெருகுது!

இதுவரைக்கும் எனக்கிருந்த

துன்பம் குறையுது"

பாடலும், தமிழின எழுச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சின்ன அண்ணாமலை. 

இலக்கியம், வரலாறு, மொழிபெயர்ப்பு, புதினம், கவிதைகள், ஆகிய பல்வேறு துறைகளில் ஆற்றல்மிக்க படைப்புகளை உருவாக்கித் தந்தவர் இராமலிங்கனார்.

இயற்றிய இலக்கிய படைப்புகள்

• இசை நாவல்கள் – 3

• கட்டுரைகள் – 12

• தன் வரலாறு – 3

• புதினங்கள் – 5

• இலக்கிய திறனாய்வுகள் – 7

• கவிதை தொகுப்புகள் – 10

• சிறுகாப்பியங்கள் – 5

• மொழிபெயர்ப்புகள் – 4

எழுதிய நூல்கள்:

1. மலைக்கள்ளன் (நாவல்)

2. காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)

3. பிரார்த்தனை (கவிதை)

4. நாமக்கல் கவிஞர் பாடல்கள்

5. திருக்குறளும் பரிமேலழகரும்

6. திருவள்ளுவர் திடுக்கிடுவார்

7. திருக்குறள் புது உரை

8. கம்பனும் வால்மீகியும்

9. கம்பன் கவிதை இன்பக் குவியல்

10. என்கதை (சுயசரிதம்)

11. அவனும் அவளும் (கவிதை)

12. சங்கொலி (கவிதை)

13. மாமன் மகள் (நாடகம்)

14. அரவணை சுந்தரம் (நாடகம்)

"என்கதை "என்ற பெயரில் தன்னுடைய சுயசரிதையை மூன்று பாகமாக எழுதி உள்ளார்

இராமலிங்கனாரின் இலக்கியப்பணியை போற்றும் வகையில் பணமுடிப்பும், பதவியும் அவரைத் தேடி வந்தன. 1945இல் பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பு பெற்ற கலைஞன் இவர் ஒருவரே. 

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1949இல் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு ‘அரசவைக் கவிஞர்’ எனும் பதவி வழங்கப்பட்டது. 1949இல் முதல் அரசவைக் கவிஞராகவும், 1954இல் சாகித்திய அகாதமி குழு உறுப்பினராகவும், 

 1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார். 1971இல் இவருக்கு டெல்லியில் ‘பத்மபூஷன்’ விருது வழங்கப்பட்டது.

இவர் எழுதிய “காந்தி அஞ்சலி” எனும் கவிதைத் தொகுதி நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 2 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பாரதிக்குப் பிறகு தோன்றிய ஒரு தேசியக் கவிஞராக விளங்கியவர், அவரது அமரத்துவ பாடலால் இன்று வரை நம்மோடு வாழ்ந்து வருகிறார். 


                                             -----------------------------------------------


 


Post a Comment

புதியது பழையவை

Sports News