- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்,
நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம்,
திருநெல்வேலி.
தமிழ் இலக்கியத்திற்காகவே ஒரு மனிதன் வாழ முடியுமா?” என்று கேட்டால் முடியும் என்று வல்லிக்கண்ணன் அவர்களை காட்ட முடியும். திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லி புரத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் (1920). இயற்பெயர் ரா.சு. கிருஷ்ணசாமி. கோவில்பட்டியில் ஆரம்பக் கல்வி பயின்றார்.
தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று ஒரு தனிதடம் பதித்தவர் வல்லிக்கண்ணன். தந்தை சுங்கத் துறையில் பணிபுரிந்து வந்தார். அவருடன் பிரபல நாவலாசிரியர் அ.மாதவையாவும் பணியாற்றி வந்தார். அந்தக் காலகட்டத்தில் மாதவையா நடத்தி வந்த பஞ்சாமிர்தம் இதழ்கள் பற்றி தந்தை அடிக்கடி வீட்டில் பேசுவார்.
இதுவே சிறுவனுக்கு இலக்கிய ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்தது. இவரது 10-வது வயதில் தந்தை இறந்துவிட்டார். தனது 16-ம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டார். அப்போது பிடித்த பேனாவை தன் உயிர் பிரியும் வரை அவர் கீழே வைக்கவே இல்லை. இலக்கியத்தின் எல்லா வகைமைகளிலும் சுவடு பதித்தவர். கவிதை, சிறுகதை, நாவல், திறனாய்வு, வரலாறு, நாடகம் என்று அனைத்து வகைமைகளிலும் எழுதிக் குவித்தவர் வல்லிக்கண்ணன்.
பேச்சாலும், எழுத்தாலும், செயல்பாடுகளாலும் தமிழ் இலக்கியதிற்கு நாளும் தொண்டு செய்த நற்றமிழ் அறிஞர் அவர்.
அவர் வாழ்ந்த காலமெல்லாம் தமிழ் இலக்கியம் பற்றியே பேசியும் எழுதியும் வாழ்ந்தவர்.
பணத்திற்கும் பதவிக்கும் ஏன் புகழுக்கும் கூட மயங்காதவர்; விலை போகாதவர். தனக்கென்று வாழ்வில் எந்த சொத்து சுகத்தையும் சேர்த்து வைக்காமல் வாழ்ந்து மறைந்த தியாகி இலக்கிய செம்மல் வல்லிக்கண்ணன்.
மரபான தமிழ் இலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் ஒரு சேர புலமை பெற்றவர். உருவத்தால் மிகவும் மெலிந்தவர். ஆனால் நெஞ்சுறுதியில் மிகவும் உயர்ந்தவர். தாழ்ந்த குரலில் பேசினாலும் வாழ்வில் யார்க்கும் தலை வணங்காதவர்.
வல்லிக்கண்ணன் திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி வட்டம் திசையன்விளை என்ற கிராமத்தில் 12-11-1920 அன்று பிறந்தார். இவரது தந்தையார் ரா.மு. சுப்ரமணிய பிள்ளை. தாயார் மகமாயி அம்மாள். நடுத்தரமான சைவ வேளாளர் மரபைச் சார்ந்தவர். இவர் பிறந்த உடன் இவருக்குப் பெற்றோர்கள் கோபாலகிருஷ்ணன் என்று தான் பெயர் சூடினார்கள். ஆனால் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும் போது இவர் பெயரை கிருஷ்ணசுவாமி என்று இவர் தந்தை பதிவு செய்து விடுகிறார். வல்லிக்கண்ணன் என்பது இவரின் புனைப்பெயரே! இவரது தந்தையார் உப்பளங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளராகப் பணியாற்றினார். வல்லிக்கண்ணனின் பத்தாவது வயதில் அவர் தந்தை இறந்து விட்டதால் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தார்.
வல்லிக்கண்ணன் பிறந்த ஊர் திசையின்விளைதான் என்றாலும் அவரது பூர்வீகம் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ராஜவல்லிபுரம் ஆகும். முதன் முதலில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற பேச்சாற்றல் மிக்க பேரறிஞரும், தமிழ் எழுத்தாளரும், பேராசிரியருமான ரா.பி. சேதுப்பிள்ளை பிறந்த ஊரும் இதே ராஜவில்லிபுரம்தான்.
இவருக்கு உடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்களும் ஒரு தம்பியும். இவர், இவரின் தாய்க்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். தந்தையார் உப்பளங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளராக அரசு பணியில் இருந்தததால், ஊர், ஊராக மாறுதலாகிச் செல்லும் நிலையில் இருந்தார். ஒரு வயது வரை திசையின்விளையில் வாழ்ந்தவர். இரண்டாவது வயதில் தூத்துக்குடியிலும் மூன்றாவது வயதில் ஒட்டப்பிடாரத்திலும் நான்காவது வயதில் கோவில்பட்டியிலும் வசிக்க நேர்ந்தது.
ஐந்தாவது வயதில் கோவில்பட்டியில் உள்ள ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இவரின் கல்விப் பயிற்சி தொடங்குகிறது. சில மாதங்கள் மட்டுமே, அங்குள்ள அண்ணாவியிடம் எழுத்துப் பயிற்சி பெற்றுக் கொள்கிறார். பிறகு அருகில் இருந்த ஒரு துவக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப் படுகிறார்.
சிறுபத்திரிக்கைகளுடனான அறிமுகம் இவருக்குச் சிறு வயது முதலே கிடைத்து விடுகிறது. நான்காம் வகுப்பு படிக்கும் போதே பரலி.சு.நெல்லையப்பரின் ‘லோபகாரி’ என்ற சிற்றிதழும் ‘ஒற்றுமை’ என்ற மாதப் பத்திரிகையும் அண்டை வீட்டுக்காரர்களால் இவருக்குப் படிக்கக் கிடைக்கிறது.
தமிழ்நாடு என்ற தினசரியையும் இவர் சிறுவயது முதலே படிக்க ஆரம்பிக்கின்றார். சுதந்திர சங்கு , காந்தி இதழ், ஜெயபாரதி, மணிக்கொடி முதலிய சிற்றிதழ்களும் சிறுவயதிலேயே படிக்கிறார்.
சிறுவயது முதலே துணிக்கடை மறியல், அன்னிய துணி எரிப்பு போன்ற சத்தியாகிரகப் போரட்டங்களை நேரில் காணும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. திருநெல்வேலியில் சத்தியமூர்த்தி, சோமயாஜுலு, திரிகூட சுந்தரம் பிள்ளை போன்ற சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் பேசும் பேச்சுக்களைக் கேட்க்கும் சந்தர்ப்பமும் சிறு வயதிலேயே அவருக்குக் கிடைத்தது.
சுதந்திர போராட்ட காலத்தில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டங்களில் முதலில் மகாகவி பாரதியாரின் சுதந்திரப் பாடல்களைப் பாடுவார்கள். அதே போல சுதந்திரப் போராட்ட ஊர்வலங்களிலும் பாரதியாரின் பாடல்களை உணர்ச்சி பூர்வமாகப் பாடிக்கொண்டு செல்வார்கள். அப்பாடல்களை சிறு வயது முதலே கேட்டதால் பாரதியாரின் பாடல்கள் மீது இவருக்கு தீவிர பற்றுதல் வந்தது.
1926 முதல் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள பெருங்குளம் என்ற ஊரில் இரண்டு, மூன்றாம் வகுப்பு கல்வியைக் கற்கிறார். இந்தப் பெருங்குளம் தான் எழுத்தாளர் அ. மாதவய்யா பிறந்த ஊராகும். நான்காம் வகுப்பை திருநெல்வேலி மந்திரமூர்த்தி உயர் நிலைப் பள்ளியில் முடிக்கிறார். ஐந்தாம் வகுப்பு முதல் பள்ளி இறுதித் தேர்வு (S.S.L.C.) முடிய பாளையங்கோட்டை தூய சவேரியர் உயர் நிலைப் பள்ளியில் பயில்கிறார்.
1937-ல் பள்ளி இறுதிப் படிப்பை முடித்த இவருக்கு பரமக்குடியில் வேளாண்மை விரிவாக்கப் பணியாளர் வேலை கிடைத்தது. எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் அந்த வேலையை உதறிவிட்டு முழு நேர எழுத்தாளனாக மாறினார். ஆரம்பத்தில் சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன், ஹனுமான் ஆகிய சிறுபத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார்.
மாணவப் பருவத்திலேயே இவர் சிற்றிதழ்களின் காதலனாக தீவிர வாசிப்பாளனாக இருந்ததால் பிற்காலத்தில் ‘வீடும் வெளியும்’ என்ற நாவலை எழுதுகிறார்.
இவரின் பக்கத்து வீட்டுக்காரரான ரங்கூன் பிள்ளை என்பவர் ஆனந்த விகடன் இதழ்களை ஆரம்பம் முதல் வருட வாரியாகப் ‘பைண்ட்’ செய்து வைத்திருக்கிறார். அவைகள் எல்லாம் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே இவருக்கு படிக்க கிடைத்தது.
உயர் நிலைப் பள்ளியில் காலடி எடுத்து வைத்த பிறகு, இவரின் வாசிப்புத் தளம் விரிவடைகிறது. மை மேகசீன், மேரி மேகசின் போன்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளும், பள்ளி நூலகத்திலேயே இவருக்குப் படிக்கக் கிடைக்கிறது. படிக்கிற காலத்தில் ஐந்தாம் வகுப்பு முதலே ‘நன் மாணக்கன்’ என்பதற்கான பரிசுகளை இவருக்குக் கொடுத்தார்கள். அப்பரிசுகளும் புத்தகங்களாகவே இருந்தன.
அந்தக் காலத்தில் பொழுது போக்கிற்கு மக்கள், நாடகம் பார்க்கச் சென்றார்கள். சென்னையைச் சேர்ந்த கன்னையா கம்பெனி திருநெல்வேலிக்கு வந்து அடிக்கடி பகவத் கீதை போன்ற பக்தி நாடகங்களை நடத்தியது. கேரளாவில் இருந்து ‘ஒயிட்வே’ என்ற சர்கஸ் கம்பெனிக்காரர்களும் அடிக்கடி பாளையங்கோட்டை வந்து ‘டேரா’ போட்டு சர்கஸ் காட்சிகளை நடத்தினார்கள். 1932-ல் பாளை மேட்டுத் திடல் மைதானத்திற்கு ஒரு ஆகாய விமானம் வந்து தரையிறங்கியது. அதன் உரிமையாளர் அதைக் காட்சிப் பொருளாக்கி அதை வெளியே நின்று பார்ப்பதற்கும் விமானத்தின் உள்ளே சென்று பார்ப்பதற்கும் என்று தனித் தனியே கட்டணங்களை வசூலித்தார். மாணவர்களும், பொதுமக்களும் திரளாகக் கூடி அவ்விமானத்தைக் கண்டு களித்தார்கள். இத்தகைய கேளிக்கைகளிலும் இவரின் மனம் ஈடுபட்டது. கிராமஃபோன் பெட்டிகள் புழக்கத்தில் இருந்த காலம் அது. அப்பெட்டிகளில் இருந்து வரும் பாட்டுகளிலும் ‘வ.க.’வின் மனம் லயித்தது. பேசாப் படங்கள் என்ற வசனமில்லாத ஊமைப் படங்கள் திருநெல்வேலியில் உள்ள பேலஸ்டிவேல்ஸ் தியேட்டரில் திரையிடப் பட்டது. அத்தகைய ஊமைப்படங்களையும் பார்த்து ரசித்தார் வ.க.
நான்காவது வகுப்பு படிக்கும் போதே சிறு பத்திரிகைகளைப் படிக்கத் தொடங்கியதால் அதில் உள்ள கதைகளைப் போல நாமும் எழுத வேண்டும் என்று ‘வ.க.’ நினத்து கதைகளை எழுத ஆரம்பித்தார்.
புதுமைப் பித்தன் கதைகள் “யாத்ரா மார்க்கம்” பகுதியில் வெளி வந்த இலக்கிய சர்ச்சைகள் நா.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, மௌனி முதலியவர்களின் கதைகள் இவரைப் பெரிதும் கவர்ந்தன. இத்தகைய கதைகளைப் போல தாமும் எழுத வேண்டும் என்று நினைத்து ‘வ.க.’வும் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். அக்கதைகளை உடனே பத்திரிக்கைகளுக்கு எப்படி அனுப்ப வேண்டும் என்ற ‘வழிமுறைகள்’ எதுவும் அவருக்குத் தெரியவில்லை. என்றாலும் தான் எழுதிய கதைகளை ஒரு சில வாசகர்கள் முன்பாவது வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே ‘இதய ஒலி’ என்ற பெயரில் தானே ஒரு கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கினார். அதை மாத இதழாகவும் கொண்டு வந்தார். அந்தப் பத்திரிகையின் பக்கங்களை நிரப்புவதற்காக தானே கதைகள், கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள் என்று அனைத்தையும் எழுதினார். இப்படித்தான் ‘வ.க’வின் எழுத்துப் பணியும், பத்திரிக்கைப் பணியும் ஒருசேர இவரின் பதினாராவது வயதிலேயே துவங்குகிறது. அன்றிலிருந்து படிப்பதும் எழுதுவதுமே இவரின் வாழ்க்கையாகிறது.
பள்ளி இறுதித் தேர்வை முடித்து விட்டு ஒரு வருடம் ஒன்பது மாதம் வீட்டில் எழுதுவதும் படிப்பதுமாக இருந்தவர்க்கு இராமநாதபுரம் மாவட்டம், பரமகுடியில் விவசாய டிமான்ஸ்ட்ரேட்டர் ஆஃபீசில் ஸ்டோர்கீப்பர் என்ற அரசுப் பணியில் சேர்ந்தார். வீட்டை விட்டு, தாயையும் சகோதரர்களையும் பிரிந்து முதன் முதலாக தனியாக வாழத் தலைபட்டது இங்கே தான். அருகில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டு ஆபீசிலேயே தங்கிக் கொள்கிறார். மாலை நேரதில் அருகில் உள்ள டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து டைப்ரைட்டிங்கும் கற்றுக் கொள்கிறார்.
ஓய்வான நேரத்தைப் படிப்பதிலும் எழுதுவதிலும் செலவு செய்கிறார். நவசக்தி, லோகசக்தி, பாரதசக்தி போன்ற இதழ்களில் 1939-ல் இவரின் எழுத்துக்கள் அச்சில் வெளிவருகின்றன. அப்போதுதான் வல்லிக்கண்ணன் என்ற புனைப்பெயரை தனக்குச் சூட்டிக்கொள்கிறார். அன்றிலிருந்து இவரின் படைப்புக்கள் ‘வல்லிக்கண்ணன்’ என்ற பெயரிலேயே பிரசுரமாகத் தொடங்கின.
பரமகுடியில் அரசுப்பணி புரிந்த காலக்கட்டத்தில் டைப்ரைட்டிங்கில் ‘லோயர்’ தேர்வு எழுதித் தேர்ச்சி பெறுகிறார். அத்தோடு இந்தி மொழியையும் கற்றுக் கொள்கிறார். இந்தி மொழிக் கதைகளைப் படித்துப் புரிந்து கொள்கிற, மொழிப்பெயர்க்கிற அளவுக்கு இந்தி மொழியிலும் பாண்டித்தியம் பெறுகிறார்.
சென்னையிலிருந்து சக்திதாசன் சுப்பிரமணியன் என்ற பத்திரிக்கையாளர் ஒருவர் பரமக்குடி வந்து வல்லிக்கண்ணனுடன் இரண்டு நாட்கள் தங்குகிறார். அவர் திரு.வி.கல்யாண சுந்தரனார் நடத்தி வந்த ‘நவசக்தி’ என்ற வார இதழின் உதவி ஆசிரியராகவும் ம.கி.திருவேங்கடம் என்பவர் நடத்தி வந்த லோக சக்தி, பாரத சக்தி என்ற இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பணியற்றிக் கொண்டிருந்தார். அப்பத்திரிக்கைகளின் வளர்ச்சிக்காகவும், சந்தா சேர்க்கவும், தமிழகம் எங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தவர், பரமக்குடிக்கும் வருகிறார். வல்லிக்கண்ணனின், எழுத்துக்களைப் படித்துப் பார்த்து விட்டு, அவரின் இலக்கிய ஆர்வத்தையும் தெரிந்து கொண்டு, “நீங்கள் இருக்க வேண்டிய இடம் அரசு அலுவலகம் அல்ல. சென்னையில் உள்ள ஏதாவது ஒரு பத்திரிக்கை அலுவலகமாகும். இப்போது ‘வட்டத் துவாரத்தில் சதுரமுளை’ போல பொருத்தமற்ற இடத்தில் உட்கார்ந்து பணி செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறி வல்லிக்கண்ணனின் மனதில் பத்திரிக்கையாளன் என்ற விதையை முதன் முதலில் ஊன்றி விடுகிறார். நாளாவட்டத்தில் அந்த விதை முளைத்து வளர்ந்து விருட்சமாகிவிடுகிறது.
1941-ல் பரமகுடியில் இருந்து மாற்றலாகி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் என்ற ஊருக்கு வருகிறார்.
ஸ்ரீவைகுண்டம் வந்த பிறகும் இவர் வழக்கம் போல் கதைகளையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். அரசுப் பணியில் இருந்து கொண்டு கதைகளை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பக்கூடாது என்று அவரின் மேலதிகாரி வல்லிகண்ணனை எச்சரிக்கிறார். ஆனால் வல்லிக்கண்ணன் தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கு தன் படைப்புகளை எழுதி அனுப்புகிறார்.
வல்லிகண்ணனின் பிடிவாத குணத்தைக் கண்ட அவரின் மேலதிகாரி, ‘இவர் சுதந்திர போரட்டத்தை ஆதரித்து கட்டுரைகள் எழுதுவதாக மேலிடத்திற்கு புகார் செய்கிறார். மேலிடத்திலிருந்து இவருக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் வருகிறது. ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு வருடம் ஏழு மாதங்கள் அரசு பணி புரிந்த பிறகு, மேலதிகாரியின் தொல்லைகள் தாங்க முடியாதலால் அரசுப் பணியை ராஜினாமா செய்கிறார்.
அவர் அரசுப் பணியைத் துறந்தது அவரின் தாயார் உட்பட அவரின் உறவினர்கள் அனைவருக்கும் பிடிக்கவில்லை. என்றாலும் அவரின் சிறிய சகோதரர் கோமதி நாயகம் மட்டும் “சரி உன் இஷ்டம் போல் எழுத்துத் துறையில் ஈடுபட்டு முன்னேறு” என்று ஆறுதல் கூறினார்.
கைவசம் இருந்த அரசுப் பணியையும் ராஜினாமா செய்து விட்டு ‘இதய ஒலி’ என்ற கையெழுத்துப் பத்திரிகையைத் தயாரித்தார். பத்திரிக்கையின் பக்கங்களை நிரப்ப அவரே, “நையாண்டி பாரதி, கோர நாதன், மிவாஸ்கி, சொனா முனா, பிள்ளையார்” என்று பல புதிய புனைப் பெயர்களைத் தனக்குத் தானே சூட்டிக் கொண்டு கதை, கட்டுரை, கவிதை என்று எழுதிக் குவித்தார்.
இக்கால கட்டத்தில் ‘நவசக்தி’யில் மாதம் தோறும் இவரின் சிறுகதை வெளிவந்தது. கலைமகள் இதழிலும் சில சிறுகதைகள் பிரசுரமாயின. புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, க.நா.சுப்பிரமணியம், ந.சிதம்பரசுப்பிரமணியன் போன்ற பிரபல மணிக்கொடி எழுத்தாளர்களின் கதைகள் அக்கால கலைமகளில் வெளியாயின. அத்தோடு, வல்லிக்கண்ணனின் கதைகளும் கலைமகளில் பிரசுரமானதால், தேர்ந்த இலக்கிய வாசகர்களின் கவனத்தையும் ‘வ.க.’ பெற்றார்.
1941-ல் திருநெல்வேலியில் ‘நெல்லை வாலிபர்கள் சங்கம்’ என்ற அமைப்பை ஆரம்பித்தார். அதில் தி.க.சிவசங்கரன் (‘இன்றைக்கு மூத்த எழுத்தாளர், இலக்கிய விமர்சகர்’) போன்றவர்கள் உறுப்பினராக இருந்தார்கள். அதே கால கட்டத்தில் தொ.மு.சி.ரகுநாதன் “மணி அரசுக் கழகம்” என்ற அமைப்பை ஏற்படுத்தி திருநெல்வேலியில் நடத்திக் கொண்டிருந்தார். அக்கழகத்தின் மூலம் ‘மணி அரசு’ என்ற கையெழுத்து இதழும் வெளிவந்து கொண்டிருந்தது.
‘வ.க.’ நடத்திய வாலிபர் சங்க ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப் பிள்ளை கலந்து கொண்டார். விழாவின் அழைப்பிதழில் இடம் பெற்றிருந்த ‘பேச்செல்லாம் தமிழினிலே பேசுங்கள்; ஏசுவதெல்லாம் தமிழினிலே ஏசுங்கள்’ என்ற ‘வ.க’வின் வாசகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
வ.க.வின் படைப்புக்கள் பலவும் தொடர்ந்து சென்னையில் இருந்து வெளிவந்த “நவசக்தி, பாரத சக்தி”, கோவையில் இருந்து வெளிவந்த “சினிமா உலகம்” புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘திருமகள் அணிகலம்’, திருச்சியில் இருந்து வெளிவந்த ‘கலா மோகினி’ போன்ற இதழ்களில் பிரசுரமாயின. அவைகள் அனைத்தும் சிறு பத்திரிக்கைகள் என்பதால், அவைகள் படைப்புகளுக்கு என்று சன்மானம் எதையும் அனுப்பவில்லை. ஆன்ந்த விகடன் பத்திரிக்கையில் வெளியான “புன்னகையும் புது நிலவும்” என்ற சிறுகதைக்காக அப்பத்திரிக்கை பதின்மூன்று ரூபாய் எட்டணா சன்மானம் அனுப்பியது. இதுவே எழுத்துத்துறையில் இவர் பெற்ற முதல் சன்மானமாகும். அதன்பின் காரைக்குடியில் இருந்து வெளிவந்த ‘இந்திரா’ என்ற மாத இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய ‘தெருக்கூத்து’ என்ற சிறுகதை முதல் பரிசைப்பெறுகிறது. அப்பத்திரிக்கை பரிசுத் தொகையாக நூறு ரூபாயை அனுப்பி வைக்கிறது. எழுத்துத் துறையில் ‘வ.க.’ பெற்ற முதல் பரிசுத் தொகை இதுவாகும்.
“கிடைத்த சர்க்கார் வேலையை விட்டு, விட்டு, இப்படி வீட்டில் இருந்து கொண்டு, கதைகள், கட்டுரைகள், என்று எழுதிக் கொண்டிருக்கிறானே” என்று இவரின் தாயார் உட்பட உறவினர்கள் பலரும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தார்கள்.
‘சக்தி’ பத்திரிக்கையின் ஆசிரியராக வை.கோவிந்தன் இருந்தார். உதவி ஆசிரியராக ‘தி.ஜ.ர.’ என்று அழைக்கப் படும் தி.ஜ.ரங்கநாதன் இருந்தார். சக்தி பத்திரிக்கையும் அப்போது தள்ளாட்டத்தில் தான் இருந்தது. எனவே அங்கும் வேலை காலி இல்லை ‘வ.க’வின் சகோதரர் எழுதிய கடிதம் சக்தி பத்திரிக்கைக்கு வந்திருந்தது. எனவே, தி.ஜ.ரா., வ.க.வின் சகோதரர் கோமதி நாயகத்திற்கு வ.க. “இங்கு வந்திருந்த விபரத்தையும், இங்கு பத்திரிக்கைத் துறையில் வேலை காலியில்லை எனவே அவரை திருநெல்வேலிக்கே திரும்ப அனுப்பி விடுகிறோம், அது வரை அவர் இங்கே தங்கி இருப்பார். அவரின் வழிச்செலவுக்குத் தேவையான பணத்தை அவர் பெயருக்கு ‘சக்தி’ காரியாலய முகவரிக்கே அனுப்புங்கள்” என்று கடிதம் எழுதுகிறார்.
சக்தியில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வீரவநல்லூர்க்காரர், சுந்தரம் என்பவர் விற்பனைப் பிரிவில் பணி புரிந்து வந்தார். அவர் காரைக்குடிக்கு அருகில் உள்ள நேமத்தான்பட்டியில் பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டிருக்கும் வீ.தி.சொக்கலிங்கம் என்பவருடன் வல்லிகன்னனை தங்க வைய்த்தார். வீ.தி.சொக்கலிங்கம் என்பவருக்கும் இலக்கியத்தில் ஈடுபாடு இருந்தது. அவரும் வீரவநல்லூரைச் சேர்ந்தவர்தான்.
ஒரு வாரம் கழிந்து திருநெல்வேலியில் இருந்து ‘வ.க.’ பெயருக்கு மணியார்டர் வருகிறது. அது வரை நேமத்தான்பட்டியில் உள்ள ஆசிரியருடன் தங்கிக் கொண்டு படிப்பது, எழுதுவது என்று பொழுதைக் கழிக்கிறார்.
மணியார்டர் மூலம் பணம் கைக்கு கிடைத்த பிறகு, அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு, திருநெல்வேலிக்கு பஸ்ஸில் செல்கிறார் தோல்வியுடன் வ.க. திநெல்வேலி திரும்பினாலும், சொல்லாமல் பிரியாமல் சென்ற மகன், “நலமாக வீடு தேடி வந்து விட்டானே!” என்று அவரின் தாய் மகிழ்கிறார்.
இதுவரை ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து, “நாம் தேடிப் போய் வேலைத் தாருங்கள் என்று கேட்கக் கூடாது. அவர்களாக அழைத்தால் தான் போக வேண்டும்” என்ற முடிவுக்கு வந்தார். ‘வ.க.’ தனக்குத் தெரிந்த பத்திரிக்கைகளுக்கெல்லாம் வேலை கேட்டுக் கடிதம் எழுதினார்.
புதுக்கோட்டையில் இருந்து வெளிவரும் ‘திருமகள்’ என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ரா.சி.சிதம்பரம் என்பவர் உடனே புறப்பட்டு வந்து பணியில் சேருமாறு கடிதம் எழுதினார். எனவே ‘வ.க.’ 1943 – ஜனவரி மாதக் கடைசியில் புதுக்கோட்டை போய்ச் சேருகிறார்.
ரா.சி.சிதம்பரம் ‘வ.க’வை அன்போடு வரவேற்று அவரை ‘திருமகள்’ பத்திரிக்கை அலுவலகத்தின் மாடியில் காலியாக இருந்த ஒரு அறையில் தங்கிக் கொள்ளச் சொல்கிறார். சாப்பாட்டிற்கும் அருகில் இருந்த ஒரு ஹோட்டலில் ஏற்பாடு செய்கிறார். இராம .மருதப்பச் செட்டியார் என்பவர் தான் பத்திரிக்கையின் உரிமையாளராக இருந்தார். பத்திரிக்கை சம்மந்தமான வேலைகளை ஒவ்வொன்றாய் சொல்லிக் கொடுத்தார். குறிப்பாக அச்சுக் கோர்த்து வந்த பிரதிகளில் உள்ள பிழைகளை எவ்வாறு நீக்குவது (புரூஃப் பார்ப்பது) என்று கற்றுக் கொடுக்கிறார். மாலை நேரத்தில் உலாவச் செல்லும் போது ‘வ.க’வையும் உடன் அழைத்துச் செல்கிறார். இலக்கியம் குறித்து இரண்டு பேரும் பேசி மகிழ்கிறார்கள்.
ஒரு மாதம் கழிந்த பிறகு ஒரு நாள் இரவு வெகு நேரத்திற்குப் பிறகு ரெட்டியார் பத்திரிக்கை அலுவலக மாடிக்கு வந்து ‘என்னைத் தேடி யாராவது ஒரு பெண் இங்கு வந்தாளா?’ என்று வ.க.விடம் கேட்கிறார்.
வ.க. ‘இல்லை’ என்று பதில் சொல்கிறார். அதற்குள் அந்தப் பெண்ணும் அங்கு வந்து சேர்கிறார். தூக்கலான மேக்கப் அவர் குடும்பப் பாங்கான பெண்ணில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லி விடுகிறது. அந்தப் பெண்ணைக் கண்டதும் ரெட்டியார் அவளுடன் சென்று விடுகிறார்.
“புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள கோகர்ணம் என்ற ஊரில் தாசிகள் சில பேர் வசிக்கிறார்கள்” என்று பேச்சோடு பேச்சாக ஒரு நாள் ரா.சி.சிதம்பரம் சொல்லி வைத்தது ‘வ.க.’வுக்கு நினைவுக்கு வருகிறது.
செட்டியார் போன பிறகு சிறிது நேரம் கழித்து ஒரு ஆள் வந்து “‘ஆச்சி’ உங்களைக் கூப்பிடுகிறார்” எங்கிறான். செட்டிநாட்டில், செட்டியார்களின் மனைவியை ‘ஆச்சி’ என்று அழைப்பது வழக்கம். இதெல்லாம் ‘வ.க.’வுக்கு அப்போது தெரியாது. வ.க. எதுவும் புரியாமல் கூப்பிட்டவர் பின்னால் போகிறார்.
ஆபீசுக்கு சற்று தொலைவில் நிற்கும்பெண் செட்டியாரின் மனைவி என்று அவரை அழைத்துக் கொண்டு சென்ற வேலைக்காரன் சொல்கிறான்.
வ.க.ஆச்சியின் அருகில் சென்றதும் அப்பெண், மிரட்டுகிற தொனியில், “சற்று நேரத்திற்கு முன் செட்டியார் இங்கு வந்தாரா? அவரைத் தேடிக் கொண்டு யாராவது ஒரு பெண் வந்தாளா?” என்று கேட்டுத் துளைத்தெடுக்கிறாள்
வ.க. வெள்ளந்தியாக நடந்ததை நடந்த படி ஆச்சியிடம் ஒளிவுமறைவின்றி கூறிவிடுகிறார்.
மறுநாள் செட்டியாரின் வீட்டில் பெரிய பூகம்பமே வெடித்து விடுகிறது. “செட்டியார் கோவலனைப் போல, அவர் விஷயத்தில் நீர் கண்டும் கணாதது போல் இருந்து கொள்ள வேண்டியது தானே! ஆச்சியிடம் ஏன் உள்ளதைச் சொன்னீர்?” என்று மறுநாள் ர.சி.சிதம்பரமும் வருத்தப் படுகிறார்.
‘வ.க.’வின் நிலமை தர்ம சங்கடமாகி விடுகிறது. ஆச்சியின் பெயரில் தான் சொத்து சுகம், வங்கிக் கணக்கு எல்லாம் இருக்கிறது. செட்டியார் வெறும் வெத்து வேட்டு தான். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஆச்சி பணம் கொடுப்பதை நிறுத்தி விடுகிறார்.
செட்டியார் பத்திரிக்கை நஷ்டத்தில் ஓடுகிறது என்று கணக்குக் காட்டி ஆச்சியிடம் இருந்து பணத்தை வாங்கி சின்ன வீட்டு செட்டப்புக்கு கொடுத்து வந்திருக்கிறார். இப்போது வெள்ளந்தியான ‘வ.க.’வின் கூற்றால் செட்டியாரின் ‘சாயம்’ வெளுத்து விட்டது. இடையில் அகப்பட்ட ‘திருமகள்’ பத்திரிக்கை தள்ளாட ஆரம்பித்து விட்டது. நாளாவட்டத்தில் , திருமகளில் வேலை பார்த்த அனைவரும் வேறு வேலை தேடிக் கொண்டு வெளியூர் செல்ல வேண்டிய நிலை வந்து விட்டது.
ஒரு நாள் வி.ரா.ராஜகோபாலன் என்பவர் புதுக்கோட்டைக்கு வந்து ‘வ.க.’வுடன் தங்கினார். திருமகள் பத்திரிக்கையின் நிலமையைப் பற்றி விசாரித்தார். அவரிடம் ‘வ.க.’ வும் உள்ள நிலமையை உள்ள படி கூறினார்.
வி.ரா.ராஜகோபாலன், “கோவையில் இருந்து வெளிவரும் ‘சினிமா உலகம்’ என்ற பத்திரிக்கையை பி.எஸ்.செட்டியார் என்பவர் நட்ததுகிறார். நான் அவருக்கு உங்கள் நிலமையை விளக்கிக் கடிதம் எழுதுகிறேன். அவரே உங்களுக்கு கடிதம் எழுதி வரச்சொல்வார். அதன் பின் நீங்கள் இங்கிருந்து சென்றால் போதும்” என்று சொல்கிறார். சொன்னபடியே சினிமா உலகம் பி.எஸ்.செட்டியாருக்கு கடிதமும் எழுதுகிறார்.
பி.எஸ்.செட்டியார் எழுதிய கடிதத்தை மறுநாள் இராம. மருதப்ப செட்டியாரிடம் காட்டி “நான் கோவை செல்ல ஆசைப் படுகிறேன்” என்கிறார் வ.க.
மருதப்பச்செட்டியாரும் வ.க.வுக்கு கைச்செலவுக்குப் பணம் கொடுத்து, வழியனுப்பிவைக்கிறார். ‘வ.க.’ புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு கோவை செல்கிறார். கோவையில் வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவ்வீட்டின் அறையே ‘சினிமா உலகம்’ பத்திரிக்கை அலுவலகமாக்ச் செயல்பட்டது. பி.எஸ். செட்டியார் வ.க.வை வரவேற்று பத்திரிக்கை அலுவலகமாகச் செயல்படும் அறையிலேயே தங்கிக் கொள்ளச் சொல்கிறார். சாப்பாடிற்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பாடு செய்கிறார்.
ஆரம்பத்தில் சென்னையில் இருந்து தான் ‘சினிமா உலகம்’ என்ற பத்திரிக்கை வெளிவந்தது. ‘பிலிம் இந்தியா’ என்ற ஆங்கிலப் பத்திரிக்கையைப் பார்த்து அதைப் போலவே தமிழில் இப்பத்திரிக்கையை பி.எஸ்.செட்டியார் நடத்தினார். இவரின் உண்மையான பெயர் பக்கிரிசாமி என்பதாகும். சென்னையில் ஒரு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தவர். பத்திரிக்கைத் தொழிலின்பால் உள்ள மோகத்தால், தான் பார்த்து வந்த ஆசிரியப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, இப்பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தி வந்தார். இப்பத்திரிக்கை சென்னையில் இருந்து வெளிவந்த போது அதன் வளர்ச்சிக்காக, புகழ் பெற்ற வசனகர்த்தாவான இளங்கோவன், கவி.க.அ.து. யோகியார், பாரதிதாசன் போன்றோர் உழைத்துள்ளார்கள்.
கோவையிலும், சென்னையைப் போல பல சினிமா கம்பெனிகள் செயல்பட்டு வந்ததால் தான் பி.எஸ்.செட்டியார் ‘சினிமா உலக’ப் பத்திரிக்கை அலுவலகத்தை சென்னையிலிருந்து கோவைக்கு மாற்றியிருந்தார்.
வல்லிக்கண்ணனின் அயராத உழைப்பையும், ஈடுபாட்டையும் பார்த்த பி.எஸ்.செட்டியார் ‘சினிமா உலகம்’ பத்திரிக்கையில் ‘ஆசிரியர்: பி.எஸ்.செட்டியார், உதவி ஆசிரியர்: வல்லிக்கண்ணன்’ என்று பிரசுரம் செய்தார்.
தபால் பார்ப்பது, புரூஃப் திருத்துவது, பத்திரிக்கைகளை அனுப்புவது ‘மேட்டர்’களை எழுதுவது என்று அத்தனை வேலைகளையும் தலை மேல் இழுத்துப் போட்டுக் கொண்டு ‘சினிமா உலகம்’ பத்திரிக்கைக்காக அயராது உழைத்தார் வல்லிக்கண்ணன் என்றாலும், மாதச் சம்பளம் என்று நிர்ணயித்து சம்பளம் எதுவும் வல்லிக்கண்ணனுக்கு செட்டியார் கொடுக்கவில்லை. ‘வ.க.’ கேட்ட போதெல்லாம் அவ்வப்போது கைச்செலவுக்குப் பணம் கொடுத்தார்.
அக்காலக்கட்டத்தில் தான் டி.கே.எஸ்.சகோதர்களின் நாடக சபை பாலக்காட்டில் முகாமிட்டு நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தது. டி.கே.எஸ். சகோதர்களை பேட்டிகாண வல்லிக்கண்ணனை பி.எஸ்.செட்டியார் பாலக்காட்டிற்கு அனுப்பினார். வல்லிக்கண்ணன் டி.கே.எஸ்.சகோதர்களைப் பேட்டி கண்டார். அன்று முதல் டி.கே.சண்முகத்திற்கு வல்லிக்கண்ணனை மிகவும் பிடித்துப் போயிற்று.
மார் ஒன்பது மாதங்கள் கோவையில் தங்கி இருந்தார் ‘வ.க’. ‘சினிமா உலகம்’ சினிமா சம்பந்தப்பட்ட பத்திரிக்கை என்பதால், ‘வ.க.’ வின் மனம் அதில் வெகுவாக ஈடுபடவில்லை என்றாலும், யாரும் குறை சொல்ல முடியாதபடி உழைத்தார்.
சென்னை சென்று ஏதாவது ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் பணியாற்ற வேண்டும் என்று அவர் மனம் எண்ணியது.
பி.எஸ்.செட்டியாரும், அவரின் குடும்பத்தாரும் ‘வ.க.’ விடம் மிகவும் அன்போடு பழகினார்கள். எனவே பி.எஸ்.செட்டியாரிடம் நேரடியாக தான் சென்னை செல்ல விரும்புவதை சொல்ல ‘வ.க.’வுக்கு மனம் வரவில்லை. என்றாலும் சென்னை செல்ல மனம் ஏங்கியது. எனவே தன் மன நிலையை விளக்கி ஒரு கடிதத்தை எழுதி செட்டியாரிடம் கொடுத்தார் வ.க.
கடிதத்தைப் படித்தாலும் கடின உழைப்பாளியான சம்பளம் வாங்காத ஊழியரான ‘வ.க.’வை இழக்க செட்டியாரின் மனம் இடம் தரவில்லை. எனவே, ‘அடுத்த மாதம் போங்கள்’ என்று ஆறுதல் மொழி கூறி வைத்தார்.
எனவே வேறு வழியில்லாமல் ‘வ.க.’, ‘நான் என் தாயாரைப் பார்த்து பத்து மாதங்களுக்கு மேலாகிறது. அவரைப் பார்க்க ஆசையாக இருக்கிறது’ என்று கூறி திருநெல்வேலிக்குப் போகப் போவதாகச் சொன்னார். இதற்கு மேல் இவரைத் தடுத்து நிறுத்த முடியாது என்று நினைத்த செட்டியார் ‘வ.க.’வை அனுப்பி விட்டார்.
‘வ.க.’ கோவையிலிருந்து புறப்பட்டு நேரே ரெயில்வே ஸ்டேசன் வந்து சென்னைக்குச் சென்று விட்டார். 1943- டிசம்பரில் நவசக்தியில் சேர்ந்தார். வ.ரா.(வ.ராமஸ்வாமி) நவசக்தியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. அப்போது சென்னையில் ரோடு நடுவில் இரும்புத் தண்டவாளங்கள் பதிக்கப்பட்டு இருந்தன. அதில் டிராம் வண்டிகள் ரயில் பெட்டி போல சென்றன. அதில் ஏறி மக்கள் பயணம் செய்து வந்தார்கள். ஓய்வு கிடைக்கும் நேரத்தில் வல்லிக்கண்ணன் டிராம் வண்டியிலும் பஸ்ஸிலும் பயணம் செய்து சென்னை மாநகரின் பல பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார். திருலோக சீதாராமன் என்பவர் ‘வ.க.’வை சில எழுத்தாளர்களின் வீட்டிற்கும் அழைத்துச் சென்று ‘வ.க.’வை அறிமுகப்படுத்தி வைத்தார். நாரணதுரைக் கண்ணன், கி.வா.ஜகந்நாதன், கா.ஸ்ரீ.ஸ்ரீனிவாஸாச்சார்யா பேராசிரியர் கே.சுவாமிநாதன், அ.கி.ஜெயராமன், சிதம்பரசுப்பிரமணியன், பா.ரா. புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களை நேரில் சந்தித்து உரையாடுகின்ற வாய்ப்பு ‘வ.க.’வுக்கு முதன் முதலில் இப்படித்தான் கிடைத்தது.
சென்னையில் உள்ள யுனிவர்சிட்டி லைபிரரி ‘வ.க.’வின் வாசிப்பு தாகத்தைத் தீர்த்து வைத்தது.
இந்நிலையில் நாடக நடிகர் டி.கே.சண்முகத்திடமிருந்து முதலாவது நாடகக் கலை மாநாட்டுக்குக்கான அழைப்பிதழும், “தாங்கள் நேரில் வந்து என்னைச் சந்தியுங்கள், உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்” என்ற கடிதமும் வந்தது.
மாநாட்டில் கலந்து கொள்ள ‘வ.க.’ ஈரோடு சென்றார். நாடகக் கலை விழா மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு பொருளாதார மேதை ஆர்.கே.சண்முகம் செட்டியார், தலைமை வகித்தார். சி.என்.அண்ணா துரை, என்.எஸ்.கிருஷ்ணன் முதலியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மாநாட்டில் நாடகக்கலையை வளர்க்க ‘நாடகம்’ என்றொரு இதழை நடத்துவது என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“‘நாடகம்’ என்ற இதழின் ஆசிரியர் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று நடிகர் டி.கே.சண்முகம் ‘வ.க.’வை கேட்டுக்கொண்டார். ஆனால் டி.கே.எஸ்.ஸின் அந்த வேண்டுகோளை ‘வ.க.’ ஏற்க மறுத்து விட்டார். அதனால் ‘நாடகம்’ என்ற இதழ் துவங்கும் எண்ணம் முளையிலேயே கருகியது.
ஈரோட்டில் இருந்து சென்னை வந்த ‘வ.க.’வை அ.வெ.ர.கி. செட்டியார் சந்தித்து “துறையூரில் இருந்து வெளிவரும் கிராம ஊழியன் பத்திரிக்கையில் பணிபுரிய வாருங்கள்” என்று அழைத்தார். ‘வ.க.’வும் கிராம ஊழியனில் பணிபுரிய விரும்பினார். எனவே நவசக்தியின் ஆசிரியர் சக்திதாசனிடம் விடைபெற்றுக் கொண்டு ‘வ.க.’ 1944 – பிப்ரவரி இறுதியில் துறையூர் சென்றார்.
திருச்சிராப்பள்ளியில் இருந்து 28 மைல் தொலைவில் உள்ள சின்னஞ்சிறு கிராமம் துறையூர் ‘சாவடி’ போன்ற நீளமான ஓட்டுக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த அச்சகத்தில் ‘கிராம ஊழியன்’ என்ற பத்திரிக்கை அச்சிடப் பட்டது. பத்திரிக்கை பெயருக்கு ஏற்ற படி கிராமத்தில் இருந்து வெளிவந்தது. இங்கு தான் ‘வ.க.’வுக்கு மாதம் ரூபாய் 25 சம்பளம் என்று பேசி ஊதியம் வழங்கப் படுகிறது. அத்தோடு நியமன உத்தரவும் தரப்பட்டது.
அ.வெ.ர.கி.செட்டியாரும், திருலோகசீத்தாராமும் பத்திரிக்கையின் நிர்வாக விஷயங்களைக் கவனித்துக் கொண்டார்கள். கு.பா.ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், கி.ரா.கோபாலன் போன்ற கும்பகோணத்து எழுத்தாளர்களின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், படைப்புகள் வந்தன. கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த கோபுலு, ஸாரதி போன்றவர்கள் பிரசுரிக்கத் தேர்ந்தெடுத்த படைப்புகளுக்குப் பொருத்தமான ஓவியங்களை வரைந்து கொடுத்தார்கள். ‘கு.ப.ரா.’, நா.பிச்சமூர்த்தி என்ற இலக்கிய இரட்டையர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அப்போது தான் ‘வ.க.’வுக்குக் கிடைத்தது. சிட்டி, பெ.கோ.சுந்தர்ராஜன் போன்ற எழுத்தாளர்களின் நட்பும் அவருக்கு இங்கே கிடைத்தது. ‘தி.ஜா’வின் முதல் நாவலான ‘அமிர்தம்’ கிராம ஊழியனில் தான் தொடராக வெளி வந்தது
‘நையாண்டி பாரதி’ என்ற புதிய புனைப்பெயரில் ‘வ.க.’ சமூக விமர்சனம் சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ந்து கிராம ஊழியனில் எழுதினார். ‘பாரதிதாசனின் உவமை நயம்’ என்று வ.க. கிராம ஊழியனில் ஒரு தொடர்கட்டுரை எழுதினார். பாவேந்தரே அக்கட்டுரைகளைப் படிக்கிறார். ஒரு முறை ‘வ.க.’ வை நேரில் சந்தித்த போது பாவேந்தர் “பார்க்க சின்னப் பையன் மாதிரி இருக்கிறே! நீயா இக்கட்டுரைகளை எழுதினாய்?” என்று ஆச்சிரியத்துடன் வினவுகிறார்.
அத்தோடு, “கட்டுரை எழுதுவதோடு நிறுத்திக்கொள், உன் போட்டோவை பத்திரிக்கையில் வெளியிடாதே!” என்று ஆலோசனையும் கூறுகிறார்.
‘இலங்கையில் வாழ்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை வாங்கி கிராம ஊழியனில் பிரசுரிக்க வேண்டும்’ என்று நினைத்த வல்லிகண்ணன் இலங்கை எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதினார்.
அப்போதைய இலங்கையின் முன்னோடி தமிழ் எழுத்தாளர்களான சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் போன்றோர் சிறுகதைகளையும் சோ.தியாகராசா, ச.அம்பிகைபாலன் போன்றவர்கள் கட்டுரைகளையும் அனுப்பினார்கள்
கிராம ஊழியன் இதழில் அக்கட்டுரைகள் தொடர்ந்து பிரசுரமாயின.
இப்படி இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளத் தமிழ் நாட்டு வாசகர்கள் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார்.
அதன் பின்னர் பாரதியாரின் கவிதைகளை மையமாகக் கொண்டு “பாரதி அடிச் சுவட்டில்...” என்ற கட்டுரையை தொடராக எழுதினார், அவை வாசகர் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.
வல்லிக்கண்ணன்” எனும் நூலில் வல்லிக்கண்ணன் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களின் பட்டியல் இது.[3]
1. கல்யாணி முதலிய சிறுகதைகள் - 1944
2. நாட்டியக்காரி - 1944
3. உவமை நயம் (கட்டுரை) - 1945
4. குஞ்சலாடு (நையாண்டி பாரதி ) - 1946
5. கோயில்களை மூடுங்கள்! (கோர நாதன்) கட்டுரை - 1946
6. பாரதிதாசனின் உவமை நயம் - 1946
7. ஓடிப் போனவள் கதை (சொக்கலிங்கம்) - கதை - 1948
8. அடியுங்கள் சாவுமணி (மிவாஸ்கி) கட்டுரை - 1947
9. சினிமாவில் கடவுள்கள் (கோரநாதன்) கட்டுரை -1948
10. மத்தாப்பு சுந்தரி (கதை) - 1948
11. நாசகாரக் கும்பல் (நையாண்டி பாரதி) நாடகம் - 1948
12. ராதை சிரித்தாள் - 1948
13. கொடு கல்தா (கோரநாதன்) கட்டுரை - 1948
14. எப்படி உருப்படும்? (கோரநாதன்) கட்டுரை - 1948
15. விடியுமா? நாடகம் - 1948
16. ஒய்யாரி (குறுநாவல்) - 1949
17. அவள் ஒரு எக்ஸ்ட்ரா (குறுநாவல்)- 1949
18. கேட்பாரில்லை (கோரநாதன்) கட்டுரை - 1949
19. அறிவின் கேள்வி (கோரநாதன்) - கட்டுரை - 1949
20. விவாகரத்து தேவைதானா ( கட்டுரை) - 1950
21. நல்ல மனைவியை அடைவது எப்படி? (கட்டுரை) - 1950
22. கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா ? (கட்டுரை) - 1950
23. கல்யாணம் இன்பம் கொடுப்பதா? இன்பத்தைக் கெடுப்பதா? - 1950
24. அத்தை மகள் (குறுநாவல்) - 1950
25. முத்தம் (குறுநாவல்) - 1951
26. செவ்வானம் (கோரநாதன்) நாவல் - 1951
27. கடலில் நடந்தது ( கார்க்கி கதைகள் (மொழியாக்கம் )- 1951
28. இருளடைந்த பங்களா (கதை) - 1952
29. வல்லிக் கண்ணன் கதைகள் (கயிலைப் பதிப்பகம்)
30. நம் நேரு (வரலாறு) - 1954
31. விஜயலட்சுமி பண்டிட் (வரலாறு) - 1954
32. லால்ஸ்டாய் கதைகள் (மொழியாக்கம்)- 1957
33. சகுந்தலா (நாவல்) - 1957
34. கார்க்கி கட்டுரைகள் (மொழியாக்கம்) - 1957
35. சின்னஞ்சிறு பெண் (மொழியாக்கம்) - 1957
36. தாத்தாவும் பேரனும் (மொழியாக்கம் ) - 1959
37. விடிவெள்ளி (குறுநாவல்) - 1962
38. அன்னக்கிளி (நூல்) - 1962
39. ஆண் சிங்கம் (சிறுகதைகள்) - 1964
40. முத்துக் குளிப்பு (கட்டுரைகள் ) - 1965
41. வசந்தம் மலர்ந்தது (நாவல்) - 1966
42. வீடும் வெளியும் (நாவல்) - 1967
43. அமர வேதனை (கவிதை) - 1974
44. வாழ விரும்பியவன் (சிறுகதை)- 1975
45. புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (கட்டுரை) - 1977
46. ஒரு வீட்டின் கதை (நாவல்) - 1979
47. காலத்தின் குரல் (60 கேள்வி பதில்) - 1980
48. சரச்வதி காலம் கட்டுரை) - 1980
49. நினைவுச் சரம் (நாவல்)- 1980
50. அலைமோதும் கடல் ஓரத்தில் (நாவல்) - 1980
51. பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை (கட்டுரை) - 1981
52. இருட்டு ராஜா (நாவல்) - 1985
53. எழுத்தாளர்கள்-பத்திரிககள்- அன்றும் இன்றும் (கட்டுரை) - 1986
54. ராகுல் சாங்கிருத்யாயன் (சாகித்ய அகாடமி B.B.சிற்பி) -1986
55. சரஸ்வதி காலம் - 1986
56. புதுமைப்பித்தன் (சாகித்ய அகாடமி B.B.சிற்பி) - 1987
57. வாசகர்கள் விமர்சகர்கள் (கட்டுரை) - 1987
58. மக்கள் கலாசாரத்த மண்ணாக்கும் சக்திகள் - 1987
59. வல்லிக் கண்ணனின் போராட்டங்கள் (கட்டுரை) - 1988
60. அருமையான துணை (சிறுகதைகள்) - 1991
61. மன்னிக்கத் தெரியாதவர் (குறுநாவல் தொகுப்பு) - 1991
62. தமிழில் சிறு பத்திரிகைகள் (கட்டுரை) - 1991
63. வல்லிக் கண்ணனின் கதைகள் (மணியன் பதிப்பகம்) - 1991
64. மனிதர்கள் சிறுகதைகள் - 1991
65. ஆர்மீனியன் சிறுகதைகள் (மொ.பெ) - 1991
66. சுதந்திரப் பறவைகள் (சிறுகதைகள்)- 1994
67. சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொ. பெ.)-995
68. சமீபத்திய தமிழ் சிறு கதைகள் ( N. B. T.தொகுப்பு )
69. பெரிய மனுஷி (சிறு கதை N.B.T.(பால புத்தக வரிசை ).
70. வல்லிக் கண்ணன் கடிதங்கள் (கடிதங்கள் ) - 1999
71. தீபம் யுகம் (கட்டுரை) - 1999
72. வல்லிக்கண்ணன் கதைகள் (சிறுகதைகள் - இராஜராஜன் பிரசுரம்)- 2000
ஆண் சிங்கம், அமர வேதனை, ராகுல் சாங்கிருத்யாயன் உள்ளிட்ட மொத்தம் 75 நூல்களை எழுதியுள்ளார்.
பாரதிதாசனின் உவமை நயம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், சரஸ்வதி காலம், பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை ஆகிய படைப்புகள் இவரது இலக்கிய அடையாளங்களாகக் கருதப்பட்டன. சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
சுமார் 75 ஆண்டு காலம் இலக்கியத்துக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வல்லிக்கண்ணன் 2006-ம் ஆண்டு 86-ம் வயதில் மறைந்தார்.
---------------------------------------------------
கருத்துரையிடுக