கூகுளில் தேடுவது எப்படி?

 "எப்படி? எப்படி ?"-4

-புத்தம் புதிய தொடர்.




 kundrilkumar@gmail.com

         பிரபல எழுத்தாளர் குன்றில் குமார் அவர்கள் வழங்கும் "எப்படி? எப்படி ?"-புத்தம் புதிய தொடர்.

 நெல்லைகவிநேசன் டாட் காம் இணையதளத்தில் முதல்முறையாக எழுத்தாளர் குமார் அவர்கள் தொடர் வழங்குகிறார்.

     இந்த தொடரில் ஒவ்வொரு நிகழ்வுகளும் எப்படி  நிகழ்த்தப்படுகின்றன ? என்பதை  விளக்கி அதற்கான காரணத்தையும் அருமையாக படம் பிடிக்கிறார், பிரபல எழுத்தாளர் குன்றில் குமார்


கூகுளில் தேடுவது எப்படி?



உலகில் அனைவருக்குமான பொது நண்பன் யார் என்று கேட்டால் பட்டென்று சொல்லிவிட முடியும் ‘கூகுள்’ என்று.

நண்பன் என்றால் நட்பு மட்டுமல்ல பிரிவும் இயற்கை தான். அதிலும் மிக நெருங்கிய நட்பு என்றால் கேட்கவே வேண்டாம். அடிக்கடி சண்டை வரும். சச்சரவுகள் வரும். ஏசுதல், திட்டல், வசவு பொழிதல் எல்லாமே சர்வசாதாரணமாக நடக்கும்.

இப்படி அவர்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்தால் இந்தியா _ பாகிஸ்தான் சண்டையைப் போலவே மிகப் பலமாக இருக்கும்.

ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் நட்பு கொள்வது என்பது நடக்கவே நடக்காது என்று அழுத்தமாகவே சொல்ல முடியும்.

அதேநேரத்தில் நண்பர்களுக்குள், அதிலும் மிக நல்ல நண்பர்களுக்கு இடையில் நடக்கும் சண்டை, அதே வேகத்தில் வேகமாக மறைந்தும் போகும். நட்பு மேலும் இறுக்கமாகிவிடும்.

இதுதான் யதார்த்தம்.

இதுதான் நிஜம்.

இதுதான் உண்மை.

அப்படிப்பட்ட நட்புதான் நமக்கும் கூகுளுக்கும் இடையே இருப்பதும். 

கூகுள் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஓர் அம்சமாகிவிட்டது.

தவிர்க்கவே முடியாத நண்பன்.

இரத்தமும் சதையுமாக ஒட்டிக்கொண்ட அதனுடனான நட்பை எப்படி முறித்துக் கொள்ள முடியும்?

எங்கோ ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒருவரைச் சந்திக்கச் சென்றால் அதற்குச் சரியான வழித்தடத்தைக் காண்பித்து நமக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது.

தமிழ்ச் சொல்லுக்கே பொருள் புரியாமல் தடுமாறினால் இதுதான் அர்த்தம் என்று நமக்குப் பாடம் புகட்டுகிறது.

மருத்துவர் கொடுத்த மருந்து சரியானதுதானா என்கிற சந்தேகம் எழுந்தால் அதையும் தீர்த்து வைக்கிறது.

இப்படி எத்தனையோ வகையில் நமக்கு உற்ற நண்பனாகத் திகழும் அந்த கூகுளில் தேடுவது எப்படி என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம். 

கூகுளில் நீங்கள் எந்த இடத்தைத் தேடினாலும் முதலில் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் போன்ற பொதுவான இடத்துடன் உங்கள் தேடலை எளிய முறையில் தொடங்கவும்.  இன்னும் தேவைப்பட்டால் விவரிக்கும் வார்த்தைகள் சிலவற்றை  சேர்த்துக் கொண்டு தேடவும்.

ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, குறிப்பிட்ட இடத்தில் உள்ள தயாரிப்பையோ நீங்கள் தேடினால் அந்த இடத்தைச் சேர்த்துத் தேடவும்.



உதாரணத்திற்கு போத்தீஸ் தி.நகர். 

தட்டச்சு முறையில் தேடுவதைப் போல குரல் மூலமும் தேடலாம். ‘ஓகே கூகுள்’ என்று சொல்லிவிட்டுத் தேடலைத் தொடங்க வேண்டும்.

 குரல் மூலம் தேடும்போது வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒன்றைத் தேடும்போது அந்த பாக்ஸில் காணப்படக்கூடிய பொருத்தமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து தேடுவது நல்லது. அப்போது உங்கள் தேடலுக்கு மிகச் சரியான விடையைப் பெற முடியும்.

ஒருவேளை நீங்கள் தட்டச்சு செய்யும்போது எழுத்துப் பிழையோ, வாக்கியப் பிழையோ இருக்கிறது என்றால் அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். சரியான, தகுந்த எழுத்து அல்லது வாக்கியத்தை கூகுள் அமைத்து உங்கள் பிழையைத் திருத்திக் கொள்ளும்.

ஒன்றைத் தேடும்போது அது இருக்கும் இடம் அல்லது அருகில் உள்ள முக்கியப் பெரிய இடத்தைக் குறிப்பிட வேண்டும். உதாரணமாக உங்கள் பகுதியில் ‘வானிலை’ பற்றி அறிய விரும்பினால் ‘வானிலை சிறுசேரி’ என்று தேடலாம். ஒருவேளை சிறுசேரி பெயரைக் கொண்டு கூகுளால் தேட முடியவில்லை என்றால் அருகில் உள்ள ‘சென்னை மீனம்பாக்கம்’ என்று தேடினால் பதில் கிடைக்கும்.

பணத்தின் மதிப்பு என்னவென்று எளிதான கணக்கீட்டைக் கூகுள் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்கள் கணவரோ, மனைவியோ, மகனோ, மகளோ வெளிநாட்டில் இருந்தால் அவர்கள் வாங்கும் பணம் இந்தியப் பணத்திற்கு மாறுபடும். அந்த வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக துபாயில் பணத்தை திர்ஹாம் என்பார்கள்.  அவர்கள் வாங்கும் சம்பளம் 10 ஆயிரம் திர்ஹாம் என்றால் நம் இந்திய ரூபாயில் அதன் மதிப்பு என்னவென்று கூகுள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.

திரைப்படம், பாடல்கள், நடிகர், நடிகைகள் என்று அத்தனைத் தகவல்களையும் கூகுள் உங்களுக்கு சிரித்த முகத்துடன் தருகிறது.

கண் டாக்டர் உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் இருக்கிறார்களா என்று கேட்டால் பதில் கிடைக்கிறது. நல்ல கண் டாக்டர் யாரென்று வினவினால் வரிசையிட்டு உங்களுக்கு உதவுகிறது.

ரிச்சி தெருவில் ஒரு சிறிய கடையில் உங்களுக்குத் தேவையான பொருள் கிடைக்கிறதா என்பதைக்கூட கூகுள் உங்களுக்குத் தெளிவாகச் சொல்கிறது.

உங்கள் படிப்பு, தகுதிக்குத் தகுந்த வேலை எங்கே இருக்கிறது என்பதற்கு கூகுளில் தேடி விடைபெற முடியும். வேலை வாய்ப்புகளை வீட்டில் கால்மேல் கால் போட்டபடி தேடும் சுகமான வாய்ப்பு என்பது எத்தனை அரிய நிகழ்வு!

சென்னையிலோ, தமிழகத்திலோ மட்டுமல்ல அகில இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் உள்ள வேலை வாய்ப்புகளைப் பற்றிய விவரங்களை அள்ளி வழங்குகிறது கூகுள்.



இணையம் முழுவதிலும் உள்ள நிறுவனங்களில் இருந்தும் வேலை வாய்ப்புகளுக்கான தளங்களில் இருந்தும் வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்களைக் கூகுள் நேரடியாகப் பெற்று நமக்குத் தருகிறது.

உங்கள் இருப்பிடத்திற்கு அடுத்தத் தெருவில் உள்ள பெரிய உணவகத்தில் வேலை காலி இருக்கலாம். ஆனால் அது உங்களுக்குத் தெரிந்திருக்காது. ‘அருகில்’ என்று குறிப்பிட்டு வேலை தேடினால் அந்த உணவகத்தில் காலியாக இருப்பதை கூகுள் சொல்லும்.

வீட்டிலிருந்தபடியே பணிபுரிதல் என்று தேடினால் அதற்கான வாய்ப்புகளும் கிடைக்கிறது. ஆனால் இதில் ஏமாற்று வேலை செய்பவர்களும் உண்டு. அவர்களைப் பற்றிக் கூகுளுக்குத் தெரியாது. நாம் தான் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

அன்றைய நாட்களில் வாடகைக்கு வீடு தேடுவது என்பது மிகக் கடினமாக இருந்தது. சுடுவெயிலையும் பொருட்படுத்தாமல் நடையாய் நடந்து ‘டூ லெட்’ பலகை மாட்டப்பட்ட வீடுகள் அனைத்திலும் ஏறிஇறங்க வேண்டும்.

மட்டுமல்லாமல் அந்த ஏரியாவில் வீடு புரோக்கர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மூலமாகத் தேட வேண்டும். வீடு அமைந்தால் ஒரு மாத வாடகையோ அல்லது பாதி மாத வாடகையோ அவர்களுக்கு கமிஷனாகக் கொடுக்க வேண்டும்.

இந்த மாதிரியான பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைத்து விட்டது கூகுள். அதில்போய் வாடகை வீடு குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறதா என்று தேடினால் அது வாரி இறைக்கிறது மிகப் பெரிய லிஸ்டை.

கூகுளில் ஏதாவது தேட வேண்டும் என்றால் அந்த வார்த்தையைத் தட்டச்சு செய்து தேடலாம். ஒருவேளை நமக்கு ஒரு விலங்கின் உருவமும், அதன் படமும் மட்டுமே உள்ளது என்று வைத்துக் கொள்வோம் அது என்ன விலங்கு என்று தெரிய வேண்டும் என்றால் அதை எப்படித் தேடுவது?

இதற்கு கூகுளில் ‘ரிவர்ஸ் இமேஜ்’ என்ற தேடல் வழிமுறைகள் உள்ளது. இதைப் பயன்படுத்தி தேடலுக்கான விடையைத் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த ‘ரிவர்ஸ் இமேஜ்’ஐப் பயன்படுத்துவது எப்படி?

கூகுள் தேடலுக்குள் நுழைந்ததும், அதன் மேலே வலது புறத்தில் ‘இமேஜஸ்’ என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும் 

பின்னர் அதை கிளிக் செய்தவுடன் கூகுள் ‘ரெஃப்ரஷ்’ ஆகி மீண்டும் ஓபன் ஆகும். 

அப்போது கூகுள் தேடுதளத்தில் தட்டச்சு செய்யும் இடத்தில் கேமரா இமேஜ் காட்டும், அதை கிளிக் செய்யவும். 

மெனு பட்டனில் இமேஜ் அப்லோட், இமேஜ் யுஆர்எல் என்று காட்டும். அதன்மூலம் இமேஜ் அப்லோட் செய்ய வேண்டும்.

அந்த இமேஜ் அப்லோட் செய்த உடன் இமேஜ் அளவு, அதன் விவரம் காட்டப்படும் அதோடு மட்டுமின்றி இமேஜி-ல் காட்டப்படும் காட்சி, அதாவது விலங்கு குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும்.

இதுபோன்று பலப்பல விவரங்கள்.

ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல?

ஓராயிரம் கிடையாது, லட்சங்கள் கிடையாது, கோடிகள் கிடையாது..... அதற்கும், அதற்கும் மேலான தகவல்களும், விவரங்களும் கூகுள் தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால் கூகுள் ஒரு அறிவுக்களஞ்சியம்.

அது அனைத்தும் அறிந்த ஆசான்.

பயனுள்ள விதத்தில் அதைப் பயன்படுத்தினால் எதிர்காலம் உங்கள் விரல் நுனியில்.


                                                     ---------------------------------


Post a Comment

புதியது பழையவை