அனைவருக்கும் இலட்சியம்

அனைவருக்கும் இலட்சியம்

*நூல் அறிமுகம்*

                                                            

முத்தாலங்குறிச்சி காமராசு,

 தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளர்,         இந்த நூலின் ஆசிரியர்  டாக்டர் ஜான்சி பால்ராஜ் , எனது அன்பு தங்கை. தென் மாவட்டத்தின் மிகப்பெரிய ஆளுமை எழுத்தாளரான  ஆ.சிவசுப்பிரமணியன் அய்யாவின் சிஷ்யை.  

        கிறிஸ்தவ வரலாற்று நூல்களையும், சமூகம் சார்ந்த நூல்களையும் படிக்கத் தொடங்கி, அவற்றைக் குறித்து எழுதித்  தமிழுலகில் எழுத்தாளராக அறிமுகமானவர். 

        அதன் பின் தனது  எழுத்து உலகத்தினை விரித்து *மாட்டு வண்டி* குறித்து அருமையான ஆய்வு நூலை எழுதிப் பிரபலமானவர். இதுவரை  நூல்கள் பல எழுதியதோடு மட்டுமல்லாமல் பல்வேறு இதழ்கள்,பத்திரிக்கைகள்,  மற்றும்  சிறப்பாக உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும்  இணையத்தள வழி கருத்தரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு இளைய சமூகத்தை இலட்சியத்திற்கு நேராக வழிநடத்திக் கொண்டிருப்பவர்.

  டோனாவூர் உவாக்கர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் இவர் நல்ல குடும்பத் தலைவியாக விளங்கிக் கொண்டே சமூகநல நூல்களையும் எழுதி வருகிறார்.

        நிச்சயம் இதுபோன்ற  உழைப்புள்ள பெண்கள் தமிழகத்தில் ஒரு சிலரே உள்ளனர், அவர்களுள் தங்கை டாக்டர் ஜான்சி பால்ராஜ் அவர்களும் ஒருவர் என்றால் மிகையாகாது.

  இவரின் *அனைவருக்கும் இலட்சியம்* என்ற  இந்த நூல் தன்னம்பிக்கையை  ஒவ்வொருவர் மனதிலும் விதைக்கும் அற்புத நூல்.

          *இலட்சிய உருவாக்கம்* என ஆரம்பித்து, இலட்சியம் நம்மை எப்படி அழகாக்குகிறது என்பதைத் தெள்ளத்தெளிவாகக் கூறுகிறார். அதோடு மட்டுமல்லாமல் இலட்சிய உருவாக்கம் மிக எளிதானது என்பதை மிக அழகாக எழுதியுள்ளார்.         தனக்குள் இருக்கும் திறமைகளை’ கவனித்து அதைவெளிக்கொணர அறியாதவர்கள் அல்லது கண்டு கொள்ளாமல் விட்டு விடுபவர்கள் தான் தனக்குள் இருக்கும் அதே திறமைகளை உடைய மற்றவர்களை தங்களது பார்வையில் ஒரு ஹீரோவாக காண்பார்கள். அவர்களது செயல்களால் வியப்படைவார்கள். ஈர்க்கப்படுவார்கள்  என்று எழுதியிருக்கிறார். உண்மையிலேயே இன்று 98 சதவீத இளைஞர்கள் தங்களுக்குள் இருக்கும்  திறமைகளை உணராமலேயே இருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஒரு உதாரணமே போதுமானது. 

         அதுபோலவே இன்று  இலட்சியத்திருட்டு என்பது நாகரீகமாகி விட்டது. யாரோ எழுதிய குறுஞ்செய்திகளை நமது பெயரிட்டு மிகச் சுலபமாக  சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறோம். அதைக் கருத்தில் கொண்டு அதுபோலவே இலட்சிய திருட்டும் அமைந்து விடுகிறது.இதனால் ஏற்படும் தோல்வியைக் குறித்தும்  நுட்பமாக ஆசிரியர் சுட்டிக்காட்டும் விதம் அற்புதம்.

  சரி. இதையெல்லாம் எப்படி  மாற்றுவது. அதற்காக நாம் என்ன செய்யவேண்டும். இதையும் அவர் ஆசிரியராக இருப்பதால் அவரது அனுபவதிலிருந்து கூறுகிறார்.  அதாவது ஒருவன் ஆறாம்வகுப்பு படிக்கும் போதே  எந்த பாடத்தில் சிறந்து விளங்குகிறான். இவன் மேல்நிலையில்  என்ன பாடப்பிரிவில் சேருவான் என்பதைக் கூட கணிக்க முடியும் என்கிறார்.

  அடுத்து அத்தியாயமாக குடும்பமும் இலட்சிய உருவாக்கமும் என்ற தலைப்பில் நூல் நகருகிறது. பெற்றோரே முதல் ஆசிரியர் எனத் தலைப்பிட்டு தன்னம்பிக்கையுடன் இந்தப்  பகுதி  அறிவுப் புரட்சியை ஏற்படுத்துகிறது. தன்னை அறியச் செய்வது எது.? நம்முடைய எண்ணக்குவியல் என்ன சொல்கிறது , மனவளம் மிக்க சமூகத்தினால் என்ன மாற்றம் நிகழ்கிறது என இந்த இயலில் அவர் அலசி ஆய்வு செய்கிறார். அதற்கான  தீர்வையும் மிகச்சிறப்பாகச் கூறுகிறார்.

   இயல் 3ல் இலட்சிய உருவாக்கதில் ஆசிரியர்கள் என்ற தலைப்பிடுகிறார். ஒவ்வொருவருவரது இலட்சியமும் நிறைவேறும் இடமாகவோ அல்லது அது ஆரம்பிக்கும் இடமாகவோ  பள்ளிக்கூடம் தான் விளங்கும்.  ஆகவே இந்த இயலில் அதைப் பற்றி ஆரம்பித்து  நூலை நகரச்செய்கிறார்.  திறனறிதல், எதையும் இலட்சியமாக்கல்,.... என்ற ஆய்வோடு, தனது அனுபவத்தினையும் பகிர்கிறார்.

    அதோடு மட்டுமல்லாமல் லட்சியத்தில் ஏற்படும் தடைகளையும் நம்மிடம் பகிருகிறார் நூலாசிரியர். இறுதியில் முடிக்கும் போது இலட்சிய வெற்றி குறித்து நம்மிடம் கூறி   வெற்றி அடையும் முறையை மிக அருமையாகக் கூறி முடிக்கிறார்.

      இதற்கு முன்பு இவர் எழுதியமூன்று நூல்களை விட இந்த நூல் மிக வித்தியாசமானது.  இதுவரை வரலாறுகளைச் சுமந்து கொண்டும், மனவியல், பெண்ணியம் என்றும்  எழுதி வந்த  தங்கை ஜான்சி பால்ராஜ் இந்த நூலில் ஒவ்வொருவருக்கும் ஏற்படக் கூடிய தன்னம்பிக்கை குறித்து அலசி ஆராய்ந்து உள்ளது ,அவரின் மற்றொரு பரிணாமத்தையே காட்டுகிறது.

     எல்லாவற்றிற்கும் மேலாக,     *நண்பர்களை ,உறவினர்களை சந்திக்கும் போதெல்லாம் நலம் விசாரிப்பதோடு  உங்களது இலட்சியம் எந்த அளவில் இருக்கிறது? என்று எதார்த்தமாக கேட்கும் நிலை வர வேண்டும் என்பதே என் ஆத்மாவின் ஆசை* என்ற அவரது ஏக்கம் நமது சமூகத்தின் மீதான அக்கரையை பிரதிப்பலிக்கிறது.

    இந்நூல் ஒவ்வொரு பெற்றோரும், வளரிளம் பருவத்தினரும், ஆசிரியர்களும் வாசிக்க வேண்டிய பொக்கிஷம்.


விலை.ரூ.90 

தொடர்பு: 9486624237.


  


1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News