வாழை..

 

வாழை..




Dr.S.Sudhakar M.Sc., Ph.D.,
Professor
Department of Biotechnology
Manonmaniam Sundaranar University,
Tirunelveli-12


தூத்துக்குடி மாவட்ட ஆத்தூர்தான் என் பிறந்த ஊர். நான் நேற்று  ஆத்தூரில் இருந்தேன். 

இந்த ஊர் வாழை, நெல் மற்றும் வெற்றிலை விவசாயத்திற்குப் பெயர் பெற்றது. இந்தப் பகுதியில் நேற்று மாலை சுமார் இரண்டு மணி நேரம்  காலாற நடந்தேன்.

என் நண்பரின் மகன் ராகுல் சுமார் 30 நிமிடங்கள் என்னுடன் நடந்தான். 

எங்கள் வீட்டிற்கு அருகே ஒரே திரையரங்கு உள்ளது. அங்கு இரவு  வாழை என்ற திரைப்படத்தைப் பார்க்கலாமென முடிவு செய்தேன். காரணம் என் நடுநிலைப் பள்ளிப் பருவத்தில் என் தந்தை   வாழை பயிரிட்டார். 

அதனால் எனக்கும் வாழைத் தோட்டத்தில் வேலைப் பார்த்த அனுபவம்  உண்டு.  "படத்தில் அப்படி என இருக்கிறது?" எனப் பார்க்க ஆசை. எனவே வாழை படம் பார்க்க இரவுக் காட்சிக்கு முன்பதிவு செய்தேன். 

இரவு 10.45 மணி அளவில் படம் தொடங்கியது. படத்தில் சிறுவர்களின் பள்ளிக்கூட வாழ்க்கை மனதில் இடம் பிடித்தது. 

என் வகுப்பு நண்பர்கள் இரண்டு டீச்சர்களைப் பாடப்படுதியது எல்லாம் நினைவுக்கு வந்தது. காலை மாலையென ஒரு டீச்சர் என் நண்பன் ஒருவனைக்  காப்பி வாங்க அனுப்புவார்கள். ஆரம்பத்தில் அவன் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொடுத்தான். பின்னர் இந்த வேலை அவனுக்குப் பிடிக்கவில்லை. 

ஆனால் டீச்சரோ அவனை விடுவதாக இல்லை. இவன் கோபத்தில் கடையில் வாங்கிய காப்பியைச் சற்று சுவைத்த பின்னர்தான் டீச்சரிடம் கொடுப்பான்.

பல மாதங்கள் அவன் குடித்த எச்சில்  காப்பியைத்தான் டீச்சர் குடித்தார்கள். வடை வாங்கி வரச் சொன்னால் டீச்சருக்கு அவன் எச்சில் நிறைந்த வடைதான் கிடைக்கும் ! அது எப்படி என யோசித்தால்தான் புரியும்.

பள்ளிப் படிப்பின்போது டீச்சரை வைத்த கண் மாறாது பார்த்த மாணவர்களையும் நான் அறிவேன். அவனுக்குப் பயந்து டீச்சர் வகுப்பு மாறிப் போன நிகழ்வையும் இந்தப் படம்   ஞாபகப் படுத்தியது. 



நானும் வாழைத்தார் சுமந்துள்ளேன். கூலிக்காக அல்ல. எங்கள் வாழைத் தோட்டத்தில் சுற்றி வரும்போது ஏதாவது வாழைத்தார்  பழுத்திருந்தால் அதனை வெட்டி வீட்டுக்கு எடுத்து வருவேன். 

ஒரு முறை இரண்டு பெரிய வாழைத்தார்கள் பழுக்க ஆரம்பித்திருந்தன. அவைகளை வெட்டினேன்.   தோளுக்கும் ஒன்று என வாழைத்தார்களை என் இரு தோளிலும் ஏற்றிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.

வாழைத் தோட்டத்தில் பட்டம் வழியே நேராக நடப்பது  எளிது. ஆனால் தூரம் அதிகமாக இருக்கும். எனவே இரு பட்டங்களுக்கு இடையை நிறைந்திருக்கும் தண்ணீரைத் தாண்டித் தாண்டி நடக்க ஆரம்பித்தேன். இது சற்று கடினமான வேலைதான்.

ஒரு பட்டத்திலிருந்து அடுத்த பட்டத்திற்குத் தாண்டும்போது கால் சில அங்குலம் பூமியில் பதியும். 




இப்படித் தாவும்போது வலது காலை ஏதோ வருடுவது போல் இருந்தது. குனிந்து பார்த்தேன். ஒரு பாம்பின் தலையில் மிதித்திருந்திருக்கின்றேன். பாம்பு தன் உடல் மற்றும் வாலால் என் வலது காலைச் சுற்றிப் பிடித்துக் கொண்டிருந்தது. 

இரு வாழைத்தாரையும் இடது கையால் பிடித்துக் கொண்டு வலது கையால் பாம்பின் வாலை என் காலிலிருந்து அகற்றினேன். என் கால் பாம்பின் மேல்தான் மிதித்தபடிதான் இருந்தது. 

காலை முடிந்த அளவிற்கு  தரையில் அழுத்தி மிதித்தேன்.  பின்னர் காலை வெடுக்கென்று  எடுத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். 

ஆனால் பாம்பு  அந்த இடத்தைவிட்டு ஓடுவதாக இல்லை. அருகில் சென்று பார்த்தேன். அதன் தலை சிதைந்து இரத்த வெள்ளத்தில் இருக்கமான ஈர மண்ணில் புதையுண்டு இருந்தது.

“பாம்பு பரிதாபமாக இறந்தது” என அறிந்தேன்! ஆனால் பாம்பு காலைச் சுற்றியிருந்த உணர்வும் பாம்பைக் கையில் தொட்ட உணர்வும்  என்னைவிட்டு சில வாரங்கள் செல்லவில்லை !

வாழைப் படம் வாழைத் தார்களைச் சுமப்பதில் உள்ள சிக்கல்களை முழுமையாகக் காட்டவில்லை என்றுதான் என் அனுபவம் கூறுகிறது.




உதாரணமாக நீர் கருவை என்ற முள் செடி தண்ணீர் நிறைந்த பகுதியில் வளர்ந்திருக்கும். இதன்  முற்கள் தேன் நிறத்தில் இருக்கும். அது காலில் குத்தும். அந்த முள்ளின் நுனி எளிதில் உடைந்து கால்தசைக்குள் மாட்டிக் கொள்ளும். அதனால் வலி அதிகமாக இருக்கும். 

எங்கள் வீட்டில் சில கருப்பு எருமை மாடுகளும் ஒரு பசுவும் இருந்தது. மாடுகளுக்கும் எங்களுக்கும் ஒரு பிணைப்பு இருந்தது உண்மையே. என் பெரியப்பா பையன்கள்  சென்னையிலிருந்து எங்கள் வீட்டிற்கு விடுமுறைக் காலத்தில் வருவார்கள். 

அவர்களில் இளையவன் பெயர் செல்வகுமார். செல்வகுமார் கறுத்த உடலைக் கொண்டவன். அவனுக்கு எங்களிடம் இருந்த ஒரு எருமை மாட்டை மிகவும் பிடிக்கும். எருமை கட்டவிழ்த்து விட்டதும் தானாகவே குளத்திற்குச் சென்றுவிடும். மாலை அதுவே வீடு வந்து சேர்ந்துவிடும். 

செல்வகுமார் காலையில் அவிழ்த்து விட்ட எருமை மாட்டு மேல் ஏறி உட்கார்ந்து கொள்வான். அது அவனைச் சுமந்து கொண்டு குளத்தை நோக்கிச்  செல்லும். கையில் ஒரு கயிரை வைத்து சுற்றிக்கொண்டே வருவான். பார்க்க எமன் தன் வாகனத்தில் வருவது போலவே இருக்கும். குளம் வந்ததும் மாட்டின் மேலிருந்து குதித்து தரையிரங்கிவிடுவான். காரணம் இவனுக்கு நீச்சல் தெரியாது. எருமைக்கு நன்கு நீச்சல் தெரியும்! அதனால் அது குளத்திற்குச் சென்றதும் தண்ணீருக்குள் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்றுவிடும். 

ஒரு முறை நானும் என் தங்கை மற்றும் பெரியப்பா பையன்களும் வாழைத் தோட்டத்திற்கு நடந்தே சென்றோம். என் அத்தைப் பெண் விஜயாவும் எங்கள் கூட வந்தாள். "அவளை விஜயா என அழைப்பதில்லை. அருணாச்சி" என்றே அழைப்போம். அவளுக்கு அது பிடிக்க வில்லை. 

எங்களிடம் “தன்னை விஜயா என்றே அழைக்க வேண்டும்” என கெஞ்சிய படியே வந்தாள். 

“நாங்கள் பார்ப்போம்’ எனக் கூறி அவளைச் சமாதானப் படுத்தியபடியே நடந்தோம். 

ஒரு வழியாக வாழைத் தோட்டமும் வந்தது. என் தந்தை சொன்ன வாழைத்தாரைத் தேடினோம். அந்தப் பழுக்கத் தொடங்கிய வாழைத்தாரை ஒரு வழியாகக் கண்டுபிடித்தோம். 

அதனை வெட்டி எடுத்தேன். அந்த வாழைத்தார் சற்று சிறியதுதான். ஆனாலும் அது சுமார் பத்து கிலோ இருக்கும். நானும் என் சகோதரனும் ஆளுக்கு ஒருபுறம் அந்த வாழைத்தாரைப் பிடித்துத் தூக்கி வைத்துக் கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தோம். விஜயா மற்றும் என் தங்கை எங்களை பின் தொடர்ந்தனர். 

“அப்போதும் விஜயாவை அருணாச்சி” என்றே அழைத்து வந்தோம். அவள் “இந்த வாழைத்தாரை வீடுவரை சுமந்து வருகின்றேன். அதற்குப் பதிலாக என்னை நீங்கள் யாவரும் அருணாச்சியென அழைக்கூடாது. விஜயா என்றே அழைக்க வேண்டும்” எனத் திடமாகக் கூறினாள்.

நாங்களும் சிரித்தவாறே,  “சரி” என அந்த 10 கிலோ எடையுள்ள வாழைத்தாரை அவள் தலையை ஏற்றி வைத்தோம். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் அதனைத் தலையில் சுமந்து வந்தாள் அருணாச்சி.

இன்று இதனை நினைத்தால் சற்று மனது வலிக்கத்தான் செய்கின்றது. ஆனால் அந்த வயதில் விளையாட்டாகவே இருந்தது. 

மேலும்  இந்தப் படம் வாழைத் தோட்டத்திலிருந்து தார்களைச் சுமப்பதில் உள்ள கஷ்டங்களை மட்டுமே அரைகுறையாகக் காட்டுகின்றது. மேலும் வாழைத் தோட்டங்கள்  நிறையக் கதைகளைக் கொண்டுள்ளன.  

வாழை விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளின் நிலைமையும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள கூலித்தொழிலாளிகளின் நிலைமையும் கிட்ட தட்ட ஒன்றுதான். 

தொழிலாளிகளின் சாப்பாட்டில்  பெரும்பாலும் பழைய சோறும் வெங்காயமும் இருக்கும். சிறு விவசாயிகளின் வீட்டில் சோற்றுடன் சேர்த்துச் சாப்பிட ஏதாவது ஒரு குளம்பு இருக்கும். வாரம் ஒருநாள் மீன் சாப்பாடு கிடைக்கும். அவ்வளவுதான் வித்யாசம். 

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது சுமார் 3000 வாழைகள் பயிரிட்டோம். வாழை செழித்து வளர்ந்திருந்தன. இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்கு வந்தது. குளத்தில் தண்ணீர் இல்லை. மழையும் இல்லை. 

காலையில் சுமார் 6 மணிக்கெல்லாம் வாழைத் தோட்டத்தில் ஒரு மூலையிலிருந்த ஊற்றுமூலம் என் தந்தை தண்ணீர் இரைப்பார். 

இதற்கு வசதியாகத் தலா கட்டி இருப்பார்கள்.  தலா மூலம் வாளியைக் கிணற்றுக்குள் கொண்டு செல்வது சற்று சிரமமாக இருக்கும். ஆனால் தண்ணீர் நிறைந்த வாளியை மேலே தூக்குவது சற்று எளிதாகவே இருக்கும்.



நான் சுமார் எட்டு மணி அளவில் காலைச் சாப்பாட்டுடன்  வாழைத் தோட்டத்திற்குச் செல்வேன். நான் கொண்டுவந்தை  என் தந்தை சாப்பிட ஆரம்பிப்பார். 

நான் தண்ணீர் இரைக்கத் தொடங்குவேன். சுமார் பத்து மணிவரை நான் தண்ணீர் இரைப்பேன்.  10 மணி அளவில் என் தந்தை கடலை மிட்டாய் கருப்பட்டியென இனிப்பு வகைகளை வங்கி வந்து தருவார். நான் அதனைச் சாப்பிடத் தொடங்குவேன். என் தந்தை தண்ணீர் இரைப்பார்.

பின்னர் நான் வீட்டுக்கு வந்து மதிய உணவு சாப்பிடுவேன். பின்னர் என் தந்தைக்கு மதிய சாப்பாட்டை எடுத்து வருவேன். சுமார் மூன்று மணி அளவில் வேலை முடிவடையும். 

பின்னர் வீடு வந்து சேர்வோம். இப்படியே மூன்று நாட்களுக்கு ஒரு முறையென வாழைத் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவோம். இது கோடை விடுமுறை என்பதால் முழு நேரமும் வாழைத் தோட்டத்திலேயே வாழ்க்கை சென்றது.

வாழைத் தோட்டத்திலிருந்தால் கோடைக்காலம் போலவே இருக்காது. வாழை மரங்கள் எல்லாம் செழித்திருந்தன.  

“வாழைக்குலை தள்ளத் தொடங்கின.  ஒவ்வொரு குலைகளிலும்  நாங்கள் நினைத்ததைவிடவும் நான்கு சீப்புகள் அதிகமாகவே இருந்தன. அடுத்த முப்பது நாற்பது நாளில் வாழைத் தார்கள் விழைந்துவிடும். இவை நல்ல விலை போகும்” எனக் கணித்தோம்.

எதிர்பாராத வகையில் அன்று இரவு மழை பொழிய ஆரம்பித்தது. எங்கள் வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தோம். 

"இந்த மழை என்னையே அதிக மகிழ்ச்சியடையச் செய்தது. காரணம் வாழைத் தோட்டத்திற்குத் தண்ணீர் இறைக்கத் தேவை இல்லை" என்ற எண்ணம்தான்.

மழை படிப் படியாக அதிகரித்தது. அத்துடன் காற்றும் அதிகமாக வீச ஆரம்பித்தது.  அப்பாவின் முகத்தில் கவலை குடிகொண்டதைப் பார்க்க முடிந்தது. 

“ஏன்?” என்று அப்போது எனக்குப் புரியவில்லை.

விடிந்ததுவும் அப்பா வாழைத் தோட்டத்திற்குச் சென்றனர். 

“அதான் நிறைய மழை பொய்துள்ளதே ஏன் இவ்வளவு காலையில் வாழைத் தோட்டத்திற்குச் செல்கிறார்?” என எனக்குப் புரியவில்லை.

சுமார் ஒரு மணி நேரத்தில் அப்பா வீட்டிற்கு வந்தார். முகம் கலை இழந்து இறுகிப் போய் இருந்தது.

“என்ன?” எனக் கேட்டேன். 

“அனைத்து வாழைகளும் விழுந்து விட்டன” என்றார்.

என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்பா கண்ணீர் சிந்தவில்லை. ஆனால் அவரின் முகம் மனதிலிருந்த சோகத்தைக் காட்டத் தவறவில்லை.

அடுத்த 30 நாட்களுக்கு இந்த வாழை மரங்கள் விழாமல் நின்றிருந்தால் பல லட்ச ரூபாய் கிடைத்திருக்கும்.  ஒரு கிலோ அரிசி 4 ரூபாயாக இருந்த காலம் அது. ஒரு மாருதி கார் 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தக் காலம் அது. லட்ச ரூபாய் மிகப் பெரிய பணம். 

எல்லாம் போய்விட்டது. சொந்த வயல் மற்றும் சொந்த உடல் உழைப்பு என்பதால்  இந்த இழப்பு எங்கள் வாழ்வை அதிகம் பாதிக்கவில்லை.

 "வாழை வாழவும் வைக்கும் சாகவும் வைக்கும்" என ஊர் மக்கள் பேசுவதுதான் நினைவுக்கு வந்தது. இப்படி பெரிய இழப்பு சில விவசாயியை தற்கொலைக்கும் அழைத்துச் சென்றிருக்கும் என நான் நம்புகிறேன். காரணம் இந்த இழப்பு வலி மிகுந்தது. 

எங்கள் ஊரில் அதிகம் பயிரிடப்படுவது 

கதலி வகை வாழைதான். காதலி இல்லை கதலி. 

“இதனைச் சென்னையில் பூவம் பழம்” என அழைப்பார்கள். 

இரண்டாவதாக அதிகமாகப் பயிரிடுவது நாட்டுப்பழ வகைதான்.  பச்சைப் பழம் வகை  வந்த புதிதில் இதனை நிறையப் பயிரிட்டனர்.  ஆனால் இன்றுவரை கதலிதான் எங்கள் பகுதியில் அதிகம் பயிரிடப்படுகின்றது. 

காரணம் “நோய்த் தொற்று எதுவும் இந்த வகை வாழையைத் தாக்காது” என மக்கள் நம்புகின்றனர்.

ஆத்தூர் பகுதியில் நிறைய வாழை வகைகள் உண்டு. 

அதில் பூலாசெண்டு நறுமணம் மிக்க சுவையான வாழைப்பழம். ஆனால் இந்த வாழையை நிறையப் பயிரிட மாட்டார்கள். 

கோழிக்கூடு வகை வாழைப் பழத்தின் 

 தோல் மிகவும் மென்மையாக இருக்கும். எனவே நன்கு பழுத்த கோழிக்கூடு வாழைத்தாரின் தண்டைச் சற்று பலமாக ஒரு தட்டு தட்டினால் அத்தனை பழமும் கீழே விழுந்து விடும் !

நன்கு பழுத்த இந்தப் பழத்தில் ஒன்றைச்  சாப்பிட்டு போதும்” என நிறுத்த முடியாது. காரணம் இதன் சுவை அப்படி. 

ஆசையைக் கட்டுப் படுத்துவதில் கைதேர்ந்த புத்தருக்கே இந்தப் பழம் சவால் விடும். சுவையில் தனித்துவமானது கோழிக்கூடு வாழைப்பழம்.

ரஸ்தாளி பழத்தோலை உரித்தால் பழத்தையும் சேர்த்து இழுத்துக் கொண்டு வரும். இந்த பழத்தின் தோல் மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பில் இருக்கும். 

மற்ற வாழைப் பழங்களின் தோலை உரித்தால் உள்ளே பழம் வெள்ளை நிறமாகவே இருக்கும். ஆனால் இது  சற்று மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். இது செவ்வாழைப்பழம் கிடையாது. இந்த வகைப் வாழைப் பழத்தை இப்போது பார்க்க முடியவில்லை. 

கர்ப்பூரவல்லி பழம் அதிகம் பழுத்தால் அதன் தோல் கருப்பாக மாறும். ஆனால் பழம் அழுகிப்போகாது! இந்தப் பழம் அதிகமாக இனிக்கும்.

பச்சைப் பழம் சற்று நீளமாக இருக்கும். மூன்று நான்கு கோழிக்கூடு பழங்கள் அளவுக்கு ஒரு பச்சைப் பழம் இருக்கும். இதிலும் ஒரு தனித்துவ மணமும் சுவையும் உண்டு. 

நாட்டுப்பழம் விரைவில் பழுத்து விடும். இதன் நடுவில் உள்ள விதைகள் பழத்தைச் சாப்படும் போது நற நறவென கடி படும். அதனால் இந்த பழத்தை சிலருக்குப் பிடிக்காது.  இவை பழுத்த ஒரு நாளில் சாப்பிட்டு விட வேண்டும். இல்லை என்றால் பழம் உருகி தண்ணீராய் கொட்டத் தொடங்கிவிடும்.  இந்தப் பழமும் தனிச் சுவை மிக்கது தான். 

படத்தி என்ற ஒரு வகையும் உண்டு. இதனில் சற்று வெண்ணிலா மணம் இருக்கும்.

ஆனால் மொத்தத்தில் எனக்குப் பிடித்த  வாழைப் பழம் கோழிக் கூடுதான்.

ஆத்தூரைச் சுற்றி உள்ள  பள்ளிக்கூட சிறுவர்கள் இந்த வாழை வகைகளை நன்கு அறிவார்கள். 

சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் சிறு வேப்பங் குச்சை எடுத்து வாழைப் காயின் காம்பில் சொருகி விடுவார்கள். மறுநாள் அந்தக் குலையில் வேப்பங் குச்சி சொருகிய பழம் மட்டும் நன்றாகப் பழுத்து விடும்.

இப்படிப் பழுத்த பழத்தை மட்டும் எடுத்துச் சாப்பிடுவார்கள். கதலி வாழைப் பழத் தோட்டத்தில் இப்படிச் செய்யமாட்டார்கள். பூலாசெண்டு, கோழிக்கூடு, ரஸ்தாளி, கர்ப்பூரவல்லி, பச்சைப் பழம் போன்ற வாழை வகைகளில் இப்படிச் செய்வார்கள்.

காரணம் கதலி பழம் சற்று புளிப்புச் சுவையில் இருக்கும். பிற வகை பழங்கள் ஒவ்வொன்றும் தனிச் சுவை மிக்கது.

அவர்கள் விரும்பும் வாழைப் பழத்தை மட்டும் ஒன்றிரண்டு பழுக்க வைத்துச் சாப்பிடுவார்கள். விவசாயிக்கு அப்படி ஒன்றும் இழப்பு வந்துவிடாது.

ஒரு பெரிய வேப்பங் குச்சியை வாழைத்தாரின் மேல் பகுதியில் உள்ள தண்டில் சொருகி வைத்தால் அடுத்த நாள் அந்தத் தாரில் உள்ள அனைத்து பழங்களும் பழுத்து விடும். சில சேட்டைக்கார சிறுவர்கள் இப்படி வாழைத்தாரை பழுக்க வைப்பதுவும் உண்டு. இந்தச் செயல் கட்டாயம் விவசாயிகளைப் பாதிக்கும். 

நான் அறிந்த மட்டும் வாழை படத்தில் காட்டிய மாதிரி எங்கள் கிராமத்தில் எதுவும் நடக்கவில்லை.

 “இயல்பாக வாழைப் பழம் ஒரு தோட்டத்தில் பழுத்திருந்தால் அதை எடுத்துச் சாப்பிடுவது தவறில்லை” என்ற எண்ணமே ஊர் மக்களிடம் இருந்தது. 

அதனை ஒரு குற்றமாக விவசாயிகள் கருதுவதில்லை. ஒரு தோட்டத்தில் வாழை இலைகளை அறுப்பது, வாழைக் குலைகளை  வெட்டிக் கொண்டு போவது, வாழைக் கன்றுகளை தோண்டி எடுத்துக் கொண்டு போவது இங்குக் குற்றமாகக் கருதப்படுகின்றன.

இப்படி எதாவது திருட்டு நடந்தால் இரண்டு  வாழைத்தாருடன் திருடனை காவல் நிலையத்தில் ஒப்படைப்பார்கள். வாழைத்தார்கள்  காவலர்களுக்கு, தண்டனை திருடனுக்கு!

வாழைப் படத்தில் நடித்த சிவனைந்தன் கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் பொன்வேல் பாக்க அவ்வளவு அழகாக இருந்தான். ஒரு மேதாவித்தனம் அவனிடம் இருப்பதை நன்கு காட்டி இருந்தனர். அது என்னவோ தெரியவில்லை அந்தச் சிறுவனின் முகம் என் மனதில் பதிந்துவிட்டது.

மாரிச்செவராஜ் இயக்கிய படம் என்றால் தவறாமல் பார்க்க வேண்டும் எனப் பரியெரும் பெருமாளும், மாமன்னனும், வாழையும் என்னை முடிவெடுக்க வைத்துவிட்டது என்பது உண்மை.

அது என்னவோ தெரியவில்லை. எனக்கு பரியெரும் பெருமாளே மிகவும் எனக் கவர்ந்தது. 


THANKS : FACEBOOK & Dr.SUDHAKAR

                                             --------------------------------------------


Post a Comment

புதியது பழையவை

Sports News