பேராசிரியர் .ஆழ்வார் ஆங்கில புத்தக வெளியீடு.

 





பேராசிரியர் கி. ஆழ்வார் மொழிபெயர்த்தார்

பாரதிதாசனின் ‘இசையமுது’ பாடல்கள் ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியீடு.

சென்னை ஐகோர்ட்டு 
நீதிபதி டி. ஜெகதீஸ் சந்திரா வெளியிட்டார்




சென்னை, செப். 6: திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் கி. ஆழ்வார், பாரதிதாசனின் ‘இசையமுது’ பாடல் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, ‘Nectar of Music’ (நெக்டார் ஆஃப் மியூசிக்) என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
நூல் வெளியீடு

இந்த நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு எம்.பி. கணபதி தலைமை தாங்கினார். ஆர். பரணிதரன் வரவேற்றார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி. ஜெகதீஸ் சந்திரா நூலை வெளியிட, ஆச்சி குழும நிறுவனர் ஏ. பத்மசிங் ஐசக் பெற்றுக்கொண்டார்
.
விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி. ஜெகதீஸ் சந்திரா பேசியதாவது:
பாரதிதாசனின் இசையமுது

சமூக நீதி, மனித நேயம், தமிழ்ப்பற்று ஆகியவற்றைத் தன் கவிதைகளின் மூலம் மக்களிடையே விதைத்த மகத்தான கவிஞர் பாரதிதாசன்.

அவரது ‘இசையமுது’ பாடல் தொகுப்பை பேராசிரியர் கி. ஆழ்வார் ஆங்கிலத்தில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்புப் பணி என்பது ஒரு மொழியின் உள்ளார்ந்த வளர்ச்சிக்கு அந்தரங்கமாக உதவி செய்கிறது.

உலகின் பல திசைகளில் தோன்றும் புதிய சிந்தனைகள், புதிய யுக்திகள், புதிய பார்வைகள் ஆகியவற்றை மொழிபெயர்ப்பாளர்களே வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறார்கள். அவர்களின் மூலமாகத்தான் உலகின் பெரும் மேதைகளின் படைப்புகளையெல்லாம் நாம் வாசித்து வளர்ந்துள்ளோம்.

பல பதிப்புகள்

பேராசிரியர் கி. ஆழ்வாரை நான் மாமா என்று அழைக்க ஒரு ஆழமான காரணம் உண்டு. எனது தந்தையார் ஆதித்தனார் கல்லூரியில் பணியாற்றிய நாட்களிலே, விதைக்கப்பட்ட அந்த உறவு, என் தந்தையின் மறைவுக்குப் பின்பும் இன்று வரை உறுதியாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நூல் மேலும் பல பதிப்புகளைக் காணட்டும். உலகெங்கும் வாசகர்களின் கைகளில் தவழட்டும்.

தமிழ்மொழியின் இனிமை

பாவேந்தரின் புகழ் மேலும் மேலும் பரவட்டும். இனிமை தமிழ்மொழி எமக்கு இன்பம் தரும்படி வாய்த்த நல்லமுது. அமுதத்தை உண்ணும்போது கிடைக்கும் மகிழ்ச்சி தமிழைப் படிக்கும் போதும் கிடைக்கும் என்று கூறினார்.

‘நெக்டார் ஆஃப் மியூசிக்’ என்ற இந்த நூல் அமுதம் போல வாசகர்களின் உள்ளங்களில் நிலைத்து ஆனந்தத்தை வழங்கட்டும் என்றும் அவர் பேசினார்.

வாழ்த்துரை

விழாவில் டாக்டர் ஆர். பாபு கிருபாநிதி, எஸ். மகேந்திரநாதன், சி. ஜெயக்குமார் பொன்ராஜ், எஸ்.டி. சுந்தரேசன், வி. மகாலிங்கம், எம். அமுகேசன், வி. பழனிச்சாமி, ஆர். பாலமுருகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

பேராசிரியர் கி. ஆழ்வார் ஏற்புரை நிகழ்த்தினார். பாலம் எம். இருளப்பன் நன்றி கூறினார்.

இந்த விழாவில் பேராசிரியர் கி. ஆழ்வாரின் மனைவி சரோஜா மற்றும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்து அரசு பணியில் உள்ளவர்கள், அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

                                    




-----------------------------------------------



Post a Comment

புதியது பழையவை