திருச்செந்தூர் முருகன் - மாசித் திருவிழா 2019 - நெல்லை கவிநேசன் சிறப்பு கட்டுரைத்தொடர் 8


திருச்செந்தூர் முருகன் மாசித் திருவிழா - 2019 
நெல்லை கவிநேசன் - சிறப்பு கட்டுரைத்தொடர்
 [Website:www.nellaikavinesan.com, Email: nellaikavinesan25@gmail.com]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற மாசித் திருவிழா எட்டாம்  நாள் நிகழ்வுகள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 10.02.2019 முதல் 21.02.2019வரை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா எட்டாம் திருநாளான ஞாயிற்றுக்கிழமையன்று [17.02.2019] ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்ற வெள்ளை சாத்தி வீதி ௨லா..



திருச்செந்தூரில் மாசித்திருவிழா 8-ம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று [17.02.2019] பகலில் சுவாமி சண்முகப்பெருமான் பச்சை சாத்தி கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.



இதனை முன்னிட்டு “திருச்செந்தூர் முருகன்” என்னும் தலைப்பில் நெல்லை கவிநேசன் வழங்கும் சிறப்பு கட்டுரைத்தொடர் வெளியிடப்படுகிறது.   
வெளிப் பிரகாரம் (சீபலி மண்டபம்)
சண்முக விலாசத்திலிருந்து படிக்கட்டுகள் வழியாக கீழிறங்கி வரும்போது வெளிப்பிரகாரம் உள்ளது. இது ‘சீபலி மண்டபம்‘ என்றும் அழைக்கப்படுகிறது. சீ+பலி+மண்டபம் என்பதை சீபலி மண்டபம் எனக் குறிப்பிடுகிறார்கள். தேவர்களுக்கு முருகப்பெருமான் (பலி) கொடுக்க எழுந்தருளும் இடம் என்பதால் சீபலி மண்டபம் என அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்தின் தூண்களில் யானைகள் தங்கும் சிற்பம் இருப்பதால் இதனை ‘ஐராவத மண்டபம்’ என்றும் அழைப்பார்கள். 

வெளிப்பிரகாரத்தின் மேற்குப்பகுதியில் சித்தி விநாயகர், சகஸ்ரலிங்கம், சூரசங்கரர், ஆன்ம நாதர், மனோன்மணி, அம்மன், பானுகேஸ்வரர், சோமசுந்தரர், மீனாட்சி அம்மன், ஸ்ரீமூலநாதர், திருக்காளத்தி ஈஸ்வரர் (வாயுலிங்கம்), உமா மகேஸ்வரி,  அருணாசலேஸ்வரர் (தேயுலிங்கம்), உண்ணாமலை அம்மன், ஜம்புகேஸ்வரர் (அம்புலிங்கம்), அருணகிரிநாதர், வல்லப கணபதி (மேல வாசல் விநாயகர்)-ஆகிய கடவுளர்களின் திருவுருவங்கள் உள்ளன. 

வெளிப்பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் முருகப்பெருமான் (சூரசம்ஹாரர்) ஒரே கல்லில் உருவாக்கப்பட்டுள்ளார். முருகப் பெருமான் மயில்மீது அமர்ந்த நிலையில் சூரபத்மனுடன் போரிடும் காட்சியும், சூரபத்மனின் நெஞ்சில் வேல் பாய்ந்த நிலையும், சூரபத்மன் சேவல் வடிவில் முருகப் பெருமானை எதிர்த்துப் போரிட வரும் சிற்பமாக அங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
 

வெளிப் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் வெங்கடாசலபதி, சந்தான கிருஷ்ணன் ஆகியோருக்கான சந்நிதிகள் உள்ளன. இது பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட சந்நிதி ஆகும். கஜலட்சுமி, பிரம்மா, பூதேவி, நீளாதேவி, கௌதமர், மார்க்கண்டேயர்,  விஸ்வக்சேனர், கருடன் போன்றவர்களுடன் அரங்கநாதர் பள்ளிகொண்ட பெருமாளாகக் காட்சி தருகிறார்.
 

வெளிப் பிரகாரத்தின் தெற்குப் பகுதியிலிருந்து நடுப்பிரகாரத்திற்குச் செல்லும் வாயிலில் நவ வீரர்கள் இருவர் காவல் புரிகின்றனர் அவர்கள் வீரகேசரி, வீர மார்த்தாண்டர் என்போர் ஆவார்கள்.  

வெளிப் பிரகாரத்தின் கிழக்குப் பகுதியில் கொடிமரம் உள்ளது. வெளிப் பிரகாரத்தின் தெற்குப் பகுதியில் உள்துறை அலுவலகம் அமைந்துள்ளது. தெற்கு நுழைவாயிலின் மேற்புறத்தில் திருவிளக்குப் பூஜை நடைபெறும்.

நடுப் பிரகாரம்

இது கோவிலின் இரண்டாவது பிரகாரம் ஆகும். சண்முகரை நோக்கியுள்ள தெற்கு நுழைவுவாயில் வழியாக நடுப் பிரகாரத்திற்குச் செல்லலாம். இந்தப் பிரகாரத்தில் நுழைந்தவுடன் கிழக்கே 63 சைவ நாயன்மார்கள், மாணிக்கவாசகர் ஆகியோரது சிலைகள் உள்ளன. மௌன சுவாமிகள், காசி சுவாமிகள், தேசிக மூர்த்தி சிலைகள் அதன் அருகே உள்ளன. இந்த மூவர் சிலைகளுக்கு எதிரே தட்சிணாமூர்த்தி அமர்ந்து குருவாய் அருள்புரிகிறார். இதனால் இவ்வூர் ‘குருசேத்திரம்‘ என்றும் அழைக்கப்படுகிறது. 


நடுப் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் வள்ளியம்மைக்கும், வடமேற்குப் பகுதியில் தேவானை அம்மைக்கும் தனித் தனியாக ஆலயங்கள் உள்ளன. இந்த நடுப் பிரகாரத்தின் மேற்குப்பகுதியில் சங்கர நாராயணர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வேதபுரீஸ்வரர், திருவாதபுரிஸ்வரர், நாகநாத சோமேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். 


வடக்குப் பகுதியில் மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், சிவகாமி அம்மன் சமேத நடராஜர், சனீஸ்வரர் ஆகியோர்களுக்கு சந்நிதிகள் உள்ளன. வள்ளியம்மை, தேவானை அம்மை ஆலயங்களுக்கு நடுவில் யாகசாலை உள்ளது. யாகசாலைக்கு எதிரே பால சுப்பிரமணியர் சிலையும் அமைந்துள்ளது. 


நடுப் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் சண்டிகேஸ்வரர், நடராஜர், சனீஸ்வரர், பைரவர் ஆகியோர் உள்ளனர். கிழக்குப் பகுதியில் கொடிமரம் உள்ளது.


தொடரும்.

Post a Comment

புதியது பழையவை

Sports News