திருச்செந்தூர் முருகன் - மாசித் திருவிழா 2019 - நெல்லை கவிநேசன் சிறப்பு கட்டுரைத்தொடர் 9திருச்செந்தூர் முருகன் மாசித் திருவிழா - 2019 
நெல்லை கவிநேசன் - சிறப்பு கட்டுரைத்தொடர்
 [Website:www.nellaikavinesan.com, Email: nellaikavinesan25@gmail.com]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற மாசித் திருவிழா 9- ம் நாள் நிகழ்வுகள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 10.02.2019 முதல் 21.02.2019வரை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

திருச்செந்தூர் மாசித்திருவிழா ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு திங்கட்கிழமை [18.02.2019] இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்...இதனை முன்னிட்டு “திருச்செந்தூர் முருகன்” என்னும் தலைப்பில் நெல்லை கவிநேசன் வழங்கும் சிறப்பு கட்டுரைத்தொடர் வெளியிடப்படுகிறது.  

உள் பிரகாரம் (மகா மண்டபம்) 
இது மூன்றாவது பிரகாரம் ஆகும். அங்கு கிழக்கு நோக்கி பாலசுப்பிரமணியர் உள்ளார். பாலசுப்பிரமணியர் அருகில் இடது பக்கத்தில் சிவலிங்கம் உள்ளது. பாலசுப்பிரமணியர் முன்பு இருபுறமும் வீரபாகு மற்றும் வீரமகேந்திரர் ஆகியோர் உள்ளனர். இங்கு விநாயகர் மற்றும் பார்வதியும் உள்ளனர். பாலசுப்பிரமணியருக்கு தெற்குப் புறத்தில் பஞ்சலிங்கங்கள் உள்ளன. சண்முகர் உள்பிரகாரத்தில் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். ஆறுமுகங்கள் கொண்ட சண்முகரை ‘ஆறுமுகம்‘ என்றும் அழைப்பர். இவர் மாசி, ஆவணி திருவிழாக்களில் 7, 8 ஆம் திருநாட்களில் எழுந்தருளுவார்.

அர்த்த மண்டபம்
கர்ப்பக் கிரகத்துக்கு அருகில் அர்த்த மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் காவலாக இடதுபுறம் வீரபாகுத் தேவரும் வலதுபுறம் வீரமகேந்திரரும் உள்ளனர். இங்கு வீரபாகுத் தேவருக்கு பூஜை நடந்த பின்புதான் மூலவரான பாலசுப்பிரமணியருக்கு பூஜை நடத்தப்படும். வீரவாகுத் தேவருக்குப் (வீரவாகு மூர்த்தி) புட்டமுது சாற்றி வழிபட்டால் விரும்பிய காரியம் கைகூடும் என பக்தர்கள் நம்பி வழிபடுகிறார்கள்.

வீரவாகு தேவரின் வலது புறத்தில் மாணிக்கப் பிள்ளையார் மற்றும் பார்வதி அம்மன் சந்நிதிகள் உள்ளன.

பாலசுப்பிரமணியர் (மூலவர்)
கோவிலிலுள்ள மூலவர் பால சுப்பிரமணியர் ஆவார். இங்கு சூரசம்ஹார மூர்த்தியான முருகப்பெருமான் கிழக்குநோக்கி நின்றபடி காட்சி தருகிறார். முருகப்பெருமானின் அருகில் இடதுபுறத்தில் சிவலிங்க ஜெகநாதர் உள்ளார். முருகப்பெருமானுக்குத் தினமும் நடைபெறும் பூஜைகளைச் சிவலிங்க ஜெகநாதரும் ஏற்றுக்கொள்கிறார். இந்த சிவலிங்க ஜெகநாதரை சுப்பிரமணியர் வணங்கியதாகவும் புராணம் கூறுகிறது.
 
ஸவ்யே ஸக்திம் ததாந: ஸரஸிஜ ஸத்ருஸே
     வாம ஹஸ்தே (அ) ஷமாலாம்
க்ருத்வா வாமம் கராப்ஜம் லலித கடிதடே
       ஸவ்ய ஹஸ்தே (அ) ப்ஜ புஷ்பம்
க்ரூரம் ஸ¨ரம் நிஹத்ய த்ரிணயனம் அநிஸம்
       பூஜயந் ஸிந்து தீரே
திஷ்டந் இஷ்டார்த்த தாயீ க்ரதித ப்ருதுஜட:
       பாது மாம் ஸ்ரீ குஹாக்ய:
 
“வலது மேற்கையில் சக்தி வேலாயுதம் ஏந்தியவராகவும், இடது மேற்கையில் ஜெபமாலை தரித்தவராகவும் அழகிய தாமரை போன்ற இடது கையை இடுப்பில் வைத்துக்கொண்டு வலது கீழ்க்கையில் பூவை வைத்துக் கொண்டவராகவும், மென்மைத் தன்மையையும், வீரத் தன்மையையும் நிகழ்த்திக் காட்டியவராகவும், முக்கண்ணனைச் சதா சர்வ காலமும் பூஜைசெய்து கொண்டிருப்பவராகவும், கடற்கரையில் நின்றுகொண்டு தன்னை  நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டுவதெல்லாம் கொடுத்துக் கொண்டிருப்பவராகவும், ஜடாமுடியைத் தரித்தவராகவும் இருக்கின்ற முருகப்பெருமான் எப்போதும் என்னைக் காப்பாற்றுவாராக” - என்று மூலவர் தியான சுலோகம் குறிப்பிடப்படுகிறது. 

“வந்தவினையும் வருகின்ற வல்வினையும்
 கந்தனென்று சொல்லக் கலங்குமே - செந்தில்நகர்
 சேவகா! என்று திருநீறு அணிவார்க்கு
 மேவ வாராதே வினை”
  - என்று செந்திலாண்டவன் பாலசுப்பிரமணியரின் சிறப்பு குறிப்பிடப்படுகிறது. இவரை ‘கடற்கரை ஆண்டி’ என அழைப்பர்.தொடரும்.

Post a Comment

புதியது பழையவை

Sports News