மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா-9மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 

சித்திரை திருவிழா-9


ஒன்பதாம் திருநாள்.
புலவர். சாவித்திரி பாலசுப்பிரமணியன்
     
        எட்டாம்  நாள் திருநாளில் இருந்து திருவிழா மிகவும் சிறப்பாக மக்களால் கொண்டாடப்படுகின்றது.அன்னை ஈசனிடமிருந்து  செங்கோல் பெற்று ஆட்சி புரிய ஆரம்பிப்பதால், அன்னையின் அருள்பார்வை தன் குழந்தைகளிடம் அளவின்றி இருக்கும் என்ற ஆனந்தமே  இதற்குக் காரணம்.
   அன்னை மீனாட்சி அக்கினியில் இருந்து தோன்றியவள்.பரிசுத்தத்தின் பூரணம். அம்பிகை அக்னியில் இருந்து தோன்றும் போதே, மூன்று தனங்களுடன் தோன்றினாள்.கலக்கமடைந்த பெற்றோருக்கு ,அவள் மணக்க இருக்கும் மணாளனைக் காணும்போது மூன்றாவது தனம் மறைந்துவிடும்.கவலை வேண்டாம்.,என இறைவன் அசரீராகக் கூறி மறைந்தார்.........
       ஆண் குழந்தை போல் வளர்ந்த அந்தக்குழந்தை, தடாதகைப் பிராட்டியாக வளர்கிறாள். எல்லா வித்தைகளும் கற்றபின், தந்தையின் ஆவலைப் பூர்த்திசெய்ய அரச பட்டம் ஏற்கிறாள். பட்டம் ஏற்றபின் எட்டுத்திக்கும் தன் வெற்றிக் கொடியை நிலைநாட்ட அம்பிகை படைகளுடன் கிளம்பிவிடுகிறாள்.
 அன்னை காஞ்சனமாலையிடம் ஆசி பெற்று,ஆலயம் சென்று, அம்மையப்பனிடம் அருளாசிபெற்று, தனது படைகளை கிழக்கு திசையை நோக்கி செலுத்துகின்றாள்.சூரியன் தன் ஒளியைச்  சுருக்குகின்றான். மன்னர்கள் ஓடி ஒழிகின்றனர். சிலர் போரிட்டு புறமுதுகிட்டு ஓடுகின்றனர்.அமரலோகம்சென்று,இகபரசாலினி,பலசாலினி, ஆகியோருடன் போரிட்டு வெற்றி கொள்கிறாள்.....
 இதற்குப்பிறகு ,அஷ்டதிக்கு பாலகர்களை வெற்றிகொள்ள புறப்படுகின்றாள்.எட்டு திசைகளுக்கும் உரிய காவலர்களை "அஷ்டதிக் பாலகர்கள்" எனக்கூறுவர். இவர்களை எண்திசை நாயகர்கள் என்றும் கூறுவர். "அஷ்டம் " என்றால் "எட்டு" என்றும்,"பாலகர்கள்" என்றால் "காப்பவர்கள்" என்றும்  பொருள்படும். இவர்களின் வேலை நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கண்காணிப்பதும்.உயிர்களின் செயலுக்கு இவர்கள் சாட்சியாகவும் விளங்குகின்றனர்.
    கிழக்கு திசையை நோக்கி அன்னை படையுடன் வரும்போது, அத்திசையின் அதிபதியான இந்திரன் அங்கிருக்கிறான். இவன் தான் செய்த உபாயம் தன்னையே தாக்க வருவதாக அஞ்சி ஓடி ஒழிகிறான்.சங்கநிதி, பதுமநிதி,காமதேனு,கற்பகவிருட்ஷம்  என அனைத்தும் அன்னையிடம் வந்தடைகின்றன. தேவ கன்னிகைகளும் அடிமைகளாகின்றனர்......
         அடுத்து தென்கிழக்கு திசையை நோக்கிச் சென்று அத்திசையின் அதிபதியான அக்னியை வெற்றி கொள்கிறாள்.அதன்பின் தென் திசையை நோக்கிச் சென்று, அத்திசையின் அதிபதியாக  விளங்கும் எமதர்மராஜனையும் வெற்றி கண்டு ,பின் தென் மேற்கு திசையின் அதிபதியான நிருதியையும் வெற்றி கொள்கிறாள்.அங்கிருந்து மேற்குத் திசையின் அதிபதியான வருணனையும் வெற்றி கொள்கிறாள். பின் வட மேற்குத் திசைக்குச் சென்று ,அத்திசையின் அதிபதியாக விளங்கும் வாயு பகவானையும் வெற்றி கொள்கிறாள்.
         வடக்கு திசையின் அதிபதியான குபேரனையும் வெற்றி கொண்டு அவனிடமுள்ள  செல்வங்களைப் பெறுகிறாள். இறுதியாக வடகிழக்கு திசையில்  தன் படையைச் செலுத்துகின்றாள்.அங்கு அதிபதியாக விளங்குபவர் ஈசானன். இத்திசையில் முதலில்  நந்தி போர் புரிந்து  அன்னையிடம்தோற்று , பின் ஈசனிடம் சென்று முறையிட ,அதற்கு ஈசன் தானே போரிட வருவதாகவும் கவலை வேண்டாம் எனக்கூறி அனுப்புகின்றார். அதன்பின் ஈசனார் அன்னையின்  முன் வர அவரைக் கண்டவுடன் அன்னையின் மூன்றாவது தனம் மறைந்துவிடுகின்றது.
     இறைவனக் கண்டு வெட்கம்கொள்ள, அன்னை தடாதகையைப்பார்த்து, "வருகின்ற பொங்கி வரும்  பெருநிலவு காணும் சோமவார நன்நாளன்று மாங்கல்ய தாரணம் செய்து பட்ட மகிஷியாக ஏற்றுக் கொள்கிறோம் என்று உன் தாயிடம் கூறுக" என்று சொல்லி அன்னையை அனுப்பி வைக்கிறார்.எல்லா திசைகளிலும் போர்புரிந்து, வெற்றியுடன் வரும் அன்னைக்கு தீப ஆராதனைகள் காட்டப்படுகின்றன. ....
          காலை, நான்கு மாசிவீதிகளை  மரவர்ணச் சப்பரத்தில் தெய்வங்கள் சுற்றி வருகின்றனர்.கோவிலுக்குள் இருக்கும் சிவகங்கை  இராஜா மண்டகப்படியினை ஏற்கின்றனர்.இந்திர விமான வாகனத்தில் அமர்ந்து திக்கு விஜயத்தின் இறுதிக்கட்டத்தில் வடக்குமாசி வீதி,கீழமாசிவீதி,சந்திக்கும் இடத்தில்உள்ள லாலாஸ்ரீ ரெங்க சத்திரம் திருக்கண்  மண்டபத்திற்கு எழுந்தருள,அன்னை மீனாட்சியின் திக்கு விஜயம் சிறப்பாக நடை பெறும்.
      ஒன்பதாம் நாள் திருநாள்,சகளம்,நிஷ்களம்,சகளநிஷ்களம் என்னும் வடிவம் மூன்றும் ,சிருஷ்டி முதலிய  முத்தொழில்களும், தன்மை முதலிய மூன்றிடத்து இருத்தலுமாகிய ஒன்பதும்  ,இல்லை என்பதைக் குறிக்குமுகமாக அமைகின்றது..........
 "கயபதி ஆதி ஆய வடபுலக் காவல் வேந்தர்......
 கைவார் சிலையான் கயிலைக்கிரி நோக்கிச் செல்வாள் "........

  என்ற திருவிளையாடல் புராண பாடலின் சிறப்பாக இன்றைய திக்கு விஜயம் அமைகின்றது.திக்கு விஜயம் முடிந்து ஆலயம் வந்த தெய்வங்களுக்கு தீப ஆராதனைகள் காட்டப்பட்டு  ஒன்பதாம் நாள் திருவிழா இனிதே முடிவடைகின்றது........
.  விழாவின் சிறப்பு தொடரும்


மதுரை சித்திரைத் திருவிழா தத்துவங்கள் 
திருமிகு.மதுரை .சண்முக திருக்குமரன் அவர்கள்

Post a Comment

புதியது பழையவை

Sports News